உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் 1. நானே வருவேன் மாசி மாதத்தின் இன்பச் சூரியன் விண்ணிலே ஒளிரும் ஒளிமணியாய் தானமெல்லாம் நீலப்பட்டாடை விரிய எழில் நகைபுரியும் இளங்குமரனாய் நீலமலையன்னையைக் காண வந்து விட்டான். மலையன்னைக்குத்தான் ஒளிநாயகனைக் காண்பதில் உள்ள பூரிப்புக் கொஞ்சமா நஞ்சமா? முத்து வடங்களையும் மலர்களையும் சூடி நிற்கும் சுந்தரியாக இரவு முழுவதும் அன்னை அலங்கரித்துக் கொண்டாள் போலும்! பசும் புல்லாடைகளிலெல்லாம் இரவில் அணிந்த முத்துக்கள் வானவில்லின் ஏழு நிறங்களையும் வாரி வீசிச் சுடரிட, புது வைர இழைகளென முகடுகளிலெல்லாம் அருவிகள் ஒளியிழைகளாய் மின்ன, வண்ண வண்ண மலர்கள் குலுங்கிச் சிரிக்க, அழகை முழுவதும் விள்ளத் தரமாமோ? மாரிக்கள்ளனும் கூதற் கொடியோனும் வருத்திக் குலைத்த துன்பங்களை எல்லாம் வெற்றிக் கண்டு மீண்ட மகிழ்விலே அன்னை கதிரவனை ஆர்வத்துடன் நோக்கும் வேளையல்லவா இந்த மாசி நன்னாள்? உய்யெனச் சுழன்று வெறியாட்டம் ஆடிய காற்று, ஓங்கி வளர்ந்த ஊசியிலைக் கோபுர மரங்களையும் கர்ப்பூர விருட்சங்களையும் தோழனைப் போல் மெல்ல அணைத்து இழைத்து மகிழ்ந்தது. மனையின் செல்வப் புதல்வர் புதல்விகளாய் வாழும் மக்கள் அனைவரும் கீழ் மலைக்கு வரும் ஒற்றையடிப் பாதைகளிலெல்லாம் வானில் வரிசை வரிசையாகச் செல்லும் வெண்புறாக்களின் கூட்டம் போல் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தார்கள். தூய வெள்ளை உடைகளிலே மக்களின் கூட்டம் சரிவுகளிலும் பள்ளங்களிலும் இறங்கி ஏறி, எங்கும் விரிந்து கொழித்த பசுமையினிடையே வந்த போது, கவடில்லாத நேர்மையும் வளமும் இன்பமும் இணைந்த கோலாகலமாகவே தோன்றியது. மண்ணையும் நீரையும் காற்றையும் தந்து வற்றாத வளமைக்கு வழிகாட்டிய இறைவனைக் கொண்டாடி மகிழும் திருநாள் அன்று. கங்கைவார்சடையில் திங்கள் அணிந்த மங்கை பாகனை மனத்திருத்தி ஆண்டு சிறக்க, மண்ணில் இட்ட விதை மண்டிப் பயன் தர, கன்று காலிகள் பல்கிப் பெருக, பாலும் தேனும் பஞ்சமின்றிப் பொங்கிப் பொழிய, செய்யும் முயற்சிகளெல்லாம் கைகூட வேண்டி, அவர்கள் கொண்டாடும் பெருநாள் அன்று, கீழ்மலை மாதலிங்கேசுவரர் சந்நிதிக்கு முன் அழல் வளர்த்து, ஹர ஹர ஹர என்ற கோஷம் மலை முகடுகள் எங்கும் எதிரொலிக்க, அடியவர் இறங்கி நடப்பதைக் கண்டு, சிந்தை உருகிப் பக்திப் பரவசத்தால் பாடி ஆடி மகிழும் புனித நாள் அன்று. மலையுச்சியில் பிறந்து ஆடித் தவழ்ந்து இடிபட்டு இன்னலுற்று ஆழி இறைவனைக் கலக்க ஒரே நோக்குடன் ஓடி வரும் நதிகளென மக்கள் சாரிகள் அனைத்தும் கீழ்மலைச் சோலையிலே விரிந்து பரந்த கூட்டத்திலே சங்கமமாகும் இடம் நெருங்க நெருங்க, பக்திப் பரவசப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், குழல்களை ஊதிக் கொண்டும் மத்தளங்களை முழக்கிக் கொண்டும் வந்தன. புத்தாடை உடுத்திய சிறுவர் சிறுமியர் பட்டுப் பூச்சிகளைப் போல் களிப்புடன் ஓடியாடினர். அழகிய சுருள் முடிகள் முன் நெற்றிகளிலும் காதோரங்களிலும் தெரிய, வெள்ளை வட்டுக் கொண்டு தலையை மூடி மறைத்துப் புது முண்டும் அணிந்த மலைமங்கையர் அருவிகளின் கலகலப்பை ஒத்த கள்ளமற்ற சிரிப்பும் பேச்சுமாக, விழாவுக்குக் கும்பல் கும்பலாக வந்தார்கள். சுற்றிப் பசுங்குன்றுகள் சூழ்ந்த அந்தப் பெருஞ் சோலையிலே இறையவர் கோயிலுக்கு வரும் வழியெல்லாம் பொரியும் பழமும் குன்றாகக் குவிந்திருந்த கடைகள்; சிறுவர் சிறுமியரின் கோஷங்களையும் கூச்சல்களையும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டு சுழலும் குடை ராட்டினங்கள் வேடிக்கைகள்; விநோதங்கள் பெண்டிர் சூழ வந்திருந்த பாத்திரக் கடைகள்; கட்டுக் கட்டாகக் கருப்பங்கழிகள்; அந்தத் திருநாளில் இறைவனுக்குக் காணிக்கையாக வந்திருக்கும் முதல் ஈற்றுக் கன்றுகளின் பால் பொங்கும் தாழிகள்; மணிகள் குலுங்கச் செல்லும் பசுக்கள்; கன்றுகள். இத்தனை ஆரவாரங்களையும் கோலாகலங்களையும் தாண்டி வந்தால், புல்லிலும் பூண்டிலும் உயிர்த் தத்துவமாக விளங்கும் ஐயன், எளிமையில் நிறைவு காணும் அந்த இயற்கையன்னையின் மக்களின் ஐயனாம், நாற்புறமும் குளமும் நடுவே மண்டபமும் எனத் தோன்றும் அழகிய பள்ளத்தின் நடுவே சின்னஞ்சிறிய அகல் விளக்கில் ஒளிரும் பென்னம் பெரிய சோதிச் சுடர் போல், சிறு குடலில் கோயில் கொண்டிருக்கக் காணலாம். வலப்புறத்திலே மூன்றடி அகலம் ஏழடி நீளமுள்ள பள்ளத்திலே சந்தனமும் அகிலும் சேர்ந்து மணம் பரப்புவதைப் போல் சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டு சாம்பிராணிக் கட்டையும் கர்ப்பூரக் கட்டையுமாகத் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் பள்ளத்தில் இறங்கி வருவதும் குடும்பம் குடும்பமாகச் சிறு குடிலுக்குள் தேங்காய் பழம் பால் காணிக்கைகளுடன் புகுவதும் வழிபடுவதுமாக இறைவனின் சந்நிதியில் மூச்சுத் திணறும் நெருக்கடியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. உடையர் என்ற பிரிவைச் சேர்ந்த குருக்கள் ஐந்தாறு பேர்களும், சந்நிதிக்கு வெளியே நந்தி தேவனின் முன் நின்று, குழுமிய மக்களின் காணிக்கைகளை ஏற்று, தேங்காயை உடைத்து இறைவனை வேண்டிப் பிரார்த்தித்து, அடிதொட்டு வணங்கிய ஆடவரை, பெண்டிரை, குழந்தைகளை இளநீரைத் தெளித்து ஆசிகள் வழங்கினர். தீக்குழிக்கு அப்பால், ஒவ்வொரு ஹட்டியையும் சேர்ந்த இளைஞர்கள், அணியணியாய், இயற்கை அரங்கு போல் தோன்றிய இடத்திலேயே, கால்களில் சலங்கைகளும் கைகளிலே கோல்களுமாக ஆடிப் பாடினார்கள். அந்த ஆட்டத்துக்கும் பாட்டுக்கும் முடிவே இருக்கவில்லை. ஒரு கோஷ்டி போனால் இன்னொன்று; இன்னொன்று போனால் வேறொன்று. மன்றிலாடும் எம்பிரானை மட்டுமின்றி, அவர்களின் பத்தினித் தெய்வமான ‘ஹத்தையம்ம’னின் புகழையும் அவர்கள் பாடிய கீதங்கள், அந்த மலைப் பிராந்தியம் முழுவதும் தவழ்ந்த காற்றோடு இழைந்து ஒலி பரப்பியது. ஒருபுறம், தலையில் பெருத்த பாகையும் செவிகளில் வில்வதளம் போன்ற இருவளையக் காதணிகளுமாக, காலம் முகத்திலே கீற்றுக்களை இட்டு விட்டாலும், பாலப் பருவத்து நெஞ்சங்களைக் கொண்டவர்களான, முதிய தலைமுறையைச் சேர்ந்த கரியமல்லர், பாருவின் பாட்டனார், ரங்கனின் தந்தை மாதன் போன்றவர்கள் கைகளைக் கோத்துக் கொண்டு வட்டாக நின்று கால்கள் மாற்றி மாற்றி நடுவே வைத்து ஹாவ் ஹாவ் எனக் கூவி நடனம் புரிந்தார்கள். கதிரோன் உச்சியை நெருங்குகையிலே, மக்கள் கூட்டமும் பக்தி வெறியும் உச்சநிலைக்கு ஏறின. கூட்டத்தின் நடுவே எண்ணற்ற சிறு வண்ணச் சப்பரங்கள், எம்பிரானின் நாம ஒலிக்கும் தாளத்துக்கும் இசைய பக்தி வெறி கொண்டவரின் தோள்களில் ஆடின. ஆவேசக்காரர்கள் தீயில் விழுந்து விடாதபடி இருபுறமும் இரண்டு ஆட்கள் பசுங்கிளைகளைக் கையில் வைத்துக் கொண்டு ஒதுங்கிய வண்ணம் கத்தினார்கள். பெரும் பெரும் கட்டைகள் எரிந்து, தணல், மாணிக்கப் பாளங்களாய் ஜொலித்தது. இந்தப் பெருங்கூட்டத்தில், மணிக்கல்லட்டி, மரகத மலை முதலிய ஊர்களிலிருந்து வந்த மக்கள் அனைவரும் இருந்தார்கள். மணவாழ்வின் ஒரு குறிஞ்சிக்குள் வாழ்வின் முழு அனுபவத்தையும் பெற்று விட்ட கோலத்தில் பாரு கையில் வண்ணப் பாவாடை அணிந்த மகளை இழுத்துக் கொண்டு தங்கை கிரிஜையைத் தேடித் துருவிக் கொண்டிருந்தாள். பஜனைக்காரர்களின் நடுவே ஜோகியைப் பார்த்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால், அழல் மிதி பார்ப்பது எப்படி? அத்தை மாதியையும் காணவில்லை. பாரு கூட்டத்தை எதிர்த்து முண்டிக் கொண்டு, மேட்டில் ஏற முயன்றாள். அப்பப்பா, என்ன கூட்டம்! ஆகா! சேலை உடுத்துச் சிங்கார ரவிக்கை அணிந்து, கொண்டையும் பூவுமாய் வந்திருக்கிறாளே, கிருஷ்ணனின் மனைவி, தேன் மலைக்காரி! நெற்றிப் பச்சைக் குத்துச் சின்னங்களுக்கு நடுவே குங்குமம், மூக்கிலே சுடர்விடும் வைர மூக்குத்தி, காதுகளில் பொன் வளையங்களுக்குப் பதில் மாதுளம் முத்துக்களைப் போல் ஒளிரும் கெம்புக்கல் தோடுகள், கழுத்திலே அட்டிகை, பதக்கம், கைகளில் பொன் வளையல்கள், மணி மணியாகப் பெண்ணொன்றும் ஆணொன்றும் பெற்று விட்டதாய். ஒரு காலத்தில் அவள் கனவு கண்ட கிருஷ்ணனின் மனைவி அவள்! கிருஷ்ணன் சட்டம் படித்து ஒத்தையில் தொழில் நடத்தும் சீமான் ஆகிவிட்டான். ஒத்தையிலே வீடு; போக வரப் புதுமையாகக் கார் வேறு வாங்கியிருந்தான். அவன் பெரு முயற்சியினாலேயே மரகத மலையில் அபிவிருத்திகள் செய்யப்பட்டிருந்தன. எப்போதோ மாசம் ஒரு முறை அவர்கள் வருவதற்கு அடையாளமாக, புதிதாகப் பாம்பு போல் மலை சுற்றி வந்த செம்மண் பாதையில் அவர்களுடைய கறுப்புக் கார் நிற்பதைப் பாரு காண்பாள். கால் சராய் சட்டை தரித்த பையனும், பாவாடை உடுத்து நிற்கும் பெரிய பெண்ணும் வாயிலில் விளையாடுவார்கள். ஹட்டியிலுள்ள குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் முதியவரும் அந்தக் குழந்தைகளையும் காரையும் பார்த்து அதிசயித்து மகிழ்வார்கள். பாரு விளை நிலத்தில் வேலை செய்து திரும்புகையில் அந்தத் தேன் மலைக்காரியையும் ஒவ்வொரு முறை சந்திப்பதுண்டு. “நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று அவள் ஒரு புன்சிரிப்புடன் குசலம் விசாரிப்பாள். பாருவின் முகத்தில் புன்னகை மலராது. ஆனால், “சௌக்கியமா அக்கா? இப்போதுதான் வந்தாயா?” என்று பதிலுக்குக் கேட்பாள். “ஆமாம். ஸ்கூல் லீவு நாளை போவோம்” என்பாள் அவள். அவள் குரலில் தொனிக்கும் பெருமிதம் பாருவின் நெஞ்சிலிருந்து ஓர் ஏக்கப் பெரு மூச்சைத் தள்ளிவரும் அந்தப் பழக்கத்தில் தான் தேன்மலைக்காரி அப்போதும் பாருவைத் தடுத்து நிறுத்தி, “நல்லா இருக்கிறீர்களா அக்கா?” என்று விசாரித்தாள். ஒரு கணம் பாரு நிலைத்து அவளைப் பார்த்தாள். “சௌக்கியமா?” என்று ஒப்புக்குக் கேட்டுவிட்டு மேலே கூட்டத்தில் கண்களைத் துழாவ விட்டாள். மேலே டீ எஸ்டேட் துரை துரைசானி இருவரையும் ரங்கன் முன்னுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தான். ஆங்கிலத்தில் பொரிந்து கொண்டு துரைசானியைக் கூட்டத்தில் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற அவன் மட்டும் மதிப்பில், பார்வையில் கிருஷ்ணனுக்குக் குறைந்து விட்டானா! கம்பளிக் கால் சட்டை, கோட்டு, பெரிய தலைப்பாகை, கடிகாரம் எல்லாமாகக் கனவானாகத் தான் தோற்றம் அளித்தான். ஒத்தை நகரை அடுத்து ஏகரா எகராவாகக் குத்தகை எடுத்துக் கிழங்கு போடுவதும் மண்டிகளுக்கு அனுப்புவதுமாக அவன் பெரிய மனிதன் ஆகிவிட்டானே? ஆனால்... பாரு தேன்மலைக்காரியைக் கண்டதனால் ஏற்பட்ட நெஞ்சக் கிளர்ச்சியை அடக்கி, மனசை வேறு திசையில் செலுத்த முயன்றான். முதியவர் குழுவை விட்டு, ஜோகி முதலிய இளைஞர் கோஷ்டிக்குத் தலைமை வகித்து, ரங்கனின் தந்தை பாட வந்து விட்டான். வயது அறுபதை எட்டிய பின்னும், அந்தக் குரலில் என்ன இழைவு, என்ன கம்பீரம்! அந்த உடல் எப்படியெல்லாம் வளைகிறது. கோல் கொண்ட டிக்கையிலே? கிருஷ்ணனின் தந்தைக்கு என்றைக்குமே வருபவர்களுக்கு வஞ்சனையின்றி உண்டி கொடுத்து உபசரிப்பதில் பிரியம் அதிகம். பஞ்சாமிருதத்தைப் பெரிய பாத்திரங்களில் கலக்கி வாரி வாரி இலைகளில் பஜனை கோஷ்டிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். “கோபாலன் உங்கள் மகளோடு, கைகோர்த்து விளையாடுகிறான் பாருங்கள் அக்கா!” என்று தேன் மலைக்காரி சிரித்தாள். பாருவின் மூத்த மகளுக்கு வயசு ஏழுதான். இளையவளுக்கு ஐந்து வயசு. வழிய வழிய எண்ணெய் தடவி வாரி, ரோஜ் உல்லன் நூல் முடித்துப் பின்னல் போட்டு, அவளே அலங்காரம் செய்திருந்தாள். மூத்தவள் மாநிறம், விழிகள் தந்தையைப் போல் பெரியவை. இளையவள், பாருவின் அச்சே. கிருஷ்ணனின் மகன் கோபாலன் அந்தக் குழந்தையைத் தான் கை கோத்து ஆடுவதும் விடுவதுமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். பெரியவளும் சிறியவளுமாக இரு பெண்களும் மரத்தடியில் சாய்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். உடை வேண்டுமானால் துரைமார் வீட்டுக் குழந்தைகளைப் போல் புதுமையாக இருக்கலாம். ஆனால் இரு குழந்தைகளும் தாயின் மறு வார்ப்படங்களே; குறுக்கே நீண்ட மண்டை குறுகலான பொட்டுக்கள், சற்றே மேடான நெற்றி. பாருவுக்கு நான்கைந்து குறைப் பிரசவங்களுக்குப் பிறகு தங்கிய குழந்தைகள் அவர்கள் இருவரும். ஆனால் கிருஷ்ணன் காதலில் தோற்ற பிறகு சட்டம் படிக்க மீண்டும் பட்டணம் சென்று விட்டான். அடுத்த ஆண்டே தேன்மலை அத்தை மகளைக் கட்டினான். அதற்கடுத்த இரண்டாம் ஆண்டு அவன் ஒத்தையில் தொழில் தொடங்கச் செல்கையிலே தேன்மலையாள், எட்டு மாசக் குழந்தையை கையில் எடுத்துச் சென்றாள். பாரு பொறாமைக் கனல் கனிய, பார்த்துக் கொண்டே நிற்கையில், கிருஷ்ணன் அங்கு வந்தான். பாருவின் நெஞ்சம் படபடத்து, விம்மித் தணிந்தது. “என்ன சுகந்தானா?” அசட்டுச் சிரிப்புடன் எத்தனை நாட்களுக்குப் பிறகு கேட்கிறான்? பாருவுக்குப் பதில் வரவில்லை. ‘நான் ஏமாற்றப்பட்டேன்; பந்தயம் அது இது என்று வஞ்சகர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். இந்த இரண்டை மண்டை ருக்மிணி இரண்டு குழந்தைகளில் இடை பெருத்துப் பார்க்கச் சகியாமல் நிற்பவள். இவள் ஸ்தானத்தில் நான் அல்லவோ இருப்பேன்?’ என்று அவள் நெஞ்சம் அழுதது. “ரங்கனை எங்கே காணோம்?” என்றான் கிருஷ்ணன் அசட்டுச் சிரிப்புடன். “எனக்கென்ன தெரியும்? கூட்டத்திலே இருப்பார்கள்” என்றாள் அவள். “இந்த வருஷம் பயிரில் நோவு விழுந்து விட்டதாமே?” என்றான் கிருஷ்ணன் அடுத்தபடியாக. “அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்.” “மாமா இந்த வருஷம் ‘கெண்ட’ (நெருப்பு) மிதிக்கிறார் போல் இருக்கிறதே?” “ஆமாம்.” “நீ ஒரு நாள் ஜோகி, கிரிஜை எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஒத்தைக்கு வரக்கூடாதா?” வயிற்றெரிச்சலுடன் பாரு ஒரு நிஷ்டூரச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “ருக்மிணி அக்கா என்னைக் கூப்பிட்டாளா? கார் வருகிறதே; என்னைக் கூப்பிட்டாளா?” என்றாள். “தப்புத்தான் அக்கா. இப்போது கூடவே கூப்பிடுகிறேன். வாருங்கள்” என்று தேன்மலை ருக்மிணி, வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரியச் சிரித்தாள். இதற்குள் தாள ஒலிகளும் கூச்சல்களும் தீ மிதிக்கும் பெரியோர்களின் வருகையை அறிவித்து விட்டன. மழிக்கப்பட்டுச் சந்தனம் பூசிய தலைகளுடன் கதம்ப மாலைகளுடனுமாக எழுவர் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வந்தார்கள். கோத்தரின் குழல், கொம்புத் தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் விண் அதிர ஒலித்து முழங்கின. காவடி போன்ற பிரம்பு வில்களைத் தோள்களில் தாங்கிக் கொண்டு அரஹர அரஹர அரஹர என்ற கோஷம் மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்க, அவர்கள் அந்த தீப்பள்ளத்தில் ஏழு முறைகள் குதித்துக் கடந்தார்கள். முதல்வர், தேன் மலையைச் சேர்ந்தவர்கள், இரண்டாமவர், கோத்தைப் பக்கத்திலிருந்து வந்தவர்; மூன்றாமவர் லிங்கையா, நோவிலும் காய்ச்சலிலும் தளர்ந்து, முதுமையிலும் சுருங்கிய உடல் இப்படி ஒளி தருமோ? மூன்று மாசங்களாக விரதமிருந்து, கோணியில் படுத்து, அவர் புனிதம் காத்த நெறியைக் கூற முடியுமோ? பக்தியும் சீலமும் அவர் வழி வரும் செல்வங்கள். மும்முறை மலர்மாரி பொழிய, வலம் வந்து அவர்கள் தீயை மிதித்துக் கடந்து விட்டார்கள். கால் பெருவிரல் ரோமங்கள் கூடப் பொசுங்காமல் அவர்கள் அழலில் குதித்து மீண்டதும், “ஜய ஜய மகாதேவ, அரஹர சம்போ!” என்று குரலை எழுப்பி, ரங்கனின் தந்தை தன்னை மறந்து ஆடலானான். அந்தக் கோஷத்தில் சுற்றுப்புறமெல்லாம் மறக்கப் பாரு நிற்கையிலே, கிரிஜையும் மாதியும் அவனைத் தேடி வந்தார்கள். “ஏயக்கா? இந்தா, உன்னை எங்கெல்லாம் தேடுவது?” இலையில் அவள் பாருவுக்காகக் கொணர்ந்த பஞ்சாமிருதம் இருந்தது. “நான் எங்கே ஓடிப் போனேனா? உன்னைத் தான் தேடினேன். ஜோகியண்ணன் குதிப்பதைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டு என்னைத் தேடினாயோ? மோசக்காரி.” “போ அக்கா, நேற்றுதான் கட்டி வந்தவளைப் போல் கேலி செய்கிறாய்!” என்று வெட்கத்துடன் கிரிஜை முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “உங்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது இல்லையா அத்தை? நீங்கள் சொல்லுங்கள். அண்ணனை எப்போதேனும் இவள் பிரிந்து தனியே விடுகிறாளா?” என்று பார் குறுநகை செய்தாள். மாதியின் வதனத்தில் சட்டென்று ஏக்கச் சாயை படர்ந்தது. அவளை ஜோகிக்குக் கட்டி ஏழு தீமிதித் திருவிழாக்கள் முடிந்து விட்டனவே! இறைவருக்குப் பணி செய்த பயனா இது? அவள் வீட்டில் தவழ்ந்து விளையாடி, மழலை ஒலிகளால் நிறைக்க முற்றம் நிறையக் குழந்தைகள் இல்லை என்றாலும், ஒரு குழந்தையைத் தேவர் அருளக் கூடாதா? பொன், மணி முதலிய செல்வங்களுக்கு மாதி என்றுமே ஆசைப்படவில்லை; குழந்தைச் செல்வத்தை ஏனோ இறைவன் அந்தக் குடும்பத்துக்கு அருளவில்லை? அன்றிற் பறவைகள் போல் ஒருவரை ஒருவர் பிரியப் பொறுக்காமல் வாழும் அந்தத் தம்பதியை எப்படிப் பிரிப்பது? ஜோகியை மறுமணத்துக்கு இசையச் சொல்லி எப்படிக் கேட்பது? ஏக்கத்தில் தோய்ந்த துன்ப வரிகள் அவள் முகத்தில் கீற்றிட அவள் நிற்கையிலே கூட்டத்தில் ஒரே பரபரப்பு. காரணம் தெரியாத படபடப்புடன் “என்ன, என்ன!” என்றாள் ஜோகியின் தாய். “லிங்கையா... ஜோகியின் அப்பா...!” குரல்கள் ஒன்றோடொன்று மோதின; மாதி கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஓடினாள். கால் பெருவிரல் ரோமங்கூடப் பொசுங்காமல் தீயை மிதித்து மீண்ட பெரியவர், சந்தனம் பூசிய மேனியுடன் கீழே பொன்னின் மரம் போல் சாய்ந்திருந்தார். மாதியின் பின்னே கிரிஜையும் மற்றும் அறிந்தவர் தெரிந்தவர்களும் எல்லோருமாக ஓடினார்கள். பாரு மட்டும் அந்தத் தேன்மலையாளின் பேறுகளை எண்ணி வெதும்பியவளாக, புகைச் சூழலிடை நிற்பது போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள். தேன்மலையாளின் புன்னகையே அவளைப் பரிகசிப்பது போலத் தோன்றியது. கோயிலில் இருந்த மரத்தடியிலே, அத்தனை கூட்டமும் திரும்பி விட்டது. தீமிதியில் இதுவரை எத்தகைய ஆகாத சம்பவமும் நேரிட்டதில்லை; அன்று நேரிடவும் இல்லை. “வயசான பலஹீனந்தான் ஐயனுக்கு, சற்றே தள்ளுங்கள், காற்று வரட்டும்” என்றான் ஜோகி. “மூன்று முறை வலம் வந்து பாலும் தெளித்தான பிறகு இங்கே வருகையில் தானே மயங்கி விழுந்திருக்கிறார்” என்றான் ரங்கம்மையின் கணவன். மாதி துயரமே உருவாகக் கையைப் பிசைந்தாள். தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். கிரிஜை கண்கள் பொழிய அழுது கொண்டு நின்றாள். இதற்குள் ஒருவர் எங்கிருந்தோ சூடான தேநீர் கொண்டு வந்தார். கிருஷ்ணன் அப்பொழுது அவர்களிடையே கோத்தைப் பக்கத்திலிருந்து புதிதாக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இளைஞனை, அவன் அங்கு வந்திருப்பது அறிந்து, தேடிப் பிடித்து அழைத்து வந்தான். இளைஞன் அர்ஜுனன், கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தான். பெரியவரின் கையைப் பிடித்து அவன் பார்க்கையிலே, அனைவரும் அவனைப் பயபக்தியுடன் நோக்கி நின்றார்கள். இளைஞன் புன்னகை செய்துவிட்டு, “ஒன்றும் பயப்படுவதற்கில்லை” என்றான். ஜோகி இனிய தேநீரை வாங்கி, அவர் வாயைத் திறந்து விட முயன்றான். இதற்குள், “பஸ்வேசுவரா! நஞ்சுண்டதேவா! உன் கோயிலுக்கு வருவே. என் சகோதரனுக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று மேற்குத் திசை நோக்கிக் கும்பிட்டு, தமையன் மாதன் உள்ளமுருகப் பாட ஆரம்பித்து விட்டான். இறைவனின் திருநாம மாலையாகிய அந்த இன்னொலித் தாரை, பெரியவரின் செவிவழிப் பாய்ந்து, உறங்கிய உணர்வைச் சிலிர்க்கச் செய்ததோ? அந்தக் குரலலைகள் பரவின சுருக்கில், லிங்கையாவின் கண்ணிமைகள் அகன்றன. கடும் விரதத்தாலும் உபவாசத்தாலும் முதுமையினாலும் சுருங்கிய முகத்தில் விழிகளும் பள்ளங்களுந்தான் இருந்தன. ஆனால் ஒளியில் உருகி மிதந்தன. “அப்பா, இந்த டீயைக் கொஞ்சம் குடியுங்கள்” என்றான் ஜோகி. உலர்ந்த நாவும் உதடுகளும் தேநீரில் நனைந்தன. எல்லோரையும் சுற்றி நோக்கினார். “நான் எங்கிருக்கிறேன்?” என்றார், பேச முடியாத ஈன சுரத்தில். தழுதழுத்த அந்தக் குரல் எல்லோருக்கும் அவருடைய குரலாகத் தோன்றவில்லை. “ஈசுவரர் கோயில் மரத்தின் கீழே; இப்போதுதானே ‘கெண்ட’ மிதித்தீர்கள்?” என்றான் தமையன். “மாதம்மா!” என்று அவருடைய அந்தத் தழுதழுக்கும் குரல் அழைத்தது. கண்ணீரில் மிதக்கும் விழிகளுடன் மாதி அவர் அருகில் நெருங்கினாள். “கிரிஜை எங்கே? குழந்தை எங்கே?” “மாமா!” என்று அழுது கொண்டே கிரிஜை அவர் கால் பக்கம் வந்து நின்றாள். “அழாதே மகளே, அடுத்த கெண்ட ஹப்பாவுக்கு முன்பே, கையில் ராஜாவைப் போல் ஒரு பையனை ஏந்துவாய் அம்மா!” என்றார். அங்கு ஊசி போட்டால் கேட்கும் சப்தம் நிலவியது. மறுபடியும் லிங்கையா சுற்றும் முற்றும் நோக்கினார். “எல்லோரும் ஏன் நிற்கிறீர்கள்? மாதலிங்கேசுவரர் முன் அழல் மிதித்துப் புனிதமானோம். பஜனை பாடுங்கள்; எனக்குக் களைப்பாக அசதியாக இருக்கிறது; நான் தூங்குகிறேன்” என்றார். அவர் அங்ஙனம் கூறி முடிக்கு முன் தமையனார் பாடத் தொடங்கி விட்டார். பஜனைத் தாளங்கள் அவர் நாம ஒலிக்கிசைய முழங்கத் தொடங்கின. “என்ன இது? அவர் உடம்பு சரியில்லை. ஏதேனும் கார் அகப்பட்டால் தூக்கிப் போட்டு ஒத்தை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகலாம்” என்று கூட்டத்தில் யாரோ கூறின குரல் கேட்டது. இளைஞன் அர்ஜுனன், “ஆம், அது நல்லது” என்று ஆமோதித்தான். இதற்குள் பல குரல்கள், “ரங்கன் எங்கே, ரங்கன்?” என்று கூட்டத்தைத் துழாவின. ஜான்ஸன் எஸ்டேட் துரை அவனுக்கு நண்பர். கார் வசதி அவனுக்குக் கிடைக்குமே! ஆனால், திமிதி நடந்தவுடனே, ரங்கன் துரைத் தம்பதியுடன் வன விருந்தில் கலந்து கொள்ளக் கிளம்பி விட்டதை யார் அறிவார்? ரங்கனுக்குப் பதில் கிருஷ்ணன் தான் அவரைக் கொண்டு செல்லக் காரை எடுத்து வந்தான். வண்டியில் அவரைத் தூக்கிக் கிடத்துகையில், அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது. தமையனார் பதறினார்; மாதி கையைப் பிசைந்தாள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதா? ஹட்டியில் அதுவரையில் அம்மாதிரி எவரையும் கொண்டு சென்றதில்லையே? ஆஸ்பத்திரியில் அவரை என்ன செய்வார்களோ? மணிக்கல்லட்டியிலிருந்து, ஆஸ்பத்திரிக்கென்று முதுகுச் சிரங்குடன் சென்ற காரியின் தந்தையைக் கத்தியால் அறுத்துக் கொன்று விட்டானாமே, வெள்ளைக்கார டாக்டர்! வண்டியில் நெருங்கிக் கொண்டு அமர்ந்திருந்த மாதி விம்மி விம்மி அழலானாள். வண்டியை ஓட்டிய கிருஷ்ணன் பதறி விட, அவள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லக் கூடாது என்று பிரலாபித்தாள். “வீட்டுக்குத் திரும்பி விடு கிருஷ்ணா வேண்டாம். ஹட்டிக்குப் போகட்டும்” என்று தமையனார் கையைப் பிடித்து மறித்தார். கிருஷ்ணன் என்னதான் செய்வான்? மரகத மலைப் பக்கமே வண்டியைத் திருப்பினான். மரகத மலைக்கு அவன் முயற்சியாலேயே நல்ல பாட்டை வந்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளில், ஆங்காங்கிருந்த அடர்ந்த சோலைகளில் மளமளவென்று மாபெரும் கர்ப்பூர விருட்சங்கள் முறிந்து விழும் ஓசை கேட்ட வண்ணம் இருக்கிறதே! ஆதவனின் கிரணங்களைக் கூட நுழைய விடாத சோலைகளில் எல்லாம் அந்த வெங்கிரணங்கள் புகுந்து விளையாடின. மரகதமலைக்கு மேற்கே, யானை மந்தைகள் போல் தோன்றும் குன்றுகள் அனைத்தும் குறிஞ்சிப் பூவாடை போர்த்து ஒரே நீலமாகத் தோன்றுமே? இப்போது, ஆங்காங்கே திட்டுத்திட்டாக, முட்டு முட்டாகத் தேயிலைச் செடிகள் மலையில் செழிப்பாக வளர்ந்திருந்தன. மரகதமலை ஹட்டியில் முட்டுப் பாறைக்கருகில், சிறிய பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியிருந்தது. முன்பு, வெள்ளைக்காரத் துறையின் எஸ்டேட் பக்கம் மட்டுமே இருந்த சில்லறைக் கடைகளும், தொழிலாளர் குடிசைகளும், இப்போது மரகதமலைப் பாதையிலும் வந்துவிட்டன. சாமையும் ராகியும் கிழங்கும் தவிர, மண்ணில் விளைவித்துப் பணத்தின் ருசி அறிந்திராத ஹட்டி மக்களில் பலரும், தேயிலை போட வேண்டும்; பணம் குவிக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகவே மண்ணில் உழைக்கத் தொடங்கி விட்டனர். தேயிலை போடுவதில் முனைந்து, ஒவ்வோர் ஆண்டிலும் அந்த முயற்சியைப் பெருக்கி வந்த கரியமல்லரின் குடும்பத்தில், ‘தன் மண்ணில் தானே பாடுபடுவது’ என்ற வாய்ப்பு அருகி வந்தது. கோவை, பொள்ளாச்சிப் பக்கத்திலிருந்து வந்த தொழிலாளர் சிலர், அந்தக் குடும்ப மண்ணில் உழைத்தார்கள். தேயிலை தந்த பணம், காரைக் கட்டு வீடாக இருந்த கரியமல்லரின் கோடி மனையை, நீளத்திலும் அகலத்திலும் பெரியதாக்கி, சகல வசதிகளும் கொண்ட மாடிமனையாக உருவாக்கி விட்டது. கிருஷ்ணனின் வண்டி வழக்கம் போல் வீட்டின் புறம் அந்தக் கோடியில் வந்து நிற்காமல், இந்தக் கோடியில் ஜோகியின் மனையண்டையில் நின்றதும், ‘கெண்ட ஹப்பா’வுக்குப் போக முடியாமல் இருந்த இரண்டொரு மக்களும் ஓடோடி வந்து வாசலில் நின்று பார்த்தார்கள். புறமனைப் பெஞ்சியிலே அவருக்குப் படுக்கப் பரபரக்க வசதிகள் செய்த மாதி, பொறுமையே உருவாகத் தோன்றினாள். வேறு வீடுகளில் ஓரளவு வண்மை கூடியிருந்தாலும் ஜோகியின் வீட்டில் போதும் போதாததுமான அந்தப் பழைய நிலை மாறவில்லை. மண்ணிலே ராகியும் சாமையும் தினையும் விதைத்து அவனும் கிரிஜையுமாகப் பாடுபட்டனர். குடும்பத்தில் அவ்வப்போது பற்றாக்குறை யென்று வாங்கிய கடன் ஏதுமில்லை. கொட்டிலில் இரண்டாக இருந்த எருமைகள் நாலாக மாறியிருந்தன. என்றாலும், வளமையில் நீந்தும் நிலை வரவே இல்லை. ரங்கன் ஒத்தைப் பக்கம் குத்தகைப் பூமியெடுத்துக் கிழங்கு விதைத்து, ஆயிரம் ஆயிரமாகப் புழங்கும் கனவானாக மாறினாலும் அந்தக் குடும்பத்துக்கு அவனால் ஆதாயமென்று சொல்வதற்கில்லை. கிழங்கு எடுத்து, கைக்குப் பணம் வந்ததும் மைசூருக்கும் பங்களூருக்கும் போய் வருவான். உதகை நகரிலேயே உல்லாசத்துக்கு வாரி இறைப்பான். குடும்பமென்னும் கூண்டுக்குள் எப்போதுமே அடைய விரும்பியிராத ரங்கனைக் கணவனாகப் பெற்ற பாருவுக்கு வாழ்வின் ஏமாற்றம் மனதில் கசப்பாக வேரோடி வளர்ந்தது என்றால் மிகை அல்ல. அந்தக் கசப்பு, ஜோகியையோ, ஜோகியின் தந்தையையோ காணும் போது குபுகுபுவென்று பெருகி, வெறுப்பாக நெஞ்சில் முட்டியது. ‘என் வாழ்வைக் குலைத்தவர்கள்’ என்ற எண்ணம் எழுந்தது. ரங்கம்மையின் கணவன் ஒருவனே ஆண்மகனாக அந்தக் குடும்பத்தில் உழைத்தான். ரங்கம்மையோ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரசவம் என்ற கண்டம் தப்பிப் பிழைப்பதும், பிறக்கும் குழந்தைகளுடன் நோயிலும் அயர்விலும் போராடுவதுமாக, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கில்லாமல் இருந்தாள். தன் ஏமாற்றம் அனைத்தையும் ஆத்திரமாகப் பூமித்தாயிடம் காட்டுபவள் போல் பாருவும் மண்ணில் பாடுபட்டாள். இருந்தும் பற்றாக்குறையைச் சரி செய்ய, முன்பு எப்படித் தம்பி அண்ணன் குடும்பத்துக்கு உதவிக் கொண்டிருந்தாரோ, அப்படியே ஜோகி, தன்னையும் அறியாமல் அண்ணன் குடும்பத்துக்கு உதவுபவனாக, அந்தக் குடும்பத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான். கிரிஜையும் ஜோகியும் மற்றவரும் இதற்குள் குறுக்குப் பாதையில் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள். கிரிஜை உள்ளே சென்று அவசரமாக அடுப்புப் பற்ற வைத்துக் காபி தயாரிக்கலானாள். தீயை மிதித்த பாதங்களைப் போர்வையால் மூடிவிட்டு, அருகிலே அமர்ந்திருந்த மாதியின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலை மோதின. கிரிஜையை ஜோகிக்குக் கட்டி என்ன பயன்? அந்த நஞ்சம்மையின் மகளுக்கு ஐந்து குழந்தைகள் வீடு நிறையப் பிறந்து விட்டார்களே! மூன்று பிள்ளைகள். காபி போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வந்த கிரிஜை, ஒரு தம்ளரில் ஊற்றி, வாயிற்புறம் பார்த்து நின்று ஜோகியுடன் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்குக் கொடுக்க வந்தாள். “கிருஷ்ணண்ணா, காபி சாப்பிடுங்கள்” என்றாள். “அட! இப்ப ஏனம்மா இதெல்லாம்?” என்ற கிருஷ்ணன் அதை வாங்கிக் கொள்கையில், பெரியப்பன் இரகசியமாக மதுப்புட்டியை முண்டுக்குள் ஒளித்து எடுத்துக் கொண்டு லிங்கையாவிடம் வந்தார். தாம் மதுவருந்தி மயங்கிக் கிடப்பதை, இறைவருக்கு உகக்காத செயல் என்று தம்பி எத்தனையோ முறை கூறியிருந்த நினைவு அவருக்கு இல்லாமல் இல்லை. தம்பியின் உடல் நலிவை மாற்றி வலிமை கொடுக்கும் என்றெண்ணி, அவர் எத்தனையோ முறை லிங்கையாவை மதுவருந்தத் தூண்டியிருக்கிறார். “அது வேண்டாம், அண்ணா. அது சீலத்தை அழித்து, குப்பையையும் அசுத்தத்தையும் உள்ளத்தில் ஏற்றும்; சிறுமையைச் செய்யும்” என்று திண்ணமாக மறுத்திருக்கிறார் லிங்கையா. அவர் என்ன கூறியும் தமையனுக்கு மதுவின் மீதுள்ள நம்பிக்கையும் பற்றும் அகலவில்லை. இரகசியமாக எடுத்து வந்து, மயக்க நிலையில் மருந்தாகக் கொடுக்கலாம் என்று நினைத்த அண்ணனின் நோக்கம் நிறைவேறவில்லை. குப்பியை அவர் திறந்ததுமே, தம்பியின் சுவாசத்திலே அதன் நெடி அண்ணன் செய்யும் சூழ்ச்சியை அறிவித்து விட்டது போலும்! வெட்டென்று அவர் கண்கள் மலர்ந்தன. தமையனையும் கைகுப்பியையுமே அந்த விழிகள் உறுத்து நோக்கின. அண்ணினின் துணிவு கரைந்து போயிற்று. தம்பியின் கை குப்பியைத் தட்டி விடக் கூடும் என்ற அச்சத்துடன், சுவரின் உயர இருந்த தட்டிலே அதை வைத்தார். தம்பியின் வறண்ட இதழ்கள் அகன்றன. “இவனிடம் இந்த ஒரு நெறி செல்வமாக இருக்கிறது; அதுவும் எதற்கு என்று பார்க்கிறார் அண்ணன்!” என்றார், மனைவி முகம் பார்த்து. மாதி மறுமொழி கூறாமல், கிரிஜை தந்த காபியை அவர் வாயில் ஊற்றினாள். அவர் அதை அருந்தியதும், முகத்தைத் துடைத்து விட்டாள். பேச்சுக்குரல் கேட்டுக் கிருஷ்ணனும் ஜோகியும் ரங்கம்மையும் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்து விட்டு லிங்கையா புன்னகை செய்தார்; “ரங்கன் எங்கே?” என்று கேட்டார். ஜோகி சற்றுத் தயங்கி விட்டு, “மருந்து ஏதேனும் துரை ஆஸ்பத்திரியில் கேட்டு வாங்கி வருகிறேனென்று போனான்” என்றான். அவர் மறுபடியும் சிரித்தார். “எனக்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஏன் இங்கு வந்தீர்கள்? போங்கள். வழக்கம் தவறாமல், ஆட்டமோ பாட்டமோ பஜனையோ, கோயில் பக்கம் போங்கள்; சாப்பிடுங்கள். மாதம்மா, நீ சாப்பிட்டாயா?” என்றார். மாதி தலையை ஆட்டினாள். “போங்கள்; போ கிருஷ்ணா, எனக்கு ஒன்றும் இல்லை. அம்மை மட்டும் இங்கே இருக்கட்டும்; போங்கள்” என்று எல்லாரையும் விரட்டினார் அவர். அன்றிரவெல்லாங் கூட இடையறாமல் தீப்பந்தங்களுக்கு நடுவே, கூத்தும் கதையும் புராணங்களும் பஜனைகளும் மாதலிங்கேசுவரர் கோயிலின் முன் நிகழ்வது வழக்கம். காந்த விளக்குகள் இவ்வாண்டு புதிதாக வந்திருந்தன. தோரணங்களும் அலங்காரங்களும் கூத்து மேடையில் விளங்கின. மைசூர் பக்கத்திலிருந்து பிரத்தியேகமாக அரிச்சந்திரன் கூத்தை நிகழ்த்தக் கலைக் கோஷ்டியினர் வந்திருந்தனர். மாதியையும் கிரிஜையையும் ஜோகியையும் தவிர அனைவரும் கீழ்மலைக்குத் திரும்பி விட்டனர் மறுபடியும். அந்தத் திருவிளக்கை வணங்கிவிட்டு, மடியுடுத்து, ஜோகி கொட்டிலுக்குச் சென்றிருந்தான். மாதி, அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தமக்கு ஒரு கையும் காலும் தூக்க முடியாமல் கனத்துவிட்டதை லிங்கையா மனைவியிடம் விண்டார். “ஐயோ!” அதிர்ந்து விட்ட ஜோகியின் தாய் அவர் கைகளையும் கால்களையும் தூக்கினாள்; தடவினாள். “இதுவும் விதியா?” என்று அழுத அவளை அவர் ஆறுதலாகத் தேற்றினார். “நல்லதுதான். மாதி எனக்கு இது ஒருபுறம் சந்தோஷத்தை தருகிறது. தேவர் கருணை...” “ஐயோ, நீங்கள் நல்ல நினைவுடன் பேசும் பேச்சா? தேவர் தேவர் என்று இருக்கும் நமக்கே எல்லாக் கேடும் வருமா?” மீண்டும் மீண்டும் அவள் அந்தக் காலையும் கையையும் தொட்டுத் தூக்கினாள். என்ன என்னவோ காட்சிகள் கண் முன் விரிய, பூண்டை அரைத்து வந்து தடவினாள். “கவலைப்படாதே மாதி, இது போலத்தான் எங்கையனுக்கு வந்தது; அவர் சாகுமுன் வாய் கூடப் பேசவில்லை.” “ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்; நீங்கள் போன பின் எனக்கு என்ன கதி?” “நான் போவேனா மாதம்மா. யாருக்கும் இல்லாத செல்வம் நமக்கு இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அவர் நகைத்தார்; “இந்த வீட்டையும் உன்னையும் ஜோகியையும் விட்டுப் போக எனக்கா மனம் வரும்? இந்த மண்ணையே தான் திரும்பத் தேடி வருவேன்; உன் மடியிலேயே விளையாட வருவேன். இரிய உடைய ஐயனுக்கு என் பையன் தொண்டு செய்யவில்லையா? நான் அறிந்து ஒரு தீங்கு எவருக்கேனும் செய்தேனா? எனக்கு மட்டும் ஐயன் ஏன் வஞ்சம் புரிய வேண்டும்? எனக்கு இன்று சந்தோஷமாக இருக்கிறது. இந்த வீட்டில் ஐயன் ஒரு குழந்தையை விளையாடவிடவில்லை. நானே சீக்கிரத்தில் இந்தப் பிறவியை விடுத்துக் குழந்தையாய் வருவேன். மாதி, என் பையன் முகத்திலே எப்போதும் ஒளி இருக்கும். கிரிஜை சிறு பெண்ணாக, எப்போதும் சந்தோஷமாக இந்த வீட்டில் இருப்பாள்; நானே வருவேன். தீயில் குதிக்கையில் நான் இந்தப் பிரார்த்தனை தானே இன்று செய்து கொண்டேன்? சந்தோஷப்பட வேண்டி இருக்க, ஏன் அழுகிறாய், மாதம்மா?” மாதி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|