உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஐந்தாம் பாகம் 4. ஹில்வ்யூ மாளிகையிலே உதகை ஆனந்தகிரியில் உள்ள ‘ஹில்வ்யூ’ மாளிகையிலே அன்று விசேஷ விருந்தும் கோலாகலமுமாக இருந்தன. வாசலிலே பளபளக்கும் கார்கள் நின்றன. வண்ணப் பட்டுச் சேலை அணிந்த பெண்களும், அழகிய கம்பளிச் சட்டைகளும் சோடுகளுமாய்ச் சிறுவர் சிறுமியரும் வாசல் தோட்டத்திலேயே மாளிகையின் உள்மகிழ்ச்சிக்குக் கட்டியம் கூறினார்கள். கோபாலனின் மனைவி, கிருஷ்ண கௌடரின் மருமகள் ஆண்குழந்தை ஒன்றுக்குத் தாயாகி, மருத்தவமனையிலிருந்து அன்று திரும்பியிருந்தாள். ‘பசுஞ் சோலை’த் தேயிலைத் தோட்டங்களுக்கும் தொழிற் சாலைக்கும் சொந்தக்காரரான பெட்டே கௌடரின் மகள் அவள். அவள் வீட்டைச் சேர்ந்தவர் அனைவரும் வந்திருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கொடி போல் இருந்த விஜயாவின் தாய், அடுத்தடுத்த பிரசவங்களில் உடல் பருத்து சுறுசுறுப்பும் நடமாட்டமும் குறைய, வீட்டின் ஒரு புறம் அமர்ந்து அதிகாரம் செய்யும் எஜமானியாகி விட்டாள். மாளிகையின் கீழ்த்தளத்திலே, அந்த வீட்டில் குழந்தைகளின் கலகலப்பும், உறவினரின் உரையாடலும் நண்பர்களின் மகிழ்வொலியும் கேட்காத நாளே இராது செல்வமும் செல்வாக்கும் பெருகிவிட்டால் நண்பருக்கும் உறவினருக்கும் குறைவு ஏது? மாளிகையின் வலப்பக்கத்தில், ‘ஆனந்தா நர்ஸிங் ஹோம்’ கம்பீரமாகக் காட்சி அளித்தது. மேல்நாடு சென்று விசேஷப் படிப்பில் தேர்ந்து திரும்பிய டாக்டர் அர்ஜுனனிடம், இரண்டு இளைஞர்கள் பயின்று கொண்டிருந்தார்கள். மருமகனின் கவனம் ஒருபோதும் குடும்பக் கவலைகளிலோ, வேறு சச்சரவுகளிலோ திரும்பாமல் இருந்ததில் கிருஷ்ண கௌடருக்குத் தனிப் பெருமையும் நிம்மதியும் உண்டு. விருந்து முடிந்து, பிற்பகல் ஓய்வாக விஜயாவின் தாய், பாட்டி முதலியோருடன் கோபலனின் மனைவி ஜயா, அவள் தாய் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று காலையிலிருந்து, ஜயாவின் தாயின் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தவள் விஜயாதான். நிலவைக் குழைத்து வடித்த மேனியுடன், தோள்களிலே இரு நாகங்களெனப் புரளும் பின்னல்களுடன் அவள் ஓடி ஓடி விருந்தினரை உபசரிப்பதும், கலகலப்பாகப் பேசுவதுமாகத் திகழ்ந்தால். மகனுக்கு அவளை மணமகளாகக் கேட்க வேண்டும் என்பது, கோபாலனுக்குப் பெண் கொடுத்த மாமி மாமனின் விருப்பமாக ஊன்றிவிட்டது. எனவே, அவள் பேச்சைத் துவக்கினாள்; “விஜயாவுக்கு, இந்த வருஷம் கல்யாணம் இல்லையா?” பாட்டி ருக்மிணி, விஜயாவை நோக்கிச் சிரித்துக் கொண்டே, “அவள் அப்பா, அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்” என்றாள். “ஓகோ! மகளும் தம்முடன் இருக்க வேண்டும், மருமகனும் டாக்டராகவே அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ?” “ஆமாம். ஆனால் தாத்தா கல்யாணம் முடித்து விட வேண்டும் என்று தான் இருக்கிறார். இரண்டு மூன்று பேர் கேட்டு விட்டார்கள்” என்றாள் பாட்டி. “விஜயாவுக்கு என்ன விருப்பமோ?” என்று ஜயா நகைத்தாள். அதுகாறும் அந்தப் பேச்சுக்களைக் கவனியாதவளாக, ஏதோ ஒரு பத்திரிகை இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த விஜயாவின் நிலவு முகத்தில் செம்மை படர்ந்தது. “விஜயா என்ன சொல்வாள்? இப்போதைக்கு அப்பாவின் இஷ்டப்படி ‘மெடிகல் காலேஜ்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்கிறாள் தாய். “வந்து கேட்டவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லையாக்கும், அப்படியானால்?” “ஒருத்தன் ஈடு போதாது, குட்டை. இன்னொரு பையனுக்கு நட்சத்திரம் சரியில்லை. இந்த நாளில் படித்த பையன்கள் நிறைய இருக்கிறார்களே; இன்னும் பார்க்கலாமே!” என்றாள் பாட்டி. “விஜயாவை எங்கள் நடராஜனுக்குக் கொடுத்து விடுங்களேன். அமெரிக்கா போகுமுன் கல்யாணம் முடித்து விட வேண்டும்; பிறகு அவளையும் அழைத்துப் போனாலும் போகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சொல்வது போல் படித்த பையன்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏர்வையாகப் படித்த பெண்கள் அதிகம் பேர் இல்லையே!” என்று சிரித்தவள், “என்னம்மா விஜயா? எங்கள் வீட்டு மருமகளா வந்துவிடு” என்றாள், முடிவாக. உடனே நினைவு வந்தாற்போல் தொடர்ந்து, “சாயங்காலம் ‘டென்னிஸ் மாட்ச்’ முடிந்து இங்கே வருகிறேன்” என்றாள் பெருமிதம் தொனிக்க. விஜயா நடராஜனை ‘ஹில்வ்யூ’ மாளிகையிலே ஐந்தாறு முறை கண்டிருக்கிறாள். ‘டெக்ஸ்டைல்’ பி.எஸ்.ஸி படித்துத் தேர்ந்திருந்தான் அவன். நல்ல பருமனும் உயரமுமாக நடுத்தர வயசினனைப் போல் இருப்பான். குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த அவள் சரேலென்று எழுந்து வெளியே சென்றாள். பாட்டி ருக்மிணிக்கு, சம்பந்தி அம்மாளின் விருப்பம் அளவற்ற மகிழ்வை ஊட்டியது. லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கொடுக்கும் எஸ்டேட்கள்; கல்வி கற்றவன், ஏர்வையான வயசுடையவன். உண்மையில் அவர்களாக வந்து கேட்க வேண்டுமே என்றல்லவோ அவள் விரும்பியிருந்தாள்? “என்ன விஜயா வெளியே போய்விட்டாளே!” என்றாள் விஜயாவின் தாய். “கல்யாணப் பேச்சுப் பேசும் போது, எந்தப் பெண் தான் வெட்கப்பட மாட்டாள்?” என்றாள் பாட்டி. மாலை ‘டென்னிஸ் மாட்ச்’ முடிந்து நடராஜன் ‘ஹில்வ்யூ’ மாளிகைக்கு வந்த போது, விஜயா வீட்டில் இல்லை. ‘ஸீஸ’னுக்கு வந்திருந்த கல்லூரித் தோழி ஒருத்தியுடன் படக்காட்சிக்குச் சென்று விட்டாள். பாட்டிக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு புகை பிடித்துக் கொண்டு மாடியில் சாவகாசமாய் உட்கார்ந்திருந்த கணவரைச் சந்திக்க, ருக்மிணி மாடிக்கு ஏறினாள். வயசான காரணத்தால் மாடி ஏறுவதே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. படி ஏறுகையில், யாரோ உள்ளே பேசிய குரல் அவள் செவிக்கு எட்டியது. வாசற்புறம் உள்ள படிக்கட்டு வழியாக மாடிப் பகுதிகளுக்கு வரச் சௌகரியம் இருப்பதால், அங்கு எவர் வருகிறார்கள் என்பதே அநேகமாகப் பெண்களுக்குத் தெரிவதில்லை. வழக்கறிஞரையும் மருத்துவரையும் தேடி வருபவர்கள் எத்தனை எத்தனையோ பேர்! குரல் ஏதோ எப்போதோ பரிச்சயமானது போல் அவளுக்குத் தோன்றியது. மெருகடையாதா, அவர்கள் சொந்த மொழி. போகலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டே அவள் மாடிக் கூடத்துக்கு வந்து விட்டாள். சாம்பல் நிற அறைச் சுவர்கள், சோபாக்கள், தரை விரிப்புக்கள், எல்லாம் புது மெருகழியாத தோற்றம் தந்தன. மின் கணப்பு இதமான கதகதப்புக்காக மூலையில் எரிந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கையில், எதிரே சரிசமமாக உட்காரத் தகுதியில்லாதவன் நான் என்று ஒப்புக் கொண்டு, நிர்ப்பந்தத்துக்காக அமர்ந்திருப்பவன் போல் கூனிக் குறுகி, சோபா நுனியில் அமர்ந்திருந்தான் ராமன். அவன் யார்? ஹட்டியிலிருந்து வந்திருக்கிறானோ? எங்கோ எப்போதோ பார்த்த நினைவு ருக்மிணிக்கு வந்தது. அவளைக் கண்டதும் ராமன் பேச்சை நிறுத்தி விட்டுச் சட்டென்று எழுந்து நின்றான். வணங்கி விட்டு, “நல்லா இருக்கிறீர்களா அத்தை?” என்று விசாரித்தான். “நீ யார் தம்பி? தெரியவில்லையே! ஹட்டிப் பக்கம் வருவதே இல்லை, இப்போதெல்லாம்; வந்தாலும் இந்தக் குழந்தைகளுடன் சரியாய்ப் போய்விடுகிறது, கவனம். மரகதமலையா?” என்றாள் ருக்மிணி. “ஆமாம் அத்தை. நான் ரங்கம்மாக்கா மகன், ஜோகி மாமன் இல்லையா? மூக்குமலை ஹட்டியில்...” என்று விவரம் கூறினான் ராமன். ருக்மிணி ஒரு கணம் அயர்ந்து சிலையாக நின்றாள். பரம வைரிகளான குடும்பத்தைச் சேர்ந்தவனா? இரகசியமாக எதற்கு வந்திருக்கிறான்? என்ன விசேஷம்? “ரங்கம்மா மகனா?” என்றாள் மலைத்தவளாக. “ஆமாம் அத்தை. ஜோகி மாமன் வீட்டிலேதானே இருக்கிறோம்?” என்றான் ராமன். உருண்டையாக மிகுந்த உணர்ச்சியை விழுங்கிக் கொண்ட அவள், “ரங்கம்மா நல்லா இருக்கிறாளா? உனக்கு பெண் கட்டியது எங்கே?” என்றாள். “மஞ்சக் கொம்பையிலே. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் இருக்கிறார்கள். பெரிய பெண் மரகத மலை ஸ்கூலில் தான் பத்தாவது படித்துப் பரீட்சை எழுதியிருக்கிறாள்” என்றான் ராமன். ‘ஓ! அவ்வளவு முன்னேற்றமா?’ என்று எண்ணியவள் போல் ருக்மிணி, “அப்படியா! ரொம்ப சந்தோஷம், என்னமோ, உன் மாமன்மார்களெல்லாம் காணாமலே எரியும் போது, நீ பிரியமாக வந்தாயே; ரொம்ப சந்தோஷம். காபி சாப்பிடவில்லையே?” என்று திரும்பினாள். “இருக்கட்டும் அத்தை. நான் சாப்பிட்டுவிட்டுதான் வருகிறேன்.” “நன்றாயிருக்கிறது! நீ வந்தது எனக்கு முன்பே தெரியாமல் போயிற்று. பகை ஒழிய வேண்டுமென்று நான் தேவரைக் கும்பிடாத நாள் இல்லை. உன் தாத்தா காலத்தில் இரு குடும்பங்களும் ஒன்றாக இருந்த குடும்பங்கள். ஏதோ பகை தீரச் சூசகமாக நீ வந்தாயே! நீ... தோட்டந்தான் பார்க்கிறாயா?” “மாமனின் பூமிதான்; அதுவும் குமரியாற்றுக் காலனிக்குப் போய்விட்டது. நான் அங்கேதான் ஜீப் டிரைவராக இருக்கிறேன்.” “ஏதோ இருக்கட்டும்; இரு, காபி கொண்டு வருகிறேன்” என்று ருக்மிணி கீழிறங்கிச் சென்றாள். “உட்கார் ராமா; ஏன் நிற்கிறாய்?” என்றார் கிருஷ்ணன். ராமன் மீண்டும் கூசியவாறே உட்கார்ந்தான். “பகை இந்தத் தலைமுறையுடன் ஒழிந்து விட வேண்டுமென்று தான் நான் இந்தச் சம்பந்தம் வேண்டுகிறேன். ராமா, ஜோகி என்னைத் தவறாக எண்ணுவது தான் எனக்குப் பொறுக்கவில்லை. அந்தக் காலங்களில், பெரிய பெரிய அரசர்கள், இந்த முறையில் தான் சிநேகமாக இருந்திருக்கிறார்கள். ஜோகி மாமனிடம் நீ இதைச் சொல். ரங்கனின் மகன் படித்து, விஜயாவுக்கு ஈடாக இருந்தால், நான் நிச்சயமாக அந்தச் சம்பந்தத்தை வேண்டுவேன். ஜோகி எங்கள் வீட்டில் பெண் விரும்பி வரும் நாளை நான் எதிர்பார்க்கிறேன் என்று சொல். பாருவிடமும் சொல். நஞ்சன் படிக்க வலிய உன் மூலம் நான் வந்து உதவியது, இம்மாதிரி சுயநல எண்ணத்துக்கு என்று நீ நினைத்தாலும் சரி, கட்சிகள் கூட வேண்டும்; பிளவு நீங்க வேண்டும்.” ராமனுக்கு அதிகமாகச் சிந்திக்கத் தெரியாது; அழகாகப் பேசத் தெரியாது என்றாலும் கைக்குக் கிட்டிய பொருள் நழுவிச் சென்றது போன்ற ஓர் ஏமாற்ற உணர்வில் நெஞ்சம் குன்றியது. எத்தனை நம்பிக்கையும் ஆசையுமாக அவன் தன் மகளை நஞ்சனுக்கு என்று வளர்த்துப் படிக்க வைத்திருக்கிறான்! இவர்கள் மக்களுக்கு நிறையச் சீதனங்கள் கொடுப்பார்கள். வேறு பல தோட்டச் சீமான்கள் பெண் கேட்டு வருவார்கள். அவன் மகளை போயும் போயும் பெரிய மாமன் மகன், தொண்டை கிழியப் பேசும் லிங்கன், மாலையிட விரும்பி வருவான்! முரடன். “ஏன் ராமா உனக்குச் சம்மதம் இல்லையா?” “சந்தோஷம் இல்லாமல் என்ன? மாமனிடம் சொல்கிறேன். ஆனால், ஆனால், எனக்கும் மகள் இருக்கிறாள். நஞ்சனுக்காகவே அவளை வளர்ப்பதாக எண்ணிப் பெருமையுடன் எல்லோரும் ஒப்பியிருந்தோம்.” கிருஷ்ணன் நிமிர்ந்தார்; புருவங்களைச் சுளித்தார்; “அப்படியா? அப்படியா?” பழைய நினைவுகள் அவருள் படலம் படலமாக அவிழ்ந்தன. ஒத்துப் போன இரண்டு உள்ளங்களைப் பிரிப்பதாக அவர் முயற்சி வினையை விளைத்துவிடுமோ? விஜயாவும் நஞ்சனும் அன்று ஒரே வண்டியில் வந்ததும், அவன் பேச்சை எடுக்கையில் அவள் முகம் சிவந்து தனிமையில் நாணியதையும் நினைத்து, எண்ணம் நிறைவேறும் என்றல்லவோ இருந்தார்? இருவரும் தத்தம் மனங்களுடன் வெவ்வேறு விதமாகச் சமாதானம் செய்து கொள்ள முயன்றிருக்கையில் ருக்மிணி காபியும் வடையும் லட்டும் கொண்டு வந்தாள். ராமன் வஞ்சகம் அறியாமல் குடும்பம் பிழைத்தது. நஞ்சனுக்கு டாக்டர் மகள் ஏற்றவள் தான். அந்த மாமன் குடும்பத்துக்கு நல்லது வரட்டும். ஏழையான அவனால், நஞ்சனுக்குத்தான் என்ன செய்ய முடியும்? மனசுக்குத் தேறுதல் கூறிக் கொண்டவனாக, “நான் ஜோகி மாமனிடம் சொல்கிறேன்” என்றான்! சட்டென்று தளையிலிருந்து விடுபட்டவராகக் கிருஷ்ணன் எழுந்தார். “அப்படியா? நஞ்சன் மனசுக்குக் கஷ்டமாக இருக்காதே?” “ஒரே வீட்டிலிருந்து அண்ணன் போல் பழகிய ஆளையா படித்த பெண் கட்டுவாள்?” என்று நஞ்சன் அன்று கேட்ட கேள்வி, ராமனுக்கு நினைவில் வந்தது. அவன் அப்படி நினைத்திருக்கவில்லையோ என்னவோ? “பெரியவர்கள் எண்ணந்தான். அவன் மனசு தெரியாது” என்றான். ஆம், நஞ்சனுக்குச் செல்வாக்கான இடத்திலிருந்து நல்ல பெண் வரட்டும்; அவன் தடுக்கக் கூடாது. “ராமா, அப்படி இருந்தால் உன் மகளுக்கு, எங்கள் வீட்டில் தம்பி அஜ்ஜனுக்குப் பையன்கள் இருக்கிறார்கள். நல்ல பையன்களைப் பார்த்து நான் கட்டுகிறேன். ஜோகி மாமனிடம் சொல்லு; பகை ஒழிந்து ஒன்று கூட வேண்டும்; பிளவு அழிய வேண்டும்.” ராமன் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. உயரமாக அவர் எதிரே நிற்கிறார். எத்தனை உயரம்! எத்தனை உயரமான மாடி! எத்தனை விசாலமான வீடு! இந்த வீட்டின் விசாலத்தைப் போல் மனசு! “நான் வருகிறேன்.” வணங்கி விடைபெற்றுக் கொண்டு அவன் இறங்கினான். முன் வராந்தாவுக்குச் சென்று, அவன் கீழே இறங்கி மறையும் வரை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். ருக்மிணி, காச்மீரச் சால்வை இழைய அருகில் வந்து நின்றாள். “இவ்வளவு நாட்கள் கழித்து, ஓய்ந்தது என்று நினைக்கையில் எங்கே வந்தான் இவன்? பின்னும் வம்பா?” “வம்பில்லை, நம் பகை தீரும் நாள் வந்து விட்டது.” “இப்படித்தான் முன்பு சொன்னீர்கள். வீடு தேடிப் போய்விட்டுத் திரும்பி வந்தீர்கள். அது கிடக்கட்டும். நான் ஒரு நல்ல சமாசாரம் சொல்ல வந்தேனே!” என்றாள் ருக்மிணி. “என்ன சமாசாரம்?” “விஜயா படித்தது போதும். அவள் அப்பா இஷ்டம் என்று இனிப் படிக்க வைக்க வேண்டாம்.” “இதுதானா நல்ல சமாசாரம்?” “இல்லை, ஜயாவின் அம்மா இன்று வாய்விட்டுக் கேட்டாள், நடராஜனுக்கே விஜயாவைக் கொடுங்களென்று. டீ பாக்டரி ஒன்றே போதும். புது மிஷின், ரோலர் எல்லாம் ஐந்து லட்சத்துக்குத் தருவித்து வைத்திருக்கிறார்கள். பையன் சிறு வயசு; அமெரிக்கா போகிறானாம்.” அவள் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் வாயே திறக்கவில்லை. “என்ன பேசாமல் இருக்கிறீர்கள்?” “நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜயாவை நான் மேலே படிக்க வைக்க இஷ்டப்படவில்லை. அவளுக்கு எட்டு வருஷத்துக்கு முன்பே மாப்பிள்ளை நிச்சயித்து வைத்திருக்கிறேன், தெரியுமா?” ருக்மிணி ஏதோ கனவு காண்பது போன்ற பிரமையுடன் அவர் முகத்தை நோக்கினாள். “பையனின் படிப்புச் செலவை யாரும் அறியாமல் நானே ஏற்றுக் கொண்டேன். நம் விஜயாவுக்கு ஏற்ற பையன், அவளுக்கும் தெரியும். குமரியாற்று அணையில் இஞ்ஜினீயராக இருக்கிறான்.” ருக்மிணி திடுக்கிட்டாற்போல், “யார், ஜோகி மகனையா சொல்கிறீர்கள்?” என்றாள். “ஆம். நம் பகை தீர அது ஒன்றே வழி. தேவர் அருளால் நடக்க வேண்டும். நானே ராமனை அதற்குத்தான் வரச் சொன்னேன்” என்று உறுதியுடன் மொழிந்தார் கிருஷ்ணன். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|