உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஐந்தாம் பாகம் 8. புரட்சி ஓங்குக! பாருவுக்குச் சதியை உடைத்தவன் ராமன் தான் ராமன், மாமிக்கும் நஞ்சனுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தையையோ மனஸ்தாபத்தையோ அறியான். ஆனால், தான் தெரிவித்த செய்திகளை முன்பே அவன் மாமிக்குக் கூறியிருப்பான் என்று மட்டும் நினைத்தான். ஆனால், அவன் மீது உயிரையே வைத்திருக்கும் அம்மைக்கும் தெரிவிக்காமலா நஞ்சன் மணம் புரிந்து கொள்வது? நஞ்சனின் தீர்மானம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அது குறித்து அவன் நஞ்சனிடம் பேசவும் விரும்பவில்லை. அவளுக்குச் செய்தி தெரிவிப்பது தன் கடமை என்று எண்ணியே, ஞாயிறன்று பிற்பகல் ராமன் மாமியைத் தேடிச் சென்றான். முன்வாயில் வெயிலில் அவள் உட்கார்ந்திருந்தாள். முன்பெல்லாம் வீட்டுக்கு எவரேனும் வந்தாலே, கண்கள் ஒளிர, அவள் முகம் மலரும். அந்த ஒளியும் மலர்ச்சியும் அவள் முகத்தில் இப்போது தோன்றவில்லை. ஏற்கெனவே எண்ணற்ற சுருக்கக் கீற்றுகளை உடைமையாக்கிக் கொண்டிருந்த அவள் முகம், பனி வெயிலுக்கு இன்னும் வற்றி, எலும்புகள் முட்ட, உலர்ந்து சுக்காக இருந்தது. “ராமனா?” என்றாள், “நல்லா இருக்கிறாயா?” என்று சம்பிரதாயக் கேள்விகளுக்குக் கூட அவள் வாழ்வில் பசை வற்றி விட்டது. “நல்லா இருக்கிறீர்களா மாமி?” நல்லா இருக்கிறீர்களா! எப்படி இருக்க முடியும்? ஏக்கப் பெருமூச்சு ஒன்று அவள் மார்புக் கூட்டைப் பிளந்து வந்தாற் போல வந்தது. தலையை மட்டும் ஆட்டினாள். “மாமன் எங்கே?” “மாமன் எங்கோ போகிறார்; எப்போதோ வருகிறார். அவன் போனதிலிருந்து அவரும் வீட்டுக்குச் சரியாக வருவதில்லை.” ராமனின் நெஞ்சு கசிந்தது. “பையன் இருந்தான். ஜோகியண்ணனுக்கு இங்கு உறவு இருந்தது. அவன் போனான். அவரும் போகிறார். வீட்டில் நான் தான் இருக்கிறேன்.” “நஞ்சன் வருவதே இல்லையா, இங்கே?” “எப்போதோ வருவான். அவனுக்கு இனி அம்மை எதற்கு?” அதைக் கூறுகையிலே அவள் கண்கள் குளமாகிவிட்டன. “மாமி!... ஒரு... ஒரு... சமாசாரம் சொல்ல நான் இங்கு வந்தேன்.” “என்னது?” “நஞ்சனுக்கு நாளைப் புதனன்று கல்யாணம்.” “என்னது?” அவள் செவிகளில் பூமியைத் துளைக்கும் பேரிடி விழுந்ததா? உடல் குலுங்கி அதிர்ந்தது. ராமன் பொருட்படுத்தாமல் பேசினான்; “கிருஷ்ண கௌடர் வீட்டுப் பெண் தான். நஞ்சன் அதிருஷ்டக்காரன். அவனைக் கட்டுகிறவளும் அப்படித்தான். பழனிமலை வேலன் சந்நிதியில் கல்யாணம்.” நெஞ்சைச் சுருக்கிட்டுப் பிடிப்பது போல் பந்தாக அடைத்தது அவளுக்கு. “அவன் சூழ்ச்சி, அவன் வீட்டுப் பெண் தானே? சதிகாரி, என் மகனை உயிரோடு இழுத்துக் கொண்டாளே!” ராமன் திடுக்கிட்டான். “மாமி! பதற்றமாகப் பேசாதீர்கள்.” “ராமா, எப்படியாவது நீ அந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்த மாட்டாயா? அந்தப் பாவி, என் மகனை உயிரோடு இழுத்துக் கொள்கிறான். என் வீட்டில் பச்சை இல்லை; உயிர் இல்லை. சூனியமாய்ப் போய்விட்டது.” “அழாதீர்கள் மாமி, நஞ்சனின் சந்தோஷம் உங்கள் சந்தோஷம் இல்லையா? அவன் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறான். நீங்கள் சந்தோஷப்பட வேண்டி இருக்க மனசு கொதிக்கலாமா? எங்களுடன் வாருங்கள். பழனி மலைக்குப் போவோம். சந்தோஷமாக மணம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” ஆனால் அந்த இதமான மொழிகளெல்லாம் அவள் செவிகளில் விழுந்தால் தானே? “நீ... நீதானே என்னை ஏமாற்றிச் சதி செய்தாய்? படிக்க வைக்க நான் பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்தப் பாவியினிடம் பல்லைக் காட்டி, என் மகனை அவர்கள் விரித்த வலைக்கு இழுத்து விட்டவன் நீ... நீ!” ராமன் அவள் கத்தலைக் கேட்டுப் பதறினான். “மாமி, என்ன பேச்சு நீங்கள் பேசுகிறீர்கள்?” “நஞ்சன் படிக்காமலே இருந்திருந்தால் நன்றாக இருக்கும். மண்ணில் பாடுபட்டு வேலை செய்வான். அப்போது மண்ணும் போயிருக்காது. அவர்கள் வலையிலும் விழ வேண்டாம். என்னை விட்டு என் பையன் போக மாட்டான். ஐயோ!” உடல் குலுங்கும் அவள் விம்மல்களை அவனால் காணக் கேட்கத் தாளவில்லை. ஏன் வந்தோம் என்ற நோவுடன் திரும்பிவிட்டான். அவன் சென்ற பின்புதான் பாரு, தன்னையே மறந்த வெறியுடன் அணைக்காலனிப் பக்கம் நடந்து சென்றாள். ஒரு வீட்டு வாயிலில் நின்ற பெண்ணிடம் பாரு கூனிக்குறுகி, “இஞ்ஜினீர் நஞ்சன் வீடு எது?” என்று தாய்மொழியில் கேட்டாள். “ஓ! மேலே, நாலாவது வீடு, பாருங்கள்” என்று அவள் காண்பித்தாள். அவள் காட்டிய வீட்டில் முன் வாயிலில் வேலைக்காரப் பையன்கள் இருவர் கோலி ஆடிக் கொண்டிருந்தனர். அவள் படபடப்புடன் வாயிலில் நின்றாள். “யாரம்மா நீங்கள்!” என்றான் ஒரு பையன். “இன்ஜினீர் நஞ்சன்...” “ஓ, அவர் நைட் ஷிப்ட். இப்போதுதான் போனார். மணி அஞ்சரை ஆகிறதே! இனிமேல் காலையில் தான் அவர் வருவார்.” பகல் வேலைக்குப் போனவர்கள் அணியணியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். புரிந்தும் புரியாமலும் கூசிக் கொண்டு அவள் நஞ்சன் வருகிறானோ என்று நின்றாள். “காலையில் வருவார் அம்மா, போங்கள்” என்று இன்னொருவன் அவளுக்குப் புரிய விளக்கினான். இரவை அவள் எப்படிக் கழித்தாள் என்று சொல்வதற்கில்லை. அதிகாலை நேரத்திலேயே அவள் மூக்குமலையை விட்டுக் கிளம்பி, காலனி வீட்டுக்கு வந்து விட்டாள். சாத்தியிருந்த கதவை அவள் இடித்த போது, அவளுக்குப் பரிச்சயம் இல்லாத நஞ்சனின் சகபாடி தான் வந்து கதவைத் திறந்தான். அவள் ஏதும் பேசுமுன்னரே, “வாங்க, நஞ்சனைத் தேடி வந்தீர்களா? உள்ளே வாங்கம்மா, நஞ்சன் வரும் நேரந்தான்” என்று அவளை முன்னறையில் அழைத்து உட்கார வைத்து விட்டுச் சென்றான். வேலைக்காரப் பையன் சூடாகக் காபி கொண்டு வந்து அவள் முன் வைத்தான். உள்ளம் பெருமிதம் அடைந்து தளும்ப வேண்டிய அந்த நிமிஷத்திலே அவள் வாயிற்புறமே இரு விழிகளை ஊன்றியவளாகக் கணம் யுகமாக நின்றாள். அவன் வந்தான்; அலங்கோலமான தலை; கற்புழுதி படிந்த உடுப்புகள்; சிவந்த கண்கள். படியேறி அவன் வந்ததும் முதல் முதலாக நிமிர்ந்து அவளைத்தான் பார்த்திருக்க வேண்டும். பிடிவாதமும் முட்டாள்தனமும் பாசமும் அன்பும் கூட்டிக் கலந்து வார்த்தாற் போன்ற வடிவினளாக அங்கே தோன்றிய அம்மையைக் கண்டதும், ஆத்திரப்படுவதா, இரக்கப்படுவதா என்று புரியாதவன் போல் அவன் நின்றான். “எங்கே அம்மா வந்தீர்கள்?” என்றான், அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டவனாக. “உனக்கே நன்றாக இருக்கிறதா, நஞ்சா? நீ... நீ வீட்டுக்கு வராமல் வீடே சூனியமாய்ப் போச்சு!” பேச்சு அதற்கு மேல் எழும்பவில்லை. கண்ணீர் முட்டிப் பேச்சைக் கரைத்தது, உருவாகுமுன். அவனுடைய சகபாடிகள் இருவரும் அந்த அழுகைக் குரல் கேட்டு எட்டிப் பார்த்தனர். அவனுடைய வாலிப உள்ளத்துக்கு, அம்மை அங்கு வந்து தனக்கு அவமானத்தைத் தேடித் தந்தாற் போல் தோன்றியது. “சரி நான் வீட்டுக்கு வருகிறேனே! சொல்லி அனுப்பினால் போதாதா? நீங்கள் எதற்கு வந்தீர்கள்” என்றான். “இப்போது வருகிறாயா?” என்றாள் அவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு. “மனிதனை உயிருடன் கொன்று விடுவீர்கள்!” என்று எரிந்து விழுந்தான் அவன். “இப்படியெல்லாம் பேசாதே, நஞ்சா. நான் அன்று சொன்ன வாக்கை மீறி நீ கல்யாணம் செய்வது சரியாகுமா? அம்மை உனக்குக் கெடுதலா சொல்வேன்? என்றைக்கேனும் நான் உனக்குக் கேடு நினைத்திருக்கிறேனா? நீ எட்டு மைல் நடந்து படிக்கப் போகையிலே, நான் பட்ட பாட்டை அறிவாயா? ஒருநாள் நீ பட்டினியுடன் ஸ்கூல் போன போது, நானும் பட்டினியாய்ப் பிச்சை கேட்கப் போனது தெரியுமா? உன் அம்மையை விட்டுப் போகிறாயே நஞ்சா!” அந்த அழுகைப் பிரளயத்தை ஏற்க, அவனுக்கு அப்போது பொறுமை இல்லை. “அந்தப் புராணத்தை இப்போது ஏன் அவிழ்க்கிறீர்கள்? படித்து, எல்லாம் ஆயிற்றே! அப்பப்பா! நீங்கள் என்னைப் படிக்கவே வைத்திருக்க வேண்டாம்” என்று முணுமுணுத்தவனாகத் தலையைக் குனிந்த வண்ணம் அவன் உள்ளே சென்று விட்டான். தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்த அவனுக்கு உலகமே சுற்றினாற் போல் இருந்தது. கடந்த காலம், சீர் இல்லாத பெற்றோரின் தொடர்பு இரண்டுமே அந்தச் சுழற்சியில் மறக்கலாகாதா? இல்லை, சீராகக் கூடாதா? கல்யாணச் செய்தியை அவளுக்கு யார் கூறியிருக்கக் கூடும்? கிருஷ்ண கௌடர் போயிருப்பாரோ? அவனுடைய நண்பர்கள் காலை வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள். வேலைக்காரன் அவளுக்குக் காபி பலகாரம் கொண்டு வந்து வைத்தான். இரண்டு மணி நேரம் சென்ற பின்னர் அவள் எட்டிப் பார்த்தாள். அவனுக்காகவே அவள் நின்றாள். நாளை மறுநாள் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவன் அவன். கீழ்மலைப் பக்கம், கிருஷ்ண கௌடரைச் சேர்ந்தவர்கள், ராமனுடைய வண்டியை வைத்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருப்பார்கள்! என்ன செய்வான்? “அம்மா, நீங்கள் நல்ல தாயாக இருந்தால், சந்தோஷமாகக் கல்யாணத்துக்கு என்னுடன் வாருங்கள். வீணான பிடிவாதம் செய்யாதீர்கள். இதே போல் வீட்டில், நீங்கள் மருமகளுடன் சந்தோஷமாக இருக்கலாம் அம்மா!” “உன்னை அவர்கள் விட மாட்டார்கள்.” “அம்மா, உங்களுக்குச் சத்தியவாக்குக் கொடுக்கிறேன். நான் அப்படி ஒருநாளும் கட்டினவள் வீட்டுடன் உங்களைப் புறக்கணித்துச் செல்லமாட்டேன். இப்போதே நீங்களும் கிளம்பி வாருங்கள். உங்களையும் அநாவசியமாக வருத்திக் கொண்டு என்னையும் துன்புறுத்தாதீர்கள். இப்படியா அம்மா உங்கள் மகன் கல்யாணம் நடக்க வேண்டும்? ஐயனும் சந்தோஷமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.” “நிச்சயமாக நீ கல்யாணமானதும் என்னை விட்டுவிட மாட்டாயே?” “சத்தியம், சத்தியம், சத்தியம்! நான் சொல்வதை நம்புங்கள். உங்களைப் புறக்கணித்துப் போகும் கீழ்மகன் அல்ல அம்மா, நான்.” அவனையே அவள் உற்றுப் பார்த்தாள். சத்தியத்தைப் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு நம்பலாமா? “கல்யாணம் செய்து கொண்டு, இதே வீட்டில் இருப்போம், உங்களுடன், ஐயனுடன். ஐயன் நினைப்பது போல் கிருஷ்ண கௌடர் நம்மைக் கெடுப்பவர் அல்லர். அப்படி நினைப்பது பாவம், அம்மா! சுயமாக ஐயன் நினைக்கவில்லை. பெரியப்பா நினைத்து, அவரை ஆட்டி வைக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள், அம்மா!” “நான்... நான்... உன்னுடன் வரட்டுமா?” “எத்தனை மகிழ்ச்சி தரும் செய்தி அம்மா எனக்கு! இதோ குளித்து விட்டு உடை மாற்றி வருகிறேன். கீழ்மலையில் நமக்கு வண்டி காத்திருக்கும்.” பாரு மாறி மாறி வரும் உணர்ச்சிகளுடன் இன்னமும் அங்கே நின்றாள். சற்றைக்கெல்லாம் வேலைக்காரனிடம் அவன் சொல்லி விட்டு, அம்மை உடன் வர, கைப்பையுடன் கிளம்பினான். விஜயாவுக்கென்று அவன் ஒரு சிறு பரிசு கூட, வாங்கவில்லை. இருவருமாகச் சாலைக்கு ஏறி வருகையிலே, மலைமுகடுகளில் பட்டு எதிரொலிக்கும் கோஷங்கள் செவிகளை அடைத்தன. செங்கொடியைத் தாங்கிய மக்கள் சாரிசாரியாகத் தகரக் கொட்டகைத் தலைமை அலுவலகத்தின் முன் எங்கிருந்து வருகிறார்கள்? “அழிக! அதிகாரிகள் அக்கிரமம் அழிக! நியாயமான எங்கள் உரிமைகளை மறுக்கும் அதிகார வர்க்கம் அழிக!” என்ற பலப்பல கோஷங்கள்! பாரு அஞ்சினாள்; அவள் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் பற்றி அறியாள். நிலம் தரமாட்டோம் என்று கிளர்ச்சி செய்பவர்களா அனைவரும்? நஞ்சனுடன் அவளால் ஓட முடியாது போல் இருந்தது. அலுவலகங்களின் முன், கடலாகப் பெருகிய அலை மோதிய கூட்டத்தைக் கடந்து, குறுக்குப் பாதையில் நஞ்சன் கீழே இறங்கினான். அப்பப்பா! சாலையில், கீழ்மலைப்பக்கம், கொஞ்சமான கூட்டமா? ஜீப்புகளும் போலீசு வண்டிகளும் தவிர, வேறு ஒரு வண்டி செல்ல இடமில்லை. காக்கி உடை தரித்த விசேஷப் போலீசார், நீல உடை தரித்த சாதாரணப் போலீசார் நூற்றுக்கணக்கில் வந்திருப்பாரோ! நஞ்சனுக்கு உள்ளூற ஆத்திரம் பொங்கியது. அந்தக் கூட்டங்களையும் கலவரங்களையும் கடந்து, அவன் ராமனை எப்படிப் பார்ப்பான்? கடைத் தெருக்கள், சந்து பொந்துகள் எங்குமே பிதுங்கும் கூட்டத்தை எப்படிக் கடப்பான்? அவனை அறியாமலே, ஏதோ விபரீதம் ஏற்படும் என்ற உள்ளுணர்வு, குளிர்போல் சிலிர்ப்போடியது. அம்மையின் கையைப் பிடித்துக் கொண்டு விரைவாக மறுபடி கீழ்மலைக்குச் செல்ல முயன்றான். “இத்தனை பேருக்குமா நிலம் போய்விட்டது நஞ்சா?” “இல்லை. இங்கே அவரவர் ஊரை விட்டு நெடுந்தூரம் வேலை செய்ய வந்திருப்பவர்கள் எல்லோரும். சம்பளம் அதிகம் வேண்டுமாம்!” “ஆ! இத்தனை பேர்களுமா ஊரை விட்டு வந்தவர்கள்?” “ஆமாம். வெயில் காயும் ஊர்களிலிருந்து, பழக்கமில்லாத குளிரையும் பொறுத்து, பிழைப்பை நாடி வந்தவர்கள். அவரவர்கள் ஊர்களில் தண்ணீர் இல்லை. வேலை இல்லை. சோறு இல்லை. இத்தனை பேரும் இந்த அணையால் சோறு உண்கிறார்கள்.” டுமீல்! டுமீல்! நஞ்சன் அதிர்ந்து திரும்பினான்; பாரு இருதயம் நின்று விட்டாற் போன்ற பீதியுடன் நஞ்சனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். எங்கே? எங்கே? சமாளிக்க முடியாத குழப்பம், போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொண்டு விட்டதை அவன் அறிந்து கொண்டான். நெஞ்சு பதைபதைக்க, முன்னும் திரும்ப முடியாமல், பின்னும் திரும்ப முடியாமல் அவன் ஓரமாக நின்றான். கூட்டத்தில் பரபரப்பு; குழப்பம். தீப்பந்தம் கண்ட தேனடை போல், அலுவலகத்துக்கு முன் கூடிய கூட்டம் சிதறியது. வண்டிகள் பாய்ந்து புகுந்தன. போலீசார் புகுந்து சுழன்றனர். நஞ்சன் அம்மையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குறுக்குப் பாதையில் விடுவிடென்று இறங்கினான். “புரட்சி ஓங்குக... புரட்சி...!” சிதறிய கூட்டத்தின் சின்னாபின்னமான ஒலிகள். கீழ்மலைப் பஸ் நிறுத்தத்தில் - ராமன் எங்கே? அங்கே கிருஷ்ண கௌடரின் வண்டியும் இல்லை; ராமனையும் காணவில்லை. அவன் கண்கள் அங்கே கசமுசத்த கும்பலைத் தேடித் துருவுகையிலே, எதிரே கணக்கர் ‘பஞ்சாமிர்தம்’ அவன் கண்ணில் தென்பட்டார். அவர் பாதையைக் கடக்கு முன் ஆம்புலன்ஸ்களும் நாலைந்து ஜீப்புகளுமாகப் பாதையிலே வரிசையாகச் சென்றன. “என்ன ஸார்? ஷூட்டிங் செய்து விட்டார்களாமே? அநியாயம்!” என்று கேட்டுக் கொண்டே அவர் வந்தார். “புரியவில்லை” என்றான் நஞ்சன் இன்னும் கூட்டத்தைத் துழாவிய வண்ணம். “நான் லீவு போட்டுவிட்டு, பஸ்ஸில் ஊட்டிக்குப் போகலாம் என்று வந்தேன் ஸார். முட்டாள் பயல்கள்! அணை எதிர்ப்பாம், பூமியைப் பறித்துக் கொண்டதற்கு இன்றைக்குப் பார்த்து இவர்களுடன் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டார்களாம். குண்டுபட்டவனைத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் போகிறது, பார்த்தீர்களோ இல்லயோ?” “குண்டு பட்டதா? ஓ!” ஐயனும் அந்த ‘முட்டாள் மனிதர்’களில் ஒருவராக எங்கே நின்றாரோ? அப்படி நினைக்கையிலே உடலில் சிலிர்ப்பு ஓடியது நஞ்சனுக்கு. “அம்மா, ராமன் இல்லை. நாம் எப்படியேனும் ஹட்டிக்கு நடந்து போய்விடுவோம். கலாட்டா அதிகம்” என்று அவன் கூறி, இரண்டு அடிகள் பாதையில் எடுத்து வைக்கு முன்னே வண்டி ஒன்று அவர்களைக் கடந்து, பறந்து சென்றது. அழுகுரலும் காற்றுடன் தேய்ந்து சென்றது. “ரங்கே கௌடர் சம்சாரம் போறாங்க போல் இருக்கிறது. பாவம்! ரங்கே கௌடருக்குத்தான் குண்டு வயிற்றிலே பாய்ந்து முதுகிலே வந்திருக்கிறதாம்!” நஞ்சனின் மண்டையில் ஓங்கி யாரோ அறைந்தாற் போல் இருந்தது. ரங்கே கௌடர்... கண்கள் ஒரு கணம் இருண்டன. செவிகள் குப்பென்று மூடிக் கொண்டன. அவன் அம்மையை இழுத்துக் கொண்டு அப்போது கிளம்ப இருந்த பஸ் ஒன்றில் தாவி ஏறினான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|