மூன்றாம் பாகம்

8. மண்ணின் பெருமகள்

     கடுங் காய்ச்சல் அடித்த பின் நாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்கும் சுரணை வந்து, புது இரத்தம் பிடிக்கும் உடலைப் போல், இயற்கையன்னை, கடும் பனிக்குப் பிறகும், பச்சை பிடிக்கலானாள்.

     மிதிக்கும் திருநாள் நடத்திப் பூமி திருப்புவதில் எல்லோரும் முனைந்தார்கள். வெளியேறியிருந்த குடும்பத்தினர் திரும்பி வந்து சுண்ணாம்பும் காரைமட்டு வீடுகளைப் புதுப்பித்தார்கள். ஐயன் கோயிலுக்குப் புதுப் பூசாரி வந்து விட்டான். இம்முறை உள்ளூர் ராமியின் மகனே பூசாரியாக நியமனமானான்.

     காலத்தைப் போல் மனப்புண்ணை ஆற்றவல்லவர் எவர் உண்டு? மாதி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டாள். ரங்கம்மை கூட, இறந்த குழந்தைகளை மறந்து விட்டாள். அந்தக் காலதேவரின் அறையின் அதிர்விலே மூளை கலங்கி விட்டாற் போல் ஓய்ந்தவள் பாருதான். சோறில்லாமல், நீரில்லாமல், தலைவாராமல் உட்கார்ந்து ஏக்கப் பெருமூச்சிலே இரவும் பகலும் தெரியாமல் கழித்தாள்.

     ரங்கன் தேயிலை பயிரிடத் தொடங்கிய பிறகு, ஒத்தைப் பக்கம் கிழங்கு விளைவிக்கும் பூமி குத்தகை எடுக்கச் செல்லவில்லை. மரம் அறுக்கும் குத்தகை எடுத்திருந்தான். சீமை உரம் வாங்கி, ஜோகியின் விளை நிலங்களில் கிழங்கும் கோசு வகைகளும் கோதுமையும் பயிரிட உதவி புரிந்தான். வீட்டிலே, அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர் எவரும் இல்லை.

     தந்தைதாம் உறங்கியே ஓய்ந்துவிட்டாரே! முன்போல இசை ஏது? நடனம் ஏது? சடங்கு ஏது? சம்பிரதாயம் ஏது? இரண்டாண்டுக் காலத்திலே சமுதாயமே மாறிவிட்டதே! பெரும்பான்மையான இடங்களில் கோத்தரைச் சேர்ப்பதே அநாகரிகம் என்றல்லவோ, இசையையே ஒதுக்கி விட்டார்கள்.

     தந்தை தாம் ஓய்ந்து போனார்.

     பாரு! மனைவி, அவனை ஏறெடுத்துப் பார்த்தாளா? அவள் முகத்தில் மலர்ச்சியே மாய்ந்துவிட்டது. தங்க ரேக்கான மேனி நிறம் மங்கிவிட்டது. கண்களைச் சுற்றிக் கருவளையம் விழ, கன்னத்தெலும்பு முட்ட, உதடுகள் வறண்டு வெடிக்க, அவன் கனவு கண்டு மணந்த பாருவா அவள்? வாலிபர்களின் மனத்தில் ஒரு காலத்தில் சலனத்தைத் தோற்றுவித்த பாருவா?

     சூதும் போதையுங் கூட மற்ந்து, போட்டி வெறியிலே, பச்சையை விளைவித்துப் பணத்தைப் பெருக்க அவன் திட்டமிட்டிருந்தான். அத்தகையவனுக்கு அன்று பாருவைக் காண்கையிலே இரக்கம் உண்டாயிற்று.

     கன்னிப்பருவத்திலே அவள் கருத்தை வைத்தவனிடமிருந்து பிரித்து அவளை மனைவியாக்கிக் கொண்டானே, உண்மையில் காதலோடு, அவனுடன் அவள் இணைந்து வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாட்கள்?

     இன்னும் புது மணம் புரிந்த மங்கை போல், குழந்தைக் குறுகுறுப்பும் யௌவனத்தின் மினுமினுப்பும் குன்றாமல், கணவன் தன்னை நோக்கும் போதெல்லாம் நாணித் தாழும் விழிகளை உடையவளாய், சுறுசுறுப்புடன் கிரிஜையை அவன் காணவில்லையா? ஜோகி, அவளைக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்! இருவரும் சேர்ந்து மண்ணில் வேலை செய்கையில், இன்னமும் சிரிக்கவும் கண்கள் பளபளக்க நோக்கவும் அவர்களுக்குப் புதுமை அழியாமல் இருக்கிறதே!

     அங்கே வந்து நெருங்கிப் பழக ஆரம்பித்த பின்புதான் அவனுக்கு அதுவரை தோன்றாத எண்ணங்களெல்லாம் தோன்றின. மனைவி பற்றிய ஆற்றாமை புதிதாக உரைத்தது.

     கிரிஜையிடமும் ஜோகியிடமும் அவன் கண்ட சிறப்புக்களில் ஓர் அம்சங்கூடப் பாருவிடம் நெருங்கி வாழ்ந்த புதுமண நாட்களில் காணவில்லை. அவள் கண்களில் விள்ள முடியாத இரகசியங்களையோ, சிரிப்பிலே அவனைச் சிலிர்க்க வைக்கக் கூடிய கவர்ச்சியோ ஒருநாள் கூட அவன் காணவில்லை. அவர்களுடைய இல்லற வாழ்வின் பயனாக உதித்த செல்வங்களை, இறைவன் வளர்ந்தும் வளராமலும் எடுத்துக் கொண்டான். ஆனால் பனிக்காலத்தில் பட்ட மரம், வசந்தம் வந்ததும் தளிர்க்கவில்லையா? பூக்கவில்லையா?

     “பாரு, ரங்கம்மா இல்லையானால், எனக்குச் சாப்பாடு வைக்கக் கூடாதா? குளித்து முழுகிச் சுத்தமாக இருக்கக் கூடாதா?” என்றான்.

     அவன் குரலில் ஆதுரம் இருந்தது.

     அவள் சூனியத்தில் லயித்தபடி அவனுக்குச் சோறு படைத்தாள்.

     ரங்கம்மையின் மகன் வந்து உட்கார்ந்தான். மூத்தவனான அவனுக்குப் பதினைந்து பிராயம் இருக்கும். கவடில்லாத இளம்பிள்ளை; மாமனுக்கு உதவியாகத் தோட்டத்துக்குப் போய் முண்டனாக உழைக்கக் கற்று வரும் பையன். காரோட்டக் கற்க வேண்டுமென்பது அவனுடைய ஆசை. குடும்பம், கலகலப்பு இரண்டும் அவனுக்கு வேண்டும்.

     வட்டிலில் ஒருவருக்குள்ள அளவே பாரு சோறு வைத்திருந்தாள்.

     “என்ன ராமா? உட்கார், ஏன் பார்க்கிறாய்?” என்றான் மாமன்.

     “இல்லை, மாமி என்னை மறந்துவிட்டார்கள். ஜயாவும் லட்சுமியும் போன பின்பு நான் அவர்களுக்குப் பொருட்டாகத் தோன்றவில்லை. மாமி, நீங்கள் இனிமேல் பெண் பெற்றுத் தந்தாலும் நான் கட்டுவேன். என்னை மறந்து விடாதீர்கள்” என்று சிரித்தான் அவன்.

     மாமியிடம் தனியான பிரியம் அவனுக்கு உண்டு. அவளுடைய சோகம் சூழ்ந்த முகத்தை மலர வைக்கும் முயற்சியில், அவன் தினமும் பேசித்தான் பார்க்கிறான். ஆனால் அவள் அவற்றுக்கெல்லாம் அப்பால் இருந்தாள். தன் எல்லை வரையிலும் வருவதற்கு எவர்க்கும் சக்தி இல்லை என்பதுபோல், தான் வகுத்துக் கொண்ட கோட்டைத் தாண்டியே வருவதில்லை.

     “என்ன மாமி, பேசாமல் இருக்கிறீர்களே? உங்கள் பூமியில், மாமன் கால் வைக்கக் கூட நான் சம்மதிக்கவில்லை. நீங்கள் இப்போது எனக்குச் சோறு வைக்க மறந்தது இருக்கட்டும். பூமியை மறந்து விட்டீர்களே! முள்ளுச் செடிகள் முளைத்து விட்டன. இத்தனை வருஷத்துக்குப் பிறகு, பாவம் அவையும் முளைக்கட்டும் என்று விட்டீர்களா?” என்றான் பையன்.

     குழம்பை ஊற்ற வந்தவளுக்கு, மண் என்ற பேச்சைக் கேட்டதும் திடுக்கிட்டாற் போல் கை அதிர்ந்தது.

     ஆம் அவள் சோகத்தில் உயிருக்கு உயிரான மண்ணைக் கூட மறந்தாளே! காற்றும் நீரும் போல் அவள் வாழ்விலே கலந்திருந்த மண்ணை மூன்று நான்கு மாத காலமாக மறந்து விட்டாளே? சென்ற தடவை, ஒன்றுக்கு ஒன்பதல்லவா அவளுக்கு அந்த மண் வாரி வழங்கியிருந்தது?

     ஏதோ ஒரு மயக்க நிலையிலிருந்து அவள் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டாற் போல் பரபரத்தாள். அப்போதே கைப்பாத்திரத்தை நழுவவிட்டு ஓட வேண்டும் போல் மனசில் பதற்றமும் உண்டாயிற்று.

     “பார்த்தீர்களா மாமா? மண் என்றதும் மாமிக்குப் பரபரப்பு வருகிறது. கவலைப்படாதீர்கள் மாமி, நான் முள்ளுச் செடிகளை வெட்டி, முள் போட்டுத் திருப்பியிருக்கிறேன். மாமி, அதில் ஓர் ஆரஞ்சு மரம் வையுங்கள் உங்கள் கையால்” என்றான் மருமகன்.

     பாருவுக்கு உடனே அந்தக் கருப்பு மண்ணின் நினைவு ஓடியது. உடனே, “நல்ல கன்றாகக் கொண்டு வைக்க வேண்டும். எனக்கு நிசமாகவே ஆரஞ்சு வைக்கும் ஆசை வெகுநாட்களாக” என்றாள்.

     உடனே ரங்கன், “ஒன்றென்ன, பத்துப் பதினைந்தே வைப்போம். நல்ல சீனி போல் இனிக்கும் ஒட்டுக்கன்று நான் வாங்கி வருகிறேன்” என்றான்.

     “ஒன்று போதும்” என்றாள் பாரு.

     “அந்தப் பழத்தை உங்கள் மகள் எனக்கு உரித்துக் கொடுப்பாள்; இல்லையா மாமி” என்று சிரித்துக் கொண்டே ராமன் கைகழுவச் சென்றான்.

     ரங்கன் மலர்ந்து சிரிக்கையில் பாரு, “என் மகளல்ல, உன் மாமன் மகள்” என்றாள் சிரிக்காமலே.

     ரங்கன் உண்டு புகை குடித்துச் சிறிது நேரம் வெளிப்பக்கம் சென்றிருந்தான். பின்பு புறமனைக்கு வந்தான்.

     ரங்கம்மை, குழந்தைகள், புருஷன், எல்லாரும் உள்மனையில் படுத்து உறங்கி விட்டனர். ராமன் நடு வழியில் கட்டை போல் குறட்டை விட்டான். கவடில்லாத பையன். கூச்சமின்றி மாமியிடம் கேலி மொழிந்தான்.

     அவள் உன் மாமன் மகள் என்றாளே! என்ன பொருள் அதற்கு? அவளுக்கு மனைவியாக நடந்து கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா? இல்லையா? மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்த ரங்கம்மை அதை மறந்தே போய்க் கணவனுடன் நெருங்கிச் சிரித்துப் பேசி மகிழ்கிறாள். குழந்தைகளே பெறாத கிரிஜை, அலுத்துக் கொள்ளவில்லை.

     அவள் என்ன நினைக்கிறாள்?

     பலவிதமான போதைகளுக்கும் பழக்கமான அவன் உள்ளம் நினைத்த மாத்திரத்தில் சீறி சினந்தது.

     எழுந்து படுத்தவர்களைத் தாண்டிப் பின்புறம் வந்தான். அடுப்படியில் சாக்கு விரித்திருந்தது. தடித்த கம்பளி ஒன்று இருந்தது.

     பாரு படுக்கவில்லை. உட்கார்ந்திருந்தாள்.

     இருளில் அவள் முகம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், வாழ்விலே ஏமாற்றம் கண்ட தனி உருவமோ? சோகத்தின் தனிச் சிலையோ?

     சினந்து சீறி வந்தவனின் உடலில் சிலிர்ப்பு ஓடியது.

     முதல் முறையாக அவன், தான் அவளுக்குத் தீங்கிழைத்து விட்டானோ என்று நினைத்தான். முரட்டுத்தனமாக பூவான அவளைக் கசக்கி விட்டானோ என்ற எண்ணத்துக்கு முதல் முதலாக அவன் நெஞ்சம் இடம் கொடுத்தது.

     இந்த எண்ணம் தோன்றியவுடன் பல உண்மைகள் அவனுள் முட்டின. அதே வீட்டில், அவனுடைய சிற்றன்னை தந்தையிடமிருந்து பிரிந்து போய்விடவில்லையா? அவன் நட்புக் கொண்டிருக்கும் கௌரி கணவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கவில்லையா? பாரு ஏன் அவ்விதம் நடக்கவில்லை? அந்த வீட்டை விட்டு அவள் பிரிந்து போகும் விருப்பத்தைக் கூடக் காட்டவில்லையே! கிரிஜையேனும் ஜோகியுடன் அடிக்கடி மணிக்கல்லட்டிப் பிறந்தகத்துக்குச் செல்வாள். இவள் ஏன் செல்வதில்லை?

     பாரு, சாதாரணமாக அவன் பார்க்கும் பெண்களைப் போன்றவள் அல்லள். மனைவியிடம் நிறைவு காணாதவனாக வேறு மங்கையை நாடிச் செல்லும் அவனைப் போன்றவளும் அல்ல அவள். பின்?

     அபாண்டமாகத்தானே அவன் கிருஷ்ணனின் மீது விரசமாகப் பழி சுமத்தினான்! அவன் நெஞ்சுக்குத் தெரியும், பாருவின் தூய்மை குறித்து.

     பாருவை எப்படி நினைத்தாலும் அவனால் அவள் மீது நெஞ்சாரக் களங்கம் நினைக்கும் துணிவில்லை. வழிகள் இருந்தும் அவள் நெறி நிற்பவளே.

     ஆனால், ரங்கன் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, அடிமேல் அடி வைத்து, அவளருகில் சென்று அமர்ந்தான்.

     தலையில் வட்டில்லை. அரை முண்டும் போர்வையுமாக குந்தியிருந்தவளுக்குத் திடுக்கிட்டாற் போலத் தூக்கி வாரிப் போட்டது. இருளிலே வஞ்சகமாக எவரேனும் வந்திருப்பாரோ என்ற அதிர்வோ?

     மெல்ல அவள் காதருகில் குனிந்து, “நான் தான் பாரு. நீ இப்படி எதற்காக வருத்தம் காக்கிறாய்? இதோ பார், பாரு” என்று அவள் கையை மெல்லப் பற்றினான்.

     “வேண்டாம்” என்றாள் அவள். அவன் பிடியில் இருந்த கையின் அசைவு கண்டு, அவள் உடல் அதிர்ந்து குலுங்கியது அவனுக்கு புரிந்தது.

     “என்ன வேண்டாம் பாரு? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவே. மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்த ரங்கம்மை மறக்கவில்லையா?” என்றான். அவனுக்கே குரல் தழுதழுத்தது.

     அவள் அவன் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறவில்லை. எங்கோ நோக்குபவளாக, “நீங்கள் கௌரியைக் கட்டிக் கொள்ளுங்கள்” என்றாள்.

     “பாரு!”

     “உண்மைதான். அடுத்த மாதத்துக்குள் அவளை அழைத்து வந்துவிடுங்கள்.”

     “இதெல்லாம் என்ன பாரு?”

     “நீங்கள் கௌரியை நாடிப் போவது நிசந்தானே?”

     அவன் தயங்கினான்; தடுமாறினான்; பிறகு ஒப்புக் கொண்டான்.

     “பாரு? உனக்கு அதனால் கோபமா? உனக்கு இந்த வீட்டிலிருக்க விருப்பமில்லையா பாரு?”

     “நான் அப்படியா சொன்னேன்?”

     “பின், எனக்கு விளங்கவில்லையே?”

     “எனக்கு அந்த மண் போதும் வாழ்வுக்கு.”

     “நான் கௌரியை விலக்க வேண்டுமென்றாலும் விலக்கி விடுகிறேன். நீ ஏன் இப்படிப் பேசுகிறாய் பாரு? என்னை உன் முன்பு இன்று குற்றவாளியாக உணருகிறேன், பாரு.”

     “இல்லை, நான் தான் குற்றவாளி. பிறர் எருமைகள் நிறையப் பால் தந்தால், பிறர் பூமி பசுமையாக விளைந்தால், பொறாமைக் கண்களுடன் காண்பது பாவம் என்று நம் பெரியோர் சொல்வார்கள். நான் பிறர் வாழ்வைக் கண்டு பொறாமைப் பட்டேன். பிறர் மக்களைக் கண்டு பொறாமைப்பட்டேன். என் குழந்தைகளை மாரித்தாய் எடுத்துக் கொண்டாள். நான் இனியும் குழந்தை வேண்டுமென்ரு ஆசைப்பட்டால், பொறாமையும் வரும். என் ஆசை மீறிப் போகும் போதெல்லாம் தெய்வம் அடித்து விடுகிறது. எனக்கு இனி ஒன்றும் வேண்டாம். கௌரியைக் கூட்டி வாருங்கள்.”

     “பாரு!”

     அவனுக்கே அவன் குரல் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.

     “நான்... நான் அறியாமல் உன் மனசைக் கசக்கி எறிந்து விட்டேன். நீ இவ்வளவு மென்மையுள்ளவளாக இருப்பாய் என்று அறியாத முரடனாக இருந்து விட்டேன். என்னை வெறுக்கிறாயா பாரு? இவனால் என் வாழ்வு கெட்டது என்று வெறுக்கிறாயா பாரு?”

     அவன் மனசின் ஒரு மூலையிலும் மென்மை இல்லை என்பது பொய். அவனாலும் ஒரு கணமேனும் தன்னை வெல்லும் கீழ்த்தர உணர்வுகளை ஒதுக்கிப் பேச முடியும் என்பதைப் புரிந்து கொண்ட அவள் பார்வை ஒளி வெள்ளமாகத் திகழ்ந்தது.

     “நான் உங்களை ஏன் வெறுக்கிறேன்? நீங்கள் முறையில்லாமல் என்னைக் கட்டினீர்களா? பல பேர் அறியப் பந்தயத்தில் வென்றீர்கள்; என்னை உரிமையாக்கிக் கொண்டீர்கள்.”

     “ஆனால் பந்தயம் என்னால் ஏற்பட்டதுதானே?”

     “கடந்து போனதை ஏன் நினைக்கிறீர்கள்? தலைவிதி என்று ஒன்றில்லை?” அவளுடைய கைகள் இரண்டையும் அவன் சேர்த்துக் கொண்டான். ஆத்திரமா, கோபமா, பச்சாத்தாபமா என்பது அவனுக்கே புரியாமல் படபடப்பு உண்டாயிற்று.

     “பாரு, என்னை விரும்பி ஒருநாள் கூட நீ சந்தோஷமாக இருந்ததில்லையே?” தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் துடித்த இருதயத்தின் குரல் அது. கிருஷ்ணனை வெற்றி கண்டதாக அவன் அதுவரை தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தானா? அவள் காதலோடு தன்னிடம் வாழவில்லை என்பது ஒன்றே போதாதா? ஒரு வேளை இதை உணர்ந்துதான் அந்தக் கிருஷ்ணன் வெற்றியுடன் எக்களிக்கிறானோ?

     பொறாமையின் ஆதிக்கத்திலுள்ள மனத்துக்கு, இன்ன வழியில் தான் சிந்தை செல்வது என்ற தெளிவு ஏது?

     “இதையெல்லாம் இப்போது ஏன் கேட்கிறீர்கள்? நாம் நேற்றுத்தான் மணம் புரிந்து கொண்டோமா?” என்றாள் பாரு.

     “நான் கேட்டதற்குப் பதில் சொல். இவனோடு வாழ்ந்தது போதும் என்று நீ விலக விரும்புகிறாயா? எனக்கு மனைவியாக வந்தும் என்னை ஏமாற்றி விட்டாய். கடனே என்று இந்த வீட்டிலே நீ பாசமின்றி வாழ்வாய். அப்படித்தானே?”

     அவன் குரலில் வெறியின் சூடு ஏறியது.

     கண்கள் நீரைச் சிந்த, “என்னை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? தெரிந்து கொண்டு ஏன் குத்துகிறீர்கள் நெஞ்சை?” என்றாள் பாரு.

     “பழிகாரி!” என்று அவள் கைகளை உதறிவிட்டு அவன் எழுந்தான். புறமனையில் வந்து படுத்த அவனுக்கு ஆத்திரமும் கொந்தளிப்பும் அடங்கவில்லை.

     அவன் கெஞ்சியும் கரைந்தும் கூட, அவனுடைய பொறாமை வசப்பட்ட உள்ளம் சற்றேனும் பொய்யாறுதல் கொள்ளக் கூட, அவள் இதமாகப் பேசவில்லை. கல் நெஞ்சுக்காரி!

     துடிதுடித்த நெஞ்சுடன் நெருப்பைக் கிழித்துக் கொண்டு தானியப் பெட்டியைத் தேடிப் போனான்; பெட்டிக்குள் புதைத்து வைத்திருந்த மதுப்புட்டியை எடுத்தான். தோல்வியை மறக்க மதுவருந்திய அவன், மறுநாளே கௌரியை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டான்.

     மறுநாள் காலையின் உதயத்தை, பாரு அந்த வீட்டுக்குள்ளிருந்து வரவேற்கவில்லை. குளிர்ந்த மண்ணின் ஸ்பரிசம் கால்களின் வழியே பாய்ந்து உடலைச் சிலிர்க்கச் செய்ய, கீழ்த்திசையில் பொங்கி வந்த கதிர்ச் செல்வனைக் கண்டாள்.

     புது நம்பிக்கை; புதிய ஒளி; புது வாழ்வு!

     தன்னை மறந்து விளைநிலத்தில் நின்றவள் இரு கைகளாலும் மண்ணை வாரினாள்.

     இதுவே என் உயிரின் சாரம்; வாழ்வின் இன்பம்; மண், என் அம்மை, என் குழந்தை, எல்லாம் இதுவே. என்னை இது வஞ்சகம் செய்யாது! தீயும் நோயும் இதை என்னிடமிருந்து பிரிக்க முடியாது; பிடுங்கி விட முடியாது; என் மண்.