உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 9. தோல்வியும் வெற்றியும் “கோபாலா!” “ஏன் ஸார்?” “எங்கே போறே?” “ஓட்டுப் போட.” “எந்தப் பெட்டி?” “ரோஜாப் பெட்டி!” “ராணியின் கூந்தலில்?” “ரோஜாப் பூ!” “அழகிற் சிறந்தது?” “ரோஜாப் பூ!” “மணம் தருவது?” “ரோஜாப் பூ!” “மக்கள் விரும்புவது?” “ரோஜாப் பூ!” “மலையில் வளர்ந்து, மணத்தில் சிறந்து, மக்களைக் கவர்வது?” “ரோஜாப் பூ!” “முள்ளும் இலையுமாக உள்ள செடியில் அழகாக மலர்ந்து நிற்கும் ரோஜாவைப் பாருங்கள். படிப்பும் பகட்டும், அகந்தையும் ஆணவமும், மமதையும் மாடி வீடும், உல்லாசமும் ஒய்யாரமும் இந்த ரோஜாவுக்கு உண்டா?” “கிடையாது!” “பின் என்ன உண்டு?” “அறிவைத் துலக்கும் அழகுண்டு; அன்பு நினைக்கும் அகமுண்டு; எளிமையிலே ஏர்வை உண்டு; ஒளிகூட்டும் ஊக்கமுண்டு; அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று மமதையுடன் மார்தட்டுபவரிடையே மங்காமல், மாழ்காமல், மலர்ந்து நின்று மதி விளக்கும் ரோஜாப் பூ!” “ரோஜாப் பெட்டிக்கே!” “ஓட்டுப் போடுங்கள்!” “எந்தப் பெட்டி?” “ரோஜாப் பெட்டி!” தேர்தல் களேபரம் மலைமக்களை விட்டுவிடுமா? ரங்கனின் சின்னமான ரோஜாப் பூ, மூலை முடுக்குகள், மேடு பள்ளங்கள் எங்குமே இரையலாயிற்று. ஒவ்வொரு நாளும் கூடை கூடையாக ரோஜா மலர்கள் தேர்தல் கூட்டங்களில் மக்களின் கால்களில் மிதிபட்டன. மஞ்சள் ரோஜா, காட்டு ரோஜா, வெள்ளை ரோஜா, வீட்டு ரோஜா என்று எல்லா விதமான ரோஜாக்களும் ரங்கனின் புகழ்பாடக் கொய்து குவிக்கப்பட்டன. ரங்கனின் ஆட்கள் ரோஜாச் செருகிய கோட்டணிந்து, ரோஜாவின் புகழ் பாடினர். லாரிகள், வண்டிகள் முதலிய பிரசார சாதனங்களெல்லாம், ரோஜா மாலையணிந்து, ரங்கனின் உருவப்படங்களை ரோஜாப் பீடங்களில் தாங்கி மலைப் பாதைகளை வலம் வந்தன. வெற்றி தனக்கேதான் என்ற உறுதியுடன், ரங்கன், பணத்தைப் பதவிக்காகக் கண்மண் தெரியாமல் ஓடவிட்டுக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் போட்டிக்கு நின்றிருந்தாரானால், அவன் வெற்றியை அவ்வளவு நிச்சயமாக நினைத்திருக்க முடியாது. மக்கள் கட்சியின் சார்பில், கிருஷ்ணன் முதலில் நிற்பதாகத்தான் இருந்தார். ஆனால் ரங்கன் நிற்பதாக அறிந்ததும், அவர் தீர்மானத்தைக் கைவிட்டார். ரங்கன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னோர் அபேட்சகர், கோத்தைப் பக்கத்தைச் சேர்ந்த பிரமுகர்; மற்றவர், மக்கள் கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்டவர்; மலை நாட்டைச் சேர்ந்தவர் அல்லர். கிருஷ்ணன் பின்வாங்கி விடப் போகிறார் என்று ரங்கன் அறிந்திருந்தால் அந்த வம்புக்கே கிளம்பியிருக்க மாட்டான். கடைசி நிமிஷத்தில், முன் வைத்த காலைப் பின் வைக்க வழியில்லாமல் ஆகிவிட்டது. பழைய விரோதமும் கட்சிப் பிளவும் தேர்தல் போட்டியில் தலையெடுத்து ஆடாமலில்லை. சொல்லப் போனால், அதுவே பிரசாரங்களில் முக்கிய அங்கம் வகித்தது எனலாம். “நாம் முன்னேறுவோம். அநாகரிகமான சம்பிரதாயங்களை ஒழித்து, எதிர்காலத்தை நோக்குவோம்” என்று குறிப்பாக, அன்று ரங்கனுக்கு எதிராக நின்றவர்கள் தாமாகவே பிளவுபட்ட எதிர்க்கட்சிக்குச் சேர்ந்தார்கள். கௌரிக்குத் தலை கழுத்திலேயே நிற்கவில்லை! சாமானியமா? அவள் புருஷன் பெரிய பெரிய பதவிகளை வகிக்கப் போகிறான்; எங்கு நோக்கினாலும் அவன் படம்; எங்கே திரும்பினாலும் ரோஜாவுடன் ரங்கே கௌடரின் புகழ், கணவனின் பெருமை மட்டுமா? லிங்கனைப் போல் பேச்சில் வல்லவர் எவருண்டு? ஒவ்வொரு ஹட்டியிலும் மேடையில் நின்று, ரோஜா மாலை போட்டுக் கொண்டு ரோஜாப்பூச் சொற்பொழி வல்லவோ ஆற்றினான்? தேன்மலையாளின் பிள்ளைக்குப் படித்தும் பட்டம் இருக்கலாம்; பேசத் தெரியுமா அப்படி? வயசு முதிர்ந்த மாதனும் கூட, தம் கனவுலகை விட்டு, மைந்தனின் மகத்தான தேர்தல் விழாவில் பங்கு கொண்டார். கூட்டத்தைக் கூட்டுவதற்காக அவர் ரோஜா மாலைகளணிந்து வெகுநாட்களாகப் பாடாமலிருந்த பாடல்களைப் பாடினார்; ஆடினார். மந்துகளுக்கெல்லாம் சென்று, இரகசியமாக, மகனுக்கு ஓட்டுப் போட்டால், அரசாங்கம் ஒழித்துவிட்ட போதைச் சரக்குகளை மீண்டும் சுலபமாகப் பெற வழிவகை செய்வான் என்று உற்சாகத்துடன் பிரசாரம் செய்தார். உண்மையில் அந்தக் கிழவருக்கு மகனின் முயற்சியிலே அந்த ஓர் அம்சம் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தரவல்லதாக இருந்தது என்பதைக் கூற வேண்டுமா? தமையனின் இந்தத் தேர்தல் வைபவத்தில் சலனமற்று இருந்தவர் ஜோகி. புற உலகில் நிகழ்ந்த கிளர்ச்சிகளும் கலவரங்களும் கூச்சல்களும் அவரைப் பாதித்துவிடவில்லை. பாருவையும் நஞ்சனையுங் கூடப் பாதிக்கவில்லை. ஆனால் நஞ்சனுக்கு, மாசம் பத்து ரூபாய்க் காசுக்காகப் பெரிய தந்தையிடம் பிச்சை கேட்க நிற்கும் போதுதான் மனம் கூனிக் குறுகியது. உதகையிலேயே கிழங்கு மண்டிப் பக்கம் சென்றால், பெரியப்பனுக்காக மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டி வரும். “என்னடா?” என்பார் பெரியப்பா, தெரிந்தும் தெரியாதவராக. “பணம் தருகிறேனென்று, இங்கு வரச் சொன்னீர்களே?” என்பான் நஞ்சன் கூனிக் குறுகி. “ஓ! படித்துப் புரட்டப் போகிறாய். படித்தவன் தோட்டத்திலே முள்ளெடுக்கிறானா?” என்று காரசாரமாக மண்டிக் கவுண்டரிடம் ஒரு பிரசங்கம் புரிய ஆரம்பித்து விடுவார். “படிக்காத உங்கள் பையன்கள் தோட்டத்தில் முள்ளெடுக்கிறார்களா?” என்று கேட்க நஞ்சனுக்கு நாத் துடிக்கும். சிரமப்பட்டு அடக்கிக் கொள்வான். “சரி, இங்கே இப்போது ஐந்து ரூபாய் இருக்கிறது. வைத்துக் கொள். அப்புறம் வீட்டுப் பக்கம் வாயேன்” என்பார். பத்து ரூபாய்க்குப் பத்து நடைகள் வீட்டுக்கும் ஒத்தை மண்டிக்குமாக நஞ்சன் போக வேண்டி வரும். அம்மையிடம் அவன் இந்தச் சிறுமைகளைச் சொல்லிக் கொள்வதில்லை. அவள் மனம் நோவாள். அவனுடைய அருமை அம்மைக்கு மனநோவைக் கொடுக்க அவன் விரும்பவில்லை. நாளாக நாளாக, அவன் பெரியவன் அல்லவா? தேர்தல் முழக்கம் மும்முரமாக நிகழ்ந்த காலத்திலே நஞ்சனுக்கு, பள்ளி முடிவுப் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. சாதாரண நாள்களிலேயே பார்க்க முடியாத பெரியப்பனாயிற்றே! மண்டிக்குப் போனால் இல்லை; வீட்டுக்கோ, அவருக்குத் தலை நீட்டவே போதில்லை. கௌரிக்குப் பையன் பணம் கேட்க வருவான் என்பது தெரியும். ஆனால், வாய்விட்டுக் கேட்கட்டுமே! பெரியதனம் என்ன வேண்டிக் கிடக்கிறதாம்? ஆனால், நஞ்சனோ அவளாகக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் கேட்கவே கூசினான். அன்று மரகதமலை ஹட்டிக்குச் சென்று, பெரியப்பனைக் காணாமல், மனம் நொந்து தான் திரும்பிக் கொண்டிருந்தான். பதினைந்து ரூபாய்க்கு, தட்டும் நிலையிலே, அவனுக்குக் கோயம்புத்தூர் ஏது, கல்லூரி ஏது? பத்தாவதை முடித்துவிட்டு எங்கேனும் வேலை தேட வேண்டியதுதான். பணம் கட்ட வேண்டும் என்ற விஷயத்தையே அவனுடைய அம்மை அறியாள். ஐயனுக்குத்தான் இவ்வுலக சிந்தனை ஏது? அவனை அறியாமல் உள்ளம் விண்டாற் போல் பெருமூச்சு எழுந்தது. கதிரவன் அந்த கார்த்திகை மாசத்திலே மண்டை வெடிக்கக் காய்ந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டில் மழையே இல்லை. பூமி வறண்டு, பசும் புல்லெல்லாம் காய்ந்து விட மாடுகள் ஆங்காங்கே காய்ந்த வேரைக் கடிப்பதும் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தன. கார்த்திகை மாதத்தில் பூமி வறண்டிருக்குமோ? பாறைகளெல்லாம் அருவிக் குழந்தைகளை இழந்து, கார்த்திகை மாதத்திலே நெஞ்சு வெடிக்க நிற்குமோ? நஞ்சன் கீழ்மலைப் பக்கம் வருகையிலே, மூக்குமலைப் பாறையிலே, சுண்ணாம்பால் ரோஜாப்பூச் சித்திரம் ஒன்று தீட்டியிருந்ததைக் கண்ணுற்றான். பாறை, சுண்ணாம்பை வழிய விட்டுக் கொண்டு, அரக்கன் முகம் போல் காட்சியளித்தது. குமரியாற்றில் நீர் வற்றி சலசலவென்று கற்கள் உருள, அருவியிலும் சிற்றருவியாக இழைந்து சென்றது. நாயர் கடைக்கெதிரில், ராமன் ஓட்டும் லாரி நின்றது. லாரியின் இருபுறங்களிலும், இரு பெரிய ரோஜாக்களுக்கு நடுவே, பெரியப்பன் கைகுவித்து நிற்பதைப் போன்ற சித்திரத் தட்டிகள் வைத்திருந்தன. அதை வேடிக்கை பார்க்க, அங்கு ஒரு கும்பல் இருந்தது. ஒருவேளை பெரியப்பன் வண்டிக்குள் இருப்பாரோ என்று நஞ்சன் அங்கே நின்றான். ஆனால் அவன் அங்கு நிற்கையிலே, நாயர் கடைக்குள்ளிருந்து காக்கிச் சட்டை நிஜாரும், கம்பளி மப்ளருமாக ராமனே வெளியே வந்தான். நஞ்சனைக் கண்டதும் கண்கள் அகல அருகில் வந்தான். “நஞ்சனா? ஹட்டிக்குப் போய் வருகிறாயா? வா, டீ குடிக்கலாம்.” நஞ்சனைத் தோளைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவன் மீண்டும் கடைக்குள் நுழைந்தான். “எலெக்ஷன் வேலை அத்தானுக்கு மும்முரமாக இருக்கிறது” என்று நஞ்சன் சிரித்தான். ராமன் நஞ்சனைக் கண்டு பேசியே எத்தனையோ நாட்கள் ஆகியிருந்தன. பதினாறு பிராயத்தில் பாலப் பருவம் நீங்கி, மடமடவென்று அவன் வளர்ந்து கொண்டிருந்தான். குரல், உடைந்து அவன் வளர்ச்சியைத் தெரிவித்தது. “ஸ்கூல் லீவா?” “ஆமாம், ஸெலக்ஷன் பரீட்சை” என்றான் நஞ்சன். “அடுத்த வருஷம் கோயம்புத்தூர் போய்விடுவாய்.” சிரித்துக் கொண்டே இரண்டு போண்டா இலையை அவன் பக்கம் நகர்த்தினான் ராமன். “உங்களுக்கு?” “இப்போதுதான் நான் சாப்பிட்டேன். எங்கே வந்தாய் ஹட்டிப் பக்கம்? பெரியப்பாவைப் பார்க்கவா?” நஞ்சனின் முகம் ஒரு கணத்தில் இருள் அடைந்தது. “நஞ்சா, என்ன?” “ஒன்றுமில்லை அத்தான். கோயம்புத்தூர் போய் நான் எங்கே படிக்கப் போகிறேன்? ஸெலக்ஷன் பரீட்சைக்கே பணமில்லை.” ராமன் ஒரு கணம் அதிர்ந்தாற் போல் நின்றான். “இதற்கா நீ வருத்தப்படுகிறாய்? அசட்டுப் பையா! எவ்வளவு பணம் வேண்டும்?” “பதினைந்து ரூபாய்.” ராமனிடம் அப்போது தேர்தல் கல்யாணப் பணம் புரண்டு கொண்டிருந்தது. அந்தத் தேர்தல் கோலாகலத்துக்குப் பலியாகி விடுமோ என்று அவன் அஞ்சிக் கொண்டிருந்தான். மாமனை அண்டி, நாற்பதும் ஐம்பதும் கூலி பெற்று உழைப்பவனாயிற்றே அவன்? பணம் சம்பாதிப்பதும் கரைப்பதும் மாமனுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஆனால் அவன்? சட்டென்று சட்டைப் பையில் கைவிட்டு இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து நஞ்சனிடம் கொடுத்தான் ராமன். “இதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்! ஆயிரக்கணக்கிலே பணத்தை எவன் எவனோ சாப்பிடுகிறான். என்னிடம் கேள். மாமி நல்லாயிருக்கிறார்களா? மாமன் நல்லாயிருக்கிறாரா?” நஞ்சன் நன்றி பளபளக்கத் தலையாட்டிய வண்ணம் ரூபாய் நோட்டை மடித்து வைத்துக் கொண்டான். “நான் இதை மறக்கவே மாட்டேன். அம்மையிடம் பணம் கிடைக்கவில்லை என்று எப்படிச் சொல்வதென்று நான் பேசவே இல்லை.” “நல்ல வேலை செய்தாய். மாமன் வீட்டிலே அண்டி, அவர்கள் நிலத்து விளைவை உண்பவர்கள் நாங்கள். நீ நல்ல பையனாகப் படித்துப் பேர் சொல்ல வேண்டும் என்பது என் ஆசை. எப்போது பணம் வேண்டுமோ, என்னை வந்து கேள், நஞ்சா” என்று ராமன் ஆதரவுடன் விடை கொடுத்தான் அன்று. இரவு பகலாக நஞ்சன் பரீட்சைக்குப் படித்தான். இரவு பகலாகக் காந்த விளக்குகள் எரிய, தேர்தல் பிரசாரங்களும் வாய்ச் சண்டை கைச்சண்டைகளும் அந்த அமைதியான மலைப் பிரதேசத்தைக் கலக்கின. நஞ்சன் ‘ஸெலக்க்ஷன்’ பரீட்சை முடிவு அறிந்து பணம் கட்டச் சென்ற தினத்தில், உதகை நகரிலே தேர்தல் முடிவுக்காக மக்கள் கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் ஆவல் ஜுரம் ஏறத் துடித்துக் கொண்டிருந்தது. ஓட்டுக்களின் எண்ணிக்கை, ரங்கே கௌடரின் பக்கம் அதிகம் போகின்றன என்பதை அறிந்து, ரோஜாப்பூ வண்டிகளில் ஊர்வலத்துக்குத் தயாராக வந்த பூக்களுடன் அவன் கட்சி மக்கள் கோஷம் செய்தார்கள். மதுப் புட்டிகள் ரோஜாக் குவியல்களுக்கிடையே ஏராளமாகப் பெருவிழாவுக்காகப் பதுங்கியிருந்தன. மலைவாசியல்லாத மக்கள் கட்சியாரின் சாரிபில் வோட்டுக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. கோத்தைப் பிரமுகர் பக்கம், யானைச் சின்னப் பெட்டியின் வாக்குப் பதிவுகள் தாம் தெரிய வேண்டும். நஞ்சன் பள்ளியில் காத்திருந்து பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்த போது, நகரிலே ஜய கோஷங்கள் செவிகளைத் துளைத்தன. லாரிகளில் பாடிக் கொண்டு, உற்சாகமடைந்த மக்கள் நகரின் தெருக்களை ஊர்வலம் வரும் கோலாகல ஒலிகள், மலைக்கு மலை வண்ணக் கம்பளிகள், தலைப்பாகை அணிந்த கூட்டம். வென்றவர் யார்? விடுவிடென்று நஞ்சன் சரிவில் இறங்கி வருகையிலே, போலீசு லாரி ஒன்று கலகமும் குழப்பமும் விளைவித்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. குடி மயக்கத்தில் இளைஞன் ஒருவன் தள்ளாடிக் கொண்டு, “ரோஜாப் பூவுக்கு ஜே! ரோஜா, ராஜா, ராணி” என்று பிதற்றிய வண்ணம் கையைத் தூக்கினான். அதைக் கண்டு துண்டு நோட்டீசை வாரி இறைத்துச் சென்ற லாரியிலுள்ள கூட்டம் குலுங்கச் சிரித்தது. துண்டு நோட்டீசு நஞ்சனின் மீதும் பறந்து வந்தது. “வெற்றி, வெற்றி, வெற்றி! யானையின் சக்திக்கு மகத்தான ஆதரவு தந்த மக்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி!” அப்படியானால், ரோஜாப் பூ வீழ்ந்ததா? பெரியப்பனுக்குத் தோல்வியா? நஞ்சனுக்கு அந்தத் தோல்வியில் குரூரமான ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. இந்தச் செய்தியைத் தானே அம்மையிடம் கூற வேண்டும் என்ற ஓர் ஆவல் உந்த, நஞ்சன் வீட்டை எண்ணி வேகமாக நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|