உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 35 மதுரைக் கோட்டையில் இராசேந்திரனைக் கடார இளவரசியால் ஆபத்து வருகின்றதென்று எச்சரித்த அம்மையப்பன், தூமகேதுவைப் பின் தொடர்ந்தால் அதன் மூலம் பாண்டிய மன்னன் ஒளிந்திருக்கும் இடத்தை அடைந்துவிடலாம் என்று திட்டமிட்டு அவனிருக்கும் இடத்தை எப்படி அறிவது என்ற சிந்தனையுடனே கொற்கையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான். உயர் சாதிக் குதிரையில் சைவத்துறவி ஒருவர் போவதை வழியிலிருக்கும் மக்கள் சற்று வித்தியாசமாகக் கவனிக்க, அம்மையப்பன் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது குதிரையில் வேகமாய்ப் பயணம் செய்யலானான். இந்தக் கோலத்தில் இவ்விதம் அனைவரின் கவனத்தைக் கவருவதில் தனக்கு ஆபத்து இருக்கின்றது என்பதை உணர்ந்தேயிருந்த இவன், அவ்விதமாவது தூமகேதுவின் கவனம் தன் மீது விழாதா என்ற நப்பாசையுடன் அசுவத்தை நடத்திக் கொண்டிருந்தான். பகற்போது நெருங்கிவிட்டது; களைப்பாறிச் செல்லலாம் என்று குதிரையை நிறுத்தினான். சுற்று முற்றும் பார்க்க அந்த இடம் மிகச் சிறிய ஊராக இருந்ததால், இதில் எப்படித் தங்குவது என்ற ஐயத்துடனே எதிரில் வந்த ஒருவனிடம், “ஐயா, தங்குவதற்கு இவ்விடத்தில் எங்கேயாவது சத்திரம் இருக்கின்றதா?” என்று வினவினான். அம்மையப்பனை அவன் ஏற இறங்கப் பார்த்தான்! அப்பார்வையில்... துறவிகூட குதிரை ஒன்று வைத்திருக்கின்றாரே என்ற ஏளனம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இவ்விடத்தில் அப்படி ஒன்றும் இல்லை; இதைத் தாண்டினால் போகும் வழியிலேயே ஒரு சத்திரம் இருக்கிறது” என்று அதற்குரிய வழியையும் விளக்கினான். “நன்றி!” என்று வழி கூறியவருக்கு வணக்கம் வைத்துவிட்டுப் புரவியை வேகமாய்ச் செலுத்தினான். ஊரைக் கடந்ததும் பெரிய மரங்கள் வான் முட்டும் அளவிற்கு வளர்ந்து இருந்தன. அதற்கிடையே பழைய மாளிகை ஒன்று தென்பட்டது. அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த அவன், குதிரையை அங்கே செலுத்தினான். முகத்தில் சிரிப்பும் மெலிந்த தேகத்தோடு ஒருவன் அம்மையப்பனை வரவேற்க வெளியே வந்தான். “ஒரு துறவி புரவியில் வந்து..!” -அவனையுமறியாமல் பாட்டாக வாயிலிருந்து வெளிப்பட்டது. “ஆகா! என்ன அற்புதம்! சூரியன் உதித்த நேரத்திலிருந்து யாரும் வரவில்லையே என்று காத்திருந்தேன். தாங்கள் வந்துவிட்டீர்கள். உயர் சாதிப் புரவியில், முகத்தில் சிவச் சின்னம் துலங்க, சாட்சாத் அந்த ஈசுவரனே இங்கே வந்துவிட்டது போன்று இருக்கின்றது” என்று கூறியபடியே “ஒரு துறவி புரவியில் வந்து..” என்று மீண்டும் பாடத் துவங்கினான். “அப்பனே, தாங்கள் கவிதை பாடும் நபரோ?” என்றான் அம்மையப்பன். “கவிதை பாடும் நபர் என்று அஃறிணைப் பொருள் போல் என்னை அழைக்காதீர். கவிஞர் என்று அழுத்தமாய் மரியாதையுடன் கேளுங்கள். ஏனென்றால் எங்கள் குடும்பம் பாரம்பரியம் கொண்டது. என் முன்னோருக்கு முன்னோர் ஒட்டக்கூத்தர் பரம்பரையில் வந்தவர்கள்” என்றான். “ஓஹோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டது கவிஞரே!” என்று கேலியுடன் சொன்ன அவன் “சற்று முன்பு என்னைப் பற்றி ஒரு வரி பாடினீர்களே! அதை முழுமையாகப் பாடுங்களேன்!” என்றான். “பாடுவதற்குள்தான் நீங்கள் குறுக்கிட்டு என் ஆர்வத்தைக் கெடுத்துவிட்டீர்களே! இல்லையென்றால் சாகா வரம் பெற்ற ஒரு கவிதையை இயற்றியிருப்பேன்” என்றான் சத்திரத் தலைவன். “இயற்றியிருப்பீர். நிச்சயம் உங்களைப் பார்த்தால் அம்மாதிரிதான் தெரிகிறது” என்ற அம்மையப்பன், “கவிஞரே, என் புரவி நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் ‘கொள்’ வையுங்கள்; நானும் கொஞ்சம் ஓய்வெடுக்கின்றேன். எல்லாவற்றுக்கும் அச்சாரமாக இந்தாருங்கள்” என்று பொற்காசு ஒன்றைத் தந்தான். சத்திரத் தலைவன் அதை வாங்கிக் கொண்டு, “நான் எப்படியெல்லாமோ இருக்க வேண்டியவன். என் தலையெழுத்து, இங்கே யாத்திரிகர்கள் தங்கும் விடுதியை நடத்திக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறினான். மீண்டும், “ஒரு துறவி புரவியில் வந்து... வந்து... வந்து” என அதற்கு மேல் அவனுக்கு வரிகள் கிடைக்காததால், அம்மையப்பனின் குதிரையைப் பின் பக்கத்திலிருந்த இலாயத்திற்கு அழைத்துச் சென்றான். அதற்குப் பிறகு. அம்மையப்பனுக்கு உணவு படைக்கப்பட்டது. அதைச் சாப்பிட்டதும் பயணம் செய்த களைப்பு கண்களில் பரவவே, சத்திரத்தில் நடுக்கூடத்தையொட்டி இருந்த சிறிய அறையில் உள்ள பஞ்சணையில் சாய்ந்தான். அடுத்த சில நொடிகளில் நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள். அதன் அறிகுறியாக அவனிடமிருந்து குறட்டைச் சபதம் வெளிப்பட்டது. அதே சமயம் இரு புரவிகளில் தென்னனும், தூமகேதுவும் அங்கே வந்தனர். “பரவாயில்லையே. இன்று நான் நரி முகத்தில்தான் விழித்திருக்கின்றேன்!” என்று உற்சாகத்துடனே சத்திரத்தலைவன், “வாருங்கள்! வாருங்கள்!” என்று அவர்களை வரவேற்றான். “ஒரு துறவி புரவியில் வந்து... வந்து...” என்று அடுத்த வரிக்காக அந்தத் தொடரைத் திரும்பத் திரும்பப் பாடினான். அப்போது... “என்னய்யா இது? ஒரு பைத்தியத்திடம் வந்து மாட்டிக்கொண்டோமே!” என்று தூமகேதுவின் காதில் தென்னன் மெல்லிய குரலில் கூற. “அது கவி பாடும் பைத்தியம்” என்று இரகசியமாய்ச் சொன்னவன், “நீ நினைப்பது போல் வேறு ஒன்றுமில்லை. நான் ஏற்கனவே ஒருமுறை இங்கே வந்து தங்கியிருக்கின்றேன்” என்று அவனுக்குச் சமாதானம் கூறிச் சத்திரத் தலைவன் பக்கம் திரும்பி, “தாங்கள் அதிக உற்சாகத்தில் இருப்பதாக அல்லவா எனக்குத் தெரிகிறது” என்றான் தூமகேது. “ஆமாம்! உற்சாகத்தில்தான் இருக்கின்றேன்! ‘ஒரு துறவி புரவியில் வந்து...’ என்று நான் பொய்யாகப் பாடவில்லை. சற்று முன்பு ஒரு சிவபக்தர் புரவியில் இங்கே வந்தார். அந்த அதிசயத்தைத்தான் நான் கவியாக இயற்றிப் பாடலாம் என்று முயற்சிக்கின்றேன்” என்றான் சத்திரத் தலைவன். தூமகேதுவுக்கு வியப்பினால் விழிகள் விரிந்தன. நெற்றியைச் சுருக்கித் தென்னனைப் பார்க்க, அவனும் புரியாமல், “முற்றும் துறந்த ஒரு முனிவர் குதிரையில் வந்தாரா?” என்றான் வியப்புடனே. “ஆமாம்; வேண்டுமென்றால் உள்ளே போய்ப் பாருங்கள். அவர் நன்கு குறட்டைவிட்டுக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றார்!” என்றான். அதைக் கேட்டு இருவரும் உள்ளே சென்றனர். பெருங்குறட்டை ஒலியுடன் அம்மையப்பன் உறங்கிக் கொண்டிருந்தான். “இவன்...?” என்று வியப்புடன் உரக்கக் கூறிய தென்னனைத் தூமகேது அடக்கி, “எனக்கும் தெரியும்!” என்றான். இருவரும் அங்கிருந்து அகன்று சிந்தனை வயப்பட்டனர். பின்னால் வந்த சத்திரக்காரன் அதைக் கவனித்து “என்ன யோசனை? இந்தத் துறவியைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்றான் உரத்த குரலில். உதட்டில் விரலை வைத்து மெதுவாய்ப் பேசும்படிச் சைகை செய்த தூமகேது அவனை அருகில் அழைத்து “நாங்கள் இங்கே வந்திருப்பது இவனுக்குத் தெரியக் கூடாது!” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான். ‘இதில் ஏதோ விஷயம் இருக்கிறது!’ என்று மட்டும் தெரிந்து கொண்டான் சத்திரத்தலைவன். அச்சத்துடனே, “துறவி... புரவி” என்று உளறத் தொடங்கினான். “பயப்படாதே! சத்திரத்தில் வைத்து ஒன்றும் நடக்காது!” என்று முதுகில் தட்டிக் கொடுத்தான் தென்னன். “ஆமாம்! அதுதான் நல்லது. உங்களுக்குள் இருக்கும் சண்டையை வேறெங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்றான் சத்திரக்காரன் சிரித்துக் கொண்டே. “எங்களுக்குத் தங்குவதற்கு மட்டும் அறை கொடுங்கள்” என்று தூமகேது அவனை வேண்ட... “தருகின்றேன். மேல் தளத்தில் ஒரு அறை இருக்கிறது. அங்கே தங்குங்கள்” என்று இருவரையும் மரப்படிகளில் அழைத்துக் கொண்டு சென்றான். மூவரும் ‘தட் தட்’ என்று மேல்தளத்தில் நடமாடுவதால் ஏற்பட்ட சப்தத்தைக் கேட்டு உறக்கத்திலிருந்த அம்மையப்பன் கண்விழித்தான். முகத்தைச் சொறிந்து கொண்டு எழுந்து உட்காரும் சமயத்தில் அவன் செவிகளில் பேசுங்குரல் விழுந்தது. “என்னது இது புதிய குரல்?” என்று எழுந்து கூடத்தை கடந்து மரப்படிகளில் காலை வைத்து சப்தமின்றி மேலே ஏறினான். “துறவிக்கு இன்று இறுதி நாள். அதுதான் நம் கண்ணில் சிக்கிவிட்டான்” என்று தென்னன் கூறவும், பதிலுக்குத் தூமகேதுவும் “ஆமாம்!” என்றான். மேற்கூறிய உரையாடல் அம்மையப்பன் செவிகளில் தெளிவாக விழுந்தது. துறவிக்கு இறுதி நாள். அப்படியென்றால் துறவி யார்? தனக்குள்ளே வினவிய அம்மையப்பனுக்கு தன்னுடைய துறவிக் கோலம்தான் நினைவுக்கு வந்தது. சந்தேகமில்லாமல் தன்னைத்தான் இவர்கள் குறிப்பிட்டு பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்து குரலும் கேட்டது போன்று இருக்கவே, ‘யாராக இருக்கலாம் அவர்கள்?’ என்பதை அறிவதற்காக சப்தமில்லாமல் மரப்படிகளில் ஏற முயன்றான். அதே சமயம்... “அறை வசதிதானே? நான் வரட்டுமா?” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சத்திரக்காரன் இறங்குவதற்காகப் படிகளின் அருகில் வந்தான். கீழிருந்தபடி அவன் கால்களைக் கவனித்துவிட்ட அம்மையப்பன், மிக வேகமாய்ப் படியிறங்கித் தன்னுடைய அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டான். வேகமாய் அவன் கீழிறங்கியதால் ஏற்பட்ட சப்தம் சத்திரக்காரன் செவியில் விழுந்தது. அது என்ன சப்தம் என்று கீழே வந்தபடி சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லாததனால் அம்மையப்பன் தூங்கும் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தான். குறட்டை ஒலி செவியைத் துளைத்தது. அப்படியென்றால் யாரோ படிகளில் இறங்கியது போல் தெரிந்ததே! அது யார்? என்று கேள்வியை எழுப்பிய சத்திரக்காரன். ‘இது என்ன... இன்று நரிமுகத்தில் விழித்தேன் என்று சந்தோஷப்பட்டேன். இப்போது பரிமுகத்தில் விழித்தது போன்றல்லவா ஆகிவிட்டது. மேலே தங்கியிருக்கும் இருவரும் நல்லகுணம் இல்லாதவர்கள் போல் தெரிகிறது. அவர்களை முதலில் இங்கிருந்து கிளப்பிவிட வேண்டும்’ என்று ஓடியது யாராயிருக்கலாம் என்று சத்திரம் முழுவதும் தேடினான். யாரும் தென்படவில்லை. அதனால் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியபடி தரையில் உட்கார்ந்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்தது போன்று எழுந்து உட்கார்ந்த அம்மையப்பன், நீண்ட கொட்டாவி ஒன்றைவிட்டு, “என்ன சத்திரக்காரரே! தலையில் கை வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டீர்?” என்று அவன் சமீபமாய் வந்து “கவிதையை முடித்துவிட்டீரா?” என்று வினவினான். “கவிதையாவது! மண்ணாவது... இப்போதிருக்கும் நிலையில் என் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளலாம் போலிருக்கு!” என்று அருகில் வந்து, “இங்கிருந்து நீங்கள் சீக்கிரம் போய்விடுங்கள்! மேலே...” என்று அதற்கு மேல் வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டு, ‘உனக்கு அபாயம் இருக்கிறது!’ என்பதை சாடை மூலம் தெரிவித்தான். “என்ன மேலே...” என்று புரியாமல் அம்மையப்பன் வினவிய அதே சமயம், மரப்படிகளில் அந்த இருவரும் இறங்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். தூமகேதுவும், தென்னனும் இடுப்பில் கையூன்றியவாறு அட்டகாசமாய்ச் சிரித்தபடி அம்மையப்பனை நோக்கி வந்தார்கள். ‘ஓ! இந்தச் சூரர்கள்தானா? இவர்களைத் தேடி நான் போக, என்னத் தேடி இவர்களே இங்கு வந்துவிட்டார்கள். நல்லவேளை!’ என்று மகிழ்ச்சியுற்ற அச்சிவ பக்தன் இருவரையும் யாரென்று அடையாளம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமலே, “வணக்கம்!” என்று கரங் குவித்தான். பதிலுக்குத் தலையை மட்டும் சாய்த்து வணக்கத்தை அலட்சியத்துடன் வெளிப்படுத்திய தூமகேது, தென்னன் பக்கம் திரும்பி, “இந்தச் சிவபக்தன் தம்மை ஈசுவரன் என்று நினைத்து வணங்கினாரா?” என்று கேலியுடன் கேட்டான். “ஆமாம்! ஆமாம்! நம்மைப் பார்த்தால் சிவன் போல்தான் தெரிகிறது!” என்றான் தென்னன். அம்மையப்பன் விடவில்லை. “இந்தப் பூவுலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் ஈசனின் அம்சத்தைச் சேர்ந்ததுதான்” என்றான் அழுத்தமாக. “இதென்ன கதை வேறு மாதிரி போகிறது!” என்று மூவரையும் பார்த்து மெல்ல சிரித்த சத்திரக்காரன் “நீங்கள் மேலேயிருந்து ஏன் கீழே வரவேண்டும்?” என்றான். தூமகேது அந்தச் சத்திர மாளிகையே இடிந்து வீழ்வது போல் உரக்கச் சிரித்தான். சத்திரக்காரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இவன் மனிதன்தானா? இப்படிச் சிரிக்கின்றானே?’ என்று “மெள்ள... மெள்ள” என்றான். “சத்திரக்காரரே எனக்கு உரக்கச் சிரித்துத்தான் பழக்கம். மெள்ள... மெள்ள என்று நீங்கள் சொல்லும் வார்த்தை இங்கே எடுபடாது” என்று கூறிவிட்டுத் திரும்பவும் இடியோசை போல சிரிக்கலானான். அம்மையப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிரிக்கும் தூமகேதுவை மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்தான். உடனே தென்னன் குறுக்கிட்டு, “சிவ அம்சம் சிரிக்கின்றது. நீங்கள் வேறு ஒன்றும் நினைக்க வேண்டாம்!” என்றான். அப்போது சத்திரக்காரன் குறுக்கிட்டான். “இந்த மாளிகையே விழுந்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்றான். “அப்படியாகிவிட்டால் அதற்கு ஈடாக இந்தப் பொன் முடிப்பைத் தருவேன்! கவலைப்படாதே” என்று இடுப்பில் செருகியிருந்த முடிப்பை எடுத்துக் காண்பித்தான் தூமகேது. “அதற்காக சிரித்தே என் மாளிகையை இடித்துவிடலாம் என்று முடிவு கட்டிவிட்டீரா?” “இல்லை. என் நோக்கம் உம் மாளிகை அல்ல; இந்தச் சிவபக்தன்தான்!” என்று அம்மையப்பனை நெருங்கினான். அதற்காகவே காத்திருந்தது போல அம்மையப்பன் “நாம் அனைவரும் நண்பர்கள்!” என்று புன்னகை செய்தான். “நண்பர்கள்தான்! அதை இல்லையென்று யார் மறுத்தது?” - இது தூமகேதுவின் செருக்குத்தனமான கேள்வி. “சரி... சரி... இப்போதைக்கு நீங்கள் மேல்தளத்துக்கு போய்விடுங்கள்!” என்று சத்திரக்காரன் குறுக்கிட்டு சொல்ல... “நண்பரைப் பிறகு கவனிக்கின்றேன்” என்று முறைப்புடன் கூறி தூமகேது, தென்னனுடன் மேல்தளத்திற்குப் போக மரப்படி ஏறினான். அவர்கள் மேலே போனதும், அம்மையப்பன் பக்க திரும்பிய சத்திரக்காரன், “நீர் இங்கிருந்து போய்விடும்; இவர்களால் உமக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்றான் பயத்தோடு. “அதற்காக நான் ஓடி ஒளியப் போவதில்லை. என் பக்கம் ஈசன் இருக்கின்றார். அதனால் எனக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படாது” என்று கூற... “உங்களுக்கெல்லாம் இடம் கொடுத்தேன் அல்லவா? எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்!” என்று கைகளைப் பிசைந்தான் சத்திரக்காரன். அம்மையப்பன் அதைக் கவனித்து, “அப்படியே நான் போய்விட்டால் கூட உன்னை இவர்கள் சும்மாவிடமாட்டார்கள். அதனால் உனக்கு ஆபத்து ஏற்படாதிருக்கவே, நான் சத்திரத்தில் தங்கியே ஆக வேண்டும்” என்று அழுத்தமுடன் கூறினான். “எப்படியாவது போங்கள்!” என்று அதற்கு மேல் அங்கே நிற்காமல் மேற்கொண்டு தன் வேலையைக் கவனிப்பதற்காகப் பின்பக்கம் சென்றான் சத்திரத்தலைவன். மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. “கொற்கைக்கு இங்கிருந்து எவ்வளவு தூரம்? இருட்டுவதற்குள் அதை நெருங்க முடியுமா?” என்று சத்திரக்காரனை வினவினான் அம்மையப்பன். ‘எப்படியாவது இங்கிருந்து போனால் சரி’ என்ற நினைப்பிலிருந்த அவன், “கொஞ்ச தூரம்தான். இருட்டுவதற்குள் போய்விடலாம்!” என்றான். வேறு உடைகளை மாற்றிக் கொண்டு சத்திரக்காரனுக்கு இரு பொற்காசுகளைத் தந்து தன் குதிரையில் ஏறினான். மேலேயிருந்த அவர்களும் புறப்பட ஆயத்தமாகி குதிரை அருகில் வந்தனர். இதை எதிர்பார்த்தது போல அம்மையப்பன், “நண்பர்களே, நான் வரட்டுமா?” என்றான் விடைபெறும் நோக்கில். “நாங்களும் வருகிறோமே. நீங்கள் இப்போது எங்கே போகிறீர்கள்?” என்று தென்னன் குறுக்கிட்டு வினவ... “நான் கயிலாயத்துக்குப் போகின்றேன். நீங்கள்?” என்று கேலியுடன் கேட்டான் அம்மையப்பன். “கூட வரச் சொன்னால் நாங்களும் கயிலாயம் வரத் தயார்!” என்று கூறினான் தூமகேது. “சரி... அப்படியென்றால் புறப்படலாமே!” என்று அம்மையப்பன் கூறவும், அவர்கள் குதிரை ஏறிக் கொண்டனர். ‘துறவிக்கு இன்றோடு ஆயுள் முடியப் போகின்றது! பாவம்’ என்று நினைத்த சத்திரக்காரன், அனுதாபத்துடன் அம்மையப்பனை நோக்கினான். புன்னகையோடு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, மற்ற இருவரோடும் அங்கிருந்து கிளம்பினான் சிவபக்தன். என்னைத் துறவி என்றே இவர்கள் நினைத்துவிட்டிருக்கின்றார்கள். எதையும் சமாளிக்கும் மனத்திண்மையும் ஏறக்குறைய ஐந்து பேரை ஒரே சமயத்தில் வீழ்த்தக்கூடிய உத்தி தெரிந்த சிறந்த போர் வீரனாகத் தான் இருப்பதையும், அதே சமயம் துன்பங்களை எதிர்நோக்கி வெற்றி பெறும் புத்திசாதுர்யமும் இருக்கின்றதை இவர்களுக்கு உணர வைக்கும் நேரம் வந்துவிட்டது என்ற எண்ணத்துடனே சிவபக்தன் குதிரையைச் செலுத்திக் கொண்டு முன்னே சென்றான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|