உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற் பாகம் 3. ரங்கனின் கனவு குழந்தை பிறந்ததிலிருந்து, தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை வரும் வரையிலும், தாயின் அன்பிலும் தகப்பனின் ஆதரவான அரவணைப்பிலும் உரம் பெறுகிறது. அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கையிலேயே நிமிர்ந்து நிற்க முயலுகிறது. அந்த அன்பு வரும் திசை சூன்யமாக இருந்தால், ஏமாறிப் பொலிவு குன்றிக் குழந்தை மந்தமாக ஆகலாம். ரங்கனுக்கோ, அன்பு வர வேண்டிய திசையில் அனல் போன்ற சொற்களைக் கேட்கும் அனுபவமே இருந்தது. அண்டை அயலில் ஒத்தவர்களின் மேன்மைகளைக் கண்டு வேறு மனம் கொந்தளித்தது. ஏமாற்றமும் பொறாமையுமாகச் சேர்ந்தே, ரங்கனின் உள்ளத்தில் எதிர்த்து எழும்பும் அரணாக, தான் எப்படியேனும் எல்லோரையும் விட மேலானவனாக வேண்டும் என்று ஆவேசமாக, பெருந்துணிச்சலாக உருவெடுத்து வந்தன. அந்த வேகத்தில் தான் அவன் எருமைத் தீனமாகக் குரல் கொடுத்தும் எக்கேடு கெட்டாலென்ன என்று இறங்கி, அருவியைத் தாண்டிக் கிழக்குப் பக்கம் இன்னும் இறங்கிச் சென்று காட்டுக்குள் புகுந்தான். திரும்பி மரகதமலைக்கு வராமலே ஓடிவிட்டால் என்ன? மூக்கு மலையில் அவன் அத்தை இருக்கிறாள்; மாமன் ஒருவர் இருக்கிறார். இல்லையெனில் ஒத்தைக்குப் போய்விட்டால்? இடுப்புக் காப்பு இருக்கிறேன் இருக்கிறேன் என்று அவன் இருதயத் துடிப்புடன் ஒத்துப் பாடியது. காப்பை, காசு கடன் கொடுக்கும் லப்பையிடம் விற்றால் ஒரு முழு வெள்ளி ரூபாய் கிடைக்குமே; ஒரு முழு வெள்ளி ரூபாய்! கீழ் மலைக்கு அப்பால், துரை எஸ்டேட் சமீபம், லப்பையின் காசுக் கடை இருக்கிறதென்பதை ரங்கன் அறிவான். ஒத்தைக்குப் போனால் அங்கும் காசுக்கடை இருக்காதா என்ன? ஒத்தையில், சந்தைக் கடைகளில் சிறு பையன்கள் சாமான் கூடை சுமப்பார்களாம். துரை, துரைசானி மார்கள் காய்கறி வாங்க வருவார்களாம். அவர்கள் இஷ்டப்பட்டால் வெள்ளிக் காசுகளே கொடுப்பார்களாம். இந்த விவரங்களை எல்லாம், மூன்றாம் விட்டுத் தருமன் ரங்கனுக்குக் கூறியிருக்கிறான். தருமன் சில நாட்கள், ஒத்தையில் சாலை வேலை செய்து காசு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பியவன். நாளொன்றுக்கு ஆறணாக கூலி வாங்கினானாம். ஹட்டியில் என்ன இருக்கிறது? இடுப்புக் காப்பு, அடுக்கடுக்கான வெள்ளி நாணயங்களாகவும், தங்க மொகராக்களாகவும் பெருகி வளர்வது போல அவனுடைய ஆசைப் பந்தல் விரிந்து கொண்டே போயிற்று. நடையும் திசை தெரியாத கானகப் பாதையில் எட்டிப் போயிற்று. வானளாவும் கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்கள் சூழ்ந்து சோலையின் மணம் காற்றோடு சுவாசத்தில் வந்து கலந்தது. ஒத்தைக்குச் செல்லும் வழியைப் பிறர் சொல்ல அவன் அறிந்திருக்கிறானே தவிர, சென்று அறியானே! மரகத மலையிலிருந்து வடகிழக்கில் அடுத்தடுத்துத் தெரியும் மூக்குமலை, மொட்டை மலை, புலிக்குன்று எல்லாவற்றையும் தாண்டி அப்பால் செல்ல வேண்டுமாம். ஒத்தை சென்று விட்டால், வெள்ளிக் காசுகளாகச் சேர்த்துக் கொண்டு பெருமிதத்தோடு ஹட்டிக்குத் திரும்பி வருவானே! அவன் குதிரையிலே ஏறி ஸர்ஸ் கோட்டும் தலைப்பாகையுமாக வரும் காட்சியை, ஹட்டியில் உள்ளவர் அனைவரும் யாரோ என்று கண்டு வியந்து பிரமிக்க மாட்டார்களா? அப்போதே இராஜகுமார நடை போட்டவனுக்கு, கானகத்துச் சூழ்நிலை, தனிமையின் அச்சத்தை நெஞ்சில் கிளர்த்தியது. ‘சோ’ என்று மரக்கிளைகள் உராயும் ஓசை; புதர்களண்டையில் அவன் அடிச்சத்தம் நெருங்குகையில் பறவைக் குஞ்சுகள் எழுப்பும் அச்ச ஒலிகள்; சூழ்ந்து வரும் மங்கல்; பாதை இல்லாத தடம்; இவையெல்லாம் அவன் தைரியத்தை வளைத்துக் கொண்டு பின்வாங்கத் தூண்டின. மரகத மலையிலிருந்து நோக்கினால் மூக்குமலை மிக அருகில் காண்பது போல் தோன்றுகிறதே! இத்தனை காடுகளைக் கடந்து எப்படிச் செல்வது? “ரே, ரங்கா? எங்கே வந்தே?” ஒரு புதரடியில் கள்ளிகள் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்த பெள்ளியின் தமக்கையின் குரல் அவனை அந்தத் திசையில் நோக்கச் செய்தது. ஹட்டிப் பெண்கள் ஐந்தாறு பேர் அவனை வியப்புடன் நோக்கினர். ரங்கனுக்குத் தன் திருட்டு எண்ணம் அவர்களுக்குத் தெரிந்து விட்டாற் போல் உள்ளூர ஒரு நடுக்கம் உண்டாயிற்று. “எங்கே வந்தாய்? சுள்ளிக்கா? தவிட்டுப் பழம் முள்ளுப் பழம் தேடி வந்தாயா?” “இப்போது ஏது தவிட்டுப் பழம்? பூ வந்திருக்கிறது இப்போதுதான்.” “சின்னம்மா விறகுக்கு வந்தார்களா? கூட வந்தாயா?” அவன் பேசாமல் நிற்கையிலே ஆளுக்கொரு கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தார்கள். இருட்டும் நேரமாகி விட்டது; இனிக் காட்டு வழி தாண்டி, மலைகள் பல ஏறிக் கடந்து வழி தெரியாத ஒத்தைக்குக் கிளம்புவது சரியாகாது. “விளையாடிக் கொண்டே வழி தெரியாமல் வந்தேன் அக்கா” என்று சொல்லிக் கொண்டே ரங்கன் திரும்பி நடந்தான். விறகுச் சுமையுடன் அவர்கள் முன்னே நடக்க, ரங்கன் அவர்களை இலக்கு வைத்துக் கொண்டே பின்னே நடந்தான். அருவி கடந்து, மாடுகள் மேயும் கன்றின் பக்கம் ஏறி அவர்கள் ஹட்டிக்குச் செல்கையிலே, ரங்கன் அருவிக் கரையோரம் நடந்து விளைநிலங்களின் பக்கம் ஏறினான். பூமித்தாய்க்கு வண்ண ஆடைகள் அணிவித்தாற் போல் தோன்றும் விளை நிலங்களை அவன் கடந்து வருகையில் இருள் சூழ்ந்து விட்டது. சோம்பலை உடையவனின் உடைமை நான் என்று ஆங்காங்கே தரிசாகக் கிடக்கும் பூமி உரிமையாளரின் குணத்தைப் பறைசாற்றியது. குத்துச் செடிகளும் களைகளும் தான் தோன்றிகளாய்க் காணும் விளைநிலம், ஆணும் பெண்ணும் ஒத்து வாழாத குடும்பத்துக்குடையது என்பதைத் தெரிவித்தது. ரங்கனுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு சதுரமாக, நீள்பரப்பாக, முக்கோணப் பாத்திகளாக, இது இன்னாருடையது, இன்னாருடையது என்று அவன் பார்த்துக் கொண்டே வந்தான். சாமைப் பயிர் கதிர் விட்டுப் பூமியை நோக்கித் தாழ்ந்து, நாணங்கொண்ட மங்கையென நின்றது. முக்கோணப் பரப்பில் பசேலென்று முழங்கால் உயரம் தோன்றும் உருளைக் கிழங்குச் செடிகள், கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லருக்கு உரியவை. அருகில் முள்ளங்கிக் கிழங்குகள் கொழுத்துப் பருத்து, பூமி வெடிக்க, உள்ளிறுக்கம் தாங்கவில்லை என்று கூறுவன போல் வெளியே தெரிந்தன. கரியமல்லரின் நிலத்தை ஒட்டிய சிறு சதுரம், சிற்றப்பன் லிங்கையா புதியதாக வாங்கிய பூமி. அது ஜோகிக்கு உரியது. அந்தச் சதுரத்தில், இலைக் கோசும் பூக்கோசும் பெரிய பெரிய கைகள் கொண்டு என் குழந்தை என் குழந்தை என்று அணைப்பவை போல் உள்ளிருக்கும் குருத்தை, பூவை, ஆதவனுக்குக் காட்டாமல் மூடிப் பாதுகாத்தன. ஜோகியின் தந்தை, சிற்றப்பன், மண்ணில் வருந்தி உழைக்கும் செல்வர். ஜோகியின் அம்மையோ, பொன்னான கைகளால் பூமி திருத்துவதைப் பேறாக எண்ணுபவள். ஜோகியின் பாட்டி, ஒன்று விதைத்தால் ஒன்பதாய்ப் பெருகும் கைராசி கொண்டவள். ரங்கனுக்குப் பூமியைப் பார்த்து அவர்கள் வீட்டையும் எண்ண எண்ண தங்கள் சிறுமை உறுத்தும் முள்ளாக நெஞ்சை வேதனை செய்தது. அவர்கள் குடும்பத்துக்குரிய மண், அந்த நோஞ்சல் எருமை போலவே, சிவப்பு மண்ணாக, செழிப்பின்றி, பசுமையின்றி காட்சியளித்தது. அந்தப் பக்கம் அநேகமாகப் பழுப்பும் சிவப்புமான மண் தான். தெற்கோரம், அருவி வளைந்து செல்லும் இடம். கிருஷ்ணனின் தாத்தாவுக்குச் சொந்தமான பூமி மட்டுமே கரிய வளம் கொண்டது. ஆனால் ஜோகியின் தந்தை, ரங்கனின் சிற்றப்பன், அந்தப் பழுப்பு மண்ணையே வளமிட்டு வளமிட்டுப் பொன் விளையும் மண்ணாக்கி விட்டாரே! இரண்டு பசுக்களும், மூன்று எருமைகளும் உள்ள வீட்டில் வளத்துக்கு ஏது குறை? ரங்கனின் தந்தை நிலத்தில் வணங்கி வேலை செய்ததுமில்லை; சின்னம்மை பொருந்து உழைத்ததுமில்லை. வீட்டில் பொருந்தி இரண்டு நாட்கள் வேலை செய்தால், எட்டு நாட்கள் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு அண்ணன் வீடான கோத்தைக்குச் சென்று விடுவாள். ரங்கனின் தந்தை சில நாள் ஒத்தைப் பக்கம் எங்கேனும் கூலி வேலைக்குப் போவார். அந்த ஆறணாக் கூலியையும் சாராயத்துக்குக் கொடுத்து விட்டு வருவார். பூமியில் வேற்றுமையைக் கண்ட வண்ணம் நின்ற ரங்கனின் உள்ளத்தில் ஆற்றாமை சொல்லொணாமல் பொங்கி வந்தது. ஆத்திரத்துடன், கொழுத்து நின்ற முள்ளங்கிச் செடிகள் நாலைந்தைப் பிடுங்கினான். குழியொன்றில் பாய்ச்சுவதற்காக ஊற்றியிருந்த நீ மிகுந்திருப்பது கண்டு, அதில் கழுவினான். கடித்துச் சுவைத்துக் கொண்டே நடந்தான். காவற் பரணருகில் வந்ததும் நின்றான். தூரத்தில் சூழ்ந்து வந்த இருட்டில் புற்சரிவில் எருமை, விழுந்த இடத்தில் படுத்திருந்தது தீப்பந்தம் எரிவதிலிருந்து தெரிந்தது. அதன் அருகில் யாரோ நிற்கிறார், யாரது? சிற்றப்பனாக இருக்குமோ? சிற்றப்பன் தன்னை ஒரு வேளை கண்டு கொண்டு திரும்புவாரோ என்ற எண்ணத்துடன் காவற் பரணை நிமிர்ந்து பார்த்தான். மேட்டிலிருந்து குட்டையான இரு கால்களும், பள்ளத்திலிருந்து உயரமான இரு கால்களும் காவற் பரணைத் தாங்கி நின்றன. குட்டைக் கால்கள் உள்ள பக்கம் பரணுள் ஏற வழியுண்டு. இரவில், முள்ளம்பன்றிகள் கிழங்குகளைத் தோண்டிப் போடும். மான்கள் தளிர்களைத் தின்று விடும். இரவுக்கு இருவர், காவல்முறையாக ஊதுகுழலும், தீயும் நாயுமாய்த் துணைக் கொண்டு அந்தப் பரணில் இருந்த நட்ட பயிரைப் பாதுகாப்பார்கள். இன்று யார் முறையோ? ரங்கன் கிழங்குகளைத் தின்று தீர்த்துவிட்டு, இருட்டுக்கும் குளிருக்கும், வீடாக வெறுப்புக்கும் அஞ்சி, பரணில் ஏறிக் கொண்டான்; ஒரு மூலையில் சுருண்டு முடங்கினான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|