உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற் பாகம் 9. பால் பொங்கியது ரங்கன் ஹட்டியை விட்டுச் சென்ற பின் இரண்டு பனிக் காலங்கள் வந்து போய், இரண்டாவது வசந்தமும் வந்து விட்டது. கீழ்மலை மாதுலிங்கேசுவரர் கோயிலில் அழல் மிதிக்கும் திருவிழா நிறைவேறி, பூமி திருப்பி, புது விதை விதைக்கும் விழா நடைபெற்று, பயிரும் வளர்ந்தாயிற்று. காய்ச்சலில் கிடந்து புது இரத்தம் ஊறும் உடல் போல, வறண்ட மரங்களிலெல்லாம் புதுத் தளிர்கள் தோன்றின. காய்ந்து கிடந்த புல்தரையெல்லாம், திரை கடலோடித் திரும்பும் தந்தையை வரவேற்கத் துள்ளிவரும் இளம் குழந்தை போல் தளிர்த்துச் சிரித்தது. இத்தனை நாட்களாக எங்கிருந்தனவோ என்று விந்தையுறும் வண்ணம் சின்னஞ்சிறு வண்ண மலர்கள், புல்லிடுக்குகளில் எட்டிப் பார்த்து, அடக்கமான பெண் குழந்தைகளைப் போல இளம் வெயில் கள்ளமிலா நகை புரிந்தன. பற்கள் கிடுகிடுக்கும் தட்பம் தேய்ந்து வர, இதமான வெதுவெதுப்பில், இயற்கையன்னை, தான் பெற்ற மக்களைச் சீராட்டும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தாற் போன்ற கோலம் எங்கே பார்த்தாலும் விளங்கின. காடுகளில் வேட்டைக்காரர், கோஷ்டி கோஷ்டியாகத் தென்படுவார்கள். தேவர் பெட்ட சிகரத்திலும் குமரியாற்றியின் வீழ்ச்சியிலும் மகிழ்வு பெற, வெள்ளை மக்கள் தேடி வரும் காலம் வந்துவிட்டது. ஊரெல்லாம் இன்பம் கொண்டு வரும் வசந்தகாலம், சென்ற இரண்டு ஆண்டுகளாக ஜோகியின் வீட்டில் இன்பத்தைக் கொண்டு வரவில்லையே! அந்த வீட்டில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன! அதிகாலையில், புள்ளினங்களின் இன்னொலியும் கோழிகளின் கூவலும் கேட்குமுன்னமே ஜோகியின் உறக்கம் அன்று கலைந்து விட்டது. கூரையை அண்ணாந்து பார்த்த வண்ணமே படுத்திருந்தான். மேலே, மூங்கிலாலான பரண். அந்தப் பரணில் வீட்டுக்கு வேண்டிய தானியங்கள், கிழங்குகள் முதலிய பண்டங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அவனுடைய தந்தையின் உடலுழைப்பாலும், தாயின் ஒத்துழைப்பாலும் தானியங்களும் குறையாமல் எப்போதும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். ஜோகியின் சிறு உள்ளத்தில், இதுவரை கவலை குடியிருந்ததே இல்லை. ‘ரங்கனின் வீட்டைப் போன்றதன்று நம் வீடு. எத்தனை பேர் எப்போது வந்தாலும் சோறும் களியும் கொடுக்கத் தானியங்கள் உண்டு’ என்பது அவனுள் சிறு பருவத்திலேயே ஊன்றிய நம்பிக்கையும் பெருமையுமாக இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டுவிட்டது. ஒரு குறிஞ்சிக்குரிய ஆண்டுகள் முழுவதும் கடந்திராத பருவத்தினான அவனுடைய உள்ளத்தில், குடும்பத்தைப் பற்றிய பொறுப்பும் கவலையும் தாமாகப் புகுந்து விட்டன. அண்ணாந்து பரணையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் கம்பளியை இழுத்து மூடிக் கொண்டு உறங்கும் தந்தையைப் பார்த்தான். அவனுடைய தந்தை லிங்கையா இந்நேரம் வரையிலும் தூங்குவாரா? அதற்குள் எழுந்து காலை பிரார்த்தனையுடன் மாடுகளை அவிழ்க்கப் போய் விடுவாரே! அந்த மச்சிலுள்ள தானியம் அடுத்த அறுவடை வரையிலும் போதுமானதாக இருக்கலாம். அதற்குப் பின்? ஜோகியின் பெரிய தந்தை இப்போதேனும் வேலைக்குச் செல்கிறானா? இல்லையே! மாறுதல்கள், நஷ்டங்கள் எல்லாம் பெரியப்பனின் வீட்டுக்குத்தான் வந்தன. அவர்கள் எருமையைத் தான் புலி கொண்டு போயிற்று; ரங்கன் எங்கோ ஓடிப் போனான். ஆனால், பெரிய தந்தை முன் போலவே உணவு கொள்கிறான்; மாலையில் வீடு திரும்புகிறான் தள்ளாடிய வண்ணம். பெரியம்மை முன் போலவே சத்தம் போடுகிறாள்; சாபமிடுகிறாள்; மைத்துனன் வீட்டிலிருந்து தானியமும் பாலும் பெற்றுப் போகிறாள். முன்போலவே ரங்கி அழும் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு தன்னோடொத்த சிறுமிகளுடன் ஓடி விளையாடுகிறாள். அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை. ஆனால், ஜோகியின் வீட்டில் மட்டும் என்ன வந்தது? அன்று ரங்கனைக் காணவில்லை என்று அறிந்ததும் ஜோகியின் தந்தை எப்படி அழுதான்; “இரிய உடைய ஈசா, நான் தப்புச் செய்தேன். நான் உன்னை ஏமாற்றப் பார்த்தேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயே! நான் பாவி, நான் பாவி!” என்று முட்டிக் கொண்டல்லவா அழுதான்? ரங்கன் மறைந்ததற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? அவன் அப்படி அழுத போது ஹட்டியே கூடி அவனைத் தேற்றியது. கரியமல்லர் நான்கு கிராமங்களுக்கும் உடனே ஆளனுப்பினார். கோத்தைப் பக்கம் மாமன் வீடு, அத்தை வீடு எங்குமே ரங்கனைக் காணக் கிடைக்கவில்லை. அப்படியானால் ரங்கன் எங்கே போயிருப்பான்? அவனுக்கு எப்படித் துணிச்சல் வந்திருக்கும்? மணிக்கல்லட்டியிலிருந்து அன்றொரு நாள் வந்த பாருவின் தந்தை ஒத்தையில் கூட விசாரித்துப் பார்த்ததாகவும், காணவில்லை என்றும் தெரிவித்து விட்டார். ஒரு வேளை எருமையைக் கொன்ற புலியே ரங்கனையும் இழுத்துப் போயிருக்குமோ? புலி நிசமான புலியோ, குறும்பர்களின் ஏவலோ? இரண்டு ஆண்டுகளாகக் குறும்பர்களுக்குப் பெரியப்பன் பங்கில் மானியம் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கோபம் கொண்டு தீங்கிழைக்கின்றனரோ? இப்படி நினைக்கையில் ஜோகியின் உடல் நடுங்கியது. இம்முறை பயிர் விளைவிக்க முடியாதபடி, அவன் தந்தை நோயில் விழுந்து விட்டானே, அதுவும் குறும்பர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ? சில நாட்களாகவே அவன் தந்தைக்கு ஒரு விதக் காய்ச்சல் வருகிறது. அந்தக் காய்ச்சல் வரும் போது உடலைத் தூக்கித் தூக்கிப் போடப் பற்கள் கிடுகிடுக்க, குளிர் நடுங்குகிறது. அம்மை அமுக்கிப் பிடித்துக் கொள்வாள். எல்லா கம்பளிகளையும் போட்டு மூடுவார்கள். பின்னர் அருகில் உட்கார முடியாதபடி உடல் அனல் பறக்கும். கண்களை விழிக்காமல் அவன் பிதற்றுவான். “என் ஐயனே நான் உங்களை ஏமாற்ற நினைத்தேன். பாவி, பாவி!” என்றெல்லாம் அலறுவான். “அட ரங்கா, காப்பை எடுத்து எங்கேயடா ஒளித்து வைத்தாய்? காப்பை எடுத்த மாதிரி, பட்டுப் பைப் பணத்தையும் நீதானே எடுத்திருக்கிறாய்?” என்று அதட்டுவான். ஒவ்வொரு தடவை விழிகள் கொட்டையாக உருண்டு விட, எழுந்து ஓடுவான். ஒரு நாள் இந்தக் காய்ச்சல் அவனை அலைத்து அழிக்கும். மறுநாள் இரவே, குளமாக வேர்த்து, காய்ச்சல் விட்டு விடும். காலையில் சுடுநீரும் கஞ்சியும் அருந்தி, சோபையிழந்தவனாக அவன் மாடுகளைக் கறப்பான். அதற்குள் களைப்பு வந்துவிடும். என்றாலும், பகலில் விளை நிலத்துக்குப் போய் மனசிலுள்ள ஆசையையே சக்தியாய்த் திரட்டிக் கொண்டு உழைப்பான். மறுநாள் பகலுக்கு மறுபடியும் சொல்லி வைத்தாற் போல் அந்தக் குளிரும் காய்ச்சலும் வந்துவிடும். அண்டை வீட்டுப் பெள்ளி, அன்று ஜோகியிடம், அம்மாதிரியான ஏவல் காய்ச்சல் அவனுடைய அத்தை மகனுக்கு வந்ததாகவும், குறும்பர் தலைவனிடம் சென்று பேசிக் காணிக்கைகள் வைத்த பிறகு காய்ச்சல் போய்விட்டதாகவும் கூறியிருந்தான். அப்பனுக்கும் அது மாதிரி ஏதும் செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு குடும்பம் எப்படி நடக்கும்? முதல் நாள் முழுவதும் அவனுக்குக் காய்ச்சல்; எழுந்திருக்கவில்லை. அம்மையோ பாவம்! அவன் தந்தை விதைத்திருக்கும் சொற்ப நிலத்தில் அவள் அல்லவோ பாடுபடுகிறாள்! அலுப்பு; சலிப்பு; இன்னமும் உறங்குகிறாள். ஜோகி இத்தகைய கவலை பாயும் எண்ணங்களுடன் விழித்துக் கொண்டிருக்கையில் பாட்டி மெள்ள மெள்ளப் பழக்கத்தில் எழுந்து சென்றாள். அவளுக்குக் கண்பார்வை அவ்வளவு தெளிவில்லை. என்றாலும், மகன் படுத்துவிட்ட பிறகு தனக்குப் பொறுப்பு அதிகமாகி விட்டது போல் அதிகாலையிலேயே எழுந்து கொட்டிலில் சாணத்தை வாரி, எருக்குழியை நிரப்புவதைத் தன் பொறுப்பாகக் கொண்டு விட்டாள். “அம்மே!... அம்மா...!” தந்தை ஈன சுரத்தில் முனகியது கேட்டு, ஜோகி அருகில் சென்றான். சிறு விழிகளில் பரிதாபமும் கவலையும் தேங்க, “அப்பா!” என்றான். “பாட்டி எழுந்தாச்சா? சுடுநீர் - தாகமாயிருக்கிறதே?” என்று சைகை காட்டினான் லிங்கையா. ஜோகி பாட்டியை அழைக்கவில்லை; அம்மையையும் அழைக்கவில்லை. துள்ளி ஓடினான். சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டு அடுப்பில் தீ மூட்டினான்; பானையிலிருந்து நீரெடுத்துப் பல்லாயை அடுப்பில் வைத்தான். அடுப்புச் சுள்ளிகள் வெடித்த சத்தமும், புகையும் மாதியை எழுப்பி விட்டன. மேல் முண்டையும், தலை வட்டையும் சரியாக்கிக் கொண்டு பரபரப்புடன் அடுப்படிக்கு வந்தாள். “ஜோகி! நீயா?” “அப்பா சுடுநீர் கேட்டாரம்மா; தாகமாக இருக்கிறதாம்.” “என் கண்ணே!” என்று கூறிய அவள், மைந்தனின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக் கொண்டாள். எத்தனை இதம்! எத்தனை ஆறுதல்! எத்தனை மகிழ்ச்சி! ஜோகியின் கவலைகள் கண்களில் உருகி வந்தன. “எத்தனை நாளைக்கம்மா அப்பாவுக்குக் காய்ச்சல் அடிக்கும்? பெரியப்பாவைப் போல் அப்பாவும் வேலை செய்யாவிட்டால் நாம் என்னம்மா செய்வோம்?” “அந்த ஈசன் என்ன தான் நினைத்திருக்கிறானோ?” என்று கூறிய மாதியின் கண்களில் ஈரம் பசைத்தது. “அம்மா, பெள்ளி சொல்கிறான், குறும்பர் ஏவர் வைத்து விட்டார்களாம். நிசமாய் இருக்குமாம்மா?” “மந்திரமோ, மாயமோ, நன்றாக இருந்த கிளைக்கு, இந்த வீட்டுக்குப் பழுது வந்துவிட்டது. ஜோகி, தொரியனுடன் போய்த் தாத்தாவை அழைத்து வருகிறாயா? மணிக்கல்லட்டியிலிருந்து?” “தாத்தா வந்து ஐயனின் காய்ச்சலை எப்படியம்மா போக்குவார்?” “மருந்து தருவாரடா குழந்தாய்?” இந்நிலையில் பல்லாயில் வைத்த நீர் கொதித்தது. முதல் நாள் கொண்டு வந்த தேயிலையைப் போட்டு, அந்த நீரை எடுத்து அவள் ஆற்றிக் கணவனுக்குக் கொண்டு சென்றாள். செழுங்கருமை கலந்து உரமேறிய மண்ணின் நிறம் போன்ற மேனி நிறம் பசலை படர்ந்து வெளுத்து விட, கன்னங்களில் எலும்பு முட்ட, அவன் முகத்தைக் கண்டதும் மாதியின் கவலைகள் எத்தனை அடக்கினாலும் அடங்காமல் எழும்பின. “என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் மாதி?” “ஒன்றும் இல்லை” என்று அவள் தரையை நோக்கினாள்; “இப்படியே போய்க் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு?” கண்களில் நீர் சுரப்பதை அறிந்த கணவன், கசிந்தவனாய் அதைத் துடைத்தான். “ஏன் அழுகிறாய்? எனக்கு ஒன்றுமில்லை” என்றான். “நான் மணிக்கல்லட்டிக்கு ஐயனுக்குச் சொல்லி அனுப்புகிறேன். பிடிவாதம் செய்யாதீர்கள். நம் எருமைகளை ஓட்டிக் கொண்டு அங்கே போய்விடுவோம். எனக்கு இங்கே இருக்கவே பயமாக இருக்கிறது.” அவள் மனசில் படர்ந்த யோசனை இதுவே. கொத்தும் முள்ளும் பிடிக்கும் கை நன்றாக இருந்தால் எங்கேதான் பிழைக்க முடியாது? அண்ணன் குடும்பத்தையும் தாங்கும் சுமை கழிய வேண்டுமானால், மரகத மலையை விட்டுப் போகாமல் முடியுமா? ஒரு பையன் இருக்கிறான்; வயசுக்கு வந்து குடும்பத்துக்குப் பொறுப்பாவான் என்றிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையையும் வற்ற அடித்துவிட்டுப் பையன் மாயமாய்ப் போய்விட்டான். இனி, நடக்கப் பயிலும் குழந்தை என்றைக்கு நடவுக்குப் பெரியவனாவான்? மரகதமலை மண்ணை உதறிவிட்டுப் போகும் வரையில் குடும்பத்துக்கு விடுதலை இல்லை என்றே அவன் நினைத்தாள். அவள் எண்ணத்தை அறிந்ததும் ஜோகியின் தந்தை குரலில் உறுதியுடன், “ஒருவரையும் வரச் சொல்ல வேண்டாம். என்னால் இந்த இடத்தை விட்டு வர முடியாது” என்றான். “அப்படியானால் உங்கள் அண்ணன் குடும்பத்தை எங்கேயாவது போய்ப் பிழைக்கச் சொல்லுங்க.” “நீ என்னிடம் இந்தப் பேச்சை எப்படி மாதி எடுத்தாய்?” இருப்பதைப் பகிர்ந்து வாழ்வது நம் கடமை, பயந்து ஓடுவது கோழைத்தனம் அல்லவா?” “ஒருவர் சுகமாக இருக்க, ஒருவர் சாவதா?” “நான் இன்னொருத்தியைக் கட்டியிருந்தேனானால் நீ என்ன செய்வாய், மாதி?” “இன்னொருத்தி பிள்ளைகளைப் பெற்றுத் தருவாள்; பூமியில் வேலை செய்வாள்; வீண் பேச்சுப் பேசிச் சண்டை போட்டு, இருக்கும் பிள்ளையை விரட்ட மாட்டாள்!” என்றாள் காரமாக. “பிள்ளையை அவள் விரட்டவில்லை. நான் விரட்டினேன் மாதி, நான் விரட்டினேன். இரிய உடையார் ஆணையை நான் சரியாக ஏற்கவில்லை.” “மனப்பிராந்தியில் நீங்கள் இதையே சொல்லி என்ன பயன்?” “மாதி, நேற்று புலியுடன் சண்டை செய்வது போல் கனவு கண்டேன். தாவி வந்து மேலே கைகளைப் பிடுங்க வருகிறது. நான் எதிர்த்து எதிர்த்து வீழ்த்துகிறேன். அது பின்னும் பின்னும் சாகாமல் வருகிறது. நானும் சாகாமல் சளைக்காமல் போராடுகிறேன்.” “அப்புறம்?” “அப்புறம் முடிவே இல்லை. ஜோகி திரும்பினான். கை சில்லென்று மேலே பட்டது. விழித்துக் கொண்டேன். ஜோகிக்கு அண்ணன் கையைப் போல் தண்ணென்ற கை; சூடாகாத உடம்பு.” “உங்கள் அண்ணனைக் குழந்தையுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? காலையில் எழுந்து, என்னை எழுப்பாமல், பாட்டியை அழைக்காமல், தானே சுடுநீர் காய்ச்சினான். கன்றுகளையும் மாடுகளையும் அவிழ்த்து, இப்போது பாட்டிக்கு உதவியாகக் குப்பை கூட்டுகிறான். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவன் உங்கள் மகன்.” “கனவு, சண்டை முடியாமலே முடிந்து விட்டது. அதற்கு என்ன பொருள் என்று புரிகிறதா உனக்கு?” “இதற்கெல்லாம் அர்த்தம் உண்டா?” “நான் வாழ்க்கையெல்லாம் போராடப் போகிறேன். புலியை எதிர்த்து நிற்பது போல் நிற்கப் போகிறேன்! இந்த நோவோடு போராடிப் போராடி சாகாமலே நிற்கப் போகிறேன்.” இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று கண்களில் நீர் முத்துக்கள் சிதற, அவன் வாயைப் பொத்தியது அவள் கரம். “அழகும் உடற்கட்டும் பார்த்து, நூறு ரூபாய் கொடுத்து உன் அக்காளை மூத்த மகனுக்கு ஐயன் கொண்டு வந்தார். அந்த அழகும் கட்டும் நிலைக்கவில்லை; அழகில்லாமல் மெலிந்த பெண்ணை மாமன் எனக்குத் தந்தார். ஐம்பது வெள்ளி ரூபாய்க்கு, விலை மதிப்பில்லாத தங்கத்தைத் தந்தார். நான் இப்படியே போராடிக் கொண்டிருந்தால், நீ வெறுக்க மாட்டாயே மாதம்மா?” “என் ஜோகியை விட்டு நான் போவேனா? இதெல்லாம் என்ன பேச்சு? நம் குழந்தையை இன்னோர் அம்மா வந்து பார்க்க நான் விட்டுப் போவேனா? எனக்கு உங்கள் இந்த உயிர் இருக்கும் இடம் கோயில். என் குழந்தைகள் அதில் ஒளிரும் தீபங்கள்.” மண்ணோடு விளையாடும் அந்தக் கைகள் அவன் கண்ணீரில் நனைந்தன. சுள்ளென்று வெயில் உறைத்த பின் மெள்ள ஜோகியின் தந்தை எழுந்து வந்தான். பால்மனைக்குச் சென்று மடியுடுத்திக் கொண்டான். மெலிந்த கைகளில் பாற்குவளையுடன் வீட்டுப் பின்புறம் எருமையினிடம் வந்தான். ஜோகி கன்றை அவிழ்த்து விட்ட போது எருமை, அருமை எஜமானனின் கையை நக்கியது. அளவற்ற பலவீனத்தினால் அன்று ஜோகியின் தந்தையினால் பாற்குழாயைக் கூடச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. அவன் கைகளுக்குத்தான் மாடுகள் பாலைப் பொழுந்தனவே தவிர, அவன் பலம் ஓய்ந்து விட்டது. ஓர் எருமை கறக்கு முன் அவன் உடலில் இறுக்கம் உண்டாயிற்று. பாத்திரத்தில் பாழை ஊற்றியவன், சோர்ந்து அங்கேயே சாய்ந்து விட்டான். மாதி, பார்த்தவள் பதறினாள். அவன் பாற்குவளை ஏந்தி மடியாடை தரித்து வரும் நேரம், எதிர் நிற்கக் கூடத் தயங்கும் அவள், ஓடிச் சென்று சுவருடன் சாய்ந்த நிலையில் தாங்கிக் கொண்டாள். “என்ன? ஐயோ! நான் காகையண்ணனை வரச் சொல்லியிருப்பேனே! உடல் சில்லிட்டு வேர்க்கிறதே?” என்று அவள் கண்ணீருடன் மாமியைப் பரபரப்புடன் அழைத்தாள். மாட்டுக் கோலுடன் நின்ற ஜோகி ‘கோ’ வென்று கதறியதைக் கண்ட தந்தை மெள்ளக் கண் விழித்து, அவனை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினான். “மாதி” என்றான். “என்ன?” “இன்று திங்கட்கிழமை அல்ல?” “ஆமாம்.” “ஜோகிக்குச் சுடுநீர் வைத்து முழுக்காட்டி, நல்ல துணிகள் உடு; வெல்லம் இருக்கிறதில்லையா? நீயும் முழுகி விட்டுச் சீனிப் பொங்கல் வை.” மாதி விழிக்கடையில் உருண்ட நீரைச் சுண்டி எறிந்தாள். அவனுடைய உள் எண்ணம் புரிய அவளுக்கு நேரமாகவில்லை. அந்தப் பையனுக்கு ஊர் கூட்டி, ‘கூடு, கூடாக’த் தானியம் சமைத்து விருந்து வைத்துச் செய்த வைபவத்தை, இன்று தன் மைந்தனுக்கு ஒரு கோலாகலமுமின்றிச் செய்யப் போகிறான் லிங்கையா. இளஞ் சிறுவன் ஜோகி இப்போதே வீட்டுப் பொறுப்பை ஏற்கப் போகிறானா? “ஜோகி மிகவும் சின்னப் பையனாயிற்றே!” என்றாள். “குறுக்கே பேசாதே. ஜோகிக்கு எருமை கறக்க மிக ஆசை இல்லையா ஜோகி?” “ஆமாமப்பா, ரங்கனுக்குச் செய்த போதே நானும் கறக்கிறேன் என்றேனே!” “இன்று நீதான் பால்மனைக்குப் போகப் போகிறாய்; போ, அம்மை சுடுநீர் வைக்கையில் அந்த எருமைக்குத் தண்ணீர் ஊற்று” என்றான் லிங்கையா. ஜோகி மகிழ்ச்சியுடன் ஓடினான். அன்று முற்பகல், வீட்டு வாசலில் ஜோகி குளிப்பாட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த எருமைக்கு அருகில் மெல்ல வந்த தந்தை, ‘ஹொணே’யில் கொஞ்சம் பாலைக் கறந்தான். மைந்தன் கையில் அதைக் கொடுக்கையில், ‘பஸவேசா, இன்று இந்தப் பையன் இந்த உரிமையை ஏற்கட்டும். இவனை ஐயனின் நெருப்பைக் காக்க நான் கட்டாயமாக விடுகிறேன். என்னை மன்னித்துவிடு. இந்தக் குடும்பங்கள் ஒரு குறையுமில்லாமல் தழைக்கட்டும்’ என்று மனம் இறைஞ்சி நின்றது. ஜோகி இரு கைகளையும் நீட்டிப் பாற்குழாயைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய பிஞ்சு விரல்கள் வெகுநாள் பழக்கப்பட்ட பணியைச் செயவன போல் இயங்கின. குவளையில் பால் வெண்ணுரையாகப் பொங்கி வந்தது. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|