உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 9. ஒளி கூட்ட வருவாய்! மச்ச யந்திரத்தைத் துளைத்துப் பாஞ்சாலிக்கு மணமாலை சூட நினைத்து அன்று பாஞ்சாலத்தின் தலைநகரில் அரச குமாரர்கள் கூடிய போது ஏற்பட்டாற் போன்ற ஒரு கோலாகலம், சிறிய மரகதமலை ஹட்டியிலும் அன்று ஏற்பட்டது. கன்னியொருத்தியின் கையைப் பற்ற வேண்டி மூன்று காளைகள் பலப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வேடிக்கையைக் காண முதுகிழவர்களான பஞ்சாயத்தார் மட்டுமின்றி, அறிந்தவர் தெரிந்தவர், சுற்றுப்புறங்களில் கேள்விப்பட்டவர், எல்லாருமே கூடி விட்டார்கள். கரியமல்லருக்கு, பேரப்பையனின் உயர் கல்வியையும் பெருமையையும் குறித்துப் புகழ்பாடிப் பூரிக்க அது ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. வந்து குழுமிய விருந்தினருக்கு உணவளிக்கும் பொறுப்பை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். பாருவின் பாட்டனாருக்கு அன்று இளமை திரும்பி விட்டாற் போல் குதூகலம் உண்டாகியிருந்தது. கன்னிப் பெண்களைக் காணும் போதெல்லாம் உற்சாகத்துடன், “என்ன பெண்ணே! ஐம்பது இளைஞர்களை அழைத்து வா; அவர்களுக்குப் போட்டியாக இந்தக் கல்லைத் தூக்கி உன்னைத் தூக்கிப் போகிறேன்!” என்று வம்புக்கு இழுத்தார், ரங்கனின் தந்தை. விருந்தும் கூட்டமும் கண்ட மகிழ்ச்சியில், கிருஷ்ணன், ரங்கன், ஜோகி ஆகிய மூவர் புகழையும் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார். மூவரும் அவளை அடையத் தகுதி பெற்றவர்களே என்று பொதுவில் பார்ப்பவர்கள் எண்ணும் படியாக, அந்தப் பந்தயத்தைத் தோற்றுவித்த பெரியவர்கள் வித்தியாசமின்றி இளைஞர்களைப் புகழ்ந்தார்கள். பந்தயத் தினத்துக்குள் நடுநடுவே இரண்டு மூன்று தடவைகள் ஹட்டிக்கு வந்து போன ரங்கன், திங்கட்கிழமைப் போட்டிக்கு, ஞாயிறன்று காலையிலேயே பெண்ணுக்கு அளிக்கப் பல பரிசுகளுடன் மரகதமலை வந்துவிட்டான். தன் வலிமையில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களாக அவன் சத்துள்ள உணவென்று முட்டையும் மீனும் இறைச்சியும் உண்டு பாரம் தூக்கிப் பழகுவதையே பொழுதாகக் கழித்திருந்தான். அவன் மனசுக்குள், ‘கிருஷ்ணன் வெறும் சாமையும் அரிசியும் தின்பவன்; மரக்கறி உணவால் உடலில் வலு ஏற முடியாது’ என்பது நம்பிக்கை. ஜோகியை அவன் தங்களுக்கு ஈடாக நினைத்திருந்தால் தானே? ஒருவேளை உணவில் உலர்ந்துவிட்ட ஒல்லிப் பயல்; எனவே வெற்றியைப் பற்றி ரங்கன் சந்தேகமே கொள்ளவில்லை. ‘கிளாஸ்கோ’ மல் வேட்டியும் சட்டையும் குல்லாயும் தரித்து, உற்சாகமாக இருந்த அவன், கல்லைத் தூக்கு முன் ஆவேசம் பெற விலையுயர்ந்த மதுவும் அருந்தச் சித்தமாக வைத்திருந்தான். அவன் எத்தனைக் கெத்தனை நம்பிக்கையுடன் இருந்தானோ அத்தனைக்குக் கிருஷ்ணன் குழம்பினான். பாருவின் காதல் ஒரு புறம்; ஜோகியைப் பற்றி அவன் கூறியதையும் வேர் தந்ததையும் எண்ணிப் பார்த்ததில் ஏற்பட்ட குழப்பம் ஒரு புறம். உண்மையில் ஜோகி பெருந்தன்மையுடன் நடப்பவன் தானா? அல்லது சூழ்ச்சியாக இருக்குமோ? மந்திர தந்திரங்களில் ரங்கனே ஈடுபடுவான் என்று அவன் நினைத்ததற்கு மாறாக ஜோகியல்லவோ ஈடுபட்டுவிட்டான்? மந்திரம் பலிக்கிறதோ இல்லையோ, அது முக்கியமல்ல, அவன் உள்நோக்கம் நல்லதாகத்தான் இருக்குமா? கல்வி கற்று மெருகடைந்து சிந்திக்கத் தெரிந்த அவன்; எண்ணங்களைக் குழப்பிக் கொண்டதனால் அகன்ற நெற்றியில் அடிக்கடி சுருக்கங்கள் விழுந்து மறைந்தன. நெஞ்சத் தெளிவு இல்லையேல் முகமலர்ச்சி ஏது? துள்ளும் உற்சாகம் ஏது? பாரு பேதை; குறும்பனின் வேரில் முழு நம்பிக்கை வைத்து தனக்குச் சமமில்லை என்று இறுமாப்புடன் நடந்தாள். அன்று காலையிலேயே அவர்கள் கிராமம் முழுவதும் வேடிக்கை காண அநேகமாக மரகதமலைக்கு வந்துவிட்டதென்று சொல்லலாம். அந்த வைபவத்தைக் காண ஆதவனும், இளந்தூற்றலுடன், இதமாக வீசிய காற்றுடன் வானில் உதயமாகிப் பவனி வந்தான். தெய்வ மைதானத்தில் கூடக் கூடாது , காணக் கூடாது என்ற கன்னியர் மட்டுமே அங்கே காணாதவர். ஜோகி, தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முன்னிரவு உபவாசம் இருந்து, காலையில் முழுகி, நெற்றியில் நீறும் சந்தனமும் அணிந்து ஒளிக்கீற்றைப் போல் அவையில் நுழைந்தான் அவன். தந்தையும் அந்த வைபவத்தைக் காண முன் வரிசையில் அமர்ந்திருந்தார். குறிப்பிட்ட நேரம் வந்ததும் பாருவின் பாட்டனார் எழுந்தார். “சபையோர்களே கதைகளிலேதான் அரசகுமாரிக்குச் சுயம்வரம் நடத்தப்பட்டதாக நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று ஒரு கன்னிப் பொண்ணுக்காக, இவ்வளவு மக்கள் கூடியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நான் வேடிக்கையாகத்தான் அன்று ‘கல்லைப் புரட்டுகிறவன் பெண்ணுக்கு உரியவன்’ என்றேன். அது உண்மைப் போட்டியாக கோலாகலம் ஆகிவிட்டது. இந்தப் போட்டி விதிகளை நானே கூறிவிடுகிறேன். கல்லைப் புரட்டி கைகளில் தூக்கி நிமிர்ந்து இரண்டடி முன்னால் வரவேண்டும்; பஞ்சாயத்தார் பார்க்க வேண்டும். அதன்றி நடுவில் கீழே வைத்தாலோ, பூமி இடிக்கக் கல்லைத் தூக்கி வந்தாலோ, போட்டியில் தவறியவராகக் கருதப்படுவார்கள். ஒருவராலுமே இந்தச் சாதனையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் எவன் கல்லை அதிக உயரம் தூக்குகிறானோ அவனே வென்றவனாகக் கருதப்படுவான். இந்த நிபந்தனைகளை நம் இளைஞர்கள் மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார். சபையில் ஆரவாரம் எழுந்து ஆமோதிக்கப் பெற்று அடங்கியதும், அவர் முதல் முதலில் ஜோகியை அழைத்தார். எல்லோருடைய விழிகளும் நோயால் நலிந்து உட்கார்ந்திருந்த தந்தைக்கருகில் நின்ற ஜோகியின் மீது பதிந்தன. ஜோகி முன் வந்து தலைப்பாகையை எடுத்து வைத்து விட்டு, இறைவனையும் சபையினரையும் பஞ்சாயத்தாரையும் வணங்கினான். மனசிலுள்ள எண்ணத்தைப் போலியான வேகத்தாலும் விறைப்பாலும் மறைத்துக் கொண்டான். உண்மையிலேயே கன்னியைக் கைப்பிடிக்க ஆவலுடையவனைப் போல் மைதான மூலையில் பள்ளத்தில் பதிந்தாற் போல் இருந்த கல்லை நோக்கி நடந்தான். தெய்வ மைதானத்துப் பக்கம் செல்லக் கூடாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பு; உற்சாகம். சற்று எட்ட நின்றவர், எம்பிப் பார்ப்பவர், ஓடி வந்து அவ்வப்போது மாமன் வீட்டுப் புறமனையில் அமர்ந்திருந்த பாருவைக் கேலி செய்துவிட்டு ஏதேனும் செய்தி கூறிச் செல்பவர் என்று, கலகலப்பையும் சிரிப்பையும் கூட்டிய வண்ணம் இருந்தனர். தனியே பரபரப்பைக் காட்டாதவளாக, பெண்களின் கேலிகளுக்கும் பரிகாசங்களுக்கும் முகம் சிவப்பவளாக, காதலனின் வெற்றியையே நெஞ்சில் கொண்டு அவள் நின்றாள். படபடவென்ற கைத்தட்டல், ஆரவாரம் சிரிப்பு, மைதானத்தின் பக்கத்திலிருந்துதான் வந்ததென்று அறிந்த பாருவின் நெஞ்சு படபடத்தது. “யாரோ? யாரோ?” என்ற பீதி துடிக்க, கவலை படர வாயிலில் எட்டிப் பார்த்த போது, ஒருத்தி கேலிக்குரலுடன் அவளிடம் வந்தாள். “முதலில் ஜோகியண்ணன் தான் போனார்; அவர் எடுத்துவிட்டார்...” என்று சிரித்தாள். “ஆ!” குரல் வெளிவரவில்லை. முகம் கறுத்தது; விழிகள் நிலைத்தன. அதற்குள் இன்னொருத்தி புதுச் செய்தியுடன் பாய்ந்து வந்தாள். “ம்... ஜோகியண்ணன் எடுக்கவில்லை. கிருஷ்ணன் அண்ணன் தான் போகிறார்” என்று அவள் காதில் போட்டுவிட்டுப் பின்னும் வேகமாகப் போனாள். அப்பா! ஒரு மலை இறங்கி விட்டது. ஜோகியண்ணன் எடுக்கமாட்டார். கோயிலில் பணி செய்தவர், பொய் கூறுவாரா? கழுத்தில் அணிந்திருந்த மணிச்சரத்தில் கயிறு கட்டி, அதில் வேரை இணைத்து நெஞ்சுக்கு மேலோடு உடுத்திருந்த முண்டில் செருகியிருந்த அவள், அதை நினைத்து தெய்வத்தை வேண்டிக் கொண்டாள். அவளாக அவன் நடந்து செல்வதையும் எப்போதோ சிறுமியாக அவள் பார்த்திருந்த உருண்டைக் கல்லை மெல்லப் புரட்டுவதையும் கற்பனை செய்து கொண்டாள். ஏற்கனவே, பெண்மை தோய்ந்த மென்மையான தோற்றமுடைய அவனுக்கு முகம் சிவக்கிறது; நெற்றி நரம்பு புடைக்கிறது. கல் அவன் கைகளுக்கு வந்துவிட்டதா என்ன? படபடவென்ற கைத்தட்டல்களும் கூச்சலுமாக ஆரவாரம் இல்லை; உண்மையில் கைத் தட்டலில்லாத ஆரவாரந்தான் எழுந்தது. வாயில் முற்றத்தில் ஒருத்தி கூட அவளுக்குச் செய்தி கூற நிற்கமாட்டாளா? அவள் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, வெட்கம் விட்டு வாயிலில் எட்டிப் பார்த்தாள். உண்மையில் கிருஷ்ணன் கல்லைத் தூக்கி விட்டானா? இல்லை, அந்தக் கல் அவன் பலத்தை உண்மையாகவே சோதித்துக் கொண்டிருந்தது. புத்தக ஏட்டைப் புரட்டிய அவனுடைய மென்கரங்களில், பத்து நாட்களில் கல்லைத் தொட்டதும் உறுதி வந்துவிடுமா? அன்றைக்கென்று கைகளில் உரம் எப்படி வரும்? ஆனால், ஜோகியின் உள்ளம் கபடற்றது என்று நிரூபணமாகி நின்ற பின் காதலியின் உறுதியில் தான் அவன் முயன்று கொண்டிருந்தான். முகம் பிழம்பாக, மூச்சுத் திணற, நெற்றியில் முத்தான வேர்வை துளிர்த்துவிட, அவன் இருகைக்குள்ளும் அந்தக் கல்லை அடக்கி விட்டான். ஓர் அங்குலம்; ஒரு சாண். ‘பலே பலே, கிருஷ்ணா!’ என்ற உற்சாகத் தூண்டுதல்களும் ஆரவாரமும் கூச்சலும் காதைப் பிளக்கின்றன. கல் உயருகிறது; ஆனால் கல்லைச் சுமந்த இடுப்பு, வளைந்தது வளைந்தபடியே நிற்கிறதே! கால்களை அந்தப் பாரம் நசுக்குகிறதே! மூச்சை இரு கொடுங் கைகள் பிணிக்கின்றனவே! இதென்ன? காதலா? போட்டியா? சூழ்ச்சியா? உயிரை இறுக்கும் சோதனையா? இந்தச் சோதனையில், படித்து மெருகடைந்த கிருஷ்ணன் உயிரை விடப் போகிறானா? ஐயோ, பேதைமை! இவ்வுலகில் ஒரு கன்னியின் காதல் அத்தனை உயர்வானதா? ‘இல்லை... ம்... அடைந்தே தீருவேன்.’ வளைந்த இடுப்பு, கல்லுடன் நிமிரவில்லை. கை நிமிர்ந்து நழுவவிட்டது கல்லை. “ஐயோ!” என்று கரியமல்லர் அலறியபடி ஓடி வந்தார். கல் பள்ளத்தில் நழுவிப் பதிந்து விட்டது. கரியமல்லர், கிருஷ்ணனைத் தன் மீது சாத்திக் கொண்டார். கூட்டம் பதறி அவர்களைச் சூழ்ந்தது. நீரைத் தெளிப்பவரும், என்ன என்ன என்று பதறியவர்களுமாக ஒரே கலகலப்பு. கிருஷ்ணன், விருக்கென்று எழுந்தான். “எல்லாரும் போங்கள். ஒன்றும் இல்லை தாத்தா” என்று ரோசமும் அவமானமும் அழுத்தும் முகத்தினனாக அப்பால் சென்ற போது, ரங்கன் கடகடவென்று சிரித்த குரல் கேட்டது. ‘பெண் பிள்ளை போல் விழுந்து விட்டான், கையாலாகாதவன்’ என்று இகழ்ச்சிக் குறி தோன்ற அவன் பார்த்த பார்வை, ஜோகிக்கே வெறுப்பை ஊட்டியது. ஆரவாரத்தை அடக்கி விட்டு பாருவின் பாட்டனார், ரங்கனைக் கடைசியாக அழைத்தார். அரங்கில் இன்ன நடந்தது; நடக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் பாருவின் உள்ளம் விளக்குச் சுடராகத் துடித்தது. அத்தனை பேரும் வெட்கமின்றி அவளைத் தனியே விட்டுச் சென்று விட்டார்களே! அவள் இன்னுயிர் அன்பன் வென்றானா? இல்லையா? தோல்வியானாலும் வெற்றியானாலும் அந்நேரம் தெரிந்திருக்குமே! ‘போட்டியும் வேண்டாம், பந்தயமும் வேண்டாம். நான் இசைபவர் அவரே, மற்றவரைப் போகச் சொல்லுங்கள்’ என்று அவள் சொல்லி இருக்கலாகாதா? அவள் விருப்பத்தை வெறுக்கவோ, எதிர்க்கவோ எவருக்கும் தகுந்த காரணமில்லையே! விளையாட்டாகப் பேசிய பேச்சு, அவள் வாழ்வைப் பந்தயப் பொருளாக்கி விட்டதே! ஆனால், அவள் விருப்பம் பலிக்கும்; குறும்பன் வேர் பொய்க்காது. அப்படித் தோல்வி காண்பதாக இருந்தால், ஜோகியாக ஏன் குறும்பனிடம் பரிகாரம் வேண்டி வேர் பெற்று வரவேண்டும்? எல்லாம் தேவர் நினைப்பில் நடப்பவை. ஆகா! ஒரே கூச்சல், கரகோஷம். அவள் உள்ளம் துள்ளியது. தோழிகள் ஓடோடி வந்தனர். “கல்லைத் தூக்கியவர் கடைசியில் அந்த அண்ணன் தான்.” “நான் தான் முதலிலேயே சொன்னேனே?” “எனக்கு அப்போதே தெரியும்.” விஷயத்தை நேராகச் சொல்லாமல் இன்னும் எதற்கு இவர்கள் மனசைத் துடிக்க வைக்கிறார்கள்? “பாரு இனிமேல் பணக்காரி” என்றாள் ஒருத்தி. “பணக்காரி மட்டுமல்ல; ஒத்தைக்குப் போகும் சீமாட்டி” என்றாள் மற்றவள். அத்தையும் ஜோகியண்ணனும் ஈயாடாத முகத்துடன் வருகிறார்களே! ஜோகியண்ணன் முகத்தில் கொஞ்சங்கூட மகிழ்ச்சியின் சாயை இல்லையே! பந்தயத்தில் வெற்றி மாலை சூடியவர் யார்? “யாரடி?” என்றாள் பாரு, நெஞ்சு துடிக்க. “அந்தப் பெயரைக் காது குளிரச் சொல்லடி!” என்று கலீரென்று சிரித்து, அவள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள். இந்த அமளியில், நீலமும் மஞ்சளுமாக இணைக்கப் பெற்ற மாலை அணிந்து, கண்களில் வெற்றிச் சிரிப்புக் கெக்கலி கொட்ட ரங்கன் அவர்கள் இருந்த வீட்டை நோக்கி ரங்கம்மை, தந்தை முதலியோர் சூழ வந்தான். அவளுக்குக் குறும்பன் தந்த வேரோடு நெஞ்சு பகீரெனப் பற்றிக் கொண்டாற் போல் இருந்தது. மோசக்காரப் பாவி, ஜோகி. ரங்கனுக்காகவா சதி செய்தான்? நயவஞ்சகன். மணிக்கல்லட்டிக்கு உடனே ஓடி விட வேண்டும் போல் உடல் பறந்தது அவளுக்கு. ஆனால் கால்கள் துவள, அங்கேயே சோர்ந்து உட்காரத்தான் அவளால் முடிந்தது. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|