ஐந்தாம் பாகம்

3. தந்தையின் துயரம்

     வேனிற்காலத்தின் வருகையை அறிவித்த அந்த இளங்காற்று பகல் முழுவதும் நின்ற குகையை விட்டு வெளியே வந்த நஞ்சனுக்கு மிகுந்த சுகமாக இருந்தது. அவன் வேலையை ஒப்புக் கொண்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. குதிரை லாட வடிவில், மலைப்பாறையில் குடையப் பெற்றிருந்த குகையை அவன் வெளியே நின்று பார்த்தான். உண்மையிலே, அந்த மாபெரும் சாதனையைச் செய்யும் பாறைகளை வெளியே கொண்டு வருபவராய், சுமந்து கொண்டு வெளியே கொட்டுபவராய், சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரவு முறைக்காரர்கள். பகல் முறைத் தொழிலாளிகள் மாலை ஐந்து மணிக்கே போய்விடுவார்கள். சடபட சடபட சடபடவென்று பாறையைத் துளைக்கும் யந்திரங்களும், கல்லைப் பொடித்துக் குடைந்து செல்லும் யந்திரங்களும், சில நூறு அடிகள் சென்றிருந்த அந்தக் குகைக் கால்வாயில், நாடி நரம்புகளை எல்லாம் அதிர வைக்கும் பேரிரைச்சல் செய்து கொண்டிருந்தன. நாளின் எட்டு மணி நேரம் நிற்க, நஞ்சனுக்கு முதல் இரண்டு நாட்கள் அதிர்ச்சியைக் கொடுப்பனவாக இருந்தன.

     கண்களுக்கு இனம் தெரியாமல் முகமூடியணிந்த தொழிலாளிகளும், பேச்சுப் புரியாத பயங்கர ஓசையும் அவன் திண்மையைச் சோதிக்கப் புகுந்துவிட்டாற் போன்ற சலனத்தை ஏற்படுத்தின. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பழக்கமாகிவிட்டது. வெளியே வந்து நின்றவன், கீழே சுற்றிலும் தெரிந்த குன்றுகளையும், வீடுகளையும், வாரி இறைத்தாற் போல் பலநூறு ஆயிரங்களாகப் பெருகியிருந்த விளங்குகளையும், கறுத்த மேனியாய்ப் பளபளப்புடன் வெகு தூரத்தில் நெளிந்து ஓடிய அருவியையும் பார்த்தான். ஆங்காங்கு இன்னும் மீதியுள்ள சரிவுகளில் கர்ச்சுக் கூர்ச்சான், ஸில்வர் ஓக் மரங்கள், தேயிலைச் செடிகள், புகைச்சிம்னி தெரியும் தேயிலைத் தொழிற்சாலை எல்லாவற்றையும் பார்க்க, ஒரு புது உலகமே கவினுற விரிந்து கிடந்தாற் போல் தோன்றியது அவனுக்கு.

     பெருகி வரும் மனித இனம் எத்தனை பாடுபட்டு வாழ வேண்டி இருக்கிறது! மனிதன் ஆற்றலினும் அறிவிலும் எவ்வளவு வல்லவன் ஆகிவிட்டான்! மலையைக் கரைத்து, மடுவைச் சமைத்து, ஆற்றைத் தேக்கி, இயற்கையின் சக்தியைத் தன் ஆளுகைக்கு உள்ளாக்கிக் கொண்டு மனிதன் முன்னேறுகிறான்!

     சிலிர்ப்போடிய உடலை அவன் குலுக்கிக் கொண்டான். அவனைப் போல் இளைஞனான இரவு முறைக்காரன் வந்து விட்டான். பகலில் துளையிட்ட பாறைகளில், இரவில் வத்திகளையும் வெடிகளையும் செருகி இன்னும் பிளப்பார்கள். பிளந்த பாறைகளை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் குடைவார்கள்.

     முறைக்காரன் வந்ததும், நஞ்சனையும் அவன் அதிகாரியையும் சுமந்து ஜீப் வண்டி, மரகதமலை ஹட்டிச் சரிவிலிருந்து, விரிந்து பரந்திருந்த அணைக்கட்டுக் காலனியில் அலுவலகத்துக்கு முன் கொண்டு விட்டது.

     நஞ்சன் தேநீர் அருந்த ‘கான்டீனு’க்கு வருகையில்...

     அங்கே நின்றவன் ஐயன் அல்லனோ? அலுவலகத்தின் முன் அவர் எதற்கு வந்து நிற்கிறார்? அவனைக் காணவோ? புருவங்கள் நெருங்க, நஞ்சன் அவர் பின்னே சென்று, அவர் தோளைத் தொட்டான். “அப்பா எங்கே வந்தீர்கள்?”

     ஜோகி திரும்பிப் பார்த்தார். நஞ்சன் அவரைக் கண்டு எழும்பிய வேதனையை அடக்கிக் கொண்டான்.

     அவர் முகம் கறுத்து, மாறிவிடக் காரணம் என்ன? படித்த மகன் தன்னை அலட்சியம் செய்கிறான் என்று நினைக்கிறாரோ? அவர் கையில் நீண்டதொரு பழுப்பு நிறக் காகித உறை இருந்தது. அவர் நின்ற இடம் அணைத் திட்டத்திற்கான உதவிக் கலெக்டரின் அலுவலகம் என்பதையும் அவன் உணர்ந்தான். அவன் மனத்தில் மின்னல் போல் உண்மை பளிச்சிட்டது.

     “எங்கேயப்பா வந்தீர்கள்? யாரைப் பார்க்க வந்தீர்கள்?”

     “நீ போ, நான் கலெக்டரைப் பார்க்க வந்தேன்” என்று அவர் குரலில் அளவிட இயலாத சோகம் மண்டியிருந்தது.

     “நான் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லுகிறேனே! என்னிடம் விவரம் சொல்லக் கூடாதா அப்பா?”

     அப்போது ‘டவாலி’ச் சேவகன் ஒருவன் ஜோகியிடம் வந்தான். “என்ன பெரியவரே? கலெக்டர் இன்று யாரையும் பார்க்க மாட்டார் என்று எத்தனை தடவை சொல்வது? நாளைக்கு வாருங்கள்; போங்கள்” என்றான்.

     தந்தையின் விழிக்கடையில் நீர் மல்குவதை நஞ்சன் கண்டான். அவர் ஏதும் பேசவில்லை. நேராக மூக்குமலைப் பக்கம் நடக்கலானார். பொதுச் சாலையில் பேச விரும்பாத நஞ்சனும், பல பல எண்ணங்களுடன் அவர் பின் நடந்தான்.

     வீட்டில் பாரு மா அரைத்துக் கொண்டிருந்தாள், ஆட்டுரலில். வெளியே சென்று பலவிதமான பண்டங்கள் உண்டு பழகிய மகனுக்கு, அவள் காலைப் பலகாரத்துக்கு இட்டிலி செய்யக் கற்றிருந்தாள். குட்டைக் கல்லில் அவள் உளுந்தரைத்த ஓசையில் அவள் உற்சாகமும் பொங்கி வந்தது. தந்தையை வாட்டும் சோகம் தாய்க்குத் தெரிந்திராது என்று எண்ணினான் நஞ்சன்.

     ஜோட்டையும் உடுப்புகளையும் மாற்றிக் கொண்ட அவன் கைகால் முகம் கழுவிக் கொண்டு, இடிந்து போய், மூலையுடன் அமர்ந்திருந்த தந்தையின் முன் வந்தான்.

     “அப்பா, உங்கள் பூமி அணைத்திட்டத்தில் போகிறதா?” என்றான். ஜோகி நிமிர்ந்தார்.

     ‘எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறான்? உங்கள் பூமி! மண்ணை மறந்த துரோகி! பணத்துக்கு மனத்தைப் பறிகொடுத்தவனே! உணர்ச்சியே இல்லாமல் கேட்கிறாயேடா; இந்த மண் தான் இத்தனை நாட்கள், காலம் காலமாய்ச் சோறு போடுவதென்று தெரியுமாடா உனக்கு?’

     அவருடைய கொதித்த இருதயத்திலிருந்து அந்த வாக்கியங்கல் வெடித்து வந்தன. ஆனால் அவர் நெஞ்சுக்கு அழுந்தத் தாழ் போடுபவராக, அந்தப் பழுப்பு நிற உறையை அவனிடம் தூக்கி எறிந்தார்.

     நஞ்சன் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பாரு தேநீரும் மலைப் பழங்களும் கொண்டு வந்தாள். அவனையும் ஜோகியையும் மாறி மாறி, புருவங்கள் நெருங்க, கேள்விக் குறியுடன் நோக்கினாள்.

     அணைக்குள் முழுகும் பகுதிகளுக்கு உட்பட்டதல்ல, ஜோகி பயிரிட்டு வந்த மாமனின் பூமி; ஆனால், அந்தப் பக்கம் அணையைச் சுற்றிப் பெரிய சாலை வர இருக்கிறது; அணைத்திட்டத்தின் சில முக்கியமான பிராந்தியத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுகிறது என்று ஜோகியின் விளைநிலங்களும் அதில் உட்படுகின்றன என்றும் சில நாட்களுக்கு முன்பே வந்த கடிதம் அது.

     இதற்கு ஏன் தந்தை துயரப்பட வேண்டும்?

     “பூமி போனால் என்னப்பா? சர்க்கார் நம் நிலங்களை வெறுமே எடுத்துக் கொள்ள மாட்டார்களே? கணிசமான பணம் கொடுத்துத்தானே எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?” என்றான் நஞ்சன்.

     பாருவுக்கு விஷயம் ஒருவாறு புரிய, இடி விழுந்தாற் போல, “நம் பூமியா?” என்றாள்.

     “ஆமாம், நம் சோற்றைப் பிடுங்கிக் கொண்டு பணம் தருகிறார்களாம். இந்தப் பணம் யாருக்கு வேண்டும்?” என்றார். “மரகத மலையிலுள்ள மண்ணையும் காலனி கட்டப் பறித்துக் கொண்டார்கள். ரங்கம்மையின் குடும்பம் தவிக்கிறது. நம் சோற்றிலே கைவைக்க, பாம்பாக இங்கேயும் வருகிறார்களே! இதை எப்படிப் பொறுப்போம்? இந்த அணைக்கட்டும் விளக்கும் யாருக்கு வேண்டும்? நம் சாப்பாட்டைப் பறித்து எவர் எவருக்கெல்லாமோ கொடுக்க, கவர்னராம், கலெக்டராம்!”

     மண்ணைத் தவிர வேறு ஒன்றையும் அறிந்திராத முதியவரின் உள்ளத்திலிருந்து, சொல்லொணாத ஆற்றாமை பீறி வந்தது.

     “நஞ்சா, நீ சொல்லு, அந்தக் கலெக்டர் துரையிடம்? பூமியில்லாமல் நாம் என்ன செய்வோம்? விளைவு தரும் மண்ணை எப்படிக் கொடுப்போம்? என்றாள் அம்மையான பேதை.

     நஞ்சனுக்கு இரண்டொரு நிமிஷங்கள் ஏதும் தோன்றவில்லை. மலையைக் குடைந்து கால்வாய்கள் உண்டாக்கலாம். மண்ணோடு ஒன்றிப் போன மனங்களைப் பிரிக்க முடியாது என்பதை அப்போதுதான் உணர்ந்தாற் போல் அவன் செயலற்று நின்றான்.

     “அந்தப் படுபாவிப் பயல் கிருஷ்ணன் இதிலும் சூழ்ச்சி செய்திருப்பான். அவன் மண்ணில் நான்கு ஏக்கர் கூட முழுசாகப் போகவில்லை. எங்கிருந்தோ எங்கோ நான் ஓடி வந்தேன். மலைவிட்டு மலை தாவி, என் மண்ணையும் பிடுங்குகிறார்களே!”

     சாந்தத்தின் உருவாக அத்தனை நாட்கள் காட்சி தந்த நஞ்சனின் தந்தை, வெறிபிடித்தவர் ஆகிவிட்டாரா என்ன? ஆத்திரக்காரர் ஆகி, அறிவு கலங்கியவர் ஆகிவிட்டாரா?

     “அப்பா!” என்று நஞ்சன் பதறினான்.

     “அண்ணன் வாழ வேண்டும், மக்கள், மனிதர் வாழ வேண்டும், ஊர் வாழ வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்ட நீங்களா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? ஊரும் உலகும் நன்மை அடைய, நீங்கள் விலைபெற்றுக் கொண்டுதானே பூமியைக் கொடுக்கப் போகிறீர்கள்? கோடி கோடியாய்ப் பணம் செலவழித்து மக்கள் சக்தியைத் திரட்டிச் செய்யும் இது, பெரிய சாதனை. அறியாத்தனமாகப் பேசாதீர்கள் அப்பா!”

     “அறியாத்தனம்! நேற்றுப் பிறந்த நீ, என்னை அறியாத்தனம் என்று இகழ்கிறாய். ஏய்! அந்தப் படிப்புச் சொல்லித் தந்த புத்தியாடா இது? சோறும் துணியும் தந்த மண்ணடா. இந்த உடம்பின் இரத்தமெல்லாம் இந்த மண்ணால் ஆனதடா. பெற்ற தாய்! உனக்குத் தெரியுமாடா பெற்ற தாயின் அருமை? பாவிப் பயலே! என் நெஞ்சு எரிகிறது! எரிமலையாய்ப் பொங்குகிறது! அந்தப் படிப்புப் படித்ததுமே பூமியைப் பணத்துக்குக் கொடு என்று சொல்கிறாயே! காகித நோட்டும் அம்மையும் ஒன்றாகி விட முடியுமாடா? அம்மைக்கு விலையா?”

     உடல் துடிக்க, உதடுகள் துடிக்க, பொங்கிச் சீறி வந்த அந்த மண் பாசத்தை உணர்ந்த நஞ்சன் அரண்டு நின்றான். காலமெல்லாம் ஊறிய தொடர்பை, கற்றை நோட்டுக்கள் கொண்டு கத்தரிக்க முடியுமோ?

     “உனக்குத் தெரியுமாடா பெற்ற தாயின் அருமை?” என்று அவர் புகன்ற சொல், பாருவின் நெஞ்சில் ஈட்டு எனப் பாய்ந்து விட்டது. பெற்றவள் இல்லை என்பதை, ஒரே வாக்கியத்தில் பழுக்கக் காய்ச்சிய வேலெனப் பாய்ச்சி விட்டாரே! என் மகனை இரவல் கொடுத்தேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே!

     துடிதுடித்தது பாருவின் உள்ளம். “நஞ்சனை இப்படியெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்? அவனுக்கு அம்மை நான் இல்லையா!” என்றாள்.

     மண் இல்லை என்ற பெருந்துயர்க் கடலில் மூழ்கி விட்ட ஜோகியின் உள்ளத்திலே, அப்பொழுது தோன்றக் கூடாத எண்ணங்களெல்லாம் தோன்றின. அவர் தம் நிலையையே மறந்துவிட்டார்.

     “அவனுக்கு உண்மையான அம்மையாக நீ இருந்திருந்தால், இப்படிப் பெற்ற தாய்க்குத் துரோகம் நினைக்கும் படிப்பை படிக்க வைத்திருக்க மாட்டாய். உயிரைக் கொடுத்து, இந்த மண்ணின் விளைவில் பணம் கண்டு, போதாமல் அவனையும் இவனையும் கெஞ்சிப் படிக்க வைத்தாயே! படித்தால் நம்மை விட்டு வெகுதூரம் போய்விடுவான் என்று நான் அன்றே நினைத்தேன் படித்தவன் எவன் ஒழுங்காக இருக்கிறான்? நீ நிசமான அம்மையாக இருக்கவில்லை. அப்பனோடு ஒட்டாமல் மகனை எந்த அம்மையும் வளர்க்க மாட்டாள். இந்தப் பயல் ஒரு நாளேனும், என்னிடம் ஸ்கூல் பற்றி, காலேஜ் பற்றிப் பேசினானா? என்னை மதித்தானா?” அந்த ஆவேச மாரியில் நஞ்சன் குறுக்கே பொறுமை இழந்து பாய்ந்தான்.

     “என்னப்பா, நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?”

     பாருவின் கண்கள் முத்துக்களை உதிர்த்தன; “நீங்கள் பேசுவது, மண் பறிபோவதைவிடக் கொடுமை. நஞ்சா நான் தான் உன் அம்மை. நீயும் மறுக்காதே. மண் பறிபோகும் வருத்தத்தில் அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறார். நீ போய், அந்தக் கலெக்டர் துரையிடமோ கவர்னர் துரையிடமோ சொல்லி, நம் பூமியை மீட்டுவிடு. முன்பே நாம் பள்ளிக்கூடத்துக்கு வேறு பூமி தந்திருக்கிறோம். மரகத மலையிலும் நமக்குப் பூமி இல்லை. இதுவும் போனால் நாம் எப்படி வாழ முடியும்?” என்றாள்.

     நஞ்சன் பொறுத்துச் சமாதானமாக, “கலெக்டரும் கவர்னரும் ஒன்றும் செய்ய முடியாதம்மா. உங்களுக்கும் ஐயனுக்கும் வயசாகவில்லையா? இனியும் மண்ணில் உழைக்க முடியுமா? நினைத்துப் பாருங்கள்; எனக்கு இன்னும் மேலே பெரிய இன்ஜினீயராக வேலை உயரும். உங்களுக்கு ஒன்றும் கஷ்டமே கிடையாது. நல்ல வீட்டில் வயசான காலத்தில் சுகமாக வாழலாம். கிருஷ்ண கௌடர் குடும்பம் பற்றி நீங்களே எவ்வளவு பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்?” என்று அந்தப் பேச்சை எடுத்தானோ இல்லையோ? உடனே பேச்சுக் குமுறிக் கொண்டு வந்தது.

     “அந்த துரோகியின் பேச்சை எடுக்காதே. என் வாழ்வில் என்றைக்கோ மண்ணைப் போட்ட வஞ்சகன். அவன் பூமி நாலு ஏக்கர் கூடப் போகவில்லை; நூறு நூறு ஏக்கராய் இருக்கிறதடா. சூழ்ச்சிக்காரப் பயல், படித்து விட்ட மமதையில் ஊரில் விரோதம் கொண்டு வந்தான்; கட்சி கட்டினான்; சண்டையும் பூசலுமாய், என் அண்ணனைக் கோர்ட்டுக்கு இழுத்தவன் அவன் தான். எங்கள் குடும்பத்தை நாசமாக்கிய சதிகாரன் அவன். ரங்கன், பூனையாய் ஒடுங்கி விட்டான். ஏண்டா? நைச்சியமாய் நல்ல பேர் வாங்க, கோத்தகிரியானைத் தூண்டி ஓட்டுக்கு நிற்க வைத்து வஞ்சகமாய் வேலை செய்தான். இப்போது எல்லோரையும் தூண்டிவிட்டு நான் பயிரிட்ட மண்ணைப் பிரிக்க வத்தி வைத்து விட்டான். இந்த ஜோகி ஒரு நாளும் பொன்னான பூமியைக் கொடுக்க மாட்டான். உயிரே போனாலும் போகட்டும்!”

     நஞ்சனுக்குப் பேச வாயேது?

     பூமி திரும்பி வரப் போவதில்லை. ஆனால், அவனுடைய ஐயனின் சித்தம் அப்படியே இருந்தால், கலங்கிவிடுமோ என்ற அச்சம் அவனுள் விறைத்து எழுந்தது. அன்றிரவெல்லாம் அவன் தூங்கவே இல்லை. மூளை குழம்ப யோசனைகள் செய்தான்.

     காலையில் பணி இடத்துக்குச் செல்கையில் அவனுக்கு உற்சாகமே இல்லை. அவனைப் பாதையில் கண்டதுமே, அலுவலகத்துக்கு முன் ஜீப் வண்டியில் இருந்த ராமன் விரைந்து வந்தான்.

     “நஞ்சா, சாயங்காலம் உன்னிடம் சாவகாசமாகச் சில சங்கதிகள் சொல்ல வேண்டும்! பார்க்கலாமா தனியே!” என்றான்.

     நிஜார்ப் பைக்குள் கைவிட்டு நின்ற நஞ்சன், எத்தனையோ எண்ணக் கதிர்கள் மனத்திரையில் ஓட, அவனையே பார்த்தான்; “என்ன விசேஷம்?”

     “உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். தப்பாகச் செய்து விட்டேனோ என்று மனசு அறுக்கிறது. சாவகாசமாக வா.”

     ராமனுக்கு நிற்க நேரம் இல்லை. பெரிய அதிகாரி வண்டியில் வந்து ஏறிவிட்டார். நஞ்சன் பார்த்துக் கொண்டே நின்றான். ஜீப் வண்டி வளைந்து வளைந்து தூரத்தில் புள்ளிபோல் சென்று மறைந்து விட்டது.