ஐந்தாம் பாகம்

6. நீர்வீழ்ச்சியின் அருகில்

     உள்ளூற மனம் தன்னை மறந்த லயத்தில் ஒன்றினாலும், நஞ்சன் தாய்க்காக வேண்டி, வேண்டாம் என்று ஒதுங்கக் கூடிய எதிர்பாராத சந்திப்பு மறுநாள் நேர்ந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

     நஞ்சன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் அணைப்பக்கம் சென்றான். அணைக்கட்டு எழும்ப இருக்கும் இடத்திலே நிகழ்ந்து கொண்டிருந்த பூர்வாங்க வேலைகளைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மணலும் கல்லும் சுமந்த லாரிகளுக்கிடையே அழகிய பச்சை வண்டி ஒன்று பாதையில் வந்து நின்றதையும், அதிலிருந்து உயரமாகப் பச்சை பட்டுச் சேலைத் தலைப்புப் பறக்க ஒரு நங்கை இறங்கியதையும் அவன் கண்டான்.

     அவள்... என்ன ஆச்சரியம்! அவன் நின்ற இடத்துக்கே, அவனை நோக்கியே வந்தாள்.

     அவள்... அவள், விஜயா!

     அவன் நெஞ்சம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.

     “நல்ல வேளை, முதல் முதலாக நீங்களே எங்கள் பார்வையில் பட்டு விட்டீர்கள். நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளை யெல்லாம் பார்க்க வந்தோம். எங்கள் காலேஜ் புரொபஸரும் லெக்சரரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் அவள்.

     அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பருமனாக ஓர் அம்மாளும், வற்றல் காய்ச்சிபோல் ஒரு பெண்மணியும் அவள் பின் இறங்கி வந்தார்கள்.

     “இவர் மிஸ் உமாதேவி; இவர் மிஸ் சந்திரா” என்று அறிமுகம் செய்து வைத்த அவள், “நான் எங்கே போய் யாரைத் தேட வேண்டுமோ என்று நினைத்தேன். இவர் இங்கேதான் புதிதாக வந்திருக்கிறார். எங்கள் ஊர் மிஸ்டர் நஞ்சன்” என்று தெரிவித்தாள்.

     “நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளையெல்லாம் பார்க்க விரும்புகிறோம், மிஸ்டர் நஞ்சன். அழைத்துப் போக முடியுமா?” என்றாள். பருமனான உமாதேவி, கீச்சுக் குரலில்.

     “மகிழ்ச்சியுடன் காண்பிக்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்த அவன், அங்கேயே அணை விவரங்கள் எல்லாம் கூறலானான். அணை ஸ்தலம் முடித்த பிறகு, இங்கிருந்து குகைக் கால்வாய் செல்லும் வழியையும், குகை அடையும் இடங்களையும் அவர்களுடன் சென்று விவரித்தான். பின்னர், நீர்க்குழாய்கள் செல்லும் சரிவையும், மின்நிலைய அடித்தள நிர்மாணத்தையும் அழைத்துச் சென்று விவரித்தான். ஒருபுறம், ‘விஜயாவினிடம் தனியே அன்றைய பண்பற்ற நடத்தைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது’ என்று அவனை உள்ளம் குடைந்து கொண்டிருந்தது.

     மின்நிலையப் பகுதியைக் கண்டு முடிந்ததும் விஜயா, “ஆயிற்றா? இவ்வளவுதானா வேண்டியவை இருக்கும்” என்றாள்.

     “இப்போதே களைத்து விட்டது. இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு இந்த நடையே முடியவில்லை. விஜயா, எங்கோ நீர்வீழ்ச்சி இருக்கிறதென்றாரே உன் தாத்தா? மறந்துவிடப் போகிறாய்!” என்றாள் உமாதேவி.

     “நம் ‘லஞ்ச்’ அங்கேதான். மிஸ்டர் நஞ்சன், நீங்களும் வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றாள் சந்திரா.

     “வருவார். பின்னர், இவ்வளவு நேரம் சுற்ற வைத்து விட்டு, அவரை விட்டு விட்டுச் சாப்பிடுவோமா? குமரியாறு விழும் இடம் இங்கிருந்து ரொம்பத் தூரம் இல்லையே! அங்கே போய்ச் சாப்பிடலாம் அல்லவா?” என்றாள் விஜயா.

     நஞ்சன் திகைத்தாற் போல் நின்றான்; “அங்கே ஆறு விழுவதைப் பார்த்துக் கொண்டு சாப்பிட வசதியாகப் பாதை, இடம் ஒன்றும் இல்லையே! மேலே உட்காரலாம். அதற்குங்கூட நீங்கள் போக வழியில்லை. சாலையில் நின்று ஆறு விழும் அழகைப் பார்க்கலாம்” என்றான்.

     “ஏன்? தாத்தா இறங்கலாம் என்று கூறினாரே!” என்றாள் விஜயா.

     “உங்களால் இறங்க முடியாது என்று தானே கூறினேன்?” என்று முறுவல் செய்தான் நஞ்சன்.

     “உங்களால் என்றால்?”

     “பெண்களால் என்று பொருள்” என்று சிரித்தாள் சந்திரா.

     விஜயா முகம் சிவக்க, “பெண்கள் அவ்வளவு மோசமானவர்களா உங்கள் எண்ணத்தில்?” என்றாள்.

     “வலுச்சண்டைக்கு வருகிறீர்களே! நீங்கள் வந்து பாருங்கள். சரிவு செங்குத்தாக இருக்கும். சாலையிலிருந்து, இரண்டு மலைக்கிடையில் நூறு அடிப் பள்ளத்தில் ஆறு விழுந்து ஓடுகிறது. இரண்டு பக்கங்களிலும் போக வழியில்லாத புதர்கள், காபித் தோட்டங்கள்” என்று நஞ்சன் விவரித்தான்.

     “தண்ணீர் விழுவதைப் பார்த்துக் கொண்டு, பாறையில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடலாமென்று நினைத்தோமே!” என்றாள் உமாதேவி.

     “நீங்கள் எங்களால் முடியாதென்று சொல்லி விட்டீர்கள் அல்லவா? வீம்புக்காகவேனும் உருண்டு வருவோம் கீழே!” என்று விஜயா சிரித்தாள்.

     “ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். என் மீது பழிவரும்” என்று நஞ்சனும் சிரித்தபடியே வண்டியில் ஏறினான்.

     வண்டி செல்கையில், சந்திரா விஜயாவிடம், “உங்கள் ஊர் என்கிறாய்; நீ வந்ததில்லையா இங்கே” என்றாள்.

     “ஹ்ம், எப்போதோ ஹட்டிக்கு வருவோம். உடனே திரும்பி விடுவோம். மிஸ்டர் நஞ்சன் அடிக்கடி வந்திருக்கலாம்” என்றாள் அவள்.

     வண்டி நின்றது. நஞ்சன் முதலில் இறங்கி நீர் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டினான். குத்தான சரிவுகளுக்கிடையில் மலை முகட்டில் உருண்டு விழுந்து, பள்ளத்தில் குறுகி நெளிந்து, பாறையடியில் செல்லும் பாம்புபோல் கீழே கீழே ஓடிக் கொண்டிருந்தது, ஆறு. காபித் தோட்டங்கள் சரிவு முழுவதும் காணப்பட்டன. கீழே, ஆற்றின் இருமருங்கிலும் அடர்ந்த புதர்கள். அங்கு மனித நடமாட்டமே இல்லாதைக் காட்டின. மேலே சாலையிலிருந்து பார்க்க அழகாக இருந்தாலும், புதர்களும் சரிவும் காலை வைத்துத் துணிந்து செல்ல, நகரத்தில் பழகிய அவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது.

     இதற்குள் வண்டிக்குள் இருந்த சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த சுப்பையா, “கீழே போகலாமா அம்மா?” என்றான்.

     “இத்தனை அழகான இடம், நல்ல பொழுதுபோக்கு ஸ்தலமாயிற்றே? ஏன் நன்றாகக் கட்டக் கூடாது? மிதமான உயரம் வீழ்ச்சி, இரு புறங்களிலும் இழையாக ஒழுகுகிறது; குளிர்காலம்” என்றாள் சந்திரா.

     “இங்கே சாலைகள் போட்டு இத்தனை முன்னேற்றம் செய்திருக்கிறார்களே; நீர் வீழ்ச்சியின் பக்கம் போக புதர்களை வெட்டிப் பாறைகளை வழியாக ஒழுங்கு செய்யக் கூடாதா?” என்று விஜயா கேட்டாள்.

     “இந்த யோசனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆனால், நீங்கள் இப்போது கீழே இறங்கி வரவில்லை என்கிறீர்களா?” என்றான் நஞ்சன்.

     “யார் சொன்னார்கள்?” என்று விஜயா காபித் தோட்டத்தில் புகுந்து விடுவிடென்று இறங்கினாள்.

     “சரிதான், விஜயா வீம்பைச் செயலில் காட்டுகிறாள், என்னால் நடப்பது சாத்தியம் இல்லை” என்று உமாதேவி, அங்கு இரண்டடி உயரம் விட்டு அறுக்கப்பட்டிருந்த ஒரு ஸைப்பிரஸ் மரத்தை ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். சந்திராவோ, சாலையோரப் புல்லுத்தரையில் காலை நீட்டிக் கொண்டு ஓய்ந்து விட்டாள் முன்பாகவே.

     விஜயா மட்டும் பச்சைக் காபிச் செடிகளுக்கு மத்தியிலே பசுங்கொடி போல் நீள இறங்கிக் கொண்டிருந்தாள்.

     நஞ்சன் இன்னொரு வழியில் இறங்கி, சாப்பாட்டுக் கூடையுடன் ஆற்றின் பக்கம் சென்றுவிட்ட ஆலைக் கூப்பிட விரைந்தான். விஜயா ஒரு பர்லாங்குத் தூரத்தில் திரும்பி, நஞ்சன் ஆளைக் கூப்பிடுவது கண்டு அவனருகில் வந்தாள்.

     “அவர்கள் இறங்கவில்லை. அவனை இங்கு வரச் சொல்லுங்கள், மிஸ் விஜயா நான் தவறுதலாக ஏதேனும் கூறியிருந்தால் ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்” என்றான் நஞ்சன் கேலியாக.

     “ஏ சுப்பையா! வா, வா” என்று அவள் சைகை காட்டினாள்; கூவினாள். ஆறு விழும் இரைச்சலில், பேச்சுப் புரியுமா?

     சுப்பையா மருள மருள விழித்துக் கொண்டு திரும்பலானான்.

     “இவ்வளவு துன்பங்களையும் கடந்து அங்கே சென்றால், அத்தனை அழகாக இருக்கும்! நான் போய்விடுவேன். அவர்கள் இருவரும் நடக்க மாட்டார்கள்.”

     முன் நெற்றிச் சுரிகுழல் அசைய, அவள் பேசுகையில் நஞ்சன் மிகமிக அருகில் இருந்தான்.

     “உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும், விஜயா!” மெதுவான குரல், இதயம் திறந்து அவளுக்குக் கேட்கக் கூடிய குரல் அது.

     “நீங்கள் எங்களுக்கு ஜன்ம விரோதிகள்” என்றாள் அவள். விழிகளில் குறும்பு சொட்ட, நேருக்கு நேர் அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு.

     “ஜன்ம விரோதிகளின் பகை, எப்படி முடியவேண்டும் என்று தாத்தா விரும்புகிறாராம் தெரியுமோ?” என்றான் அவனும்.

     “நல்ல வேளை! அன்று பஸ்ஸில் நீங்கள் போட்ட சத்தத்தில், நான் ஜன்ம விரோதியானதனால் தான் சண்டைக்கு இழுக்கிறார் என்று அறியாமல் ஒதுங்கினேன். தெரிந்திருந்தால், கோர்ட்டு வரைக்கும் இழுக்கடித்திருப்பேன்!”

     “ஓகோ! அந்தப் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி! தாத்தா எனக்கு ஒரு செய்தி சொல்லிவிட்டிருக்கிறார். அது... உன் சம்மதத்துடன் வந்ததா என்பதை நான் அறியலாமா?”

     “என்ன செய்தி?”

     “நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா விஜயா?”

     “ஜன்ம விரோதிகளுக்குள் எத்தனை எத்தனையோ இருக்கும். நான் எப்படி அறிவேன்?”

     அவள் உதடுகளில் தான் அப்படிப் பேச்சு வந்தது; கண்களோ, தெரியும் தெரியும் என்று தமுக்கடிக்கும் வகையில் கொஞ்சலாகக் கீழே தாழ்ந்தன.

     “உனக்குத் தெரியும். விஜயா, உண்மையில்...”

     முகம் சிவந்து ஒளிர, அவள் திரும்பி ஓட்டமாக மேலேறினாள். மேலே, சுப்பையா வந்ததே காரணம்.

     “ஓ, விஜயா! எங்கே அங்கே போய் உங்களை விட்டு விட்டு மூவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு கூடையைக் காலி செய்ய ஆரம்பித்து விடுவீர்களோ என்று சந்திரா பயந்து விட்டாள்!” என்று சிரித்த உமாதேவி, “மிஸ்டர் நஞ்சன், உங்களுக்கும் விஜயாவுக்கும் ஒரே ஊர் மட்டுமா, உறவும் உண்டா?” என்று விசாரித்தாள்.

     நஞ்சன் சிரித்துக் கொண்டே, “எங்கள் தாத்தா நாளில் நல்ல உறவு இருந்தது. அப்புறம் சண்டை வந்துவிட்டது” என்றான்.

     “அடாடா!... அப்ப... இப்போது?” என்றாள் சந்திரா.

     “சண்டையும் சமாதானமும்” என்றாள் மீண்டும் சிரித்துக் கொண்டே விஜயா செம்மை படர்ந்த முகத்தினளாய், உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கலானாள்.

     வானவெளியில் பறக்கும் வானம்பாடியின் நிலையிலே அன்று பிற்பகல் நஞ்சன் வீடு திரும்பி வந்த போது, பாரு, கவலை படிந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

     “இத்தனை நேரம் ஆயிற்றா, நஞ்சா? சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டதே!”

     “எனக்குச் சாப்பாடு வேண்டாம் அம்மா!” அவன் வெளியே சென்று வருகையிலே, அவளுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் தோன்றியது.

     “ஆ! எங்கே சாப்பிட்டாய்?”

     சில மணிகளின் இன்ப நினைவுகளுக்கு உயிரூட்டி, மௌனத்திலே அசைபோட முடியாமல் செய்யக் கண்ணீரும் கடுமையுமாக அவள் கேட்டது அவனுக்கு எரிச்சலையே மூட்டியது.

     “நஞ்சா, நீ என்னை ஏமாற்றுகிறாய், அவளைப் பார்த்து விட்டு வருகிறாய்!” என்றாள் அவள், கண்ணீர் வெடிக்க.

     “அட, என்னம்மா! பெரிய ரோதணையாய் விட்டீர்கள்! மனிதனை நிம்மதியாக விடமாட்டீர்களா?”

     எரிந்து விழுந்து விட்டு அவன் மீண்டும் வெளியே சென்றான். உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டாற் போல் இருந்தது. பாருவுக்கு, பையன் அவளை விட்டு ஏற்கனவே பிரிந்து விட்டான்!

     அவள் அருமையாகக் காத்து நின்ற ஒரே பாசம், அவளை விட்டு அகல அவள் எப்படிப் பார்ப்பாள்? எப்படிப் பொறுப்பாள்?

     படித்த பையன்களில் நஞ்சன் தானா அகப்பட்டான், அந்த கிருஷ்ணனுக்கு? எத்தனை எத்தனை சீமான் வீட்டுச் செல்ல மக்கள் இல்லை? அவள் குமுறலுக்கு ஆறுதலே கிடைக்கவில்லை.

     ஜோகியோ, நிலம் இல்லை, வேலை இல்லை என்று ரங்கனுடன் அவனை ஒத்த அவன் தலைமுறையைச் சேர்ந்த மக்களிடம் சென்று, ஆற்றாமையைக் கொட்டுவதும், திட்டங்கள் வகுப்பதுமாக நெஞ்சுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருந்தார்.

     அவர்களுடைய விளைநிலங்களில் தகரக் கொட்டகைச் சாமான் கிடங்குகள் வந்தன; அலுவலகங்கள் முளைத்தன. சாலை வேலைக்காகப் பாறையைப் பிளக்கும் ஒலிகள், மலை முகடுகளை எல்லாம் முட்டி எதிரொலித்தன. அந்த ஒலியைக் கேட்கையிலே ஜோகி நெஞ்சைப் பிடித்துக் கொள்வார். பாருவுக்கோ, பூமித்தாய் அதிர்ந்து துடிக்கும் ஒலியாக அது துன்ப அதிர்வைத் தரும். உன்மத்தம் பிடித்தவளைப் போல் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவள் உடல் குலுங்கும்.

     நஞ்சன் சம்பளம் வாங்கி ஒரு பகுதியைப் பாருவிடம் கொடுப்பதும், பெரும்போது வெளியில் கழிப்பதுமாகக் குடும்பத்தை விட்டே விலகிப் போய்க் கொண்டிருந்தான். இரவு வேலையன்று வீடு வருவதை நிறுத்தினான்; பின்னர் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாலையில் மட்டும் வந்து கொண்டிருந்தான்; மெல்ல மெல்ல அதுவும் நின்றது. அணைக்காலனியில் அவன் தங்க வீடும், ஒத்த சகாக்களும் அவனை இரவிலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டனர். என்றோ ஒரு நாள் ஒப்புக்கு வீடு வருவது வழக்கமாயிற்று.