உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற் பாகம் 5. இரவு காவல் கறுப்புக் கம்பளியைத் தலையோடு போர்த்தபடி, சில்லென்ற பூமியில் செருப்பொலிக்க, ஊது குழலும் நெருப்புப் பெட்டியுமாக லிங்கையா காவற்பரணுக்கு நடந்தான். பத்து இருபது நாட்கள் காவல் இருக்க வேண்டும். பின்னர் அறுவடை. வானில் பிறைச் சந்திரன் தோன்றி, அதற்குள் தேவர் சிகரத்துக்கு ஓடி விட்டான். வானம் நிர்மலமாக, ஆயிரமாயிரம் தாரகைக் குழந்தைகள் விளையாடும் தடாகமாக விளங்கியது. தேவர் சிகரத்துக்கு மேல் தோன்றிய பிறையைக் கண்டதும் லிங்கையாவின் இதழ்கள் அவனையும் அறியாமல் ‘ஹரஹர சிவசிவ பஸ்வேசா’ என்று முணுமுணுத்தன. கால்கள் பழக்கத்தில் இருளில் முட்டுப் பாறையில் அடி வைத்து, தொரியர் வீடுகளின் பக்கம் செல்லும் பாதையில் இறங்கின. சாக்கு, கம்பளி, பந்தம் சகிதம் மல்லன் நின்று கொண்டிருந்தான். “மல்லா!...” “ஆமாங்கைய்யா” என்று குரல் கொடுத்தான் அவன். முன்னே லிங்கையாவும், பின்னே மல்லனுமாக நடந்தனர். எதிரே கானகப் பக்கத்திலிருந்து நரிகளின் தொடர்ந்த ஊளையொலி எழும்பியது. மல்லைன் பின் வந்த நாய் எதிர் ஊளையிட்டுக் கொண்டே முன்னே ஓடியது. “நேத்து நம் கோழியை நரி பிடித்துப் போய்விட்டதுங்க” என்றான் மல்லன். அந்த வார்த்தை லிங்கையாவின் கவனத்தைக் கவரவில்லை. சில்லென்ற முகத்தில் உராய்ந்த தண்மை, அந்த ஆண்டின் முதற்பனியை அறிமுகப்படுத்தியது. சாதாரணமாக அந்தப் பனி, அவனைக் கவலை கொள்ளச் செய்திருக்கும். ஏனெனில், கடும்பனி பெய்யத் தொடங்கு முன் அறுவடை நடந்து விட வேண்டும். எப்போதும் மார்கழிக் கடைசியில் தான் கடும்பனி பெய்யத் துவங்கும். தைப் பொங்கல் பெரிய பண்டிகைக்குள் அறுவடை செய்து விடுவார்கள். பின்னர், மாசி நன்னாளில் இறைவர் கோயிலின் முன் அழல் மிதித்த பிறகு, விதைக்கும் திருநாளைக் கொண்டாடுவர். பனியையும் பயிரையும் மீறி அப்போது லிங்கையாவை வாட்டிய கவலை என்ன? ஒரு கிளை தழைக்க, ஒரு கிளை காய்ந்து விடுவது ஏன்? அண்ணியோ, “எவர் செய்த வினையோ, எவர் செய்த ஏவலோ?” என்று ஓலமிடுகிறாள். அண்ணனின் பூமி நல்ல விளைவு கொடுத்தாலல்லவோ, வழக்கமாகக் காட்டுக் குறும்பருக்குச் சரியான மானியம் கொடுக்க முடியும்? மந்திர தந்திரங்களில் வல்ல குறும்பரின் வினையை எண்ணி அண்ணி அஞ்சுவதில் வியப்பில்லையே! அண்ணியை நினைக்கும் போதெல்லாம் சில நாட்களாக லிங்கையாவின் உள்ளத்தில் ஒரு புதுக் கவலை தோன்றிக் கொண்டிருந்தது. குடும்பத்தில் ஒரு புதுப் பெண் வந்து புகுந்து, தலைவனையும் அவனுக்குரிய பூமியையும் உடைமைகளாகக் கொண்டு உழைத்து, அவனையும் சிறப்பித்து, அந்தக் குடும்பத்தின் வேர் நசித்து விடாதபடி, தளிர்த்துத் தழைக்க வைக்கிறாள். ஏவலைப் போல் உரைத்து, உயர்ந்தவற்றை மக்களுக்கும் கணவனுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மிகுதியாகும் ‘கொரளி’ மாவைக் கூட உண்டு நிறைவெய்தும் படகப் பெண்களின் சிறப்பைச் சொல்லி மாளுமோ; இத்தகைய பெண்களை மாணிக்கங்கள் என்று போற்றிப் பேண வேண்டியது ஆணின் கடமையன்றோ! தமையனாக, குடும்பத்தின் மூத்தவனாகப் பிறந்தவன் இதை உணர்ந்திராதது, லிங்கையாவின் சீலம் மிகுந்த நெஞ்சிலே அளவு கடந்த வேதனையையும் துயரத்தையும் தோற்றுவித்திருந்தது. அண்ணன் மட்டும் அல்ல; பலரும் அந்த அருமைகளை உணர்ந்திருக்கவில்லை. பொன்னைப் பித்தளை என எண்ணுவது போல், பெண்ணின் சேவைகளைச் சுயநலத்திற்காக உபயோகப் படுத்திக் கொண்டு, குடும்ப வளர்ச்சியின் உயிர் ஊற்றாகிய அன்பைப் பெருக்கிப் பிணைப்பைப் பின்ன மறந்து விடுகின்றனரே! இணைப்பில் உயிரூட்டமில்லாததால் தேய்ந்து பெரியோரின் குற்றங்களினால் விளையும் துன்பங்கள், தீமைகள், எத்தனை சக்தி வாய்ந்தவை ஆகி விடுகின்றன! திருமண பந்தம் என்பது விலக்க முடியாததன்று என்ற அருமையான உரிமையை மிக அவசியமான நிலையில் மட்டுமே உபயோகித்துக் கொள்ளலாம் என்ற அரிய உரிமையை - மலிவான சரக்காக்கி விடுவது, எத்தனை தூரம் சிறுவர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது! லிங்கையாவின் தந்தை, தம் நாளில் இரு பெண்களைக் கொண்டார். மூத்தவளின் மகன் தான் அந்த அண்ணன், மாதன். மூத்தவள் பிரிந்து சென்ற பின் அவர் இன்னொருத்தியைக் கொண்டார் - தாயின் அரவணைப்பில் வித்தியாசம் கண்டதாலோ என்னவோ, லிங்கையா அறியான்; ஊகந்தான். அண்ணன் மாதன், குடும்பத்தில் என்றுமே ஒட்டவில்லை. சாப்பாட்டுக்கு எப்படியோ வரும் என்ற நம்பிக்கை அண்ணனுக்கு விழுந்து விட்டது. கவலை இல்லாமல், வருந்தி உழைக்காமல், உல்லாசம் விரும்பும் ஊதாரி என்று பெயரெடுத்து விட்டான் மூத்த மகன்; மூத்தவள் மகனல்லவா? லிங்கையாவின் தந்தை உயிருடன் இருந்த நாட்களிலேயே மூத்தவனைத் தனியாக வைத்து, நிலமும் பிரித்துக் கொடுத்தார். தம் உடல் சாயுமட்டும், அந்த மகனின் பூமியில் தாமே பாடுபட்டுப் பலன் கண்டார். ரங்கனின் தாயின் முகம் லிங்கையாவின் நினைவில் அப்போது தோன்றியது. சந்தனத்தை அரைத்த கலவையின் நிற மேனியாள். அவர்கள் சமூகத்திலேயே, அபூர்வமான அழகான வட்ட முகம் படைத்தவள் அவள். அவள் சிரித்தால் கபடமற்ற குழந்தையின் நினைவே வரும். லிங்கையாவின் தந்தை அவளுடைய அழகையும் உடற்கட்டையும் மண்ணில் வேலை செய்யும் பாங்கையும் கண்டே நூறு ரூபாய் கொடுத்து, தம் மூத்த மகனுக்கு அவளைக் கொண்டு வந்தார். ஒரே ஆண்டில் மாய்ந்து விட்டாளே? அண்ணன் மாதனுக்குத் தேனில் அளைந்த குரல். நடனமாடுவதில் அவனை மிஞ்சுபவர் இல்லை. எங்கே இறைவனுக்குரிய விழா நடந்தாலும், மரணமென்றாலும், கோத்தர் இசைக்கேற்ப நடனமாடுவதற்கு அவர்கள் சமூகத்தில் முதல் அழைப்பு அவனுக்கே உண்டு. இறைவனைப் புகழ்ந்து அவன் தீங்குரலில் இசைக்கத் தொடங்கினால் மெய்மறக்காதவர் இருக்க மாட்டார்கள். அன்று - அன்று அவள் வெண்மலர் போல் சோர்ந்து விழுந்த சமயம் கூட அண்ணன் வீட்டில் இல்லை. கோத்தைப் பக்கம் தெய்வத் திருவிழாவுக்காகச் சென்றிருந்தான். எதிர்மனையின் வாசலில் அவசரமாக நிரைச்சல் கட்டினார்கள். சிசுவைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள் போலும்! ஏற்ற கடனைப் பிறர் கையில் ஒப்பித்துவிட்டுச் சில மணிகளில் அவள் மாய்ந்து விட்டாள். அந்தக் குழந்தை இப்பிறவியில் அறிந்திழைத்த குற்றம் எதுவுமே இல்லை. தகப்பனின் விதியே மகனைச் சூழுமோ? தன் மகன் அல்லாத மகனின் மகனை, இளங்குழந்தை என்று பாட்டி எடுத்துச் சீராட்டினாள் என்று கொள்வதை விட சிற்றப்பன் லிங்கையாவே தாயாக இருந்து அந்தக் குழந்தையை வளர்த்தான் என்று கொள்ளலாம். ரங்கனின் தாய் இறந்து ஆறு மாசங்கள் கழிந்ததுமே, நஞ்சம்மைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து, அண்ணனுக்குக் கட்டி வைத்தார் அவன் தந்தை. “எருமையைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றீர்களே?” வழி விட்டு எங்கோ சுற்றி வருகிறாரே என்று புரியாதவனாகத் தொரிய மல்லன் குரல் கொடுத்தான். “ஓ...” என்று நினைவுக்கு வந்த லிங்கையா, “நீ போய்ப் பார்த்து வா” என்றான். மல்லன் பந்தத்தை எடுத்துக் கொண்டு செல்கையில், லிங்கையா பரணில் ஏறினான். உள்ளே ரங்கனின் கால் தட்டுப்பட்டது. திட்டுக்கிட்டுக் கையை எடுத்த அவன் சட்டென்று நெருப்புக் குச்சியைக் கிழித்துப் பார்த்தான். சுருண்டு ரங்கன் படுத்திருந்தான். எருமையை முரட்டுத் தனமாக அடித்து விட்டுச் சின்னம்மைக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறானோ? தன் மேல் போர்த்திருந்த கம்பளியை எடுத்து ஒரு புறம் அழுத்திப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தான். இருட்டானாலும் சிற்றப்பனின் கனிந்த முகம், வெகு அருகில், அவன் முகத்துக்கு முன் தெரிந்தது. சிற்றப்பன், கையில் தட்டுப்பட்டது. காப்பென்று உணர்ந்தான். அந்தப் பிள்ளையைப் பார்த்த அவன் கண்களில் வெம்பனி சுரந்தது. “ரங்கன்!” தொண்டை தழுதழுத்தது. “இப்படிச் செய்யலாமா தம்பி? நீ... வீட்டுக்கு மூத்த பையன், உன்னைத் தோளோடு போட்டுக் கொண்டு நான் வளர்த்தேன். என் உடம்புடன் தேய்ந்து பெரியவனான நீ இப்படிப் போவாய் என்று நான் நினைக்கவில்லையடா தம்பி!” ரங்கன் குரோதம் பொங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளில் அது லிங்கையாவுக்குத் தெரியவில்லை. “திருட்டு வேலை இந்தச் சின்ன வயசிலே ஆகுமா ரங்கா?” “யார் திருடினார்கள்? கீழே கிடந்ததை எடுத்து வைத்துக் கொண்டால் திருட்டா அது?” என்றான் ரங்கன் ஆத்திரத்துடன். லிங்கையா சட்டென்று நாவைக் கடித்துக் கொண்டான். அப்படியும் இருக்கலாமே! “அப்படியானால் கிழேதான் கிடைத்ததா?” “பின்னே, நான் உங்கள் வீட்டில் வந்து திருடினேனா?” “இல்லையென்றால், எனக்கு அந்தக் கால் ஒடிந்த எருமை நடந்து வீட்டுக்கு வந்தாற் போல் சந்தோஷமாகிறது, ரங்கா! கீழே கிடந்தது எடுத்துச் செருகிக் கொண்டாய். சரி, மல்லன் வரட்டும். வீட்டுக்கு வந்து, சாப்பிட்ட பின் படுக்கலாம்” என்றான் லிங்கையா. “நான் ஒன்றும் வீட்டுக்கு வரவில்லை.” “ஏண்டா தம்பி?” “வீட்டிலே எனக்கு என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள்? எனக்கு அம்மா இல்லை, அண்ணன் இல்லை, அத்தை இல்லை, மாமன் இல்லை, மகள் இல்லை, என்னை யாரும் கூப்பிடப் போறதில்லை.” கடைசி வார்த்தைகளைச் சொல்லுகையில் உள்ளத்து ஆற்றாமை அழுகையாக வெளிவந்து விட்டது. சிற்றப்பன் ஆதரவுடன் அவன் முதுகைத் தடவினான். “அப்படியெல்லாம் சொல்லாதே ரங்கா; நான் இல்லையா உனக்கு? உனக்கு ஏன் அத்தை இல்லை, மாமன் இல்லை? பாரு வந்திருக்கிறாள், பார்க்கவில்லையா நீ?... நான் சொல்வதைக் கேள், சிற்றப்பா வீட்டிலேயே இரு. இதோ மல்லன் வந்து விட்டான். நாம் வீட்டுக்குப் போகலாம், வா.” திகைப்புடன் நின்ற மல்லனிடம் திரும்பி, “எருமையைப் பார்த்தாயா?” என்றான். “பார்த்தேன்... பரணில் ரங்கனா?” என்றான் மல்லன். “ஆமாம். நீ இங்கே இரு. நான் வீட்டுக்குப் போய் வருகிறேன்” என்று பரணின் படியிலிருந்து இறங்கி, மல்லனிடமிருந்து தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டான் லிங்கையா. தன்னைக் கைப்பிடித்து இறக்கி அழைத்துக் கொண்டு தீப்பந்தத்துடன் அவன் மேடேறிச் செல்கையில், ‘இன்று சிற்றப்பன் காவல் இருக்கும் முறை என்று தெரியாமற் போயிற்றே. இவர் பிடித்து விட்டாரே!’ என்று ஆத்திரந்தான் பொங்கி வந்தது. எதிர்த்து வெளியேறத் துடிக்கும் துடிப்புக்கு ஒரு போக்குக் கிடைத்து, அதைச் சிற்றப்பன் சிரங்குக்குக் குளிர்சந்தனம் போட்டு அமுக்குவதைப் போல் அமுக்கி விட வந்ததை அவனால் ஏற்க முடியவில்லை. சிற்றப்பன் வீட்டில் எத்தனை நாளைக்கு ஒளிய முடியும்? அப்போதும் சின்னம்மை ஏசமாட்டாளா? அந்த ஹட்டியும் உறவினரும், மக்களும் தன்னுடைய கட்சியில் இருப்பதாகவே அவனால் எப்போதும் நினைத்திருக்க முடியவில்லையே! அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் தான் எத்தனை ஆறுதலும் மகிழ்ச்சியும் இருந்தன! ஆனால் அவன் ஆத்திரத்துக்கு, தன்னைப் பற்றிக் கொண்டு மேடேற்றிச் செல்லும் கையை உதறும் வலிமை வரவில்லை. போதாக்குறைக்குப் பசியும் குளிரும் வேறு. அந்தக் கைச்சூட்டை உதறாதே என்று பொங்கி வரும் ஆத்திரத்தை அமுக்கின. பையனின் உள்ளத்தை அறியா லிங்கையா, ‘மாதலிங்கேசுவரா, இந்தக் குலக்கொழுந்துக்கு தீமை வராமல் இருக்கட்டும். இந்தக் கை துணையாக, இந்தத் தீப்பந்த ஒளி துணையாக, இருட்டான பள்ளத்திலிருந்து மேலே இவனை அழைத்துச் செல்கிறேன். நல்ல வழியில் செல்லுவதை இந்தப் பந்தமும் இந்தக் கையுமே இன்று காப்பது போல் என்றும் காக்கட்டும்’ என்றெல்லாம் என்ணியவாறு நடந்தான். ஹெத்தப்பா கோயிலிலிருக்கும் தீபம் ஒன்றே விடிவிளக்குப் போல் கிராமம் இருக்குமிடம் காட்ட, பெரிய வீட்டின் குழந்தைகள் அனைவரும் உறங்குவது போல ஊர் ஓசை ஓய்ந்திருந்தது. அந்த அமைதியினூடே தேனில் அளைந்த தீங்குரல் ஒன்று இறைவனின் புகழை இசைத்துக் கொண்டிருந்தது. ‘ஆகா! என்ன அற்புதம்? அண்ணன் தானா பாடுகிறான்? அவன் இவ்வுலக மனிதன் தானா? அல்லது யட்சனோ? கின்னரனோ? இரவின் மோனத்திலே எழும் இவ்வொலி, ஊதாரி, பொறுப்பறியாத சோம்பேறி என்று பலரும் கருதும் அண்ணனின் கணத்திலிருந்துதான் வருகிறதா? அவன் சுயநினைவுடன் பாடுகிறானா, அல்லது தெய்வத்தின் ஆவேசம் குடிகொண்டிருக்கிறதா?’ அந்த ஒலியில் அவன் உள்ளம் தன்னை மறந்த லயத்தில் மூழ்கியது. நெஞ்சம் நெக்குருக, வாயிலில் கதவை இடிக்கவும் மறந்தவனாக நின்றான். இன்னிசையின் அலைகள் தவழ்ந்து தவழ்ந்து வந்து எங்கோ சென்று கொண்டே இருந்தன. உயர உயர வானுலகின் எல்லையை முட்டி, அந்த முக்கண்ணனை அழைக்கின்றனவோ ஒரு வேளை? என்ன பாக்கியம் செய்தவன் அண்ணன்! வீடும் மாடும் பூமியும் நிலையுள்ளவையா? இப்படி அந்த இறைவனைக் கூவி அழைக்கும் பேறு அவனுக்கில்லையே? ரங்கனின் நல்வாழ்வு பற்றி அவன் நினைத்தற் கொப்ப, இந்த அபூர்வமான இன்னிசை ஒலிப்பது நல்லதொரு சூசகம் போலும்! முன்னோர் பழம்பெருமை குலையாமல் தீபமெனச் சுடரும் ஒளியாய் வாழ்ந்து பெருகுவான் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் இசையோ? ரங்கனும் அந்த இசையில் கட்டுண்டவனாகத்தான் சிற்றப்பனை ஏதும் கேட்காமலே நின்று கொண்டிருந்தான். வீட்டுக்குள்ளிருந்து குழந்தை அழும் குரல் வந்தது. சுய நினைவுக்கு வந்த ஜோகியின் தந்தை கதவை இடித்தான். “மாதி, மாதி!” தீப மாடத்து அகலைத் தூண்டி எடுத்துக் கொண்டு வந்து மாதி பரபரக்கக் கதவைத் திறந்தாள். இரவு அவன் சரியாக உணவு கொள்ளவில்லை. குளிரோ காய்ச்சலோ? “என்ன?... உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்றாள் பரபரப்புடன் அகலைத் தூக்கிப் பிடித்து. “ஒன்றும் இல்லை; ரங்கா, உள்ளே வா!” மாதி அப்போதுதான் ரங்கனைப் பார்த்தாள். வழியில் படுத்திருந்த மைத்துனன் மனைவி சட்டென்று பாயை மடக்கிக் கொண்டு ஒதுங்கினாள். மாதி, வியப்புடன் விளக்கை ஏந்திக் கொண்டு சமையற் பகுதிக்கு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். “எங்கே இருந்தான் இவன்?” “ஒன்றும் கேட்காதே!” லிங்கையா ஜாடை செய்தான். “சோறு இருக்கிறதா?” “களி இருக்கிறது! குழம்பு இருக்கிறது.” லிங்கையா, மனைவி சோறெடுத்து வைப்பதை எதிர்பார்க்கவில்லை. விளக்கை வாங்கித் தண்டில் வைத்துவிட்டு அவனாகவே வெண்கல வட்டிலைக் கழுவி வைத்து, குளிர் நீரில் மிதந்த ராகிக் களி உருண்டையில் ஒன்றை வைத்து, அடுப்பின் மீது பானையில் மூடி வைத்திருந்த குழம்பையும் எடுத்து ஊற்றினான். அவனாகவே கலந்து, “இந்தா ரங்கா...” என்று கையில் வைக்கையில், தந்தையின் குரல் கேட்ட ஜோகி எழுந்து வந்தான். “எங்கே எழுந்து வந்தாய்? போடுப் படுடா” என்று தாய் விரட்டினாள். “ஏன் விரட்டுகிறாய்? வரட்டுமே! இங்கே உட்கார், ஜோகி” என்றான் தந்தை. இரவில் எங்கோ ஒளிந்திருந்த ரங்கனை அழைத்து வந்து தந்தை உணவு கொடுப்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது. தன்னை அறியாமல் அவன் கையும் அந்தக் களிக்கு நீண்டது. லிங்கையா, மகனின் கையிலும் ஒரு கவளம் வைத்தான். தானும் உண்டான். “இப்படி ஒரே கலத்தில் உண்பது போல, என்றும் பிரியாமல் பகிர்ந்து உண்டு இருக்க வேண்டும். ஜோகி, ரங்கா இரண்டு பேரும் பிரிந்தால் சங்கடம், துன்பம் தெரியுமா?” இருவரும் தலையை ஆட்டினார்கள். இருவருக்கும் கைகழுவ நீரூற்றிவிட்டு, அவன் கலத்தையும் கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான். “சோறு வைத்தேன். உண்ணவில்லை; களியை உண்கிறீர்களே?” என்று மாதி சொல்லிக் கொண்டே முன்னே வந்து நின்றாள். “அப்போது இறங்கவில்லை! ரங்கா, ஜோகி இரண்டு பேரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள்!” இருவரையும் நெருங்கப் படுக்க வைத்துவிட்டுக் கம்பளியால் போர்த்தினான். “ஈசுவரரை நினைத்துக் கொண்டு தூங்குங்கள்.” உள்ளத்தில் நிறைவுடன் அவன் வெளியே நடந்த போது விளக்கை வைத்துக் கொண்டு அவனருகில் நின்ற மாதி கதவைத் தாழ்போட வெளியே வந்தாள். “இங்கே வா” என்று அவளை வெளியே அழைத்தான் லிங்கையா. புறமனைக்குள் போய் நின்ற அவனிடம் என்ன சேதியோ என்று அவள் நெருங்கினாள். லிங்கையா ஒன்றுமே சொல்லவில்லை. மடியை அவிழ்த்து, காப்பை அவளிடம் நீட்டினான். “நான் எருமையைப் பார்க்கப் போகையிலே பளிச்சென்று கீழே கிடந்தது. எடுத்து வந்தேன். கீழே நழுவ விட்டுவிட்டு, ஒன்றும் அறியாத குழந்தைகள் மேல் பழியைப் போட்டுவிட்டாயே?” மாதி ஒன்றுமே பேசாமல் காப்பைக் கையில் வாங்கிக் கொண்டாள். “ரங்கனை இந்நேரத்தில் எங்கே பார்த்தீர்கள்?” என்றாள். “சின்னம்மைக்குப் பயந்து கொண்டு பரணியிலே பசியோடு சுருட்டிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான். அழைத்து வந்தேன். நீ ஒன்றும் சொல்லாதே. குழந்தைகள் மனசு பால்; பெரியவர்கள் பேச்சுப் புளியாக இருக்கக் கூடாது. மனம் கெட்டு விடும்.” மாதி ஒன்றும் பேசவில்லை. “வரட்டுமா? கதவைப் போட்டுக் கொள்!” கம்பளியை உதறிப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். அண்ணனின் இசை ஓய்ந்து விட்டது. இரவு நிர்மலமாக இல்லை. பனி என்னும் கல்லாத் துகிலால் தன்னை மூடி மறைத்துக் கொண்டிருந்தாள் மலையன்னை. விர்ரென்று இறங்கி வருகையில் அவன் மனசில் நிம்மதி இருந்தது என்று கூறி விட முடியாது. ஏடு படிந்தாற் போன்ற திருப்திதான். வேற்றுமையில்லாமல் மாதி முழு மனதுடன் ரங்கனை மகனாகப் பாவிக்க வேண்டுமே? அன்னை இல்லாத குறை எத்தனை பெரிய குறை! அண்ணனின் இசை, ஓயாத இசையாய், மாயாத அலைகளாய், இனிமையின் மெல்லிய பாகுக்கம்பிகள் போன்ற உருவத்துடன் செவியூடு சென்று இருதயத்தைத் தொட்டு விட்டாற் போல் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று உடனே. அவன் தனிப்பிறவி; உலகக் கவலை ஒட்டாமல், இன்பங்களை மட்டும் பற்றிக் கொண்டு வாழும் தனிப்பிறவி. மண் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், இல்லை; மனைவி ஒட்டாத நீராகப் பிரிந்து போனாலும் இல்லை. மகனை மட்டும் எப்படிக் கவனிக்கப் போகிறான்? ஆனால் அந்த இசையின் கூடுதலால், அவன் தட்டு, ஒன்றுமில்லாமல் உயர்ந்துதான் நின்றது. அத்தனை பொறுப்புகளையும் செல்வங்களையும் சுமந்தும் தன் தட்டு, பாதாளத்தில் கிடப்பது போல் உணர்ந்தான். அவன் குடும்பத்துக்கு ஒரு மகன் வருவது சுமையாகுமா? நல்ல மகனாக ஆக்கிவிட்டால் அவனும் ஒரு செல்வம் அல்லவா? ஏன், உலகின் கண்களுக்கு மட்டும் பிரிந்து நாடகமாடுவானேன்? பிரிவில் என்ன இருக்கிறது? ஹட்டி நிலங்களுக்கே காவல் ஒத்து முறைபோட்டு, கடமையைப் பகிர்ந்து எல்லோரும் ஆற்றவில்லையா? பணிபுரியும் தொரியன் உடல் நலக்குறைவால் படுத்துவிட்டால், ஆளுக்குக் கொஞ்சம் பங்கிட்டு அவனுக்கு உணவளிக்கவில்லையா? ஒரு குடும்பம் என்று மனசில் கொண்ட பிறகு, மண்ணை மட்டும் ஏன் பிரித்து வேற்றுமை கொண்டாடித் தரிசாகப் போட வேண்டும்? அண்ணனுக்காக, ரங்கனுக்காக, மற்ற குழந்தைகளுக்காக் அந்த மண்ணிலும் விளைவு பொன்னாகப் பாடுபட வேண்டும். தை பிறந்து பெரிய பண்டிகை கழிந்ததும், முன்பாக, ரங்கனுக்கு முறைப்படு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கை நிறைவேற்ற வேண்டும். பின்னே, மாசி நன்னாளில் மாதலிங்கர் கோயில் முன் அழல் மிதித்துப் புனிதமான பின், விதைக்கும் திருநாளில், அந்தப் பூமியிலும் விதைத்து விடப் பண்படுத்த வேண்டும். இவ்விதமெல்லாம் தனக்குத்தானே தீர்மானம் செய்து கொண்டவனாக ஜோகியின் தந்தை, காவற் பரணை நெருங்கினான். பூம்... பூம்... பூம்... என்று ஊதுகுழலெடுத்து ஊதியவனாய்க் கையில் பந்தத்துடன் வந்து கொண்டிருந்தான் மல்லன். தன் தீர்மானங்களுக்கு அது வெற்றிச் சங்கு போல் ஒலிப்பதாக எண்ணிக் கொண்ட ஜோகியின் தந்தைக்கு, மகனைப் பெற்ற மகிழ்வில் நிறைவோடு அடங்கிய அன்னையின் மனசைப் போல் நிறைவு உண்டாயிற்று. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|