உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நான்காம் பாகம் 3. பகை தீர வந்த அழைப்போ? பாதையில் பாருவை எதிர்பாராத விதமாகக் கண்டதில் கிருஷ்ண கௌடருக்கும் திகைப்புத்தான். உண்மையில் அவர் யாருக்காக அங்கு வருகிறார்? எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, அவர் உள்ளத்தில் ஒருத்தி புகுந்து கொண்டு நினைவைச் சிலிர்க்கச் செய்தாள்; கனவுகளில் எல்லாம் நிறைந்து நின்றாள். அவள் இருந்த இடம், அவர் உள்ளத்தில் தழும்பாக மேடிட்டுக் காய்ந்து விட்டது. ஆனால் அந்த நினைவு மாறாத வடுவாயிற்றே அது! பள்ளிக்கட்டிடம் தள்ளி வருவதில் அவள் உழைக்கும் பூமி சேருகிறதென்பது அவருக்கு முதலில் தெரியவில்லை. அத்தனை ஆண்டுகளில், கிருஷ்ணன் பாருவை அந்த மண்ணில் வேலை செய்பவளாகத்தான் கண்டிருக்கிறார். அந்த ஒரு நிலையிலேயே, பாரு ஏமாற்றத்தின் உருவாக, வாழ்வில் கண்ட தோல்வியின் வடிவாக, அவருக்குத் தோன்றியிருக்கிறாள். அது கற்பனையோ, அன்றி அவருக்குப் பிரமையோ? எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் குதிரையேறி அவர் ஹட்டிக்குள் வந்த போது, அவர் கண்ட கனவுகள், ஒரு பக்கம் பலித்திருக்கின்றன. இரண்டு குறிஞ்சிக் காலத்தில், இருளில் கிடந்த அவர்கள் சமுதாயம் கல்வியறிவாகிய ஒளியைப் பெற்று விழிப்பெய்தியிருக்கிறது. படித்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த மலைச் சமூகத்தில், எத்தனை எத்தனை பேர் ஊரை விளக்க, பெருமையை நிலை நாட்ட எழுந்து விட்டார்கள்! ஆனால், அவரைப் பொறுத்தமட்டிலும், கனவுகள் ஓரளவு பலித்திருந்தாலும் சோபித்திருக்கின்றனவா! மாரிக்காலத்திலும் கதிரவன் உதயமாகிறான்; தினம் போல் உச்சிக்கு ஏறி மேற்கே சாய்கிறான். ஆனால் மாரியின் கருக்கலில் சோபிக்கிறதில்லையே! மலைமக்களின் வாழ்வில் ஊறிய பண்டைப் பெருமைகள், புதிய கல்வி ஒளியிலே துலங்கி விகசிக்கின்றனவா? இல்லையே! இருநூறு முந்நூறு மக்கள் கொண்ட ஹட்டிகள் இரு பிளவுகள் பட்டு நிற்கின்றன. பிளவு மனப்பான்மை ஹட்டிக்கு ஹட்டி, கொடிய தொத்து நோய் போல் பற்றி விட்டது. தலைக்குத் தலை கட்சி, பகை, பொறாமை, போட்டி, வம்பு, வழக்கு. ரங்கனுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் உள்ளூற ஆசைப்பட்டு, எத்தனை முறைகளோ முயன்றதுண்டு. தாத்தா கரியமல்லர், ஊருக்கே ஒரு தூண் போல் விளங்கியவர். அந்த லிங்கையா குடும்பத்துடன் இணைந்திருந்தவர் இறந்த போது, அந்தக் குடும்பமே நன்றி கொன்றதை அவரால் நினைக்க முடியவில்லை. ஜோகி மூன்று நாட்கள் ஊரிலேயே இருக்கவில்லை. அதை நினைத்தால், அவருக்குப் பகையுணர்வு மேலுக்குத்தான் எழும்பி வந்தது. என்றாலும், ரங்கனுக்கு எதிராகச் சிறுமைக் குணம் காட்டுவது, அவர் மனச்சான்றுக்கு உகந்ததாகப் படவில்லை. ஒவ்வொரு முறை ஹட்டிக்கு வரும் போதும், பகை தீர ஏதேனும் வழி பிறக்காதா என்ற நைப்பாசையே அவருள் தோன்றிக் கொண்டிருந்தது. பாருவின் நிலத்தை வியாஜமாகக் கொண்ட ஏதேனும் சமரசம் பேச வாய்ப்பு ஏற்படுமா என்ற ஆவலும் அவருக்கு இல்லாமல் இல்லை. “பாரு அக்கா இல்லை அது?” என்றாள் ருக்மிணி வண்டியில் செல்கையில் அவளைக் கண்டதும். “ம்... ஆமாம்” என்றார் கிருஷ்ணன், மெல்லிய பெருமூச்சு இழைய. “எங்கே போறாங்க?” என்றாள் அவள். கிருஷ்ணன் பதில் கூறவில்லை. ஹட்டியில் அவர் எப்போது வந்தாலும், ஊர்க்காரர் பல பல வியாஜங்களைக் கொண்டு அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். வீட்டின் முன் ஆமணக்குக் கொட்டையும், கோதுமை நெல்லுமாகக் காய்ந்து கொண்டிருந்தன. முற்காலத்து வீடா அது? அகல அகலமான கூடங்கள், சாமான் அறைகள், கிழங்குக் கிடங்குகள், உயரமான வாயில்கள், உட்காரப் பெஞ்சி, நாற்காலிகள், அலமாரிகள் என்று மாளிகைபோல் உட்புறம் விரிந்திருந்தது. அவள் உள்ளே வந்து உட்கார்ந்ததும் அக்கம் பக்கப் பெண்மணிகளையும் ஆடவர்களையும் யார் அங்கு அழைத்து வந்தது. அவர் ஒருவரால் எத்தனை பேருக்கு எத்தனை காரியங்கள் ஆக வேண்டும்! காரியின் பேரன் தோட்டத்திலே வேலை செய்ய மறுக்கிறான். எட்டாம் வகுப்பில் இரண்டு வருஷம் நின்று விட்டான். கிருஷ்ண மாமன் தான் வழி செய்ய வேண்டும். மூன்றாம் வீட்டு ராமி அக்காளின் மருமகன், கிருஷ்ண அண்ணனிடம் தன் மகள் லிங்கம்மாவைப் படித்த பையனுக்குக் கட்ட வேண்டிய யோசனை கேட்கிறாள். எதிர்வீட்டு உச்சன், கைக்குழந்தையின் இளம்பிள்ளை வாதத்துக்குக் கோயம்புத்தூர் டாக்டரிடம் சிகிச்சை வேண்டும் யோசனையுடன் சிபாரிசும் சலுகையும் கோரி வந்திருக்கிறான். இப்படி, ஒவ்வொருவரும் வந்தது, அன்று கிருஷ்ணனுக்கு ஏன் தலைவலியைக் கொடுக்க வேண்டும்? அவருடன் பேசுவதே பெருமை என்று வந்த முதியோரைக் கண்டாலே அவருக்கு ஏன் வெறுப்பு முட்டி வந்தது? மாலை வரை பொறுத்திருந்த அவர் கைத்தடியை எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடையாகக் கிளம்பிவிட்டார். அவர் வெளியே விளைநிலத்தின் பக்கம் வந்ததுமே, பம்பரம் ஆடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். ‘யார்? யார் பையன்?’ அவன் முகத்திலே யார் சாயலோ இருந்தது. நடையிலே அவருக்கு அறிமுகமானவர் எவர் நினைவோ வந்தது. தேயிலைத் தோட்டத்தில் இலை கிள்ளிக் கொண்டிருந்த இரு பெண்கள், பையன் அவரைச் சந்திப்பதை நிமிர்ந்து பார்த்தனர். பையன் சற்று நேரம் அவரைத் தயங்கி நின்று பார்த்தான். “யார் பையா நீ?” என்றான் கிருஷ்ணன். “நான்... நான் வந்து... நீங்க கொஞ்சம் வரீங்களா?” பையன் அருவிக்கரைப் பக்கம் கையைக் காட்டினான். பெரிய மனிதராகிய கிருஷ்ண கௌடரை, ‘அங்கே வரீங்களா?’ என்று கைகாட்டி அழைக்கும் பையன் யார்? அவன் முகத்திலே கண்டது யாருடைய சாயல் என்பது பளீரென்று அவருக்கு நினைவில் வந்தது. “உன் பேர் என்ன?” “என் பெயர் நஞ்சன்; ஜோகி கௌடர் மகன்” என்றான் பையன். “ஓ, நீ படிக்கிறாயில்லை?” “ஆமாம்; மூன்றாவது பாரம்.” “சரி, நீ போ? நான் வருகிறேன்.” பையன் பம்பரக் கயிற்றுடன் சிட்டாகப் பறந்து போனான். கிருஷ்ணன் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றார். சில விநாடிகள் சென்ற பின்னரே கனவினின்றும் தெளிந்தாற் போல் மூச்சு விட்டார். யார் கூப்பிட்டார்கள்? எங்கே கூப்பிட்டார்கள்? எதற்காக? அவர் விவரங் கூடக் கேட்காமல் வருகிறேன் என்றார்! ‘பகைமை தீர வந்த அழைப்போ இது, ஒரு வேளை? பையன் வந்தது உண்மைதானோ? ஜோகி உண்மையில் பகை விரும்புவானோ? சீலமும் தூய்மையுமே உருவான அவன் பகைக்கு மனசில் இடம் கொடுத்திருப்பானா!’ இராது, உள்ளும் புறமும் ஒன்றான, சண்டை விரும்பாத மானி அவன். ரங்கனை வெறுப்பவன். அவன் தன்மைக்கு அஞ்சியே தாத்தா கரியமல்லர் இறந்த போது ஊரில் இல்லாமல் ஒளிந்து சென்றான். தமையனுடன் விரோதம் பாராட்டாமல் இருப்பதற்காக, தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, நிர்ப்பந்தமாகக் கரியமல்லர் குடும்பத்துடன் விரோதம் பாராட்ட நேர்ந்திருக்கிறது. ஜோகிதான் அழைத்திருப்பான். வைகாசிக் கடைசி நாட்களில் வானம் எப்போது கொட்டும் என்று சொல்வதற்கில்லை. கையில் குடை கூட இல்லாமல் அவர் சரிவில் வேகமாக இறங்கினார். எல்லாம் தேயிலைத் தோட்டங்கள். குத்துக்குத்தான தேயிலைச் செடிகளுக்கு நடுவே ‘ஸில்வர் ஓக்’ மரங்கள் நல்ல கண்காணிப்பும் உர வளமும், ஒவ்வொரு செடியையும் விம்மிப் படர்ந்து பூர்த்துத் தளிர்க்கச் செய்திருந்தன. பள்ளிக்கூடப் பக்கம் தள்ளி மட்டப்பரப்பான இடத்தில், பணக்காரர் கும்பலிடை ஒண்டி நிற்கும் ஏழையைப் போலவும், மாளிகையின் பின் உள்ள எளிய குடிசை போலவும் பாருவின் துண்டு நிலம் அவர் கண்ணில் பட்டது. ஆரஞ்சு மரம் ஒன்று பூத்துக் குலுங்கி நின்றது. அருகில் சென்ற அவருக்கு, அதன் மணம் என்ன என்ன நினைவுகளையெல்லாம் எழுப்பியது! அவள் வறண்ட உள்ளத்திலே மடிந்து போன ஆசை மணங்கள் தாம் அப்படி வெளியேறி அந்த மலர்களில் வீசுகின்றனவோ! ஆரஞ்சு, பூத்துக் குலுங்குகையில் அவர் எத்தனையோ முறை கண்டிருக்கிறார். இத்தனை மணம் உண்டோ? பாரு கையால் நட்டு வளர்த்த மரம், பள்ளிக்கூடம் வந்து விட்டால் வெட்டி எறிவார்கள். தாயொருத்தியின் ஒற்றை மகனை விட அவளுக்கு அருமையாக இருக்குமோ அந்த மரம்? கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தார். முன்பு, அந்த எதிர்மட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் ஜோகியுடன் கதை பேசிக் கொண்டு படுத்திருந்த நாட்கள் நினைவில் வந்தன. முட்செடிகளில் பவளம்போல் சிவந்த பழங்களைப் பறித்துத் தின்பார்கள். மாலை வேளைகளில் சரிவெங்கும் வெண்மலர்கள் (Butter Cubs) கிண்ணம் போல் பூத்திருக்கும். கிருஷ்ணன் திரும்பி அருவிக்கரைப் பக்கம் நடந்தார். தேயிலைத் தோட்டங்கள் முடிந்து, காய்கறித் தோட்டங்கள்; அதற்கும் அப்பால் கல்வியறிவில்லாத மனத்தைப் போல் பண்படுத்தப்படாத பூமி; அருவிக்கரையோரம் இன்னும் சில இடங்களில் இருமருங்கிலும் புதர்கள் மண்டியிருந்தன. அருவியோடு மணிக்கல்லட்டிக்கு எத்தனை முறைகள் சிறுவனாக நடந்திருக்கிறார்! அருவி வளைந்து குமரியாறு வந்து வீழ்ந்து சுனையாகும் இடத்தில் கலந்துவிடும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் கிருஷ்ணன் இளைஞனாக அந்த ஆற்றின் நடுவே பாதையிலே உட்கார்ந்திருக்கிறான். கன்னிப் பெண் ஒருத்தியைத் தீண்டுவது போன்ற அநுபவத்தை அந்த ஆற்றின் சுழல் அவனுக்குத் தந்தது. அருவிக்கரையோடு நடக்கையில், மஞ்சள் பூங்கொத்துக்களுடன் வேங்கை மரம் ஒன்று அவர் கவனத்தைக் கவர்ந்தது. முருகனின் அம்சமான தெய்வ மலரல்லவா? அதுபோல் ஒரு வேங்கை மரத்தடியில் கிருஷ்ணனும் பாருவும் சந்தித்துப் பேசிய நாட்கள் மறந்து விட வேண்டிய நினைவுகள் ஆகிவிட்டனவே! அவர் ஏன் நின்று விட்டார்? நிசந்தானா? அதிசயமில்லையே! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கனவா? இல்லை. பாருதான். வெள்ளை முண்டும், போர்வையுமாக, பாரு பாருதான்; அவரைத் தொடர்ந்து, துரத்திக் கொண்டு வந்திருக்கிறாள். மாலை மங்கிக் கையெழுத்து மறையும் நேரமானாலும், பாருவை அவருக்குத் தெரியாதா என்ன? “பாரு!” பரபரத்த, பேதைமை தோய்ந்த பார்வையால் அவரைப் பார்த்தாள் அவள். “பையனிடம் அங்கேயே சொல்லியனுப்பினேன். வெகுதூரம் ஓடி வந்தேன்.” “நீதான் சொல்லியனுப்பினாயா பாரு?” உறுதி மாறாத அவர் குரலும் நடுங்கியது. “ஆமாம், என் பூமியைப் பறித்துக் கொள்கிறார்கலே! நான் என்ன செய்வேன்?” படபடப்பான குரல் தழுதழுத்தது. “எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது, பாரு. உன் பூமியைப் பார்த்ததும் அதை நான் நினைத்துக் கொண்டேன். நீ அதைப் பிரிய மாட்டாயே என்று நினைத்தேன்.” அவள் நெஞ்சு பாலாய் பொங்கியது. அத்தனை ஆரவாரமான கோலாகலமான அந்த வாழ்விலும், அவளைப் பற்றிய அநுதாபம் தோய்ந்த எண்ணங்களுக்கு இடம் உண்டா? “நஞ்சன் ஸ்கூல் போகிறான்; என் மகன், பார்த்தீர்களா?” “உன் மகனா?” “ஆமாம். கிரிஜை பெற்று எனக்குத் தந்துவிட்டுப் போனாள். என் மகன் நன்றாக இல்லை? அவன், ‘ஸ்கோலில்’ முதலாகப் படிக்கிறான். உங்களைப் போல் கெட்டிக்காரன்.” “நன்றாக இருக்கட்டும். உனக்குச் சந்தோஷமென்றால் எனக்கும் ஆறுதல் பாரு. நஞ்சன் நன்றாகப் படிக்கட்டும்.” “நான் என் பூமியை ‘ஸ்கோலுக்’குக் கொடுத்து விடுகிறேன். அதற்குப் பதிலாக எனக்கு...” “என்ன வேண்டும் பாரு? பூமியே வேண்டுமென்றாலும், எங்கே வேண்டும் என்று கேள்” என்றார் அவர் பதற்றமாக. “காபி போட்டிருக்கிறீர்களே, கறுப்பு மண்; அருவி வளைவுக்கு மேலே. அதைக் கேட்கத்தான் முன்பு கூட நான் ஒத்தைக்கு வந்தேன்.” அவள் சொல்லி முடிக்கவில்லை. புதர் மறைவிலிருந்து யாரோ வெளிப்பட்டாற் போல் இருந்தது கிருஷ்ணனுக்கு. ஒரு விநாடிக்குள் இருவர் மீதும் தபதபவென்று அடிகள் விழுந்தன குச்சிகளால். கிருஷ்ணன் புரிந்து சமாளிக்கு முன், பாரு அதிர்ந்து சுருண்டு விழுந்தாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|