உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 4. மரகதமலை கரித்தது “நிறுத்துங்களடா, பேடிப் பயல்களா? யாரடா அது?” தம் கைக்கம்பைச் சுற்றிக் கொண்ட கிருஷ்ணன் நாற்புறமும் இருபது வயது இளைஞனைப் போல் பாய்ந்தார். தபதபவென்று ஆட்கள் புதர்களினின்றும் வெளிப்பட்டாற் போல் ஓடினார்கள். “பாரு அடிப்பட்டதா? போக்கற்ற பயல்கள்! பெண் பிள்ளையை அடிக்கிறார்களே! இந்த மரகதமலைக் கிராமம் இவ்வளவு கேவலமாகவா ஆக வேண்டும்? பாரு!” ஆதரவுடன் அவர் குனிந்து அவளை எழுப்பு முன், டார்ச் அடித்துக் கொண்டு ஓர் உருவம் அங்கு வந்தது. டார்ச் ஒளியை, அவர் மீது அடித்து, அந்த உருவம் சிரித்த போது அவர் திகைத்து நின்றார். “ஓகோ! ஊருக்குப் பெரிய கிருஷ்ண கௌடர் தானா?” அந்த ஏளனச் சிரிப்பு, பாருவின் செவிகளில் நாராசமாகப் பாய்ந்தது. ரங்கனின் மூத்தமகன், லிங்கன் அவன். “பெரிய மனிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து பார்க்கக் கூடாது. இருந்தாலும் விறகுக்குப் போய்வரும் பெண் பிள்ளையை மடக்கிப் பயமுறுத்தி...” பாரு பாய்ந்து திரும்பினாள், “லிங்கா! என்ன இது?” “என்னவா? பெரியம்மா, உங்களுக்கு இது அவமானம் இல்லை? ஏளனம் இல்லை? பெரிய மனிதனாம்! ஒரு பெண் பிள்ளையை ஆள் வைத்து அடித்து நிர்ப்பந்தப்படுத்தி நிலத்தைப் பறித்துக் கொள்ள முயல்வது; நாங்கள் அப்பன், பாட்டன், சிற்றப்பன், பிள்ளைகள் அத்தனை பேரும் சும்மா இருப்பதா? இவன் வரும்போதே எனக்குச் சந்தேகம் தட்டி நான் ஒளிந்து வந்தேன். நான் வராமல் போனால் என்ன ஆகியிருக்குமோ? வாருங்கள், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?” பாருவின் கையைப் பிடித்து லிங்கன் விசுக்கென்று இழுத்தான். அவனுடைய முரட்டுத்தனமுள்ள கரங்களுக்குள், வாழ்வின் பசுமை எல்லாம் வற்றிய அவள் கை சிக்கியது. “இல்லை லிங்கா; அடிக்க வந்தது யார் என்று தெரியவில்லை.” “யாராக இருக்க முடியும்? செல்வாக்கின் திமிரில் நம்மை விரட்டிப் பார்க்கிறான். இவ்வளவு பெரிய மலையில் பள்ளிக்கூடம் கட்ட இடமா இல்லை? என்ன நயவஞ்சகமாக உங்களை அங்கே நிற்க வைத்து, ஆட்களை ஏவி அடிக்கச் சொல்லியிருக்கிறான்?” பாருவுக்குப் பொறி கலங்கிவிட்டாற் போல் குழப்பம் உண்டாயிற்று. நச்சுப் பாம்பில்லாத மரகதமலையிலே அவள் புருஷன் ஒரு நச்சுப் பாம்பு போல இருப்பதை அவள் அறிவாள். நச்சுப் பாம்பின் குட்டியா இந்த லிங்கன்? கிருஷ்ணன் எங்கே? இந்த நேற்றுப் பயல் எங்கே? அங்கு நின்றால், இனி ரசாபாசமன்றோ? லிங்கனின் வாய் அந்தக் கிருஷ்ணனை, அவரைச் சேர்ந்தாரை, அவர் குடும்பத்தாரை, ஏசி இகழ்ந்து பொலபொலத்துக் கொட்டியது. கடவுளே! நீயே உண்மையை அறிவாய்! கிருஷ்ணன் நன்மையல்லவோ செய்ய வந்தார்? அவன் மகன் படிக்கப் பள்ளிக்கூடம்; அவளுக்குப் பொன் விளையும் கறுப்பு மண். கணவன் என்ற தொடர்பை அவள் எப்போதோ விட்டு விலக்கி விட்டாளே! லிங்கன் கையைப் பிடித்து அவளை இழுத்துக் கொண்டு ஹட்டிக்குள் நுழையுமுன் அவன் நா மொழிந்த வசை மொழிகள் எல்லோரையும் வாயிலுக்குத் தள்ளி வந்துவிட்டன. பாரு குன்றிக் குறுகி, கடுகிலும் கடுகாய்ச் சிறுத்துவிட்டாள். “யார்? பெரிய வீட்டிலா? அடித்தானா? பாரு அக்காளா?” என்பன போன்ற கிசுகிசுத்த குரல்கள். நெஞ்சில் உள்ளதை உதட்டுக்குக் கொணர அஞ்சும் நிலை அந்த ஹட்டியிலே நிலவி வெகு நாட்கள் ஆகிவிட்டனவே! ரங்கன் பாய்ந்து வந்தான்; “ஏரா, லிங்கா?” துடிதுடித்த விளக்குச் சுடர்போல் பாருவின் நெஞ்சு படபடத்தது. அக்கிரமத்துக்கு ஓர் எல்லையே இல்லையோ? நஞ்சன் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான். ரங்கன், மகன் தூண்டிய ஆத்திரத்தில், ஆவேசம் வந்தவனாக ஆடினான். “இந்த அநியாயத்தைப் பார்த்து விட்டுச் சும்மா இருப்பதா? செய்யும் அக்கிரமத்தையும் செய்துவிட்டுப் பள்ளிக்கூடமாம், நன்கொடையாம்!” “இதை அப்படியே விடலாமா அப்பா?” என்றான் மகன். “ஏன் விட வேண்டும்? டாக்டரிடம் காயமென்று சர்ட்டிபிகேட் வாங்கி, கோர்ட்டில் போடுவேன், அவன் மானம் கப்பலேறச் செய்வேன்?” என்றான் ரங்கன். “பாழாய்ப்போன கோட்டுப் பற்றி எரியட்டும்!” என்றாள் பாரு. “கட்டிய கணவன் வீட்டுக்குத் துரோகம் நினைப்பவளே!” என்று சீறினான் ரங்கன். “அப்பா பெரியம்மா அவன் வஞ்சத்தை அறியாமல் பேசுகிறார்கள்” என்றான் லிங்கன். “வெட்கக் கேடு! என் வீட்டில் இருந்து கொண்டு நீ துரோகியாகிறாய். போய்விடுவதுதானே?” என்று கத்திய ரங்கன், “ஜோகி ஜோகி” என்று அழைத்தான். ஜோகி அங்கு இருந்தால் தானே? பாரு ஒரு விநாடி அமைதிக்குப் பிறகு, “போகிறேன்; என் பிள்ளையை அழைத்துக் கொண்டு இந்த மண்ணை உதறிவிட்டுப் போகிறேன்” என்றாள் கண்கள் துளும்ப. அட்டகாசமாகச் சிரித்தான் அவள் கணவன். “ஓ! பிள்ளையா? யார் பிள்ளை? இந்த வீட்டுப் பிள்ளை, இந்தக் குடும்பத்தை விட்டுப் போகிறவளுடன் வருவானா?” அவள் ஈட்டி பாய்ந்து தடுத்தாற் போல் அமைந்து நின்றாள். நஞ்சன் அந்தக் குடும்பத்துப் பிள்ளை. அவள் பிள்ளையா அவன்? கிரிஜை பெற்றாலும், பிரிந்து செல்பவர்களுக்குத் தன் மக்களே சொந்தம் இல்லையே! நஞ்சன் அவள் மகன் அல்லன். அந்த வீட்டுக்குச் சொந்தம். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைத்தால் தான் நஞ்சன் அவளுக்குச் சொந்தமாக முடியும். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைக்க வேண்டுமானால், அவள் தன் முன் நிற்கும் கணவனைச் சொந்தமாக நினைக்க வேண்டும். “ஏன் வாய் அடைத்து விட்டாய்? நீ இந்த வீட்டில் இருப்பதனால், என் சொற்படி கேட்க வேண்டும். அந்தத் துரோகிப் பயலுக்கு உடந்தையாக இருப்பதானால், போய் விடு!” பாரு என்ன பேசுவாள்? எதைச் சொல்வாள்? “இன்று பெண்பிள்ளையை ஆள் வைத்து அடித்தான். நாளை பிள்ளையையே கடத்திச் செல்வான்!” இந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் உள்ளம் சில்லிட்டது. பாம்பின் கால் பாம்பு அறியும். குற்றங்களைச் செய்பவனுக்கே எதிரி அதைச் செய்வானோ என்று தோன்றும். கிருஷ்ணனின் ஆட்கள் அவளை அடிக்க வந்திருக்க மாட்டார்கள்; அது முழு உண்மை. ஆனால் என்ன? அவள் கணவனே ஆட்களை ஏவி அதைச் செய்வான். பொய்ச் சாட்சிகள் ஜோடிப்பான். அவள் அவன் சொல்லுக்கு மீறினால், அவள் கண்ணான பையனுக்கு ஏதேனும் தீங்கு செய்தாலோ? பையன் அவள் கணவனுக்குச் சொந்தமா? ஜோகியண்ணனின் மீது கூடத்தான் அவனுக்குப் பொறாமை உண்டு. அதையும் சேர்த்துப் பழி வாங்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? அவள் விதிர்விதிர்த்துப் போனாள். கைகள் அவளையும் அறியாமல் நஞ்சனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. “என்ன பேசாமல் நிற்கிறாய்? போய் விடுகிறாயா வீட்டை விட்டு?” அச்சத்தால் முகம் வெளிற, அவள் ஓய்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். ரங்கன் இன்னும் விட்டுவிடவில்லை. “அவன் பக்கம் உடந்தையாக இருப்பதில்லை என்று இப்போது மாரியம்மன் சாட்சியாக அடித்துச் சொல்.” பாருவின் கண்களில் நீர் பெருகிற்று. பையனின் பால் வடியும் முகத்தைப் பார்த்துக் கொண்டு, அந்த உயிரின் உயிருக்கு ஒரு கேடும் வரக்கூடாது என்ற அச்சத்தில் மூழ்கியவளாக அவள் அவனிடம், “மாரியப்பன் சாட்சியாகக் கிருஷ்ணன் பக்கம் உடந்தை அல்ல” என்றாள். “அப்படியானால், இப்போது அவன் ஆள் வைத்து, உன்னை வஞ்சகமாக அழைத்து வரச் செய்து, பயமுறுத்தி நிர்ப்பந்தமாகப் பூமியைக் கேட்டான்; உன்னை அடித்தான்.” “ஈசுவரா! பொய் வழக்குக்கு ஒப்பவில்லை என்றால் அவள் உடந்தையா?” பாரு சடேரென்று அவன் கால்களில் விழுந்தாள். “உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஒரு காலத்தில் மண்ணோடு மண்ணாகிவிட்ட காலத்திலே அவனை நான் மணக்க நினைத்தது உண்மைதான். ஆனால், இப்போது அது எரிந்து சாம்பலாகிவிட்ட நினைவு. அந்தச் சாம்பல் கூடக் கண்ணில் பெருகிவரும் நீரில் கரைந்து விட்டது. என்னை விட்டு விடுங்கள். அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்தப் பிள்ளையைத் தவிர, இந்த உலகில் வேறு யாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னை வம்புக்கும் வழக்குக்கும் இழுக்காதீர்கள்.” வாயிற்புறம் நின்ற ஜோகி, நெஞ்சைப் பிடித்த வண்ணம் அந்தக் காட்சியைக் கண்டார். எங்கோ சென்றவர், மேலே பாதையிலுள்ள நாயர் கடையில் ஏதேதோ பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். எப்பேர்ப்பட்ட ரணத்துக்கும் சீழுக்கும் மருந்து வந்து விட்ட மகிமையை நாயர் பேசிக் கொண்டிருந்தார். மேலை நாட்டினர் உலகில் கண்டுபிடித்துச் சாதித்தவற்றுக்கெல்லாம் காரணம், அவர்கள் உண்ணும் புலாலுணவே என்று உச்சன் விவாதித்துக் கொண்டிருந்தான். ஹட்டிக்குள் லிங்கன் சத்தமிட்டுக் கொண்டே பாருவை அழைத்து வந்த கலவரம் அங்கு எட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்திருந்த ஜோகி, கண்ட காட்சி! முன்னேற்றம் வந்திராத நிலையிலே அவர்கள் ஹட்டியிலே என்ன மேன்மை குறைந்திருந்தது? உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இருந்ததா? உன் நிலம் என் நிலம் என்று காய்ந்தார்களா? ஒருவர் பட்டினி கிடக்க ஒருவர் கொழித்ததுண்டா; ஒரு வீட்டில் வாழ்வோ தாழ்வோ வந்தால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுண்டா? அத்தனை மேன்மைகளையும் அழித்தது எது? சாமையும் தினையும் கொறளியும் பாலும் போதா என்ற காலம் வந்தல்லவோ எல்லாவற்றையும் அழித்தது? கிழங்கும் தேயிலையும் கொண்டு வந்த பணமல்லவோ அழித்தது? சட்டையும் சராயும் புகுந்த நாகரிகமல்லவோ அழித்தது? பொன்னும் பட்டும் புகுத்திய மோகமல்லவோ அழித்தது? இவை எல்லாவற்றுக்கும் மரகதமலை ஹட்டியிலே முன்னோடியானவர் யார்? கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டுமா? ரங்கனுங்கூடத்தான். இருவரும் சேர்ந்து, ஹட்டியை உறிஞ்சும் விஷப் பூச்சிகள் போல் ஆகிவிட்டனர். படிக்கும் பையன்கள் இன்னும் பணமாகக் குவிப்பார்கள். ‘கோர்ட்’டென்றும், வழக்கென்றும் அந்தப் பணத்திமிரால் பகையை வளர்ப்பார்கள். பாரு, பண்பும் அன்பும் பணிவும் உருவாகத் திகழும் அண்ணி, அசூயை உருவான அவன் காலில் விழுந்தாள். அசூயையை எப்படி வெல்வது? கண்களில் நீர் துளும்ப, ஜோகி அந்தக் காட்சியைப் பார்ப்பவராக நின்றார். தன்னை அப்படி வெற்றி காண முயலும் அவளை அப்போது என்ன செய்வதென்று ரங்கனுக்குப் புரியவில்லை. “ஏன் இப்படி அழுது மாய்கிறாய்?” “வம்பும் வழக்கும் வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்.” “சனியன் பிடித்தவளே!” ரங்கன் உதைத்து விட்டு, ஜோகியையும் பாராமல் வெளியேறினான். பாரு உள்ளே பையனை அணைத்தவளாய், விம்மலை அடக்கும் முயற்சியில் சாய்ந்திருந்தாள். ரங்கம்மையும் மருமகளும் குழந்தைகளும் கலவரத்தைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை; படுத்து முடங்கி விட்டார்கள்; தீபமாடத்தில் ஒளி இல்லை. ராமன் லாரி ஓட்டிக் கொண்டு சென்றிருந்தான். அண்ணன் தம்பி ஒற்றுமை பகைமைக்குத்தானா? வெகுநேரம் சென்ற பின்னரே, படுக்க ஏதேனும் கம்பளி எடுக்க உள்ளே சென்றார் ஜோகி. இருளில் சிலை போல் பாரு தென்பட்டாள். அவள் உறங்கவில்லை. வாழ்விலே விதி என்னும் வல்லோன் குறுக்கிட்டு எப்படியெல்லாம் புகுந்து புறப்பட்டும் பிரித்தும் கூட்டியும் கொடுத்தும் பிடுங்கியும் விளையாடுகிறான்! “அண்ணி!” ஆண்டாண்டுகளாய் இன்பம் துன்பம் பட்டு முதிர்ந்தாலும் அந்த ஆதரவுக் குரலிலே அவள் பேதையாகி விட்டாள். “ஜோகியண்ணா!” விம்மல் உடைத்து துயரம் கரை காணாமல் பெருகியது. “குழந்தை நஞ்சனுக்கு ஒன்றும் வராதே, ஜோகியண்ணே?” “மனசு தளராதீர்கள். பாலும் தேனுமாகி வாழ்ந்த நாளிலே இந்த மலைமண் எனக்கு இனித்தது. புளிப்பேறிவிட்ட இந்த நாளிலே மலைமண் கரிக்கிறது; கசக்கிறது.” அவர் அப்படிப் பேசப் பேச, அவள் குலுங்கிக் குலுங்கிக் கண்ணீர் விட்டாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|