உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 1. துண்டு நிலம் குன்றுக்குக் கீழே கப்பி போட்ட சாலையில் பளபளத்த கறுப்புக் கார் வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்து மணி கணகணவென்று ஒலித்து விட்டது. அந்த மணி அடித்தவுடன் குழந்தைகளுக்குத்தான் எத்தனை கொண்டாட்டம்! கணகண கணகண வென்ற அந்த ஒலியிலே, ‘உங்களையெல்லாம் விட்டாயிற்று’ என்ற விடுதலையும் மகிழ்ச்சியும் இணைந்துதானே இருக்கின்றன? கூண்டிலிருந்து பறவைகள் வெளிப்பட்டு வந்தாற் போல் எத்தனை குழந்தைகள்! மரகதமலை ஹட்டியிலே இத்தனை சிறுவர்களா இருக்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் மாடுகளை மேய்த்துக் கொண்டு சரிவிலே படுத்திருந்த சிறுவர்களை அந்தக் காலத்தில் பாரு அறியாளா? காடாக இருந்த இடங்களெல்லாம் இப்போது நாடாகி விட்டன. மலைகளெல்லாம் பச்சை கொழிக்கும் தேயிலை! குறுஞ்சிமயமாக, நீலமயமாக மலை முழுவதும் தோன்றுமே? குறிஞ்சிப் பூத்ததே தெரியவில்லையே! முன்பு, லிங்கையா மாமன் கடைசி முறையாகத் தீ மிதித்த வருஷம் குறிஞ்சி பூத்திருந்தது. அதற்குப் பிறகு என்ன என்னவோ நிகழ்ந்து விட்டன. நஞ்சன் பிறந்தே ஒரு குறிஞ்சிப் பருவம் ஆகியிருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகள் அத்தனை பேர்களும் ஹட்டிப் பிள்ளைகள் என்று சொல்வதற்கில்லை. தேயிலைத் தோட்டங்களில் மலையாளச் சீமையிலிருந்தும், கொங்குச் சீமையிலிருந்தும் வேலை செய்ய வந்த மக்கள் பலர். புதிது புதிதாக மேட்டிலும் பள்ளத்திலும் வீடுகள் முளைத்து விட்டன; தேயிலைத் தொழிற்சாலைகள் புகைக்க இடம் பெற்றுவிட்டன. மரகதமலை ஹட்டியில் வீட்டுக்கு ஒரு பெண்ணும் ஆணும் குறையாமல் பூமி திருத்திப் பாடுபட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றிய நாள் மலையேறி விட்டது. வீட்டுக்கு ஓர் ஆனும் உழைக்கச் சோம்பரானான். சட்டையும் உடுப்பும் போட்டுக் கொண்டு கீழ்மலைப் பக்கம் குன்னூர் செல்லப் பஸ் வசதி வந்ததை நினைத்துக் கொண்டு டவுனுக்குப் போகும் காலம் வந்து விட்டதே! ஒத்தைக்குப் போவதுதான் இருக்கவே இருக்கிறது! குதிரைப் பந்தயங்கள், காபி ஹோட்டல்கள், சினிமாக் காட்சிகள் என்று எத்தனையோ பொழுது போக்குகள். போண்டாவும் பஜ்ஜியும் மசாலா தோசையும் ருசி கண்ட நாவுக்கு, கொறளியும் சாமையும் பிடிக்குமா? மரகதமலை ஹட்டியில் பண ஆசை பற்றாத மனிதர் இல்லை. பணத்துக்குப் படிப்பு ஒரு மூலாதாரம் அல்லவா? முன்னமே நாமும் படிக்காது போனோமே என்ற ஆத்திரத்துடன் பிள்ளைகளை எல்லாப் பெற்றோரும் பள்ளிக்கும் அனுப்பினார்கள். பெண்கள் விதவிதமான துணிகள், சேலைகளை விரும்பினார்கள்; கிடைக்காது போன பொருள்களைக் கேட்க ஆசைப்பட்டார்கள். மரகதமலை ஹட்டி மட்டுமா? அநேகமாக மலை வாழ்விலேயே புரட்சி வந்துவிட்டது. “ஹோய், ஹோய்!” என்று கத்திக் கொண்டே சிறுவர்களின் கூட்டம் பாதையில் வரும் கிருஷ்ணனின் காரைத் தொடர்ந்து ஓடி வந்தது. பளபளக்கும் புதுக்கார், முன்புறம் முகப்பில் பறவை இறகு விரித்தாற் போல் ஒரு பொம்மை. விளைநிலத்திலிருந்து வீடு திரும்பி வந்த பாரு, காரிலிருந்து தேன்மலை ருக்மிணியும் குழந்தைகளும் இறங்கியதைப் பார்த்தாள். சந்தனப் பட்டுப் புடவை அணிந்து, தன் கையில் மகளை அழைத்துச் செல்கிறாள். காதில் வைர லோலாக்குத் தொங்குகிறது; கழுத்தில் சுடரிடும் மாலைகள்; கையில் குலுங்கும் தங்க வளையல்கள். பெண் இரட்டை மண்டையும் குட்டையுமாக இருந்ததனால் என்ன குறை வந்துவிட்டது? அன்று லிங்கையா மாமன் கைப்பிடித்துப் பார்த்த இளம் மருத்துவன் அர்ஜுனன் தான் கிருஷ்ணனின் மருமகப் பையன். ஒத்தையிலே கல்யாணம் முடித்து, மருமகனை வீட்டோடு தொழில் செய்ய வைத்துக் கொண்டு விட்டான். கல்யாணமான சுருக்கில், அழகிய பெண் குழந்தை, அம்மையைப் போலவோ பாட்டியைப் போலவோ குழந்தை இல்லை. தகப்பனைப் போலச் சிவந்த நிரம். கார் ஓட்டி வந்தவன், காரை விட்டு இறங்கி நின்றான். பாரு இளந்தூற்றலையும் மறந்து, களைக் கொட்டும் கையுமாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘உன் பெண்ணும் என் பையனும் சிநேகமாகி விட்டார்கள்’ என்று முன்பு ஒரு நாள் மாதலிங்கேசுவரர் அழல் மிதி வைபவத்தின் போது, உட்பொருளுடன் அந்தத் தேன்மலையாள் கூறிய சொல் பாருவுக்கு நினைவில் வந்தது. பெண்ணும் இல்லை. இரு குடும்பங்களையும் போட்டி வெறி பிடித்து ஆட்டி வைக்கும் கொடுமையில், அவள் மகள் கல்யாணங் கூட அழைப்பின்றி நிகழ்ந்து விட்டது. “நல்லாயிருக்கிறீர்களா அக்கா?” என்று அவள் கேட்டுச் சென்ற காலங்கூடப் போய்விட்டதே! அவர்கள் குடும்பத் தொடர்பு, இரண்டு தலைமுறையிலும் இணையச் சந்தர்ப்பம் இல்லை. “அம்மா, எனக்கு ஸ்கூலில் பிரைஸ் கொடுக்கப் போறாங்க” என்று ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் நஞ்சன். சிவந்த மேனி; சுருண்ட கேசம். தாயை நினைவுறுத்தும் கருமை பாயாத மணி விழிகள். தந்தையின் சாயல் தெரியும் வதனங்கள். பெண்ணைப் போல் அடிக்கு ஒரு முறை முகம் சிவந்து புன்னகை தெரியும் சுபாவம். பாரு தன் கழுத்தைக் கட்டிய மகனை அன்போடு நோக்கி, “ரே, என்ன பிரைஸ்?” என்றாள். “அதெல்லாம் உங்களுக்குப் புரியுமா? நான் இப்போது எந்தக் கிளாஸ் தெரியுமா? எட்டாவது? மூன்றாம் படிவம்.” “பாரு சிரித்தாள். “ஏயப்பா!” என்று அதிசயித்தாள். “பஸ்ட் பிரைஸ்” பாஸ் பண்ணினதற்கு, யாருக்குத் தெரியுமா? “யாருக்கு?” “சொல்லுங்கள் பார்க்கலாம்?” “சீநிப் பாயாசம் முண்ட முண்டக் குடிக்கும் சாப்பாட்டு நஞ்சனுக்கா?” “போங்கம்மா!” என்று நஞ்சன் சிணுங்கிக் கொண்டு புத்தகத்துடன் உள்ளே ஓடினான். பாரு தன்னை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டே கைகால் கழுவக் கூடப் போகாமல் நின்றாள். புத்தகத்தை வைத்துவிட்டு, வாசலுக்கு விளையாட ஓடியே போய்விட்டான். நடை, ஓட்டம் இரண்டுங்கூட கிரிஜையின் அச்சுத்தான். எதிர்மனையில் கௌரியின் மூன்று பையன்களும் ஒரு பெண்ணும் அவளிடம் ஒட்டவில்லை. நஞ்சனுக்கு அம்மையாக அவள் தானாக ஒரு ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொண்டு, மெள்ள ஜோகியின் மனையிலேயே பிரிந்து விட்டாள். மாதி இறந்ததுமே ரங்கம்மையின் மூத்த மகன் ராமனுங் கூட மணம் முடித்துக் கொண்டு குடும்பமென்று ஏற்றதும், ஜோகியின் விருப்பப்படி, அவன் மனைக்கு மாறிவிட்டது. ஆனால் பாருவுக்கு எவை எப்படி மாறினாலும், மாற்றம் இல்லை. அவளுடைய பாலைவன வாழ்விலே நீரூற்றென, ஒரு சிறுவன் வந்து விட்டான். நஞ்சுண்டர் அருளால் வந்த அவள் மகன், கிரிஜை அவளுக்கென்று பெற்றுத் தந்த சொந்த மகன்,வீட்டில் ரங்கம்மை, ராமன், அவன் மனைவி அனைவருக்குமே அவன் செல்லப்பிள்ளைத்தான். ஒரு குறிஞ்சி வயதில், என்ன புத்தி! என்ன சூடிகை! அவன் ஆங்கிலப் பாடத்தை உரத்துப் படிக்கையிலும், தமிழ்ச் செய்யுட்களை நீட்டி முழக்கிக் கொண்டு இராகம் போடுகையிலும், தன்னை மறந்து அவள் நின்று பெருமையில் பூரிப்பாள். அவளுடைய துண்டு மண்ணில் கிழங்கு விதைத்து, பணம் கண்டு அவள் ஜோகியண்ணனிடம் கொடுத்து, நஞ்சனுக்கு உடுப்பாகவும் தின்பண்டங்களாகவும் வாங்கி வரச் செய்தாள். ரங்கனுக்கும் கௌரிக்குங் கூட அந்த விஷயத்தில் கொஞ்சம் பொறாமைதான். கௌரியின் மகன் ஒருவன் கூட ஒழுங்காகப் படிக்கவில்லை. மூத்தவன் ஆறாம் வகுப்பிலேயே சிங்கியடித்து விட்டுச் சிகரெட்டும் சினிமாவுமாக ஒத்தையிலே காசைக் கரைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். இரண்டாமவன் நஞ்சனை விடப் பெரியவன். மூன்றாம் வகுப்பே முடிக்கவில்லை. அடுத்த பையனையும் பெண்ணையும் ரங்கன் அடித்து உதைத்துப் பள்ளிக்கு விரட்டிக் கொண்டிருந்தான். தேயிலைத் தோட்டம் வருமானத்தைத் தந்து கொண்டிருந்தது. ரங்கன் கிருஷ்ணன் என்ன செய்கிறானோ அதற்குப் போட்டியாக எதையேனும் செய்வது என்று தீவிரமாக முனைந்திருந்தான். அவன் பள்ளிக்கூடம் என்று முயற்சி செய்தால் ரங்கன் பஸ் விட வேண்டும் என்று முனைந்தான். அவன் காபியும் ஏலமும் பயிரிட்டால், தானும் அதையே பயிரிட்டான். ஆனால் என்னதான் சளைத்ததாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், கிருஷ்ணனுக்குச் சமமாக ஓங்க முடிந்ததா? கிருஷ்ணனின் புகழ், மரகத மலையிலிருந்து ஒத்தை வட்டத்தை விட்டு மாவட்டத்துக்கே ஒருவனாக அல்லவோ ஏறிவிட்டது? அந்த மாவட்டத்துக்கே தலைவன் போல், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியில் பங்கெடுத்த முதல் வீரனாகத் திகழ்ந்தான். அவனுடைய தலைமையிலே இருபது முப்பது வீரர்கள், ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் ஜான்ஸன் எஸ்டேட் பக்கம் கிளர்ச்சி செய்தார்கள். அவன் பங்களாவையும் தோட்டத்தையும் வெளி உலகையும் பிணைத்த ஆற்றுப் பாலத்தைக் கிருஷ்ணன் கோஷ்டி தகர்த்த போது, அவனையும் சகாக்களையும் வெள்ளை அரசாங்கம் கைது செய்தது. துரை மக்களுடன் அந்நியோந்நியமாகப் பழகிய ரங்கனுக்கு, கிருஷ்ணன் கைதானது அப்போதைக்குச் சந்தோஷமாக இருந்த போதிலும், அவன் முன்னை விட அதிகப் புகழுக்கு உரியவனாக விடுதலை பெற்று வந்ததும், நாடு சுதந்திரம் பெற்று அவன் கௌரவ மனிதனாக மக்களால் போற்றப்படுவதும் ரங்கனின் பொறாமைத் தீக்கு எண்ணெயூற்றுவதாக அல்லவோ இருக்கின்றன? ஆனால், அண்ணன் பொறாமைத் தீயை வளர்க்கும் செயல்களில் மனசுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தாலும், ஜோகி மாறவே இல்லை. மனைவி இறந்து, அந்தக் குழந்தையும் பாருவின் பொறுப்பில் வளரத் தொடங்கியதும், அவன் தன் நிலம் உண்டு, தான் உண்டு என்று ஆசைகளை வென்று, கடமையைச் செய்து காலம் தள்ளும் கர்மயோகிக்கு ஒப்பானவன் ஆகிவிட்டான். முன்போல ஒன்பது வயசில் பாற் குழாயேந்தி வீட்டுப் பொறுப்பை ஏற்கும் கடமையே பையன்களுக்கு இல்லை. காலம் மூன்று குறிஞ்சிகளில் முற்றும் மாறிவிட்டது. ரங்கம்மை குடும்பம் அவன் நிலத்திலும் பிழைத்தது. ராமன் ரங்க மாமனுக்குச் சரக்கு லாரி ஓட்டி, நாற்பது ரூபாய்ச் சம்பளம் பெற்று வந்தான். வெளியே ஓடிய நஞ்ச்ன, எதையோ நினைத்துக் கொண்டவன் போல் பாருவிடம் மீண்டும் ஓடி வந்தான். “எங்க ஹெட்மாஸ்டர் உங்களைப் பார்க்க வருகிறாராம், அம்மா!” “யாரு எட்மாஷ்டரு?” “அவளையா? தலை நரைத்துச் சுருக்கம் விழுந்து கிழடான ஒரு ஹட்டிப் பெண்ணைத் தேடி, எதற்கு அவர் வருகிறார்?” “ஆமாம், அம்மா, உங்களைப் பார்க்க வேணுமாம். என்னிடம் பகலே சொல்லச் சொன்னார். உங்களைத் தான் பார்க்க வேணுமாம்!” சே, அவர், அவர்கள் வகுப்பாரும் அல்லவே! தமிழ்மொழி பேசும் அவர் அந்நியராயிற்றே! பரபரப்புடன் அவள் வாயில் பக்கம் வருகையிலேயே ரங்கம்மை முற்றத்துச் சுள்ளிகளை அப்புறப்படுத்திய வண்ணமே, “எட்மாஷ்டரும் ஸ்கோல்காரங்களும் வராங்கலாம். ஜோகியண்ணன் காபி வைக்கச் சொல்லிப் போனார்” என்றாள். “எதற்காம்?” ரங்கம்மைக்குச் செய்தி தெரியும். ஆனால் அவள், “தெரியாதே!” என்றாள். புறமனையைக் கூட்டிச் சுத்தம் செய்தனர். குழந்தைகளை ஒருபுறம் ஒதுக்கி அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, பெஞ்சியில் சாக்கை விரித்து, தட்டிலே வெற்றிலை பாக்கும் வாங்கி வைத்தனர். அடுப்பிலே காபிக்குப் பானையிலே நீர் கொதித்துக் கொண்டிருந்தது. ஜோகி முன் வர, ஹட்டிக்குள் நுழைந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஊர்க் குழந்தைகள் அனைவரும் புடைசூழ, அவர்கள் வீட்டின் குறுகிய வாயிற்படியில் குனிந்து நுழைந்தார். “வாங்க, வாங்க” என்று ஜோகி வரவேற்று அவரை உள்ளே உட்கார வைத்து உபசரித்தான். “பெரியவர்கள், நீங்கள் உட்காருங்கள்” என்று கூறி இளையவராக இருந்த தலைமை ஆசிரியர் உட்கார்ந்தார். நஞ்சன், அம்மை தந்த காபியையும் தம்ளர்களையும் கொண்டு வந்து வைத்தான். “எதற்கு இப்போது காபி?” “நாங்கள் வேறு எதைத் தருவோம்? பிள்ளைகளுக்குப் படிப்பைச் சொல்லித் தருபவர் நீங்கள்” என்று சொல்லி ஜோகி உட்புறம் நோக்கி, “ரங்கம்மா, ஐயாவுக்கு நல்ல மோர் கொண்டு வந்து கொடு” என்றான். “உங்கள் வீடுகளில் வந்தால் குளிர்ச்சியும் சூடுமாகப் பானங்கள் தந்து வயிறு நிறைய உபசரிப்பீர்கள். நான் உங்களிடம் ஒரு பெரிய உதவியை நாடி வந்தேன். நஞ்சனிடம் கூடச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்குமே!” என்று நிறுத்தினார் தலைமை ஆசிரியர். “கேள்விப்பட்டேன்” என்றான் ஜோகி. அவன் முகம் துயரச் சாயை படியத் தாழ்ந்தது. “அந்தப் பக்கம் உள்ள ஐந்து ஏக்கர் பூமியையும் கிருஷ்ணகௌடர் பள்ளிக் கட்டிடத்துக்கு நன்கொடையாகத் தந்துவிட்டார். நீங்களே பார்க்கிறீர்களே! அடுத்த வருஷம் ஒன்பது பத்து என்று வகுப்புகள் மேலே போக வேண்டும். உயர்தரப் பள்ளியாக ஆகவே போகிறது. கட்டிடம் போதாது.” “ஆமாம்.” “உங்கள் துண்டு நிலத்தையும் சேர்த்துக் கொண்டால் சௌகரியமாக இருக்கும்.” தமிழில் அவர் கூறிய மொழிகளின் பொருள் வார்த்தைக்கு வார்த்தை பாருவுக்கு உள்ளே விளங்கவில்லை என்றாலும் பொருள் துலங்காமல் இல்லை. பகீரென்றது அவள் நெஞ்சு. அவளிடமுள்ள அந்த உடைமையையா பறிக்க வருகிறார்கள். “எனக்கு மேலிடத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் என்றால், நீங்கள் அதற்குக் கண்டிப்பாகத் தடையே கூற மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் ஆசிரியர். பாரு வாயிற்படியில் வந்து நின்றாள். ஜோகி பதிலே பேசவில்லை. “ஹைஸ்கூல் வகுப்பு வருவதானால், ஸயன்ஸ், இன்ஜினியரிங் வகுப்புக்களெல்லாம் நடத்தத் தனி அறைகள் வேண்டும். இப்போதே இருநூறுக்கு மேல் குழந்தைகள் படிக்கிறார்கள். இனியும் அதிகமாகுமே தவிரக் குறையாது. எல்லாரும் படிக்க ஆசைப்பட்டு நிறைய வருவார்கள். நீங்கள்...” என்றார் மீண்டும் தலைமை ஆசிரியர். ஜோகி பாருவின் முகத்தைப் பார்த்துவிட்டுப் பேசினான். “எங்களுக்குக் கொடுப்பது பற்றி ஆட்சேபம் இல்லை; ஆனால் அந்தத் துண்டு பூமியை எங்கள் அண்ணி சொந்தப் பையனைப் போல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நஞ்சனை வளர்ப்பவர் அவர்கள் தாம். “ஜில்லா போர்டில் நிலத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஈடாகப் பணம் கொடுப்பார்கள்” என்று ஆசை காட்டினார் ஆசிரியர். அந்நியர் என்ற தடையையும் மறந்து, பாரு வெளியே வந்தாள்; “பணம் மண்ணைப் போல் ஆகுமா?” என்றாள். மொழி புரியாத ஆசிரியர், “அம்மா என்ன சொல்கிறார்கள்?” என்றார். “அவர்களுக்கு வாழ்வே பூமிதான். கிருஷ்ண கௌடரின் நிலமும் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அது பணத்துக்காகக் கூலிகளைக் கொண்டு பயிரிட்ட தோட்டம். நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் ஐந்து ஏக்கரா பொருட்டில்லை அவர்களுக்கு. ஆனால் எங்கள் நிலம் வழி வழியாக வந்த நிலம். என் ஐயன் பண்படுத்தினார். எங்கள் அண்ணி தமக்கென்று வைத்துக் கொண்டிருக்கும் சொத்து; அதைக் கொடுக்கவே அவர்கள் சகிக்கமாட்டார்களே!” தலைமை ஆசிரியர் சங்கடத்துடன் நோக்கினார். “இது எங்கள் சொந்தத்துக்கா? நீங்களே எண்ணிப் பாருங்கள், கௌடரே. உங்கள் குழந்தைகள் படிக்க, உங்கள் மக்கள் முன்னேற, நீங்கள் செய்யும் எல்லா நற்செயல்களையும் விட மிகமிக உயர்ந்தது, கல்வி பெருகச் செய்யும் உதவி. குழந்தைகள் கல்வியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்.” “எங்களுடைய மனசுச் சங்கடம் உங்களுக்கு எப்படி ஐயா புரியும்? அது வெறும் மண்ணா? உயிரின் சாரம் அல்லவோ?” என்றாள் பாரு, கண்களில் நீர் தளும்ப. கடைசியாகத் தலைமை ஆசிரியர், குளிர்ந்த மோரைப் பருகிவிட்டுச் சாந்தமாக, “உங்கள் குழந்தைகள் முன்னேற, உங்கள் குழந்தைகள் படிக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம், யோசித்துப் பாருங்கள். நான் வருகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார். கூனூர் சென்றிருந்த ரங்கன் இரவு வீடு திரும்பியதும் செய்தி கேள்விப்பட்டு பாருவைத் தேடி விரைந்து வந்தான். “பாரு, பாரு!” உள்மனைக்குள் பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்த பாரு எழுந்திருக்கவே இல்லை. ரங்கம்மைதான் முன்னே வந்தாள். “பூமியை கொடுக்கச் சம்மதித்தாயா?” என்றான் பாருவிடம் வந்து. பாரு மறுமொழியே கூறாமல், இல்லை என்று மட்டும் தலையை ஆட்டினாள். “அதுதானே? இப்போது என்ன ஆனாலும் விடுவதில்லை. அவர்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; ஒரு கை பார்ப்போம்” என்று கறுவிக் கொண்டு திரும்பினான். இது தன் மீதுள்ள அநுதாபத்தின் விளைவன்று; கிருஷ்ணன் மீதுள்ள ஆங்காகாரத்தின் விளைவு என்பதை அறியாளா? குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|