மூன்றாம் பாகம்

6. பிரிவோ? பிளவோ?

     போட்டியும் பொறாமையும் ஓரளவுக்கு உணவில் கசப்பும் உவர்ப்பும் கூட்டும் நன்மையைச் செய்வதுண்டு; அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சாகுமன்றோ! ரங்கனின் உள்ளத்தில், சம்பிரதாயப்பற்றோ, பழமைப் பற்றோ, ஒரு நாளும் இருந்ததில்லை. ஜோகி மட்டும் முன் வந்து கோத்தர் இசையையும் நடனத்தையும் தடுத்த போது அவன் தீவிரமாக எதிர்க்கவில்லை; ஆனால் கிருஷ்ணன் எப்போது வாயைத் திறந்தானோ, அப்போதே அவன் புற்றிலிருந்து சீறும் நாகமெனச் சீறி வந்துவிட்டான். நெடுநாளாக அவன் உள்ளத்தில் புகைந்து வந்த தீ, அன்று எரிமலையாக வெடித்து விட்டது.

     வெளிப்படையாகக் கிருஷ்ணனின் பக்கம் அவன் குரோதத்தைக் காட்டினால் போதுமா? கரியமல்லருக்கு எதிர் நின்று தோள் தட்ட அவனும் சமமான பணபலமும் செல்வாக்கும் ஊரில் பெற வேண்டுமே! ரங்கனுக்கு, ஜோகியினிடம் பகையோ விரோதமோ இல்லை. ஒரு நாளும் அவன் ஜோகியைத் தனக்குச் சமமாக மதித்ததில்லை. எனவே, கிருஷ்ணனுக்குச் சமமானவனாக அவன் முயற்சி செய்ய வேண்டும். தேயிலை பயிரிடும் முயற்சியில் அவன் அதுவரையில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்த முயற்சியில் இறங்கி, வேறு ஒரு குறியுமில்லாமல் உழைப்பான்; ஆம், உழைத்து, நேரெதிர் நின்று, உள்ளூரில் அவன் செல்வாக்கு நசிக்க அவன் காண்பான்.

     அவன் மனத்தில் இத்தகைய ஒரு வீறாப்புடன் இருக்கையில், ஜோகி, ஆத்திரப்பட்டு மனவெழுச்சியைக் கொட்டி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தன்னைத் தானே கொத்திக் கொண்டிருந்தான். ஐயனின் பால் சடங்குக்கு மறுநாள் அவன் பெரியப்பனையும் ரங்கனையும் கண்டு பேச வந்தான். சாவுச் செலவுக்குப் பெரியப்பன் கரியமல்லரிடம் கடன் வாங்கி இருப்பாரோ என்ற எண்ணம் ஒரு புறம்; மேலும் அண்ணன் ரங்கனிடம் சண்டை போட்டு அவன் பகைத்துக் கொண்டான் என்றால், ஐயனின் ஆத்மா சாந்தி அடையுமோ? இறந்தவர் பேச்சுக்கு அவன் அந்த நிமிஷத்திலேயே மதிப்பை இறக்கி விட்டானே! பால் சடங்கில் கலந்து கொண்டாலும் அதுவரையிலும் ரங்கன் ஜோகியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.

     தூற்றலைப் பார்த்துக் கொண்டு, வாயில் சுருட்டுடன் ரங்கன் வாசலில் நின்று கொண்டிருந்தான்.

     அருகில் சென்ற ஜோகி, “அண்ணா!” என்றான். அவன் குரல் கரகரத்தது.

     ரங்கன் ஏளனப் பார்வையில் மிதக்க, ஜோகியை அலட்சியமாக நோக்கினான். “எனக்கு இருந்த மனவருத்தத்தில், தாங்க முடியாத கஷ்டத்தில் அப்படி ஆத்திரமாகப் பேசினேன். ஐயன் இதை அனுமதிக்கவே மாட்டார் ரங்கண்ணா!” என்றான் ஜோகி.

     “என்னவோ, அந்தப் புதுப் பணக்காரன் பக்கம் சேர்ந்து கொண்டு நீ துள்ளினாய். நீங்கள் கட்ட வேண்டிய பெண்ணை நான் கட்டினேன் என்று அன்றையிலிருந்து இருவரும் சேர்ந்து கட்சி கட்டுகிறீர்கள். நான் இங்கில்லை. எனக்குத் தெரியாதென்று, பாருவை அவன் வீட்டுக்கு அனுப்ப, நீயும் உடந்தையாக இருந்தாய் அல்லவா?”

     பேச்சு எதிர்பாராத விதமாக விரசமாகப் போகவே ஜோகி துள்ளிப் பதறினான்.

     “சிவசிவ! அண்ணா, அண்ணி ஒத்தைக்குப் போனதே, எனக்குத் தெரியாதே? அன்று நான் கிரிஜையை அழைத்துக் கொண்டு மணிக்கல்லட்டி போயிருந்தேனே. இப்படியெல்லாம் மனம் புண்ணாகப் பேசாதீர்கள், அண்ணா.”

     “சரிதான் தம்பி, எனக்கு எல்லாம் தெரியும்.”

     ஜோகியின் கண்களில் நெருப்பு பறந்தது. “அண்ணா, அப்படிப்பட்டவனாக நான் இருந்தால் மாரியம்மன் என் கண்ணைக் கொண்டு போகட்டும்!” என்றான்.

     இந்தக் கூச்சலைக் கேட்டுப் பாரு வெளியே வந்தாள். “உங்களுக்கு வெட்கமாயில்லை? இன்னுமொரு பெண்ணை கட்டி வருவதை இங்கே யாரும் தடுக்கவில்லை. அதற்காக எவர் மீதும் அநியாயப் பழி சுமத்த வேண்டாம். உங்கள் வழியில் நான் ஒரு நாளும் நிற்கவுமில்லை; நிற்கவும் மாட்டேன். நீங்கள் நினைப்பது போன்ற மனமுடையவள் அல்ல, இந்தப் பாரு. பரீட்சை ஒரே தடவைதான். அதில் தோற்ற பிறகு மறு பரீட்சைக்குப் போக நினைக்காதவள் நான்” என்று கூறிவிட்டு, யாரையும் எதிர்நோக்காதவளாக, தூற்றலையும் பொருட்படுத்தாதவளாகப் பயிரைப் பார்க்கக் கிளம்பி விட்டாள். எதிர்பாராத அவளுடைய குறுக்கீட்டில் ரங்கன் ஒரு கணம் அயர்ந்து நின்றான். ஜோகி அந்த விஷயத்துக்கே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினான். “இந்த விவகாரத்துக்கு நான் வரவில்லை. ஐயன் அமைதியாகப் போக வேண்டிய அந்த வேலையில் போலீசு முதல் வந்து கலவரம் நேர்ந்தது. என் மனம் நானே காரணமென்று முள்ளாய்ப் பிடுங்குகிறது. ஐயனுக்காக நான் பிரதிக்ஞை எடுப்பது போலச் சொல்லுகிறேன். இந்த இரண்டு வீடும் ஒரு குடும்பமாக, ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அவர் ஆசை. இந்த வீட்டில் ‘இல்லை’ என்ற குரல் வந்து, அந்த வீட்டில் சாப்பாடு நடக்கக் கூடாது. அவர் நினைப்பை நான் நிறைவேற்றவே மனத்தில் உறுதி வைத்தேன்” என்றான்.

     “நானும் அப்படி நினைக்கவில்லை. நீதான் அந்தப் பயலுடன் சேர்ந்து அண்ணன், பெரியப்பன் என்று நினைக்காமல் விட்டுக் கொடுத்துச் சண்டைப் போட்டாய். அவர்கள் கட்சி கட்டினார்கள். நாலு பச்சை, பணம் துள்ளுகிறார்கள்; எனக்குப் பிரமாதமில்லை என்று காட்டுவேன்!” என்று ரங்கன் ரங்கம்மையையும் அவள் புருஷனையும் அழைத்தான். கைக்குழந்தையைக் கொஞ்சியவர்களாய், ஒரு சச்சரவுக்கும் வராமல் ஒதுங்கியிருந்த தம்பதிகள் அழைத்ததும் வந்தனர்.

     “இதோ பாருங்கள், அன்றைக்குக் கட்சி கட்டினவர்கள் எவர் பக்கமேனும் நீங்கள் முகம் கொடுத்துப் பேசுவதாக இருந்தால், குழந்தைகளுடன் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வீடும், பயிரிட்டுத் தின்னப் பூமியும் உங்களுக்குக் கொடுப்பவர் யாரென்பதை நினைவில் வைத்து நடவுங்கள். ஆமாம்.”

     “எனக்குத் தெரியாதா அண்ணா? எந்தப் பயலேனும் நம் வழிக்கு வந்தால் நான் அங்கேயே பிளந்து கட்டிவிட மாட்டேன்!” என்றான் ரங்கம்மையின் கணவன்.

     அத்துடன் அன்றையப் பேச்சு ஓய்ந்து விட்டது.

     பத்தாம் நாள் ‘கொரம்பு’ என்ற இறுதிச் சடங்கு, சொல்லி வைத்தாற் போல் ஊரே ஒதுங்கி விட்டது.

     கரியமல்லர் கை பெரிய கை. அவரை எவர் விரோதித்துக் கொள்வார்கள்? ஜோகியும் ரங்கன் பக்கம் சேர்ந்து விட்டான் என்று அறிந்த பின், அண்டை வீட்டுப் பெள்ளியுங் கூட, இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.

     ஜோகி மனம் நைந்தான். பிரிதல் நலந்தானா? எத்தனை நாட்களில் எத்தனை இடைஞ்சலான சமயங்களில் அந்த கரியமல்லர் வந்து கை கொடுத்திருக்கிறார்? ரங்கன் நாளையே ஒத்தை சென்று விடுவான். ஊரில் எல்லோரையும் விரோதித்துக் கொண்டு அவன் எப்படி வாழ்வான்? ஆனால் ரங்கனிடம் பேசுவது யார்?

     இறுதிச் சடங்குகள் முடிவு பெற்றதும், ரங்கன் புது முயற்சிக்குப் பண ஆதரவு தேட, ஒத்தை சென்று விட்டான். வீடு வெறிச்சோடிப் போயிற்று. அம்மை, பத்து நாட்களில் முதியவளாய் ஓய்ந்து விட்டாள். அவள் உடலின் உரமாய்த் தெம்பு கொடுத்த மறுபாதி அல்லவோ மறைந்து விட்டது? எவை மூக்குத்தியணிந்து, கங்கணத்தைக் கணவனின் காலடியில் கழற்றி எறிந்துவிட்ட அவளைக் காண்கையில், ஜோகிக்கு பழுத்த இலையுடன் இன்றோ நாளையோ என்று நிற்கும் மரத்தின் நினைவு வந்தது.

     அன்று மாலை கதிரவன் மேல்வானில் மறைந்து நேரம் இருட்டி விட்டது. கிரிஜை கலவரமடைந்தவளாய் பால்மனைக்குச் செல்ல இருந்த கணவனைத் தேடி வந்தாள்.

     இரண்டு எருமைகளைக் காணவில்லை; கொட்டிலிலும் இல்லை; மேயும் இடத்திலும் காணப்படவில்லை.

     முன்பெல்லாம் ஜோகி சிறுவனாக இருந்த காலத்தில், ஒரு குன்று முழுவதுமே மாடுகள் மேய்வதற்காக ஒதுக்கியிருந்தது. இப்போதோ, ஒரு புறச் சரிவு தவிர மீதி இடங்களில் தேயிலையும் காபியும் பயிரடப்பட்டிருந்தன.

     “என்ன விளையாடுகிறாய்? மேய்ச்சலுக்குப் போன எருமை எங்கே போகும்? ரங்கி பயல் ராமனைக் கேள்?” என்றான் ஜோகி.

     அவள் கண்களில் அச்சம் படர்ந்தது. “நான் தேடப் போனேன். பெள்ளியண்ணன் சொல்கிறார், பெரிய வீட்டு மாடு நம் தோட்டத்தில் நேற்றுப் புகுந்து கோசுச் செடிகளை மேய்ந்து விட்டதாம். ராமனப்பா, மாட்டை அடித்துக் காலை ஒடித்து விட்டாராம். அதற்காக இன்றைக்கு நம் எருமைகளைப் பிடித்துப் பெரிய வீட்டில் அடைத்து விட்டார்களாம் ஆட்கள்.”

     கடவுளே! இத்தகைய அற்ப நிகழ்ச்சிகள் அவன் சம்பந்தப்பட்ட வரையில் அன்று வரையிலும் நிகழ்ந்ததில்லையே! சகஜமாக மாடு மேய்ந்தால் விரட்டி விடும் ஊர்க்காரர், பகை என்னும் புகை வளர்க்க வேற்று மக்கள் ஆகிவிட்டனரே!

     ஜோகி எருமைகளை அழைத்துச் செல்லப் பட்டிப் பக்கம் சென்றான். தோட்டத்து ஆள் ஒருவன், கரியமல்லருக்குச் சொந்தமான எருமைகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.

     “ஏனப்பா வாயில்லாப் பிராணிகள் உன் நிலம் என் நிலம் என்று அறியுமா? அதற்காக எருமைகளை அடைத்து வைப்பது, புது வழக்கமாக இருக்கிறதே!” என்றான் ஜோகி.

     “யார் புது வழக்கம் காட்டுவது? கன்றை அடித்துக் காலை உடைத்திருக்கிறான் உன் மைத்துனன். நாங்கள் கட்டித் தீனி போட்டிருக்கிறோம். மரியாதையாக ஒரு ரூபாயை வைத்து விட்டு ஓட்டிச் செல்!” என்றான் உள்ளிருந்து கிருஷ்ணனின் தம்பி அர்ஜுனன்.

     ஜோகி திகைத்தான்.

     கசிந்த விழிகளுடன் வீட்டுக்குச் சென்று, பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, எருமைகளை ஓட்டிச் சென்றான்.

     கரியமல்லரின் தேயிலைத் தோட்டங்கள் பேர் சொல்ல ஆரம்பித்த பிறகே, ஓரளவு ஊர்க்கட்டுப்பாடு குறைந்து விட்டது. முன்போல் முறை போட்டு இரவுக் காவல் புரியவில்லை. தேயிலைத் தோட்டங்களுக்கு அவர் கீழ் கூலி வேலை செய்த ஆட்கள் காவலிருந்தனர். மற்றவர் ஏதோ நாலைந்து பேர் கூடி பூமி விளைவைக் காப்பதற்கும் பெருக்குவதற்கும் பழைய சம்பிரதாயங்களை, வழக்கங்களை விடாமல் கடைப்பிடித்து வந்தனர். எனினும் முன்போல் கூட்டு உணர்ச்சி இல்லை. அந்தப் பிரிவினை, அத்தனை நாட்கள் தெரிந்திருக்கவில்லை. ஐயனின் மரணத்தன்று நடந்த நிகழ்ச்சிகள் பத்தே நாட்களில் பிரிவு உணர்ச்சிகளை, அவற்றின் பலன்களை பளிச்சென்று புலப்படுத்தி விட்டன.

     ஒரு ஹட்டி மக்கள் ஒரு குடும்பத்தவர் போல் எத்தனை மேன்மையாக வாழ்ந்தனர்! பாடுபட்டுப் பலன் கண்டு, அவர்கள் ஒருவர் சுகதுக்கங்கள் மற்றவரும் பங்கிட்டு உண்டு வாழ்ந்தனரே! ஒருவர் விதைக்கும் சமயமோ, அறுவடையின் போதே நோய் வாய்ப்பட்டு விட்டால், அன்னார் குடும்பத்துக்கு அனைவரும் பங்கிட்டு உழைப்பை நல்கிக் கண்டுமுதல் அனுப்பும் பண்பல்லவோ அவர்களிடையே இருந்தது? ஜோகி கோயிலில் இருந்த நாட்களில், அவனுடைய தந்தை மாதக்கணக்கில், வருஷக்கணக்கில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்திருக்கிறார். கரியமல்லரின் குடும்பமும் மற்றவரும் புரிந்த பெருந்தன்மையான பண்புகளை விளக்கும் வகையில் அம்மை எத்தனை உருக்கமான நிகழ்ச்சிகளைக் கூறியிருக்கிறாள்!

     ஜோகி அன்றிரவெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகளை உன்னி உன்னி வருந்தினான்.

     ஒரு நிகழ்ச்சி:

     அறுவடைப் பண்டிகை முடிந்த பின்பு தான், புதுக்கதிரைத் தெய்வத்துக்குப் படைத்த பின்புதான், அவர்கள் உண்பது வழக்கம். அந்தத் தெய்வத் திருவிழா, அந்த வட்டகைக் கிராமத்தினர் ஒன்று கூடி ஆலோசித்துத் தேர்ந்தெடுக்கும் நாளிலேயே கொண்டாடப்படும். ஒரு சமயம் ஜோகியின் வீட்டில் தானியம் தட்டிப் போயிற்றாம். பண்டிகைக்குப் பத்து நாட்களே இருந்தனவாம். அதற்கு முன் புதுத் தானியத்தை அறுத்து உண்பதில் குற்றமில்லை. ஆனால் அப்படி உண்டவர், அந்தக் கிராமங்களில் புனிதக் காரியங்களுக்கும், விழாக் கொண்டாடும் உறவினர் வீடுகளுக்கும் சென்று கலந்து கொள்வதைக் கூடாததாகக் கருதுவர். அப்போது, மணிக்கல்லட்டியில், கரியமல்லர் மகள் குடும்பத்திலேயே, பல சிறுவர்களுக்கு, லிங்கம் கொடுக்கும் (சைவலிங்க படகம் வழக்கம்) வைபவம் நிகழ இருந்தது.

     ஜோகியின் ஐயன் இரவெல்லாம் மனம் நைந்து வருந்தினார். மறுநாள் விடியற்காலையில், கரியமல்லர், லிங்கையாவை அழைக்க வந்துவிட்டார். அம்மை வெகுநேரம் யோசித்து விட்டு, இருட்டோடு விளைந்த தினைக்கதிரை அறுக்கக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

     “எங்கேயம்மா கிளம்பிட்டாய் இந்நேரம்?” என்று அவர் சந்தேகத்துடன் நோக்கிய போது அம்மை சோகமும் நாணமும் மீற, உடல்குன்ற உள்ளம் குன்ற நின்றாளாம்.

     அவர் உடனே புரிந்து கொண்டார். விடுவிடென்று வீட்டுக்கு நடந்தாராம். சற்றைக்கெல்லாம், ஒரு கூடை நிறையச் சாமையும் கிழங்கும் தொரியன் தலையில் சுமந்து வந்து வீட்டின் முன் வைத்துப் போனானாம். இந்த நிகழ்ச்சியை ஐயன் கூறியிருக்கிறார்; அம்மை கூறியிருக்கிறாள். அப்பேர்ப்பட்டவர்கள் விரோதிகளா!

     ஜோகியின் அடி நெஞ்சிலிருந்து, பசி உணர்வு மிஞ்சினாற் போல் எரிச்சல் கண்டது, கண்கள் மூட முடியாமல் குளமாயின.

     அருகில், கிரிஜை உறங்கிக் கொண்டிருந்தாள். இருட்டில் அவள் முகம் அவனுக்குக் கண்களுக்குத் தெரியாவிட்டால் கூட, குழந்தை முகத்துக்குரிய அவளது கள்ளமற்ற தன்மை அவன் நினைவில் முட்டியது; பகீரென்றது.

     அவனுக்குப் பின்; ஒன்றுமே இல்லை. ஒன்றுமில்லையா?

     பகையைத்தானா அவன் வளர்த்திருக்கிறான்? ஆரம்பம் எளிதில் நிகழ்ந்து கொடியேறி விட்டது. அதற்கு முடிவு முடிவு காண முடியப் போகிறதா?

     விடிந்ததும், அவன் பொறியிட்ட பகை, பூதாகாரமாக எரிந்து கொண்டிருக்கக் கண்டான்.

     “ஜோகி! ஜோகி! யேய்!”

     பெரியப்பனின் குரலில் தூக்கிப் போட்டவனாக அவன் மேல்முண்டைச் சரியாகப் போர்த்துக் கொண்டு எழுந்து சென்றான்.

     “இப்படி அக்கிரமம் உண்டா? அந்த வீட்டுப் பாவிக் கூலிக்காரன் கோவிந்தன் பயல் என் மருமகனுடைய காலை முறித்து விட்டானே?” என்று பெரியப்பன் கத்தினான்.

     இடி விழுந்துவிட்ட நிலையில் ஜோகி வெளியே ஓடினான்.

     ரங்கம்மையின் கணவன், உடலெல்லாம் சேற்றில் குளிர்ந்து வெடவெடக்க, காலிலே பெருகிய இரத்தத்துடன் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். ரங்கம்மை, அவளுடைய அம்மையின் குரல் நினைவு வர, கோடி வீட்டைத் திட்டி நொறுக்கிச் சாபங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

     இரவு காவலுக்காக ரங்கம்மை புருஷன் சென்றிருந்தானாம். நீர் வேண்டாத கிழங்கு விளைந்த பூமியில், பாருவின் சதுரத்தில், மழை நீர் தேங்கி இருந்ததாம். அவன் வெட்டி விட்டானாம். அப்போது அவனைக் கழுத்தைப் பிடித்து எவரோ இழுத்துத் தள்ளினராம். திரும்பிப் பார்த்ததுமே, கரியமல்லரின் தோட்டக்காரன் கோவிந்தன் என்பது புரிய வந்ததாம்.

     “ஏண்டா, இரவில் எங்கள் பூமியில் வேண்டாமல் தண்ணீரை விடுகிறாய்? கொன்று விடுவேன்” என்று அவன் வம்புக்கு இழுத்தானாம். அடிதடிச் சண்டை முற்றி, அவன் காலையும் முறித்து விட்டான். ரங்கம்மையின் புருஷன், கோவிந்தனின் துப்பட்டியையும் பிடுங்கிக் கொண்டு வந்து கூக்குரலிட்டான். ஹட்டி கலவரத்துடன் விழித்துக் கொண்டாலும், எவரும் தலையிடாமல் பின் வாங்கி விட்டனர்.

     ஜோகி, “என்ன ஆனாலும் தண்ணீரை அவர்கள் பூமிப் பக்கம் பாயத் திருப்பியது தவறல்லவா?” என்று கேட்டான்.

     “அவர்கள் நம் எருமையை அடைத்து, ரூபாய் கேட்கலாமா?” என்றான் ரங்கியின் கணவன்.

     “ரங்கண்ணா கண்டால் சும்மா விடுவாரா? ஒரு கூலிக்காரன், இப்படி அடிப்பதா? அவர்களிடம் மணியம் இருந்தால், நாம் அஞ்சுவதா?” என்று ரங்கி ஓலமிட்டாள்.

     “சரி போகட்டும்” என்று ஜோகி பெருமூச்சுடன், அவர் கால் காயங்களைக் கழுவிக் கட்டுப் போடலானான்.

     ஆனால் அது அப்படி எளிதில் போய்விடவில்லை.

     ரங்கன் அன்று பகல் ஹட்டிக்கு வந்தான்.

     முகம் ஜ்வலித்தது. பெருமை, மகிழ்ச்சி, அகங்காரம், ஆக்ரோஷம் எல்லாமாகச் சேர்த்துக் கனல வைத்த ஒளி. அன்று முதல் நாள், மலைக்கு மலை குதிரைப் பந்தியத்திலே, (Point to Point Race) அவன் பக்கம் அதிருஷ்ட தேவதை இருந்து, ஆயிரத்தைந்நூறு ரூபாய்களுக்கு வெற்றி தேடித் தந்திருந்தாள்.

     விஷயத்தைக் கேட்டதும் அவன் அப்போதே விரைந்தான். ஜான்ஸன் எஸ்டேட் பக்கமிருந்த சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டரிடம், ரங்கம்மையின் கணவனைக் குதிரை மேல் ஏற்றிக் கொண்டு போய்க் காட்டி, ஒரு பத்திரம் வாங்கிக் கொண்டான்.

     இரவில், கரியமல்லரின் ஆள், நிலத்தின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்த முயன்றதாகவும், ரங்கம்மை புருஷன் தடுத்த போது அடித்துக் கொலை செய்ய முயன்று காலை ஒடித்து விட்டதாகவும், சாட்சிகள் சிலரைத் தேடிப் பிடித்து, வழக்குப் பதிவு செய்துவிட்ட பின்புதான் ரங்கன் மூச்சு விட்டான். செல்வமெல்லாம் பறிபோய் விட்ட நிலையிலே, ஜோகி துயரக் கடலில் மூழ்கினான்.