உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 6. கல்லும் கன்னியும் சிற்றப்பனின் வரவேற்பு இப்படி இருக்கும் என்று ரங்கன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. எப்போதோ அவன் செய்த சிறு செயலை இன்னுமா மறக்கவில்லை அவர்? அவன் பணம் காசோடு நல்ல நிலையில் வந்திருப்பதன் பொறாமையோ ஒருவேளை? ரங்கம்மையின் மகிழ்ச்சிதான் கட்டிப்பிடிக்க முடியவில்லை. அவன் மூட்டையை வீட்டுக்குள் கொண்டு வந்தது தான் தாமதம், அதை அவிழ்த்துக் கடை பரப்பி விட்டாள். பளபளக்கும் கண்ணாடி வளையல்கள், பட்டுத் துணிகள் எல்லாம் அவர்கள் அதற்கு முன் கண்டிராதவை. பட்டுத் துணியை சட்டென்று குழந்தை மேல் போர்த்து ரங்கம்மை அழகு பார்த்தாள். “இதெல்லாம் ஒத்தையிலே செய்கிறார்களா?” என்று கேட்டு, ரங்கம்மையின் கணவன் இனிய ரொட்டியைப் பிய்த்துத் தின்பதும் குழந்தையின் வாயில் திணிப்பதுமாக அனுபவித்தான். ரங்கன் குமுறிக் குமைந்தான். ‘இதுவா வரவேற்பு! ஊரார் அனைவரும் சிற்றப்பன் சீற்றம் கண்டு ஒரே பக்கமாகப் பின்வாங்கி விட்டனரே!’ “என்ன ரங்கி, அண்ணன் வந்ததற்கு விருந்து சமைக்க வேண்டாமா? அரிசிச் சோறும் குழம்பும் வை” என்றார் தந்தை. வீட்டில் அரிசி ஏது? வாயிலில் அவள் ஓடினாள். கரியமல்லர் வீட்டிலேதான் அவள் கால்கள் நுழைந்தன. “எங்கள் ரங்கண்ணன் ஒத்தையிலிருந்து வந்து விட்டான். பட்டு, ரொட்டி எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். பூமி வாங்கிக் கிழங்கு போட்டிருக்கிறானாம். அரிசி கொஞ்சம் தாருங்களேன். அண்ணனுக்கு அரிசி சாப்பிட்டுப் பழக்கம்” என்று படபடத்துப் பெருமை பாடினாள். “சிற்றப்பன் சண்டை போட்டாராமே?” என்றாள் கரியமல்லரின் மூத்த மகள். “அவருக்கு உடம்பு சரியில்லை” என்று கூறிவிட்டு, படியரிசியை வாங்கிக் கொண்டு அவள் ஓடோடி வந்தாள். அடுப்பு எரிய வைத்துச் சோறும் குழம்பும் ஆக்கினாள். தன் வீரப் பிரதாபங்களைக் கேட்க, அந்தக் கிருஷ்ணன் வீட்டிலிருந்து கூட எவரும் வரவில்லை என்பதை அறிந்த ரங்கனுக்கு ஆற்றாமை வெடித்து வந்தது. “கிருஷ்ணன் இங்கு இல்லையா?” என்றான். படித்துப் பட்டம் பெற்ற கிருஷ்ணன் ஊர் திரும்பியதைக் கூறி இருந்தாரே ஒழிய, அவன் பாருவை மணக்க இருப்பதாகத் தந்தை அவனிடம் முன்பு கூறவில்லை. இந்தச் சமயம் சட்டென்று நினைவுக்கு வந்தாற் போல் ரங்கனின் தந்தை, “கிருஷ்ணன் பாருவைக் கட்டப் போகிறான் ரங்கா, தெரியுமா? நேற்று வரை இங்கேதான் இருந்தான். நேற்றுத்தான் மணிக்கல்லட்டி போகிறான்” என்று எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் கூறி வைத்தார். “என்னது! பாருவையா?” அவன் கொதித்து எழுந்தது போல் கேட்டதையும், விழிகள் உருண்டதையும் கண்டு தந்தை சற்று பரபரப்புடனே, “ஏன்? பாருவுக்கே இஷ்டம் போல் இருக்கிறது. தேவர் பண்டிகை ஆனதும் கல்யாணம் வைத்துக் கொள்வதாகக் கேள்வி” என்றார். “அதெப்படி முடியும். முறைக்காரன் இல்லையா? அவன் என்ன பணம் வைப்பான்? அதற்கு மேல் நான் வைக்கிறேன்!” மகன் கொண்டு வந்த உயர்தர மதுப்புட்டியை உடைத்துத் தந்தை வாயில் ஊற்றிக் கொண்டார். “என்ன சொல்றே தம்பி?” என்றார் அசட்டுச் சிரிப்புடன். “என்ன சொல்லுவதா? அதெப்படிப் பாருவை வேற்றான் கட்ட முடியும்? ஜோகி திராணியற்றுக் கோயிலில் இருந்தால் நான் இல்லையா? எனக்கு உரிய பெண்ணை அவன் எப்படிக் கட்டலாம்?” தந்தை விழித்தார், ‘யானை போன்ற கரியமல்லரின் குடும்பத்துக்கே எதிர் நிற்க, இந்தப் பையனின் இளமைத் தைரியம் துணிவு கொடுக்கிறதா, அன்றி அத்தனை செல்வம் சேர்த்து விட்டானா?’ “இதோ பாருங்கள் அப்பா, நான் இப்போதே அல்லது நாளையே மணிக்கல்லட்டி மாமனிடம் போய், பாருவை அழைத்து வரச் சம்மதம் கேட்பேன்” என்றான். வெகு காலத்துக்கு முன்பிருந்தே அவன் இளம் உள்ளத்தில் பதிந்திருந்த பொறாமை உணர்வின் பொறி, கரியமல்லர் குடும்பத்தின் மீது புகை கிளப்ப வாய்ப்பு உண்டாகி விட்டது. “ஏன் தம்பி, பாரு ஒருத்திதானா பெண்? உலகிலே வேறு பெண்ணே இல்லையா உனக்கு?” என்றார் தந்தை மதுவின் காரல் ஏறும் தழுதழுத்த குரலில். “என்ன படிப்பு, பிரமாதம் புரட்டி விட்டான்! பன்னிரண்டு வருஷம் முன்பு ஒன்றும் இல்லாமல் ஓடிய நான் இன்று ஊன்றிப் பிழைத்துச் சம்பாதிக்கக் கற்றிருக்கிறேன். இவன் சம்பாதிப்பானா? கரியமல்லராக இருந்தால் என்ன? வேறு எந்தக் கரடியாக இருந்தால் என்ன? ரங்கன் பின்வாங்குவானா!” என்றான் ரோசத்துடன். பேசின கையுடன் பட்டுத் துணிகளை நாசமாக்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்துத் துணிகளைப் பறித்துப் பத்திரமாக மடித்தான். ரங்கம்மையின் முகம் குன்றியது. ரங்கம்மை ஆக்கிய விருந்து, அன்று அவள் கணவனுக்குத்தான் சுவையாக இருந்தது. மதுவின் மயக்கிலேயே நிறைவெய்தி விட்ட தந்தை, சோற்றை ருசிக்கவில்லை. ரங்கனுக்கோ, தோல்வி கண்டுவிட்டாற் போன்ற ஒரு குமைச்சலில் நெஞ்சு எரிந்தது. பாரு எப்படி அவனைக் கட்டுவாள்? தன்னை விட அந்தக் கிருஷ்ணன் பயல் எந்த விதத்தில் மேம்பட்டிருப்பான்? முறைக்காரனை அவள் அப்படி மறந்து விடுவாளா? அன்றிரவு முழுவதும் அவன் இந்தக் கேள்விகளோடு புரண்டு புரண்டு படுத்தான். அவன் செல்வத்துக்கு வரவேற்பு இல்லை; புகழ் இல்லை; பெண்ணும் இல்லையா? ஏற்கனவே அவன் பீமனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்; பீமனும் அதை ஆதரிப்பவனாகப் பேசினானே! ஒருவேளை வெகுநாட்களாகக் கிருஷ்ணனுக்கும் பாருவுக்கும் தொடர்பு இருந்திருக்கக் கூடுமோ? அப்படி இருந்தால்? இந்தக் கேள்வியில் வந்து நின்ற அவனால் அமைதியுடன் மறுநாளை மரகத மலையில் கழிக்க முடியவில்லை. பகல் உணவுக்குப் பின் அவன் மணிக்கல்லட்டிக்குக் கிளம்பி விட்டான். அவன் ஹட்டியை அடைந்த சமயம், பிற்பகல் கழிந்து மாலையாகிக் கொண்டிருந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கோட்டும் தலைப்பாகையுமாக அவன் அருகில் செல்லும் வரையிலும் ஊர் மக்களுக்கு அவனை இன்னாரென்றே இனம் புரியவில்லை. பெண்களும் குழந்தைகளும் யாரோ என்று விரிந்த விழிகளுடன் அருகில் வந்து நோக்கினார்கள். “ஓ! மாதண்ணன் மகனா? ரங்கனா? இத்தனை பெரியவன் ஆகிவிட்டானே? நல்லாயிருக்கிறாயா?” என்பன போன்ற குரல்களுடன், முதியவர்களும் பெண்மணிகளுமாக அவனைச் சூழ்ந்து கொண்டு விசாரித்தார்கள். அப்படி விசாரித்தவர்களில் கிருஷ்ணனின் தாயும் இருந்தாள். கிருஷ்ணனும் வாயிலில் கலகலப்புக் கேட்டு வெளியே வந்தான். ஒரு கையில் விரிந்த புத்தகம்; விரல்களில் தங்க மோதிரங்கள்; முழுக்கைச் சட்டை. ரங்கன் அத்தனை மக்களிடையேயும் இருந்து மீண்டு, கிருஷ்ணனை விழித்துப் பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் அமைதியே நிறைந்திருந்தது. “என்ன கிருஷ்ணா? நினைப்பில்லையா? நல்லாயிருக்கிறாயா?” என்று தன் பொறாமை உணர்வை விழுங்கிக் கொண்டு ரங்கன் குசலம் விசாரித்த போது, கிருஷ்ணனின் இதழ்களில் சிறு புன்னகை நெளிந்தது. “ஊர்ப்பக்கம் இப்போதான் நினைவு வந்ததா?” என்றான். இச்சமயத்தில் பாரு கிரிஜை பின் தொடர வாசலுக்கு வந்தாள். ரங்கன் பிரமித்துப் போனான். அடேயப்பா! மின்னல் போல அல்லவா கண்ணைப் பறிக்கிறாள்? அங்கங்களில் தான் எத்தனை வாளிப்பு! மேற்போர்வையாக இருந்த முண்டு விலகியிருந்தது. இளவேய்கள் போன்ற தோள்களைச் சட்டென்று நன்றாக மூடிக் கொண்ட அவள் கலகலவென்று ரங்கனைப் பார்த்துச் சிரித்தாள். “ஓடிப் போன அண்ணனா? வாருங்கள் ரங்கண்ணா! நல்லா இருக்கிறீர்களா? ஓடிப் போனது போல் சொல்லாமலே ஓடி வந்து விட்டீர்களே!” என்றாள். குரலில் கேலி இழையோடியது. ரங்கனின் நெஞ்சில் அது சுருக்கென்று தைத்தது. “மாமன் மகளிடம் சொல்லிக் கொண்டா வர வேண்டும்? என்ன கிருஷ்ணா?” என்றான் எரிச்சலை விழுங்கிக் கொண்டு. அவன் பேசிய விதம் கிருஷ்ணனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாகரிகம், கல்வி கற்றுத் தேர்ந்த மனிதர்களுடன் பழகி வரவேண்டிய தொன்றாகும். வெறும் பட்லரிடமும் வேலையாட்களிடமும் பழகிய இவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கலாம். மரியாதையுடன் பழகும் முறை எப்படித் தெரிந்திருக்கும்? “நான் சொல்வது சரிதானே? என்ன கிருஷ்ணா?” என்றான் ரங்கன் மீண்டும். “நான் என்ன பேசுவது?” என்றான் கிருஷ்ணன் அலட்சியமாக. “என்ன பேசுவதா? ஊரே, பி.ஏ. படித்த கிருஷ்ணன் பேசுகிறான் என்று தம்பட்டம் கொட்டுகிறார்களே என்று கேட்டேன்.” கிருஷ்ணன் மறுமொழியே கூறவில்லை. “ஒத்தையிலிருந்தா வருகிறாய் தம்பி?” என்றாள் ஒரு கிழவி. “ஆமாம். கிழங்கு போட்டிருக்கிறேன். ஒரு மழை வந்து முளை வந்தாயிற்று” என்று ரங்கன் கிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்தான். “பாரு, என்ன நிற்கிறாய்? அம்மையும் அப்பனும் தோட்டத்துக்குப் போயிருந்தால், நீ இப்படித்தானா உபசரிப்பது வந்தவரை?” என்றாள் இளம்பெண். “முறைக்காரர் வந்து விட்டாரே என்று மலைப்பாக இருக்கும்” என்றாள் ஒரு குறும்புக்காரி. “பார்த்தாயா கிருஷ்ணா? நான் போட்டிக்கு வந்துவிட்டேன் என்கிறார்கள்!” என்றான் ரங்கன். படித்து மரியாதை தெரிந்த கிருஷ்ணனுக்கு அது பரம விகாரமாக இருந்தது. இந்தச் சமயம் தாத்தாவும் மணிக்கல்லட்டி மாமனும் மாமியும் பரபரப்பாக வந்து விட்டார்கள். ரங்கனைச் சுற்றி நின்று விசாரணைகளால் திணற அடித்தார்கள். கிருஷ்ணன் நழுவப் பார்த்தான். தாத்தா விடவில்லை. அவனைப் பிடித்து அழைத்துக் கொண்டார். இன்னொரு கையில் ரங்கனையும் பிடித்துக் கொண்டு அவர் வீட்டுக்குள் வந்தார். பாரு உள்ளே போய்விட்டாள். “தாத்தா, நேராகவே கேட்கிறேன். நான் பீமனைப் பார்த்தேனே, அவன் செய்தி வந்து சொல்லவில்லையா? முறைக்காரன் இருக்க, மற்றவன் பாருவைக் கொள்வது நியாயமா?” என்றான் ரங்கன் பளிச்சென்று. “அப்படி யார் தம்பி சொன்னார்கள்? எத்தனை நாளைக்கு முன்னே முடிந்த விஷயம், ஜோகிக்கு கிரிஜா என்றும், பாரு...” “அம்மா!” என்று பாரு குறுக்கே முகம் சிவக்கப் பாய்ந்து வந்து அழைத்தாள். ரங்கனின் முகம் சுருங்கியது; கிருஷ்ணனின் முகம் மலர்ந்தது. தாத்தா இருவர் முகங்களையும் நோக்கினார்; புன்னகை செய்தார். கிரிஜை ஒரு கலயத்தில் மோரும், குவளையும் கொண்டு வந்து வைத்தாள். “மோர் சாப்பிடுங்கள்” என்று மாமா உபசரித்தார். கிருஷ்ணனுக்கு அங்கு ரங்கனுக்குச் சமமாக உட்காரவே பிடிக்கவில்லை. ஒரு பெண்ணைக் கொள்வது வெறும் முறை எந்த பந்தத்தில் மட்டும் நிர்ணயிக்கப்படும் செயலா? அவன் மெருகடைந்த உள்ளத்தில், திருமணப் பந்தம் என்பது அவிழ்க்க முடியாத, விலக முடியாத இறுகிய பிணைப்பாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் இருந்தது. அவர்கள் சமுதாயத்தில் திருமணத்தைப் பற்றி இருந்த குறிக்கோள் மிக மிக உன்னதமானது என்பதில் ஐயமே இல்லை. மலர்கள் நாரின் பிணைப்பிலிருந்து நழுவி விடக் கூடாது என்பதற்காக, நாரை இறுக்கி மலரைத் துவண்டு விழச் செய்வதாகத் திருமணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி வைத்திருக்கப்படவில்லை. மலர் சரத்தோடு இணைந்து குலுங்க வேண்டும்; மங்கை புகுந்த இடத்தைப் பொலியச் செய்து, அந்தக் குடும்பக் கொடியைத் தழைக்கச் செய்பவளாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம். இந்த உயர் நோக்கத்தினால், கட்டுப்பாடுகளில் ஓரளவு தளர்வதற்கு உரிமையும் உண்டு. அன்பென்னும் ஒட்டுதல் இரண்டு உள்ளங்களிலும் இயற்கையாகக் கூடுகையில், எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை அன்றோ? இந்த உயர் நோக்கத்தை உணராமல், திருமண வீடுகளில் இருந்த சந்துக்களைச் சுயநலத்துக்கு உபயோகித்துக் கொள்ளும் வழிகள் ஒழிய வேண்டும் என்பது அவன் கருத்தாக இருந்தது. ஒருத்தியைக் கொண்டு, அன்போடு உவந்து வாழ, திருமண விதிகளில் கட்டுப்பாடு வேண்டும் என்று அவன் அப்போது உறுதியாக நினைத்து, அதைச் செயலாற்ற எண்ணம் கொண்டிருந்தான். பாருவுக்குத் தன் மீதுள்ள அன்பை அவன் அறிவான். அவ்வன்பு அவனிடமும் நிறைந்துள்ளது. எனவே, ரங்கன் விரும்பத்தகாத முறையில் அல்லவோ நடக்கிறான்? கிருஷ்ணனின் மன ஓட்டம் இவ்விதம் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ரங்கன் சுயப்பிரதாபம் பேசிக் கொண்டிருந்தான். தன்னிடம் ஐந்நூறு வெள்ளிப் பரிசம் வைக்கவும் பொருள் உண்டு என்று ஜாடை காட்டினான். தாத்தா யோசனையில் ஆழ்ந்தவராகத் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார். ரங்கன் சற்று நிறுத்தியதும், “இங்கே... இப்போது பணத்தைப் பற்றிப் பிரச்சனை இல்லை. நீயும் பணம் கொடுப்பாய். கிருஷ்ணனும் சளைக்க மாட்டான். இப்போது... பணப் போட்டி வேண்டாம். ஒரு பலப் போட்டி நடத்தினால் என்ன என்று பார்க்கிறேன்!” என்றார் கம்பீரமாக. “அது நல்லது. ஒரு பெண்ணுக்காக இருவர் பலத்தையும் பரிசோதிப்பது போன்ற வேடிக்கை கிடையவே கிடையாது” என்றார் மாமன். “அது சரி; அது சரி” என்று மாமி ஆமோதித்தாள். இதற்குள் சமையலறை, உள் மனை வழியாக வந்த மாதியின் குரல் ஒலித்தது. “இரண்டு பேரில்லை. மூன்று பேர் என்று சொல்லுங்கள். ஜோகியும் பாருவின் கையைப் பற்றும் முறையுடையவன் அல்லவா அண்ணா?” என்றாள். திடுக்கிட்டாற் போல் கிருஷ்ணன் நிமிர்ந்தான். ரங்கனும் விழிகள் நிலைக்க, வாயிற்படியில் நின்ற ஜோகியின் தாயைப் பார்த்தான். “அட, நீ எப்போது வந்தாய் தங்கச்சி?” என்றார் அண்ணா. “நான் வந்தப்போ, நல்லவேளை, ஜோகி இன்னும் பத்து நாளில் கோயிலை விட்டு வருவான். அந்தப் போட்டியில் அவனும் உண்டு” என்றாள் திடமாக. “இன்று பதினைந்தாம் நாள், திங்கட்கிழமை நம் மரகதமலை ஹெத்தப்பா கோயில் முன் இருக்கும் உருண்டைக் கல்லை யார் தூக்கிக் கொண்டு இரண்டடி நடக்கிறார்களோ, அவரே போட்டியில் வென்றவர்.” முதியவரின் குரல் அமைதியுடன் ஒலித்தது. கிருஷ்ணனுக்கு முகத்தில் செம்மை ஓடியது. ரங்கன் எக்களித்தான். ‘ஹம், பாரு எனக்கே உரியவள். ஜோகிப் பயல் ஒருவேளை உண்டு குச்சியாக இருப்பான்; இந்தக் கிருஷ்ணன் வெறும் ஒல்லிப் பயல், பெண் பிள்ளை போல் முகம் சிவக்கிறது’ என்று எண்ணியவண்ணம், கருவிழிகள் நிலைக்க சங்கடத்துடன் பாட்டனாரையே நோக்கி நின்ற பாருவையே பார்த்தான். மறுகணம் அவள் முகம் அதே நோக்குடன் கிருஷ்ணனின் மீது லயித்த போது, ரங்கன் ரோசத்துடன், ‘உன்னை எனக்கு உரியவளாகச் செய்து கொள்ளாமற் போனால் நான் ரங்கனல்ல’ என்று தனக்குள் கறுவிக் கொண்டான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|