உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 1 உலகெங்கும் தன் ஒளிக்கற்றைகளால் இருளைப் போக்கி, இவ்வுலக உயிர்கட்கு வாழ்வும், வளமும் தந்துதவும் சூரியன், கீழைக் கடலில் உதயமாகிக் கொண்டிருந்தான். கோடிக்கணக்கான மாணிக்கக் கற்களைக் கடலில் பரப்பினால் எப்படியிருக்குமோ, அப்படி கதிரவன் ஒளிபட்ட நீர்ப் பரப்பு முழுவதும் இரத்தச் சிவப்பாய்ச் சிவந்து ஜொலிக்கத் தொடங்கியது. திடீரென்று இவ்விதம் கடல் சிவந்து போவதைக் காணப்பொறாத வாயுபகவான், எப்படியும் அதைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்துடன், தன் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி, கடலில் பெரிய, பெரிய அலைகளை உண்டுபண்ணி, இங்குமங்கும் அதைப் புரட்ட, மாணிக்கக் கற்கள் உருண்டு புரண்டு ஓடினால் எப்படி அழகாய்த் தோன்றுமோ, அப்படிப்பட்ட அழகுதான் அங்கு நிகழ்ந்ததேயன்றி, வாயுபகவான் நினைத்தது போல வேறெதுவும் நடக்காததால், முயற்சி தோற்றுவிட்ட ஆத்திரத்தில் கரை ஓரம் நங்கூரமிட்டிருந்த சோழநாட்டுப் போர்க் கப்பல்களை, ஒரு அசைப்பு அசைத்துவிட்டு வெகு தூரம் சென்றோடி மறைந்தான். அதைப் பார்த்த கதிரவன் தன் பொன்னிறக் கதிர்களில், இன்னும் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கடலை மேலும் சிவப்பாக்கி, ‘கடார வெற்றியீட்ட சோணாட்டு வீரர்கள் சிந்திய இரத்தச் சிவப்பின் பிரதிபலிப்பு இது! அதனால், இதை மாற்ற வாயுவே நீர் முயற்சி செய்ய வேண்டாம்’ என்று, அந்தக் காலை நேரத்தில், மேல் நோக்கி எழுந்து, நாகைத் துறைமுக வாயிலில் கூடி இருந்த மக்கட் கூட்டத்தின் மீது தன் வெளிச்சத்தை நன்கு பரப்பினான். அதிகாலை வருவதற்கு முன்பே அங்கே குழுமியிருந்த மக்கள், வெளிச்சம் வந்த உற்சாகத்தில், நாகையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரம் நோக்கிச் செல்லும் பெருவழியில் வைத்த விழி வாங்காமல், யார் வரவையோ எதிர்ப்பார்த்து நின்று கொண்டிருந்தனர். பத்து முழத்திற்கு ஒருவர் வீதம், மக்களைப் பெருவழி ஓரமாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொண்டு, வேல் வீரர்கள் வேல்களுடன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தனர். மக்களின் வரிசை பிரிந்து போகாமல் இருக்க, இங்கும் அங்கும் புரவியைச் செலுத்தியவாறு, புரவி வீரர்களும் கூட்டத்தைக் கண்காணித்து வர, எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர நடைபெறுகின்றனவா என்று துறைமுக வாயிலையொட்டி அமைந்த பெரிய மேடையில் நின்றவாறு இடுப்பில் கைகளை ஊன்றியபடி ஓர் இளைஞன் இவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக மக்கட் கூட்டம் அதிகமாகியது. கூட்ட நெரிசலைத் தாங்க மாட்டாமல் களைப்படைந்த முதியவர் ஒருவர் தம் பக்கத்தில் இருந்தவனிடம், “எப்போது அப்பனே, அரசர் வருவார்?” என்று கேட்டார். “உங்களைப் போலத்தான் நானும் நிற்கிறேன்! எனக்கு எப்படித் தெரியும்?” என்று பெரியவர் பக்கம் திரும்பினான் அவன். முகத்தில் குறுந்தாடியும், இரு கண்களில் ஒன்று ஊனப்பட்ட நிலையிலும், மூக்கில் பொன் வளையமும் அணிந்திருந்த அவன், பார்ப்பதற்குக் கொடூரமாக இருந்தான். அரச விவகாரங்களில் சம்பந்தப்பட்டவன் போல் முதியவருக்குத் தோன்றவே, ‘ஒற்றனாக இருப்பானோ? அப்படியிருந்தால் நம் சோழ நாட்டு ஒற்றனா? அல்லது வேற்று நாட்டானா?’ என்று குழப்பத்துடனே, “ஐயா தாங்கள் எந்த ஊர்? பெயர் யாதோ?” என்று அவனிடம் வினவினார். “என் பெயர் காளிங்கராயன். ஊர்...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எக்காளம் முழங்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, “வந்துவிட்டார்! வந்துவிட்டார்!” என்று குரல்கள் ஒலித்தன. “யார் அரசரா?” என்று முதியவர் கூட்டத்தை விலக்கிப் பார்க்கலானார். “மகாராசாதிராசர், சகல புவனாசிரியர், ஸ்ரீமேதினி வல்லவர், பரமேசுவரர், பாண்டியர்களையும் சாளுக்கியர்களையும் புறங்கண்ட சோழ நாட்டுச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரான அதிராசேந்திரர்” என்று கட்டியங்காரன் சொன்னதும், தொடர்ந்து “வாழ்க! வாழ்க!” என்ற குரல்கள் வானைப் பிளந்தன. வீதியோரங்களிலும், மாடமாளிகைகளின் முன்றில்களிலும், கூடகோபுரங்களின் முகப்புகளிலும், நின்று கொண்டிருந்த மக்கள் இளவரசர் அதிராசேந்திரர் மீது மலர்களைச் சொரிந்தனர். அதே சமயம் துந்துபி முழங்கியது. சங்கு எக்களாக் கருவிகள் ஒலித்தன. கூட்டத்தைப் பார்த்துக் கையை அசைத்தபடி புரவியிலிருந்து இறங்கிய சோழ நாட்டு இளவரசனான அதிராசேந்திரன், நாகைத் துறைமுகத்தின் வாயிலில் நுழைந்தான். இதுவரையில் மேடையில் நின்று கொண்டிருந்த திருவரங்கன் என்ற அந்த இளைஞன், விரைந்து அதிராசேந்திரன் அருகில் சென்று வணங்கி வரவேற்றான். “அதோ அமைச்சர்!” என்று மக்கட் கூட்டம் குதூகலத்துடன் சொல்ல, அமைச்சர் பிரம்மாதிராசர் தேரிலிருந்து இறங்கி அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக புன்முறுவலுடன் தலைவணங்கி உள்ளே புகுந்தார். “அமைச்சர் முகத்தில் தெம்பேயில்லை.. கவனித்தீர்களா?” என்று முதியவரிடம் கேட்டான் காளிங்கராயன் என்ற பெயருடைய அந்த ஒற்றைக் கண்ணன். பெரியவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். “என்ன... எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று பார்க்கிறீர்களா? அதோ பாருங்கள். பட்டத்தரசியும் இளைய ராணியும் வருகிறார்கள்!” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்கும், அன்ன முகப்புடைய அரச மகளிர் வரும் அலங்காரத் தேரில் இருந்து இரு அரச குல மகளிர்கள் இறங்குவதற்கும் சரியாக இருந்தது. பட்டத்தரசி என்று சோழ நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சோழச் சக்கரவர்த்தியின் தேவியான உலகமுழுதுடையாளும், அதே பெயருடைய இளவரசர் அதிராசேந்திரனின் மனைவியும், புன்முறுவலுடன் மக்களை நோக்கி வணங்கிவிட்டுத் துறைமுகத்திற்குள் புகுந்தனர். ஆஹா! ஏறக்குறைய நாற்பது வயதை நெருங்கிவிட்டாலும் அந்தப் பட்டத்தரசியின் முகத்தில்தான் எத்தனை பொலிவு! திருமகளே இறங்கி வந்தாற் போன்றல்லவா சர்வ லஷ்ணங்களும் பொருந்தி தெய்வீக அம்சமாய்த் திகழ்கின்றார்கள்! அவரைப் பின் தொடர்ந்து செல்லும் இளவரசர் அதிராசேந்திரனின் மனைவியாருக்கு மட்டும் என்ன குறைச்சல்? அவர்களும் ரதி அம்சமாய்த்தான் பரிமளிக்கின்றார்கள்! இவ்விதம் மக்கட் கூட்டம் அரச தரிசனம் கிடைத்தது என்ற மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க, காளிங்கராயன் முதியவரிடம், “அரசர் ஏன் வரவில்லை என்று தெரியுமா?” என்றான். “எனக்கு எப்படி அப்பனே தெரியும்? அரச தரிசனம் வேண்டி பத்துக்கல் தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். அவர் இல்லாமல் போனாலும் அவரின் பட்டத்தரசியையும், இளவரசரையும் தரிசித்துவிட்டேன். அதுவே போதும்!” என்றார். காளிங்கராயனுக்கு அப்பதில் எரிச்சலைத்தான் கொடுத்தது. சரியான மௌடீகம் என்று மனத்திற்குள் நினைத்தபடி “அரசருக்கு உடல் நலமில்லை; அத்துடன் மனக்கவலை வேறு! அதனால்தான் கடாரம் சென்று மாபெரும் வெற்றியீட்டி திரும்பியிருக்கும் வேங்கி நாட்டு இளவரசனும், கங்கை கொண்ட சோழரின் திருக்குமாரத்தியுமான அம்மங்கைதேவியின் மகனான இராசேந்திரனை வரவேற்க இங்கே வரவில்லை” என்றான். “கொஞ்ச நாள் வரை நன்றாகத்தானே அரசர் இருந்தார். கூடல் சங்கமத்துப் போரில் மேலைச் சாளுக்கிய மன்னனான ஆகவமல்லனையும் அவன் புதல்வர்களையும் வென்று கைப்பற்றிய நாடாகிய இரட்டபாடியில் உள்ள சேராம் என்னும் ஊரை மூன்று பிராமணர்களுக்கு உத்தராயண சங்கராந்தி நாளில் பிரம்மதேயமாக சிறிது நாட்களுக்கு முன்புதானே அளித்தார்!” “அதெல்லாம் பழைய கதை. இப்போது...? அமைச்சர் பிரம்மாதிராசர் முகத்தைப் பார்த்தீர்களா? அசைக்க முடியாத மலை போல் மன உறுதி படைத்த அவர் முகத்தில் கவலைக் குறி தோன்றிவிட்டது!” “அப்படியா செய்தி?” என்று இன்னொருவன் வந்து சேர்ந்தான் அப்போது. ‘இது யார் புதிதாக..?’ என்று காளிங்கராயன் அவனை முறைக்க, மழுங்க தலையை மொட்டையடித்து, நெற்றியில் திருநீறு விளங்க, கழுத்தில் உத்திராட்சமாலையும், இடையில் நான்கு முழத்துண்டுமாக “சிவசிவ” என்று சொல்லியபடி ஒரு சிவ பக்தனாக அவன் இருந்தான். காளிங்கராயன் ஐயத்துடனேயே அவனை ஏற இறங்கப் பார்க்க... “என்ன அப்பனே அப்படிப் பார்க்கிறாய்? ஏதோ சொல்ல வந்தாய். அதைக் கேட்கவே தூரத்திலிருந்த நானும் அருகில் வந்தேன்!” என்றான் அம்மையப்பன் என்ற பெயருடைய அந்தச் சிவபக்தன். “ஒன்றுமில்லை.. நாங்கள் பொழுது போவதற்காக பேசிக் கொண்டிருக்கிறோம். ஈசர் ஒன்றே என்று சிந்தனையுடன் இருக்கும் தங்களுக்கு ஏன் எங்கள் பேச்சில் அக்கறை?” என்றான் காளிங்கராயன் கடுப்புடன். அம்மையப்பன் கலீரென்று நகைத்தான். “அவனின்றி ஓரணுவும் அசையாது. நீங்கள் பேசும் இந்தப் பேச்சிலும் ஈசன் இருக்கிறான்! இதைப் புரிந்து கொள் அப்பனே” என்றான். இவன் உண்மையான சிவபக்தன்தானா? அல்லது பொய்யனா? எதுவாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காளிங்கராயன் மனத்திற்குள் முடிவு பண்ணி, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். சிறிது நேரம் அமைதி நிலவியது. “கடாரம் சென்று திரும்பியிருக்கும் வீரர்கள் கப்பலைவிட்டு வர இன்னும் நேரமாகும். அது வரைக்கும் நாம் வெறும் வயிற்றோடு இருக்க முடியாது. ஏதாவது சாப்பிடலாம் வருகின்றீர்களா?” என்றான் காளிங்கராயன் பெரியவரிடம். “ஆமாம்! ஆமாம்! நீங்கள் சொல்வதும் சரிதான்” என்று பெரியவர் சுற்றுமுற்றும் பார்த்தார். தூரத்தில் இளநீர்க் குலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அதற்குப் பக்கத்தில் தென்னை ஓலையால் வேயப்பட்ட தண்ணீர்ப் பந்தல் ஒன்று இருந்தது. “நான் கட்டுச்சோறு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள்..?” என்று காளிங்கராயனைக் கேட்டார் முதியவர். “தேன்குழல்.. அப்பம் இப்படி வாங்கித் தின்றுவிட்டு தண்ணீர்ப் பந்தலில், கொஞ்சம் மோர் வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்” என்றான். “சரியான ஆளப்பா நீ! உன் வயதில் நான் என்ன மாதிரி சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா? இது மாதிரி ஏதாவது நடக்கும் என்று தெரிந்துதான் ஓர் ஆள் கூட சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு வைக்கச் சொன்னேன் என் மருமகளிடம். வா! அந்தப் பக்கம் போய் சாப்பிடலாம்!” என்று முதியவர் தண்ணீர்ப் பந்தலை நோக்கி நடக்கலானார். காளிங்கராயன் தன் பக்கம் இருந்த அம்மையப்பனுக்காகத் திரும்பினான். இப்போது அவனைக் காணவில்லை. நினைத்தது சரியாய்ப் போய்விட்டது. நிச்சயம் போலிச் சிவப்பழமாகத்தான் இருப்பான் என்று நினைத்துக் கொண்டு முதியவரைப் பின் தொடர்ந்தான். இருவரும் தண்ணீர்ப் பந்தலைக் கடந்து பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்தனர். தாமரை இலையில் புளியோதரையை வைத்து “சாப்பிடு அப்பனே!” என்று காளிங்கராயனிடம் நீட்டினார் முதியவர். அச்சமயம் இவர்களை நோக்கி யாரோ நடந்து வரும் சப்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தனர். முறுக்கிய மீசையும் வலது பக்க நெற்றியில் பெரிய வெட்டுக்காயத்துடனும், திண்ணிய உடலோடு ஒருவன் மிடுக்காக இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தான். “வாப்பா தென்னா! புளியோதரையில் கொஞ்சம் எடுத்துக் கொள்” என்று வந்தவனிடம் நீட்டினான் காளிங்கராயன். “நீ சாப்பிடப்பா! நான் தருகிறேன்!” என்று இன்னொரு இலையில் புளியோதரையை வைத்து அவனிடம் கொடுத்தார் முதியவர். “பரவாயில்லை இன்று நமக்கு யோகந்தான்” என்று வாங்கிக் கொண்ட தென்னன், காளிங்கராயன் பக்கம் திரும்பி “கடவுளைக் கூட பார்த்துவிடலாம் போலிருக்கு. உன்னைப் பார்ப்பது கடினமாக இருக்கிறதே” என்றான். “என்னப்பா இது அதிசயம்? உன்னைத் தேடித்தானே நானும் இங்கே அலைகிறேன்!” என்றான் காளிங்கராயன் பதிலுக்கு. “நல்ல வேடிக்கைதான்! நீ வேலை செய்யும் நாகை ஜோதிடரிடம் கூடப் போய்க் கேட்டேன். அவர்தான் நீ அரசரைப் பார்க்க விரும்பி, இங்கே போய்விட்டதாகச் சொன்னார். இல்லையென்றால் இந்நேரம் நான் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்திருப்பேன்” என்றான் தென்னன். அப்பொழுது... அந்தப் பகுதியையே கதிகலங்க வைப்பது போல எக்காள ஒலி முழங்கியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த மூவரும் நிமிர்ந்தனர். “கடாரம் சென்ற வீரர்கள் கப்பலிலிருந்து இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது” என்றான் தென்னன். “நான் பார்க்க வேண்டுமே!” என்று பெரியவர் பரபரப்புடன் சோற்றுக் கவளத்தை விழுங்கலானார். “கடார வெற்றி ஈட்டி வந்திருக்கும் இராசேந்திரனை வரவேற்கும் சாக்கில், சோதிடரைப் பார்ப்பதற்காகத்தான் பட்டத்தரசியும் வந்திருக்கின்றார்” என்று மெதுவாய்க் காளிங்கராயனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் தென்னன். “என்ன விஷயமோ?” “பிறகு சொல்கிறேன்” என்றான். பெரியவர் சோற்றை மூடிவிட்டு எழுந்துவிட்டார். “என்ன பெரியவரே, ஏன் எழுந்துவிட்டீர்?” “இதையெல்லாம் பார்க்கத்தானே பத்துகல் தூரத்திலிருந்து வந்திருக்கின்றேன்!” “அப்படி என்றால் நீங்கள் போங்கள். நாங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வருகின்றோம்” என்றான் காளிங்கராயன். பெரியவர் கைகளைச் சுத்தம் செய்து கொண்டு, கூட்டத்தை நோக்கி நடக்கலானார். அவர் போவதையே கவனித்த தென்னன், “அரண்மனையிலிருந்து செய்திகள் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். காளிங்கராயன் சுற்றும் முற்றும் பார்த்தான்... கூப்பிடு தூரத்தில் சிறிய மண்டபம் ஒன்று தென்பட்டது. ‘அதுதான் சரியான இடம்!’ என்று இருவரும் மண்டபத்தை நோக்கி நடக்கலானார்கள். இதுவரை தண்ணீர்ப் பந்தலின் அருகில் மறைவாக நின்று இவர்களைக் கவனித்து வந்த அம்மையப்பன், வேறு வழியாக மண்டபத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|