இரண்டாம் பாகம்

1. மனம் புகுந்தாள்

     பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளும் எழில் வடிவில், வளமார் நங்கையாய், வசந்தத்தில் நாணிக் கண் பொத்தி நிற்கும் வனச் செல்வியாய், நீல மோகினியாய், வானவனின் காதலியாய் எழில் நிறைந்து திகழ்ந்தது அந்த மலைப் பிரதேசம். கண்களுக்கெட்டிய தூரமெல்லாம் ஒரே நீல மயம்; திரும்பும் இடமெல்லாம் குறிஞ்சித் தேன் உண்ணவரும் வண்டுகளின் ரீங்காரம்; அருவிக் கலகலப்பின் இனிமையை வர்ணிக்க இயலாது. காலமெல்லாம் கண் கொட்டாது நோக்கி நிற்கும் மலைக் காதலியை வானம் இறங்கி வந்து பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தழுவிப் போகுமோ? உடல் சிலிர்த்த மலை நங்கையின் உடலெல்லாம் பூந்துளிகளாகப் படிந்து மலர்ந்திருக்கும் அழகு, அந்த வானவனின் மேனி நிறமோ? அன்றி, வானவனின் மேனிக் கொப்ப இயற்கையன்னை பன்னிரண்டு ஆண்டுகளாக நூற்று நெய்த நீலப்பூம் பட்டாடையைச் செல்வ மகளுக்கு அணிவித்து மணமகனின் வருகைக்குக் காத்திருக்கிறாளோ? மெல்லிய மேகச் சல்லாத்துகில் கொண்டு மேனியெழிலை மறைத்தும் மறைக்காமலும் கள்ள நகை புரியும் கோலம் கண்டு இளங்கதிரோன் புன்னகை பூப்பது எதற்காக? “மடமகளே, உன் காதலன் நான்; வான்வெளியல்ல; நான் இல்லாத வானவெளியில் உயிர் இல்லை. என்னைப் பார்” என்று தான் நகை பூக்கிறானோ?

     படிப்பை முடித்து விட்டுத் தந்தையின் ஊராகிய மணிக்கல்லட்டிக்கு வந்திருந்த கிருஷ்ணன், ஊரின் புறத்தே, கானக நடுவில் குமரியாறு குதித்துக் கீழே விழும் காட்சியைக் கண்ட வண்ணம் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மன ஓட்டத்தில் இந்தக் கற்பனை யூற்றுப் பிரவாகமெடுத்துப் பொங்கி வந்தது. அவன் அவர்கள் இனத்துக்கே, குலத்துக்கே, மண்ணுக்கே பெருமை உண்டாகும் விதத்தில், கீழ் மலையிலும் ஒத்தையிலுமாகப் படித்துப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைக் கல்லூரியில் பி.ஏ. பரிட்சையும் எழுதி விட்டு, அந்த ஆண்டு மலைக்குத் திரும்பியிருந்தான். மரகத மலையில் தாத்தாவின் வீட்டிலேயே அவன் குழந்தைப் பருவம் முழுவதும் கழிந்திருந்ததால், அங்கே தோன்றாத எண்ணங்களெல்லாம் புதுமையாக இந்த இடத்தில் தோன்றின. மேலும், படிப்பு படிப்பு என்று கல்வியறிவின் புதுப் போதையுடன் புகழேணியில் ஏறிய வண்ணம் வாலிபத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த நாட்களில், மலையின் வனப்புகளை எண்ணும் அமைதி ஏது?

     பிற்பட்ட சமூகத்தினர் என்ற வார்த்தையால் அவன் கண்ட வெளியுலகம் குறித்த ஓர் அடையாளம், விடுமுறை தோறும் மரகத மலைக்கு வரும்போதெல்லாம், கல்வி, நாகரிகம் என்று பண்படாத மக்களைக் காணும் போதெல்லாம் - அவன் மனசில் தைத்தது மட்டும் உண்மை. அவன் இப்போது கல்வி என்ற ஏணியில் ஏறிக் குறிப்பிட்டதொரு லட்சியத்துக்கு வந்து விட்டான். ஓய்வாக அம்மை, அப்பன், தம்பி, தங்கை என்று குலவ குடும்பத்தின் இனிய கற்பனைகளும் கனவுகளும் மனசைக் கிளர்த்தும் காலம்; திரும்பும் இடமெல்லாம் இயற்கையின் இளவேனிற் கோலம், தனிமையும் கூடி வந்த போது, கற்பனைகள் பொங்கியதில் அதிசயம் இல்லையே? உண்மையில் அந்த இளங்காலை வேலையில், குமரியருவி வீழும் காட்சியைப் பார்த்துக் கொண்டு மனதைத் தன் போக்கான கற்பனைகளில் படர விடுவதே அவனுக்குக் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது.

     மலைக்கு அப்பாலுள்ள மக்களையும், பல வண்ண நாகரிகங்களையும் கிருஷ்ணன் கண்டதும் அவற்றில் மோகம் கொண்டதும் ஓரளவில் உண்மையே. வண்ண வண்ணச் சேலைகள் தரித்துக் கார் குழலில் மல்லிகையும் முல்லையும் சூடி, வெளியுலகில் நடமாடிய பெண்களை முதல் முதலில் எத்தனை வியப்புடன் அவன் கண்டான். நேரான பாதைகள், மாடிக் கட்டிடங்கள், கல்லூரிகள், கடை கண்ணிகள், விரிந்து பரந்த நீலக்கடலைத் தழுவி வரம்போடு அடக்கி வைத்திருக்கும் அழகிய மெரினாக் கடற்கரை எல்லாவற்றையும் புதுமைக் கண்களுடன் கண்டு அதிசயித்திருக்கிறான்.

     ஆனால், சொந்த மலையின் கவர்ச்சி என்றும் புதுமை வாய்ந்ததன்றோ? அதன் புதுமை என்றுமே மங்குவதில்லை. பருவங்கள் மாறி மாறி மலைப் பூமியை எவ்வளவு அழகாகக் காத்து வருகின்றன!

     ஒருவேளை அழகிய இயற்கையில் ஒன்றிவிட்டதனால்தான், அந்த மலைமக்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லையோ? தங்கள் சமூகம் ஓரளவில் நிறைவு கொண்ட சமுதாயம் என்பதே கிருஷ்ணனின் எண்ணம்.

     மண்ணைக் கிளறித் தானியம் விளைப்பதும், தொழுவதும், உண்பதும், பெண்டிரைச் சேர்த்து மக்களைப் பெருக்குவதும் தவிர, வாழ்வில் ஏதுமில்லை, வேண்டாம் என்ற நிறைவு.

     இந்த நிறைவு முன்னேற்றத்தைத் தடுக்கிறதென்று கிருஷ்ணன் அப்போது எண்ணவில்லை. முன்னேற்றம் என்ற சொல்லையே அவன் சிந்திக்கவில்லை. ஆனால், வேறு ஏதும் நாம் வாழ்வில் பெற வேண்டும் என்ற தாகம் இல்லாதது, இன்னும் எத்தனை எத்தனை மேன்மைகளையும் இன்பங்களையும் அடையாதவர்களாக ஆக்கி விடுகிறது? எழுத்தறிவும் கல்வியறிவும் எத்தனை எத்தனை இன்பங்கள்! பல கற்றும் பல கேட்டும் சிந்திக்கத் தெரிந்தவன், காலத்தை எவ்வளவு பயனுடையதாக ஆக்கிக் கொள்கிறான்!

     மலையை வான அரசனின் காதலியாக எண்ணிப் பார்த்த தன் கற்பனையை உன்னிய போது கிருஷ்ணனுக்குப் பேரானந்தமாக இருந்தது. காதல் என்ற சொல் நினைவில் நிற்கவே, அவன் உடல் சிலிர்க்கக் கண்களை மூடிக் கொண்டான். அவன் தனக்குரிய அழகு மங்கையைத் தான் படித்திருந்த காவியங்களின் நாயகிகளைப் போலவும், தன்னை நாயகனைப் போலவும் பாவித்துக் கொண்டான். மாமன் மகள் என்று கூறிக் கொள்ள அவனுக்கு மாமன் இல்லை. தூர உறவான அத்தை ஒருத்தி தேன் மலையில் இருக்கிறாள். அவளுடைய மகள் ஒருத்திதான் முறைப் பெண் என்று சொல்லக் கூடிய நிலையில் உண்டு. அவளை எப்போதோ நாலைந்து பிராயத்தில் தீமிதித் திருவிழாவில் அவன் பார்த்திருக்கிறான். அவள் இப்போது பருவ மங்கையாக இருக்கக் கூடும். அவள் முகங்கூட அவனுக்கு நினைவில்லை. அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவர்கள் வழக்கப்படி, மார்புக்கு மேல் வெள்ளை முண்டுத்தான் உடுத்திருப்பாள். இளவேய்கள் போல் தோள்கள் தெரியும். உருண்டையான கைகளில் வெள்ளிக் கடகங்களும், தளிர் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருப்பாள். உச்சந்தலையை மூடி, வெளுப்பாக அவள் கட்டிக் கொண்டிருக்கும் வட்டுக்குக் கீழே, அடங்காத கருங்குழற்கற்றை, வட்டமதியன்ன முகத்தின் அழகுக்கு அழகு செய்யும். அரும்புப் பல் வரிசைகள் தெரிய, பவள இதழ்கள் விலக, அவனை ஓரக்கண்களால் நிமிர்ந்து பார்த்துவிட்டு, அவள் தலையைக் குனியும் போது!... குமரியாற்றின் பேரோசைக்கு மேல் கிண்கிணிச் சிரிப்புக்களும் பேச்சுக்களும் தனித்து ஒலித்து அவனைச் சிரிப்புடன் எழச் செய்தன.

     இரு மலைகளுக்கும் இடையில் குமரியாறு குதித்து வீழ்ந்து வட்டமிட்டுச் சுழித்து ஓடும் இடத்துக்கு, மேலிருந்து காடான செடிகளையும் புதர்களையும் விலக்கிக் கொண்டு, இளமங்கையர் கூட்டம் ஒன்று நீராட வந்து கொண்டிருந்தது. இளவேனிற் காலம்; ஒத்த பருவத்தினர்; சிரிப்புக்கும் கலகலப்புக்கும் ஏது பஞ்சம்?

     அங்கே மேலே பாறையில் இளங்காளை ஒருவன் அமர்ந்து தங்கள் சிரிப்பையும் கொம்மாளத்தையும் காணக்கூடும் என்ற நினைவே எழுவதற்கில்லாமல் அவர்கள் அந்த நதி மகளுக்கு மேல் அட்டகாசம் செய்தார்கள். இளம் பெண்களைக் கண்டு வானக் கதிரவனுக்கும் உற்சாகம் வந்துவிட்டது போலும்! அவன் மேகத்திரையை உதறிவிட்டு, காட்டிலும் மலையிலும் சிறு சந்துகளிலும் புகுந்து தன் கிரணங்களால் அந்த அருவிப் பெண்ணையும் மலரன்ன மங்கையரையும் தழுவிக் கொண்டிருந்தான். இடையிடையே பாறைகளையும் கற்களையும் முட்டி மோதிக் கொண்டு, பள்ளங்களில் சுழித்துச் சரிவுகளில் பளிங்காகி இந்திரஜாலங்களைப் புரியும் ஆற்றிலே, நடுநடுவே பாறைகளில் கால்களை நீரில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவரும், நுரைத்து அழுக்குப் போக்கும் ‘வெக்கிச் செடி’ கொண்டு வந்து கல்லில் அரைத்தவரும், கரையில் முன்னேற்பாடாகத் தீமூட்டியவருமாக இருக்கையில், ஒருத்தி மட்டும் துணிச்சலாக இறங்கி முழுகிவிட்டு, மற்றவர் மீது நீரை வாரி இறைத்தாள். தீ எரியாதபடி அவள் இறைத்த நீர் கரையில் வாரி அடித்தது. தீமூட்டியவள் ஓடி வந்து அவளைத் துரத்தினாள். அந்தத் துணிச்சல் காரி, சொட்டச் சொட்ட, அரைத்த இலையைத் தலையில் தேய்த்துக் கொண்டு நீண்டகுழல் கருமேகங்களென நீர்ப்பரப்பில் தெரிய முழுகினாள்.

     குளிரவில்லையோ? அல்லது பொறுத்துக் கொள்ளும் சக்தி அதிகமோ? தண்ணீரில் அவள் ஒருத்திதான் அப்படித் துளைந்தாள். மற்றவர்களைக் கேலி செய்து தண்ணீர் சொட்டச் சொட்ட நீரை வாரி இறைத்தாள். மறுபடியும் சருகுகள் சேகரித்துத் தீமூட்டிய நங்கைக்கு, அவள் அட்டகாசம் கோபத்தை வருவித்தது போலும்! அவளைத் துரத்திக் கொண்டே ஓடினாள். துரத்துபவளின் பிடிக்கு எட்டாமல் விலக முயன்ற மங்கை, பின்னால் பாறை சறுக்க, சுனைப் போல் தென்பட்ட இடத்தில் தொப்பென்று விழுந்து விட்டாள்.

     பார்வைக்குச் சிற்றருவியாக, பல இடங்களிலும் முழங்கால் நீரே ஓடுவதாகத் தெரிந்தாலும், அணை போல் வட்டமாக இருந்த பாறைகளுக்கு நடுவே சுனைபோல் நிரம்பியிருந்த இடத்தில், நீரின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. ஒரே சுழிப்பு, ஒரே வேகம்; காலை ஊன்றி வரமுடியாத வழுக்குப் பாறைகள். நல்ல ஆழத்தில் சுழன்று சுழன்று அவள் அபாயத்தில் திக்குமுக்காடியதைக் கண்டதும் அவர்கள் சிரிப்பும் கலகலப்பும் ஒரு நொடியில் அடங்கி விட்டன.

     “ஐயோ!” என்ற கூக்குரலுடன் அவர்கள் செய்வதறியாமல் கைகளைப் பிசைகையில் அங்கு ஒரு விந்தை நிகழ்ந்தது.

     உயரே, நதி விழும் இடத்துக்குச் சமீபத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அருவியோடுதான் விழுந்து வந்தானோ என்ற வேகத்தில் பகலில் ஓடி வந்தான்; சுனையில் குதித்தான். கண்ணீரில் மூழ்கி மூழ்கித் தடுமாறும் மங்கையைத் தோளுக்கு மேல் பூப்பந்து போல் தூக்கிப் பாறைக்கு அப்பால் விடுத்தான். பின்பு கரையோரம் நகர்ந்து, வளைந்திருந்த மரக்கிளையைப் பற்றிக் கொண்டு எதிர்க்கரையில் ஈரம் சொட்டச் சொட்ட ஏறி நின்றான்.

     விழுந்து எழுந்து தன்னைக் காப்பாற்றியவன் ஓர் ஆண் மகன் என்பதை அறிந்த மங்கை, ஈரம் சொட்ட எதிர்க்கரையில் நின்றவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கினாள். அவனும் அவளைப் போலவே தான், அவளை அப்போதுதான் யார் என்று அறிகிறானோ? அவனையும் அறியாமல் இதழ்களில் இளநகை அரும்பியது.

     குறும்புத்தனமெல்லாம் கண்களுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிவிட்டாற் போன்ற ஓர் ஒளி சிந்த, அவள் தன் ஆடைகளைப் பிழிந்து கொண்டாள்.

     “கிருஷ்ணண்ணன்!” என்று ஒருத்தி குறுநகை செய்தாள்.

     “இவள் தான் பிடித்துத் தள்ளிவிட்டாள்!” என்று பொய்க்கோபம் கொண்டு புகன்றாள் அவள்.

     “பார் பார், வேண்டுமென்றே விழுந்துவிட்டுப் பழியைப் போடுகிறாள்!” என்று சிரித்தாள் தீ மூட்டியவள். பின்னும் சருகு சேர்த்துக் கொண்டு.

     “இருக்கும், இருக்கும். இல்லையாடி பாரு? கிருஷ்ணனை மேலே பார்த்துவிட்டுத் தானே தண்ணீரில் விழுந்தாய்” என்றாள் இன்னொருத்தி.

     “அப்படித்தான், அப்படித்தான்!” என்று எல்லோரும் குபீரென்று சிரித்துக் கொண்டு, தீயில் சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டார்கள்.

     பாருவுக்குக் கன்னம் சிவந்ததென்னவோ உண்மை. கருநீலமாகக் குளிரில் மாறிய அவள் இதழ்கள் தீயின் பக்கலில் வரவே அவசியம் இல்லாதபடி ரோஜாவாக மாறின.

     அவர்கள் ஆடைகளை மாற்றிக் கொண்டு வீடு திரும்பு முன் கிருஷ்ணன் வீடு சென்று விட்டான்.

     விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய அம்மை, “என்ன ஈரம் இது?” என்றாள்.

     அம்மையானாலும் மங்கையொருத்தியை நீர்ச் சுழலிலிருந்து தப்புவித்ததைச் சொல்லிக் கொள்ள அவனுக்கு நாணமாக இருந்தது. “அருவிக்குப் போனேன். சுனையில் ஆழம் கொஞ்சமென்று இறங்கினேன்; நனைந்துவிட்டது” என்று சொல்லி, ஆடைகளை மாற்றிக் கொள்ளப் போனான்.

     விரிந்த விழிகளை மாறாமலே அம்மை நோக்கினாள். எவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டான்! மாநிறத்தானென்றாலும் பாட்டனைப் போல நல்ல உயரம்; பெண்மையின் சாயை படிந்த முகம் வெயிலிலும் குளிரிலும் படாமல் பூவாய் வளர்ந்தவன், படிப்பில் தோய்ந்த உள்ளம்.

     அன்னை உள்ளம் பெருமையில் பூரித்தது. எத்தனை புத்தகங்கள்! எத்தனை ஆண்டுகள் படித்து விட்டான் அவள் மகன்! அவனுக்கேற்ற பெண் ஒருத்தி வர வேண்டுமே! அவள் மண்ணைக் கிளறி மாயவேண்டாம். அவனுடைய புதுகைக் கண்களுக்கு உகக்க வேண்டுமே! பயிரிலும் விளைவிலுமே கவனத்தை ஊன்றியிருக்கும் கணவனின் கவனத்தை அவள் திருப்ப வேண்டும். அவள் வந்து, முற்றம் நிறைய அவளுடைய மைந்தனின் குழந்தைகள் விளையாட அவள் கண்டு களிக்க வேண்டும்.

     தாயின் தீர்மானங்கள் ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் உடைமாற்றிக் கொண்டு, வாசலில் வந்து நின்றான்.

     அந்தச் செண்பகப்பூ மேனிக்கு உரியவள் அவனுக்குப் புத்தம் புதியவளாகத் தோன்றினாலும் புதியவள் அல்லள். அத்தனை மங்கையருக்குமிடையே அவள் ஒருத்திதான் வட்டமதி முகத்தினளாக, அரசிளங்குமரி ஒருத்தியைப் போல் தோன்றினாள். சின்னஞ்சிறு வயசிலிருந்தே அவன் கண்டுவரும் பாரு, இத்தனை அழகியாக எப்படி மாறினாள்? காதலைப் பற்றிக் கற்பனை செய்கையிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன் நேர்ந்தது?

     உள்ளத்துக் குறுகுறுப்பு உடலெங்கும் பரவியது. அந்தக் குறும்புக்காரி, அவன் நோக்கிய போதே, அவனைப் புத்தம் புதிதாகப் பார்ப்பவளைப் போல் பார்த்தாளே, ஏன்? கல்வி கற்காவிட்டாலும் அறியாமையே மங்கைக்கு ஓர் அழகாக விளங்குமோ?

     ‘தனிப்பட்டவளாக, கொள்ளை அழகுடன் அண்டையிலே நான் காத்து நிற்பதை மறந்து, எவளோ தேன்மலைப் பெண்ணைத்தானே நினைத்தாய்?’ என்று அவள் பொய் கோபத்துடன் மன அரங்கில் நின்று அவனிடம் கேட்டாள். ‘நீ தேன்மலைக்காரியை நினைத்துக் கொண்டு கற்பனை செய்த பெண் நானே தவிர வேறு எவளும் அல்லள். தெரியுமோ? அப்படி நீ தேடினாலும் அவள் கிடைக்க மாட்டாள்?’ மின்னலைப் போல் பாய்ந்து ஓடினாள்.

     கிருஷ்ணன் உள்ளம் இனிக்க, உலகம் மறக்க, சுனையில் முழுகித் தன்னுள் புகுந்து விட்ட அவளுடைய எண்ணங்களிலேயே திளைத்துக் கொண்டிருந்தான்.