உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 3. சிட்டுக் குருவிகள் வானம் பன்னீர் தெளிப்பதைப் போல் ஆனந்த பாஷ்யம் உதிர்த்துக் கொண்டிருந்தது. கதிரவன் இளந்கை செய்து கொண்டிருந்தான். மென்காற்று மெல்லச் சாமரம் வீசி, சித்திரை மாதம் நெருங்கும் காலம் அல்லவா? இளம் பயிர்களுக்கு எத்தனை மினுமினுப்பு, தளதளப்பு! பொலபொலவென்ற மண்ணைக் கிளறி, பயிரின் வேர்களுக்கு உயிரூட்டமில்லாமல் உறிஞ்சும் களைகளை அப்பால் எறிந்து கொண்டிருந்தான் ஜோகி. கோயிலின் பின்னே, ஒரு சிறிய சதுரம், அவனுடைய கைராசியை எடுத்துக் காட்டியது. சாதாரணமாக, அதுவரையில் கோயில் காத்த பையன்கள் எவரும் பயிர் செய்வதில் முனைந்ததில்லை. எருமை மாடுகள் உண்டு; எதிரே காடு உண்டு; அங்கேயே திரிவதும் தனியே விளையாடுவதும், எவரேனும் வந்தால் இழுத்து வைத்து ஊர்க்கதைகள் பேசுவதுமாகப் பொழுதை ஓட்டுவார்கள். ஜோகி மனசில் நேர்மையுடனும், அளவற்ற நம்பிக்கையுடனும், கட்டுப்பாடுகளுடனும் வளர்ந்த பையன். தந்தையின் நிலையான சீலமும் ஒழுங்கும் அவனுக்குச் செல்வங்களாக வந்திருந்தன. எல்லாவற்றையும் விட, தந்தையிடமிருந்து அவன் பெற்றிருந்த செல்வம், அவ்ன் உயிரோடு உடலோடு ஊறியிருந்த மண் பாசந்தான். தன்னை அறியாமலே அந்தப் பாசத்தால் அவன் கவரப்பட்டான். பொழுது விடிகையில் நீராடி, பாலைக் கறந்து காலை வேலைகளை முடிப்பான். தனக்கென்று ஒரு பிடி சோறு பொங்கி விட்டு, அணையா நெருப்புக்கு வேண்டிய இரை சேகரிக்கப் போவான். இறையவர் பணி போக மிகுதியுள்ள நேரத்தில் அவன் விளையாட்டாகத்தான் பின்புறச் சதுரத்தைத் திருப்பினான். விதைத்து அருவியிலிருந்து நீர் கொணர்ந்து ஊற்றினான். சின்னஞ்சிறு முனைகள் எழும்பி, பசுமை பிடித்துச் செழித்து, கதிர் முற்ற முதற்பயிர் வந்த போது அவனுடைய ஆனந்தத்தை வெளியிட முடியுமோ? கதிரோடு, தெய்வத்தை வேண்டிப் படைத்த போது, அவன் உள்ளச் சிலிர்ப்பும், அடைந்த பேரின்பமும் நவிலற்பாலனவோ? தனிமை அவனைப் பயமுறுத்தவில்லை; அவனுக்கு அலுப்பையோ சலிப்பையோ ஊட்டவில்லை; பெற்றவரும் மற்றவரும் தன்னைச் சிறையில் தள்ளிவிட்டார்களே என்று ஏங்கி மாயவில்லை. அவற்றையெல்லாம் மண்ணாகிய தாய் மாற்றி, செல்வப் புதல்வனென்று கண்டு, அவனிடம் தன் உயிர்ச் சக்தியைக் காட்டி மகிழ்வூட்டி விட்டாள். அடிக்கொரு முறை ஐயனின் நெருப்பைக் கனிய வைக்கும் பணியும், தன் கை விதைத்த பயிரைப் பற்றிய சிந்தனையும் அவனுடைய எண்ணங்களை மாசு அண்டாமல் காத்து வந்த மகிமைதான் என்னே! இந்தக் குறுகிய உலகத்துள் நம்மைக் குமுற வைத்து விட்டார்களே என்று கொதிக்காமல், அந்தக் குறுகிய உலகத்துள் விரிந்து பரந்த உலக அநுபவத்துள் இழக்கும் சக்திகளை எல்லாம் திரட்டித் தந்துவிட்டாற் போல் அவனுக்கு அந்த அநுபவங்கள் ஈந்த செல்வங்களைச் சொல்ல முடியுமோ? முத்தரும் சித்தரும் முயன்று முஇட்யாத அந்தத் தவவாழ்வு, அவனுடைய நெறிக்கு, வழிவழியான அந்த இறை நம்பிக்கைக்குப் பழகி அடிமையாகி வந்திருந்தது. உண்டி சுருக்கி, உடலின் சுகம் துறந்து, உயரிய நோக்கிலே மனதைச் செலுத்தியிருந்த அவன் முகத்தில் ஒளி மிகுந்திருந்தது. கண்களில் தெளிவான கம்பீரம் இருந்தது. உடல் மெலிந்திருந்தாலும் உரம் குன்றாத வனப்பு இருந்தது. அவன் களைக்கொட்டை எடுத்துப் போடுகையில் அடிக்கடி அந்த மேலாடை நழுவி விழுந்தது. உயரத் தூக்கி உச்சியில் முடிந்திருந்த தலைமுடியும் நழுவி அவிழ்ந்தது. களைக்கொட்டை கீழே வைத்துவிட்டு, அவன் ஆடைகளையும் தலையையும் நன்கு முடிந்து கொண்டான். முன்புறம் ஓடி வந்து கோயிலுக்குள் புகுந்தான். அருகிலுள்ள சுள்ளிகளை ஒடித்துப் போட்டுவிட்டு மறுபடி வெளியே வந்தான். நிழல் கற்கம்பத்தைத் தாண்டியிருந்தது. பெரியப்பா ஏன் வரவில்லை? தினமும் மோர் வேண்டி அவர் வருவார். அவருக்கென்று பல்லாயில் அவன் எடுத்து வைத்த மோர் அப்படியே இருந்தது. கோயிலிலுள்ள ஆறு எருமைகளின் பாலையும் அவன் உபயோகித்துக் கொள்ளலாம். எப்போதும் அணையா விளக்காக எரிவது அந்தப் பாலின் நெய்தான். கொழுக்கு மொழுக்கென்று தாயைப் போலவே குட்டையாக உள்ள ரங்கம்மையின் ஒரு வயசுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரிய தந்தை ஏன் அன்று வரவில்லை? அவனுக்கு வெளியுலகத் தொடர்பாகத் தினம் தினம் கோயிலில் வந்து அவனுடன் எவரேனும் பேசுபவர் உண்டென்றால் அது அவர் தாம். ஜோகி கட்டை பிளக்கையிலோ, குச்சி ஒடிக்கையிலோ, பால்பாண்டம் சுத்தம் செய்கையிலோ, பூஞ்செடிக்கு நீரூற்றுகையிலோ பெரியப்பா அந்தக் கோயிலின் சிறிய திண்ணையில் வந்து உட்கார்ந்திருப்பார். அவர் ஏதேனும் பண்டைய நாளைச் செய்தியைப் பேசுவார்; இல்லையேல் ஏதோ எட்டாத உலகின் சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். அதுவுமில்லாது போனால், அவருடைய கண்டத்திலிருந்து இனிய பாடல்கள் மெல்லிய சுரத்தில் ஜோகியின் நாடி நரம்புகளைச் சிலிர்க்கச் செய்யும் விதத்தில் வந்து கொண்டிருக்கும். அந்தக் குரலுக்குத்தானே தந்தை தம்மையே பறி கொடுத்து நின்றிருந்திருக்கிறார் என்று ஜோகி வியப்படைவான். அந்தப் பெரியப்பா ஏன் வரவில்லை? ஜோகி பயிரை விட்டு, கோயிலின் பின்புறம் தள்ளி நின்று பெரிய தந்தை வரும் வழியையே நோக்கிக் கொண்டிருந்தான். எத்தனை நேரம் நின்றானோ? அடிவானைத் தொடும் மலையின் எல்லைக் கோடுகள் போன்ற தொடர் வளைவுகள் நீலமும் பசுமையுமாக மின்னிய காட்சியிலே, விரிந்து பரந்த உலகிலே சுதந்திரமாகத் தன்னை மறந்து அவன் நிற்கையிலே தன் உள்ளத்தின் உள்ளிருந்து ஒன்று கட்டவிழ்ந்து மேலே செல்வது போன்ற பரவசம் உண்டாயிற்று ஜோகிக்கு. அத்தகைய உணர்வு அவனுக்குப் புதியதன்று. அவன் இனந்தெரியாப் பருவத்திலிருந்தே அவ்வுணர்வை அனுபவித்திருக்கிறான். புல்மேட்டில் எருமைகளை மேய்த்துக் கொண்டு அவன் படுத்திருக்கையில், அவனை மறந்து அவனுடைய உள்ளத்தினின்று ஒன்று வானை நோக்கிச் சென்று விட்டாற் போன்று தோன்றும் கண்ணை மூடிக் கொண்டு அந்த இன்ப லயத்தில் மூழ்கிக் கிடப்பான். அத்தகைய ஓர் இன்பலயத்தில், தன்னைச் சுற்றிய இதமான வெம்மையிலும் தண்மையிலும் மூழ்கியவனாய் அகம் கனிந்து அவன் நிற்கையிலே, அருகிலே கீசுக்கீசென்று குருவிகளின் ஒலி அவனைக் கவர்ந்து இழுத்தது. அவனுக்கு அருகில் ஒரு சிட்டுக்குருவிகள், சிறு அலகால் ஒன்றையொன்று கொத்திக் கொண்டும் கூவிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இரு குருவிகளுக்கும் கழுத்துக்குக் கீழ் மார்பில் கறுப்புத் தடங்கள் இருந்தன. புதுச் சிறகுகளும் நல்ல பஞ்சின் தன்மையொத்த மிருதுவான மேனியும் கூடிய ஆண் குருவிகள். அவை இரண்டும் சண்டை போடும் காரணத்தைத் துழாவ வேண்டிய தேவை இல்லாதபடி அவனுக்கு வலப்புறத்தில் கீசுக்கீசென்று சிறு குருவி ஒன்று வால் சிறகு படபடக்கக் கத்திக் கொண்டிருந்தது. மென்மையும் இளமை அலகிலும் மேனியிலும் தெரியும் பெண் குருவி அது. சிந்தை கவரப்பெற்ற ஜோகிக்கு, உடலில் சிலிர்ப்பு ஓடியது. அதுவரையிலும் அவன் குருவிகளையும் காட்டு மைனாக்களையும் பார்க்காதவன் அல்லன். ஆனால் அது போன்ற ஒரு காட்சியில் பிரத்தியேகமாக அவன் சிந்தை ஈடுபட்டதில்லை. இரண்டு ஆண் சிட்டுக்கள், ஒரு பெண்ணுக்காகச் சண்டை போடுகின்றன. பெண் சிட்டு, துடிதுடிப்புடன் கூவுகிறது. அதன் மனசைக் கவர்ந்தது எதுவோ? தன் இனியவன் வென்று தன்னை இன்ப வெளியில் இட்டுச் செல்ல வேண்டுமே என்ற துடிதுடிப்புப் போலும் அதற்கு! அவன் உள்ளத்தில் அந்தக் காட்சியில் என்றுமிலா ஆவலும் துடிப்பும் உண்டாயின. இரண்டு குருவிகளில் எது வெல்லப் போகிறது? ஒன்றையொன்று கொத்திக் கொண்டு, சிறகைப் படபடவென்று அடித்துக் கொண்டு, துரத்திக் கொண்டு, இரண்டும் கோயில் மைதான எல்லையைக் கடந்து, காட்டுக்குள் சென்றன. பெண் சிட்டும் கூவிக் கொண்டு சிறிது பறந்து, கற்றூணில் வந்து உட்கார்ந்தது. இப்புறமும் அப்புறமும் கழுத்தை வளைத்துக் கண்ணைச் சாய்த்து அழகு பார்த்துக் கொள்வதும், அலகால் சிறகுகளையும் உடலையும் கோதி விடுவதுமாகக் கவலையின்றி உட்கார்ந்திருக்கிறதே! தன் மனசுக்கு இனியவனின் வலிமையில் அத்தனை நம்பிக்கையா? ஜோகி, அந்தக் காதற் போரின் முடிவைக் காண உடலெல்லாம் ஆவலின் துடிப்பாகக் காத்து நிற்கையிலே, ஒரு குருவி வெற்றிப் பெருமிதத்துடன் விர்ரென்று பறந்து வந்தது. தன் இனியாளின் அருகே வந்து அமர்ந்தது. அவனுடைய உடல் படபடத்தது, அவற்றைக் காண்கையிலே. பெண் குருவிக்குத்தான் எத்தனை சாகசம்! கழுத்தைச் சாய்த்துக் கொண்டு நாணப்பார்வை பார்த்ததோ? ஆண் நெருங்கி நெருங்கி வந்தது. பெண்குருவி பறந்து மறுபுறம் போய் உட்கார்ந்தது. பின்னும் அருகில் வந்தது. பெண் குருவி விர்ரென்று பறந்து கோயில் கூரை முகப்புக்குப் போயிற்று. ஆணும் தொடர்ந்தது. அவை நீலவானில் பறந்து ஜோடியாகக் கண் பார்வையிலிருந்து மறையும் வரை ஜோகி அவற்றையே பார்த்துக் கொண்டு நின்றான். மனக் கிளர்ச்சி அடங்கவில்லை. சிறு திண்ணையில் அமர்ந்தான். முதல் முதலாக, வாழ்க்கை நிறைவு பெற்றுவிடவில்லை என்ற அதிருப்தி அவனுக்கு உண்டாயிற்று. ஆம், குறிஞ்சி பூத்துவிட்டது. அவன் ஒரு குறிஞ்சி நிரம்பாத பாலகனாக, கோயில் எல்லைக்கு வந்தான். இதை விட்டுப் போகும் தகுதி பெற்று அவன் நிற்கிறானே! அந்தக் குருவிகள் இரண்டும் மரப்பொந்துகளிலோ புதர்களிலோ கூடி வாழ்ந்து சந்ததியைப் பெருக்கும். சுள்ளி ஒடுக்கவோ நீரெடுக்கவோ அவன் செல்லுகையில் புதர்களில் குஞ்சுகளின் அச்ச ஒலிகள் கேட்குமே; ‘உணவுக்குப் போயிருக்கும் தாயும் தந்தையும் இல்லை, எங்களுக்குப் பறக்கச் சிறகுகளும் இல்லை’ என்ற அந்தப் பரிதாப ஒலிகள், எதிர்கால நம்பிக்கை என்ற ஆதாரத்தில் தோய்ந்து நிற்பவை அன்றோ? ‘சிறகு வளர்ந்து, நாமும் வாழ்ந்து இனத்தைப் பெருக்க வேண்டும்?’ இந்த எட்டுப் பத்து ஆண்டுகளில், அவன் முன் கல்லாட்டம் ஆடிக் கொண்டிருந்த ரங்கம்மை, கொழுக்கு மொழுக்கென்று ஒரு மதலைக்குத் தாயாகி விட்டாளே! அன்றொரு நாள் மாமி கிரிஜையைக் குழந்தையாகக் கொண்டு வந்ததும், பாரு அவனைப் புற்சரிவிலிருந்து அழைத்துப் போனதும் சடேரென்று அவன் நினைவுக்கு வந்தன. குழந்தை கிரிஜையை மடியில் விட்டுக் கொண்டு, அவன் எடுக்க வேண்டாம் என்று மொழிந்ததும், கிருஷ்ணனின் தாயும் மற்றவரும் அவனைக் கேலிகள் மொழிந்ததும் அவன் நினைவில் அவிழ்ந்தன. ‘பாப்பா பெரியவளானதும் நம் வீட்டுக்கு வருவாள்; உனக்குச் சோறெடுத்து வைப்பாள்; விதை விதைப்பாள்’ என்றெல்லாம் தாய் கூறிய சொற்கள் புதுப் பொருளுடன் பளிச்சென்று நினைவில் தோன்றின. உடல் புல்லரித்தது. பாரு இன்னம் கன்னியாக நிற்கிறாள்; ரங்கனுக்குத்தான் பாரு என்று அவன் தந்தை, முன்பு ஒரு நாள் கூறியது உண்டு. ஆனால், ரங்கன் எங்கே சென்றானோ, என்ன ஆனானோ, தெரியவில்லை. பாருவுக்கு அபூர்வமான வட்ட மதியன்ன முகம், அவள் இப்போது எவ்வளவு அழகாக வளர்ந்து நிற்பாள்! அவன் கோயிலிருந்து விடுதலை பெற்று வீடு சென்றதும் வீட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுவான். காய்ச்சல் வந்து அவன் தந்தையை உருக்குலைத்து விட்டது. அவருக்குப் பூரண ஓய்வு கொடுத்து விட்டு, அவன் அவர் பணிகளைச் செய்வான். காலையிலெழுந்து தந்தையைப் போலவே இறைவனைத் தொழுது விட்டு அவன் மாடுகளை அவிழ்க்கையில், அவனுடைய அன்னையைப் போல் பாரு சுடுநீர் வைப்பாள்; கலங்கள் கழுவுவாள்; அவன் நீராட, அருகிலிருந்து நீரூற்றுவாள்; கஞ்சியோ, மோரோ, பரிவுடன் கொண்டு தருவாள். பகலில் வந்த நேரம், பளபளவென்று பெரிய வட்டிலை வைத்துச் சோறும் குழம்புமிடுவாள். அவள் கைப்பட்ட அந்த உணவின் மணந்தான் எப்படி இருக்கும்! மாலையில் அவன் வருமுன், தீபமாடத்தில் அவள் விளக்கு வைத்துவிட்டு, கதவருகில் நின்று கருவிழிகள் ஒளிரச் சிரிப்பாள். அப்பப்பா! இந்த நினைப்பிலே என்ன ஆனந்தம்! அடுத்த ஆண்டில், ரங்கியைப் போல் அவளும் கொழுக்கு மொழுக்கென்று ஒரு பையனைத் தரும் தாயாகி விடுவாள். இறையவருக்கு நெடுநாள் பணி செய்த அவனுக்கு விரைவிலேயே ஒரு பையனை, குலக்கொழுந்தை அவர் அருளமாட்டாரா? குடும்பத்தில் எவ்விதப் பற்றும் இல்லாத பெரியப்பன், ரங்கி குழந்தையை எப்படிச் சுமந்து திரிகிறார்? குழந்தை தரும் ஆனந்தத்துக்குக் குவலயத்தில் ஈடேது, எல்லை ஏது? பாரு பெற்றுத் தரும் குழந்தையை அவனுடைய அம்மையும் அப்பனும் பெரியப்பனும் மாறி மாறி வைத்துக் கொள்வார்கள். பெரியப்பா அதற்குப் பாட்டுக்கள் பாடவும் கை தட்டவும் ஆடவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார். அவன் அத்தகைய குடும்பத்துக்கும் தானியம் விதைப்பான். இரவு பகல் காவலிருந்து பயிரைக் காத்துப் பெருக்கி வீட்டுக்குக் கொண்டு வருவான். பாலைப் பெருக்க மாடுகளைப் பேணுவான். ஊரிலிருந்து நண்பர்களும், அத்தை, மாமிமார்களும் வந்தால், வீட்டுக்கு உடையவனாக வணங்கி உபசரிப்பான். பாருவும் உச்சரிப்பில் பங்கு கொள்வாள். மாசம் ஒரு கூட்டு விருந்தும் சந்தோஷமும் வைபவமுமாக அவர்கள் குடும்பம் நடக்கும். பரபரத்த அடிச்சத்தம் அவனுடைய இனிய கனவைக் கலைத்தது. வழக்கம் போல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மோர்க் கலயத்துடன் பெரியப்பன் வரவில்லை, விருந்துண்டு களித்த முகத்தினராய், வெற்றிலை சுவைத்தவராய் வந்தார். “ஏன் பெரியப்பா, மோருக்குக் கலயம் கொண்டு வரவில்லையே? வீட்டில் ஏதேனும் விசேஷமா? குழந்தையை அழைத்து வரவில்லையா?” “இன்று விருந்துச் சாப்பாடு, ஜோகி. கிருஷ்ணன் வந்திருக்கிறான் தெரியுமா?” “ஓ, மணியக்காரர் வீட்டுக் கிருஷ்ணனா?” “ஆமாம். பட்டணம் போய்ப் பெரிய படிப்பெல்லாம் படித்து வந்திருக்கிறானா? எப்படிப் பேசுகிறான் என்கிறாய்? மிஷன் பள்ளிக்கூடத்தில் எல்லோரையும் வேதத்தில் மாற்றுகிறார்கள் என்று சொன்னார்களே; இல்லாது போனால் உன்னைக் கூடத் தம்பி பள்ளிக்கூடம் அனுப்பியிருப்பான்... இன்னும் யார் யாரோ பள்ளிக்குடம் போனார்கள். ஆனால் ஒரு பயலாவது கிருஷ்ணனைப் போல் படிக்கவில்லை. அவன் என்னவெல்லாம் பேசுகிறான் என்கிறாய்?” “உம்...” “அங்கெல்லாம் பெண்பிள்ளைகள் கூடப் பள்ளிக்கூடம் போய் பெரிய படிப்பு படிக்கிறார்களாம். இவன் தான் எத்தனை வருஷம், எத்தனை புத்தகங்கள் படித்து விட்டான்! இந்த மலை இத்தனை அடி, ஆறு இத்தனை நீளம் என்றெல்லாம் சொல்கிறான். நாமெல்லாம் படித்துத்தான் கிராமங்களில் விளைச்சல் பெருக்க வேணுமாம்; நல்ல நல்ல துணி உடுத்த வேணுமாம். அப்புறம்...” பெரியப்பன் ஒவ்வொன்றாக நினைவுபடுத்திக் கொண்ட விதம் ஜோகிக்கு வேடிக்கையாகவும் புதுமையாகவும் இருந்தது. “ஒத்தையிலே கவர்னர் பங்களாவிலெல்லாங் கூட, எண்ணெய் திரு இல்லாமல் பகலைப் போல் விளக்கு எரிகிறதாமே! அது போல் விளக்குக்கு என்னவோ ‘பவர்’ எடுக்கிறதாம். அதெல்லாங் கூடச் சொல்கிறான். நமக்கு ஒன்றுமே விளங்கவில்லை. வெள்ளைக்காரத் துரைகள் போகும் வண்டி, பிளஷர் கார்கள் எல்லாம் இங்கேயும் வர வேண்டும். ரோடு போட வேண்டும், பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எல்லோரும் உழைக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறான். போ!” ஜோகி, தன் உலகத்துக்கு அப்பாலுள்ள இந்தச் செய்திகளை ரசமாகத்தான் கேட்டான். கிருஷ்ணன் அவ்வளவு பெரிய படிப்புப் படித்து விட்டானா? யார் கண்டார்கள்? மரகத மலையிலும் அந்த விந்தைகள் வரக் கூடும் ஒரு நாள்? ஜோகி, மாடில்லாமல் குதிரையில்லாமல் ஓடு வண்டியையும் பார்த்ததில்லை; எண்ணெய் திரி இல்லாத விளக்கையும் பார்த்ததில்லை. பெரியப்பா அவன் வியந்து நிற்கையிலேயே அடுத்த செய்தியையும் நினைத்துச் சொன்னார்: “அப்புறம், இந்த வெள்ளைக்காரத் துரைமார்கள் இருக்கிறார்களே, இவர்கள் தானே ரெயில் வண்டி கொண்டு வந்திருக்கிறார்கள்? காபி, டீ எல்லாம் மலையில் வைத்திருக்கிறார்கள்? நாம் வரி கட்டுகிறோம். கலெக்டர் துரை, கவர்னர் துரை, பெரியவர்கள் என்றெல்லாம் நினைக்கிறோமோ?” “ம்...?” “துரையும் நம்மைப் போல் மனிதன் தான். சொல்லப் போனால், இழிகுலத்தோர் போல் ஆடும் மாடும் தின்பவன்” என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “உண்மையிலே நம்ப ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு அவன் ஆளுகிறான்; நம் பூமியிலே விளைத்துப் பணமெடுக்கிறான்; இவர்கள் எல்லாரும் போய் நமக்குச் சுயராஜ்யம் வரவேணும் என்றெல்லாம் சொல்கிறான். அவன் பேச்சு, அடேயப்பா! நமக்கு நினைப்பிலேயே பிடிபடவில்லை. இந்த ஹட்டிக்கே அவனால் பெருமை வரப்போகிறது, நீ பார்.” ஜோகி பெரியப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான். “இன்று அங்கேதான் இத்தனை நேரம் இருந்தீர்களா பெரியப்பா?” “ஆமாம். கரியமல்லண்ணனுக்குப் பெருமை இருக்காதா? விருந்து நடத்தினார். பார் ஜோகி, ஒன்று மறந்தேனே! அங்கேயெல்லாம் புளிப்புச் சேராமல் சாப்பாடே கிடையாதாம். இங்கே புளி போட்டால் உடம்பு ரத்தம் கெட்டுப் போகும் என்கிறோமே! அடேடே! ஒன்று முக்கியமான விஷயம். அதை மறந்து போனேனே!” ஜோகிக்கு சிரிப்பாய் வந்தது. “நம்ம பாருவை, கிருஷ்ணனுக்குக் கேட்கப் போகிறார்களாம். கிருஷ்ணனுக்குப் பாருவைக் கட்டிக் கொள்ளவே இஷ்டமாம். அவனே காலையில் சொல்லி விட்டானாம். பாரு அழகான பெண் இல்லையா? அவனுக்கு நல்ல பெண் வேண்டாமா?” ஜோகியின் கண்டத்தில் அடி நெஞ்சிலிருந்து ஏதோ ஒரு கவாடம் பறந்து வந்து உட்கார்ந்தாற் போல் இருந்தது. பாருவை, கிருஷ்ணனுக்கு - எங்கெல்லாமோ சென்று படித்துப் பட்டங்கள் வாங்கி வந்திருக்கும் கிருஷ்ணனுக்கு. சிட்டுக் குருவிகளின் காட்சி சட்டென்று நினைவில் முட்டியது. ஜோகி, நீரில் முழுகிச் சமாளிப்பவன் போல் குலுங்கிக் கொண்டு பெரியப்பனை நேராகப் பார்க்க முயன்றான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|