உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் 2. கார் இரவு மலையழகியை விழுங்க வரும் கரிய பூதங்கள் போலக் கார் காலத்து மேகங்கள் அந்த இரவில் தம் இச்சையாகத் தெருவென்றும் வீடென்றும் குன்றென்றும் பாராமல் வெற்றிக் காற்றின் வேகத்தில் அலைந்து கொண்டிருந்தன. துயரத்தின் வசப்பட்டுப் பொட்டுப் பொட்டென்று மலை மங்கை நிலத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். வானத்தில் வளர்பிறைச் சந்திரன் இத்துயரக் காட்சியைக் காணச் சகியாதவனாக மறைந்தே போனான். பகலிலேயே வெறிச்சோடிக் கிடக்கும் உதகை நகரத் தெருக்களிலே இத்தகைய இரவுகளில் எப்படி நடமாட்டம் இருக்கும்? கதிரவன், கண் திறந்தே ஒரு மாதமாகி விட்டது. இரவும் பகலும் நீண்டு வளரும் இத்தகைய நாட்களில் ரங்கனின் வண்டு சோலை வீடு, அவனுக்கும் அவனை ஒத்தவர்களுக்கும் சூதாடும் மனையாகத் திகழ்வது வழக்கம். அதிலும் மழை அதிகமாகிக் கிழங்குகள் மண்ணுக்குள் கெட்டுவிடும் என்ற சாக்கில், ரங்கன் விதைத்திருந்த முக்கால்வாசிப் பூமியிலும் கிழங்கெடுத்துப் பணமாக்கியிருந்தான். அந்த வாரத்தில், பணப்புழக்கம் இருக்கையில், அந்த மனையில் காசு கலகலக்க வெறியும் மயக்கமும் மனிதனை ஆட்டி வைக்கும் ஆட்டங்கள் நடைபெறாமல் இருக்குமா? வாயிலில் என்றோ ரங்கன் கொண்டு வைத்த வால்பேரிக் கன்று, கப்பும் கிளையுமாகப் படர்ந்து பரவி அந்த வீட்டைத் தன் கிளைகளுக்கடியில் ஆதரித்து நிற்பது போல் நின்றது. ‘உள்ளே நடப்பவை எனக்குத் தெரியும். ஆனால் என்னை வைத்து வளர்த்தவன் அவன்; நான் நன்றி சொல்ல மாட்டேன்’ என்று கூறுவது போல், அந்த இருளிலே, அந்த வீட்டையே மறைத்து நின்றது அந்த மரம். உள்ளே மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்த ஆட்டம், நள்ளிரவைத் தாண்டியும் நிற்கவில்லை. சுருட்டுப் புகை வெளியே அலையும் கருமேகம் உள் வந்துவிட்டதோ என்று ஐயுறும்படி சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலே ஓர் ஓரத்திலிருந்த மெழுகுவர்த்தி விளக்கு, அந்த வானத்துச் சந்திரனின் நிலையில் துன்புற்றாற் போல, ஒளியை உமிழ்ந்து புகையுடன் போராடிக் கொண்டிருந்தது. குப்பி மதுவின் நெடியும், பணவெறியும் அங்கு ஆடுபவர்களின் பகுத்தறிவை விழுங்கி, அவர்களையே ஆட்சி புரிந்து கொண்டிருந்தன. பெஞ்சமின் சீட்டை அடித்துக் கலைத்துக் கொண்டிருந்தான். அவன் தச்சுப் பட்டறையில் ‘பாலிஷ்’ ஏற்றும் தொழிலாளி. அழகிய மரச்சாமான்களையும் தரையையும் பளிங்காக்கும் சாமர்த்தியம் பெற்றிருந்த அவன், மனசைப் பளிங்காக்கும் எண்ணமே அறியாதவன். ராஸ் என்ற இன்னொரு கூட்டாளி ஆங்கிலோ இந்தியன். உள்ளூர்ப் பாண்டு கோஷ்டியில் குழல் ஊதுபவன். கையில் காசு அகப்பட்டால் சூதாடுவது ஒன்றே அவன் குறி. மேசையின் மீது இருந்து குப்பியில் பாதியைக் காலி செய்துவிட்டு, கனத்த சுருட்டை வாயில் வைத்துப் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். ஆட்டத்திலே அவனுக்கு அன்று அமோக வெற்றி. ரங்கனின் கிழங்குக் காசை அவன் விழுங்கி விட்டான். ரங்கன் கோட்டுப் பையில் மீதியிருந்த ஒரே நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேசைமேல் வைத்தான். ‘இன்று மூன்று அதிருஷ்டம் நம் பக்கம் இல்லை. என்ன இழவு மழை, ஓயாமல் மூன்று மாசமாய் ஊற்றுகிறது?’ என்று கூறிக் கொண்டே சீட்டைப் பார்த்தான். “இதுதான் கடைசி” அவன் கூறுகையில், பெஞ்சமின் விழிகள் பிதுங்கி வருவனபோல் நோக்கினான். ராஸ் புகையேறிய உதடுகள் அகல, கைச் சீட்டைக் கீழே போட்டான். அன்று வெற்றித் திருமகள் ரங்கன் பக்கம் இல்லை. கடைசி ஆட்டத்தில் மொத்தமாக வைத்து இழந்தவற்றைத் திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கை படுத்து விட்டது. மாதா கோயில் மணி இரண்டு அடிக்கையிலே, ரங்கனைத் தனியே விட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள். மீதி இருந்த மதுவை விழுங்கி விட்டு அவன் கட்டிலில் விழுந்தான். பாழான மழை! கிழங்குப் பணம் வந்த சோடு தெரியாமல் கரைந்து விட்டது. கிழங்கு விற்று அடைப்பதற்கான கடன்கள் பூதங்களென வாயைப் பிளந்து கொண்டு காட்சியளித்தன. சட்! சனியன் பிடித்தவள். அந்தப் பாரு வந்த வேளை, அவன் கையில் முன்போல் காசே தங்குவதில்லை. பணம் என்னவோ ஆயிரக்கணக்கில் வருகிறது; ஆனால் ஆயிரமாகவே போகிறதே! வெறியும் குழப்பமும் சேர்ந்த அந்த நிலையில், பாருதான் அவன் முன் தோன்றிக் கோப வெறியாக பொறாமை வெறியாக ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குப் போய் அத்தனை கனவு கண்டான்! அவளைக் கட்டினால் அந்தக் கிருஷ்ணன் பயலின் கர்வம் குலையுமென்று மனப்பால் குடித்தேன்! அவன் மாடி வீட்டில், அதே நேரத்தில் கொக்கரிக்கிறானே! ஹட்டியில் அவனைக் கண்டால் தெய்வத்தைக் கண்டாற் போல் கும்பிடுகிறார்களே! சுயநலத்துக்காகச் செய்வதை எல்லாம் ஊருக்குச் செய்வதாகத் தம்பட்டம் போட்டு ஊரை ஏமாற்றுகிறான்! பாருவும் நல்லவளா? கல்யாணத்துக்கு முன்பு, அவனுடன் இழைந்து குலவினவள் தானே? அன்று மாதலிங்கேசுவரர் கோயில் தீமிதி விழாவின் போது, அவளருகில் நின்று பேசினான், மரியாதை கெட்டவன். போதாக் குறைக்குக் கார் அனுப்பி, அவளை ஒத்தைக்கு அழைத்து வரச் செய்திருக்கிறானே! படித்தவன் எது வேண்டுமானாலும் செய்து விடலாமோ? பாரு ஒத்தைக்கு வந்து போன செய்திக்குக் கிழங்கு மண்டியில் மூட்டை சுமக்கும் தொரியன் மகன் அன்று தான் கூறியிருந்தான் ரங்கனிடம். முதல்நாள் காலையில், இத்தனை சூதுகளுள்ள அந்தப் பொய்மகள் அவனை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்று பொருள்பட ஏசினாள். கீழ்மகளை ஒதுக்கி, ஒழித்துக் கட்டிவிட்டு, ஐந்தாறு மாசங்களாக அவன் மனசை ஈர்த்து அவனோடு வாழ விரும்பும் கௌரியைக் கொண்டு வருவது முடியாத செயலா? அவளும் மணிக்கல்லட்டிப் பெண் தான். கன்னியாகவே அவனை வரித்தாளாம் அவள்; அவளைக் கோத்தைப் பக்கம் முதலாக மணம் செய்து கொடுத்திருந்தார்கள்; கணவனுக்கும் அவளுக்கும் ஆரம்பம் முதலே ஒத்து வரவில்லை. போதாக்குறைக்கு அவனே அவளை விலக்கிக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விட்டான். பிறந்தகம் வந்த கௌரியை வேறு எவரும் கொள்ள வருமுன்பு ரங்கன் முந்திக் கொண்டான். தலைக்கேறிய போதையின் வெறியிலே, அவனுள் வெளிவராமல் ஆழ்ந்திருந்த பல உணர்ச்சிகளும் சொற்களாக வெளிவந்தன. கேட்பவர் யார்? புகையேறிய அந்த நாலு சுவர்களுக்குங் கூட, அவனுடைய இரகசியங்கள் புதியன அல்லவே! போதை தெளிந்து, அவன் நல்ல நினைவில், கண் விழிக்கையில் மறுநாள் பகல் உச்சிக்கு விரைந்து கொண்டிருந்தது. பளிச்சென்று கதிரவன் முகம் காட்டுவதும், உடனே மேகத்திரைக்குல் மறைவதுமாகக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். கையில் காசு இல்லாத நிலை அப்போதுதான் தெளிவாக அவன் உணர்வில் படிந்தது. ஓர் ஏகராவில் இன்னும் கிழங்கு எடுக்கவில்லை. அது பிந்தி விதைக்கப்பட்டது. செடிகள் வாடி மட்கவில்லை. கிழங்கு கொஞ்சங்கூட முற்றியிருக்காது என்று அதை விட்டு வைத்திருந்தான். ஆனால், காலந்தாழ்த்திக் கொட்டி விட்ட மழை, அதை எப்படி வைத்திருக்கிறதோ? படிக்குப் பாதியேனும் விளைவு தேறுமோ என்னவோ? கௌரியின் அண்ணனைக் கண்டு, ரூபாய் ஐம்பதேனும் வைத்து அழைத்து வரவேண்டும். பஞ்சாயத்தைக் கூட்டி இந்தக் கள்ளியை விலக்க, முதலில் காலும் கையும் வழிந்து ஐந்து மாசமாகப் படுத்திருக்கும் சிற்றப்பன் இடம் கொடுப்பாரோ? யோசனை செய்தபடியே எழுந்து முகம் கழுவிக் கொண்டான்! கடைவீதிப் பக்கம் ‘மிலிடேரி’ ஹோட்டலில் நுழைந்து, உண்டியருந்திவிட்டு அவன் வருகையில், ‘ஜான்ஸன் எஸ்டேட்’ வண்டி, சந்தைப் பக்கம் வந்து, திரும்பியதைக் கண்டான். துரை இல்லை. துரைசானி மாத்திரம் வண்டியில் இருந்தாள். நல்ல தருணமென்று ரங்கன் பல்லைக் காட்டி துரைசானிக்கு ஒரு ‘ஸலாம்’ போட்டுவிட்டு, வண்டியில் ஏறி உட்கார்ந்தான். ‘எஸ்டேட்’ பக்கம் இறங்கி, அவன் நேராக நடந்தான். மரகதமலையின் சமீபம் வருகையிலே அவனுக்குச் சடேரென்று அந்நேரம் கௌரியைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று; திடீரென்று வானம் இருண்டு கவிந்தது. இடி முழக்கம் பேரோசையாக ஒலித்தது. விரைந்து அவன் செல்லுகையிலே, புதிதாகத் தேயிலை பயிரிட்ட பகுதியில் ஸில்வர் ஓக் மரத்தடியில், கிருஷ்ணன் நிற்கக் கண்டான். “ஓ ரங்கனா? சௌக்கியமா? சிற்றப்பா எப்படி இருக்கிறார்? நான் சற்றுமுன் தான் நேராக வந்தேன்” என்று விசாரித்தான் அவன் ரங்கன் அருகில் வந்து. தான் ஒரு காலத்தில் காதலித்த மங்கையின் மணாளன் அவன். அவன் நடப்பும் வாழ்வும் சரியில்லை என்று உணர்ந்த கிருஷ்ணன் மனம் நொந்திருந்தான். அவளுக்காக அவனை நெருங்கிச் சீர்திருத்த வேண்டும் என்ற ஆசையும் அவனுள் முளையிட்டிருந்தது. கௌரியுடன் ரங்கன் தொடர்பு கொண்டு, அதன் விளைவாக மணிக்கல்லட்டியிலும் மரகதமலையில் அவன் வீட்டிலும் எழுந்த கசமுசப் பேச்சுக்களை வேறு அவன் அறிந்திருந்தான். அவனையும், சரிவுகளில் விரிந்த தேயிலைச் செடிகளில் பசுமையையும் கண்டதனால் ஏற்பட்ட மன எரிச்சல் அடங்காமல் ரங்கனுக்குப் பொங்கியது. “வக்கீல் ஸாருக்குத் தெரியாமல் எனக்கு எப்படி வீட்டு விஷயம் தெரிய முடியும்?” என்றான் சம்பந்தம் இல்லாமல் ரங்கன் அடித்தொண்டையில். “ஓ, இல்லை. எங்கே, மணிக்கல்லட்டிப் பக்கம் போகிறாய் போல் இருக்கிறதே. சிற்றப்பாவுக்கு உடல் நிலை தேவலையா! என்று விசாரித்தேன். எல்லாரும் இங்கே தானே இருக்கிறார்கள்?” என்றான் குறிப்பாக. “அதுதான் நான் உன்னை விசாரித்தேன். ஏய், எனக்கு ஒன்றும் தெரியாதென்றா நினைத்தாய்? உன் மீது வழக்குத் தொடுத்து பஞ்சாயத்தில் உன் மானம் சந்தி சிரிக்கச் செய்வேன்.” ரங்கனின் திடீர்க் கோபமும், வலுச் சண்டைக்கு அழைத்த விதமும் கிருஷ்ணனுக்கு அச்சத்தைக் கொடுத்தன. அவன் கோபத்துக்குக் காரணமும் அவனுக்குப் புரியவில்லை. “என்ன தப்பு நடந்தது ரங்கா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றான். “புரியவில்லையா? பார்த்துப் பேசுடா?” என்றான் ரங்கன். “என்ன நடந்தது? எனக்குப் புரியவில்லையே! விளையாட்டாகத்தான் பேசுகிறாயா?” என்றான் கிருஷ்ணன் மீண்டும் சமாளித்துக் கொண்டு. “யாரடா அவன் யானை, பூனையிடம் விளையாட வருகிறான்? கார் அனுப்பிப் பிறன் மனைவியை அழைத்துச் சென்றவன் யாரடா? பதரே!” விஷயம், இவ்வளவு கீழ்த்தரமாக, ரசாபாசமாக மாறிவிடும் என்பதைக் கிருஷ்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ஓ! பாரு ஒத்தைக்கு வந்ததைச் சொல்கிறாயா? ருக்மிணி தான் அழைத்து வர வேண்டும் என்று வண்டி அனுப்பினாளாம். நான் கூட மேட்டுப்பாளையம் போயிருந்தேன். நீயா ரங்கா இப்படிப் பேசுகிறாய்? என்னால் நம்ப முடியவில்லையே!” “ஓகோ! வக்கீல் ஸாரில்லை? புரட்டி புரட்டிப் பேசத் தெரியாதா?” இப்படி அவன் கீழ்த்தரமான முறையில் வலுச் சண்டைக்கு இழுத்தது. ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்; மழை பலத்த காற்றுடன் பொழியத் தொடங்கியது. ரங்கனின் முகத்தைக் கூடப் பாராதவனாகக் கிருஷ்ணன் மணிக்கல்லட்டிப் பக்கமே ஓடலானான். அவன் மணிக்கல்லட்டி வீட்டில் சிற்றப்பன், அத்தை முதலானோரைப் பார்க்கவே அப்போது புறப்பட்டிருந்தான். அலுவல்கள் நிறைந்த அவனுடைய வாழ்விலே தொழில் துறை வெற்றியும், குடும்ப வாழ்வின் பரிபூரண நிறைவும் கூடி, என்றோ உள்ளத்தில் பூத்திருந்த காதல் மறைந்து மேடிட்ட கனவாகி விட்டது உண்மை. ஆனால் எப்போதேனும், ஏமாற்றத்தில் உருவில் வறண்டு தேய்ந்த பாருவைக் காண நேர்ந்தால், அவனுக்குத் துன்பம் எழாமல் இல்லை. அதிருஷ்ட தேவதை, அந்தப் பேதையின் பக்கம் வஞ்சமல்லவோ செய்து விட்டாள்? அவன் வரைக்கும் கனவாகிவிட்ட நினைவை அவள் பக்கம் ஆறவொட்டாமல் தோண்டித் தோண்டிப் புண்ணாக்கிக் கொள்ளும் நிலைக்கல்லவோ ஆக்கிவிட்டாள்? ருக்மிணியிடம் நினைவு மூட்டி கார் அனுப்பி, அவளையும் குழந்தைகளையும் அவன் ஒத்தைக்கு அழைத்து வரச் சொன்னது உண்மையே. ருக்மிணிக்குத் தன் கணவனுடைய செல்வாக்கையும் வன்மைகளையும், படித்து நாகரிகமடைந்த தன் சினேகிதிகளைப் பற்றிய பெருமைகளையும் கிராமத்தார் வந்து காண்பதில் தனியான பெருமிதமும் மகிழ்ச்சியும் உண்டு. அது தவிர, அவன் உள்ளத்தில் மாசான எண்ணமோ பொறாமையோ ஏதும் இல்லாததும் அவன் பாக்கியந்தான். பாருவை அழைத்து வரச் செய்தான். ஆனால் அவள் தன் மனைவியின் பெருமைகளைக் கேட்டுக் கொண்டு உள்ளக் கனலுடன் வேதனைப் படுகிறாள் என்பதை ஒரு நோக்கிலேயே அறிந்து கொண்ட அவன், அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள மனமில்லாதவனாக, வீட்டை விட்டே வெளியே சென்று விட்டான். அவள் கிராமம் திரும்பிய மறுநாளே அவன் வெளியூரிலிருந்து திரும்பி வந்தான். இரவு உணவு கொள்ள அவன், அமர்ந்த போதுதான் ருக்மிணி பாருவைப் பற்றிப் பேச்சை எடுத்தாள். “பாவம்! பாரு அக்காவின் மனசு சரியாக இல்லை. அக்கா, தங்கை இரண்டு பேருக்குமே ஆண்பிள்ளை இல்லை, ரங்கண்ணன்... தெரியுமா உங்களுக்கு?” என்றாள் புதிர் போடுவது போல். “ஏன், வேறு மணம் செய்து கொள்கிறானாமா?” என்றான் கலத்தில் உள்ள சோற்றைப் பிசையாமலே. “பெரியவர் அந்த வழக்கம் குடும்பத்திலே கூடாது என்று நிச்சயமாக இருப்பதனால் தானே, தன் மகனுக்குக் கூட வேறு கல்யாணம் செய்யவில்லை? நானே சாவேன், என் பையனுக்குக் குழந்தையாக வருவேன் என்று சொல்லிக் கொண்டு, அவரும் கைகால் முடக்கமாய் மாசக்கணக்காய்ப் படுத்திருக்கிறார். பாரு அக்கா வாய்விட்டு எதுவும் சொல்லவில்லை. என்றாலும் மனத்தில் சந்தோஷம் இல்லை. ஏதோ பூமி விளைவு பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தாள்” என்றாள் ருக்மிணி. பின்னும் நினைத்துக் கொண்டவளாக, “பிடிக்காத இடத்தில் கஷ்டப்படுவதை விடப் பிரிந்து போகலாம் என்று தோன்றுகிறதோ என்று நான் நினைத்தேன். வேறு ஒருத்தர் விஷயம் பேசும் போது, ‘அதிர்ஷ்டம் இல்லை’ என்று முதலிலேயே தீர்ந்து போய்விட்டதே! அதை எத்தனை தரம் பரிட்சை பார்க்க வேண்டும்?” என்றாள். நல்ல உரிமைகளை அழகாக அபூர்வமாக உபயோகிக்காமல் தாறுமாறாக இழுத்து சமுதாயத்தின் ஒழுக்கத்தைக் குலைக்கும் வழக்கம் சிலரிடம் இருப்பது உண்மையே. அது ரங்கனிடமா இருக்க வேண்டும்? இத்தகைய இழிவுகள் சமுதாயத்தில் எப்போது விலகும்! பாரு எந்த விதத்திலே ஆறுதல் பெறுவாள்? வீணாக ஒரு மலரை நுகர்ந்து வீசிவிட்டு வேறு மலர் நாடும் கீழ்மகன், அதற்கு ஒரு காரணமும் காட்டுவது விந்தை? பாருவைப் போன்ற ஒரு மனைவியை அடைந்து, இரண்டு மாணிக்கங்களைப் போல் இரு பெண்களையும் அடைந்தவன், இன்னொருத்தியை வேட்பானா? அந்தக் கார்கால இரவி, அவன் கண்களை இமைக்கச் செய்யாமல், அன்பான உறவினரின் தோழமையில் மகிழ் வெய்த விடாமல் நீண்டு வளர்ந்தது. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|