(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 46 முதன்மந்திரி பிரமாதிராசரும், வெள்ளை முக்காடிட்ட உருவமும், சேதி நாட்டுக் குறுநில மன்னன் முத்தன்காமனும், அவர்களின் நம்பிக்கைக்குகந்த படைத்தலைவர்கள் இருவரும் அந்த இருட்டு அறையில் குழுமியிருந்தனர். அவர்கள் முகத்தில் சற்றே பதட்டம் நிலவியிருந்தது. முதன்மந்திரி தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசலுற்றார். அனைவரும் அவர் சொல்வதை ஆமோதித்து அடுத்து என்ன சொல்லப் போகின்றார் என்பதற்காக ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் வீரன் ஒருவன் உள்ளே வந்து வெள்ளை முக்காடிட்ட உருவத்தின் காதில் எதையோ இரகசியமாக கூறினான். உடனே உருவம் சடாரென எழுந்து கோபத்துடன் பற்களைக் கடித்தது. கைகள் துடிக்க கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிக்கத் தொடங்கின. எல்லோரும் பதட்டத்துடன் “என்ன... என்ன?” என்று வினவினர். “திருவரங்கனைச் சிறையிலடைந்துவிட்டார்களாம். அவனுக்கு மரணதண்டனை தர ஆலோசிக்கின்றார்களாம்!” முதன்மந்திரியின் முகத்தில் அதிர்ச்சி நிலவியது. “அந்தப் பிள்ளை என்ன அப்படிக் குற்றம் செய்துவிட்டான்?” “நம் அணியைச் சேர்ந்தவன் என்பதுதான் அவன் செய்த குற்றம்.” “இந்த அநியாயத்தை எதிர்த்தே ஆக வேண்டும்” என்று சேதி நாட்டு மன்னனான முத்தன்காமன் உரக்கக் கூற, “இனி அமைதியாய் இருக்க முடியாது. நாமும் நம் கைவரிசையைக் காண்பிக்க வேண்டியதுதான்” என்று உருவம் ஆத்திரத்துடன் கூறியது. பிரமாதிராசர் இடைமறித்தார். “மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. திடீரென மேலைச்சாளுக்கிய நாட்டிலிருந்து அவசரமாய் ஒற்றன் ஒருவன் வந்துவிட்டதால், பட்டம் கட்டும் நாளை தள்ளிப் போட்டுவிட்டு விக்கிரமாதித்தனும், இராஜசுந்தரியும் குந்தள நாட்டிற்குப் புறப்பட்டுவிட்டனர்” என்று குறுக்கிட்டுக் கூறியது உருவம். “அப்படி அவசரமாய்ப் புறப்பட என்ன விஷயம்?” என்றார் முதன்மந்திரி. “நீண்ட நாளாய் விக்கிரமாதித்தன் இங்கே தங்கிவிட்டதால், குந்தள நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்த அவன் தமையனான சோமேசுவரன் விக்கிரமாதித்தன் ஆட்சி செய்யும் பகுதியைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றான் என்பதை ஒற்றன் மூலம் அறிந்தே புறப்பட்டுவிட்டான்.” “இதுவும் நல்லதுதான். மீண்டும் அவன் இங்கே திரும்பி வருவதற்குள், நாம் பழையாறையிலிருந்து இராசேந்திரனை தருவித்து அவனுக்கும் மதுராந்தகிக்கும் இரகசியமாய்த் திருமணத்தை நடத்திவிட வேண்டும்!” என்றார் முதன்மந்திரி. “ஏன் இளவரசுப் பட்டத்தையே இராசேந்திரனுக்குக் கட்டிவிட்டால் என்ன?” - சேதிநாட்டுக் குறுநில மன்னன் குறுக்கிட்டுக் கேட்டான். பிரமாதிராசர் சற்று உரக்கவே சிரித்து, “முத்தன்காமன் மிகவும் அவசரம் காட்டுகின்றார்; இப்போதுள்ள சூழலில் அது வேண்டாம்! சமயம் வரும். அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டியதுதான்” என்றார். “நீங்கள் பொறுத்திருந்து காரியம் ஆற்றும் வரை உங்களைவிட்டு வைக்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” - என்ற குரல் கேட்டுத் திகைத்து அனைவரும் திரும்பினர். அந்த இருட்டு அறைக்கும், கங்கைகொண்ட சோழபுர மாளிகையிலுள்ள பட்டத்தரசி உலகமுழுதுடையாளின் அந்தப்புர அறைக்கும் ஒரு இரகசிய வழி இருக்கிறது. இந்த வழியை உபயோகித்துத்தான் வெள்ளை முக்காடிட்ட உருவம், அரண்மனைக்கும் இதற்குமாக இதுவரை நடமாடிக் கொண்டு வந்தது. அந்த உருவத்தின் கையாளாக இருந்த வீரர்களில் ஒருவனை வலங்கைப் பிரிவைச் சேர்ந்த சோழ ஒற்றன் பொற்காசுகள் நிறையத் தந்து, தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான். அதன் விளைவு... வெள்ளை முக்காடிட்ட உருவத்தின் இரகசியங்கள் ஒற்றனுக்குத் தெரிந்துவிட்டது. தனக்குத் தெரிந்த விஷயத்தை ஒற்றன் சோழத்தளபதிக்குத் தெரிவிக்க, இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே இதுவரை காத்திருந்த அவர் இருட்டு அறையில் முதன்மந்திரி மற்றவர்களுடன் ஆலோசிப்பதையறிந்து சக்கரவர்த்தியிடம் இதுபற்றிக் கூறி அனைவரையும் கைது செய்ய உத்தரவு பெற்றுக் கொண்டு உருவத்தின் கையாளோடு ஐம்பது வீரர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் முதன்மந்திரி, இராசேந்திரனை இளவரசனாக்கும் விஷயத்தில் நாம் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். திரும்பிய அனைவரும் சோழத்தளபதி வீரசோழ இளங்கோ வேளான் இடுப்பில் கையூன்றியபடி மிடுக்காக நிற்பதைப் பார்த்துத் திகைத்துவிட்டனர். படைத்தலைவர் இருவரும் முத்தன்காமனும் வாட்களின் மீது கைகளை வைக்க, “நீங்கள் இருப்பது ஐந்து பேர். நாங்கள் ஐம்பது பேர்களுடன் இங்கே வந்திருக்கின்றோம்” என தளபதி கூறிக் கொண்டிருக்கும் போது வீரர்கள் வரிசையாய் சுரங்க வழியிலிருந்து வெளிப்பட்டு அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அத்துடன் உருவிய வாளுடன் வந்த வீரர்களில் ஐவர் ஒவ்வொருவர் மார்பிலும் தங்களின் வாட்களது முனையைப் பதித்து நின்றனர். இந்த வழி இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? - குழப்பத்திலாழ்ந்த உருவம், வீரர்களின் நடுவே தன்னுடைய நம்பிக்கைக்குகந்தவனாயிருந்த சோழகங்கன் இருப்பதைக் கண்ணுற்று, இந்தத் துரோகியை அடையாளம் கண்டு கொள்ளாமல், தன்னுடன் சேர்த்துக் கொண்டதின் விளைவுதான் இவை என்று புரிந்து கொண்டு கோபத்துடன் பற்களைக் கடித்தபடி, “சோழகங்கா! இப்போது திருப்திதானே உனக்கு?” என்று ஆத்திரத்துடன் கேட்டது. கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருந்த அந்தத் துரோகி தலை குனிந்து கொண்டான். “ஏன் நிற்கிறீர்கள்? அனைவருக்கும் விலங்கிடுங்கள்!” என்ற சீற்றம் மிகுந்த குரலில் உத்தரவிட்டான் சோழத்தளபதி. உடனே பிரமாதிராசர் குறுக்கிட்டு, “எங்களை விலங்கிடும் அளவுக்கு நாங்கள் ஒரு குற்றம் செய்ததாகத் தெரியவில்லையே?” என்று அமைதியுடனே கூறினார். அனைவர் கையிலும் விலங்கிடப்பட்டது. “இது என்ன உனக்குத் தலைக்கு மேல் முக்காட்டுச் சீலை?” என்று கோபத்துடன் அதை விலக்க விலங்கிட்ட வீரன் திகைத்துவிட்டான். சோழத்தளபதிக்கும் அதிர்ச்சிதான். இருந்தாலும் அட்டகாசமாகச் சிரித்தபடி, “பல போர்களைக் கண்டு, பல பகைவர்களைப் பேடி போல் ஓட ஓட விரட்டிய சோழ நாட்டின் முன்னாளைய தளபதிக்கு ஏன் இப்படி ஒரு கோலம்?” என்று கேட்டான். “நாட்டிற்காக எடுத்த கோலமடா அற்பனே” - கர்ஜித்தார் பெரிய தன்மபாலர். “இதைக் கூறுவதைவிட நாட்டில் நிலவும் குழப்பத்தை நீக்க, நல்ல உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி கூறுவது நல்லது!” “வாயை மூடுங்கள்! வயதிற் பெரியவர் என்று மரியாதை கொடுக்கின்றேன்!” “வீரசோழ இளங்கோ வேளா! உனக்குத் தளபதி பதவி கிடைத்துவிட்டது என்ற மமதையில் பேசாதே! இதற்கெல்லாம் நீ...” என்று கூறிக் கொண்டிருக்கும் போது, “ஏன் நிற்கின்றீர்கள். ம்... இழுத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டான் சோழத்தளபதி. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|