உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஐந்தாம் பாகம் 9. பாவ மன்னிப்பு பாருவுக்கு விஷயம் புரியவில்லை; புரிந்து விட்டாற் போல் கேட்கவும் நா எழவில்லை. நஞ்சன் ஏன் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பையனா அவன்? இது கல்யாண யாத்திரையா? பஸ் வெறி பிடித்தாற் போல் அவர்களை எங்கோ சுமந்து செல்கிறது; எங்கே? எப்படிக் கேட்பது? பாருவுக்கு வயிற்றைப் புரட்டியது; கலங்கியது. நஞ்சன் அவளைத் தோளோடு சாத்திக் கொண்டான். அப்போதுங் கூட அவன், “ஏனம்மா, உடம்புக்கு என்ன?” என்று கேட்கவில்லை. ஏனோ கேட்கவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கியதோ, மகன் அவளை டாக்ஸியில் ஏற்றியதோ அவளுக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் ஆஸ்பத்திரி வாயிலில் அவள் கண்களை விழித்தாள். அன்று நஞ்சனுடைய அம்மை கிரிஜை வண்டியை விட்டு இறக்கப்பட்டதும், மறுபடி எல்லோரும் அலறிக் கொண்டு வண்டியில் ஏறியதும் நினைவுக்கு வந்தன. யார் யார்? அவள் தான் இறந்து விட்டாளா? ஆவி உருவத்தில் நடக்கிறாளா? அவளைச் சுற்றி எல்லோரும் அழுவானேன்? “நான் தான் மாபாவி, நான் தான் தூண்டி விட்டேன்” என்று ஜோகியண்ணன் அழுகிறாரே? என்ன ஆயிற்று? “வேண்டாம், வேண்டாம் என்றேன், கேட்டாரா?” என்று கௌரி அழுகிறாளே? போலீசு தடதடவென்று போயிற்று. கிருஷ்ணன்... கிருஷ்ணன், இவன் எங்கே வந்தான்? அவள் சாவுக்கு அவனும் வந்திருக்கிறானா? உண்மையில் அவள் இறந்து போனாளா? இல்லை, இறந்து போனால் தெளிவாகப் பார்க்க முடியுமா? அவளை ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார்கள்; கூடி அழுகிறார்கள்! “அண்ணி! என் வெறியில் அண்ணனின் பொறாமை வெறியும் கூடி அவனைப் பொசுக்கி விட்டது அண்ணி. அண்ணன், ரங்கண்ணன் போய்விட்டான்.” ஆ! அண்ணன் போய்விட்டான்! அண்ணன், அவள் கணவன் - ரங்கன்! இடியாய், பாறையாய் நெஞ்சில் ஏதோ உட்கார்ந்து விட்டாற் போல் அவள் நிலைத்து விட்டாள். “ஜோகி, மனசு தளர விடக் கூடாது. என்ன செய்வோம்? என் இரத்தத்தைக் கொடுத்து ரங்கன் உயிரை மீட்பதாக இருந்தாலேனும் நான் பாக்கியவான் என்று முன்னே சென்றேன். பயனே இல்ல. நம்முடைய பகை உயிர்ப்பலியுடன் தீரட்டும், ஜோகி!” - கிருஷ்ணனின் சொற்கள் அடைப்பட்ட சோகக் குரலில் வந்தன. “நான் பாவி, நான் பாவம் செய்தேன்; அடங்கியிருந்த பொறாமைத் தீயை நான் தூண்டி விட்டேன். கிருஷ்ணா, நானும் பொறாமைப் பட்டேன். உன் நிலம் போகவில்லை என்று பொறாமைப்பட்டேன்.” “வேண்டாம், வேண்டாம்.” நெடுங்கைகள், பகை மறந்த நிலையில் அன்று மரணத்தின் சந்நிதியில் பிணைந்தன. புதன்கிழமையன்று அதிகாலையிலே, பனி மூட்டத்தைப் பிளந்து கொண்டு கனகமயமான கதிர்கள் மரகதமலை ஹட்டியைத் தழுவின. மரகதமலையே கூட்டம் தாங்காமல் அமுங்கி விடுமோ என்று ஐயுறும் வண்ணம், ஒரே கட்சியாய் மக்கள் ரங்கே கௌடரின் அந்திய யாத்திரையைக் காணக் கூடினார்கள். லிங்கையாவின் மரண நிகழ்ச்சிக்குப் பிறகு, மக்களிடையே கட்சிப் பிளவைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த அந்தச் சாவுக்குப் பிறகு, மலைமக்களிடையே நிகழ்ந்த எந்த ஒரு மரணச் சடங்குக்கும் இப்படிக் கூட்டம் கூடியதில்லை என்று சொல்லும்படி மக்கள் கூடினார்கள். அந்தச் சாவுச் சடங்குகளில், போலியான கண்ணீரும் விருந்தும் களிப்பும் சிரிப்புமில்லை. இறுதியான மரியாதைகளை இறந்தவனுக்கு ஒவ்வொருவரும் அவரவர்க்கு உரிய முறையில் செலுத்தச் சாரிசாரியாக வந்தனர். பழுத்த பழமாக உண்டி சுருங்கி, உடல் சுருங்கி, நாட்கணக்கென்று, அறையோடு கிடந்த முதியவர் மாதனை, கண்களில் நீர் பெருகக் கிருஷ்ணன் அழைத்து வந்தார். கிழவர் அறையோடு அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பேச்சுக் குழற, நினைவு மறக்க, இந்த ஒரு சம்பவத்துக்காகவே உயிர் வாழ்ந்தாரோ அவர்! நாற்காலியில் அமர்ந்தபடி, கூட்டத்தையும், எதிரே சப்பரத்தில் கிடந்த மைந்தனின் கோலத்தையும் கண்டார். அளிந்த பழமெனத் தோன்றிய அவர் முகத்தில், முதிர்ந்த விதைகளைப் போன்ற கண்கள் நீரில் மிதந்தன. அருகில் இருந்த கிருஷ்ணனைத் தொட்டார்; ஜோகியைப் பற்றினார். இருவரும் அவர் குறிப்பை அறிந்தாற் போல் அவரைத் தாங்கி எழுப்பினர். முதியவரின் கண்களில் ஒளி தனியாகப் பொங்கி பெருகி வந்ததோ என நீர் வழிந்தது. தள்ளாடும் கால்களுடன், வானை நோக்கி, ‘ஹாவ், ஹாவ்’ என்று கூறிய வாய் குழறியது. அடி தப்பாமல் பெரியவர், இருவரையும் பற்றி, பிண ரதத்தை வலமாக வருகையில் இன்னும் பலரும் சேர்ந்து கொண்டனர். அது நடனமாக இல்லை. மைந்தனின் உயிர்ப்பறவை, ஆசாபாச வெறிகளுக்கு இருப்பிடமாக உடற்கூட்டை விட்டு வானவெளியில் பறந்து சென்றதை அவர் கண்டாரோ? அந்த மனக் கிளர்ச்சியில் பிறந்த அங்க அசைவுகளோ? அன்றி, தாம் வாழ்நாளில் இழந்து விட்டதை, இறுதிக் காலத்துக்குள் ஒருமுறை பெற நேரம் வந்துவிட்டது குறித்து அவர் அடைந்த ஆனந்தமோ? இந்த ஒரு நிகழ்ச்சிக்கே காத்திருக்கும் தம் உயிரும் விடுதலை அடையும் நேரம் நெருங்கி விட்டது என்ற நிறைவில் எழுந்த பெருமகிழ்வோ? அதை வரையறுத்துக் கூற முடியாது. சடங்குகளில் ஒவ்வொன்றும், அன்று வெறும் சடங்காக நிறைவேற்றப்படவில்லை. மனைவியர் உட்பட இறுதி மரியாதைகளை நிறைவேற்றிய பின்னர், மயானத்தில், பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டும் இறுதிப் பிரார்த்தனை ஒன்றைப் படிப்பது, படக மக்களின் மரணச் சடங்குகளில் முக்கியமான நிகழ்ச்சியாகும். லிங்கையாவின் மரணச் சடங்கில் அது ஒப்புக்குத்தான் சண்டை சச்சரவுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. ஏன்? பாவமன்னிப்புக்கான அந்தப் பாடல் வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும், அத்தனை உருக்கமாகப் பாடப்பட்டிருக்கவில்லை என்று தோன்றும் வகையில், ஜோகியே அதைப் பாடினார்; முன்னோர் செய்த பாவம், மூத்தோர் செய்த பாவம், தான் செய்த பாவம், தமியர் செய்த பாவம், எல்லாம் விலகட்டும்! எல்லைக் கற்கள் விலக்கிய பாவம், எண்ணற்ற பொய்களின் பாவம், ஏழையின் துயர் தீர்க்காத பாவம், எளியோரை வாட்டிய பாவம், பிறர் பூமி செழிக்கப் பொறுக்காத பாவம், பிறர் மாடு கறந்திடப் பொறுக்காத பாவம், அயல்வாழ்வு சிறந்திடத் தாளாத பாவம், அசூயைக் கிடந்தந்த ஆகாத பாவம், பச்சை மரங்களை வெட்டிய பாவம், பசுவைப் பாம்பைக் கொன்ற பாவம், கோள்மூட்டிப் பகை செய்த பாவம், குளிரில் விறைத்தோரை விரட்டிய பாவம், தண்ணீரைப் பிழைத்திட்ட பாவம், தாயாருக்கிழைத்திட்ட பாவம், உண்ணீரைக் கலக்கிட்ட பாவம், ஊருக்குப் பிழை செய்த பாவம், என்றெல்லாம் ஜோகி ஒவ்வொரு பாவமாக, முந்நூற்றுக்கு மேற்பட்ட பாவங்களைச் சொல்லி, அண்ணனின் ஆன்மாவின் தூய்மையை வேண்டுகையிலே, அந்த ஓர் உயிர் மட்டுமா கழுவப் பெற்றது? அங்கே குழுமியிருந்த அனைவரும், தங்கள் தங்கள் கண்ணீர் கொண்டே, தாம் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை எல்லாம் கழுவுபவராயினர். ஜோகி தாமே மன்னிப்பு வேண்டுபவராய், ஒவ்வொரு பிழையாகப் பொறுக்க வேண்டினார். சற்றைக்கெல்லாம் லிங்கன் வைத்த நெருப்பு, ரங்கே கௌடரின் உடலைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. கூட்டமெல்லாம் போன பின்பும், இருவர் அந்தச் சிதைப் பற்றி எரிந்து மண்ணோடு கலக்கையிலே அங்கு நின்றனர். ஒருத்தி பாரு, மற்றவர் ஜோகி. அந்த மலைமண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்வென்ற படுகளத்தில் போராடி, வென்று, தோல்வியுற்று, இறுதியில் அக்கினியின் வசமான அந்த உடலுக்கு உரியவனோடு பிணைந்த அவர் வாழ்வுகள், இருவரின் சிந்தையிலும் படங்களாக வந்து கொண்டிருந்தன. ரங்கன் நினைவாகி விட்டான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|