(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 47 மதுராந்தக வடவாற்றின் மெல்லிய ஓட்டத்தைப் பார்த்து, இரசித்தபடி உட்கார்ந்திருந்த அம்மையப்பன் பின்னாலிருந்து பெண்குரல் ஒன்று கேட்பதையறிந்து திரும்பிப் பார்த்தான். ‘அட இவர்களா! அப்படி என்ன முக்கியம் பேச அரசமர மேடையை நோக்கி வருகின்றார்கள். ஒருவேளை இப்படியிருக்குமோ? எதுவாயிருந்தாலும் இதை ஒட்டுக் கேட்டேயாக வேண்டும்’ என்ற எண்ணத்தில் மேடையையட்டியிருந்த கருங்கல் மண்டபத்திற்குள் மறைந்து கொண்டான். ஆற்று ஓட்டத்தின் இதமான சலசலப்புச் சப்தம் மாலை நேரத் தென்றலுடன் சேர்ந்து கொண்டதால், கேட்பதற்கு இனிமையாயிருந்தது. அத்துடன் மதுராந்தக வடவாற்றின் கரைப்பக்கமிருந்த பூஞ்சோலையிலுள்ள மலர்களின் நறுமணம் நாசிற்கு அருமையாயிருந்தது. “ஆ... என்ன அற்புதமான இடம்!” - தன்னை மீறிய உணர்ச்சிப் பெருக்குடன் பாராட்டினாள் இரத்தினாதேவி. சாமந்தன் குறுக்கிட்டான். “இப்படியேயிருந்தால் நாம் எப்போது தாயகம் திரும்புவது?”- அவன் பேச்சில் கடுமையிழைந்திருந்தது. “இன்னும் பகை முடியவில்லையே? இராசேந்திரன் ஒவ்வொரு முறையும் நம்மிடமிருந்து தப்பித்துவிடுகிறானே!” “அதற்காக எத்தனை நாள் இங்கேயிருக்க முடியும்? இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் இங்கே பெருங்கலகம் தோன்றும் போல் இருக்கிறது!” இரத்தினாதேவி யோசனையிலாழ்ந்தாள். சிறிது கழிந்து சிந்தனை கலைந்தது. “அப்படியென்றால் இப்போதே ஊருக்குப் புறப்பட்டுவிடலாமா?” என்று கோபமாகவே கேட்டாள். “அதற்குச் சொல்லவில்லை. இராசேந்திரன் வேங்கி எல்லைக்குப் போயிருப்பதாகச் செய்தி கிடைத்துள்ளது. அங்கே போய் அவனைத் தீர்த்துவிட்டு, அப்படியே நம் நாட்டிற்குத் திரும்பிவிட்டால் என்ன?” ‘களுக்’கென்று கடார இளவரசி இகழ்ச்சியுடன் நகைத்தாள். “நல்ல வேலைதான் இது!” என்று சலிப்புடனே கூறிக் கொள்ளவும் செய்தாள். “இல்லையென்றால் நீயாவது ஒரு வழி சொல்லேன்!” “கண்மணி இரத்தினா!” அன்புடன் யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கே... சோழ இளவரசனாக முடிசூடப் போகும் மதுராந்தகன், உதட்டில் குறுநகையோடு நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஐந்தாறு வீரர்கள் இருந்தனர். ‘இவன் என் இங்கே வரவேண்டும்?’ - திகைப்புடன் எழுந்து கொண்டாள். “நல்ல மாலை நேரம். சிலுசிலுக்கும் மெல்லிய பூங்காற்று. நிசப்தமான சூழ்நிலை. இவற்றை அனுபவிக்க ஒரு துணை வேண்டும் என்பதை நீ அறிந்து கொள்ளவில்லையா?” உள்ளடங்கியிருந்த அவன் கண்களில் காமவெறி நிழலாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு, மனம் படபடவென அடிக்க, சாமந்தனைப் பார்த்தாள் கடார இளவரசி. அவன் ஆத்திரத்தோடு வாளின் மேல் கைவைத்தவாறு அவள் முன் நின்று கொண்டான். மதுராந்தகனுக்கு அதைப் பார்த்துச் சிரிப்பு தோன்றியது. “ஹோ... ஹோ”வென பெருங்குரலில் நகைக்கலானான். “என்னைச் சுற்றியுள்ள வீரர்களை உன்னால் சமாளிக்க முடியுமா?” - இடுப்பில் கையூன்றியபடியே சாமந்தனைப் பார்த்துக் கேட்டான். “ஒரு நாட்டின் இளவரசராகப் போகும் நீங்கள் இப்படிக் கீழ்த்தரமான முறையில் நடக்கலாமா?” - கோபத்துடன் வினவினாள் இரத்தினாதேவி. “எது கீழ்த்தரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். வா இரத்தினா! உன் வாழ்க்கையில் எத்தனையோ ஆடவர்களைச் சந்தித்திருப்பாய். ஆனால் என் போன்ற அனுபவமிக்கவனின் கைகள் உன் மேனியில் பட்டிருக்க முடியாது என்பதை இந்த மதுராந்தகனை அணைப்பதின் மூலமே உணர்ந்து கொள்வாய்.” சாமந்தனுக்குக் கோபம் கொப்பளித்தது. பற்களைச் சப்தத்துடன் கடித்தான். விழிகளும் இரத்தச் சிவப்பாய் மாற வாளினை உருவிக் கொண்டான். “இன்னும் ஏன் நிற்கிறீர்கள். ம்...” - மதுராந்தகன் தன்னைச் சுற்றியுள்ள வீரர்களை அதட்ட அவர்கள் சாமந்தனே நெருங்கினர். எதற்கும் தயாரானாற் போல் அவனும் வீரர்களை எதிர்க்க வாட்போர் மூண்டது. பதற்றமுற்ற இரத்தினாதேவி தனிமையில் நின்றவாறு சண்டையைக் கவனிக்கலானாள். இதுதான் நல்ல சமயமென்று எண்ணிய வருங்கால சோழ இளவரசன், அழகுச் சிலையாய் ஒய்யாரமாய் மெல்லிய பூங்கொடியாய் நின்று கொண்டிருந்த அவளின் மென் கைகளைப் பற்றினான். “சீ, விடு கையை!” “இத்தனை மென்மையான கைகளை இதுவரை அனுபவிக்காமல்விட்டது பெரிய தவறென்றே படுகிறது” - புன்னகையோடு கூறினான் மதுராந்தகன். பலங்கொண்ட மட்டும் கைகளே உதறி, அவனிடமிருந்து விடுபட்ட இரத்தினாதேவி, “நெருங்காதே!” என்று இடையிலிருந்த குறுவாளை எடுத்துக் கொண்டாள். மென்மையின் இலக்கணமான இவளால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற அசாதாரண தைரியத்தில் “கோபம் கொள்வது கூட உனக்கு அழகையே தருகிறது” எனக் கூறியவாறு அவளை நோக்கி நெருங்கினான். “அரசகுமாரா! என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் மான் அல்ல. பாயும் புலி!” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவளை நெருங்கிய மதுராந்தகன், குறுவாளைப் பிடுங்கி எறியும் எண்ணத்தில் கரங்களைப் பற்ற முயன்றான். ஆனால் கைகள் வழுக்கிவிட, திரும்பவும் இன்னும் கொஞ்சம் பக்கமாய்ச் சென்று, கைகளைப் பற்ற முயன்றான். ‘இந்தக் காமுகன் தன்னை அனுபவித்துத்தான் விடுவான். அதற்குள் எதையாவது செய்து, காப்பாற்றி கொள்ள வேண்டும்’ என்ற கட்டாயத்தின் பேரில் எழு உணர்ச்சி வேகத்தில், தான் என்ன செய்கின்றோம் என்ற சிந்தனையில்லாது, நீட்டிய அவன் கைகளில் சிக்காமலிருக்கச் சற்றுப் பின் வாங்கி, அதே வேகத்தில் குறுவாளை மதுராந்தான் வயிற்றில் பாய்ச்சினாள். “அம்மா!” -அலறியவாறு கொப்பளிக்கும் குருதி தரையில் ஓட, வயிற்றைப் பிடித்தபடிக் கீழே சாய்ந்தான். “இளவரசர் கொல்லப்பட்டார்!” என்று உரக்கக் கூவினான். அதே ஆத்திரத்தில் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த சாமந்தனின் விலாவில் தனது வாளைப் பாய்ச்சினான். சாமந்தனும், “ஹா!” என மரண ஓலமிட்டுக் கீழே விழுந்தான். அனைத்து வீரர்களும் ஓடும் இரத்தினாதேவியைத் துரத்த முயன்றனர். மண்டபத்திற்குள் மறைந்து கொண்டிருந்த அம்மையப்பன் இத்துர்ப்பாக்கிய நிகழ்ச்சி நடந்துவிட்டதற்காக மனம் வருந்தியவாறு மதுராந்தகனுக்கு உயிர் இருக்கிறதா என்பதை அறிவதற்கு அவனருகில் வந்தான். மதுராந்தகனுடன் கூட வந்த வீரர்களில் ஒருவன் வழியில் தன்னுடைய சுற்றத்தினரைப் பார்த்துவிட்டதால், “நீங்கள் போய்க் கொண்டிருங்கள்; பின்னால் வருகின்றேன்! என்று சக வீரர்களிடம் இரகசியமாய்ச் சொல்லிவிட்டுப் பின் தங்கிவிட்டான். சுற்றத்தினரை ஒரு வழியாய்ப் பேசி, அனுப்பிவிட்டு, “இளவரசர் அங்கே காத்துக் கொண்டிருப்பார்; விரைந்து செல்ல வேண்டும்!” என்ற எண்ணத்துடனே, வேகமாய் ஆற்றை நோக்கி ஓடிவந்தான். அவன் வந்த சமயம், இரத்தினாதேவியைத் துரத்திச் சென்ற வீரர்களும், அவளும் வெகு தூரம் சென்றுவிட்டதால், ஓடிவந்த வீரன் கண்களுக்கு அவர்கள் புலனாகவில்லை. அதனால் மதுராந்தகனின் உயிரற்ற உடலின் அருகில் அம்மையப்பன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அடுத்து நொடியே அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. ‘இடங்கை வகுப்பினரான இவன் முதலமைச்சரின் ஆள். மதுராந்தகனைக் கொன்றுவிட்டால், இராசேந்திரனுக்குச் சுலபமாய் இளவரசுப் பட்டம் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தின் காரணமாய், வருங்கால சோழ இளவரசரைக் கொன்றிருக்க வேண்டும்.’ இவ்விதம் அவன் கணக்குப் போட்டு, வாளை உருவியவாறு, “இராஜத் துரோகியே, என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அம்மையப்பன் மேல் பாய்ந்தான். ஏற்கனவே மதுராந்தகன் கொலையால் மன சஞ்சலமுற்றிருந்த அம்மையப்பன், தன்னை நோக்கி ஓடி வந்த வீரன், கொலைக் குற்றத்தைத் தன் மீது சுமத்தும் நோக்கில் வாளுடன் பாய்வதையறிந்து, தற்சமயத்திற்கு இவனிடமிருந்து தப்பிப்பதுதான் சாலச் சிறந்தது என எண்ணி, சிறிது குனிந்து அதே போக்கில் வீரனையும் கீழே தள்ளிவிட்டான். கீழே விழுந்த வீரன், சமாளித்து எழுந்தான். அம்மையப்பன் எங்கேயென சுற்றுமுற்றும் பார்த்தான். ஆளைக் காணாததால், ‘நிச்சயம் இவன்தான் கொலையைச் செய்திருக்க வேண்டும்’ என ஊர்ஜிதம் செய்து கொண்டு “இடங்கைப் பிரிவினரை இன்று ஒரு கை பார்க்க வேண்டியதுதான்” என்று ஆத்திரத்துடன் கூறியபடி, உயிரற்ற மதுராந்தகன் உடலைத் தோளில் சுமந்தவாறு “கொலை... கொலை!” என்று கூவியவாறு கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையை நோக்கி வெறிபிடித்தவன் போல் ஓடத் தொடங்கினான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|