உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) என்னுரை பிற்காலச் சோழர் வரலாற்றில், ஒரு திருப்புமுனையாயமைந்தது, குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன் வேங்கி இளவரசனாயிருந்த இராசேந்திரன் அரசுகட்டில் ஏறியது! இந்த அரசகுமாரன் தந்தை வழியில் கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவன்; தாய் வழியில் கங்கைகொண்ட சோழன் மகளான அம்மங்கை தேவியின் வயிற்றில் பிறந்தவன். இளமையில் இவன் சோழநாட்டிலேயே வளர்ந்து, தமிழையே தாய்மொழியாகப் பயின்று, தமிழ் மக்களின் வழக்க ஒழுக்கங்களை மேற்கொண்டமையால், இவன் தன்னைச் சோழ அரசகுமாரனாகவே கருதிவிட்டான். அது இவன் உள்ளத்தில் பலமாய் வேரூன்றியும்விட்டது. இவன் மாமன் வீரராசேந்திரன் இறந்த பிறகு அவரின் மகனான அதிராசேந்திரன், பரகேசரி என்ற பட்டப்பெயருடன் சோழ அரியணையேறினான். அவனுக்குப் புத்திரப்பேறு இல்லாததால், திடீரென நாட்டில் ஏற்பட்ட கலகத்தில் கொல்லப்பட்டான். அதன் பின் சோழப் பேரரசுக்கு அரசகுமாரர்கள் இல்லாததால், தாய் வழியிற் சோழ மரபைச் சேர்ந்தவனான இவன் இராசகேசரி என்ற பட்டத்துடன், குலோத்துங்கன் என்ற சிறப்புப் பெயரோடு சோழ அரசுகட்டிலில் அமர்ந்தான். மேற்கூறிய நிகழ்ச்சிகளையே இந்நாவல் கூறுகின்றது. பிற்காலச் சோழ வரலாற்றுக்குத் திருப்புமுனையாய் அமையக் காரணமாயிருந்தது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். அது அதிராசேந்திரன் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகமே! இந்தக் கலகம் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சோழர் படையில் வலங்கை இடங்கை என்ற பிரிவு ஏற்பட்டமையே! வலங்கை என்பது சோழர் படையின் நிலையான படைப்பிரிவு. இடங்கை என்பது வணிகர்களின் படைப் பிரிவு - இதில் வணிகம் செய்வோர், தச்சர், கருமார் போன்ற தொழிலாளர்கள் இருந்தனர். (தென்னிந்திய கோயிற் சாசனங்கள், இரண்டாம் வால்யூம், என்னுரை, பக்கம் 9). இந்த இரு வகுப்பாரும் ஒற்றுமையாயிருந்தனர். காலப் போக்கில் அவர்களிடையே கருத்து வேற்றுமை தோன்றி அதுவே விரோதமாய் மாறிவிட்டது. இந்த இருவகைப் பிரிவினரைப் பற்றி நன்கு ஆராய்ந்ததில், இடங்கைப் பிரிவினர் கச்யப முனிவரின் யாகத்தை ஸம்ரஷிப்பதற்காக அக்னி குண்டத்தில் தோன்றியவர்களென்றும், அரிந்தம சக்கரவர்த்தியின் காலத்தில் சோழ நாட்டிற்கு அந்தர் வேதி பூமியிலிருந்து (கங்கை யமுனைப் பிரதேசம்) வந்தவர்களென்றும் தெரிகிறது. இவர்களுக்கு ஐந்து கிராமங்களில் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து கிராமம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. (சாசன இலாகா 1913ஆம் ஆண்டு அறிக்கை பாரா 39). வலங்கைப் பிரிவென்பது சோழ மாமன்னனான முதலாம் இராஜராஜனுடைய காலத்திலிருந்து தோன்றியது. வலங்கைப் பழம்படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பழம்படைகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைக்காரப் படைகள், இராஜராஜத் தெரிந்த வலங்கை வேளைக்காரர் என்பன இவர்களின் பிரிவுகள்-அத்துடன் இவர்கள் அரச சேவைக்கு நிரந்தரமாகவும், எந்தச் சமயத்திலும் சேவைக்குத் தயாராகவும் இருந்தனர். இவர்களிடையே மூண்ட கலகத்தினால், சோழச் சக்கரவர்த்தி கொல்லப்பட்டார் என்று மேலைச்சாளுக்கிய வேந்தன் ஆறாம் விக்கிரமாதித்தனின் வரலாற்றை (விக்கிரமாங்க தேவ சரிதம் என்னும் பெயரில்) எழுதிய வடமொழிப் புலவரான பில்ஹணர் கூறுகின்றார். இந்தக் கருத்தை மறுத்துக் கூறுகிறார் பிற்காலச் சோழர் வரலாறு எழுதிய திரு. சதாசிவப் பண்டாரத்தார். நான் பில்ஹணர் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலை இயற்றியிருக்கின்றேன். அதிராசேந்திரன் இறந்த பிறகு, பூசநாளிற் பிறந்தவனான வேங்கி இளவரசனாயிருந்த இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற சிறப்புப் பெயரோடு அரசு கட்டிலில் ஏறினான் என்ற உண்மையையே, இந்நாவலின் மையக்கருத்தாய் அமைத்திருக்கின்றேன். உண்மைப் பாத்திரங்களுடன், கற்பனைப் பாத்திரங்களையும் உலவவிட்டு என்னுடைய பணியைச் சிறப்பாகவே செய்திருக்கின்றேன். பாத்திரங்களை அந்தந்தச் சூழ்நிலையில் விட்டுவிட்டுக் கதையை முடிக்கும் உத்தியை நான் இதில் கையாண்டு இருக்கின்றேன். இந்நாவல் உருவாக எனக்குப் பல சரித்திர சான்றுகள் கிடைக்க, கீழே குறிப்பிட்ட நூல்கள் பேருதவியாயிருந்தன. 1. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். 2. பாண்டியர் வரலாறு - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். 3. மதுரைமூதூர் - பண்டித சு.வே. நடராசன் எம்.ஏ., பி.ஓ.எல்., 4. கொங்கு நாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கிடசாமி 5. கலிங்கத்துப்பரணி 6. வரலாற்றுப்போக்கில் பழையறை மாநகர் - வே. மகாதேவன் வி.கி. 7. விக்கிரம சோழனுலா 8. தென்னிந்திய தமிழ்ச் சாசனங்கள் - வித்துவான் வ. தங்கைய நாடார் 9. Gangaikonda Cholapuram - R.Nagaswamy 10. Medieval paNdiyas (AD 1000-1200) -N. Sethuraman இந்நூல்களை உருவக்கிய ஆசிரியர்களின் பணி மிகச் சிறப்பு வாய்ந்தது. அத்தகையவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. இதை வெளியிட முன்வந்த முருகன் பதிப்பகத்தினருக்கும் அச்சிட்ட ஸாதனா ஆர்ட் பிரிண்டர்ஸ்க்கும், மற்றும் புத்தகத்தை உருவாக்கிய அனைத்துத் தொழிலாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படிக்கு, கௌரிராஜன் சென்னை 07.12.1984. அரசு அதிகாரிகள் திருமந்திர ஓலை: அரசனின் வாய்மொழி உத்தரவுகளை ஓலையில் எழுதும் அதிகாரி. திருமந்திர ஓலைநாயகம்: எழுதப்பட்ட உத்தரவைப் படித்துப் பார்த்து மேற்பார்வை செய்து அதில் கையப்பம் இடும் அதிகாரி. இன்னின்ன காலத்தில் இன்னின்ன கருமங்கள் நிகழ்த்தல் வேண்டும் என்ற நிகழ்ச்சிக் குறிப்பினை அரசருக்கு நினைவூட்டி அவற்றைத் தவறாமல் நிறைவேற்றி வைப்பவன் இவனே! விடையில் அதிகாரி: அரசனுடைய திருமுகங்களை உரியவர்களுக்குப் பணிமக்கள் மூலம் சேர்ப்பித்தலும், விடையளித்தலும் ஆகிய கடமைகளைச் செய்பவன். நாடு காவல் அதிகாரி: உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் அதிகாரி. சில முக்கியக் குறிப்புகள் சோழர் ஆட்சியில் அமைச்சர் குழுவும், முதன்மந்திரியும் இருந்து சக்கரவர்த்திக்கு ஆலோசனை கூறி வந்துள்ளார்கள். கி.பி.1603-1070-ல் வரை ஆட்சி புரிந்த வீரராசேந்திர சோழன், திருவரங்கத்திற்குக் கிழக்கே பத்துமைல் தூரத்தில் உள்ள கோயிலடிக்கு அருகில் காவிரியாற்றில் கல்லணை அமைத்துள்ளான். அதிகாரிகளுக்குத் திங்கள்தோறும் ஊதியம் கொடுக்கப்படவில்லை. அவர்களின் சேவைக்காகச் சீவிதமாக (வாழ் நாள் வரை) நிலங்கள் வழங்கப் பெற்றன. வீரசோழியம் என்ற இலக்கண நூல் வீரராசேந்திர சோழன் காலத்தில் இயற்றப்பட்டது. சோழ மன்னர்கள் தம் மூத்த புதல்வருக்கே அரசுரிமை வழங்கியுள்ளனர். அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே அரசுப் பேற்றுக்குரிய முதல் மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசியல் முறைகளில் பயிற்சியும் தந்து வந்தனர். இந்நாவல் நடைபெறும் காலத்திற்கு முன்பிருந்த சோழப் பேரரசின் நிலை தமிழகத்தின் கீழ்ப்பகுதியாகிய சோழ மண்டலத்தை தொன்று தொட்டு ஆட்சி புரிந்து வந்த மரபினரே சோழர் எனப்பட்டனர். மகத நாட்டில் செங்கோல் செலுத்திய அசோகரின் கல்வெட்டுக்களில் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. மதுரை மாநகரிலிருந்த கடைச்சங்கத்திற்குப் பிறகு (கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதி) ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தஞ்சை மாநகரைக் கைப்பற்றியாண்ட விசயாலய சோழன் வரை, இவர்களைப் பற்றிய தெளிவான வரலாறு இல்லை. கி.பி. நான்கு, ஐந்து நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் களப்பிரர் என்ற வகுப்பாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சோழருக்குரிய பகுதியைக் களப்பிரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாய் சோழர்கள் இருந்தனர். கி.பி.846-ல், பழையாறையிலிருந்த விசயாலய சோழன், பல்லவருக்கு அடங்கி தஞ்சையை ஆண்டு வந்த முத்தரையரிடமிருந்து அதைக் கைப்பற்றிச் சோழச் பேரரசுக்கு அடிகோலினான். அவன் மகனான முதல் ஆதித்த சோழன் கி.பி.891-ல் அபராஜிதவர்மனை வென்று தொண்டை மண்டலம் முழுமையும் சோழ அரசுக்கு உட்படுத்தினான். அத்துடன் நில்லாது, கொங்கு மண்டலத்தின் மீது படையெடுத்துச் சென்று அதனையும் வென்று, அங்கிருந்து கிடைத்த பொன்னால், திருச்சிற்றம்பல முகட்டை வேய்ந்தான் என தெரிகிறது. காவிரியின் இருமருங்கிலும் பல சிவாலயங்களைக் கற்றளியாக எடுத்தவனும் இம்மன்னனேயாவன்! அவனுக்குப் பிறகு அவன் மகனாகிய முதற்பராந்தக சோழன், கி.பி.919-ல் பாண்டிய நாட்டை ஆண்ட இராசசிம்மனை வென்று, மதுரை நகரைக் கைப்பற்றினான். தோல்வியடைந்த பாண்டியன் முன்னோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த சுந்தர முடியையும், பிற அரசச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு ஈழம் சென்றுவிட்டான். முதற் பராந்தகன் மதுரையில் முடிசூட்டுவிழா நடத்துவதற்கு முயன்ற போது பாண்டியருக்குரிய முடியும், பிற அரசச் சின்னங்களும் இல்லாததைக் கண்டு, ஈழத்திலிருந்த அப்பொருட்களைத் தரும்படி, ஈழ வேந்தனுக்குத் தூது அனுப்பினான். அதற்குள் பாண்டியன் தன் தாய் வானவன் மாதேவி பிறந்த சேரநாட்டிற்கு வந்துவிட்டான். அச்சமயம் இலங்கையை ஆண்டு வந்த நான்காம் உதயன் என்பவன் தூதர்களிடம் அச்சின்னங்களைத் தர மறுத்துவிட்டான். அதனால் கோபமுற்ற பராந்தகன் ஈழத்தைத் தாக்கி, பாண்டியனுடைய முடியையும், பிற அரசச் சின்னங்களையும் கொண்டு வருவதற்குப் பெரும்படையை அனுப்பினான். போரில் சோழர் படை வெற்றி பெற்றாலும், முடியைக் கைப்பற்ற முடியாமல் வெறுங்கையோடு தமிழகம் திரும்பிவிட்டது. கி.பி.949 ஆம் ஆண்டில் இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன், கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகனோடு சேர்ந்து கொண்டு, சோழரை அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே ஆறு கல் தொலைவிலுள்ள தக்கோலம் என்னுமிடத்தில் எதிர்த்தான். இரு தரப்புப் படைகளும் ஆக்ரோஷத்துடன் போரிட்டன. இறுதியில் பூதுகன் விடுத்த அம்பினால், யானை மேலிருந்து போர் புரிந்தபடியிருந்த பராந்தகன் மகனாகிய இராசாதித்தன் உயிர் துறத்தான். அந்நிகழ்ச்சியால் நிலைகுலைந்த சோழர் படை நான்கு பக்கமும் சிதறி ஓட, அதைப் பயன்படுத்தி மூன்றாம் கிருஷ்ணன் வெற்றியடைந்தான். இது சோழர்களுக்குக் கிடைத்த வீழ்ச்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை. பராந்தகனின் இரண்டாம் புதல்வனாகிய கண்டராதித்த சோழன் சோழ அரசின் பொறுப்பை ஏற்ற போது, தொண்டை நாடும், திருமுனைப்பாடி நாடும் இராஷ்டிரகூட மன்னன் வசமிருந்தது. இதுவரை சோழர்க்கு அடங்கியிருந்த பாண்டியனும் சுயேச்சை எய்தி, பாண்டிய நாட்டை ஆளத் தொடங்கினான். சிவபக்தியும், தமிழ்ப் புலமையும் எய்திய இவன், இறைவன் மீது பல பதிகங்கள் பாடியிருக்கின்றான். அவை அழிந்து, ‘கோயிற் பதிகம்’ ஒன்றே இந்நாளில் நமக்குக் கிடைக்கின்றது. இவ்வேந்தனுக்குப் பின், இவனின் தம்பியாகிய அரிஞ்சயன் முடிசூட்டப்பெற்றான். பட்டம் ஏற்றவுடனேயே இராஷ்டிரகூட மன்னன் வசமிருக்கும் தொண்டை நாட்டையும், திருமுனைப்பாடி நாட்டையும் மீட்க முயன்றான். அம்முயற்சி வெற்றி பெறாமல், போரில் இவன் இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரிஞ்சயனுக்குப் பின், அவன் மகனான இரண்டாம் பராந்தகன் அரியணையேறினான். பேரழகுடன் இருந்தமையால், சுந்தரசோழன் என்ற மற்றொரு பெயரும் இவனுக்கு உண்டு. இவ்வேந்தன் காலத்தில்தான் மதுரை நாடும், சோழ நாட்டின் வடபகுதியாயிருந்த தொண்டை நாடும், திருமுனைப்பாடி நாடும் சோழ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இம்மன்னனது ஆட்சியின் இறுதிக் காலத்தில், இவன் முதல் மகானான ஆதித்த கரிகாலனை இராசத் துரோகிகள் கொலை செய்துவிட்டனர். அக்கொடுஞ் செயலினால் மனமுடைந்த இவ்வேந்தன் கொலை நடந்த இரண்டொரு திங்களில் இறக்கும்படியாகிவிட்டது. முதல் கண்டராதித்த சோழனுடைய புதல்வனான உத்தம சோழனுடைய புதல்வனான உத்தம சோழன் சிறு குழந்தையாயிருந்ததால், அவன் தம்பி அரிஞ்சயனும் அவனுக்குப் பின் அவன் மகனான சுந்தரசோழனும் ஆட்சி புரிந்து வந்தனர். மக்கள் சுந்தரசோழன் மகனான இராசராச சோழன் ஆட்சி பீடம் ஏற வேண்டுமென்று விரும்பினர். ஆனால் இராசராசன் தன் பெரிய பாட்டன் புதல்வனும், தனக்குச் சிறிய தந்தையும் ஆகிய உத்தம சோழனது விருப்பத்தை மதித்து, ஆட்சியுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டான். உத்தம சோழனுக்குக்குப் பிறகு, இராசராசனே சோழ பேரரசின் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். ஆதித்தனைக் கொலை செய்துவிட்ட துரோகிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனையும் தந்தான். தம் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை, இனிய தமிழ்மொழியில் அகவற்பாவில் அமைத்த பெருவேந்தன் இவனேயாவன். திக்விசயம் செய்து பல நாடுகளை வென்று சோழநாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு பெருகி நின்றது. ஈழநாட்டையும் வென்று அதைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். சோழ அரசு முழுமையும் அளந்தது, இவன் ஆட்சியில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். அக்காரணம் பற்றியே இவனுக்கு ‘உலகளந்தான்’ என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அத்துடன் சோழ அரசிலுள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகப் பிரித்து, எங்கும் ஆட்சி அமைதியாய் நடக்கும்படி செய்தான். இராசராச சோழனுக்குப் பிறகு, இராசேந்திர சோழன் சோழச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். இவ்வேந்தன் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய நகரை உருவாக்கி, அதில் தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்று ஒரு கோவிலைக் கட்டினான். வடபுலத்தில் வெற்றியும் கண்ட இவன் தோற்ற மன்னர்களின் தலைகளில் கங்கை நீரைக் கொண்டு வந்து நகரைத் தூய்மையாக்கினான். இம்மன்னர் பெருமானுக்குப் பிறகு முதல் இராசாதிராச சோழனும், அவனுக்குப் பின் அவன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திர சோழனும் அதற்குப் பின் கங்கைகொண்ட சோழனுடைய புதல்வனாகிய வீரராசேந்திர சோழனும் சோழப் பேரரசை ஆண்டனர். இவர்கள் காலத்தில்தான் மேலைச் சாளுக்கியருக்கும், சோழருக்கும் தீராத பகையாயிருந்தது. அதை நீக்க வேண்டி, வீரராசேந்திர சோழன் தன் மகளான இராஜசுந்தரியை, மேலைச்சாளுக்கிய வேந்தனான விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்வித்தான். வீரராசேந்திர சோழன் மகனான அதிராசேந்திர சோழன் ஆட்சிபீடம் ஏறியதும், சோழநாட்டில் பெருங்கலகம் தோன்றியது. அதன் விளைவாய் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான். அவனுக்குச் சந்ததியில்லாததால், தந்தை வழியில் கீழைச் சாளுக்கிய மரபையும், தாய் வழியில் சோழர் மரபையும் சேர்ந்திருந்த இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற பட்டப் பெயரோடு சோழ அரியணை ஏறினான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|