உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 2. பாருவின் ஆசை பாரு அன்றிரவு உறங்கவேயில்லை. அந்தத் தலைமை ஆசிரியரின் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒழித்துக் கொண்டே இருந்தன. “உங்கள் குழந்தைகள் முன்னேற; உங்கள் பிள்ளைகள் படிக்க...” நஞ்சன் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டுமானால் பள்ளிக்கூடம் அவசியந்தானே? கிருஷ்ணன் ஒத்தையில் இருக்கிறான். அவன் மக்கள் அங்கே படித்து விட்டார்கள். மரகதமலையில் பள்ளிக் கூடம் பெரிதாகி அவனுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நலமும் கூட்டப் போவதில்லை. ஆனாலும் அவன் பூமி தந்து பல முயற்சிகள் செய்கிறான். கிருஷ்ணனுடைய மக்கள் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டாலும், தம்பி அஜ்ஜன் மக்கள், ஏனைய குழந்தைகள் நஞ்சனுங்கூடத் தான் அங்கே படிப்பார்கள். அவளால் அந்த முயற்சி தடைபடுவது நல்லதாகுமோ? ஆனால் அந்த மண்ணைக் கொடுத்துவிட்டு அவள் என்ன செய்வாள்? முன்பெல்லாமானாலும் தரிசு நிலம் ஆங்காங்கு இருந்தன. இப்போது எங்கே திரும்பினாலும் தோட்டங்கள், குடிசைகள், வீடுகள், இரண்டொரு கடைகள் மட்டுமே தெரியும் வளைந்த பாதை, கடைத் தெருவாகவே நீண்டு விட்டது. அவளுக்கு எப்படி எங்கே பூமி கிடைக்கப் போகிறது? இந்த நினைவுத் தொடர் நீண்டதும், மனத்தின் அடித்தளத்தில் மறைந்து கிடந்த ஆசை இழை, மெல்ல மெல்ல மேலுக்குத் தெரிந்தது. அந்தக் கறுப்பு மண்ணும், ஆரஞ்சு மரமும் அங்கே இருக்கின்றன. காபியும் ஏலமும் அங்கே பயிராகின்றன. இந்தப் பூமிக்குப் பதிலாக அது கிடைக்குமா? கிருஷ்ண கௌடர் கொடுப்பாரா? வெகு காலத்துக்கு முன்பு அந்த ஆசையில் அவள் ஒரு நாள் போய்விட்டே வந்தாள். இப்போது...? ஆனால், அப்போது நிலவிய உறவு இப்போது இருக்கிறதா? எத்தனை வம்புகள், வழக்குகள்! பொறாமையில் ஊன்றினவனுக்கு ஒரு வேளையேனும் வெற்றி கிடைக்க வேண்டுமே! முன்செலவும் பின்செலவும் செய்து கரியமல்லர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களைப் பேணினார்; பிறகு கிருஷ்ணனின் தம்பி அஜ்ஜன் ஊரில் வந்திருந்து அந்த வகையில் பேணுகிறான். தொழிலாளர் வாழ ஒழுங்கில்லாத ஓலைக் குடிசைகள், நோவு வந்தால் ஓய்வு என்பன போன்ற சலுகைகளையும் அளித்திருக்கின்றனர். பாடுபட்டுப் பலனும் காண்கின்றனர். ஆனால் ரங்கனின் பூமி முக்கால் விகிதமும் குத்தகைக்குப் பயிர் செய்யும் பூமியே. சொற்பமான சொந்தத் தேயிலைத் தோட்டங்களிலும் செடிகள் உரமின்றி மங்கலம் இழந்தாற்போல் வெறிச்சிட்டுக் காணப்படுகின்றன. ஆறணாக் கூலிக்கு உழைக்க வரும் மக்களுக்குப் படுக்க நல்ல குடிசைகளும் இல்லை. மழை நாட்களில், அந்த ஓலைக் குடிசைகளில், பற்றும் பற்றாத துணிமணிகளுடன் சேற்றில் உழலும் புழுக்களைப் போல் அந்த மக்கள் நெளியும் காட்சிகள் காணச் சகிப்பவையா? திடீரென்று ஒன்று சேர்ந்து கொண்டு தேயிலை கிள்ளப் பெண்கள் வரமாட்டார்கள்; ஆண்கள் முள்ளெடுக்க மறுப்பார்கள். ரங்கன் ‘எதிர்க்கட்சியான் தூண்டுதல்’ என்று ஏசுவான். அவன் ஆட்களை இவன் அடிக்கடி ஏற்பாடு செய்வதும், அதன் நிமித்தம் சண்டை பெரிதாக விளைவதும், கோர்ட்டுப்படி ஏறுவதும் கொஞ்சமா நஞ்சமா? இந்த நிலையிலா அவள் கிருஷ்ணனின் வீடு தேடிப் போவாள்? ஜன்ம வைரியாகி விட்ட அவன் வீடு தேடி அவள் போகச் சும்மா விடுவார்களா, அவள் கணவன் வீட்டார்? போராட்டத்துக்கு முடிவையே அவள் காணவில்லை; பொழுதுதான் முற்றுப்புள்ளி வைத்தது. மறுநாள் காலையில் நஞ்சன் பள்ளிக்குச் செல்லுமுன் அம்மையிடம், “அம்மா, நம் பூமியை ஸ்கூலுக்கு எடுக்கிறாங்களா?” என்று கேட்டான். ‘நம் பூமி’ என்று அவன் கூறியதும், பாரு உணர்ச்சி மிகுதியால் பையனைத் தழுவிக் கொண்டாள். “ஆமாம் மகனே; நீ படித்துக் கிருஷ்ண கௌடரை விடப் பெரியவனாக வந்து, பெரிய தேயிலைத் தோட்டம், கார் எல்லாம் வாங்குவாயோ?” “அம்மா, நான் என்ன படிக்கப் போறேன் தெரியுமா?” “சொல்லுடா குழந்தாய்!” “நான் ஃபோர்த் பார்மில் ‘இன்ஜினீயரிங்’ பகுதியில் சேரப் போகிறேன். கோயம்புத்தூர் காலேஜில் படிப்பேன், அம்மா.” “கிருஷ்ண கௌடர் படித்திருக்கும் படிப்பா?” என்றாள் பாரு. பேதை வேறு எதைப் பற்றி அறிவாள்? “இல்லை அம்மா; வந்து நம் ஸ்கூல் கட்ட, பாலம் கட்ட, என்ன என்னவோ எல்லாம் கட்ட” என்றான் நஞ்சன். பையனை முகத்தோடு முகம் சேர்த்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் அவள். நஞ்சுண்டர் அருளால் உதித்த அவள் மைந்தன், அறிவும் கூர்மையும் ஒளியிடும் செல்வன் படிக்க வேண்டாமா? “எட்மாஷ்டர் ஸாரை வரச்சொல்கிறாயா குழந்தை?” என்று சொல்லி அனுப்பினாள். அன்றிரவு ஏழு மணி இருக்கும். தலைமை ஆசிரியர் எதிர்மனை வந்ததையும், பாரு தன் பூமியைக் கொடுக்க உடன்பட்டுச் சம்மதம் தெரிவித்ததையும் கேள்வியுற்ற ரங்கன் புயலாக நுழைந்தான். “பாரு, பாரு!” “என்ன?” என்றாள் அவள் சாவதானமாக. நஞ்சன் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “என்ன சொன்னாய், ஸ்கோல் ஹெட்மாஸ்டரிடம்?” பாரு மறுமொழியின்றி நின்றாள். ஜோகி அங்கு நிற்கவே விரும்பாமல் வெளியே சென்றான். “என்ன சொன்னாய்? யாரைக் கேட்டுக் கொடுக்கிறாய்?” “ஏன்? எனக்கென்று மாமன் தந்த பூமி. அது என்னுடைய சொந்தம். நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன?” “என்னது? உனக்கு அவ்வளவு துணிவு வந்து விட்டதா?” பாரு ஏளனமாக நகைத்தாள்; “நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? உங்களுக்கும் எனக்கும் என்றோ உறவு விட்டு விட்டது. உங்கள் வழி எதிலேனும் நான் குறுக்கிடுகிறேனா?” “அதிகப் பிரசங்கி! பூமியை என்ன வேண்டுமானாலும் செய்யவா உன்னிடம் சிற்றப்பன் சொன்னார்?” “ஏன் கத்துகிறீர்கள்? ஒருவர் மீது அநாவசியமாகப் பொறாமைப்பட்டுப் பயன் என்ன? அந்தப் பள்ளிக்கூடத்தில் நம் குழந்தைகள் படிப்பார்கள்; என் பையன் படிப்பான்” என்று கூறி முடித்து விட்டு பாரு நகர்ந்து விட்டாள். “ஜோகி!” என்று திரும்பினால், ஜோகியும் இல்லை. ரங்கனுடைய ஆத்திரத்துக்கும் சீற்றத்துக்கும் இலக்கு கிடைக்கவில்லை. பொறாமை உணர்வுக்கும் போட்டி வெறிக்கும் உணவு கிடைக்கவில்லை. வருஷக் கணக்காக அவனும் அகலக்கால் வைத்து உழலுகிறான். அந்தப் பக்கத்தில் கிருஷ்ணனுக்கு மேலாகத் தன் புகழ்ச் செல்வம் ஓங்க வேண்டுமென்று அவனும் செல்லாத திசை இல்லை; தோல்வி, ஒவ்வொன்றிலும் தோல்வி! ஜில்லா போர்டில் ஒருவன்; கவர்னர் மாளிகை விருந்து வைபவத்தில் அழைப்பு. எங்கு நோக்கினும் கிருஷ்ண கௌடர் புகழ்! மரகத மலைப் பள்ளியைத் திறந்து வைக்கும் பிரமுகனான அவனும் வருவான். அவன் நன்கொடைகளையும் நல்ல முயற்சிகளையும் குறித்து, எல்லோரும் வானளாவப் புகழுவார்கள்; காரிலிருந்து இறங்குகையிலேயே கைதட்டுவார்கள்; ரோஜா மாலை போடுவார்கள். ரங்கனுக்கு என்ன உண்டு; ஆழ்ந்து பார்த்தால், கடனும் முதலும் சரிக்குச் சரி இருக்கும். தடதடவென்று அவன் வீட்டுக்குள் சென்றான். விளக்கடியில் பையனும் பெண்ணும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மூத்த பையன் புகைப்பிடித்த வண்ணம் வேறிரண்டு பையன்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான். வந்த ஆத்திரத்தில் சண்டை போட்ட இருவர் முதுகுகளிலும் அடி வைத்து விலக்கினான். அதற்குள் கௌரி உள்ளிருந்து வந்தாள்; உடல் சதை போட்டு எத்தனை விகாரம் ஆகிவிட்டாள்! “ஏன் அடிக்கிறீர்கள் குழந்தைகளை?” “ஒருவர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் தொல்லை தானோ?” “பின்னே, குழந்தைகள் சத்தம் போடமாட்டார்களா?” என்ற கௌரி, “காபி குடிக்கிறீர்களா?” என்றாள். “ஒரு மண்ணும் வேண்டாம்” என்று அவன் மாடிக்கு ஏறினான். கௌரி ‘ஸ்வஸ்திக் மாலை’யைப் பற்றி அவன் செவிகளில் போட எண்ணியிருந்தாள். சமயம் சரியில்லை. கிருஷ்ணனின் மனைவி என்ன என்ன நகை புதிதாக வாங்கியிருக்கிறாள் என்பவை போன்ற செய்திகளெல்லாம் அவள் ஊர்ப் பெண்களின் வம்புப் பேச்சுக்களிலிருந்து அறிவதையே குறியாகக் கொண்டிருந்தாள். தனக்கு இன்ன இன்ன அணி மணிகள் வேண்டும் என்று அவள் நேரடியாக ரங்கனிடம் கேட்பதை விட, ‘கிருஷ்ணனின் மனைவி வாங்கினாளாம்’ என்று கூறினால் போதும்; ரங்கன் கோவைக்குச் சென்றேனும் வாங்கி வந்து விடுவான். இந்த அம்சம் காரணமாக, அவள் கணவனிடம் பரிபூரண நிறைவைக் கண்டாள். தன் வாழ்வு யாருக்கும் கிடைக்காதது என்று அவள் இறுமாந்ததும் அதே காரணத்தினால் தான். நிலத்தையும் நீரையும் இன்னொன்றையும் பற்றி அவளுக்கு என்ன கவலை? பாரு, கணவன் வந்து கலக்கியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்த பூமி போய்விடுமுன், அவள் பற்றிக் கொள்ள வேறு மண் வேண்டுமே! முன்போல, இன்னொரு முறை கிருஷ்ணனின் வீட்டுக்கு அவள் ஏன் செல்லக்கூடாது? அவன் என்றுமே அவளுக்குத் தீமை நினைப்பவனல்ல; பகைக்குக் காரணமாக இருப்பவன் ரங்கனே என்பது அவள் உள்மனம் அறிந்த உண்மை. தேன்மலை ருக்மணி மட்டும் என்ன, அவளுக்கு விரோதியா? “நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று கவடில்லாமல் கேட்பவள் தானே அவள்? பகையாளியின் மனைவி என்று வேற்றுமை பாராட்டுகிறாளோ என்னவோ? உண்மையில் ரங்கனுடன் அவளுக்கு என்ன உறவு மிஞ்சியிருக்கிறது. அவள் மனம் வைத்து அந்தக் கறுப்பு மண் அவளுக்குச் சொந்தமாகி விட்டால், அவள் பிறந்த மணிக் கல்லட்டிக்கே சென்று விடலாம். விரோதத்தையும் வேற்றுமையையும் பார்த்துக் கொண்டு அவள் திண்டாட வேண்டாம். ஆனால் நஞ்சன்? மணிக்கல்லட்டியிலிருந்து தினமும் பள்ளிக்கு வரமாட்டானா? காலையில் காபியும் தோசையும் வைத்துத் தர வேண்டுமாம். அழகான சோற்றுப் பாத்திரம் ஒன்று வாங்கிச் சாப்பாடு போட்டுக் கொடுக்கலாம். அவன் அடுக்கில் சாப்பாடு கொண்டு வந்து அந்தப் பூமியில் வேலை செய்கையில் வைத்துக் கொண்டிருப்பாள். பகலில் அந்த ஆரஞ்சு மரத்தடியில் பையன் வந்து உண்டு கொள்வான்... இத்தகைய கற்பனைகளுக்கு முடிவே இருக்கவில்லை. அன்று காலையில் எழுந்ததுமே அவள் எவரும் அறியாமல் கிருஷ்ணன் வீட்டுக்குச் செல்வதாகத் தீர்மானம் செய்து கொண்டாள். காலையில் நஞ்சன் பள்ளி சென்றதுமே, அவள் வெளுத்த முண்டெடுத்து உடுத்திக் கொண்டாள். வெகு நாட்களாக மடித்து வைத்திருந்த ரவிக்கை ஒன்றை அணிந்து மேல் முண்டுக்கு மேல் சால்வையும் போர்த்துக் கொண்டாள். விடுவிடென்று கீழ்மலைப் பக்கம் இறங்கினாள். ரங்கம்மை விறகு சேகரிக்கச் சென்றிருந்தாள். ராமன் மனைவி அடுப்படியில் வேலையாக இருந்தாள். அவள் செல்வதைப் பார்க்கக் கூட எவரும் குறுக்கே தென்படவில்லை. கீழ்மலையிலிருந்து கூனூர் பஸ் செல்வதை அவள் அறிவாள். அங்கிருந்து ஒத்தை சென்றாலும் செல்லலாம், இல்லையேல் குறுக்கே நடந்து, மனிதர் செல்லும் தடமறிந்து ஒத்தை செல்ல வேண்டும். எப்படிச் செல்வதென்ற முடிவுக்கு இன்னும் வராதவளாகவே அவள் நடந்தாள். பஸ் நிற்கும் இடம், தவிர பாதைக்கப்பால் இன்னும் ஆங்காங்கே குத்துச் செடிகளும் மரங்களுமாகக் காடுகளின் துண்டு துணுக்குகள் இருந்தன. ஆற்றுப் பாலத்தடியில் இருந்த பழைய துரை பங்களா அடைத்துக் கிடந்தது. பஸ் வந்ததற்கு அடையாளமாக அங்கு இரண்டு டீக்கடைகள் முளைத்திருந்தன. மலையாளம் பேசும் நாயர் கடையில் கிராமபோன் ஒன்று மூக்கால் பாடிக் கொண்டிருந்தது. பாதைக்கப்பால் மேலே தொலைவில் பெரிய மரம் ஒன்றை இருவர் அறுத்துக் கொண்டிருந்தனர். “பஸ் எப்போது வரும்?” என்று அவள் தன் மொழியில் கேட்ட போது, டீக்கடை நாயர் புரிந்து கொண்டு, “பன்னிரண்டு மணிக்கு” என்று அறிவித்தார். நிற்கலாமா, நடக்கலாமா என்று அவள் யோசனையில் இருந்த சமயம், அந்தப் பளபளக்கும் கறுப்புக் கார் சிறிது தூரத்தில் வந்தது பாருவுக்கு ஒரு கணம் இருதயம் துடிக்க மறந்து விட்டாற் போல் இருந்தது. அந்தக் கறுப்புக் கார்? கிருஷ்ணன் வருகிறானோ? இல்லை, அவளும் மகளுமோ? அவள் அசைவற்று நிற்கையிலே கார் வளைந்து திரும்பி அவளைக் கடந்து சென்றது. கிருஷ்ணன் முன்பக்கம் அமர்ந்திருந்ததை அவள் கண்டாள். கார் முன்னே சென்றதும் பாருவும் பின்னே வேகமாக நடந்தாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|