உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 5. வரவேற்பு பீமனிடம் கூறியபடி ரங்கனால் உடனே கிளம்பி விட இயலவில்லை. கொஞ்சமாகத் தோதவர் மந்துக்கருகில் பூமி குத்தகை எடுத்து உருளைக்கிழங்கு போடப் பூமி திருப்பி ஏற்பாடுகள் செய்தான். கிழங்கு விதைத்து, பதினைந்து நாட்களுக்குள் ஒரு மழையும் பெய்துவிட்டது. அடுத்து, கவர்னர் குதிரைப் பந்தயத்துக்காகத் தங்கினான். பிறகு வண்ணப் பட்டியின் துண்டுகளும், இனிய மிட்டாய் ரொட்டியும் பரிசுகளாக வாங்கிக் கொண்டான். காலை வேலையை முடித்துக் கொண்டு, துரையிடம் இரண்டு நாட்கள் லீவு கேட்டுக் கொண்டு, கிழங்கு விதைத்த பூமியைப் போய்ப் பார்த்து விட்டு வீட்டுக்கு அவன் திரும்பிய போது, துரையின் பட்லர் சாமுவேல் நின்றிருந்தான். துணி மடிப்பில் இடுக்கிக் கொண்டிருந்த உயர்ந்த ரக மதுக்குப்பிகளை அவன் கீழே வைத்தான். ரங்கன் அவற்றைக் கவனமாகத் தன் சாமான்களுடன் எடுத்து வைத்துக் கொண்டான். பட்டுப் பையைத் திறந்து இரண்டே கால் ரூபாய் நாணயங்களை எடுத்து அவன் கையில் வைத்தான். “என்னங்க மேஸ்திரி, இது நல்ல சரக்கு. புட்டி எட்டுப் பத்து ரூபாயாகும். கூடவே ஒரு வெள்ளி தரக் கூடாதா?” என்று குழைந்தான் சாமுவேல். “அட, சரிதானப்பா, எட்டு ரூபாய் நீயா போட்டு வாங்கினாய்?” என்றான் ரங்கன். “இருந்தாலும் துரை கண்டு கொள்ளக் கூடாது பாருங்கள். எடுப்பதில் கஷ்டம் உண்டு.” “அட, எனக்குத் தெரியாததை நீ சொல்ல வந்து விட்டாய்! துரை சுயநினைவு தாண்டி விட்டால் புதுப் புட்டியா உடைத்து விடுவீர்கள்? மேசை கழுவின தண்ணீரைக் கூட ஊத்தமாட்டீர்கள்? கொடுத்தது லாபம் போ!” சாமுவேலுக்கு இந்த மேஸ்திரியிடம் ஒன்றும் சாயாது என்பது தெரியாதா? ரங்கன் சுமையைக் கட்டிக் கொண்டான். புதிதாகத் தைத்துக் கொண்ட கோட்டும் தலைப்பாகையும் அணிந்து அவன் கிளம்பி விட்டான். மரகத மலைக்குச் செல்லும் எண்ணமே அவனுக்கு இல்லை. தன் செல்வத்தைப் பகிர்ந்து அநுபவிக்க அவன் என்றுமே விரும்பியதில்லையே! சிற்றப்பன் நல்ல நிலையில் இல்லாத போது, வாடும் பயிருக்குச் சமயத்தில் பெய்யும் மழை என்று அவன் அங்கே செல்வது உசிதமாகுமா? நேராக மணிக்கல்லட்டி சென்று, அங்கேயே வெள்ளிப் பணத்தையும் பரிசுகளையும் மாமனிட்ம தந்து, பாருவைக் கொள்ளும் சடங்கை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூட அவன் நினைத்திருந்தான். இரண்டு மைல்கள் போல் நகர எல்லை தாண்டி நடக்கு முன் குளிர் காற்றுப் பலமாக வீசலாயிற்று. மழை பெருத்த ஆர்ப்பாட்டங்களுடன் கொட்டுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளாக ஹட்டிப் பக்கம் செல்ல அவன் நகர எல்லை தாண்டியிருக்கவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எந்தப் பகுதியில் எந்த எந்த மலைகளையும் காடுகளையும் கடந்து வந்தோமென்ற அடையாளங்கூட அவனுக்கு நினைவில்லை. அப்பப்பா! இவ்வளவு நல்ல நிலைக்கு வரக்கூடுமென்ற நம்பிக்கையில் தான் அவன் ஓடி வந்தான் என்றாலும், அந்தப் பிரயாணத்தில் எத்தனை தாபம், கஷ்டம், அச்சம்! விருவிருவென்று தூரத்தை விழுங்கியவனாய் அவன் நடக்கையில் படபடவென்று மழை பிடித்துக் கொண்டது. சுழற்றியடித்த காற்றில் அவனுடைய வேட்டி பறந்தது. மூட்டை நனைந்துவிடுமென்று அஞ்சி ஒரு மரத்தடியில் ஒதுங்கினான். பளீரென்று மின்னல் வெட்டிப் பிளக்க, இடி முழங்கியது. அவன் கண் முன் தூரத்தில் ஒரு கோபுர விருட்சம் சரிந்தது, மளமளவென்று. அஞ்சி நடுநடுங்கி, கிளம்பிய நேரம் சரியில்லையோ என்று அலைபாய்ந்த மனத்துடன் அவன் அந்த மரத்தடியிலேயே காத்து நின்றான். மழை காரணமாகத்தான் போலும், எவரும் பாதையில் இல்லை. மட்டக் குதிரைகளில் ஏறிக் கொண்டு செல்லும் செல்வர்கள் கூட அவன் புறப்பட்டு வந்ததிலிருந்து அவன் கண்களில் படவில்லை. குதிரைகள் தென்பட்டால், வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் ஏறிச் சென்று அரசகுமாரனைப் போல் போய் இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு. படபடவென்று அடித்த மழை, ஈரத்தின் மணத்தைக் காற்றில் கலந்து கொண்டு ஓய்ந்து விட்டது. மறுபடியும் அவன் நடக்க ஆரம்பித்தான். மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கி வருகையில் மழை பெய்திராத பகுதிகளும் வந்தன. காய்ந்த சருகுகளும், உலர்ந்த மண்ணுமாகவே மரக்கிளைகள் உராயும் இனிமையான ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஓர் இன்குரலொலியின் அலைகள் விரிந்து விரிந்து பரவும் நாதவெள்ளமாக அவன் செவிகளில் பாய்ந்து, அவன் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்தன. அந்தச் சிலிர்ப்பில், அவன் திடுக்கிட்டவன் போல் நின்றான். எத்தனை எத்தனை நாட்களாகவோ உள்ளத்தில் கனிந்து குவையும் ஏக்கத்தின் அலைகளை இழைத்து இப்படி ஓர் இசையை உருக்குபவர் யார்? அவனுடைய கால், தன்னை அறியாமலே மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென அந்தப் பக்கம் சென்றது. மேலெல்லாம் நனைந்து ஒரு பாறையில் சாய்ந்தவராக அவர் அமர்ந்திருந்தார். அரைக்கண் மூடிய நிலை. அருகே நெருங்குகையிலேயே அவர் போதை தரும் பானம் அருந்தியிருந்தது தெரிந்தது. மதுவிலும் இசையிலும் முழுகியிருந்த அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளில், அவர் உடல் எப்படி வற்றிச் சருகாகி விட்டது! சதைப்பற்றே ஒட்டிக் கன்னத்து எலும்புகள் இன்னும் முன்னுக்கு முட்ட, இனியும் வற்ற இடமின்றி வற்றி விட்டார். தம்பியின் குடும்ப நிலையைப் பறையடிக்கும் தோற்றம். பண ஆசை மறைத்தாலும் அணுவின் அணுவான பாசத்தின் உயிர்த் துடிப்பு மறையுமா? அது பீறி வந்தது. கண்கள் கசிய, சுமை கீழே நிலத்தில் இடிக்க, அவன் உட்கார்ந்து அவர் கையைத் தொட்டான். “அப்பா!... அப்பா!” அரைக்கண் ஆச்சரியம் காண மலர்ந்தது. கண்டம் இசையிழை அறுபட நின்றது. “நீ... நீ... நீயா!” நம்பவே முடியாத குரல் தடைப்பட்டுத் தடைப்பட்டு வந்தது. “ஆமாம் அப்பா. நான்... நான் ரங்கன்... நான் ரங்கன் தான்.” சுருங்கிய தோல் பள்ளங்களிலிருந்த கண்கள் ஒளியை வாரி வீசின. “ரங்கன்... ரங்கன்... நீ... நீதானா? ரங்கா...” மைந்தனை அந்தக் கரங்கள் வளைந்து தழுவின. முகத்தோடு முகம் நேர்ந்தது. வளர்ந்து, வாலிபத்தின் வாயிலில் நிற்கும் மகன், ரங்கன். ஆமாம், ரங்கனே தான். அதே முகந்தான்; அவரை நினைவு படுத்தும் சாயல் கலந்த முகம். அவர் மகன் ரங்கனே தான்! ஆறாப் பசியுடன் மகனை நோக்கி நோக்கிப் பூரித்தன அந்தக் கண்கள். மறுகணம் அவர் கைகள் வானை நோக்கிக் கும்பிட்டன. “ஈசா, உன் கருணையே கருணை! நான் சத்தியமாய்ச் சொல்கிறேன் ரங்கா. ஒத்தைக்குத்தான் போய் வருகிறேன். பாதி வழிக்கு மேல் நடக்க முடியவில்லை; காலைப் பார்.” காலைத் திருப்பித் தந்தை காட்டிய போது ரங்கனின் கண்களில் நீர் முட்டியது. உள்ளங்கால் பாளம் பாளமாக வெடித்திருந்தன. உடம்பிலே நெய்ப்பசை வற்றி, சுக்காகி விட்டனவோ பாதங்கள்? “நடக்க முடியவில்லை. என்னால் என்ன முடியும்? இங்கேயே உட்கார்ந்து என்னால் முடிந்த வரை ஈசனைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தேன். என் குரல் அந்தத் தேவரின் காதில் பட்டு விட்டது. உன்னையே கொண்டு வந்து விட்டார். உன்னையே கொண்டு வந்து விட்டார்.” ஆனந்தத்தில் அவர் தம் கால் வேதனையையும் மறந்து எழுந்து நின்று நர்த்தனம் புரிந்தார். கண்கள் மாரி பொழிய மைந்தனை அணைத்து அணைத்து இன்புற்றார். “இத்தனை நாளாக எங்கே போயிருந்தாய் ரங்கா? ரங்கன் இருக்கிறான் இருக்கிறான் என்று உன் சிற்றப்பன் சொன்னான். நான் நம்பவில்லை!” மறுபடியும் வானை நோக்கி அவர் கும்பிட்டார். “இந்தச் செருப்பைப் போட்டுக் கொண்டு வருகிறீர்களா? வீட்டுக்குப் போவோம்.” “வேண்டாம் தம்பி, நீ போட்டுக்கொள்; தேவர் என் கூப்பாட்டைக் கேட்டுக் கருணை காட்டினாரே, அதுவே போதும். இனி நான் அறுபது காதமானாலும் நடப்பேனடா.” இந்தச் சந்திப்பு, அவன் எண்ணாத்தாக, வேண்டாததாக ஒரு புறம் தோன்றிக் கொண்டிருந்தாலும், ரங்கனுக்குத் தன்னை மீறிய, கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தியின் ஆணையாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால் ஓர் அச்சம் படர்ந்தது. ஒருவரும் வராத பாதையில், சொல்லி வைத்தாற் போல், எங்கே செல்லக்கூடாது, யாரைச் சந்திக்க வேண்டாம் என்றெல்லாம் நினைத்தானோ அவரையே சந்திக்க நேர்ந்து விட்டது! கண நேரத்தில் ரங்கன் தீர்மானங்களை மாற்றிக் கொண்டு விட்டான். தந்தை, வீட்டுச் செய்திகள், ஊர்ச் செய்திகள் எல்லாவற்றையும் அவனுக்குக் கூறிக் கொண்டே உடன் வர, ரங்கனும் தன் பால் பண்ணை மேஸ்திரிப் பதவியைப் பற்றித் தந்தைக்கு அறிவிக்க, இருவரும் ஹட்டியைச் சமீபித்து விட்டனர். மாலைக் கதிரவன் விடைபெற்றது கண்டு, மலையன்னை இருள் போர்வையை விரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மழையடித்துப் பூமி குளிர்ந்தது கண்டு இன்புற்றவராய் ஜோகியின் தந்தை போர்த்துக் கொண்ட போர்வையுடன் வாயிற்புறம் உட்கார்ந்திருந்தார். லப்பையிடம் கொஞ்சம் கடன் வாங்கி அவர் அவ்வாண்டில் கிழங்கு விதைத்திருந்தார். ஏற்கனவே தாயின் சாவு வைபவத்துக்காக வாங்கியிருந்த கடன் வேறு, வட்டியும் முதலுமாக இருந்தது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலையில் போராட்டம். தீப மாடத்தில் அகல் வைத்து விட்டு மாதி அருகில் வந்து நின்றாள். “இந்த வருஷம் *தெய்வ ஹப்பா (* தேவர் பண்டிகை) மாசக் கடைசி என்று தீர்மானிப்பார்களா?” என்றான். “ஏன்?” “அதுவரையில், வீட்டில் தானியம் இருக்காதே! பண்டிகைக்கு முன் நாம் புதுக்கதிர் அறுத்துக் கொண்டு வரலாமா? குறும்பன் வந்தானென்று பணம் கேட்டார்கள். அதற்குக் கூடக் கொறளித்தானே கொடுத்தோம்?” லிங்கையாவுக்குப் பேச்செழவில்லை. இப்படி அவன் உடல் நலிவில் குன்றி வரும் காலத்தில், தானியத் தட்டும் சோதனைக் காலமும் புதியனவே அல்ல. என்றாலும், தேவரின் சோதனைக்கு முடிவே இல்லையா? மனசில் நிமிர்ந்து நிற்கும் மனிதன் கையேந்தியா உண்பது? இருள் நன்றாகப் பரவி வந்துவிட்டது. வாசலில் செல்பவர்களின் உருவம் மட்டுமே தெரிந்தது. “குளிரில் ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? எருமை கறக்க வேண்டாமா?” என்றாள் மெள்ள அருகில் வந்த மனைவி. தம்பி எழுந்திருக்கு முன் அண்ணன் அம்பெனப் பாய்ந்து வந்தார். தம்பியைக் கட்டிக் கொண்டார். “தேவர் கருணை, ரங்கன் வந்துவிட்டான். இதோ பார் தம்பி ரங்கன், பொய்யில்லை!” உருவம் புரியாத அந்த இருட்டில் ரங்கன் உயரமாக, கோட்டும் தலைப்பாகையுமாக, இடுக்கிய சுமையுடன் நின்றான். லிங்கையா நிமிர்ந்து பார்த்தார். சீறிப் புரண்டு வந்த உணர்ச்சிகளை, உதடுகளை துடிதுடிக்கத் தொண்டைக் குழியில் அமுக்கிக் கொண்டு பார்த்தார். “தீபம் கொண்டு வாம்மே, தீபம், தீபம்!” என்று ஆரவாரித்தார் தமையனார். ஜோகியின் தந்தை அசையவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தம் தோளிலும் மார்பிலும் போட்டுக் கொண்டு நீரூற்றிப் பால் ஊற்றிச் சீராட்டிய மகன் மலையாக வளர்ந்து வந்து நிற்பதைப் பார்த்தார். தந்தையை அண்டுகையில் ரங்கனுக்கு இருந்த தெம்பு இப்போது அவர் தம்பியை அண்டுகையில் இல்லை. மாதி ஏந்தி நின்ற தீப ஒளியில், அவன் கண்ட அந்த உருவத்தின் பொன் அவன் நெஞ்சின் போலியான பொய்த் திரை உறுதியின்றிப் படபடத்தது. சுயநலமும் கபடமும் நிறைந்த அந்த நெஞ்சைச் சிற்றப்பனின் கண்கள் துளைத்து வேதனையில் வாட்டின. அணைக்க வேண்டிய கைகள் அவன் கன்னங்களில் பாய்ந்து அறைந்தன. “ஐயோ!” என்று மாதியும் அண்ணாவும் அலறுகையிலே பழங்களெனச் சிவந்த கண்களுடன் வெறிக்குரலில் லிங்கையா கத்தினார். “எங்கேடா வந்தாய்? திருட்டுப் பயலே! போடா; போய் வீடு என் கண்முன் நிற்காதே. நீ இந்த வீட்டுப் பையன் அல்ல! போ, போய்விடு.” தம்பி மனமதிர்ந்து, மூளை குழம்பி விட்டானோ என்று தோன்றிய எண்ணத்துடன் அண்ணா, “என்ன தம்பி!” என்றார். “நீ விடு. டேய் நீ என்ன நினைத்தாய்? திருட்டுப் பயலே. உன்னை இந்தக் கையால் பால் ஊற்றி வளர்த்தேன். என்னை எப்படியடா மோசம் செய்தாய்? துரைமாரின் மேசையா துடைக்கிறாய்? ஆடு மாடு தின்னும் ஹெலையனே! (சண்டாளர்) போ, போடா, போ!” அழுகையும் ஆவேச வெறியும் மாறி மாறி வர அவர் எழும்பி எழும்பி ரங்கன் முன் பாய்ந்த போது, மாதி கஷ்டப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். அந்த வாயிலில் கூடிய ஊர்க்கூட்டம் மலைத்து நின்றது. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|