மூன்றாம் பாகம்

9. நஞ்சுண்டேசர் அருள்

     ஆக்கி அழித்துப் பல திருவிளையாடல்களைப் புரிந்து கொண்டு செல்லும் காலதேவனுக்கு அலுப்போ சலிப்போ ஏது? உருண்டு உருண்டு பருவங்களாகிய சக்கரங்களில் மாறி மாறிச் சுழன்று செல்லுபவன், சென்ற தடத்தையும் திரும்பி நோக்குபவன் அல்லவே? மாதியின் தலைமுடி வெள்ளி இழைகள் ஆகிவிட்டன. கைகளும் கால்களும் சுள்ளிகளாகக் காய, தோலிலே எண்ணற்ற சுருக்கங்கள் விழுந்துவிட்டன. எதிர்மனையில் ரங்கம்மை மகன் இராமன் இளங்காளையாகி விட்டான். தேயிலை வைத்த ரங்கன், பச்சையைப் பணமாய்க் காணத் தொடங்கி விட்டான். சரக்கேற்றிச் செல்ல, ஆறாயிரத்துக்கு லாரி வாங்கியாயிற்று. வீட்டை இடித்து, நீட்டி, வசதியாகக் கட்டி விட்டான். கௌரி, அந்த வீட்டுக்கு வந்ததுமே மணிமணியாக இரு பிள்ளைகளைப் பெற்று விட்டாள். சில ஆண்டுகளில் எத்தனை மாறுதல்கள்!

     தெய்வம் வஞ்சித்தது என்று மாதி நினைத்தாளே! கவடறியாத மகன் ஜோகியை, அப்பனுமா வஞ்சிக்கிறான்? எதிர்மனையிலே, அந்த மகனுக்குப் பிள்ளையாகி விட்டனா? ஒருவேளை அவன், அவர் மகனோ? அவள் மகன் அவர் மகனோ?

     முதுமையும் ஏமாற்றமும் நெஞ்சை நையச் செய்து விட்டனவே! இந்த ஏமாற்றத்துடனேயே இவள் மட்கி மடிய வேண்டியவள்தானோ? ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட அவள் அந்த வீட்டிலே மழலை ஒலி தரும் எதிர்கால நம்பிக்கையைக் காணப் போவதே இல்லையா?

     சகலாத்திப் பண்டிகை வந்து விட்டது. ஹட்டி வீடுகளெல்லாம் மெழுகிப் புதுப்பிக்கப்பட்டு விட்டன. மாலை அழகழகான கோலங்களை, வீட்டு முற்றம் முழுவதும் பெண்கள் வரைந்தார்கள்.

     மாதி இளம் மருமகளாக இருந்த காலத்தில் வெண்மையான சாம்பலைத்தான் கோலமிட உபயோகித்திருக்கிறாள். முற்காலத்துப் பெண்களா கௌரியும் மற்றவர்களும்? ஹட்டிப் பெண்களில் எத்தனை பேர் சேலை உடுத்துச் சொகுசுக்காரிகளாக மாறிவிட்டனர்? ஒத்தைக்கு அணியணியாக ஹட்டிப் பெண்கள் கிளம்பி விடுகிறார்களே, பந்தயம் பார்க்கவும், என்ன என்னவோ ஆட்டங்கள் பார்க்கவும்?

     எதிர் வீட்டுக் கௌரி, மருமகன் ராமன் லாரி ஓட்டிப் போக, ஒரு செவ்வாய்க்கிழமை மீது இல்லாமல் ஒத்தை செல்கிறாளே! ஆனால், அவள் வீட்டில் என்ன உண்டு? அதே சாமை, அதே கோதுமை, அதே உழைப்பு. அவள் மகன், மருமகள் இருவருக்கும் வாழ்வு அலுக்கவே இல்லையே!

     கோதுமைத் தோசை சுட்டு அடுக்கி வைத்து, சோறும் வெண்ணையும் நடுவே வைத்து, ஆமணக்கு நெய்யில் முக்கிய மூன்று திரிகள் அதில் பொறுத்தி எரிய, குழந்தைகளை உட்கார்த்தி வைத்து, சுற்றித் திருஷ்டி கழிப்பார்கள் சகலாத்தியன்று. பிறகு அந்தத் தோசையை விளைநிலத்தில் வீசி விட்டு வந்து, இறைவனைத் துதிப்பார்கள்.

     குழந்தைகள் இல்லாத வீட்டிலே பண்டிகைக்கும் பருவத்துக்கும் ஏது மவுசு?

     ஜோகி ஒரு வழிபாட்டையும் குறைப்பவனல்ல. மாலை, நிலத்தில் கோதுமை தோசையை வீசி விட்டு வந்த பின் தீபத்தின் கீழ் உட்கார்ந்து இறைவனைத் துதிக்கலானான்.

     கண்களை மூடியவளாக, மாதி புறமனையில் படுத்திருந்தாள். அவனுடைய பிரார்த்தனையில் ரஞ்சகமான ஒலி, அவளுடைய செவிகளில் இனிமையாக விழுந்து கொண்டிருந்தது. அன்னையின் மடி இதம் போல், அது அவள் ஓய்ந்த நரம்புகளைத் தாலாட்டினாற் போல் இருந்தது. மெல்ல மெல்ல அவள் தன் நினைவு மறந்து உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாளா? அதை உறக்கமென்றும் சொல்வதற்கில்லை.

     எங்கேயோ மக்கள் போய்க் கொண்டிருந்தார்கள். படை திரண்டு போகிறதோ? இல்லை. மங்கையர் பட்டாளமா என்ன? வட்டும் முண்டும் அணிந்தவர்கள் அல்ல, வண்ண வண்ணத் துகில்கள்; கைகளிலே கங்கணங்கள், நெற்றியில் மங்கலப் பொட்டுக்கள். ஓடி ஓடி ஓடி ஒரு மங்கை நல்லாள் முன்னே கொற்றவை போல வருகிறாள். பின்னே, அவர்களைத் தொடர்ந்து குதிரைகளில் கத்தி ஏந்திய சிப்பாய்களின் பட்டாளமல்லவோ துரத்துகிறது.

     முன்னே ஆற்றைத் தாண்டி மாதரசி, தொலைவில் தெரிந்த கோபுரத்தை நோக்குகிறாள். கரமலர் குவிய, கண்ணிதழ் நனைய இதயம் உருக, “ஆலமுண்ட அரனே, அம்மையே, எங்களைக் காப்பாற்றுங்கள்; நஞ்சுண்ட நாயகனே, நாயகியே, நதி தாண்டி அவர்கள் வராமலிருக்கச் செய்யுங்கள்; கண்டம் கறுத்த பிரானே, கயவர்களுக்கு உதவுவீரோ?” என்று புலம்பித் துதிக்கிறாள், துடிக்கிறாள்.

     என்ன அதிசயம், ஆற்றிலே அரசன் சடையிலிருந்து பொங்கு வரும் கங்கையைப் போல அல்லவோ வெள்ளம் புரண்டு அலைமோதி வருகிறது! சீறிப் புரண்டு பொங்கி நுரைத்து வருவது புது வெள்ளமோ? அன்றி, ஏறுடைய பெம்மானின் அருள் வெள்ளந்தானோ?

     காற்றாய்க் கடுகி வந்த அசுவங்கள், அடித்துப் புடைத்து வரும் வெள்ளம் கண்டு மருண்டு நிற்கின்றன. மங்கையரின் கண்கள் நன்றியால் பளபளக்க, அந்தப் பஸவேசனை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். கணகணவென்று மணிகள் ஒலிக்கின்றன; தூபம் கமழ்கிறது.

     மாதி சட்டென்று இந்தக் கட்டத்தில் விழித்துக் கொண்டாள். மணி ஒலியும், பிரார்த்தனை ஒலியும்! ஜோகி விளக்கின் முன், அரனுக்குச் செய்யும் பிரார்த்தனை என்று அவளுக்குத் தெரிவாயிற்று.

     பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். உள்ளத்தின் பேரின்ப உணர்வைச் சொல்லத் தரமில்லை.

     ‘ஹா நஞ்சுண்டேசுவரா! உன் கருணையே கருணை! ‘ஏன் கலங்குகிறாய்! நான் இருக்கிறேன். என்னை மறந்தாயோ?’ என்று காட்டவோ, எனக்குக் கனவு போல் அந்தக் காட்சியைக் காட்டினாய்? உன் குலத்தோரின் தெய்வம் நானென்று, மறந்து போன இந்த அஞ்ஞானிக்கும் நீ நினைவு மூட்டினாயே! உன் கருணையை எப்படிப் புகழ்வேன்?’ என்று வியந்து கண்களில் நீர் பெருக, ஓடி வந்த அம்மை, விளக்கின் முன் விழுந்து பணிந்தாள்.

     “ஜோகி, ஈசுவரன் அருள் செய்தான். நஞ்சுண்டேசுவரரின் கோயிலுக்கு வருவோம் என்று வேண்டி, வெள்ளிப் பணம் முடிந்து வையுங்கள். கிரிஜை, விழுந்து கும்பிடம்மா” என்றாள்.

     ஜோகி வியப்புடன் அம்மையை நோக்கினான். “அம்மா!”

     “ஆமாம், மகனே. கனவு போல்க் காட்சி கண்டேன். ஆறு தாண்டி அம்மை வரவும் ஆற்றிலே தண்ணீர் பொங்கி வர, சிப்பாயும் குதிரையும் மடங்கிச் சென்றதையும் கண்டேன். ஆலமுண்ட ஐயனை நாம் மறந்துவிட்டு, பையன் இல்லையே என்று வருந்தினோம். ஈசுவரர் நினைவு மூட்டினார்” என்றாள் பரவசமாக.

     ஜோகியும் கிரிஜையும் நஞ்சுண்ட ஈசுவரன் கோயில் உள்ள திசை நோக்கி வணங்கி, வெள்ளிப் பணம் முடிந்து வைத்தார்கள்.

     நம்பினோர் கெடுவதில்லை அல்லவா? மண வாழ்வின் பல ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பூவை பிள்ளைக்கனியொன்றை ஈன்றெடுக்கும் சின்னங்களைப் பெற்றாள். முதியவளின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை ஏது? ஜோகியின் ஆனந்தத்துக்கு வரம்பு ஏது? குழந்தைக்குக் குறுகுறுப்புடன் ஓடியாடும் கிரிஜையின் முகத்தில் தனித்த ஒரு சோபை உண்டாயிற்று. சொல்லுக்கு அடங்காத நாணமும் நிறைவும் வதனத்தில் குடி கொண்டன. பாருவும் இந்த மாறுதலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள். பிரிவு காரணமாகப் பேசாமல் ஒதுங்கிய பெண்கள் கூட, அதிசயம் போல், புதுப்பெண்ணைச் சூழ்வது போல், கிரிஜையைச் சூழ்ந்து கொண்டு, கேலி செய்து மகிழ்ந்தார்கள்.

     ஆனந்த மிகுதியிலே மாதி, பெண்ணை அழைத்துப் பாயாசமும் சோறும் சமைத்துப் பல நாட்களுக்குப் பின்பு விருந்திட்டு மகிழ்ந்தார்கள்.

     சாதாரணமாக ‘கண்ணிகட்டும்’ வைபவமும், முதல் முறை பெண் சூலியாக இருக்கும் போதே நிகழ்த்துவது அந்த நாளைய வழக்கம். ஆனால், லிங்கையா, தம் மகனின் மனைவியின் போதே அந்த மாறுதலைப் புகுத்தி விட்டார். அன்று கிரிஜை மணப்பெண்ணாக மங்கல நீர் கொண்டு அந்த இல்லம் புகுந்த அன்றே மங்கல சூத்திரத்தை ஜோகி அவள் கழுத்தில் முடிந்து விட்டான். எனவே விருந்துடன் களிப்பைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

     அந்த வீட்டில் எந்த வைபவம் என்றாலும், முதலில் வரும் கரியமல்லர் குடும்பம் மட்டும், அன்று ஹட்டியிலேயே இருக்கவில்லை.

     திங்கள் பத்தும் சென்றன.

     கார்காலத் துவக்கத்தில் வானடைத்துக் கொட்டிக் கொண்டிருந்த நாள் ஒன்றில் கிரிஜைக்கு நோவு கண்டது.

     மணிக்கல்லட்டியிலிருந்து அம்மை பறந்து வந்தால். முதிய பெண்டிரும் இளைய பெண்களும் ஆவலே உருவாக அவர்கள் மனையின் முன் குழுமி விட்டனர்.

     வான் அடைத்துக் கொண்டிருந்தது. இரவு பகலாக பகல் இரவாக நீண்டது. துவண்ட கொடியாக, தாய்மையின் வேதனையை, தலையாய நோவை அனுபவித்த பேதைக்குப் போது விடிவதாகவே இல்லை. ஜோகியின் உள்ளம் ஆவல், நம்பிக்கை என்ற அந்தரக் கயிறுகளில் ஊசலாடித் தவித்தது.

     நாட்கள் நான்காயின. ரங்கன் எஸ்டேட் பக்கம் சென்று, மருத்துவரைப் பார்க்கத் தேடினான். அங்கே அவனுக்கு, கத்தோலிக்க வெள்ளைக் கிழவி, ‘வுட்’ கிடைத்தாள். மதத்தின் பேரிலே மனிதகுலத்துக்குச் சேவை புரியப் பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி வந்திருந்த கிழவி அவசியமான பொருட்களுடன் வண்டியில் ஏறிக் கொண்டு ரங்கனுடன் வந்தாள்.

     ஹட்டியில், அந்தக் கொட்டும் மழையிலே, ‘வேதத்தில் எல்லோரையும் சேர்க்கும் வெள்ளைக்காரக் கிழவி’ என்று அனைவரும் மருண்ட கிழவி வந்ததும், மாதி உட்பட எல்லாரும் எதிர்த்தனர். ரங்கன் ஒரே அதட்டலில் அவர்களை அடக்கினான். வெள்ளைக்காரி, நிலைமை தேர்ச்சி பெற்ற மருத்துவருக்கும் சமாளிக்கக் கடினமான நிலைக்குப் போயிருப்பதை உணர்ந்தாள்.

     சிறிய உயிர் போனாலும் பெரிய உயிர் நின்றால் போதும் என்ற எண்ணத்துடன் ‘வுட்’ கிழவி அவளை ஒத்தை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போகலாம் என்று ரங்கனிடம் மொழிந்ததும், ஜோகி வெலவெலத்து நின்றான். ரங்கன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ததும், ஜோகி மேற்குத் திசை நோக்கி, “ஈசனே, நீ அளிக்கும் பிச்சை, மோசம் செய்துவிடாதே!” என்று கைகுவித்தான்.

     மாதி அலைபாயும் நெஞ்சத்துடன் மறுகினாள். போஜன் மனைவி ஆஸ்பத்திரி சென்று, அதுபோல...

     ஆனால், கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்காரரை அழைத்து வந்து ஊசிகள் போட்டான். ஊராருக்கு, ஊசிகள் போடாத பாருவின் மக்களைத் தெய்வம் கொண்டு போயிற்றே! தன் நினைவற்ற கிரிஜை, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

     அறைக்கதவு மூடியிருக்க, வெளியே தவித்த அத்தனை நெஞ்சங்களுக்கும், நான்கு மணி நேரத்துக்குப் பின்பு, மழையொலியின் நடுவே தேன் பீறல்களாகக் குழந்தையின் ஒலி கேட்டது.

     கதவு படாரென்று திறந்தது. வெள்ளையுடைத் தாதியின் முகம் தெரியும் முன் மாதி ஆவலே உருவாக உள்ளே பாயத் தாவினாள்.

     “ஆண் குழந்தை...” என்று கூறிவிட்டுத் தாதி மறுபடியும் கதவைப் படாரென்று போட்டு விட்டாள்.

     ஜோகி ஆவலே வடிவாக நின்றான்.

     குழந்தை ஏன் இன்னும் கத்தி விறைக்கிறதே! அந்த இளங்குரலின் இன்பப் போதையில் முழுகிய மாதி, கனி ஈன்ற செழுங்கொடியை மறந்து விட்டாள். கனி காணத் துடித்தாள். அதன் மலர் போன்ற முகத்தை இடுங்கிய கண்களால் கண்டு, சுருக்கம் கண்ட முகத்தோடு இணையத் தூக்கக் கைகள் பரபரத்தன.

     எப்போது காணப் போகிறோம் என்று தவங்கிடந்து வந்த செல்வனை ஏன் இன்னும் வெள்ளைக் கவுன்காரி அழ விடுகிறாள்? கடவுளே இவர்களுக்கு நெஞ்சில்லையா? மாதி, பொறுமை இழந்து கதவை இடித்த போது உள்ளிருந்து கதவைத் திறந்த தாதி அதட்டினாள். கதவை நன்றாகத் திறக்காமலே, “போ கிழவி” என்று அவளைத் தள்ளிவிட்டு, “அந்த பொண்ணு புருஷன் யாரு?” என்றாள்.

     ஜோகி பதறி ஓடினான். மீண்டும் கதவு அடைப்பட்டது.

     “அடிப்பாவி!” என்று மாதி நின்றாள்.

     ஜோகி உள்ளே சென்று பார்த்தான். மழையில் அடிபட்டுச் சோர்ந்த தாழ்வாரை மலர் போல் அவள் கிடந்தாள். கையிலே ஏதோ ரப்பர்க் குழாயைக் கட்டியிருந்தார்கள். மூக்கில் ஏதோ வைத்திருந்தார்கள். வெள்ளை டாக்டரம்மாள், கிரிஜையின் ஒரு கையைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “கிரிஜா!” என்றான் அவன், அலறும் குரலில்.

     அவள் அவனை மலர நோக்கி, இதழ்களைக் கூட்டி சொன்னவே, அவன் ஒருவனுக்கே புரிந்தன.

     “குழந்தையைக் கொண்டு வந்து காட்டுங்கள்” என்று துடுத்தான் ஜோகி.

     தாதி அழும் குழந்தையைக் கையிலேந்தி வந்து காட்டினாள்.

     கிரிஜை பார்த்தாள். அவள் விழிகள் மலர்ந்தன. இதழ்களில் புன்னகை அரும்பியது.

     “ஆண்பிள்ளை, கிரிஜா ஈசனின் அருள்.”

     கிரிஜை சிரித்துக் கொண்டே இருந்தாள். கண்கள் மலர்ந்த படி இருந்தன.

     டாக்டர் உதடுகளைப் பிதுங்கி விட்டு போனாள்.

     வெள்ளையுடைத் தாதியின் கருவிழிகள் அகன்று செவ்விதழ்கள் குவிந்தன. “ஓ... காட்! கான்!” என்று அவள் ஒலியை அடுத்து, “கிரிஜா!” என்ற பீறி வந்த ஜோகியின் அலறல் ஒலி அந்தக் கட்டிடத்தையே அதிரச் செய்தது. குழந்தை கத்தி விறைக்கலாயிற்று.

     மழை விடாமல் கொட்டியது.