(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 28 ஒரு வீட்டுக்கு மரியாதைக்குரிய மருமகன் வந்துவிட்டால், அந்த வீடு கலகலப்பில் ஆழ்ந்து ஒரே அமர்க்களத்தில் மூழ்கிவிடும். அதே போல... சோழ நாட்டின் மருமகப்பிள்ளையான, ஆறாம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வரும் போது அது எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு விடைதருவது போல வீதியெங்கும் தோரணங்களும் கோட்டை முழுமையும் - இரு நாட்டிற்குரிய கொடிகளுமாய் இருந்தன. சக்கரவர்த்தி வீரராசேந்திரர் மட்டும் உடல் நலத்துடன் இருந்திருந்தால், இந்நேரம் அக்கங்காபுரியே தேவலோகப் பட்டணம் போன்று அலங்காரத்திலும், கோலாகலத்திலும் சூழ்ந்திருக்கும். குந்தள வேந்தரை வரவேற்க, சூரிய உதயம் ஆகி இரு நாழிகை கழித்து இளவரசன் அதிராசேந்திரன் முதல்மந்திரியுடன் கோட்டை வாயிலுக்கு வந்துவிட்டான். மக்களும் அவர்களை வரவேற்க, திரளாய்க் கூடி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். “சக்கரவர்த்தி வீரராசேந்திரர் வாழ்க!” “காஞ்சிப் பிரதிநிதி சோழேந்திரர் வாழ்க!” “குந்தள மாமன்னர் விக்கிரமாதித்தர் வாழ்க!” என்று மக்கள் முழக்கம் வானத் தொட... கூட்டத்தை நோக்கிக் கையசைத்தபடி மேலைச்சாளுக்கிய மாமன்னனும், காஞ்சிப் பிரதிநிதி சோழேந்திரனும் கங்காபுரிக் கோட்டைக்குள் நுழைந்தனர். இளவரசர் அதிராசேந்திரன் மைத்துனனையும், அவனின் இளவலையும் மார்புறத் தழுவி வரவேற்றான். முதன்மந்திரி இருவருக்கும் மாலையிட, ‘கீழைசோபனா’ என்ற மாளிகை நோக்கி அனைவரும் சென்றனர். பின்னால் பெருந்திரளாய் வந்த மக்கட்கூட்டம் முன் வாயிலிலேயே தடுக்கப்பட்டது. இளவரசர் அதிராசேந்திரனுடன் சோழச் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்காக ஆறாம் விக்கிரமாதித்தனும், சோழேந்திரன் என்ற பட்டப் பெயருடைய மதுராந்தகனும் மாளிகைக்குள் புகுந்தனர். பின்னால் நுழைந்த வீரசோழ இளங்கோ வேளானை சோழத்தளபதி தன்மபாலர் தனியாக அழைத்தார். “என்ன தளபதியாரே?” என எதிர்காலத் தளபதி நான்தான் என்ற இறுமாப்பில் சற்றுக் கர்வமாகவே கேட்டான். “விஷயத்தைச் சொல்லுங்கள். அங்கே மதுராந்தகரும், விக்கிரமாதித்தரும் என்னைக் காணவில்லையென்று தேடுவார்கள்!” என்றான் வீரசோழன் பரபரப்பாக. இன்னும் கொஞ்சம் தள்ளி அவனை அழைத்துச் சென்ற தளபதி, “உன்னைக் கைது செய்யும்படி சோழச் சக்கரவர்த்தி எனக்குப் பணித்திருக்கின்றார்” என்றார். “என்னது?” -திகைப்புடன் வினவிய வீரசோழன், “கைது செய்யும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?” என்றான் உரத்த குரலில். “இது அரசரைக் கேட்க வேண்டிய கேள்வி!” என்று அவனை நெருங்கினார் சோழத்தளபதி. “நான் சிறைக்குப் போகுமுன் இளவரசர் அதிராசேந்திரரைப் பார்த்துவிட்டுத்தான் வருவேன்” என்று அங்கிருந்து வேகமாய்ப் போக முயல... அவனை விட்டுவிட்டால் அப்புறம் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்த சோழத்தளபதி, “எங்கே போகிறாய் வீரசோழா. நில்!” என்றார் அதிகாரத்துடன். “இல்லை. நான் இளவரசரைப் பார்க்க வேண்டும். பிறகுதான் என் கைக்கு நீ விலங்கிட முடியும்” என்றான் பதட்டம் கலந்த குரலில். முரண்டு பிடிக்கும் அவன் அதிராசேந்திரனைப் பார்த்துவிட்டால் சூழ்நிலை அப்படியே தலைகீழாகிவிடும் என்று அறிந்த சோழத்தளபதி, கைகளைப் பலமாகத் தட்டினார். இதுவரை உருவிய வாளுடன் மறைவாய் நின்று கொண்டிருந்த வீரர்கள் பதினைந்து பேர் வீரசோழனைச் சூழ்ந்துது கொண்டனர். அவனும் தன் வாளை உருவி அவர்களைத் தாக்க முயல சடக்கென்று உள்ளே புகுந்த சோழத்தளபதி வீரர்கள் மேல் வீசப்பட்ட அந்த வாளைத் தன் வாளினால் அதே வேகத்தில் தடுத்து அவனையும் கீழே தள்ளினார். சற்றும் இதை எதிர்பார்க்காத அவன், கால் இடறிக் கீழே விழ, வாளுடன் இருந்த தளபதி வீரசோழன் கையைக் காலால் மிதித்துக் கொண்டு மார்பில் தன் வாளைப் பதித்தார். “அக்கிரமம்! இது அநியாயம்!” என்று உரக்க கத்தினான் வீரசோழன். அதற்குள் வீரன் ஒருவன் அவன் கையிலிருந்த வாளைப் பறித்துக் கொண்டான். இன்னொருவன் கைகளில் விலங்கிட்டு அவனைத் தரையிலிருந்து தூக்கினான். ஆனால் வீரசோழன் முரண்டு பிடித்துத் திமிறியபடி “இந்த அக்கிரமத்துக்கு நீங்களெல்லாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றான் உரக்க. “வரவில்லையென்றால் அப்படியே தூக்கிக் கொண்டு சிறைக்குச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டு தளபதி சிறைக்கூடம் வரை பின்னாலேயே சென்றார். வீரசோழன் சிறைக்குள் தள்ளப்பட்டான். “உனக்குத் தளபதி பதவி பறிபோய்விடப் போகிறது என்ற பயத்தில், மாமன்னரிடம் என்னைப் பற்றி ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லி கைது செய்துவிட்டாய். இதற்குப் பதிலாய் உன்னை நான் இதே சிறையில் தள்ளாவிட்டால், என் பெயர் வீரசோழ இளங்கோ வேளான் இல்லை” என்று சபதம் செய்தான். ‘ஆத்திரத்துடனிருக்கும் அவனிடம் பேசுவது வீண்’ என்று பூட்டிய சிறைக் கதவைச் சோதனையிட்டுவிட்டு, அங்கிருந்து செய்தியைச் சொல்வதற்காக சக்கரவர்த்தி இருக்கும் கூடத்தை நோக்கி வேகமாய் நடந்தார் சோழத்தளபதி. பழி ஒரு பக்கம்; பாவம் ஓரிடம் என்பார்கள்! அதைப் போன்று கோபம் ஒரு பக்கம்; தண்டனை இன்னொருவனுக்கு என்பது போல சக்கரவர்த்தி வீரராசேந்திரர் தன் மகன் மேல் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க அவனுக்கு உறுதுணையாய் இருந்த வீரசோழ இளங்கோ வேளான் மேல் பாய்ந்தார். விளைவு? அவன் சிறையில் அடைக்கப்பட்டான். சற்று அதிகப் பிரசங்கித்தனமாக துணிச்சலுடனே சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அந்தச் சுத்தவீரன் மேல் தளபதி தன்மபாலருக்கு ஒரு கண் ஏற்கனவே இருக்கத்தான் செய்தது. அது தொழில் முறையில் ஒவ்வொருவரும் கொள்ளும் பொறாமைதான்! தளபதி தன்மபாலர் சக்கரவர்த்தியிருக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே விக்கிரமாதித்தர் மாமன்னரின் பஞ்சணைக்கருகில் அமர்ந்திருந்ததைக் கண்டார். பக்கத்தில் மதுராந்தகன் கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தான். அளவுக்கு மீறிய பெண்களின் மோகத்தினால் அவனுடைய முகத்தில் இளமை குன்றியிருந்தது. அதற்குச் சற்றுத் தள்ளி இளவரசர் அதிராசேந்திரர் இருந்தார். தந்தையைப் பற்றிய கவலை அவருக்கு இருந்தாலும், அதனூடே வெகு சீக்கிரத்தில் சோழச் சக்கரவர்த்தியாகப் போகிறோம் என்ற எண்ணத்தின் விளைவாய் ஏற்பட்ட ஒருவித மகிழ்ச்சி முகத்தில் இருக்கத்தான் செய்தது. அதற்கு எதிர்புறமாக தன் கணவன் ஆறாம் விக்கிரமாதித்தன் படைகளுடன் வந்துவிட்டதால் தன் கை ஓங்கிவிட்டது என்ற நம்பிக்கையோடு இராஜசுந்தரி தெம்புடனே இருந்தாள். சோழ வேந்தரின் கால்பக்கமாக அவரின் பட்டத்தரசியான உலகமுழுதுடையாள் கணவன் நிலைமை மோசமாகிவிட்டதே அவர் உடம்பு தேறாதா? என்று கவலையுடன் இருந்தாள். இவர்களைக் கவனித்தபடி அருகே முதன்மந்திரி சிறிது சோகத்துடனே இருந்தார். வீரசோழன் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூற வேண்டும் என்று அங்கே வந்த சோழத்தளபதி, பஞ்சணையில் மாமன்னர் கண்மூடியபடி படுத்துக் கிடப்பதையும், அருகே அனைவரும் மௌனமாய் நிற்பதையும் பார்த்துப் பதட்டத்துடன் அண்மையில் விரைந்து வந்தார். “சக்கரவர்த்தி. சக்கரவர்த்தி! உங்கள் மருமகன் வந்திருக்கின்றார் பாருங்கள்” என்றாள் உலகமுழுதுடையாள். இதுவரை கண்களை மூடியபடியிருந்த சக்கரவர்த்தி மெல்ல விழித்து, ஆறாம் விக்கிரமாதித்தனைப் பார்த்தார். அந்தப் பார்வையில்... ‘இப்போது ஏன் இங்கே வரவேண்டும்?’ என்ற கேள்வி இழையோட புன்னகையோடு, “எப்போது வந்தீர்கள்?” என்றார். “கொஞ்ச நேரம் முன்புதான்” என்று குந்தள மன்னன் கூறுவதற்குள் சக்கரவர்த்திக்கு இருமல் மிகுந்தது. உடலைக் குலுக்கியபடி இருமிய சக்கரவர்த்தி முதன்மந்திரியின் பக்கம் திரும்பி, “அந்தப் பெண்ணை அழைத்து வர ஆளை அனுப்பிவிட்டாயிற்றா?” என்றார். “நீங்கள் சொன்ன அன்றே அனுப்பிவிட்டேன். மதுரையிலிருந்து அவர்கள் வரவேண்டியதுதான் பாக்கி!” என்றார் பிரமாதிராசர். உலகமுழுதுடையாளை அண்மையில் வரும்படிச் சைகை செய்த சக்கரவர்த்தி, “என்னை நிமிர்த்தி உட்கார வைத்தால் நன்றாக இருக்கும்!” என்றார். பணிப்பெண்ணின் உதவியால் இலவம் பஞ்சாலான தலையணைகளை அவர் முதுகுக்குப்பின் அடுக்கி, அதில் சாய்வாய் உட்கார வைத்து, “இப்போது பரவாயில்லையே?” என்றாள். “இன்னும் கொஞ்சம் சாய்வாக்கினால் நல்லது” என்று சக்கரவர்த்தி கூறவும், அவ்விதமே பணிப்பெண் தலையணைகளை சரிக்க... அதில் சாய்ந்து கொண்டு, “இப்போது வசதியாகயிருக்கிறது” என்றார். “உங்களைப் பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாயிருக்றது. எப்படியிருந்தீர்கள்? இப்போது எப்படி ஆகிவிட்டீர்கள்!” என்று ஆறாம் விக்கிரமாதித்தன் வருத்தத்துடன் கூறினான். “எல்லாம் காலத்தின் கோலம் மருமகனே. எனக்கு இப்போது மாகச் சனி. என் உயிர் போகும் வரை இப்படித்தான் என்னை ஆட்டிப் படைக்கும்” என்றார். “மருந்து...” என்று அவர் பணிப்பெண்ணைப் பார்க்க சிறிய பொற்பேழைக்குள்ளிருந்த குளிகையை எடுத்து வாயில் இட்டு மண் ஜாடியிலிருந்த நீரை வெள்ளிக் குவளையில் ஊற்றி அவரைக் குடிக்கச் செய்தாள். பட்டத்தரசி மாமன்னரின் மார்பை நீவிவிட்டாள். மருந்து உள்ளே போன சற்று நேரம் கழித்துத் தெம்புபெற்ற சக்கரவர்த்தி, கம்பீரமாகவே கனைத்துக் கொண்டார். “மருந்தால்தான் நான் இப்போதெல்லாம் உயிர்வாழ முடிகிறது” என்று புன்முறுவலுடனே ஆறாம் விக்கிரமாதித்தன் பக்கம் திரும்பி, “குந்தள நாட்டில் நல்ல விளைச்சல்தானே?” என்றார். “அமோகமான விளைச்சல். இந்த ஆண்டு எனக்கு நல்ல வருடம் என்றுதான் கூற வேண்டும்” என்றான் ஆறாம் விக்கிரமாதித்தன். “சந்தோஷம்!” என்ற வீரராசேந்திரர் காஞ்சிப் பிரதிதியான மதுராந்தகன் பக்கம் திரும்பி, “சோழேந்திரா! நலமாய் இருக்காயா? காஞ்சியின் நிலவரம் எப்படி இருக்கிறது?” என்றார். “அமைதியான சூழ்நிலைதான்” என்ற மதுராந்தகன், “தாங்கள் உடலைப் பற்றி மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்!” என்றான். அதைக் கேட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார். “என் இரண்டாம் மகனுக்கு என் பேரில் எவ்வளவு அக்கறை!” என்று கேட்டுவிட்டு, “நீ சொன்ன யோசனைப்படி நடக்கின்றேன்!” என்றார். உடனே ஆறாம் விக்கிரமாதித்தன் குறுக்கிட்டு, “மதுராந்தகனுக்கு உண்மையிலேயே உங்கள் பேரில் அளவிட முடியாத பாசம்தான். காஞ்சியைவிட்டு நான் புறப்படும் போதே தங்களைப் பார்க்க வருவதாகக் கூறினான். நான்தான் தற்போதுள்ள நிலையில் நீ காஞ்சியைவிட்டு வருவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை என்று கூடச் சொன்னேன் ஆனால் அவன்தான் பிடிவாதமாகப் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடுவதாக என்னுடன் வந்தான்” என்றான். “நல்லது. என் பிள்ளைகள் இவ்வளவு அக்கறையுடன் இருப்பதைப் பார்த்து உண்மையிலேயே நான் பெருமைப்படுகின்றேன்!” என்றார் சோழச் சக்கரவர்த்தி. “காஞ்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மற்றும் அங்கு நிலவும் அமைதியையும் நான் பார்க்கும் போது, என்னால் மதுராந்தகனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கை தேர்ந்த நிர்வாகத்தினன் போன்று அவன் அரசு அதிகாரிகளைச் செயல்பட வைக்கும் திறமை இருக்கிறதே, அதற்கு ஈடாக தங்களைத்தான் அவனுக்கு ஒப்பிட வேண்டும்” என்று சோழ மாமன்னர் வீரராசேந்திரரைப் புன்முறுவலுடன் பார்த்துக் கூறினான் குந்தள வேந்தன். ஏற்கனவே அவர்கள் என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கின்றார்கள் என்பதைச் சோழ ஒற்றர் பிரிவைச் சேர்ந்த இளஞ்சிங்கன் மூலம் அறிந்து கொண்ட முதன்மந்திரி சொன்ன விஷயங்கள், அச்சமயம் சக்கரவர்த்திக்கு நினைவில் வந்தன. மேலைச்சாளுக்கியர் எதற்குப் பீடிகை போடுகின்றார் என்பதை அறிந்து பிரமாதிராசரிடம், “பிரயாணக் களைப்பு நீங்க குந்தள மன்னருக்கு உணவு படையுங்கள். ஓய்வெடுத்துவிட்டு வரட்டும். பிறகு சாவகாசமாகப் பேசலாம்” என்றார். ஆனால் ஆறாம் விக்கிரமாதித்தன், “பிறகு உண்கின்றேன்!” என்று கூறிவிட்டு, சக்கரவர்த்தியின் அருகே நெருங்கி, “தங்களிடம் ஒரு விண்ணப்பம்!” என்றான் தாழ்ந்த குரலில். எதைக் கேட்கப் போகின்றான் என்பதை மனதிற்குள் புரிந்து கொண்ட மாமன்னர், “என்னது?” என்று புரியாத குரலில் அவனைப் பார்த்து வினவினார். “தங்கள் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. அரசுப் பொறுப்பை அதிராசேந்திரரிடம் கொடுத்துவிட்டு, இளவரசுப் பட்டத்தை இப்போதே மதுராந்தகனுக்கு உறுதி செய்துவிடுங்கள்” என்றான். இதை முதலிலேயே எதிர்பார்த்திருந்ததால் முதன்மந்திரியின் பக்கம் திரும்பி, “மேலைச்சாளுக்கிய வேந்தர் சொன்னதைக் கேட்டீர்களா?” என்றார் வீரராசேந்திரர். “கேட்டேன்!” என்று அவர் பணிவுடன் கூற... மௌனமாய் யோசனையில் ஆழ்ந்த சக்கரவர்த்தி மதுராந்தகனைப் பார்த்து, “சோழேந்திரா!” என்றார் அன்புடனே. “என்ன தந்தையே?” என்றான் பணிவோடு. “ஆம், இதில் என்ன சந்தேகம்?” என்றான் அழுத்தமுடன். “நல்லது!” என்று ஒருகணம் கண்களை மூடிய சோழச் சக்கரவர்த்தி விழிகளைத் திறந்து, மதுராந்தகனை அன்புடன் உற்று நோக்கினார். பிறகு “உனக்கு நான் இளவரசுப் பட்டம் என்று உறுதி செய்யாமல் வேறு ஒருவனுக்குச் செய்துவிடுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்! அதற்காக உத்தமமகன் என்ற முறையில் நீ கோபிக்கமாட்டாய் அல்லவா?” என்றார். மதுராந்தகனுக்கு முகம் மாறியது. மறைத்துக் கொள்ள வேண்டி தலைகுனிந்து கொண்டான். “சக்கரவர்த்தியின் மனதை யாரோ மாற்றிவிட்டார்கள். எந்த நாட்டிலும் ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் கட்டி நான் பார்த்திருக்கின்றேன்” என்றான் ஆறாம் விக்கிரமாதித்தன் சற்று உரக்கவே. அதைக் கேட்ட வீரராசேந்திரர் உணர்ச்சி வயப்படாமல் விக்கிரமாதித்தனைப் புன்முறுவலுடனே கவனித்து, “என் மருமகன் மிக உணர்ச்சிவயப்பட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்” என்றார். “ஆமாம். என் மைத்துனனுக்கு இளவரசுப் பட்டம் என்று இல்லாது எங்கிருந்தோ இங்கு இரந்து தின்ன வந்திருக்கும் ஒரு பிச்சைக்கார ஓநாய்க்கு இளவரசுப் பட்டம் என்றால் சோழ நாட்டின் மேல் மிகுந்த அக்கறை கொண்ட தங்கள் மருமகனான எனக்கு ஆத்திரம் வராமல் வேறு என்ன வரும்?” என்றான். சக்கரவர்த்தி உதடுகளைக் கடித்துக் கொண்டார். கோபத்தினால் முகம் சிவந்து காணப்பட்டது. இருந்தாலும் பொறுமையுடன் அதை அடக்கிக் கொண்டு, “என்ன சொன்னீர்?” என்றார் அழுத்தமாக. “மதுராந்தகனைத் தவிர வேறு யாருக்கும் இளவரசுப் பட்டம் என்று நீங்கள் உறுதி செய்யக் கூடாது என்று கூறுகின்றேன்!” என்று அதைவிட அழுத்தமாகக் கூறினான். சக்கரவர்த்தி சப்தமாகவே சிரித்தார். அதன் விளைவாய் இருமல் வெளிப்பட்டது. அதற்காக அவர் பலமாய் இரும... உலகமுழுதுடையாள் அவரின் நெஞ்சை நீவியபடி சூழ்நிலையை அத்துடன் முடித்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது என்ற எண்ணத்தில், “பிறகு பேசலாமே. உங்களுக்குத்தான் தற்போது உடல்நலமில்லாது இருக்கின்றதே” என்றாள். “இது முக்கியமான விவகாரம். இதில் போய் உடல்நலமில்லை என்று பார்ப்பது எனக்குப் பின்னால் நாட்டில் குழப்பம்தான் ஏற்படும்!” என்ற அவர், “நான் தற்போது நிலவும் சோழ நாட்டின் சூழலை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்றார். “சக்கரவர்த்தி அவர்களை நான் மறுத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். தற்போதிருக்கும் சூழலை ஆராய்ந்துதான் நானும் சொல்கின்றேன். மதுராந்தகனைத் தவிர வேறு யாருக்கும் இளவரசுப் பட்டம் என்று உறுதி செய்தால், நாட்டில் குழப்பம்தான் ஏற்படும்” என்றான் சினத்தோடு. சோழ வேந்தருக்குக் கோபம் கொப்பளித்தது. “என்னைப் பயமுறுத்துவதாகத் தெரிகிறது!” என்றார். “இல்லை, பின்னால் நடக்கும் விஷயத்தை முன்கூட்டியே சொல்கின்றேன்!” “பின்னால் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் நானும் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்!” என்று அதற்கு மறுமொழி தந்தார் மாமன்னர். “உங்களின் முடிவு ஒருதலைப் பட்சமானது. நோயுற்று குழப்பத்திலிருக்கும் தங்கள் மனதை யாரோ மாற்றிவிட்டதின் விளைவு இது!” என்றான் குந்தள மன்னன். சோழ அரசர் அவனை மௌனமாகவே ஏறிட்டு நோக்கி, “என்னை யாரும் மாற்றவில்லை, மாற்றும் அளவுக்கு நான் குழப்பத்திலும் இல்லை. ஆண்டவன் அருளால் மிகத் தெளிவாகவே இருக்கின்றேன்” என்றார் அழுத்தமுடன். “இல்லை; உங்கள் மனம் மாற்றப்பட்டுவிட்டது. இதை நீங்கள் மறுத்தாலும், உங்கள் மனச்சாட்சி மறுக்காது” என்று மீண்டும் கூறினான் உறுதியாக. “என்ன இதெல்லாம்? மரியாதைக்குரிய சோழச் சக்கரவர்த்தியிடம் இப்படியா நீங்கள் பேசுவது? எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!” என்றாள் பட்டத்தரசி வருத்தம் தோய்ந்த குரலில். “ஓ... இறக்கை முளைத்துவிட்டதல்லவா? அப்படித்தான் பேசுவீர்கள். ஆனால், நான் நாற்பது வயதுவரை என் தமையன்மாரின் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்த்ததில்லை. அவ்வளவு மரியாதை கொடுத்து வாழ்ந்ததால்தான், இப்போதும் நான் ஆட்சி பீடத்தில் இருக்கின்றேன்! ஆனால் இப்போது காலம் கெட்டுப் போய்விட்டது” என்று கோபத்துடன் மௌனமுற்ற சோழ மாமன்னர், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டார். பட்டத்தரசி அருகில் வந்து அவரின் நெற்றியை வருடிய படி, “ஏன் பதட்டத்துடன் பேசுகின்றீர்கள்? நிதானமாய் இருங்கள்!” என்று கண் கலங்கக் கூறி, சரிந்துவிட்ட தலையணையை நிமிர்த்தி அவரை அதில் சாய்த்துவிட்டாள். “மன்னர் உடல் நலம் எய்திய பிறகு, நிதானமாய்ப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம். இப்போதிருக்கும் நிலையில் இதெல்லாம் வேண்டாம். குந்தள மன்னரை அழைத்துக் கொண்டு போய், அவருக்கு உணவு முதலிய வசதியைச் செய்துகொடு” என்றாள் அதிராசேந்திரனிடம். “அதிராசேந்திரனுக்குப் பிறகு மதுராந்தகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் என்று சக்கரவர்த்தியின் வாயால் கூறும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை” என்றான் ஆறாம் விக்கிரமாதித்தன் திட்டமான குரலில். அந்த வார்த்தையைக் கேட்ட சோழ மன்னர் சினத்தின் உச்சிக்கே சென்றார். “பிரமாதிராசா! இப்போதே இராசேந்திரனை உடனே புறப்பட்டு வரும்படி மதுரைக்கு ஆள் அனுப்பு” என்றார் கட்டளைக் குரலில். அந்தக் குரலில் தொனித்த உறுதியைக் கண்டு, அனைவரும் திகைத்துவிட்டனர். முதன்மந்திரிக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. வெளிப்படையாக அரசர் இவ்விதம் கூறிவிட்டதால் இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று இவர்கள் நினைக்கப் போகின்றார்கள். எதிராளிக்கு இவரின் வெளிப்படையான அறிவிப்பினால் இன்னும் கொஞ்சம் கோபம் கூடப்போகிறது! அதனால் அவர்கள் எப்படியும் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் என்பதில் முழுமூச்சுடன் செயல்படுவார்கள். நோய் முற்றிவிட்டதால் அரசர் அடிக்கடி நிதானத்தை இழந்துவிடுகின்றார். என்ன செய்வது என்ற எண்ணத்துடன் ‘நீங்கள் இம்மாதிரி பதட்டப்பட்டு வார்த்தைகளை இவர்களிடம் கொட்டியிருக்க வேண்டாம்!’ என்று பொருள்படும் விதத்தில் அரசரைப் பார்த்தார் முதன்மந்திரி. ஆனால் மாமன்னரோ, “ஏன் இன்னும் நிற்கின்றாய்! இது சக்கரவர்த்தியின் கட்டளை. கூப்பிடு அந்த திருமந்திர ஓலை நாயகனை!” என்று அந்த அறை அதிரும்படி உரத்த குரலில் முழங்க... “என்னப்பா இதெல்லாம்! இதற்குத்தான் அப்போதிருந்தே சொல்லிக் கொண்டு வந்தேன்!” என்று பட்டத்தரசி கலக்கத்துடன் கதறினாள். முதன்மந்திரி அரச மருத்துவரை அழைத்து வரும்படிக் காவலனைப் பணித்தார். ஓடி வந்த மருத்துவர் நாடிபிடித்து, “உணர்ச்சி வயப்பட்டதின் விளைவு இது” என்று ஒரு குளிகையை எடுத்துத் தேனில் குழைத்து நாவில் தடவினார். நொடிகள் கடந்து கொண்டிருந்தன. “நாடி இயல்பான நிலைக்கு வந்துவிடும். இன்னும் சற்று நேரத்தில் அரசர் கண் விழிக்கலாம்! அதற்குப் பிறகு யாரும் அவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது” என்றார். பட்டத்தரசியைத் தவிர அனைவரும் அங்கிருந்து அகன்றனர். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|