(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 2 சோழ வீரர்கள் ஏறக்குறைய ஒன்பது திங்களுக்கு மேல் தங்கள் தாய்நாட்டைவிட்டுப் புறப்பட்டவர்களானதால், கரைக்குத் திரும்புகின்றோம் என்கிற உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு கலங்களின் அருகிலிருக்கும் நாவாய்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். சுமார் நூறு படகுகள், கப்பல்களிலிருந்த வீரர்களைத் துறைமுகக் கரையில் சேர்க்கும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. வீரர்களைத் துறைமுகக் கரையில் சேர்க்கும் படகை ஓட்டுபவர்கள் மூலம் தன்னையும், இராசேந்திரனையும் வரவேற்க அரசர் வரவில்லை என்ற செய்தியை அறிந்து கொண்டதன் விளைவாக வெற்றிப் பெருமிதத்தில் திளைக்க வேண்டிய சோணாட்டுத் துணைத்தளபதியின் முகம் தற்போது வாடிப் போயிருந்தது. “நீங்கள் வெற்றி ஈட்டி வாருங்கள்! நானே நாகைக் துறைமுகம் வந்து வரவேற்கின்றேன் என்றல்லவா வழியனுப்பும் போது சொன்னார் மன்னர்! இப்போது வரவில்லை என்றால்? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?” என்று யோசித்த சோணாட்டு உபதளபதி எல்லாப் படைவீரர்களும் இறங்கிவிட்டார்களா என்று கப்பலின் கீழ்தளத்தைப் பார்த்தார். இறங்க வேண்டியவர்கள் இன்னும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றார்கள் என்று தெரிந்தது. புறப்பட ஆயத்தம் செய்ய வேண்டுமென்று வேங்கி இளவரசர் இராசேந்திரர் எங்கே இருக்கின்றார் என்று அறிய சுற்றும் முற்றும் நோக்கினார். இன்னொரு முலையில் பாய்மரக் கயிற்றைப் பிடித்தபடி இராசேந்திரன் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆஹா! அந்த முகத்தில்தான் என்ன கம்பீரம்? என்ன அழகு..? சுந்தர புருஷன் என்றால் இவன் போன்ற இளைஞனுக்குத்தான் தகும் போலிருக்கிறதே! சூரியப் பிரகாசம் போல் சுடர்விடும் அம்முகத்தில் சகல வீரலட்சணங்களும் பொருந்தித் தவழ, அந்த அரசகுமாரன் உண்மையிலேயே, பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும்! அவன் ஒரு வேங்கி நாட்டு இளவரசன்; எப்படிச் சோழ நாட்டிற்கே வந்து சோழ அரசகுமாரர்களில் ஒருவன் போல சோழப் படைக்குத் தலைமை தாங்கி கடாரத்துக்குச் செல்ல முடிந்தது? நினைக்கும் போது அவனுக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. வேங்கி அரசரான இராசராச நரேந்திரன் மகனாய் கங்கைகொண்ட சோழபுரத்திலேயே இவன் பிறந்தான். தாய்ப்பாட்டனான கங்கைகொண்ட சோழனைப் போல் (இப்போதைய அரசரின் தந்தை) தோற்றத்தில் இருந்ததால் இவ்விளைஞனுக்கு அவர் பெயரையே சூட்டிவிட்டார்கள். அது முதல் சோழ மாளிகையிலேயே இவன் வளர்ந்து வந்திருக்கிறான். போர்ப் பயிற்சி, அரசருக்குரிய கல்வி எல்லாம் இங்கேயே கற்றுத் தரப்பட்டுவிட்டது. இவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும் போது இராசராச நரேந்திரன் வேங்கி நாட்டின் இளவரசனுக்கு, ‘விஷ்ணுவர்த்தனன்’ என்ற அபிடேகப் பெயருடன், முடிசூட்டி வைத்தார். ஆனால் முடிசூட்டிய சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்துவிட, உடனே அவனின் சிறிய தந்தையான ‘விசயாதித்தன்’ வேங்கி அரசனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சி பீடத்தையும் கைப்பற்றிக் கொண்டான். இப்போது கூட அந்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவு வருகிறது. நியாயப்படி இவனுக்குச் சேர வேண்டிய அவ்வுரிமையை பிள்ளைப் பருவத்தைக் கங்கைகொண்ட சோழபுரத்திலேயே கழித்துவிட்டதால் மிக எளிதாகச் சிறிய தந்தை, அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு கைப்பற்றிவிட்டார். அதனால் என்ன ஆகுமோ என்று பதறிய அம்மங்கை தேவி, இவனை அழைத்துக் கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் வர, அப்போதிருந்த அவன் மாமன் இரண்டாம் ராசேந்திரன் (இப்போது ஆட்சி புரியும் சோழ அரசருக்கு மூத்தவர்) மேலைச்சாளுக்கியருடன் போர் நிகழ்த்திக் கொண்டிருந்தமையால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துவிட்டார். அவனுக்கு உரிமையுள்ள கீழைச்சாளுக்கிய நாடான வேங்கி நாட்டில் இராசேந்திரனுக்கு ஆதரவாய் இப்போது ஏதாவது மாற்றம் செய்யும்படிப் படைகளை அனுப்பினால் அதன் காரணமாக மேலைச்சாளுக்கியரின் மீது படை எடுத்திருக்கும் தன் படையெடுப்பு பாதிக்கும் என்று கூறி அமைதியாயிருக்கும்படி அம்மங்கைதேவியிடம் சொல்லிவிட்டார். சொன்னதோடு நிற்காது “இராசேந்திரன் ஒன்றும் நாடு இல்லாத நாடோடி அல்ல! நான் இருக்கும் வரையில் இதைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்று ஆறுதலும் கூறினார். போரில் அவர் இறந்துவிட, தற்போதைய சக்கரவர்த்தி தொடர்ந்து மேலைச்சாளுக்கியரின் மீது படையெடுப்பு நடத்த வேண்டியது அவசியமாகப் போயிற்று. அச்சமயம் மேலைச்சாளுக்கிய மன்னனான ஆகவமல்லன், கீழைச்சாளுக்கியருக்கும் சோழருக்கும் மணஉறவு இருப்பதால்தான், சோழரை வெல்ல முடியவில்லை என்பதை உணர்ந்து, கீழைச்சாளுக்கிய நாட்டில் ஆட்சி செய்து வந்த இராசேந்திரனின் சிறிய தந்தையான விசயாதித்தனை வென்று ஒரே சாளுக்கிய நாடாக ஆக்கினால், சோழரை அடக்கிவிடலாம் என்ற நப்பாசையுடன் அதன் மீது படை எடுத்தான். இதையறிந்த சோழ அரசரான வீரராசேந்திரர் உடனே படையெடுத்துச் சென்று ஆகவமல்லனின் எண்ணத்தை முறியடித்து இராசேந்திரனின் சிறிய தந்தையையே நாட்டை ஆளும்படிச் செய்துவிட்டார். அதற்குப் பிறகு அவரே ஆளட்டும்; அவரும் என் சிறிய தந்தைதானே? என்ற எண்ணத்திலேயே இவனும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டான். அப்படித் தங்கின இவனுக்குத்தான் கடாரப்படையெடுப்பைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை மன்னர் ஒப்படைத்தார். இவ்விதம் பழைய எண்ணங்களை எண்ணியவாறு இராசேந்திரன் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்காற்று பலமாக வீசியது. சீறி எழுந்த அலை ஒன்று, கலத்தின் மீது மோத, அதனால் தெறித்த நீர்த்துளிகள் கடலில் சிதறி விழுந்தன. ஒவ்வொரு முறையும் அலை மரக்கலத்தின் மீது மோதுவதும், அதனால் சிதறிய நீர்த்துளிகள் கதிரொளியில் முத்துக்களாய்ப் பரிமளித்து இமைப்பொழுதுக்குள் கடலுக்குள் விழுந்து மறைந்து விடுவதுமாயிருந்தன. அதை இரசித்தபடி நின்று கொண்டிருந்த இராசேந்திரனின் செவிகளில் காலடி ஓசை விழவே, திரும்பிப் பார்த்தான். சோழ நாட்டுத் துணைத்தளபதி சிறிய தன்மபாலர்தான் வந்து கொண்டிருந்தார். “கப்பல் வாழ்க்கையை முடித்துக் கொண்டு கரைக்குப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது தளபதி.” “படை வீரர்கள் எல்லோரும் கரை சேர்ந்துவிட்டார்களா?” “சேர்ந்துவிட்டார்கள்! இப்போது நாம் இருவர்தான் பாக்கி!” “ஒன்பது திங்கள் இக்கடலுடன் நமக்கு ஏற்பட்ட தொடர்பை அவ்வளவு விரைவாகத் துண்டித்துக் கொண்டு போக எனக்கு மனம் வரவில்லையே உபதளபதி!” என்று கடல் பக்கம் திரும்பி, “அதோ பாருங்கள் ஆர்ப்பரிக்கும் கடலை! எவ்வளவு அற்புதமாய் இந்தச் சூரிய ஒளியில் ஜொலிக்கின்றது!” என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூறினான். உடனே துணைத்தளபதி, “நாம் கலைஞர்கள் அல்ல தளபதி! வாள் பிடிக்கும் வீரர்கள். வாருங்கள். கரையில் நம்மை வரவேற்க பட்டத்தரசியார் வந்து ஒரு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டதாம்!” என்றார். “ஏன், அரசர் வரவில்லையா?” “இல்லை... இளவரசர் அதிராசேந்திரர் வந்திருக்கின்றார்!” “அப்படியென்றால் சீக்கிரம் புறப்பட வேண்டியதுதான்!” என்று நூலேணியின் அருகில் சென்றான். அரசர் ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுந்தது அவன் மனதில். அதனால் சிறிது குழப்பமும் அடைந்தான். அந்த மனநிலையுடன் கப்பலையும் கடலையும் பிரிகின்றோமே என்ற பிரிவுணர்ச்சியோடு கலத்தின் தலைவனிடம் விடைபெற்றுக் கொண்டு நூலேணி வழியாக இறங்க ஆரம்பித்தான். வலுவான காற்று ஏணியை வீழ்த்திவிடுவது போல அதன் மேல் பலமாக மோதியது. மறுபக்கம் புரண்டுவிடுவது போல் அது இப்படியும் அப்படியுமாக பலமாக ஆட இராசேந்திரன் ஒருவன் மட்டுமே அப்போது இருந்ததால் அடுத்தபடியில் அவன் கால் வைக்கும் போது பலமான ஆட்டத்தினாலும், மனதிலிருந்த குழப்பத்தினாலும், சரியாகக் கால் பதியாமல் காற்றின் வேகத்தில் ‘தடக்’ என்று கால் வழுகிவிட்டது. உடனே இராசேந்திரன் அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தான். காற்றின் வேகம் அதிகமாகி, அவன் கைப்பிடியைப் பறித்துவிடுவது போல, அப்படியும் இப்படியும் நூல் ஏணியை மீண்டும் பலமாக ஆட்டியது. நிலைமை அபாய நிலையில் இருப்பதை உணர்ந்து தன் முழுப்பலத்தையும் கைகளில் செலுத்தி பிடியை இறுக்கினான் இராசேந்திரன். துணைத்தளபதி சிறிய தன்மபாலர் எந்தவித அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாதென்று கலத்தின் மேல் தளத்திலிருந்து பதட்டத்துடன் இவனைக் கவனிக்கலானார். அலைக்கழித்த பேய்க்காற்றின் வேகம் சிறிது குறைய ஆரம்பிக்கவே, அதுதான் தக்க நேரம் என்று, எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இராசேந்திரன் தன் கால்களை முழு வேகத்துடன் படியில் பதிய வைத்து, ஏணியையும் பலமாகப் பிடித்துக் கொண்டான். தன்மபாலனுக்கு பெருமூச்சு வந்தது. கப்பல் தலைவன் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லையென்பதை உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். படகில் இறங்கியதும் காற்றுடன் போராடிய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, மூச்சை நிதானப்படுத்தி கண்களை மூடி “அப்பாடா!” என்றான். அவன் பின்னால் இறங்கிய சிறிய தன்மபாலனும் “கொஞ்ச நேரம் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது” என்றார். “சற்று முன் கடலைப் புகழ்ந்தேன் அல்லவா? ‘என்னையா புகழ்கின்றாய்? உனக்கு இதோ, என் பாராட்டுதல்கள்’ என்று ஒரேடியாய் என்னைப் பாராட்டிவிட்டது” என்று இராசேந்திரன் கடகடவென சிரிக்கலானான். ***** நாகையிலிருந்து இரு காததூரம் தள்ளி, அடர்ந்த காடு போல் ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்று. அந்நேரத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாய் ஆகிவிட்டது. மிகமிக நெருக்கமாய் அமைந்து காண்போர்க்கு அச்சத்தை விளைவிப்பது மாதிரி, அக்காலை நேரத்திலும் சூரிய ஒளி உள்ளே ஊடுருவாது, இருண்ட கானகம் போல் தென்பட்ட அப்பகுதி, சில கொடியவர்கள் தங்கும் கூடாரமாகவே அமைந்திருந்தது. அலைகளால் கரைக்குத் தள்ளப்பட்ட மீன்கள் அங்கே இடம் தேடி மறைந்து கொள்ள, அவற்றைப் பிடித்து உண்பதற்காக, கடல் நாரைகள் எழும்பியும், பறந்தும், நீரில் உட்கார்ந்தும், இப்படிக் கூட்டம் கூட்டமாய் அந்த இடத்தில் இருப்பது, உண்மையிலேயே அழகாகத்தான் இருந்தது. அடிக்கடி வீசிய புயற்காற்றால் பெரும் மணற் குன்றுகள் தோன்றி, அந்நீர்ப் பகுதிக்கு வலுவான கரையாய் அமைந்து, அத்துடன் தோப்பையும் பாதி அளவு மறைத்துக் கொண்டு இருந்தது. வஞ்சகர்களுக்கு இதைவிட ஒரு மறைவான இடம் இருக்க முடியுமா? இப்படி ஒரு இடத்தை அமைத்த இயற்கையை நாம் மனத்திற்குள் ஏசினாலும், தோப்பும், தோப்பையொட்டியமைந்த தடாகமும், தடாகத்தையொட்டி இருக்கும் மணல் மேடுகளின் உயரமும், மனதிற்கு எவ்வளவு ஆனந்தத்தைத் தருகின்றன! அதோ... கடலிலிருந்து சிறிய படகு ஒன்று அலைகளுக்கிடையே புகுந்து தடாகத்தின் முன்பகுதியில் நிற்க, அதிலிருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கிய படகை ஓட்டி வந்தவன், கடல் அலைகளால் இழுத்துச் செல்லாதபடி படகிலிருந்த கயிற்றை நன்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான். படகில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் பெண்ணும் ஒருத்தி இருந்தாள். அலைகளால் இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்த படகிலிருந்து, அனாவசியமாய் அவள் கீழே இறங்கினாள். வயது இருபதுக்கு மேல் இருக்காது. கரிய குழல்கள் நன்கு சீவி முடிக்கப்பட்டிருந்தாலும், நெடுந்தூரம் கடல் பயணம் செய்ததின் அடையாளமாக, அது கலைந்து, அவளின் சந்திர முகத்தின் முன்னால் விழுந்து, தனி சோபையைத் தந்தது. மின்னும் சுடர்போல் ஒளிவிட்ட அவளின் விழிகளில் மாந்தரைப் படைக்கும் பிரமன், மனிதரை மயக்கும் ஜாலத்தை வைத்துவிட்டான் என்பது, அந்த விழிகளில் அசையும் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது. செவ்விய இதழ்களில் மென்மை குடிகொண்டிருந்தாலும், ஆண்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வந்த சக்தி ஒன்று அதில் ஒளிந்திருப்பது, அனுபவப்பட்டவர்கள் உணரும் அனுபவமாக இருந்தது. நேர்த்தியாய் அமைந்த சங்குக் கழுத்தும், கீழே சரிந்த பளபளப்புத் தோள்களும், அதையட்டி சற்றுப் பருத்து நின்ற இளமை குடிகொண்ட முன் அழகும், அதன் சிறப்பை உணர்த்துவது போல், அவற்றை மறைத்து நின்ற மார்புக்கச்சையின் எடுப்பும், கச்சைக்குள் அடங்கியும் அடங்காமலும், எந்த நிமிடத்திலும் சிதிலமடைந்துவிடுமோ என்பது போல், பார்ப்பவருக்குப் பிரமையூட்டும் விதத்தில் அமைந்த முன் அழகுகளின் கூர்மை எழிலும், அதற்குக் கீழே சற்றுச் சரிந்தவாறு இருந்த அழகிய மணி வயிறும், அதன் நடுநாயகமாய் செப்பமுற காணப்பட்ட உந்திச் சுழியும், அதையொட்டி கருங்கோடு போன்று கீழே கோடிட்டு இறங்கிய மெல்லிய உரோமக் கீற்றும், ஆகா! அந்த இடம்...? வளமான பூமியில் நன்கு செழித்து வளர்ந்த கனமான செவ்வாழை மரத் தண்டு போன்றிருந்த, வழுவழுப்பான அழகிய இரு தொடைகளும்... தொடைகளைத் தாங்கிக் கொண்டிருந்த கெண்டை மீன் போல் தென்பட்ட கணுக்கால்களும்... அதற்கு ஏற்றபடி அமைந்த பாதமும், அதையொட்டியிருந்த இலவம் பஞ்சுவிரல்களும்... மொத்தத்தில், அவள், இந்திரலோக அரம்பையைத் தோற்கடிக்க, பூமியில் தோன்றிய மானிடப்பெண் என்பதை, அவளைக் காணும் யாவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர். அத்தனைக் கவர்ச்சியுடனிருந்த அவளின் இடையில் கூர்மையான குறுவாள் ஒன்று இருந்தது. அது... அந்தக் குரலில்தான் எத்தனை இனிமை? கடும்சொற்கள் கூட, சிலர் வாயிலிருந்து வெளிப்பட்டால், தேனாகவே இனிக்கும் போலிருக்கிறது! “ஆகட்டும் இளவரசி!” என்று பணிவோடு படகிலிருந்து இறங்கினான் ஒருவன். சிவந்த நிற தேகமும், மெல்லிய மீசையுடன், உரம் படைத்த உடலும் கொண்டிருந்தான். இருவர் பேசிய மொழியும், தமிழாக இல்லாமல் வேற்றுப் பாஷையாக இருந்தது. தோற்றமும், நிறமும் கூட வேற்று நாட்டினர் என்பதையே உணர்த்தியது. அவனைத் தொடர்ந்து கரிய நிறத்துடன், தடித்த ஆகிருதியோடு காணப்பட்ட ஒருவன் இறங்க... அச்சமயம்... வீரர்களை வரவேற்பதற்காக, துந்துபி முழங்கிய முழக்க ஓசை, துறைமுகத்திலிருந்து இவர்களுக்குக் கேட்டது. “சீக்கிரம் இளவரசி, அவர்கள் துறைமுகத்தைவிட்டுப் போவதற்குள் நாம் அங்கே போய்விட வேண்டும்!” என்று அவசரப்பட்டான் கரிய நிறத்தினன். தமிழ் உச்சரிப்பிலிருந்தும், உடல் நிறத்திலிருந்தும் அவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தான் என்பது தெரிந்தது. படகை ஓட்டியவனிடம் பொன் முடிப்பைக் கொடுத்த அழகி, கரிய நிறத்தவன் பக்கம் திரும்பி, “புறப்படலாமா தூமகேது!” என்றான். “கடார இளவரசியார் கடல் கடந்து புனித செயலுக்காக இங்கே வந்திருக்கின்றார்கள்! அதை நிறைவேற்றுவது என்னுடைய கடமை!” என்ற தூமகேது படகோட்டியின் பக்கம் சென்று, “வேலா, நீ செய்த உதவிக்கு நன்றி! இப்போது நீ வீட்டுக்குப் போய், நாளை விடியற்காலை நான் பாண்டிய நாடு போக வேண்டியிருப்பதால், அதற்கான ஆயத்தம் செய்து வை!” என்றான். “ஆகட்டும் சாமி!” என்று தலையை ஆட்டினான் வேலன். அச்சமயம், அவர்கள் காது செவிடாவது போல, எக்காளம் பலமாக முழங்கியது. கடார இளவரசி இரத்தினாதேவி என்ற பெயருடைய அவளின் முகம் கறுக்க, கண்களில் சினக்குறிப்பு தோன்றியது. இடையில் செருகியிருந்த குறுவாளின் மீது கை வைத்துப் பற்களைக் கடித்தாள். “அவசரப்படாதீர்கள்! எப்படியும் நீங்கள் அந்த இராசேந்திரனை நிச்சயம் பழிக்குப் பழி வாங்கத்தான் போகிறீர்கள்!” என்றான் தூமகேது. அவன் பாண்டிய நாட்டைச் சேர்த்தவன். சோழ வம்சத்தை நிர்மூலமாக்குவதற்காக, இரத்தப் பொட்டு வைத்து வீர சபதம் எடுத்துக் கொண்ட, நாடிழந்த பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவன். “நல்ல சமயத்தில் நீ குறுக்கிட்டாய் தூமகேது! இல்லையென்றால் கடாரத்திலிருந்து பகைவனைத் (பகைவன் என்று கடார இளவரசி இரத்தினாதேவி குறிப்பிட்டது, கடாரம் சென்று வெற்றி ஈட்டித் திரும்பிய இராசேந்திரனை) தொடர்ந்து வந்த எனக்கு ஒரு வழியும் புலப்படாமல் போயிருக்கும். என் காரியம் நிறைவேறவில்லையென்றால் இத்தமிழ் நாட்டிலேயே நான், உயிரைப் போக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பேன்” என்றாள் வருத்தத்துடன். “உங்களுக்குத் துணையாக கடார மன்னர் என்னை அனுப்பியிருக்கும் போது, நீங்கள் ஏன் அதைர்யம் கொள்ள வேண்டும்?” என்று இதுவரை மௌனமாகயிருந்த, சிவந்த நிறத்தினனான சாமந்தன் கூறினான். “அதைர்யம் கொள்ளவில்லை சாமந்தா. நாடு சோழருக்கு அடிமையாகிவிட்டது என்ற ஆத்திரத்தில், தோல்விக்குக் காரணமான இராசேந்திரனைத் தொலைத்துக் கட்ட, என் தந்தை தடுத்தும் கேளாது, புறப்பட்டுவிட்டேன்! இளம் பெண்ணான நான், கடல்கடந்து செல்வதற்குத் துணையாக எல்லா அனுபவமும் பெற்ற ஒற்றர் தலைவனான உன்னை என்னுடன் அரசர் அனுப்பியிருந்தாலும், புதிய இடமும், புதிய சூழலும், பேசும் மொழியும் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டன!” என்றான் இரத்தினாதேவி. “உண்மை. நீ சொல்வது முற்றிலும் உண்மை!” என்று மகிழ்ச்சியுடன் உரக்கக் கூவினாள் இரத்தினாதேவி. அந்தக் கூவலை அடக்குவது போல், எக்காள சப்தம் மீண்டும் முழங்க ஆரம்பித்தது. “நாம் இங்கே பேசிக் கொண்டிருந்தால் இராசேந்திரன் துறைமுகத்தைவிட்டுப் பயணமாகிவிடுவான்! அப்புறம் அவனைக் கொல்வது கடினமான காரியமாகிவிடும். கூட்டத்தோடு கூட்டமாக ‘அவனை’ வரவேற்கும் சாக்கில், குறுவாளை அவன் மார்பில் எறிந்துவிடுவது சுலபமானது. அதனால் சீக்கிரம் புறப்படுங்கள்!” என்று துரிதப்படுத்தினான் தூமகேது. வாளை வீசும் பொறுப்பை இரத்தினாதேவி ஏற்றுக் கொண்டாள். எறிந்துவிட்டுக் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டம்! அதன்படி மூவரும் நாகைத் துறைமுகம் நோக்கி வேகமாய்ப் பயணமாயினர். ***** துறைமுகக் கரையை இராசேந்திரனின் படகு நெருங்குவதற்கும் அதிர்வேட்டு அக்கடல் பகுதியையே அதிரவைப்பது போல் முழங்குவதற்கும் சரியாக இருந்தது. இராசேந்திரனை சோழ நாட்டு இளவரசனான, அதிராசேநதிரன் மார்புறத்தழுவி மாலையிட்டு வரவேற்றான். துணைத்தளபதிக்கு, முதலமைச்சர் புன்முறுவலோடு மாலை போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்தார். பட்டத்தரசி இருவரையும் ஆசீர்வதித்தார். அதிராசேந்திரன் மனைவியான இளையராணி இருவருக்கும் ஆரத்தி எடுத்து, நெற்றியில் வெற்றித் திலகமிட்டாள். வரிசையாய் நின்று கொண்டிருந்த வேல் வீரர்கள் தங்கள் வேல்களை உயரத் தூக்கி, “கடாரம் கொண்ட இராசேந்திரன் வாழ்க! வாழ்க!” என்று முழக்கமிட்டனர். துந்தமம் ஒலித்தது; எக்காளம் முழங்கியது; வெற்றி முரசம் ஆர்த்தது. வேற்படை வீரர்கள் முன்னே செல்ல, அதன்பின் வாள் வீரர்கள் வரிசையிட்டு நடக்க, நடுவே இராசேந்திரனும் சிறிய தன்மபாலரும் வீர நடை போட்டனர். துறைமுக வாயிலின் வெளியே... வெற்றி வீரர்களை வரவேற்பதற்காகக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்த வேளை... இராசேந்திரனைக் கொல்வதற்காக கடாரத்திலிருந்து வந்த இளவரசி இரத்தினாதேவி, தனக்குத் துணையாயுள்ள சாமந்தனையும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த தூமகேதுவையும் பார்த்து, “கூட்டம் அதிகமாயுள்ளதே!” என்றாள். “ஆமாம்... ஆனால், காரியத்தை நிறைவேற்ற கூட்டம் அதிகமாயிருப்பது சாதகம்தான்” என்றான் தூமகேது. துறைமுகத்திலிருந்து ஒருகாத தூரத்திற்கு மேல் மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. சுமார் அரைகாதம் தள்ளி நின்றால்தான் உள்ளிருந்து வரும் இராசேந்திரன் மீது கத்தியைக் குறிதவறாமல் வீச முடியும்... அதற்கு ஏற்ற இடம்...? மூவரும் சுற்றுமுற்றும் பார்த்து, கூட்டம் நெருக்கமாயிருந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தனர். தோற்றத்திலும், நிறத்திலும் சற்று வித்தியாசமாக இருந்த இளவரசி இரத்தினாதேவியை, அனைவரையும் கவர, எல்லோரும், ‘யார் புதியதாய்!’ என்பது போல அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். தூமகேது அதைக் கவனித்தான். “அனைவர் கவனமும் நம் மேல் இருக்கின்றது; சீக்கிரம் காரியத்தை முடித்துக் கொண்டு தப்பிவிட வேண்டும்!” என்று பதட்டப்பட்டான். இராசேந்திரன் மீது பூச்சொரிவது போல நச்சுக் கத்தியை, அவன் மேல் வீசிவிட வேண்டுமென்று எண்ணிய இளவரசி, அதற்காக மலர்கள் வேண்டுமென்று தூமகேதுவிடம் கேட்டாள். அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். மூதாட்டி ஒருத்தி தண்ணீர்ப் பந்தலின் அருகில் பூக்கூடையில் மலர்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தாள். மென்விரல்களில் அதைப் பெற்றுக் கொண்டு, நச்சுக் கத்தியை மலர்களின் நடுவில் வைத்து, ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்த, அந்த இடத்தை நோக்கி நடந்தாள் இரத்தினாதேவி. ‘புப்பூபூம்... புப்புபூம்...’ என்று துந்துபி முழங்க, குதிரை வீரன் ஒருவன், வேலைத் தூக்கிப் பிடித்து, “கடாரம் கொண்ட இராசேந்திரர்” என்று உரக்கக் கூற, “வாழ்க! வாழ்க!” என்று மக்கள் முழங்கினர். “வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான் தூமகேது. அவன் இதயம் படபடத்தது. கால்களை நன்கு தரையில் பதியவைத்து முன் கைக்கு அழுத்தம் கொடுத்து, இராசேந்திரன் மேல் கத்தியை வீசத் தயாரானாள் இரத்தினாதேவி. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|