உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 7. பிரதிக்ஞை கோபாலனுக்கு அன்று அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய முறையன்று. ஆனால், அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய சமூக இயல் ஆசிரியர் அன்று வரவில்லை. எனவே நஞ்சனின் வகுப்புக்கு அன்று ஓய்வு வேளையில் அவன் பாடம் எடுக்க வந்திருந்தான். அம்மாதிரி ஓய்வு நேர வகுப்புகளில், கோபாலன் மாணவர்களுடன் இஷ்டம்போல் சகஜமாகப் பேசி உற்சாகம் எழும்பும் வகையில் அரட்டையில் காலத்தைத் தள்ளி விட்டுப் போவான். தலைக்குத் தலை மாணவர்கள் பேசினார்கள். சிரித்தார்கள்; பாடவும் தொடங்கினார்கள். “உஷ்!” என்று மேசையைத் தட்டிய கோபாலன், “என்ன சத்தம் போடுகிறீர்கள்” என்றான். “சுதந்தரமாக இருக்கிறோம், ஸார்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்தானே, ஸார்?” என்றான் ஒரு பையன். அண்மையில் குடியரசுத் தின வைபவம் வர இருந்ததை நினைவுப்படுத்திக் கொண்டு, “ஓகோ! இப்போது ஒரு கேள்வி போடட்டுமா?” என்று சிரித்த கோபாலன், “நாமெல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று முதலாக முழக்கியவர் யார் தெரியுமா?” என்று கேட்டான். சில விநாடிகளுக்கு அமைதி நிலவியது. “ம், எங்கே பீமா, சொல்லேன் நீதான்!” பீமன் என்ற பையன் எழுந்து நின்றான். “தெரியாதா? எங்கே நீ... நீ... நீ...” என்று ஒவ்வொருவராக ஆசிரியர் கைகாட்ட ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். வீச்சுள்ளி போலிருந்த பயல் ஒருவன் விறைப்பாக நின்று, “ஸினிமா ஸ்டார் பிரேம்குமார் ஸார்” என்றான். ஆசிரியருடன், விஷயம் புரிந்தவர், புரியாதவர் எல்லோரும் சிரித்தார்கள். “பிரேம்குமார் முழக்கினாரா? எத்தனை தடவைகள் வாழ்க்கைத் திரை பார்த்தாய்?” “ஐந்து தடவைகள் ஸார்” என்றான் பையன். மறுபடியும் சிரிப்புக் குபீரென்று அடுத்த வகுப்புக்குப் பரவ ஒலித்தது. அப்போதுதான் கோபாலனின் பார்வை சாய்வு மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டு கூச்சலிலும் ஆரவாரச் சிரிப்பிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த நஞ்சனின் மீது விழுந்தது. கோபாலன் மேசையைத் தட்டிவிட்டு, “கிடக்கட்டும்; நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற துணிவில், சுதந்தரமாக ஒருவர் ஆனந்த நித்திரை செய்து கொண்டிருக்கிறார்; அவரைக் கேட்டுப் பார்க்கலாம். அவருக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்” என்றான். “அனைவரின் கவனமும் நஞ்சன் மீது திரும்ப, சிரிப்பொலி கூரையைப் பொத்துக் கொண்டு போக எழும்பியது. நஞ்சன் திடுக்கிட்டவனாகத் தலை தூக்கிப் பார்த்தான். “அடாடா! என்ன செய்வது? சுகமாக வெயில் ஜன்னல் வழியே விழுகிறது. பகல் சாப்பாடு கழிந்து வந்திருக்கிறார். வகுப்பிலே தூங்குவதற்குக் கூட உரிமை இல்லையா என்ன?” ஆசிரியர் கிண்டல் பேச்சில் இறங்கிய போது, நஞ்சன் சுற்றும் முற்றும் பார்த்தான். மறுபடியும் சிரிப்பு. “எல்லோரும் எதற்குச் சிரிக்கிறீர்கள்? கப்சிப். அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டாரா! பார்ப்போம்” என்றார் ஆசிரியர். “எனக்கு ஒரே தலைவலி ஸார்” என்றான் நஞ்சன். வகுப்பில் அவன் ஒருநாள் கூட அவ்விதம் கவனக் குறைவாக இருந்து சிரிப்புக்கும் கிண்டலுக்கும் ஆளானதில்லை. தன்னந் தனியாக மூக்குமலை ஹட்டியிலிருந்து, ஏழைமையின் உருவமாகப் படிக்க வரும் நஞ்சன், வகுப்பிலும் தனியானவனே. வகுப்பில் அநேகமாக அவனே முதல்வனாக இருப்பான். எல்லோரும் தன்னைத் தாழ்வாகப் பார்ப்பது போன்ற பிரமை அவனுள் ஒத்தைக்கு வரத் தொடங்கிய நாளிலிருந்தே வளர்ந்திருந்தது. பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய படித்த தந்தையோ, மாமனோ அவனுக்கு இல்லை. பெரிய தந்தை ரங்கன் கூடப் படிக்காதவர்; அவனைச் சேர்ந்தவர்கள் யாருமே கல்வியறிவில் மிக்கவர் அல்லர். ‘அந்தக் குடும்பத்திலே அவன் பேர் சொல்ல வேண்டும். படிக்க வேண்டும்’ என்ற ஒரே குறியுடன் அவன் படிக்க வந்து கொண்டிருந்தான். அவனை அறியாமல், கோபாலனைப் பார்க்கையில், அவர்கள் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே இருந்த பகை, பொறாமை, லேசான மூட்டமாக, அன்று அவன் உள்ளத்திலும் பரவியது. “தலைவலி என்றால் வகுப்பில் படுத்துத் தூங்குவதா?” “அப்படியானால் வெளியே போகிறேன் ஸார்!” மறுபேச்சே இல்லாமல் நஞ்சன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். எவருமே அப்படி அவன் துடுக்காக, துணிச்சலாக வெளியேறுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. நஞ்சன் அப்படியே நடக்கும் மாணவன் அல்லன். ஏன் அவ்விதம் நடந்தான்? பசி. ஆம், அன்று காலையிலிருந்து அவன் ஏதும் சாப்பிட்டிருக்கவில்லை. கிழவர் ஆதரவாக அளித்த பூமியில் அம்முறை விளைவு சரியாக இல்லை. கிழவரின் மகன் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பி நால்வர் உண்டு, நஞ்சனின் படிப்புச் செலவுக்கும் கண்டு மீறப் பணம் பற்றவில்லை. கைநீட்டி வாங்கியறியாத பாரு, ஒரு வேளை பட்டினி கிடந்தாள். மகனுக்கும் கிழவருக்கும் மட்டுமே காபி வைத்துத் தந்தாள். ‘இல்லாமை’ என்ற விஷயத்தை மகனிடம் மறைத்தாள்; அரைப் பட்டினி ஜோகியையும் தொற்றியது. அன்று காலை, இரண்டே இரண்டு ராகி அடை சுட்டு, அவனுக்கு ஒன்றும் கிழவருக்கு ஒன்றுமாக அவள் வைத்திருந்தாள். நஞ்சன் அடுப்படியைப் பார்த்துவிட்டு, “அப்பாவுக்கு? உங்களுக்கு?” என்று கேட்டான். பாரு வெண்ணையை வழித்து அவன் அடைமேல் வைத்தபடி, “இருக்கிறது; நீ சாப்பிடு” என்றாள். “எங்கே? காட்டுங்கள்.” உண்மையில் பாரு அடுப்புச் சுள்ளிகளை இழுத்து அணைத்திருந்தாள். கிழவருக்கு வயசான காலத்தில் வாய்க்கினிய பண்டங்கள் வேண்டியிருந்தன. நஞ்சனிடம் அவர் சில்லறை கொடுத்து, பள்ளி முடித்து ஒத்தையிலிருந்து வருகையிலே பஜ்ஜியோ, போண்டாவோ, லட்டோ வாங்கி வரச் சொல்வார். தொடக்கத்தில் மகனாக நினைத்து ஆதரவு தந்த முதியவர், பூமியைத் தந்தோம் என்ற நினைப்பில், அவர்களை அதிகாரம் செய்யும் முதலாளி ஆகிவிட்டாரோ என்று கூட நஞ்சனின் மனம் கொதித்தது உண்டு. கிழவரும் மகனும் மருமகளும் மலைப்பக்கம் வருவதில்லை. பெண்ணெடுத்த வீட்டுக்குத்தான் மகன் செல்வான். அவர்களுக்கு அந்த விளைவிலிருந்தும் பணம் மட்டுமே வேண்டும். அந்த வீடு, பூமி எதுவும் தேவையில்லை. இரண்டொரு மணி நேரம் வந்தாலும், மகன் தங்கள் உடைமைகளைத் தருமமாக அவர்களுக்கு வழங்கிவிட்டாற் போல் நடந்து கொண்டார்கள். நஞ்சனுக்கு இதெல்லாம் புரிய வயசாகவில்லையா? அன்றுங்கூடக் கிழவர், அவனிடம் இனிப்பும் காரசாரமான பொட்டலுமும் வாங்கிவரச் சொல்லி நாலணாத் தந்திருந்தார். பையன் வாங்கி வருகிறானே என்று, ஒருநாள் அவர் அவனுக்கு முழுசாக நாலணாக் கொடுத்தது உண்டா? பசி கவ்வும் வயிற்றுடன் குலுங்க குலுங்க அவன் எட்டு மைல் வந்து அவரிடம் தின்பண்டங்களைக் கொடுத்துவிட்டு, அம்மை பாடுபட்டு அன்புடன் தரும் தேநீருக்கு அடுப்படிக்குப் போவான். உண்மையில் தங்களுக்கு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று அறிந்ததும் அவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்து விட்டது. “இந்த வீட்டில் நான் மட்டும் பகாசுரனா? உங்களுக்கும் ஐயனுக்கும் ஒன்றுமில்லாமல், நான் இந்த அடையையும் காபியையும் தொடமாட்டேன்” என்றான். “இப்படியெல்லாம் எங்கள் மனத்தைக் கஷ்டப்படுத்தலாமா நஞ்சா? கோதுமை இருக்கிறது. ஆட்டிக் களி செய்யப் போகிறேன். எட்டும் எட்டும் பதினாறு மைல் நடந்து படிக்கும் பிள்ளையில்லையா நீ? இந்த வயசுக்கு இது போதுமா? சொன்னதைக் கேள்” என்று கண்ணீர் மல்க வேண்டினாள் பாரு. “மாட்டேன். இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஏற்க மாட்டேன். நீங்கள் தினமும் இதையே செய்து என்னைப் பாவியாக்குகிறீர்களில்லை?” என்று நஞ்சன் இரைந்தான். மாட்டை அவிழ்த்து விட்டு உள்ளே வந்து ஜோகி நஞ்சனின் கோபத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு விட்டார். அத்தகைய வறுமை பாரு வந்த பிறகு அவர்கள் அநுபவித்திருக்கவில்லை. மரகதமலை ஹட்டியில் அவர் இளைஞராக இருந்த காலத்தில் கூட வறுமை இல்லாமலில்லை. ஆனால் அப்போது எல்லாவற்றுக்கும் மேலான ஒற்றுமை மாய்ந்திருக்கவில்லை. வண்மையும் செல்வமும் தனியாகப் பிரிந்திருக்கவில்லை. பசியும் தெரிந்திருக்கவில்லை. ‘பாரெல்லாம் பச்சை விரிந்தும் மனத்தில் பசை இல்லாத நாட்கள் வந்து விட்டனவே! சொந்த மண்ணை விட்டு வந்ததற்கு இதுவோ தண்டனை!’ என்று ஜோகியின் மனம் விண்டது. துயரை விழுங்கிக் கொண்டு, கடைந்த மோரில் ஒரு குவளை குடித்து விட்டு அவர் வெளியே சென்றார். கிழவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாதவராகப் புகைபிடித்துக் கொண்டிருந்தார். நஞ்சனுக்கு மனம் பற்றி எரிந்தது. யார் மீதென்று தெரியாமல் கோபமும் ஆத்திரமும் வந்தன. அவற்றை அம்மையின் மீது காட்டுபவனாக எரிந்து விழுந்து விட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து விட்டான். முதல் மணியிலேயே வயிறு வழக்கப்படி கூவியது. கணக்கில் அவன் கவனத்தைச் செலுத்தினான். இரண்டாம் மணியில் பொறுமை இழந்த வயிறு, ‘மறந்து விட்டாயா அப்பனே?’ என்று அவனிடம் கூவிப் பார்த்தது. அக்கினியை நெஞ்சுக்கு அனுப்பியது. நஞ்சன் சொல்லிலக்கணத்தில் ஊன்றியிருந்தான். இடைவேளை மணி அடித்ததும் பையன்கள் எல்லோரும் சாப்பாட்டுக்குச் சென்றார்கள். நஞ்சன் வெளியே வந்தான். பள்ளிக்கூட மேட்டிலிருந்து கீழே இறங்கினால், சந்தைக் கடை; சினிமாக் கொட்டகைப் பக்கம் சிற்றுண்டி, தேநீர்க் கடைகள்; நாவில் நீரூறச் செய்யும் கார மசாலாவின் மணம். வயிற்றுக்குள் கிடந்த அசுரன் நிலை தெரியாமல் எழும்பி எழும்பிக் குதித்தான். நஞ்சன் பல்லைக் கடித்துக் கொண்டு, பள்ளி மேட்டுக்கே திரும்பினான். குழாய்த் தண்ணீரைப் பருகிவிட்டு, எவரையும் பார்க்க இஷ்டப்படாதவனாகப் புல்லுத் தரையில் உட்கார்ந்து ஆங்கிலப் பாடப் புத்தகத்தைப் பிரித்தான். ‘அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே தெய்வம் இருக்கிறது’ என்ற தலைப்புடைய டால்ஸ்டாயின் சிறுகதை அன்று நடந்து முடிந்த ஆங்கிலப் பாடம். ஆப்பிள் திருடிய சிறுவனையும் கிழவியையும் பற்றி படிக்கையிலே, ஆப்பிளின் நினைவில் நாவில் நீர் ஊறியது, கன்னம் வலித்தது. புத்தகத்தை மூடிவிட்டுப் புல்லுத்தரையில் சாய்ந்தான். கணகணவென்று மணி ஒலித்ததும், தள்ளாடியவனாக வகுப்பறைக்குள் சென்றான் அவ்வளவே தெரியும். திரும்பி வருகையில், கோபாலனின் சிரிப்பில், அவன் முழுவதும் அறிந்தும் அறியாமலும் உணர்ந்திருந்த பகைமையுணர்வு பசித் தீயைப் போல் பொங்கி வந்தது. வெளியே ஹோட்டல் ரேடியோ, “அம்மா பசிக்குதே...” என்ற பாட்டை அலறியது. அந்தக் கார்த்திகை மாசக் கடைசியில், மழை ஓய்ந்து அடித்த வெயிலிலே உதகை பூங்காவைப் போல் காட்சியளித்தது. தன் நினைவின்றித் தோட்டச் சாலையில் நடந்து சென்ற அவனுக்குச் சட்டென்று, காலையில் கிழவர் தந்திருந்த நாலணாக்காசு நினைவுக்கு வந்தது. தோட்ட வழியில் தென்பட்ட ‘ஊட்டி பவனில்’ நுழைந்தான். இரண்டு தோசையும் டீயும் வாங்கிச் சாப்பிட்டான். ஓரணாவுக்கு ஒரு காரச் சாமான் பொட்டலம் வாங்கிப் பைக்குள் வைத்துக் கொண்டான். சூடான தேயிலையும் தோசையுங் கூட அவனுடைய தலைவலியை மாற்றவில்லை. முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, ‘பொடானிகல்’ தோட்டத்துப் பக்கம் நடந்தான். பசும் புல்லுத் தரையும் மலர்களும் அவன் மனத்துக்குச் சாந்தியை அளித்தன. புல்லுச் சரிவில் ஐரோப்பியக் கான்வென்ட் பள்ளிச் சிறுமிகள், பூச்செண்டுகள் போல் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான நீல உடைகள்; இரட்டைப் பின்னல்கள். செழுமையின் சின்னமாக, ரோஜாக் கன்னங்கள்; பவள இதழ்கள்; மகிழ்ச்சியின் ஒலிகள் காற்றில் இன்ப லயத்தோடு கலந்து வந்தன. வெள்ளைக்கார ஆசிரியை ஒருத்தி பெஞ்சில் அமர்ந்து, கம்பளி நீலநிற ரிப்பன் ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடிய அந்தச் சிறுமி... நஞ்சன் கூர்ந்து பார்த்தான். ஐரோப்பிய கான்வென்டிலே, பெரிய சீமான் வீட்டுச் செல்வியர், துரைமார்களின் புதல்விகளுக்கு நடுவே, அந்தப் பெண் டாக்டர் அர்ஜுனனின் மகள்; கிருஷ்ண கௌடரின் பேரப்பெண்! மரகதமலை ஹட்டிக்கு அவள் அதே ‘யூனிபாரம்’ உடையுடன் வந்து சென்றதை அவன் கண்டிருக்கிறானே! அந்தக் குடும்பத்தில் பெண்களுங்கூட உயிர் கல்வி கற்கிறார்கள்! அவன்... அவன்...? ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் அவன் அங்கே நின்றான். சற்றைக்கெல்லாம் சிறுமிகள் புடைசூழ ஆசிரியை அங்கிருந்து கிளம்பிவிட்டாள். நேரம் சாயத் தொடங்கிவிட்டது என்ற உண்மை நஞ்சனுக்கு அப்போதுதான் நினைவில் படிந்தது. புத்தகங்களைப் பற்றியவாறு அவன் வீடு செல்ல நடக்கையில், கால் செருப்பில் ஏதோ மாட்டிக் கொண்டது. அந்த நீல நிறப் பட்டு நாடா, அந்தப் பெண் தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதை எடுத்து மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்ட அவன், ‘எத்தனை துன்பங்கள் வந்த போதிலும், உயர் கல்வி பயின்று, அந்தக் குடும்பத்துக்குச் சமமாக, பேர் சொல்ல முயல்வேன்!’ என்ற பிரதிக்கினையுடன் நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|