உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் 3. ரங்கன் ஆடிய ஆட்டம் மழை சோவென்ற ஓசையுடன் வெள்ளிக் கம்பிகளாக வானிலிருந்து இழைந்து விழுந்து கீழே ஓடிக் கொண்டிருந்தது. குழந்தைகள் மழை நீரில் காலை முக்குவதும் வீட்டுக்குள் ஓடித் தரையெல்லாம் கசமுசவென்று அழுகும் ஈரத்தை அதிகரிக்கச் செய்வதுமாக இருந்தார்கள். மூலைக்கு மூலை கசகசவென்று அழுக்குத் துணிமணிகள், குப்பைக் கூளம், ரங்கம்மை பிரசவித்துப் பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. துணிச்சுருளில் நெளிந்த அந்தப் பெண் குழந்தை, சற்றைக்கு ஒரு முறை துணிச்சுருளை நனைத்து, மூலையில் குவித்துக் கொண்டிருந்தது. ஈர விறகின் புகை, வீட்டுக்குள் சூழ்ந்து வெளியேற வகையின்றித் திணறிக் கொண்டிருந்தது. வீட்டு வேலையில் பாருவுக்குப் பொறுமையே குறைந்திருந்தது. இப்போது அது வசமாகப் பிடித்துக் கொண்டு விட்டது அவளை. மழை நாளில் அவள் திறந்த வெளியில் நின்று வேலை செய்வதற்கில்லை. மழைதான் ஆகட்டும், ஒரு நாளா இரண்டு நாளா? வானந்தான் பொத்துக் கொண்டதோ? ஆனி பத்துத் தேதியில் பிடித்த மழை, புரட்டாசி பிறந்தாயிற்று; விடவில்லை. மலை முகடுகளில் கார்மேகங்கள் வந்து தங்குவது உண்டு. தனக்குத் தங்க இடம் தந்த நன்றிக்காக, மேகங்கள் மழையாகப் பொழிந்து, மலையன்னைக்கும் பசும் பட்டாடை போர்த்து மகிழ்விப்பது உண்டு. ஆனால், இந்த ஆண்டு இப்படிக் கொட்டுகிறதே! அவள் நினைவு தெரிந்து இதுபோல் நீண்ட மழை கண்டிருக்கவில்லையே! கதிரவன் எங்கேனும் ஓடி ஒளிந்து விட்டானோ? வெறிக்காற்றுக்கு அஞ்சி தலை நீட்ட மறந்திருக்கிறானோ? இந்தப் பிரளய மழையில், அவளுடைய இளம் பயிர்கள் எப்படி இருக்கின்றனவோ! அவள் விளை நிலத்தின் பக்கம் சென்று ஒரு மாசம் ஆகிவிட்டது. ரங்கம்மை பிரசவம், வீட்டுவேலை, எதிர் வீட்டில் மாமன் உடல் நலிவு, மழை எல்லாம் கவிழ்ந்து அவளை வீட்டோடு வளைத்து விட்டன. தூற்றலுடன் கிழங்கு வயலில் களை எடுத்து விட்டு வந்தவள் தான். அம்மைக்கு உடம்பு சரியில்லை என்று ரங்கம்மையின் மகள் வந்துதான் அழைத்தாள். ஒரு மாசம் கணவன் வீட்டுக்கே வராமல் அவளை மறந்திருந்த நாட்களிலெல்லாங் கூட அவள் இப்படி அமைதி இழந்ததில்லை. அவளுக்கு மண்ணைத் தவிர உலகில் வேறு மகிழ்ச்சி தரக்கூடிய இன்பம் இரண்டு மக்கள் தாமே? மண் உயிர் கொடுக்கிறது; உரம் கொடுக்கிறது; உணவு கொடுக்கிறது. ஒரு நாள் அந்த மண் தான் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறது. வாழ்விலே, மண்ணைப் பற்றிய நினைவு எழாமல், அவள் மனம் பட்டாம்பூச்சி போல் பறந்து திரிந்து வர இளமை மோகத்திலே புதுக்காதலின் கவர்ச்சியிலே கனவு வலை பின்னியதுண்டு. அந்த வலையிலே, தெய்வ மைதானத்து மொட்டைக்கல் விழுந்து சின்னபின்னப்படுத்திய பின், அவள் உள்ளம் மண்ணின் ஆசையில் படிந்தது. அருமை மக்களைப் போல் அவள் பேணிய பயிர்கள் கருணையற்ற மழையில் எப்படிக் கலங்கிச் சாய்ந்திருக்குமோ? ரங்கம்மையின் கணவன் கோணியை மடித்துத் தலையில் போட்டுக் கொண்டு தினமும் ஒரு நடை போய் வருவான். அவனிடம் தினமும் அவள் கேட்கும் கேள்வி இதுதான்: “பயிர் எப்படி இருக்கிறது அண்ணா?” “பத்திரமாயிருக்கிறது அண்ணி அண்ணன் ஆயிரம் ஆயிரமாய்க் குத்தகை எடுத்துப் போட்ட கிழங்கு, உன் கிழங்குக்கு ஈடு வராது” என்று அவன் சிரிப்பான். அடுத்து, வாயிலில் நிற்கையிலோ, ஜோகி ரங்கியின் பையனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகையிலோ, அவள் அதையே கேட்பாள். மாமனைப் பற்றிய விசாரணை கூட அடுத்தபடித்தான். “அண்ணிக்கு இதே கவலை” என்று ரங்கம்மையின் கணவன் அன்று குறுக்கிட்டு நகைத்தான். “ஜோகியண்ணனுக்கும் பயிர் தான் பிள்ளைகள். இந்த அண்ணிக்கும் பயிர்கள் அப்படியே” என்று ரங்கம்மையும் சிரித்தாள். ஜோகிக்கு அவள் பேச்சு சற்றே வேதனை அளித்தாலும், விட்டுக் கொடுத்துக் கொள்ளாமல், “ஆமாம், அதற்கென்ன? பயிரைப் பிள்ளைகளாக வைத்துக் கொள்வதில் ஒரு தப்பும் இல்லை. மண் தாய்; பயிர் பிள்ளைகள்” என்றான். பிறகு, பாரு கேட்ட கேள்விக்கு, “கால்வாய் கரைந்து தண்ணீர் தேங்கியிருந்தது. மண்ணை வெட்டிப் போட்டேன். மழையும் தண்ணீரும் அதிகந்தான்; என்ன ஆகுமோ?” என்றாள் கவலையுடன். கணவனின் லாபநஷ்டம் பாருவை என்றுமே பாதித்ததில்லை. உண்மையாக உழைத்து எல்லாரும் நலம்பெற நிறைவுடன் வாழ விரும்பும் அந்தச் சகோதரனின் கவலை அவளை வேதனை கொள்ளச் செய்தது. “ஜோகியண்ணா, உங்கள் மூன்று ஏக்கரில் தேயிலை போடக்கூடாதா? மழை எத்தனை பெய்தாலும் பணமாகக் கொடுக்குமே?” என்றாள் ரங்கம்மை. “தேயிலை வைக்க முதலில் செலவு ஆகும். பிறகு மூன்று நான்கு வருஷங்கள் அது பலன் கொடுக்கும் வரையில் நாம என்ன செய்வோம்? மேலும், தேயிலையும் காபியும் பணந்தானே கொடுக்கும் ரங்கம்மா? ராகியும் கோதுமையும் கிழங்கும் பசிக்கு உணவாகுமே!” என்றான் ஜோகி. “பணமில்லாமல் இப்போதெல்லாம் முடிகிறதோ? கிருஷ்ணண்ணன் வீடு பெரிய வீடாக ஆனதே டீ போட்டதனால் தானே?” என்றாள் ரங்கம்மை. ஜோகிக்கு அவள் விவாதம் பிடிக்கவில்லை. “நான் வருகிறேன், அண்ணி” என்று நடந்தான். வீட்டிலே அவன் கண்ட காட்சி மெய்தானா? அங்கே அமர்ந்து உளம் கரையத் தந்தையின் முன் கண்ணீர் வடிப்பவன் உண்மையில் ரங்கன் தானா? கோட்டும் வேட்டியும் நனைய, மழையில் அலையக்குலைய எதற்காக ஓடி வந்தான்? “நான் பண்ணிய பாவத்துக்கெல்லாம் எனக்குத் தண்டனை சிற்றப்பா, தண்டனை. நீங்கள் சொன்ன வார்த்தைகளெல்லாம் மறந்து போனேன். எனக்குத் தண்டனை கிடைத்து விட்டது, சிற்றப்பா ஐயோ? எப்படி இருந்த உடம்பு, எப்படி ஆனீர்கள்! சொந்தப் பையனுக்கு மேல் என்னை நினைத்து, நீங்கள் செய்ததெல்லாம் மறந்து ஓடினேனே! எனக்கு மன்னிப்பு உண்டா சிற்றப்பா, உங்களிடம்?” ஜோகி அயர்ந்து நின்றான். பின்னே கிரிஜையும் அம்மையுங் கூடச் சிலையாக நின்றனர். லிங்கையாவின் கண்களில் நீர் வடிந்தது. “ரூபாய் இரண்டாயிரம் மண்ணாய்ப் போச்சு. முளைத்திருந்த கிழங்குகளிலெல்லாம் என் மனத்திலுள்ள கறைபோல் கறைபடிந்த நோய் விழுந்திருந்தது. உங்களுடைய நல்ல உபதேசங்களை யெல்லாம் என் நாசபுத்தி கொண்டு போனாற் போல், நல்ல கிழங்குகளை எல்லாம் எலியும் பன்றியும் தோண்டிக் கொண்டு போயின. ‘துரை போல் திரிந்தாயே படு கஷ்டம்!’ என்று தேவர் சோதனை செய்துவிட்டார் சிற்றப்பா.” ரங்கனின் அழுகை உண்மையிலே அழுகைதானா? ஜோகியினால், அவனும் அம்மாதிரி அழக்கூடும் என்று எண்ணக்கூட முடியவில்லை. தந்திரங்களில் திளைக்கும் அவன் உண்மையில் கவிழ்ந்து விட்டானா? கையிலே பத்தாயிரம் புரள்வது போல் உடுக்கவும் உல்லாசமாக நடக்கவும் தெரிந்த அவன் உண்மையிலே வீழ்ச்சி அடைந்து விட்டானா? லிங்கையாவின் உணர்ச்சி செறிந்த தொண்டையிலிருந்து, “ரங்கா!” என்ற குரல் உடைந்தது. அந்தக் கணம் ரங்கன் சிற்றப்பனின் மார்பிலே தலையைச் சாய்த்துக் கொண்டு விம்மினான். “அப்பனும் அம்மையுமாய் இருந்தீர்கள் சிற்றப்பா, ஒருநாள், இரவில் பரணில் பட்டினியுடன் படுத்திருக்கையில் அழைத்து வந்து சோறு போட்டீர்களே, புத்தி கூறினீர்களே! சிற்றப்பா, நான் என்ன சொல்வேன்? கடனாளியாக ஓடி வந்தேனே, என்னை மன்னிப்பீர்களா!” “போனால் போகிறதடா தம்பி, போனால் போகிறது. அந்தக் கிழங்குடன் உன்னைப் பிடித்த நோவெல்லாம் போகட்டும். உண்மையில் கிழங்கு போனதில் எனக்குச் சங்கடம் இல்லை. சந்தோஷம், சந்தோஷம், ரங்கா!” “சிற்றப்பா, நீங்கள் தெய்வம். ஐயோ, உங்கள் அருமை தெரியாமல் நான் இவ்வளவு நாள் இருந்தேனே!” “அன்றைக்குப் பணத்துடன் பகட்டான நீ என் முன் வந்தாய். என் மனம் கொதித்தது. நீ நேர்மையும் நியாயமுமாக நடக்கவில்லை என்று எனக்கு உன் கண்களும் பார்வையுமே தெரிவித்தன. ‘இந்தப் பையனைத் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தேனே’ என்று மனம் பொங்கி வந்தது. உன்னை அடித்தேன். இன்றைக்கு ஏழையாக நீ வந்தாலும், என் மனம் நிறைந்து சந்தோஷப்படுகிறது தம்பி, கையால் உழைத்து நேர்மையாகப் பிழைப்பதுதான் தேவர் விரும்பும் பிழைப்பு. ரங்கா, கட்டிக் கொண்ட பெண் மனம் நோகாமல் இருக்க வாழ்வது தான் வாழ்க்கை.” ஆவேசம் வந்தாற் போல் அவர் மூச்சு முட்டப் பேசினார். “படுபாவிப் பயல், நோட்டீஸைக் கொடுத்து வேறு நெருக்குகிறான். என் மானம் கோர்ட்டுப் படி ஏறுமட்டும் வந்த பின்புதான் எனக்குப் புத்தி வருகிறது. முந்நூறு ரூபாய்க் கடன் அவனுக்கு யார் கொடுப்பார்கள் சிற்றப்பா? எனக்கு யார் இருக்கிறார்கள், சிற்றப்பா? உங்களைத் தவிர யாரிடம் சொல்லி முறையிட எனக்கு முகம் இருக்கிறது?” அவன் அழுகை எல்லோரையுமே உருக்கவல்லதாக இருந்தது. “அழாதே, ரங்கா, அழாதே! ரங்கன் மனம் மாறி வருவான் என்று தான் நான் இந்த ஆறு மாசமாகப் படுக்கையில் இருந்தும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் நான் ‘வீரராய பணம்’ விழுங்கியிருந்தால் கூடப் பிழைத்திருப்பேன். இனிமேல் நான் நிம்மதியாகத் தேவருலகம் செல்வேன். காசும் பணமும் பெரிதில்லை. கையால் விதைத்து, உறவோடு, விருந்தோடு உண்டு வாழ்வதே வாழ்க்கை. ஜோகி!” “ஐயா!” என்று ஓரெட்டு முன் நகர்ந்தான் ஜோகி. “அண்ணன் வீட்டுடன் வந்துவிட்டான்; இனிமேல், ஒரு குறைவும் இல்லை. பால்மனையில் என் பை வைத்திருக்கிறேன், எடுத்து வா” என்றார். ஜோகியின் முகத்தை இருள் கவ்வியது. மாதி இடி விழுந்தவள் போல் ஆனாள்: “என்ன இது நியாயமா இதெல்லாம்?” என்றாள். ஓர் அவசரத்துக்காக, அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் அது. இருநூற்றைம்பது ரூபாய் உண்டு. அதையும் பறித்துச் செல்லவா வந்திருக்கிறான்? மாதியினால் ஒப்ப முடியவில்லை. “குறுக்கே தடுக்காதே மாதி. நல்ல காலம் வரும்போது, கொஞ்சம் செலவு இருக்கும். குறும்பர் மந்திரத்துக்குப் பயந்து கப்பம் போடுவதுபோல, இதுவும் உன் கணவன் மனம் நிம்மதியுடன் போவதை நீ விரும்பவில்லையா?” என்றார் லிங்கையா. “இப்படிப் பேசிப் பேசித்தானே என்னை அடியோடு அடக்குவீர்கள்?” கண்ணீர் தளும்ப முணுமுணுத்துக் கொண்டு உள் மனைக்கு நகர்ந்தாள். உடனே திரும்பியவள் சட்டென்று, “அவர்கள் பூமியை விற்றோ அடமானம் வைத்தோ வாங்கட்டுமே!” என்றாள். லிங்கையாவின் விழிகள் அசைவற்று நின்றன. உள்ளம் படபடத்துப் பலவீனம் முகத்தில் காட்டியது. “என்ன பேச்சுப் பேசுகிறாய்? குழந்தைகளுடன் ரங்கை சாப்பிடும் பூமியைப் பிடுங்குவதா? ஒரு சதுரம், ஆசையாக, பாரு தாயாக, பிள்ளையாக நினைக்கும் மண்ணைப் பிடுங்கலாமா? இந்தப் புத்தி உனக்கு எப்படி வந்தது?” ஜோகி பையை எடுத்து வந்தான். லிங்கையா ஒவ்வொரு பணமாக எண்ணினார். தலைப்பக்கம் வைத்துவிட்டு, “ரங்கா, இன்று இரு இங்கே; நாளைக்குப் போகலாம் நீ” என்றார். இரவு, “மாதி, என் வட்டிலை எடுத்து வை. என் பையன்களுடன் நான் இன்று உட்கார்ந்து உண்ணப் போகிறேன்” என்றார் அவர். மாதியின் மனத்தில் இன்னதென்று விவரிக்க இயலாத பீதி உண்டாயிற்று; “வேண்டாமே?” என்றாள். கிரிஜையை அழைத்து பாருவை அழைத்து வரப் பணித்தார். “மகனே இங்கு வா, மகன் வீட்டோடு வந்து விட்டான். இனி உனக்கு ஒரு குறையும் இல்லை” என்று ஆசி மொழிந்தார். பாரு அவர் கண்களில் தெரிந்த அசாதாரண ஒளியைக் கண்டு கலங்கி நின்றாள். அந்த நாடகக் காட்சியில், அவரே உயிர்ப் பாத்திரமாக அன்றிரவு பேசினார். மறுநாள் காலையில், ரங்கன் பணத்தை எண்ணிப் பெற்றுக் கொண்டான். “பணத்தை விட்டெறிந்து விட்டு வந்து விடுகிறேன், சிற்றப்பா. நான் கோர்ட்டு ஏறாமல் காப்பாற்றிய தெய்வம் நீங்கள்” என்று விடைபெற நின்றான். சிற்றப்பனின் கண்கள் ஒளிர்ந்தன; இருதயம் மலர்ந்திருந்தது. ஆசி கூறி அனுப்பினார். வானம் கனத்து, மழையுமின்றி வெயிலுமின்றிச் சோகத்திரை விரித்திருந்தது. மாதியும் கிரிஜையும் ஜோகியும் ரங்கன் செல்வதை வாயிலில் நின்று பார்த்தார்கள். எட்ட எட்ட விலகி, வெள்ளைப் புள்ளியாகப் பாதையில் சென்று, சரிவில் இறங்குகையில், பள்ளத்திலே வடக்கிலிருந்து வந்த மேகப் புகை குவிந்தது, அவனை விழுங்கியது. ஏதோ கலி புருஷன் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு செல்வதைப் போன்ற உணர்வுடன், அவர்கள் திரும்பினார்கள். ஜோகி, தந்தை கண்ணயர்வதைக் கண்டவனாக, சாக்கைப் போட்டுக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் விளைநிலத்தை நோக்கிக் கிளம்பினான். கிரிஜையும் மாதியும் வீட்டுப் பின்புறம் இருந்தனர். சற்றைக்கெல்லாம், “மாதி?” என்ற ஈனசுரம் வந்தாற் போல் மாதிக்குக் கேட்டது. பரபரப்புடன் அவள் நனைத்த துணியைப் போட்டு விட்டு வருமுன், அந்த மூச்சு நின்று விட்டது. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|