உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 2. பால் பண்ணை மேஸ்திரி அன்று விடியும் நேரத்திலிருந்தே, ‘ஸ்நோடௌன்’ பால் பண்ணையில் கெடுபிடியாக வேலை நடந்து கொண்டிருந்தது. பங்குனி இருபது தேதியாகி விட்டது. கவர்னர் துரையும் சிப்பந்திகளும் உதகை வாசத்துக்கு வரும் காலமாயிற்றே! கவர்னர் மாளிகைக்கு வரும் முதல் ‘ஸ்பெஷல்’ வண்டி முதல் நாளே வந்து விட்டது. கவர்னர் மாளிகைக்குக் குத்தகையாகப் பால் கொடுக்கும் பொறுப்பு ‘ஸ்நோடௌன்’ பால் பண்ணையைச் சேர்ந்ததாயிற்றே! வேளைக்குப் பத்து முதல் பதினைந்து புட்டிகள் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கறக்கும் சீமைப் பசுக்கள் ஐம்பதும், பத்துப் பதினைந்து எருமைகளும் அந்தப் பால் பண்ணையில் இருந்தன. குட்டைக் கொம்புகளும், கறுப்பும் வெளுப்புமாகச் சடை சடையான உடலுடன் தொங்கத் தொங்க மடிகளுமாக ‘ஸ்நோடௌன்’ புல்வெளியில் மனம் போனபடி அந்தப் பசுக்கள் திரியும். சீமையிலிருந்து வந்த வெள்ளைக் கவர்னரின் வீட்டுச் சமையலறை நிர்வாகியாக வந்து மாசம் ஐந்நூறும் அறுநூறும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது துரையின் முதல் தாரத்தின் மகன் தான் ஸ்நோடௌன் பால் பண்ணையின் உரிமையாளனான துரை. கவர்னர் மாளிகைக்குத் தேவையான பால விநியோகத்துக்கென்றே சர்க்கார் உதவி பெற்று இயங்கும் பண்ணை அது. கவர்னர் துரை அவ்வப்போது சென்னைக்குச் சென்றுவிட்டாலும் சீமாட்டி இருப்பாள். அவள் மார்கழி மாசம் கிறிஸ்துமஸுக்கு முதல் வாரந்தான் கீழ்தேசம் செல்வாள். அதுவரையில் அவளுக்காக ஓர் உலகமே மாளிகைக்குள் இயங்கும். ஸ்நோடௌன் பால் பண்ணையில் பாலுக்கு அதுவரையில் கிராக்கிக்குக் குறைவில்லை. மீது இரண்டு மூன்று மாசங்களில் துரை பாலை க்ரீமாக்கி, வெண்ணெயாக்கிச் சென்னைக்கு அனுப்பி விடுவார். இந்தப் பால் பண்ணையில், காலையில் வரிசையாகக் கொட்டடியில் மாடுகளைக் கறக்கையில் துரை வந்து பார்வையிடுவார். பிறகு, பால் அறையில், பெரிய பெரிய தொட்டிகளில், பஞ்சில் வடிகட்டுவார்கள். பின்னர், எட்டு அல்லது பன்னிரண்டு புட்டிகல் பிடிக்கும் தூக்குப் புட்டிகளில் ஊற்றி விநியோகம் செய்வார்கள். பால் விநியோகத் தலைமைப் பதவியில் நின்ற ரங்கன், அன்று காலையிலேயே ஆட்களை விரட்டிக் கொண்டிருந்தான். துரை இரண்டு நாட்களாக வேட்டைக்குச் சென்றிருந்தார். “ம்... ஆகட்டும்! எத்தனை நேரம்? டேய் பெட்டா! இந்தப் புட்டியைத் தனியாக வை. ஸ்மித் துரை பங்களாவுக்கு இது போக வேண்டும். சீக்கிரம் கவர்னர் பங்களாவை முடித்து விட்டு, இதை எடுத்துப் போ” என்று அவசர அவசரமாகப் புட்டிகளில் பாலை நிரப்பிக் கொண்டிருந்தான். பத்துப் புட்டிகளுக்கு ஒரு புட்டி நீரென்று முன்னதாகவே விட்டு வைக்கத் தேவையில்லை. அன்று துரை தான் இல்லையே! அவ்வப்போது தாராளமாக ஊற்றிக் கலந்தான். காலை பத்து மணிக்குள் பால் விநியோகம் முழுவதும் முடிந்து விட்டது. நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கணக்கை எழுதினான். படியாத கையெழுத்தில், “கவர்னர் பங்களா 404 புட்டி, ஆஸ்பத்திரி 25 புட்டி, கார்டன் துரை 8 புட்டி, டாக்டர் துரை 10 புட்டி” என்று கூட்டிக் கணக்கிட்டான். இத்தனை புட்டிகளில் பத்துப் பதினைந்து புட்டி தண்ணீர் கலந்தால் தெரியப் போகிறதோ? பத்துப் புட்டிகளின் விலை ஒரு ரூபாய்; ஒரு முழு வெள்ளிப் பணமாயிற்றே? மாசம் கிடைக்கும் ஐம்பது ரூபாய்கள், அவன் துரைக்குத் தெரியாமல் மாளிகைக்கு வெளியே வைத்துக் கொண்டிருந்த வாடிக்கை வீடுகளிலிருந்து வந்தன. பன்னிரண்டு ஆண்டுகளில், இளமீசையும் தடித்த உதடுகளும், தந்திரத்தில் புரண்டு எழுந்த விழிகளுமாக வளர்ந்து விட்ட ரங்கனைப் பார்ப்பவர்கள், அவனை அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான். சுப்புப்பிள்ளையிடம் திருட்டு மூலத்தில் வியாபாரக் கலை பழகி, திருட்டுக் கிழங்கு வியாபாரம் செய்து, திருட்டுக் கோழிகள் வளர்த்து, ரங்கன் ஓரளவு உலக அநுபவத்தில் புரண்டு எழுந்த நிலையில், சுப்புப்பிள்ளை அவனைக் கத்தரித்துக் கொண்டு விட்டான். பட்டுப் பையில் முடிந்து, பாறை இடுக்கில் வெள்ளிப் பணமாக ஒளித்து வைப்பதை அவன் கண்டுவிட்டான் என்று அறிந்த பிறகு ரங்கனுக்கும் அவனுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை. கவர்னர் மாளிகைத் தோட்டத்துத் துரையின் வீட்டில் கோழிகளுக்குத் தீனி போட்டு அவற்றைப் பார்க்கும் பையனாகச் சில ஆண்டுகள் கழித்தான். பின்பு பெரிய தோடத்தில் பூ விற்பனைப் பகுதியில் மாறினான். செண்டுகளும் வளையங்களும் கட்டவும் ஜாடிகளில் பூ வைக்கவும் தெரிந்து கொண்டான். ஆனால் எங்கே மாறினாலும் அவன் பட்டு பையை மறந்துவிடவில்லை. குதிரைப் பந்தய மைதானத்தில் ஒவ்வொரு முறையும் ஐந்து ரூபாய் கட்டி அதிருஷ்டத்தைச் சோதனை செய்வான். நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் ஐந்துக்கு மேல் வைக்க மாட்டன. சென்ற முறை ‘ஸ்வீப்’பில் நான்கு நூறுகள் விழுந்து அவன் அதிருஷ்டத்தை உச்சிக்கு ஏற்றிக் காட்டி விட்டது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், வண்டுச் சோலைக் குடிசையில் நான்கு உயர்ந்த ரகக் கோழிகள், ஆறு ஆடுகள், இரண்டு சீமைக் கன்றுகள் தவிர, கையில் அறுநூறு ரூபாயும் அவன் வசம் சேர்ந்திருந்தன. அந்தக் குடிசைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் அவன் வந்தபோது வாசலில் ஒரு வால்பேரிக் கன்று கொணர்ந்து நட்டிருந்தான். அது இன்று பூத்துக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளில், இவை தவிர, பிழைக்கப் பல வழிகளையும் தெரிந்து கொண்டவனாக அவன் முதிர்ந்து விட்டானே! பால் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு அவன் இருகைகளிலும் பத்துப் புட்டிப் பாலைச் சுமந்தவனாக, கவர்னர் மாளிகைக்கு வெளியே செல்லும் பாதையில் நடந்தான். உள்ளத்தில் உவகை தளும்பியது. ஒரு மழை பெய்து, வெம்மையும் புழுதியும் அடங்கி, இளவேனிலின் பசுமையும் அழகும் கண்ட இடங்களிலெல்லாம் அழகுக் கோலம் செய்திருந்தன. கவர்னர் மாளிகையின் முன்னே நீலவண்ணப் பூக்களாகவே தெரிந்த மரங்கள், வெகு தூரத்தில், பாதையில் செல்லும் போதும் அவன் கண்ணுக்குத் தெரிந்தன. குறிஞ்சிப் பூக்களின் நினைவு வந்தது அவனுக்கு. ஹட்டியை விட்டு ஓடி வந்து, ஒரு குறிஞ்சியாகி விட்டதே! இந்த ஆண்டில் குறிஞ்சி பூத்து, அவன் ஊர்ப் பக்கமெல்லாம் அழகு கொழிக்குமே! ஊர்ப்பக்கம் போக வேண்டும் என்ற ஆவல், அவனுள் மலர்ந்தது. அப்போது ஊரின் பக்கம் அவனுக்கு எவரையும் பார்க்கவோ, உறவு கொண்டாடவோ ஆதாரம் இல்லை. வாழ்வில் உண்ணவும் இருக்கவும் பணம் சேகரிக்கவும் நல்ல கோட்டும் தொப்பியும் அணியவும் அவன் சௌகரியங்களைப் பெற்று விட்டான். அடுத்தபடியான அவசியத்தைத் தேடும் காளைப் பருவத்தினனான அவன் ஊர்ப்பக்கம் செல்ல விரும்பியதில் அதிசயமில்லையே? இத்தனை ஆண்டுகளில் அவன் மட்டுந்தானா வளர்ந்து விட்டான்? உதகை நகரத் தெருக்களில் எத்தனை கோலாகலம்! மூன்று பேர் தள்ளும் வண்டிகளும் துரைகளையும், துரைசானிமார்களையும் தாங்கும் குதிரைகளும், குதிரை வண்டிகளுமே ஓடும் தெருக்களில், காற்றாய்ப் பறக்கும் குதிரையில்லா வண்டிகள் அல்லவா வந்துவிட்டன? சாலையின் ஓரங்களிலே, வடநாட்டாரின் துணிக்கடைகளில், சாமான் கடைகளில் எத்தனை எத்தனை விந்தைப் பொருள்கள்! ராஜாக்களும் வெள்ளைத் துரைகளுமே போகக் கூடிய ‘கிளப்’கள், சிற்றுண்டிச் சாலைகள், விடுதிகள், வரிசையாக விளக்குகள், மேட்டுக்கு மேடு கட்டிடங்கள், பள்ளிக் கூடங்கள், மாதா கோயில்கள், கச்சேரிகள். இவை மட்டுமா? நகரம் தெரியாமல் ஹட்டிகளுக்குள் முடங்கியிருந்த அவன் இனத்து மக்கள், கிழங்கு பயிர்ட்டு, உதகை நகர மண்டிகளில் குவித்து வியாபாரம் செய்யக் கற்று விட்டார்கள்; குதிரைப் பந்தயங்களுக்குக் கூட்டங் கூட்டமாக வருகிறார்களே! ஒரு வேளை மரகதமலை ஹட்டியிலும் வெளியே கொண்டு வந்து வியாபாரம் செய்யும் அளவுக்குச் சிற்றப்பன் கிழங்கு விளைவித்திருக்கலாம்; பணத்தைச் சேர்த்திருக்கலாம். ஜோகி இளைஞனாக இருப்பான். ரங்கம்மை பெரியவளாக வளர்ந்து மணமாகி கணவன் வீடு சென்று விட்டாளோ என்னவோ? மிஷன் பள்ளியில் படித்த கிருஷ்ணன் பயல் என்ன செய்கிறானோ? அப்படிப் படித்து ஒரு வேளை வேதக்காரனாகிப் பாதிரிமார்களுடன் சேர்ந்து விட்டானோ என்னவோ? பாரு? மொட்டு மலர்ந்தாற் போல் மலர்ந்து நிற்பாள். அவனுடைய முறைக்காரி, காசும் பணமுமாகப் போய் அவளைக் கொண்டு வரவேண்டியதுதான். அதுவரை அவன் நினைத்தவையெல்லாம் சோடையில்லாமல் செயல்களாக நிறைவேறி விட்டன. பாருவை அழைத்து வருவதும் அப்படியே நடக்க வேண்டியதுதானே? ஒருவேளை, ஜோகிக்கு அவளைக் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு அப்போது உதிக்காமல் இல்லை. அருகில் அவன் இருக்கிறான்; போய் வந்து தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால், ஹட்டியில் வேறு பெண்கள் அவனுக்கு மனைவியாகும் தகுதியுடன் இல்லையா? இருக்க மாட்டார்களா? சந்தேகம் குறுக்கிட்டதும், அவனுக்கு நேராக மணிக்கல்லட்டிக்கே சென்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் அதிகமாயிற்று. அந்த ஆத்திரத்தில் காலை விடுவிடென்று எட்டிப் போட்டுப் பால் வாடிக்கை வீடுகளுக்கு ஏறினான். பாலைக் கொடுத்துவிட்டு அவன் கீழே கடைகளுள்ள சாலைக்கு வருகையில், வெயில் வெகு சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. அன்று பகல் குதிரை பந்தயம் நடக்க இருந்ததனால் தெருக்களெல்லாம் கலகலப்பாக இருந்தன. கடைவீதியிலே, நீலக் கம்பளிகளும் சிவப்புக் கம்பளிகளும் போர்த்தவராக, அவன் இனத்தார் எத்தனை பேர்கள்! பால் புட்டியுடன் சந்தைக் கடைக்குள் நுழைந்தான். கோயம்புத்தூர் ஆப்பக்காரக் கிழவி இப்போது அங்கு இல்லை. பிட்டும் மசால்வடையும் விற்கும் கடை ஒன்றே அங்கிருந்தது. ஓரணாக் கொடுத்து ஆறு மசால் வடைகளை வாங்கிக் கொண்டு ‘சேட் துணிக்கடை’க்குள் நுழைந்தான். வேட்டி மல்லும், சட்டைத் துணியும், ரவிக்கைச் சீட்டிகளும், கம்பளிக் கழுத்துப் பட்டியும் வாங்கிக் கொண்டான். எல்லாவற்றையும் சுமந்தவனாக அவன் கடையை விட்டு திரும்புகையில், வெகு நேரமாக வெளியே நின்று அவனையே கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அவன் கையைச் சட்டென்று பற்றினான்; “டே ரங்கனில்லை நீ!” என்றான் ஆச்சரியத்துடன். ரங்கன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இருவர் கண்களும் ஆச்சரியத்தால் நிலைத்து நின்றன. அவன் பாருவின் அண்ணன் பீமன். ரங்கனின் தோற்றத்தை ஏற இறங்க நோக்கி அளவிட்டு, அவன் ஒரேயடியாக மலைத்துப் போனான். உடலில் நீல ஸர்ஜ் கோர்ட்டு! பால் பண்ணை மேஸ்திரிக்கு உரிய ஆடை; காளையாக வளர்ந்த தோற்றம்; கண்களில் தானாகப் பிழைக்கும் கர்வத்துக்கு உரிய ஒளி. “எத்தனை வருஷமாச்சு! நீ எங்கோ ஓடிப் போய் விட்டாய் என்று நினைத்திருந்தோமே; எங்கே இருக்கிறாய், ரங்கா?” பாருவை நினைக்கையிலேயே அண்ணன் கிடைத்து விட்டானே என்ற பேருவகை எய்திவிட்ட ரங்கன், “வண்டுச்சோலையில் இருக்கிறேன்” என்றான். இளங்குரல் உடைந்து, ஆண்பிள்ளைத் தொண்டையாக உறுதியும் கனமும் பெற்றுவிட்டதைக் கூடப் பீமன் ஆச்சரியத்துடன் கவனித்தான்; “நானும் இரண்டு மூன்று வருஷமாக ஒத்தைக்கு வந்து போகிறேன். ஐயன் வருகிறார். ஊரில் எத்தனையோ பேர் வருகிறார்கள். உன்னைத் தெரியவில்லையே, ரங்கா! பூமி ஏதாவது வாங்கியிருக்கிறாயா என்ன?” அவனுடைய தோற்றம், அவன் பசையுடன் நல்வாழ்வு வாழ்வதையே பீமனுக்குத் தெரிவித்தது. நகரத்துக்கு வந்தால் அதிருஷ்டத்தில் எப்படியேனும் முழுகிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை பீமனுக்கு உண்டு. ஆனால் அந்த நம்பிக்கை அவனுக்கு முயன்றும் வெற்றியே தரவில்லை. உடலுழைத்துக் கூலியாக நாளொன்றுக்கு ஆறணாச் சம்பாதித்தால், இரண்டணாவோ மூன்றணாவோ அவனுக்குச் செலவு போக மீதியாகும். அதைத்தான் வீட்டில் வாங்கிக் கொண்டார்கள். குதிரைப் பந்தயத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்தான். அது அவனையே விழுங்கி விடும் வேகத்தில் அவன் முதலீட்டை விழுங்கி விட்டது. பணமென்னும் கவர்ச்சியில் தான் அவன் ரங்கனின் தோற்றத்திலேயே மயங்கினான். “பூமி வாங்கலாமென்று தான் இருக்கிறேன். ஊரிலே எல்லாரும் சுகந்தானே?” “சுகந்தான். பாருவுக்குத்தான்...” “என்ன?” என்றான் ரங்கன் பரபரத்து. “ஒன்றுமில்லை, நல்ல இடத்தில் பாருவைக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையெல்லாம். முறை மாப்பிள்ளை சரியில்லையே என்று இருந்தோம். உன்னைக் கண்டது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா எனக்கு? வாயேன், போகலாம்.” “எங்கே மணிக்கல்லட்டிக்கா?” “ஆமாம்; இனிமேல் உன்னை விடுவேனா? கையோடு அழைத்துப் போக மாட்டேனோ?” என்று பீமன் சிரித்தான். சட்டென்று ரங்கன், “ஆமாம், ஜோகி, சிற்றப்பன் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அப்பன் சுகமா?” என்றான். “ஜோகிதான் எட்டு வருஷமாய் இரியர் கோவில் பூசாரியாக இருக்கிறானே! சிற்றப்பன் குறும்பர் ஏவலால் காய்ச்சல் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டார். முன்னைப் போல் செழிப்பே இல்லை. உன் சின்னம்மாவுக்கும் ஐயனுக்கும் பொருந்தாமல் விவகாரம் பஞ்சாயத்துக்கு வந்து பிரிந்து போய் விட்டார்கள்.” அடேயப்பா! ஒரு குறிஞ்சிக்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டன? “ரங்கிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” “அது தெரியாதா? மேற்கே, ஒஸஹட்டியிலிருந்து ஒருவன் வந்து ரங்கியைக் கட்டியிருக்கிறான், குள்ளன். உங்கையனுக்குக் கடன் இருநூறு ரூபாய் போல் வந்து விட்டது. அவன் வந்து வீட்டோடு இருந்து, நிலத்தில் கூடமாட வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். கிழங்கு போட்டுக் கடனைக் கூட அடைக்கிறானாம்?” “ஜோகியின் பாட்டி இருக்காங்களா?” “போன பெரிய பண்டிகைக்கே அவங்க போய் ஒரு வருஷமாச்சே?” இப்போது, தான் அங்கே செல்வதால் ஆதாயம் ஏதும் வரப் போவதில்லை என்பதை ரங்கன் அறிந்து கொண்டு விட்டான். பழைய நினைவுகள் படலம் படலமாய் அவன் முன் அவிழ்ந்தன. “நிசத்தில் கோயிலில் என்னைத் தள்ளுவதாகச் சிற்றப்பன் சூழ்ச்சி செய்ததனால் தான் நான் ஓடி வந்தேன். அங்கே இருந்தால் ஒரு வெள்ளி ஏது? சிற்றப்பன் பெரிய தந்திரக்காரர். எங்கள் பூமியிலும் விளைவெடுத்துத் தமக்குச் சேர்த்துக் கொள்ளப் பார்த்தார். கடைசியில் அவருக்கே நல்லது வரவில்லையா? ஜோகியா கோயிலில் இருக்கிறான்?” “ஆமாம். அவர் நோவில் படுத்துவிட்டார். வேறு வழியில்லை. மூன்று நான்கு வருஷம் கஷ்டப்பட்டார்கள். ஊர்க்காரர் இரங்கி ஒரு போகம் இரண்டு போகம் சாமையும் கொரளியுங் கூடக் கொடுத்தார்கள். எருமை நான்கில் கோயிலுக்கு ஒன்று விட்டார்கள். அப்போது தான் ஜோகி கோயிலுக்குப் போனான். வருஷம் ஏழெட்டு இருக்கும். உனக்குப் பதில் வந்த பையன் நிற்காமல் ஓடிப் போய்விட்டான், திடீரென்று.” ரங்கன் நெடுமூச்செறிந்தான். கையில் அறுநூறு ரூபாய் இருக்கிறது. பூமி குத்தகை எடுத்து, அவனும் ஏன் கிழங்கு போடக் கூடாது? அன்று அவன் பீமனை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். தனக்குச் சோறு போடும் அம்மாளிடம் பிரத்தியேகமாக ஒரு கோழிக்குஞ்சு வாங்கித் தந்து சமைக்கச் சொன்னான். இருவரும் உண்டு களித்து மதுவருந்தி அந்த இரவை இன்பமாகக் கழித்தார்கள். மறுநாள் பீமன் ரங்கனைப் பற்றிய செய்திகளைச் சுமந்தவனாய், மணிக்கல்லட்டிக்குச் சென்றான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|