உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 10. ரங்கம்மையின் மகன் எப்போதும் போலவே மலையழகியைக் காண அந்த ஆண்டும் வசந்தன் வந்தான். பூத்துக் குலுங்குபவளாய் பசிய மேனியுடன் புன்னகை புரிபவளாய் வசந்தனை வரவேற்கும் மலையழகி ஏனோ உருமாறிப் போனாள்? பசுமையும் பூரிப்பும் எங்கே? சலசலத்து ஓடிவரும் அருவிகள் எங்கே? இளங்காற்றில் மெல்ல அசையும் இளமரக் கிளைகள் எப்படிக் காய்ந்தன? காயும் கதிரவன் மாயவே மாட்டானா? காடுகள் அழிய, மொட்டை மொட்டையாகத் தொலை தூரம் வரை தெரியும் குன்றுகளெல்லாம், வரிவரியான கிழங்குப் பயிர்களுடன் கண்ணுக்கினிய காட்சிகள் தருமே! மண்ணில் ஈரமே இல்லை. கிழங்கை விதைத்துவிட்டு மக்கள் வானவனைப் பார்த்து இறைஞ்சி நின்றனர். பூமித்தாய் மக்களின் கண்ணீர் கண்டு, வெய்துயிர்த்தாள். ஜோகி அவ்வாண்டு நிலம் முழுவதுமே கிழங்கு விதைத்திருந்தார். மாமனாகிய முதுகிழவர், வானை நோக்குவதும், மாசு மறுவில்லாத நிலம் கண்டு மறுகுவதுமாகத் தவித்தார். “பையன் கோயம்புத்தூர் சென்று படிக்க வேண்டும்; குத்தகைப் பூமி எடுத்துக் கிழங்கு போடுவோம் என்று போட்டோமே; வானவனே, உனக்குக் கருணை இல்லையா?” என்று பாரு பரிதவித்தாள். வானவனின் கருணை வேண்டி, “எங்கள் எதிர்காலம் அந்த மண்ணிலே கருவிருக்கும் கிழங்குகளில் தொங்கியிருக்கின்றன; எங்கள் தாய், அம்மை, பூமி, வானவனே, வஞ்சிக்காதே!” என்று ஜோகி மட்டுமா கண்ணீர் விட்டார்? லட்சக் கணக்கிலே கிழங்கு விதைத்த சீமான்கள், தெய்வ நம்பிக்கையை ஒதுக்கிய முன்னேற்றக்காரர்கள் எல்லோருமே தனித்தனியே மழை வேண்டித் தவமிருந்தனர். பல வேறு நம்பிக்கைகளுடையவரும் அவரவர் வழி கார்மேகத்தை அழைக்கப் பூசைகள், வழிபாடுகள், ஆட்ட பாட்டங்கள் நிகழ்த்தினார்கள். பணத்தைப் பந்தயமென்றும் களியாட்டங்களென்றும் தண்ணீராக ஓட விட வந்தவர், உதகை நகரம் நெஞ்சம் உலர்ந்த நகரமானது கண்டு அதிசயப்பட்டவர்கள்; கூட்டங்கள் போட்டார்கள்; பேச்சுக்கள் பேசினார்கள். பத்திரிகைக்காரர்கள் தண்ணீருக்குத் தவிக்கும் மக்களின் சங்கடங்களைப் படங்களெடுத்து போட்டார்கள்; பக்கம் பக்கமாக எழுதினார்கள். வானம் கருணை பொழியவில்லை. கிழங்கு விதைத்து இருபது நாட்கள் ஆகிவிட்டன. பதின்மூன்று நாட்களுக்குள் வானம் கறுத்துப் பொழியுமே? வழக்கமாக வந்து தங்கும் மலைமுகடுகளை விட்டு, அந்தக் கருமேனிப் பெண்கள் எங்கொழிந்து சென்றனர்? நன்றியற்ற மக்களாயினரோ? லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, அரும்பெரும் பதவியைப் பெற ரங்கன் பாடுபட்டான். லட்சாதிபதியாக வாழ்ந்தவன், தோட்டங்கள், மாடுகள், செல்வாக்கு அனைத்தையும் ஒரே அலையில் இழந்து, ஓட்டாண்டியாக ஆனான். அவனை அண்டி வந்த கருப்பையா, கிழக்கு மண்டிச் சொந்தக்காரனானான். சின்னுப்பிள்ளை தேயிலைத் தோட்டங்களைச் சுவீகரித்துக் கொண்டான். மிஞ்சியதெல்லாம் மூதாதையர் பூமி மட்டுமே. அதிலும் பாடுபட ஆளில்லை; பணமில்லை. ராமன் கருப்பையா மண்டியிலே சரக்கு லாரி ஓட்டலானான். நகைகள் போயின என்ற கத்தலும் கூச்சலுமாக ரகளை செய்த மனைவி, உபயோகமற்ற பிள்ளைகள், வந்தவரிடமெல்லாம் கைநீட்டிய முதுகிழவரான தந்தை ஆகிய குடும்பத்தையும், அவமானத்தையும், தோல்விக்குக் காரணம் கிருஷ்ண கௌடரின் எதிர்க்கட்சி ஆதரவு என்ற எண்ணத்தில் கனன்ற பகையுணர்வையும் நினைவுக்கப்பால் அகற்றிக் கொள்ள, போதைப் பொருள்களின் உதவியையே ரங்கன் நாடியிருந்தான். அந்தப் பொருள்களின் உற்பத்தியில் கவனமும் செலுத்தியிருந்தான். இவையெல்லாம், ஜோகியின் உள்ளத்தில் கலக்கத்தை உண்டுபண்ணவில்லை. அவர் பிறந்து வளர்ந்த நாட்களாக, எவரெவரெல்லாமோ எப்படி எப்படியெல்லாமோ மாறியும் வானம் ஒரு போதும் இப்படி வஞ்சித்திருக்கவில்லை. வானமும் வஞ்சித்துவிட்டால் அவர் என்ன செய்வார்? நெஞ்சமே நொறுங்கி அடி வயிற்றில் விழுந்தாற் போலிருந்தது ஜோகிக்கு. இருபத்திரண்டாம் நாள், நட்ட விதையைத் தோண்டி, உயிர்க்கும் ஈரம் இருக்கிறதா என்று பார்க்க அவருக்குத் தெம்பில்லை. ஒரு தூற்றல் கூட விழவில்லையே! கோடை விடுமுறையாக இருந்துங்கூட நஞ்சன் உதகைப் பக்கம் போகாமல் இருப்பதில்லை. மண்ணையும் வானையும் பற்றி அவன் சிந்தை சுழலவில்லை. பெரியப்பனும் வறண்டு உதவி செய்பவரும் இல்லாமல் அவன் கல்லூரிக் கனவு கண்டு பயன் என்ன? பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதனால், சில சலுகைகளுடன் அவன் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஆனாலும், மற்ற செலவுகளை ஏற்பவர் யார்? கடன் வாங்கி அவனைத் தந்தை படிக்க வைப்பாரா? எப்படி, எதை வைத்துக் கடன் வாங்குவார்? வீட்டிலே அம்மையின் முகத்தையும் ஏக்கம் பிடித்த தந்தையின் முகத்தையும் பார்த்துக் கொண்டு சுற்றி வர விருப்பம் இன்றியே அவன் ஒரு நாளின் முக்கால் பொழுதையும் வெளியே கழித்தான். மண்ணை நம்பிக் கனவுகளைச் சமைத்திருந்த பாரு என்ன செய்வாள்? அவள் தன் ஆசைக் கனவுகள் எத்தனையோ சிதைந்துவிழச் சமாளித்தாள். எல்லாம் போன பின் எஞ்சி நிற்கும் ஒரே உயிர்க்கனவு நஞ்சன் படிக்க வேண்டும் என்ற கனவு. மண்ணைச் சார்ந்து வளர வேண்டிய கனவு, அதுவும் இடிந்து விழ, அவள் எப்படித் தாங்குவாள்? ஜோகியின் முகம் பார்க்க அவள் அஞ்சினாள். தேநீரையும் புகையிலையையுங் கூட மறந்து வானை நோக்கும் கிழவரின் கண்ணீர் கண்களில் பட்டு உறுதிகள் நீராகிவிடுமோ என்று ஒளிந்தாள். இருபத்தைந்தாம் நாள் காலையில் வானில் மூட்டம் காணப்படவில்லை. ஓர் ஓரம், கிழங்குப் பயிர்களை, இரகசியமாகத் தோண்டிப் பார்த்தாள், பாரு. ஈசுவரா! இதுதானா உன் உள்ளம்? உயிர்க்கும் ஈரமே இன்றி, வெறும் கூடாக, தோலாக, அவள் நட்டிருந்த விதைகள் சாவியாக இருந்தன. அவள் நெஞ்சு விண்டது. மண்ணின் சூட்டிலே அவள் துடித்து விழுந்தாள், கதறினாள். அவள் எப்படித் தலையெடுப்பாள்? அவள் நெஞ்சுத் துயரம் எப்படி ஆறும்? அந்த ஆசைப் பயிர், ஒரு நாளைய, இரண்டு நாளைய பயிரா? சூடான புழுதி மண்ணில், பொழுது சாய்ந்து கருணையற்ற குளிர் படியலாயிற்று. அப்போதுங்கூட, பாருவின் உள்ளத் துயரின் வெம்மை ஆறவில்லை. “மாமி, மாமி? என்னங்க மாமி இது?” ராமன் திடுக்கிட்டவனாக அவளைப் பிடித்து உலுக்கினான். “மாமி?” தன் மீதே தன் மாளிகைகள் இடிந்து நொறுங்கிக் கிடந்தாற் போன்ற ஒரு பிரமையில் அவள் மெல்லக் கண்களை மலர்த்தி அவனைப் பார்த்தாள். “இருட்டி வருகிறது. மயக்கமா மாமி?” “மயக்கமா?” கண்கள் மடை வெள்ளமாய்ப் பெருகின; பேச்சு எழவில்லை. “ஏன் வருத்தப்படுகிறீர்கள், மாமி? ஈசுவரன் சித்தம், அவ்வளவு பெரிய இடியாய்ப் பெரிய இடியாய்ப் பெரிய மாமன் கை சளைத்தது. அதைக் கூடச் சமாளித்தீர்களே!” “ராமா, தெய்வங்களெல்லாம் நம் மீது கோபப்பட்டு விட்டார்கள். உன் மாமனின் பேராசையும் பொறாமையும் குடும்பத்து நன்மைக்கே தீங்காக முடிந்துவிட்டன. பகையை இரு மாமனும் வளர்த்தார்கள். சிநேகம் விரும்பி வீடு தேடி வந்த கிருஷ்ண அண்ணனை, உன் ஜோகி மாமன் விரட்டினார். ராமா, நான் நஞ்சன் முகத்தை எப்படிப் பார்ப்பேன்? பரீட்சையில் ஜயித்து, கோயம்புத்தூர் போகாமல் இங்கே என்ன செய்வான்? என் வாழ்வைப் போல் இந்தக் கிழங்கு உயிர்க்காமல் சாவியாய்ப் போச்சு. பாழும் விதி என்னைச் சதி செய்தாற் போல வானம் சதி செய்தது” என்றெல்லாம் அவள் புலம்பினாள்; அரற்றினாள். ராமன் தேற்றினான்; “ஏதோ ஒரு கிழங்கு அப்படி இருக்கும். எழுந்திருங்கள் மாமி. நஞ்சன் படிப்புப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன்; எழுந்திருங்கள்.” என்ன? அவள் கேட்பது உண்மையா? நினைவா? “நீயா?” “ஆமாம் மாமி. ராமன், மாமன் மண்ணிலே உயிர் வாழ்பவன் என்பதை மறப்பானா? உங்கள் மனசு, என்றும் அன்பாக, தங்கமாக இருக்க வேண்டாமா? எழுந்திருங்கள். நஞ்சன் நிச்சயமாக மேலே படிக்கப் போகிறான். நம் வீட்டில் எரியும் நல்ல விளக்கு ஒன்றை எப்பாடு பட்டேனும் எண்ணெயூற்றி நான் காப்பேன், எழுந்திருங்கள்.” “ராமா, நிசந்தானா ராமா?” “இந்த மண்ணில் மேல் ஆணையிடட்டுமா மாமி?” “தம்பி, ராமா, நீ எப்படி அத்தனை பெரிய பொறுப்பை ஏற்பாய்?” “என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா மாமி? இந்த ஒரு வேளாண்மையுடன் நாமும் போய் விடுவதா? உங்கள் ஒருவருக்கா இது நஷ்டம்? லட்சக் கணக்கான ரூபாய்களைக் கடன் வாங்கிக் கிழங்கு போட்டவர்கள் இருக்கிறார்கள்.” அவன் குரலில் வந்த கனிவும் ஆறுதலும் கொஞ்சமல்ல. அவன் தந்த ஊன்று கோலில் அவள் உடைந்த உள்ளம் சாய்ந்து நிமிர்ந்தது. குட்டையாக, அப்பனைப் போலவே கவடின்றிப் பேசிச் சிரிக்கும் ரங்கம்மை பையன், நல்லதே நினைப்பவன். “ஈசா, எங்களை நீ நிறைய நிறையச் சோதிக்கிறாய், இந்த மக்களுக்கும் கஷ்டம் கொடுக்காதே!” தாயுள்ளம் வாழ்த்தியது. இட்ட வித்தெல்லாம் பெரும்பாலும் மண்ணோடு மண்ணான பிறகு, ஒரு மாசத்துக்குப் பின்னர் ஓரிரவு, இடி இடித்து, பெரு மின்னல் பச்சை மரங்களை இரு கூறுகளாகப் பிளந்து எரிக்க, பெருமழை பெய்தது. பத்துக்கு ஒன்று கூட ஜோகிக்குக் கிழங்கு முளைக்கவில்லை. ஆனால், பாரு, ஈரம் கண்டவுடனே, புது நம்பிக்கையுடன் விளைநிலத்தை மீண்டும் திருப்ப விரைந்தாள். ஆம்; அவள் நஞ்சன் நிச்சயமாக, கிருஷ்ணனை விட உயர்வாகப் படித்துப் பெருமைக்கு உரியவனாவான். ராமன் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறான். அவன் நல்ல பையன்; நிறைவேற்றுவான். ஈசனின் அருளுக்கும் ஆற்றலுக்கும் அழிவேது? இடையிடையே சஞ்சலங்கள் வந்தால், அதனால் குன்றிவிடலாமோ? குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|