நான்காம் பாகம்

5. புதிய மண்ணும் புதிய உறவும்

     மறுநாள் காலையில், நிறைசூலிப் பெண்ணைப் போல் மேகங்கள் மலைமுகடுகளில் வேதனைப்பட குவிந்து விட்டன. எங்கிருந்தோ மருத்துவனாகக் காற்றும் கடுகி வந்து விட்டது.

     ஜோகி, அன்று நிலத்தையும் நீரையும் மறந்தார். காலையில் எழுந்து எருமை கறக்கவும் இல்லை; ஒளியாம் தெய்வத்தை வெளியே நின்று வணங்கவும் இல்லை. இரவெல்லாம் யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவர் போல், தானியப் பெட்டிக்குள் வைத்திருந்த சிறுபெட்டியைத் திறந்தார் உள்ளே ஒரு துணி முடிப்பில், அவர் அவசரத்துக்கென்று சேமித்திருந்த பணம் முந்நூறு ரூபாய்கள் போல் இருந்தன. பழைய காலமானால் முந்நூறு ரூபாய் மூவாயிரம் பெறும். பணத்தை எல்லோரும் விரும்பிப் பேராசைப்படப் போக, அது மதிப்பையே இழந்து விட்டதே!

     பணத்தைப் பையுடன் எடுத்துக் கொண்டார். கம்பளிப் போர்வையால் போர்த்துக் கொண்டார். அவர் கிளம்பிய சமயம் ரங்கம்மை வந்து, “மாடு கறக்கவில்லையா? காபி வைக்க வேண்டாமா?” என்றாள். மாடுகளைக் கறந்துவிட்டுக் கிளம்பலாம் என்று அவருக்குத் தோன்றியது. உடனே கை கால்களைக் கழுவிக் கொண்டார். பால்மனைக்குச் சென்று உடை மாறி பாற்குழாயைக் கழுவிக் கொண்டு கொட்டிலுக்குச் சென்றார். பால் கறந்து வைத்துவிட்டு, காலைப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டார். ரங்கம்மையின் மருமகள் தந்த காபியை அருந்தினார். பாரு பையனைக் குளிப்பாட்டிச் சட்டை போட்டுப் பள்ளிக்கு அனுப்புவதில் ஈடுபட்டிருக்கையில் அவர் வெளியேறினார்.

     பகைமைக்கு இடம் கொடுத்த வெறி மண்ணை விட்டு விடுவிடென்று அவர் கீழ்மலைப் பக்கம் இறங்கினார். காற்று விசிறி அடித்தது. காற்று அப்படி அடிக்கையில் சாரல் ஊசிகளெனப் பாயும். ஆனால் அவை அமுத தாரைகள். எங்கு நோக்கினும் பச்சை கொழிக்கச் செய்பவை அன்றோ?

     கீழ்மலையைச் சுற்றிக் கடந்து, அவர் மூக்குமலைப் பக்கம் நடந்தார். தொலை தூரங்களிலே, கிழங்கும் காய்களும் கோதுமையும் விளைவிப்பவர், நிலங்களைக் கொத்த வந்திருந்ததைக் கண்டார். கழுத்தைச் சுற்றிச் சாக்கு, கம்பளி அணிந்து, காற்றையும் சாரலையும் பொருட்படுத்தாமல் ஈரமண்ணைக் கிளறுபவர்கள், பூமியின் சொந்தக்காரர்கள் தாம். தேயிலையும் காபியும் போட்டுவிட்டு, ஆட்களை ஏவிவிடுபவர்கள், மண்ணை மதியாதவர்கள். ஒத்தை, கோயம்புத்தூர் நகரங்களில் உல்லாசம் அனுபவிக்கப் பணம் பண்ணுபவர்கள். ஆங்காங்கு, ஆடுமாடுகள் பச்சைப் புல் தேடி நின்றதை அவர் கண்டார். கால்நடைகளுக்கென்று குன்று குன்றாகப் புற்சரிவுகள் விட்டு வைத்த காலம் மலையேறி விட்டதே! எங்கும் தேயிலை!

     அது மட்டுமா? வெளி நாகரிகம் என்னவெல்லாம் கற்றுத் தந்துவிட்டது? புலால் உண்பவரைக் கடையர் என்று கருதிய பெரியோரே, பிள்ளைகள் புலால் உணவு கொள்வதைப் பெருமையான நாகரிகமாகக் கருதும் தாழ்வன்றோ வந்து விட்டது.

     மூக்குமலை ஏறும் சரிவில் பெரிய டீ பாக்டரி ஒன்று புகையை எழுப்பிக் கொண்டிருந்தது. பச்சை இலையைப் பரிமளிக்கும் காய்ந்த இலையாக வறுக்க, மூலைக்கு மூலை தொழிற்சாலைகள். கிருஷ்ணன் கூட, மரகதமலைப் பக்கமே ஒரு தொழிற்சாலை நவீன இயந்திரங்களுடன் ஏற்படுத்தப் போவதாக அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அது வேறு எத்தனை கலகங்களை எழுப்புமோ?

     மூக்குமலை ஹட்டிப்பக்கம் சூரியன் நகை செய்வது போல் ஒளி தருவதும், உடனே காற்றால் அலைக்கப்படும் மேகத்திரையில் ஒளிவதுமாகத் தெரிந்தான். ஈரம் கண்ட மகிழ்ச்சியில் மக்கள் ஆங்காங்கே பூமி திருத்திக் கொண்டிருந்தனர். காபி தேயிலை அதிகம் பற்றாத மலை. மக்களைப் பண ஆசை பற்றவில்லை போலும்!

     சில இடங்களில் கிழங்குச் செடிகள் மிக வாளிப்பாக வளர்ந்திருந்தன. சீமை உரத்தின் வீரியம் - மண்ணில் இருக்கும் உயிர்ச்சத்து அனைத்தையும் ஒரேயடியாக உருட்டித் திரட்டித் தரும் வீரியம்! ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பாக இருக்கையிலே, ஒரு புறம் முதுகிழவர் ஒருவர், வெற்றிலைச் சருகையும் புகையிலையையும் மெல்லுவதும், கைமுள்ளை ஒரு தரம் பூமியில் பதிப்பதுமாக, அயர்ந்து அயர்ந்து, பாடுபட்டுக் கொண்டிருந்தார். கிழவரின் நாடி நரம்புகளெல்லாம் தொய்ந்து தளர்ந்து விட்டன. கருமை உரம் பாய்ந்து குளிரிலும் பனியிலும் காய்ந்து சிவந்த தேகம். காதுகளிலே இரட்டைப் பொன்வளை அணி குலுங்கியது. தலைப்பாகை ஆடியது. ஏழு குறிஞ்சி கண்டிருப்பாரா கிழவர்?

     ஜோகி அருகில் ஓடினார். “மாமா, மாமா!” என்றார். கிழவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு நோக்கினார்.

     “ஜோகி, ஜோகியா?”

     “ஆமாம், மாமா.”

     ஜோகிக்கு மாமனைக் கண்டதே நெஞ்சு தழுதழுத்து விடக் காரணமாயிற்று. முதுகிழவர், முள்ளைப் பிடித்து மண் திருப்புகிறாரே!

     மகன் இல்லையா? மகன் ஒருவன் மிஞ்சி இருக்கிறான். ஆனால் முதுமைக்கு உதவாத மகன்!

     “நல்லாயிருக்கிறாயா? நல்லாயிருக்கிறீர்களா?”

     “ம். மாமா, நீங்களேயா இந்த மண்ணைத் திருப்புகிறீர்கள்?”

     “ஆமாம், படித்த மகன் சம்பாதிக்கப் பறந்து போனான். கிழவனுக்குப் பூமி. அந்தக் கட்சியிலும் சுந்தானே எல்லோரும்?”

     பகையை மறக்க எண்ணி வந்தவர் காதுகளில் கட்சி என்ற சொல்லோ நெஞ்சில் வேலைப் பாய்ச்சினாற் போல் இருந்தது.

     கிழவர் உட்கார்ந்து கனத்த சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.

     “சித்தன் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று மாமா?”

     “ஹ்ம். அவனுக்கு இந்தக் கிராமத்தில் என்ன வேலை? உத்தியோகப் படிப்பு அவனை ஊரைவிட்டுத் துடைத்துப் போயிற்று; மற்றவர்களைப் பிளேக் மாரி துடைத்துப் போயிற்று. வீட்டில் கட்சி கட்ட ஆளில்லை. மண் இருக்கிறது; மானம் இருக்கிறது; குடிசை இருக்கிறது; குந்திக் கிடக்கிறேன். எங்கே வந்தாய்? பூமி திருப்பி விதை விதைத்தாயிற்றா? நேற்றுக் கூட ஏதோ கலவரமாமே?”

     ஜோகியின் மனம் பொறுக்கவொண்ணாத வேதனையில் வெதும்பியது.

     “மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா, நான் அந்தக் கட்சி, சண்டை, விரோதம் எல்லாவற்றையும் மறக்க வேண்டுமென்று வந்தேன். அதைப் பற்றிப் பேசாதீர்கள். எல்லோரும் ஒத்து ஒன்று கூடி நமக்குத் தந்த பிறப்பை நாசமாக்காதவர்களாக இருப்போம் என்று சொன்ன ஐயன் தலை சாய்ந்ததுமே சண்டை வந்தது. நானே அதற்கு வித்திட்டேன் என்ற நினைப்பே என்னை அங்கு உருக்குகிறது மாமா. இந்த தள்ளாத வயசில் இந்த மண்ணில், நீங்கள் யாரை நம்பி முள்போட்டுத் திருப்பி, விதை போடுகிறீர்கள்?” என்றார் ஜோகி.

     “ஈசுவரன் கொடுத்த தேகத்தில் இன்னும் கொஞ்சம் தெம்பு இருக்கிறது. யாரை நம்புவது என்ன? உழைக்கப் பிள்ளைகள் இல்லையென்றாலும், உண்ணப் பிள்ளைகளா இல்லை?”

     கிழவர் நகைத்தார்.

     “நான் முள்ளுப் போடுகிறேன், மாமா” என்று ஜோகி அவர் கைமுள்ளை வாங்கினார்.

     “நீயா?”

     “ஆமாம். சித்தன் மண்ணில் ஒட்டாமல் ஓடிவிட்டானென்று வருத்தப்பட்டீர்கள். என்னை ஒரு சித்தனாக வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் கட்சி வேற்றுமை பற்றிப் பேசாதீர்கள். உங்கள் மண்ணில் உழைப்பதற்குப் பெரிய நன்மையாக நான் பெற்றுக் கொள்வேன்.”

     “ஜோகி!” என்று அழைத்தார் கிழவர், கண்கள் கசிய.

     “இரியவுடையர் கோயிலில் எட்டு வருஷங்கள் இருந்தவன் அல்லவா நீ? மண் இருக்கிறது; உழைக்க மனிதன் இல்லை. வெறும் கிழம் இருக்கிறேன், கிழம்.”

     “மாமா, உங்களைத் தந்தையாக நினைத்துவிட்டேன், முள்ளைக் கொடுங்கள். மரகதமலை மண் கசந்துவிட்டது எனக்கு. இந்த மூக்குமலை மண் எனக்குச் சொந்தமான மண்.”

     “கடவுளே!” என்று கிழவர் வானை நோக்கினார்.

     “வயசுக் காலத்தில் பையனும் மருமகளும் விட்டுப் போனார்களே; மகன் இருந்து என்ன பிரயோசனம் என்று காலையிலே கண்ணீர் விட்டேன். முன்பெல்லாம் ஒருவருக்கு முடியாவிட்டால் இன்னொருவர் உதவுவோம். ஜோகி, இன்னமும் பருவத்துக்குக் காற்றடித்து, மழை பெய்து பனியடிப்பதெல்லாம் உன் போல் இருப்பவர்களுக்காகத்தான்” என்றார்.

     “நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதைப் பகை உணர்வு ஒன்றில் தான் அண்ணன் எதிர்பார்க்கிறான். உங்களிடம் அடைக்கலமாக வருகிறேன். மாமா, என்னிடம் முந்நூறு ரூபாய் இருக்கிறது; பூமிக்குக் குத்தகையாக வாங்கிக் கொண்டாலும் சரி; உங்களுக்கு ஆதரவாக என்னை வைத்துக் கொண்டாலும் சரி; வந்து விட்டேன்.”

     “முதுமையின் சுமையைத் தாங்க வந்த நீதான் என் மகன்!”

     கிழவர் ஜோகியைக் கட்டிக் கொண்டார். மழைத் தூற்றல் வலுத்தும், அந்தச் சில்லிப்புக் கூடத் தெரியாமல் ஒருவருக்கு ஒருவர் உள்ளன்பின் சூட்டில் கட்டுண்டவர்களாக நின்றார்கள்.

     மழையோடு மழையாக பகைமைக்கும் குரோதத்துக்கும் அப்பால் அடைக்கலம் கண்டுவிட்ட ஆனந்தத்திலே ஜோகி வீடு திரும்பி வந்த போது, பாரு, கம்பளிக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மழை பெய்வது கண்டு, “குடை எடுத்துப் போகாமால் போயிருக்கிறானே நஞ்சன்?” என்று கூறிய வண்ணமே நிமிர்ந்து பார்த்தாள்.

     ஜோகி அதற்கு மறுமொழியின்றி, வீட்டுக்குள் சுற்று முற்றும் பார்த்தார். முதலில் பணத்துடன் செல்கையில் மரகதமலை திரும்பி வரும் உத்தேசம் இருக்கவில்லை. ஆனால், ‘பிறந்து, வளர்ந்து, உயிரோடு, ஊனோடு தேய்ந்த குடிலை விட்டுப் போகிறோம்; ஒவ்வோர் இடமும், ஒவ்வொரு சிறு பொருளும், கதவும் சுவரும் நினைவுகளை வாய்விட்டுச் சொல்வது போல் தோன்றும் இவ்விடத்தை விட்டு வேற்றிடம் போகிறோம்’ என்று நினைவுகள் எழ, கடைசியாக விடைபெறாமல் வந்துவிட்டதாக அவருக்குத் தோன்றியது. பிறகு, பாரு அண்ணி! நஞ்சனை வளர்க்கும் தாய்! விடைபெற வேண்டாமா அவளிடம்?

     “அண்ணி ஒரு சமாசாரம்!” என்றார்.

     குரலில் இருந்த கனம் அவளுக்குச் சாதாரணமான சமாசாரம் அல்ல என்பதை உணர்த்தியது.

     “என்ன?”

     “ரங்கம்மை எங்கே?”

     உட்புறம் கல்திரிகையில் தானியம் அரைத்துக் கொண்டிருந்த ரங்கம்மை அங்கு வந்தாள்.

     “நான் மூக்குமலை போய்விடுவதாகத் தீர்மானம் செய்து விட்டேன்.”

     பாருவின் கை ஊசி நழுவியது. ரங்கம்மை திகைத்து நின்றாள்.

     “இந்த விரோதப் புகையில் மனம் வெந்து குமைய முடியவில்லை. இருக்கும் பூமியை நீங்களும் பிள்ளைகளும் பயிர் செய்யுங்கள். நான் போகிறேன்.”

     “நீங்கள் போன பிறகு? ஜோகியண்ணா, இந்த மலையில் எனக்கும் புளித்துத்தான் போயிற்று. என் பிள்ளைகளுக்குக் கதி?” என்றாள் ரங்கம்மை.

     “கவலைப்படாதே ரங்கம்மா. ஐயனுக்கு, அவர் பூமியில் உன் குடும்பம் பாடுபட்டுப் பிழைப்பது திருப்தியாக இருக்கும். முள்ளின் மேல் இருப்பது போல், ரம்பத்து முனையில் நடப்பது போல், மனச்சாட்சியையும், அண்ணன் தம்பி உறவையும் நினைத்து இங்கே என்னால் நடக்க முடியவில்லை. நான் போகிறேன். போகும் இடத்துக்குப் பையனையும் அழைத்துப் போக நினைக்கிறேன். இந்தப் பகை அவனுக்கு வேண்டுமா?” என்றார் ஜோகி.

     “பையனை அழைத்துப் போகிறீர்களா? நீங்களுமா என்னை மோசம் செய்கிறீர்கள்? ஜோகியண்ணா, நஞ்சனை என்னிடமிருந்து பிரிக்கிறீர்களா?”

     இந்தக் காய்ச்சலும் புகையும் அவனுக்கு வேண்டுமா? பகை தலைமுறை தலைமுறையாக வளர, அவன் நெஞ்சிலும் புகை சூழ வேண்டுமா?

     “என் பையனைப் பிரிக்கிறீர்களே! நியாயமா?” - பாரு கண்ணீர் பொங்கக் கேட்டாள்.

     ஜோகி நிலத்தைப் பார்த்தபடியே, “நியாயமல்லாததை நான் பேசவில்லை அண்ணி. உங்களுக்குச் சம்மதமானால், நஞ்சனுக்காக நீங்களும் வரலாம். மூக்குமலை மாமன் நம் மூவருக்குமே அடைக்கலம் தருவார்.”

     பாரு அன்றே புறப்படச் சித்தமானாள்.