உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 7. தந்தையும் மகனும் ஜோகியினால் வெகு நேரம் வரையிலும் அந்தச் செய்தியை உண்மையாக நம்ப முடியவில்லை. நாம் நினைத்தபடி எதுவும் நடக்காது. அனைத்தும் அவன் செயல் என்பது அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு படியிலும் நிதர்சனம் ஆகிவிடுகிறதே! சற்றும் நினைக்காத விதமாக அவன் பால் கறக்கும் உரிமை பெற்றான்; கோயில் பணிக்கு உரியவனானான். அதுபோல்... பெரியப்பன் செய்தியைக் கூறிவிட்டுப் போன பின்னும் கூட, அன்று வெகுநேரம் அவன் ஏதோ ஒரு நீண்ட கனவினின்றும் விழித்துக் கொண்டாற்போலவும், பிறகு பளாரென்று வந்த சூரிய ஒளியிலே அவன் கண்ட காட்சி பொய்யாகிவிட்டாற் போலவும் அவனுக்குத் தோன்றியது. பாரு தனக்கு உரியவள் என்ற உணர்வு எப்படியோ அவன் உள்ளத்தில் வேரூன்றியிருந்தது. தன் வாழ்வைப் பற்றி நினைக்கையில், பூத்துக்குலுங்கும் செடிபோல் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த உணர்வை, அந்தப் பூச்செடியை, கிருஷ்ணன் அவளை மணக்க இருக்கிறான் என்ற செய்தியால், கோடரி கொண்டு வீழ்த்துவது போல், பெரியப்பன் வீழ்த்தி விட்டார். என்றாலும் அவன் மனம் நெறியாலும் சீலத்தாலும் பண்பட்ட மனமன்றோ? எனவே அந்த ஆசைப் பூஞ்செடி வீழ்ந்துவிட்ட போதிலும் அவன் சிறிது நேரந்தான் மருண்டு நின்றான். பிறகு தன்னை வருத்திய சோகத்தைக் களைந்து விலக்க மனதைப் பலவிதங்களில் தேறுதல் செய்து கொள்ள முயன்றான். அவளே கிருஷ்ணனை விரும்பி மணப்பதாக இருந்தால் அவன் தாபம் கொண்டு பயன் என்ன? உண்மையில் கிருஷ்ணன் அவனை விட உயர்ந்தவன் அல்லவோ? செல்வ வளம் பெற்ற இளைஞன்; அவர்கள் மண்ணுக்கே புதுமையாகப் படித்துப் பட்டம் பெற இருப்பவன். அவனுக்கு ஈடாக ஜோகி தன்னை நினைப்பது தகுமோ? அவனுடைய உள்ளத்தில் பாரு அன்புக்கு உரியவளாக இருக்கிறாளென்றால், அவள் நல்ல விதமாக வாழ்ந்து, நல்ல மக்களைப் பெற்று முன்னுக்குக் கொணர்வதில் தானே அவன் சந்தோஷம் கான வேண்டும். இத்தகைய எண்ணங்கள் கொண்டு பற்பல விதங்களாகப் பூனைக்குட்டியைப் பழக்குவது போல் மனத்தைச் சமாதானம் செய்து கொண்டு அவன் அடங்கி இருந்த நிலையிலே, ரங்கன் வந்து மணிக்கல்லட்டி சென்ற செய்தியைப் பெரியப்பன் கூறிப் போனான். ஆனால் அவனுடைய தந்தை ரங்கனுக்கு அளித்த வரவேற்பைப் பற்றி மட்டும் கூறவில்லை. மறுநாள் தந்தைக்குக் கடுங் காய்ச்சல் ஏறியதும், பஞ்சாயத்தார் அவசரக் கூட்டம் போட்டு, ஜோகியைக் கோயில் எல்லையிலிருந்து விடுவித்து விட்டார்கள். தீயணைக்கப் பெற்று, ஜோகி விடுதலையாகி வீடு வந்தான். கீழ் மலையிலிருந்து கோயில் எல்லையைக் காக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பையன் அவ்வளவு சீலமுடையவனா என்று கூட எல்லாரும் ஆலோசனை செய்யவில்லை. பல ஆண்டுகள் தவம் இருந்த குடிலை விட்டு, சின்னஞ் சிறுவனாக அவன் விளையாடி மகிழ்ந்து தரையிலே காலை வைத்த போது நுகர்ந்த இன்பத்தை அளவிட்டுக் கூற முடியுமா? ஹட்டியில் வீட்டுக்கு வீடு மாற்றம் கண்டிருந்தது. ஆனால் அவன் சொந்த மனை, புது மெருகு அழியாமல் அவன் கண்டிருந்த மனை, வெள்ளைப் பூச்சிழந்து தோற்றம் அளித்தது. கொட்டில் எருமைகளில் இரண்டே இரண்டு மிஞ்சியிருந்தன. புறமனையில் ஐயனின் படுக்கை நிரந்தரம் ஆகிவிட்டது. மருந்து அரைக்கும் குழிக்கல் படுக்கையருகிலேயே வந்து விட்டது. தானியம் நிரம்பி வழியும் பெட்டி காலியாகக் கிடந்தது. பால்மனையிலே ஐயன் உடுத்தும் மடி ஆடை, அழுக்குப் பிடித்துத் தொங்கியது. பளிச்சென்று இருக்கும் அடுப்படி, எத்தனை தினங்களாகவோ மெழுகாமல் இருந்தது தெரிந்தது. ஆமணக்கெண்ணெய்க் குடம், மெழுகு பிடித்துத் தூசி படிந்து உதவாத சாமான்களுடன் கிடந்தது. அவன் உள்ளம் விம்மியது. பன்னிரண்டு ஆண்டுகளில் அந்த வீடு வளமை குன்றி வறட்சியும் கண்டுவிட்டது. மஞ்சள் படர்ந்த முகத்துடன் சோகையாகிக் கிடந்த தந்தையருகில் ஜோகி வந்து நின்றான். தந்தை மகனை நிமிர்ந்து நோக்கினார். கண்களில் நீர் துளிர்த்து நின்றது. ‘இரிய உடையாருக்கு மகனைப் பணி செய்ய விடுவேன். என் கடன் தீரும்; இந்த வீட்டில் நலம் கொழிக்கும்’ என்று எண்ணினாரே! வீடு செல்வச் செழிப்புடன் விளங்குகிறதா? இல்லை. உழைக்கும் ஆளை நோய்ப் படுக்கையில் தள்ளிவிட்டதே! ஆனால், பையன் வந்துவிட்டான்; ஜோகி வந்து விட்டான். தளையகன்ற பெருமூச்சில் இருதயம் விம்மியது; மூச்சு முட்டியது. அவருடைய மகனாக ஜோகி நின்றான். மெலிந்தாற் போல் தோன்றினாலும் இரும்பான உடல் வெண்மையில் மண்ணின் செம்மையான சாரமேறிய மேனி, “ஜோகி!” என்று மகனின் கைகளைத் தந்தை பற்றிய போது அவர் கண்கள் பொல பொலவென்று நீரைச் சிந்தின. “தானம் வாங்கி உண்ணும் நிலைக்கு வந்துவிட்டேனடா மகனே! உழைக்காமல், விதைக்காமல் பிறர் கையேந்தி உண்ணும் நிலைக்கு வந்து விட்டேனடா ஜோகி!” என்று மகனின் கைகளைக் கண்ணீரால் நனைத்து விட்டார். நனைந்த கையால் தந்தையின் கண்ணிரைத் தனயன் துடைத்தான்; “நான் வீட்டுக்கு வந்து விட்டேனே அப்பா, வானம் இருக்கிறது; என் கைகள் இருக்கின்றன; மண்ணில் உழைக்க மகனாய் நான் இருக்கிறேன். ஓராயிரம் பேருக்கு நான் உணவளிப்பேன் அப்பா. நான் உங்கள் மகன்; உங்கள் மகன்!” லிங்கையா ஆனந்தக் கண்ணீர் சொரிய, படுக்கையிலிருந்து எழுந்து மகனை மார்புறத் தழுவிக் கொண்டார். “ஐயனுக்குப் பணி செய்தவன் நீ; உனக்கு ஒரு குறையும் வராது” என்று வாழ்த்தினார். அருகில் வந்த தாய், “உருண்டைக்கல் களியுருண்டை போல் பெயர்ந்து வர, பாரு நம் வீட்டுக்கு வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். நான் அன்று விறகுக்குப் போனவள், வெட்கம் விட்டு மணிக்கல்லட்டி சென்றேன். ‘என் பையனுக்கு உன் பெண்ணைத் தருவதாகப் பேசிய பேச்சின் நாணயம் வெள்ளிப் பணத்தைக் கண்டதும் பறந்து விட்டதா?’ என்று கேட்கப் போனேன். தேனர் கருணை ஐயனின் வாயில் பலப்போட்டி என்று வந்தது. ஜோகியும் பந்தயத்தில் கலந்து கொள்வான். ‘ஹெத்தப்பா கோயில் உருண்டைக் கல்லைத் தூக்க அவனும் வருவான்’ என்று கூறினேன். நீங்கள் வாழ்த்துங்கள்” என்றாள். லிங்கையாவுக்குப் பந்தயம் பற்றிய விவரம் தெரியும். ஜோகி கலந்து கொள்ள வேண்டி அவள் பந்தய நாளைக் கூடத் தள்ள முயன்றிருக்கிறாள் என்பதையும் அறிவார். ஆனால் ஜோகி முழுவதும் அறிந்திருக்கவில்லை. லிங்கையா பதில் சொல்லவில்லை. அவர் முகம் பளபளத்தது. அந்த ரங்கன், மகனைப் போல் வளர்த்த ரங்கன் - நேர்பாதை இல்லாமல் வழி பிறழ்ந்து செல்பவன் - அவனுக்கு நன்மை எப்படி வரும்? பால் கறப்பதைப் புனிதச் சடங்காகவும், பாலைப் புனிதமாகவும் நினைக்கும் குலத்தில் பிறந்த அவன், பால் பண்ணை மேஸ்திரியாக ஒழுங்காகவா பணியாற்றுவான்? திருட்டுப் பால் விற்றுத் தந்திரங்களில் தேர்ந்த பணம் சேகரிக்கும் உண்மையை அந்தக் கண்களே அல்லவோ அவர் மனத்துக்கு உரைத்தன? உண்மையாக அவன் கவடற்று வாழ்ந்தால், சிற்றப்பனிடம் அன்பாக வந்து சமாதானம் கூறியிருக்க மாட்டானா? அந்தப் பையனைக் காணாமல் இருந்தாலே சமாதானமாக இருந்திருப்பாரே! ரங்கனைக் கண்ட பின், பாசம் அலைந்த நெஞ்சில், அவனை நல்வாழ்வுக்குத் திரும்பச் செல்லும் வழிகளைப் பற்றிய எண்ணங்களெல்லாம் ஊசலாடின. ஜோகி தங்கம்; அவனுக்கு வருகிறவள் எப்படி இருந்தாலும், அவளையும் அவன் தங்கமாக்கி விடுவான். ஆனால் ரங்கனுக்கோ? அவனைப் புடமிட்ட பொன்னாக்க, ஓர் உயர் கன்னியல்லவா துணையாக அமைய வேண்டும்? முதல் முதலாகப் பிறவி எடுத்ததும் அன்பாக நிற்கும் பெண் துணையான அன்னையை அவன் இழந்து விட்டான். அவன் வேண்டி விரும்பி, பாருவை மணக்க வந்திருக்கிறான். இம்முறையும் அவனுக்கு ஏமாற்றம் வேண்டாம். பாரு, இந்த வீட்டுக்கே ரங்கனுக்கு மனைவியாக வரட்டும்; கோணல் வழி திருந்தட்டும். மனவெழுச்சியை அவர் மேற்கூறிய எண்ணங்களுடன் விழுங்கிக் கொண்டு மௌனம் சாதித்தார். “ஏன் பேசாமல் மௌனம் சாதிக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நாளும் நம் குடும்பத்துக்கு வாய் திறந்து நன்மை கூறியதில்லை. உங்கள் மகனை வாய் திறந்து வாழ்த்த உங்களுக்கு மனமில்லையே? ஒரு வேளை உண்டு, வெறும் கோணியில் என் மகன் படுத்ததை நினைக்க என் மனம் எத்தனை ஆண்டுகள் எப்படிக் குமுறியது தெரியுமா? அந்தக் குடும்பத்துக்காக, நீங்கள் இந்தக் குடும்ப வளமையை இத்தனை நாட்கள் தியாகம் செய்தது போதும். நான் இம்முறை ஒப்பமாட்டேன்.” மனம் வெறுக்க ஆற்றாமை பீறிட்ட போது, லிங்கையா குலுங்கிப் போனார். அந்த வீட்டில் அவள் குடிபுகுந்து வேறு எந்த விதச் சுக சௌகரியமும் கேட்கவில்லை. ஒரு வாய்ச்சொல், ஒரு தாயுள்ளம் குளிர வாய்ச்சொல் நல்காத கணவர், அவர் கடமை இதுவுமன்றோ? மகனின் தலையில் கை வைத்த போது, அவர் கை நடுங்கியது. “பாரு இந்த வீட்டுக்கு வரட்டும். உன் கைக்குக் கல்லுருண்டை கனம் இல்லாமல் வரட்டும்” என்று வாழ்த்தினார். விவரங்கள் அனைத்தும் பிறகே ஜோகிக்குப் புரிந்தன. மாதி அன்று பாலும் நெய்யுமாக விருந்துச் சோறு பொங்கினாள். அது வரையிலும் விருந்துணவு சமைத்து எதிர் வீட்டாரைக் கூட அழைக்காமல் அவர்கள் அதை உண்டதில்லை. அன்று அவர்களை அழைக்கவில்லை. பெரிய கலத்தில் அப்பனும் பிள்ளையுமாக உண்ண, மாதி கண் குளிரப் பார்க்க விரும்பினாள். அவள் மனம் நோகக் கூடாதென்று, லிங்கையா உள் மனையில் வந்து அமர்ந்தார். வட்டில் பளபளத்தது. நடுவே பொன்னிறத்தில், சீனி சேர்ந்த பொங்கல், பாலில் வெந்த பொங்கல், பீன்ஸ் காயும், கிழங்கும் போட்ட குழம்பு, கீரைத் துவட்டல். லிங்கையாவின் நாவுக்கு ஒன்றுமே ருசிக்கவில்லை. வட்டியிலிருந்து தந்தை எடுத்த ஒரு கவளைத்தைக் கூட விழுங்கவில்லை; தான் உண்ணுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த ஜோகி திடுக்கிட்டான். அன்னை அன்புடன் சமைத்த உணவு, சொல்லொணாத சுவையுடன் இருக்கிறதே! “அப்பா, நீங்கள் ஒன்றுமே உண்ணவில்லையே!” என்றான். “அவர் சரியாக உண்டு ஒரு குறிஞ்சியாயிற்றே? ஜோகி! அவருக்கு உணவு ருசித்தால், உடல் நோய் தீருமே! பாழான குறும்பன் செய்த வினை என்று சொல்லுகிறார்கள். நானும் ஊர்ப் பெரியவர்களிடம் முட்டிக் கொண்டாயிற்று. யார் வீட்டுக்கு வினை செய்ய எண்ணி இந்த வீட்டுக்குச் செய்தானோ?” என்றாள் அம்மை. ஜோகி எடுத்த உணவை வாயில் போடாமல் நிலைத்தான். முறைக் காய்ச்சல் அவர் ரத்தத்தின் சத்தையே உறிஞ்சி விட்டதே! காட்டுக் குறும்பர் தாம் இந்த வினைக்குக் காரணமா? எவருக்குமே தீமை நினைக்காத தந்தைக்கு, காட்டுக் குறும்பர் எதற்குத் தீவினை செய்ய வேண்டும்? அவர்கள் தேனடையைத் திருடினாரா? அவர்கள் பயிரிட்ட விளைவை விலையின்றி உண்டாரா? “அம்மா, நம் குறும்பப் பூசாரி வருவதில்லையா?” என்று கேட்டான். “பதினைந்து நாட்களுக்கு முன் தேன் கொணர்ந்தான். சாமையும் கிழங்கும் கொஞ்சம் இருந்தன. நீ கோயிலில் விளைவித்துக் கொடுத்தது. அதைத் தந்து, மருந்துக்குத் தேன் வாங்கினேன். அப்போது, ‘பூசை போடுகிறேன், மந்திரம் சபிக்கிறேன்’ என்றான். நான் பெண்பிள்ளை, என்ன செய்வேன்?” என்றாள் தாய். ஜோகி மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டான். முதற்கடமை அவனுக்குக் கல்யாணம் அல்ல. வினையை வைத்த அந்தக் குறும்பனிடம் சென்று வினையை எடுக்கச் செய்ய வேண்டும். பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, மறைந்திருந்த சூரியன் மெல்லத் தலைநீட்டி இளநகை புரிந்தான். ஜோகி வெளியே செல்லச் சித்தமாக ஆடைகளை மாற்றிக் கொண்டான். அம்மையிடம் கேட்டு ஒரு வெள்ளிப் பணம் பெற்றுக் கொண்டான். அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த குறும்பர் குடியிருப்பை அடைய, மணிக்கல்லட்டிக்குக் கீழோடு சென்று காட்டிடையே புகுந்து இறங்க வேண்டும். குறும்பர்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் காட்டிடையே அமைந்திருப்பவைதாம். பள்ளங்களில் ஈரம் தங்கும் இடங்களில் அவர்கள் வசித்தாலும், காய்ச்சல் நோய் அவர்களைப் பிடிப்பதில்லை. காரணம் என்ன? குறும்பர் குடியிருப்புக்கு அவன் சென்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு அவன் சென்ற போதும், தந்தையின் உடல்நிலைக்குப் பரிகாரம் தேடும் காரணத்தைக் கொண்டு தான் சென்றான். காட்டு வழி மாறவில்லை. ஆனால், தரிசாகக் கிடந்த நிலங்களில் வரிவரியாக மலையன்னைக்குப் பாவாடை அணிவித்தாற் போல் உருளைக் கிழங்குச் செடிகள் புதுமையாகத் தோன்றின. இரண்டோர் இடங்களில் புள்ளி குத்தினாற் போல் தேயிலையும் பயிராக்கியிருந்தார்கள். உருளைக் கிழங்கு உணவாகும். தேயிலையோ பணமாகும். உணவு முக்கியமா? பணம் முக்கியமா? விருவிருவென்று அவன் மணிக்கல்லட்டிக்குக் கீழே குமரியாற்றின் வளைவுக்கு வந்துவிட்டான். மறுபுறுத்து மலை வழி கோத்தைப் பக்கம் இட்டுச் செல்லும். இரு மலைகளுக்கிடையே, குமரித்தாய் நெளிந்து ஒல்கி ஒசிந்து செல்லும் அழகை நாள் முழுதும் பார்த்திருக்கலாம். சரிவுகளெல்லாம் புதரும் முள்ளுமாகக் காடுகள், வேங்கை மரங்களும் சரக்கொன்றை மரங்களும் ஆங்காங்கே பூத்துக் குலுங்கின. எங்குமே நான் இல்லாத இடமில்லை என்பது போல் நீலக் குறிஞ்சி. ஜோகி, கானகத்தினூடே புகுந்து, ஆற்றின் போக்கோடு சென்ற ஒற்றைத் தடத்தில் நடந்தான். மணிக்கல்லட்டியிலிருந்து, விறகு சேகரிக்க வரும் பெண்களில் ஒரு வேளை பாருவும் வந்திருப்பாளோ என்ற சபலத்துடனேயே அவன் நடந்தான். ஒற்றையடித்தடம் ஆற்றின் போக்கோடு சென்று சட்டென்று பிரிந்தது. அங்கு ஆறு வளைந்து, ஒரு பாறையில் வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே சுனை, கிருஷ்ணனையும், பாருவையும் இணைத்து வைத்த இடம். நீர்வீழ்ச்சியை மேலிருந்து பார்க்க விரும்பி அருகில் நடந்த ஜோகி, சட்டென்று தேனி கொட்டிவிட்டாற் போல் மருண்டு நின்றான். பூத்துக் குலுங்கும் சரக் கொன்றை மரத்தின் கீழே, அவன் காணும் காட்சி! அது கனவல்லவே! ஜோகி கண்களைத் துடைத்துக் கொண்டான். மீண்டும் மீண்டும் கொட்டி வழித்துக் கொண்டே நோக்கினான். பத்தடி தூரத்துக் காட்சி அவன் கண்களைப் பொய்யாக்குமா? அவன் பார்த்துக் கொண்டே இருக்கையில் மாலை வெயில் அவர்கள் மீது நகர்ந்தது. ஜோகி, அவர்களிடமிருந்து பார்வையை அகற்ற, அந்த மரத்தின் மீதே பதித்தான். ‘மினிகே’ இலைக் கொடிகள் அந்த மரத்தைப் பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாமல் தழுவிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் தான் அவன். சந்தேகமே இல்லை. மஞ்சள் வர்ணக் கழுத்துப் பட்டியுடன் கூடிய கம்பளிச் சட்டை, தலையில் பாகை போல் சுற்றிய வெள்ளைத் துணி. எதிரே அவன் முகந்தான் ஜோகிக்குத் தெரிந்தது. அவன் சிரித்தான். பெண்மை தோய்ந்த முகம். அவன் உண்மையில் அழகுள்ளவன்; பாருவுக்கு ஏற்றவன். உருண்டைக் கல்லைத் தூக்குவது ஜோகிக்குப் பிரச்சனை அல்ல. கோயில் முன் அந்தக் கல், இளைஞர்கள் விளையாட்டாகப் பலம் பழகிக் கொள்ளவும் பரிசோதித்துக் கொள்ளவும், எத்தனை நாட்களாகவோ உபயோகமாக இருந்திருக்கிறது. சற்றே நீள உருண்டையாக இருக்கும் அந்தக் கல்லை, இரண்டு கைகளையும் சங்கிலிப் போல் இணைத்துக் கொண்டு ஒருவிதமாகப் புரட்டித் தூக்க வேண்டும். அந்த வாகில், ஜோகி எத்தனை நாட்களோ அதைப் புரட்டி, இரண்டு அடி உயரத்துக்குத் தூக்கி இருக்கிறான். மங்கையைப் பெறும் பந்தயம் அத்தனை எளிதில் முடிந்து விடும் என்பதை அவன் தாய் கூறும் வரையில் நினைத்திருக்கவில்லை. ஆனால், கண்ட காட்சி, மனத்தில் கலக்கத்தை யன்றோ ஏற்படுத்தி விட்டது? இணைந்த உள்ளங்களைப் பிரித்து, பாருவை அவன் அடைவது நலத்தை விளைவிக்கக் கூடியது தானா? சட்டென்று கிருஷ்ணனின் முகத்தில் துயரச்சாயை கவிழ்ந்தது. துயரம் இருவர் கண்டங்களையும் அழைத்து விட்டது போலும்! இருவரும் கணம் யுகமாக நிற்கின்றனரா? தானும் அதே நிலையை அடைந்து விட்டாற் போல் ஜோகிக்குத் தோன்றியது. “பாரு?” என்றான் கிருஷ்ணன். “உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா பாரு? நான் வெல்லுவேன் என்ற நம்பிக்கை இல்லையா உனக்கு?” பாரு மறுமொழி புகன்றதாகவே அவனுக்குத் தோன்றவில்லை. “நம்முடைய உண்மையான அன்பு ஒரு நாளும் பொய்யாகாது. பாரு ரங்கனால் கல்லைத் தூக்கவே முடியாது. நீ வேண்டுமானால் பார்.” “அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” “அவன் உடல் வளைந்து வேலை செய்பவன் அல்லன்.” “வேலை செய்யாமல் பணம் எப்படி நிறையச் சேர்க்க முடியும்?” “அவன் கண்கள், அவன் தந்திரத்தில் முழுகி எழுந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன பாரு. பூமி வேலைக்குக் கூலி வைப்பான்; கூலி கொடுக்க என்ன தந்திரமோ?” “தந்திரம் அறிந்திருப்பானென்று தான் நான் அஞ்சுகிறேன், அத்தான். ஏதேனும் மந்திர தந்திரம் கொண்டு கல்லைத் தூக்கிவிட்டால்?” கிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தான்; அது இருதயத்திலிருந்து வந்த சிரிப்பல்ல. பாருவின் கலக்கத்தை விரட்டுவதற்காக, மேகத்தை வாயால் ஊதிக் கலைப்பது போல் கடகடவென்று சிரித்த சிரிப்பு. “அந்த மந்திர தந்திரமெல்லாம் நீ நம்புகிறாயா பாரு? அதெல்லாம் வெறும் பொய். இடையே வந்தவன் வந்தது போல் தோற்றுப் போவான். நான் நாளையே மரகத மலைக்குப் போகிறேன். இரவெல்லாம் கோயில் திண்ணையில் படுத்தாவது, கல்லைத் தூக்கிப் பழகப் போகிறேன்” என்றான். ஜோகியின் உள்ளத்து மூலையில் பொறாமை என்னும் பொறி சுடாமல் இல்லை; ஆனால் ஒரே கணந்தான். அதை வேறு நினைப்பால் வென்று விட்டான். ‘பாரு என் தங்கை; என்றோ இறந்து போன என் தங்கச்சி’ என்று கண்களை ஒத்திக் கொண்டான். அவனுடைய அம்மையின் ஆசை, பாரு அந்த வீட்டுக் கலங்களை ஆள விளக்கை ஏற்ற வர வேண்டும் என்பது. அந்த ஆசையில் அவனைப் போட்டியில் சேர்த்து விட்டாள். அந்த ஆசையில் அவனும் நனைந்தவனாகத்தான் இருந்தான். ஆனால், அங்கே அவர்களைக் கண்டு, கேட்ட கணம் முதல் அவன் புதியவன் ஆகிவிட்டான். அவளை அடைய வேண்டும் என்ற தாபம் வேறோர் ஆவலினால் நிறைந்து விட்டது. அவன் விலகிவிடுவான். ஆனால் ரங்கன்? அவனை எப்படி விலக்குவது? ஒருவேளை பாரு அஞ்சுவது போல், மந்திர தந்திரம் கற்று வருவானோ? இரவிலே வந்து கிருஷ்ணன் கல்லைத் தூக்கிப் பழகும் போது, இப்படித்தான் தூக்க வேண்டுமென்று அவன் சொல்லிக் கொடுக்கலாமா? என்ன விசித்திரம்! போட்டியிடும் அவன், மற்றவனுக்கு வெல்ல உதவுவதா போட்டி? ஜோகி வந்த சோடு தெரியாமலே ஆற்றைக் கடந்து, அக்கரைக்கு நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|