முதற் பாகம்

8. விடுதலை ஓட்டம்

     வானம் சோவென்று கொட்டித் தீர்க்கும் என்ற அளவில் அடைக்கருக்கல் இட்டிருந்தது. ஒரே கணத்தில் பளீரென்று சூரியன் உதயமானால் அந்த மலைப் பிரதேசம் எப்படி ஒளிருமோ, அப்படி ரங்கனின் இருதயத்தில் கவிந்த ஏக்கக் கவலைகள் கரைந்து, அவன் உடலிலும் உள்ளத்திலும் அளவற்ற சுறுசுறுப்பை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி. பத்து நிமிஷ நேரத்துக்குள், தான் பிறந்து வளர்ந்து பழகிய மரகத மலையை விட்டு, கனவு கண்ட ஒத்தை நகரை எண்ணி, எவரும் போகாத பக்கத்திலுள்ள ஒத்தையடிப் பாதையில் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இடுப்பில் முழுசாக இருந்த இரண்டு வெள்ளி ரூபாய்களும், மூன்றே காலணாச் சில்லரையும் அவனுடைய ஓட்டத்துக்கு உயிரான வேகம் கொடுத்தன. ‘ஐயோ!’ என்று வீட்டார் அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிய போது, பால்மனைக்குள் ஒரு கலத்துக்குள் பட்டுப்பை ஒன்றில் சிற்றப்பன் சேமித்து வைத்திருந்த பத்து ரூபாயிலிருந்து எடுத்த வெள்ளி ரூபாய்கள் அவை. கட்டவிழ்ந்ததும் ஓடும் கன்று போல் அவன் திரும்பிப் பாராமலே, வழியை நோக்காமலே தான் ஓடினான். டீ எஸ்டேட்டைக் கடந்ததும், மலை, காடு!

     எந்த மலை? எந்தக் காடு?

     ரங்கன் அந்தப் பக்கத்தையே இதுவரையில் அறிந்திருக்கவில்லை! கானகத்துள் ஒற்றையடிப் பாதையாகத் தென்பட்ட இடத்தில், இளங்கால்கள் கல்லிலும் முள்ளிலும் குத்த, வேகமாக ஓடினான். ஆங்காங்கே குறும்பரோ கோத்தரோ தென்பட்டால் அவன் அஞ்சிப் பதுங்கிப் பின்பு சென்றான். மலை ஒன்றின் மேல் ஏறி அவன் சுற்றும் முற்றும் பார்த்த போது, சூரியன் இருந்த திசை கொண்டு, மரகத மலை எந்தப் பக்கம் இருக்கிறது, தேவர்பெட்டா எங்கே தெரிகிறது என்பதை அறிய முடிந்ததே தவிர, வண்ண விசித்திர ஒத்தை நகர் வண்ண மயிலைப் போல் அவன் கண்முன் விரிந்து கிடக்கவில்லை.

     இருதயம் படபடக்க, அந்த மலையையும் கடந்து, ரங்கன் ஓட்டமாக ஓடினான். சிறு துணியில் அவன் முடிச்சிட்டு வந்திருந்த களியும் பொரி உருண்டையும் வெல்லமும் குலுங்க, பின்னும் ஒரு மலைச்சரிவில் வந்து நின்றான். கீழே ஒரு ஹட்டி இருந்தது. நெஞ்சத் துணிவு மாய்ந்தது. கால்கள் பின்னிக் கொண்டன. எவரேனும் தெரிந்து கொள்வார்களோ? அது என்ன ஹட்டியோ? அவனுக்கு உறவினரோ, சிற்றப்பனுக்குத் தெரிந்தவரோ இருந்துவிட்டால்?

     ஹட்டியின் அருகில் செல்லாமலே அவன் மீண்டும் இறங்கிக் கானக வழியில் புகுந்தான். இளம் உள்ளத்தில் கிலியை ஊட்டும் விசித்திரமான ஒலிகள் அவனுக்குக் கேட்டன.

     “இரிய உடை ஈசரே, இன்று என்னைப் பத்திரமாகச் சேர்த்து விடுங்கள். என்னை ஒத்தையில் கொண்டு சேர்த்து விடுங்கள்” என்றெல்லாம் ‘இரிய உடையார் இல்லை’ என்று மறுத்த உள்ளம், அந்த இக்கட்டான நிலையில் பாவங்களை மன்னிக்கச் சொல்லி இறைஞ்சியது.

     புதர்களிலும் பாறையின் பக்கங்களிலும் புலி ஒளிந்திருக்குமோ என்ற கிலி அவனுக்கு உண்டாயிற்று. வெகுதூரம் பல காடு மலைகளைக் கடந்து அவன் ஓடிய பிறகு, திக்குத் திசை தெரியவில்லை. மரகத மலையோ, தேவர் பெட்டாவோ அவன் கண்களில் படவில்லை. கழுகு மூக்குப் போன்ற பாறையுடன் ஒரு மலைதான் அவனுக்கு முன் இப்போது தெரிந்தது. இளங்கால்கள் நோவ, அந்த வனாந்திரத்தில் நிர்க்கதியாக வந்து நின்ற அவன் கண்களில் நீர் பெருகியது.

     “ஐயனே, நான் பொன்னுடன் திரும்பி வந்து உங்கள் கோயிலுக்கு நான்கு எருமைகள் விடுவேன். என்னைக் காப்பாற்றும்!” என்று வாய்விட்டுக் கதறினான். சிறிது தேறி, ஒரு வேளை இரவுக்குள் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ என்ற நினைவுடன், பொரி உருண்டையைத் தின்று கொண்டே நடந்தான்.

     பொழுது தேயும் சமயத்தில், அந்தக் குன்றின் உச்சியில் அவன் நின்று பார்க்கையில், அவன் உள்ளத்தில் தெம்பு பிறந்தது. வளைந்து சென்ற குன்றுகளின் நடுவில், பசுமையான புல்வெளி; வளைவான குறுகிய பொந்து போன்ற வாயில்களுடன் ‘கணக்’ புல்லால் வேயப் பெற்ற குடிசைகள்; ஒரு புறம் கல் கட்டிடமான கோபுரம்; இன்னொருபுறம் எருமை மந்தைகள் நிற்கும் கொட்டடி.

     தொதவர் மந்து! மனிதவாடை தெரியாத கானகத்திலிருந்து, மக்கள் குடியிருப்பைக் கண்டுவிட்ட தைரியத்தில் அவன் அந்த மந்தையை நோக்கி நடந்தான். புதுக்குளி அணிந்த பூசாரி அருவித் துறைக்குப் போய் வரும் வழியில் அவனைச் சந்தித்தான்; உற்றுப் பார்த்தான். ரங்கனுடனேயே நடந்தான்.

     தொதவன் அவன் மொழியில் ரங்கனை ஏதோ விசாரித்தான். ரங்கனின் நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. மறுமொழியின்றி நேராக நடந்தான். குடிசை ஒன்றின் வாசலில் வந்து உட்கார்ந்தான். அந்தக் குடிசை வாசலில் கம்பளி போர்த்த கிழவி ஒருத்தியும் இளைஞனான ஒருவனும் அமர்ந்திருந்தனர். ரங்கனுடன் வந்த பூசாரி அவர்களைப் பார்த்து ஏதோ பேசினான். குடிசைக்குள்ளிருந்து வெண்ணெய் பளபளப்பு மின்னும் திரிக்கப்பட்ட கூந்தலையுடைய அழகி ஒருத்தி வந்தாள். சற்றைக்கெல்லாம் அங்கே கூட்டம் அவனைச் சுற்றிக் கூடிவிட்டது. அவர்களுடைய மொழியில் என்ன என்னவோ கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.

     ரங்கன் மறுமொழியே பேசவில்லை. ஓடி வந்த களைப்பு. துணி முடிப்பிலிருந்து களியையும் வெல்லத்தையும் எடுத்துத் தின்னத் தொடங்கினான்.

     ஒரு கிழவன் அருகில் வந்து அவன் தலையை நிமிர்த்தி.

     “ஹட்டியிலிருந்து வருகிறாயா? எங்கே வந்தாய்?” என்று அன்புடன் ரங்கனின் தாய்மொழியில் வினவினான்.

     “எனக்கு ஒத்தை. அண்ணனுடன் ஹட்டிக்கு வந்தேன். எனக்கு மணிக்கல்ஹட்டி. அண்ணன் முன்னே போய்விட்டான். நான் ஒரு ஒத்தைக்குப் போக வேண்டும். வழி தவறி விட்டது” என்று பொய்யை நிசமாக நடிக்கையிலே அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

     “வழி தானே தவறியது? போகட்டும், காலையிலே ஒத்தை போகலாம்” என்று கிழவன் ஆதரவாக அவனை சமாதானம் செய்தான்.

     அன்றிரவு அவர்களின் இளம் விருந்தாளியாக இருந்து, ரங்கன் சாமைச் சோறும் நெய்யும் உண்டு, அந்த அடக்கமான குடிசையிலே உறங்கிய பிறகு, காலைக் கதிரவனுடன் தன் ஒத்தைப் பிரயாணத்தைத் தொடங்கச் சித்தமானான். உடன் ஒரு தொதவ வாலிபன் துணை வர, கதிரவன் உச்சிக்கு வருமுன்பே ரங்கன் ஒத்தையின் எல்லையை அடைந்தான்.

     வளைவாக மலைகளைச் சுற்றியும் குறுக்கே பிளந்தும் ஓடும் சாலைகளின் அழகைச் சொல்ல முடியுமோ? மேட்டிலும் பள்ளத்திலும் எத்தனை எத்தனை கட்டிடங்கள்! சிலுவை உச்சியுடன் தோன்றும் மாதா கோயில் கோபுரத்தைக் கண்டு ரங்கன் அதிசயித்தான். அதுவும் தொதவர் கோயில் போலும்!

     தெருக்களில் எத்தனை துரைமார்கள்! பளபளக்கும் டாங்கா வண்டிகள்; நிமிர்ந்து ராஜநடை போடும் குதிரைகள்; தலைப்பாகை அணிந்த மக்கள்; நாய்களைப் பிடித்துக் கொண்டு செல்லும் துரைசானிகளின் ஒய்யாரந்தான் என்ன! முள்ளுப் பழம் போன்ற உதடுகளும், ஒரே வெள்ளைமேனியுமாய் அவர்கள் தெய்வப் பிறவிகள் போலும்!

     துணை வந்த தொதவனிடம், “எனக்கு இனிமேல் போகத் தெரியும்” என்றான் ரங்கன்.

     “இனி இப்படித் தனியாக வராதே” என்ற பொருள்பட நோக்கிவிட்டு, அவன் பாதையில் இருந்த கடை ஒன்றில் நின்றான்.

     ரங்கன் பார்த்தது பார்த்தபடி திறந்த வாயுடன் அதிசயித்து நின்றான். தெருக்களில் சுற்றினான்; ‘பொட்டானிகல்’ நந்தவனத்து ரோஜாச் செடிகளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். கவர்னர் மாளிகை வாசலில் நின்ற மெய்காப்பாளர்களையும் குதிரைகளையும் எட்ட நின்று அச்சம் தோய எட்டிப் பார்த்தான். பின்னும் நடந்தான். கடைவீதியில் லாலாவிடம் காலணாவுக்கு மிட்டாய் வாங்கி ஆவல் தீர ருசித்துத் தின்றான். இரவு நெருங்கும் வரையில் இவ்விதம் சந்தைக் கடைகளின் அருகில் திரிந்தான்.

     இரவு கடும்பனி பெய்யுமே எங்கே முடங்குவது? மேலாடையை இறுகப் போர்த்துக் கொண்டு, ஒரு கடை வாசலில் சுருட்டிக் கொண்டு அன்றிரவு உறங்கினான். மறுநாள் சந்தையில் ஒரு கூடை வாங்கி வைத்துக் கொண்டான். காயும் கறியும் முட்டை மீன் வகைகளும் வாங்க அங்கே வரும் வெள்ளைக்காரச் சீமான் சீமாட்டிகளைச் சுற்றி “கூலி கூலிஸார், கூலி!” என்று கூவிக் கொண்டு வர, அவன் ஒரே நாளில் பழகிவிட்டான்.

     முதல்நாளே இரண்டணாச் சம்பாதித்தான். அதனால் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காசு! ஹட்டியில் காசைக் கண்ணால் பார்க்க முடியுமோ? வெறும் சாமைச் சோறு, களி!

     அவன் வெறுப்புடன் உதடுகளை மடித்துக் கொண்டான். கோயம்புத்தூர்ப் பக்கத்திலிருந்து அந்த மலையில் பிழைக்க வந்த மூதாட்டி ஒருத்தி ஆப்பம் சுட்டு விற்றாள். தம்படிக்கு ஒன்று. ஆறு ஆப்பங்கள் காலை வேளையில் அவன் பதிவாகச் சென்று தின்று வரலானான். அவனுடைய சம்பாதனையில் ஹட்டியில் காணாத என்ன என்னவோ தின்பண்டங்களைத் தின்ன முடிந்தது.

     அப்போது பனிக்காலமாதலால் உருளைக் கிழங்கும் இலைக்கோசும், பூக்கோசும், களைக்கோசும், முள்ளங்கியும் சந்தையில் வந்து குவிந்திருந்தன. வெள்ளைச் சீமான்கள் வந்து அந்தக் கடைகளைச் சுற்றி வரும்போதெல்லாம் எல்லாக் கடைக்காரர்களும், தங்கள் சரக்குகளின் நயத்தையும் அருமையையும் கூறிக் கூறிக் கூவுவார்கள். வியாபாரம் அவர்களிடந்தான் அநேகமாக ஆகும். கூடை சுமந்து, கூலி வேலை செய்த ரங்கனுக்கு, அந்தச் சந்தையில் சுப்புபிள்ளையின் சிநேகம் கிடைத்தது. கோழி முட்டைகளும், பூக்கோசு, இலைக்கோசுகளும் அவன் கூடையில் வியாபாரத்துக்குக் கொண்டு வருவான். அவசரமாகப் படிக்குப் பாதியாகப் போட்டுவிட்டுப் போய்விடுவான். ஒரு நாள் ரங்கனே அவனுடைய பத்துப் பூக்கோசுகளையும் இருபது முட்டைகளையும் விற்று, அவனிடம் பணத்தைக் கொடுத்தான்.

     ரங்கனுக்கு உடல் வணங்கி மண்ணோடு இயைந்து உயிர் வாழும் நாட்டமே இல்லை. வெள்ளிப் பணம் சம்பாதிக்கும் ஆசை அவனுக்கு விழுந்து விட்டது. அவனுக்கு வியாபாரத் திறமையும், காலை முக்காலாக்கிப் பிழைக்கும் சாமார்த்தியமும் இருந்தன. இந்தக் குணத்தைச் சுப்புப் பிள்ளை கண்டு கொண்டான்.

     வற்றல் காய்சி எடுபிடிப் பையனாக, மேஜர் துரை பங்களாவில் சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு வந்த சுப்புதான் சுப்புப்பிள்ளையாக, அரண்மனை போன்ற பங்களாவில் குதிரைக்காரர், குசினிக்காரர், நாய்க்காரர், பட்லர், ஆயா முதலிய பணியாளரின் படைக்கே தலைவனாகும் நிர்வாகத் திறமையை அடைந்திருந்தான். துரை வீட்டு நிர்வாகத்திலே அவன் பிழைத்து திண்டுக்கல்லிலுள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்பி, ஒத்தையில் வீடொன்றும் வாங்கிவிட்டானென்றால், அவனுடைய சாமார்த்தியத்துக்கு அத்தாட்சி தேவையில்லை அல்லவா? துரை பங்களாத் தோட்டத்தில் காய்கள் பயிராகும். ஜாதிக் கோழிகளின் பண்ணை ஒன்று இருந்தது. அவற்றை ஒரே கணக்காக வைத்துக் கொண்டு, பெருகுவதை அவ்வப்போது பணமாக்கும் முயற்சியில் அவனுக்கு ரங்கனைப் போல் ஒரு பையன் தேவையாக இருந்தான். நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கு மேல் பையன் சம்பாதித்துத் தந்தால் ஒரு நாளைக்கு அவனுக்கு ஓரணாக் கொடுக்கக் கூடாதா? அந்த ஓரணா இரண்டணாவையும் மிச்சம் பிடிக்க, சுப்புப்பிள்ளை ஒரு வழியைக் கையாண்டான்.

     “வண்டுச்சோலையில் தான் என் வீடு இருக்கிறது. நீ மாலையில் வீட்டுக்கு வந்துவிடேன். இரவில் உனக்குச் சாப்பாடு தந்துவிடுகிறேன்” என்றான்.

     ரங்கனுக்குக் கசக்குமா? துரை பங்களாவிலிருந்தே அந்தப் பங்கையும் சுப்புப்பிள்ளை பெற்று வந்துவிடுவான். சாமைச் சோற்றுக்குப் பின் ஆப்பமும் மிட்டாயும் புளிக் குழம்பும் அரிசிச் சோறும் ருசித்த ரங்கனுக்கு, துரை பங்களாவில் தயாராகும் புலால் உணவின் ருசியும் பழக்கமாயிற்று.

     வாழ்க்கை அவனுக்குப் பிடித்திருந்தது. கையிலே, பையிலே செப்புக் காசுகளும் நிக்கல் காசுகளும் குலுங்கின. வெள்ளிப் பணமாக எத்தனை நாட்கள் செல்லும்!

     தன் இனத்தார் எவரேனும் வந்தால் கண்டு கொள்வரோ என்பதால் அவன் தலையில் துணி சுற்றுவதை விட்டான். முழுக்கைச் சட்டை அணிந்து, ஆங்கிலமும் தமிழும் கொச்சையாகப் பேசக் கற்றான். உதகை நகர வாழ்க்கையில் துரிதமாக முன்னேறினான். ஊரின் நினைவே ரங்கனுக்கு எழவில்லை.