உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஐந்தாம் பாகம் 7. பகை தீர ஒரே வழி நஞ்சனுக்கு அன்று இரவு வேலை. முழங்கால் வரை மறைக்கும் ஜோடும், காதுகளை மறைக்கும் மப்ளருமாக அவன் சுரங்கக் குகைக்குள் நுழைந்த போது, எட்டு மணி, ‘ஷிப்ட்’ முடிந்துவிட்டதன் அடையாளமாகச் சடபட சடபட யந்திரச் சத்தம் மழை பெய்து ஓய்ந்தாற் போல் நின்று விட்டது. கீழெல்லாம் ஊற்றுக்களிலிருந்து கசிந்த தண்ணீர் தேங்கியிருந்தது. நடுவே, பாளம் பாளமாக கற்பாறைகள் கொண்ட தள்ளுவண்டியைத் தண்டவாளத்தில் பேய்போல் ஒருவன் தள்ளிக் கொண்டு ஓடினான். உள்ளே செல்லச் செல்ல வெடிமருந்தின் வேகம்; கற்பொடியின் புகை. ‘ஹெல்மெட்’ தொப்பியணிந்த தருமன் ‘ஷிப்ட்’ முடிந்து நஞ்சனைத் தாண்டி வந்தான். பெரியப்பனின் இரண்டாவது மகன், தருமன். தருமன் அங்கு வேலை செய்கிறான் என்பதை நஞ்சன் அறிவான். ஆனால் அந்தப் பகுதிக்கு வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. “ஓ! இன்ஜினீர் ஸாரா?” என்ற தருமன், பல்லிடுக்கில் பீடியை வைத்துக் கொண்டு எகத்தாளமாகக் கேட்டான். நஞ்சன் திடுக்கிட்டாற்போல் அவனை ஏற இறங்க நோக்கிவிட்டு, “தருமன் தானே? எப்போது இங்கே வந்தாய்?” என்றான். “இன்று தான் இங்கே போட்டார்கள். புது இன்ஜினியரிடம் வந்ததில் சந்தோஷம்” என்றவன் முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றான். வளைந்த குகைவாயில் வரை அவன் சென்று வெளியே மறையும் வரையில் நஞ்சன் ஸ்தம்பித்தாற் போல் நின்றான். எகத்தாளம், அலட்சியம்! தருமன் திடீரென்று வேற்றுமை பாராட்டுபவனாக, மரியாதை இல்லாதவனாக எப்படி ஆனான்? பெரியவன் தொண்டை கிழிய, துவேஷப் பேச்சுக்கள் பேசத் தெரிந்தவன்; தருமன் அமைதியான அடக்கமான தம்பி என்றல்லவோ எண்ணியிருந்தான். தந்தையின் கொள்கைப்படி அவன் அணைத்திட்டத்தில் வேலைக்கே வந்திருக்கக் கூடாதே! ‘ஷிப்ட்’ முடிந்து காலையிலே குகையை விட்டு வெளியேறி வருகையில் தான் நஞ்சன் பளிச்சென்று உண்மையைத் தெளிய உணர்ந்தான். பாறைகள், வளைவுகள், ஆங்காங்கு வந்து கிடக்கும் பிரம்மாண்டமான குழாய்கள் முதலிய எல்லா இடங்களிலும் காணப்பட்ட அறிக்கைத் தாள்கள், அவனுக்குப் பல செய்திகளைக் கூறின. மாபெரும் தொழிலாளரின் வேலை நிறுத்தம்! ‘நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தினரின் ஆணவத்தை வெற்றி காண, தொழிலாளத் தோழரே, புறப்படுங்கள், அறப் போருக்கு.’ அதிகார வர்க்கம், தொழிலாளத் தோழர்! தொழிலாளத் தோழர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே மாபெரும் பிளவு இருந்ததை, நஞ்சன் வேலையில் சேர்ந்து சில தினங்களுக்குள்ளேயே அநுபவபூர்வமாகக் கண்டிருந்தான். அவன், குட்டி அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவன் அல்லனோ? அதனால்தானோ தருமனின் பேச்சில் துவேஷமும் அலட்சியமும் எகத்தாளமும் மிதந்தன? அந்தப் புதுப் பிளவு ஏற்றத் தாழ்வுகளை இணைக்கும் உறவை முறித்து விட்டது. உறவல்லாதவரை இணைத்து புதுவிதமான சாதியைக் கற்பித்துவிட்டது. நஞ்சனுக்கு, இரவெல்லாம் கண்விழித்து, காற்றோட்டம் இல்லாத சுரங்கத்துள் நடமாடிய அலுப்புடன் சோர்வுடனுங்கூட, வேதனையும் கூடியது. காலனியில் உள்ள வீட்டுக்கு வந்தவன், முகம் கழுவிக் கொண்டு வேலையாள், ‘கான்டீ’னிலிருந்து வாங்கி வந்த காபியை அருந்திவிட்டுப் படுக்கையில் விழுந்தான். அவன் கண்ணிமைகள் படுத்த மாத்திரத்தில் அழுந்திவிட்டன. வெளியே பனிவெளியில் மிகவும் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. நஞ்சனைப் போன்றவர் நான்கு பேர்கள் வசிக்கும் அந்த இடத்திலேயே, பகல் வேலை செய்யும் சகாக்கள் சிரிப்பும் அரட்டையுமாகத் தடதடவென்று ஜோடுகள் ஒலிக்க வந்தார்கள். வேலைக்காரப் பையன்கள் கொண்டு வைத்திருந்த எடுப்புச் சோற்றை உண்டுவிட்டுச் சென்றார்கள். வேலைக்காரப் பையன்கள் மீதிச் சோற்றை எடுத்துப் பாத்திரங்களைக் கழுவியும் கழுவாமலும் அப்புறப்படுத்தி விட்டு, வெளியறையில் அட்டகாசமாகச் சீட்டாடிக் கொண்டிருந்தனர். நஞ்சன் எதையுமே அறியான். பொழுது சாய்ந்து தேநீர் குடிக்கும் வேளை ஆகிவிட்டது. வேலைக்காரப் பையன்கள் சீட்டுக் கச்சேரியை முடித்துவிட்டுச் சீவிச் சிங்காரித்துக் கொண்டு வெளியே சென்றனர். வீடு திறந்த வாயிலுடன் வெறிச்சிட்டிருந்தது. ராமனிடம் செய்தி அனுப்பி ஆறு மாதங்கள் ஓடி விட்டன. கல்லூரியும் இல்லாத நிலையில், விஜயா, வீட்டுடன் வளைய வருபவளாய், பழைய உற்சாகமும் கலகலப்பும் இழந்தவளாய்ப் பொழுதைத் தள்ளி வந்தாள். நடராஜன் அமெரிக்கா செல்லவில்லை. படித்த பெண்ணாயிற்றே என்று அவன் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் ஹில்வ்யூ மாளிகைக்கு வந்து தைரியமாக அவளை நெருங்க முயற்சிகள் செய்தான். விஜயாவோ, வெளிப்படையாக வெறுப்பைக் காட்டினாள். “பெண் கேட்கும் பெரிய இடங்களை எல்லாம் தள்ளிவிட்டு உட்கார்ந்திருந்தால், உங்கள் ஜோகி கௌடர் வருவார் என்பது என்ன நிச்சயம்? அந்தப் பையன் வீட்டுக்கே செல்வதில்லையாம்!” என்று ஹட்டியிலிருந்து எவரோ கொண்டு வந்த செய்தியை வேறு ருக்மிணி கிருஷ்ண கௌடரின் செவிகளில் போட்டு அவரை உசுப்பி விட்டாள். அவர் நோட்டம் அறிவது போலவே அன்று மரகத மலைப் பக்கம் கிளம்பினார். கூடவே விஜயாவும் வந்து அமர்ந்தாள். விஜயாவை மரகத மலையில் விட்டுவிட்டு, அவர் வண்டியைத் திருப்பிக் கொண்டு காலனிப் பக்கம் வருகையிலே, ராமன் எதிரே கண்டுவிட்டான். வண்டி நின்றது. “என்ன ராமா? வெகு நாளாயிற்றே!” என்றார் கிருஷ்ணன். “ஆமாம். எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா?” “சுகந்தான். மாமனிடம் நீ ஒன்றும் கூறவில்லையா?” அவன் முகம் இருண்டது. “ஜோகி மாமன், பூமி போகிறதென்று பித்தாகி விட்டார். பெரிய மாமனுடன் சேர்ந்து கொண்டு என்ன என்னவோ திட்டம் போட்டிருக்கிறாராம். ஹட்டிப் பக்கம் பேச்சுத் தெரிந்திருக்குமே உங்களுக்கு?” “ஆமாம். என்னவோ தொழிலாளர் வேலை நிறுத்தத்துடன் அவர்களும் சேர்ந்து எதிர்ப்பு இயக்கம் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம்! மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.” “வீட்டிலே என்ன சண்டை நடந்ததென்று புரியவில்லை. நஞ்சன் வீட்டுக்கே செல்லக் காணோம். என்ன செய்வது?” “நஞ்சன் வீடு எங்கே?” “இங்கே தான்; வாருங்கள் போகலாம். நேற்று இரவு வேலை போல் இருக்கிறது. காலையில் வரும் போது கண்டேன்” என்று ராமன் அவரை அழைத்துச் சென்றான். “நஞ்சா!” சடபட சடபடவென்ற பேரிரைச்சலில், முகமூடியணிந்த உருவங்களிடையே மூச்சுத் திணறுவதுபோல் திண்டாடிக் கொண்டிருந்த நஞ்சன் பட்டென்று கண்களை விழித்தான். கனவா, நினைவா என்று ஒரு கணம் அவனுக்குப் புரியவில்லை. “நைட் ட்யூட்டியா? உடம்பு சுகம் இல்லையா?” என்று கேட்ட வண்ணம் கிருஷ்ண கௌடர், அங்கே கிடந்த நாற்காலி ஒன்றை இழுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கண்களைத் துடைத்துக் கொண்டு, தெளிவுடன் நஞ்சன் எழுந்து உட்கார்ந்தான். “அத்தான், பையன்கள் இல்லை? மணி என்ன ஆச்சு?” என்றான் பரபரப்புடன். “மணி நாலேகால். சாப்பிட்டாயா? காபி வாங்கி வரட்டுமா?” “அட! இத்தனை நேரமா தூங்கி விட்டேன்? ஒருத்தனும் எழுப்பாமல் போய் விட்டானா?” என்றவன் எழுந்தான். பையன்கள் எவரும் இல்லை என்பதை உணர்ந்தான். “தொடர்ந்து நைட் டியூட்டியா?” “இல்லை, ஒவ்வொரு வாரம் முறை வரும்.” “பகலுக்கு மாற முடியாதா?” “எல்லோரும் அப்படித்தானே நினைப்பார்கள்?” என்று சிரித்த நஞ்சன், “உட்காருங்கள், இதோ வருகிறேன். பசி கூடத் தெரியாமல் தூங்கியிருக்கிறேன்” என்று முகம் கழுவிக் கொள்ளச் சென்றான். ராமன் வெளியே சென்று, கெட்டிலில் சூடான காபியும் தோசையும் போண்டாவும் வாங்கி வந்தான். “முதல் முதலில் பகை தீர வருகிறார். இனிப்புப் பண்டம் ஒன்றும் வாங்கி வரவில்லையா அத்தான்?” என்று கூறிக் கொண்டே நஞ்சன் அவரை உபசரிக்கலானான். “பரவாயில்லை, நஞ்சா; நீ சாப்பிடு. உன் ஐயன் என்னுடன் பேசினால் அல்லவோ பகை தீரும்? ராமன் எல்லாம் சொல்லியிருப்பானே!” “உங்கள் பெருந்தன்மைக்கு நாங்கள் தகுந்தவர் அல்லர்” என்றான் நஞ்சன். “ஏன் இப்படிப் பேசுகிறாய் நஞ்சா? அம்மை இஷ்டப்படவில்லையா? ஜோகி விரும்பவில்லையா? இல்லை... உனக்கே...” என்று நிறுத்தி அவனையே பார்த்தார் கிருஷ்ணன். “அவர்கள் மனம் மாறுவது நடக்காதது. அணைக் கட்ட வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்கிறார்கள். சாத்தியமா?” “அப்படியானால், நீ என்ன சொல்கிறாய்?” “நான் என்ன சொல்வது? ஒன்றும் பிடிக்கவில்லை. இப்போது தூங்கினேனே, அதுவுங்கூட வெறுப்பில் வந்த தூக்கம். எழுந்து நினைவுக்கு வரவே பிடிக்கவில்லை.” அவர் யோசனையில் ஆழ்ந்தார். திடீரென்று நினைவுக்கு வந்தாற்போல் நஞ்சன், “அத்தான், நீங்கள் ஸ்டிரைக்கில் சேருபவர் தானே?” என்று கேட்டான். ராமன் சிரித்தான். “நான் அந்தச் சமயம் பார்த்துப் பழனிக்குப் போகலாம் என்று இருக்கிறேன். இங்கே இருந்து நான் ஊர்வல கோஷங்களில் கலந்து கொள்ளாமற் போனால், லிங்கனும் தருமனுமாக என் காலை உடைத்து விடுவார்கள்.” “பகையாளியிடம் நட்புக் கொண்டு பழகிய நீங்கள் கருங்காலி வேலை செய்பவர் தானே?” என்று நஞ்சனும் சேர்ந்து சிரித்தான். உடனே, “பழனிக்குப் போவதானால் நானும் வருகிறேன், அத்தான். இந்தச் சூழ்நிலையை விட்டு எனக்கும் இரண்டு நாள் போய் வந்தால் தேவலை என்று தோன்றுகிறது!” என்றான். கிருஷ்ண கௌடர் முறுவல் பூத்தார். “நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?” நஞ்சன் கேட்கும் பாவனையில் அவரை நோக்கினான். “பெரிய வண்டியை எடுத்துக் கொண்டு, விஜயாவையும் எங்கள் வீட்டாரையும் அழைத்து வருகிறேன். பழனியாண்டவர் சந்நிதியில், கல்யாணத்தை முடித்து விடுவோம்” என்றார். “அதுவும் சரிதான். திங்கட்கிழமை ஸ்டிரைக். செவ்வாய்கிழமை இல்லை; புதன்கிழமை நல்ல நாளா என்று பாருங்கள். இல்லை, திங்கட்கிழமையே உகந்ததானால் மிக்க நலம். ஞாயிற்றுக்கிழமையன்று, கிளம்பி விடுவோம்” என்றான் ராமன், தமாஷாகப் பேசுவது போல. நஞ்சனுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது அந்தப் பேச்சு. “அதுவும் சரிதான். சாயங்காலம் காரிலேயே கிளம்பினால் இரவே பழனிக்குப் போய்விடலாம். நான்கு நாட்கள் சேர்ந்தாற் போல் லீவு போடு. கல்யாண அதிர்ச்சி, முதியவர்களின் மனசைத் திருப்பிவிடும்” என்றார் அவர் மீண்டும். “சதி செய்கிறீர்களே!” என்றான் நஞ்சன், நாணம் கலந்த புன்னகையுடன். “சதியில் உனக்கு விருப்பந்தானே? மனப்பூர்வமாகச் சொல் நஞ்சா; நான் விளையாடவில்லை. விஜயாவுக்கும் வேறு எத்தனையோ பேர்கள் வந்து கேட்டும் மனம் பிடிக்கவில்லை. உன் பேரைச் சொன்னால் தான் அவள் வாயிலிருந்து எதிர்ப்பு வரவில்லை.” நஞ்சன் தலை குனிந்திருந்தான். “ஜோகியை நான் போய் இன்று பார்க்கட்டுமா? அம்மையைக் கண்டு நான் கேட்கட்டுமா?” என்றார் அவர்! நஞ்சன் பரபரப்பாக, “வேண்டாம், வேண்டாம். கசப்பான அநுபவங்கள் ஏற்படும்” என்றான். “எனக்குப் புதிதல்லவே?” “அதை விடக் கசப்பாக இருக்கலாம். அப்போது ஐயன் தனியாக இருந்தார். இப்போது, பெரியப்பனுடைய பொறாமை நெருப்பும், அவருடைய ஏமாற்றத்தில் கனிந்த கசப்பும் கலந்து எப்படி உருவெடுக்குமோ? வேண்டாம்.” “அம்மை?” “அம்மையின் உலகம் மிக மிகக் குறுகியது. அவர்களுக்கெல்லாம் தெரிவித்து, சம்மதப்பட்டு நீங்கள் மணமுடிக்க வேண்டுமென்றால் அது இந்தப் பிறவியில் இல்லை.” “அப்படியானால்... நீ... நான் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. நீ வேறு பெண்ணை மனசில் வைத்து மணப்பதாக இருந்தால், நான் உன்னை என் சுயநலத்துக்காகக் கட்டாயப்படுத்த முடியாது. நஞ்சா உன் நலனிலும் விஜயாவின் மகிழ்ச்சியிலும் சொந்தமாக விருப்பம் கொண்டு கேட்கிறேன். எப்போதும் எவருக்கும் கெடுதல் விளைய வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. சமய சந்தர்ப்பங்கள் என்னைச் சதி செய்திருக்கலாம். நான் கோழை.” பழைய எண்ணங்களில் அவர் தொண்டை கரகரத்தது. வளர்த்தேன் என்ற முறையில் அம்மையின் குறுகிய, கழுத்தைப் பிடிக்கும் பாசம் எங்கே? இவருடைய மனம் எங்கே? இந்த நல்ல மனிதரின் சம்பந்தத்தால் ஒரு நாளும் தீமை விளைய முடியாது. “நஞ்சா!” “விஜயாவுக்கும் விருப்பமுண்டானால், நான் அதிர்ஷ்டசாலி” என்றான் தலைகுனிந்தபடியே. கிருஷ்ணன் எதிர்கால நம்பிக்கையின் நல்லொளி காணப்பெற்றவராக, அங்கிருந்து அகன்றார். மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு முன்னேற்பாடான வேலைகள் எப்படித் துரிதமாக நிறைவேறினவோ, அப்படி நஞ்சனின் திருமண ஏற்பாடுகளும் வெளிக்குத் தெரியாமல் நிறைவேறின. புதனன்று திருமணநாள் குறிப்பிட்டு அவர் செய்தி அனுப்பி விட்டார். ஆனால், ஞாயிறு இரவு, நஞ்சனுக்குத் தட்ட முடியாமல் வேலை வந்தது. அன்று முறை பார்க்கும் இளைஞன், ஊரிலிருந்து அவசரச் செய்தி வந்ததனால் அன்று மெயிலில் சென்னை கிளம்பிச் சென்றான். ‘ஷிப்ட்’ முடிந்து அதிகாலையில் கிளம்பி வருவதாக அவசரமாக கிருஷ்ண கௌடருக்குச் செய்தி கூறிவிட்டு, சனி இரவு அவன் பணியிடம் சென்றான். திரும்பி வருகையிலே, தொழிலாளர் கூட்டத்துக்கான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி விட்டதன் அறிகுறிகளைக் கண்டான். வீட்டிலே ராமனை எதிர்பார்த்து, அவன் பரபரப்பாக முன் அறைக் கதவைத் திறந்து செல்கையிலே... பாரு, அவனுடைய அம்மை, ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|