(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 30 மிகுந்த நம்பிக்கைக்கு உரியவனை அனுப்பி மதுரையிலிருந்து இராசேந்திரனை வரவழைக்க வேண்டும் என்று திட்டமிட்ட முதன்மந்திரி அதைச் செயலாற்றும் முறையில் யாரை அனுப்பலாம் என்று சோழத் தளபதியுடன் ஆலோசித்தார். ஒற்றர் படையில் இருக்கும் அரசரின் நம்பிக்கைக்கு உரியவனான காரனை விழுப்பரையன் பெயரைச் சோணாட்டுத் தளபதி கூற அவனைக் கூப்பிட்டனுப்பினார் பிரமாதிராசர். ஏற்கனவே ஒருவன் இரத்தினாதேவியை அழைத்துவர அனுப்பப்பட்டுவிட்டான். தற்போது இன்னொருவன்? என்ன செய்வது? சூழ்நிலை அம்மாதிரி இருக்கிறது. அத்துடன் இராசேந்திரன் மதுரையில் இருப்பதாகவும் அவனைக் கொல்ல இரத்தினாதேவி அங்கே போயிருக்கின்றாள் என்பதையும் மனதில் வைத்துத்தான் அவனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மேற்கொண்டு இதுவரை அவனுக்கு எதிரிடையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார்கள். அதனால் நாம் அதைப் பயன்படுத்திக் கொண்டு இராசேந்திரனை இரகசியமாய் யாருக்கும் தெரியாமல் மதுரையிலிருந்து இங்கே வரவழைத்து திடீரென அவனுக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும். கடைசி வரையில் இராசேந்திரன் மதுரையில் இருக்கின்றான் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் உண்டுபண்ணிவிட்டாலே அதுவே நமக்குப் பெரிய வெற்றிதான் என்ற முடிவுக்கு வந்த முதன்மந்திரி, காரனை விழுப்பரையனை மதுரைக்கு அனுப்பி இராசேந்திரனை இரகசியமாய் மாறுவேடத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அழைத்துவர வேண்டும் என்று திட்டமிட்டார். இங்கே அவன் மதுராந்தகியைக் கைப்பிடிக்கும் வரை இராசேந்திரன் மதுரையில் இருப்பதாகவே ஒரு வீண் பிரமயை எதிரிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். சோழச் சக்கரவர்த்தியின் கூற்றுப்படி இராசேந்திரனை இங்கே வரவழைக்க ஒரு வீரன் எல்லோருக்கும் தெரியும் விதத்தில் மதுரை புறப்பட வேண்டும். அவன் மதுரை சேரும்வரை, எதிரிகளின் கவனம் அவன் மேல்தான் இருக்கும். அதைப் பயன்படுத்தி இங்கே நாம் திருமணக் காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்ற எண்ணத்தோடு காரனை விழுப்பரையனுக்கு பிரயாண வசதிகள் செய்து கொடுத்துப் புரவியில் இரகசியமாய் அவனை மதுரை போகும்படி அனுப்பி வைத்தார். அதே சமயம்... வலையிலிருந்து நழுவிவிட்ட மீனாக இராசேந்திரன் இரத்தினாதேவியின் மோகன வலையில் சிக்காமல் ஒதுங்கிக் கொள்ள, அவனை மோகன வலையில் சிக்க வைத்து அவன் உயிரைப் பறிக்கும் தருணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் கடார இளவரசி. அப்பொழுது ‘சரக் சரக்’ என்று காலணியின் சத்தம் கேட்டது. அதனால் சிந்தனை கலையப் பெற்றுத் திரும்பினாள். மதுரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோழ அரசினரால் அனுப்பப்பட்ட இராசேந்திரன் கம்பீரநடை நடந்தபடி வந்து கொண்டிருந்தான். இரத்தினாதேவியின் விழிகளது கால்பகுதி மட்டுமே திறந்த நிலையில் அவனைப் பார்த்த கடார இளவரசி தற்போது முன்பக்கமாய்த் திரும்பி இமைகளை முழுக்க விரித்து பார்வையில் ஆவல் கொப்பளிக்க அவனைப் புன்முறுவலுடன் நோக்கினாள். பதிலுக்கு அவன் உதடுகளிலும் புன்முறுவல் நெளிந்தது. அடுத்தகணமே அதை மறைத்துக் கொண்டு, “கடார இளவரசியாருக்கு வேலை ஒன்றும் இல்லை போலிருக்கிறது!” என்றான் சிரித்தவாறு. “தாங்கள் சொல்வது தவறு. அதோ பாருங்கள்!” என்று தூரத்தில் தெரிந்த வைகையைச் சுட்டினாள். அண்மையில் வந்த இராசேந்திரன், “வெறும் வைகையைச் சுட்டுகின்றீர்கள்!” என்றான். “நன்றாக உற்றுப் பாருங்கள்! அதில் நதி மட்டுமா தெரிகிறது?” என்றாள் குறுநகையுடனே. “ஆம்! என் கண்களுக்கு நதி மட்டும்தான் தெரிகிறது!” என்றான் உறுதியாக. “எனக்கு அதற்கு அப்பால் ஒன்று தெரிகிறது” என்று தன் கூர்விழிகளை அவன் மீது பரப்பி முறுவலித்துச் சொன்னாள். “அதற்கு அப்பால் என்ன தெரிகிறது!” என்று மீண்டும் அதை உற்று நோக்கிய இராசேந்திரன், “என் சிற்றறிவுக்கு ஒன்றுமே புலப்படவில்லை!” என்றான். “நதிக்குப் பக்கத்திலேயே அடர்ந்த காடு ஒன்று இருக்கிறது பார்த்தீர்களா?” என்றாள். “ஆம்; காடு இருக்கிறது. அதற்கு என்ன இப்போது?” என்றான் சற்று எரிச்சலுடனே. “அந்தக் காட்டில்தான் மாமன்னருக்குத் தேவைப்படும் மூலிகை இருக்கிறது!” என்ற இரத்தினாதேவி, “தாங்கள் என்னுடன் கூட வந்தால் அதைக் கண்டுபிடித்துவிடலாம்!” என்றாள். ‘ஆகா! என்ன சூழ்ச்சியைக் கையில் வைத்துக் கொண்டு என்னை அங்கே கூப்பிடுகின்றாள்?’ -என்று சிந்தனை வயப்பட்ட அவன்... அவளை மேலும், கீழும் பார்க்க... “வாருங்கள். சோழச் சக்கரவர்த்தியின் உயிர் காப்பாற்ற வேண்டும் என்பதில் உங்களுக்கு அக்கறையில்லையா?” என்று மயக்கும் மொழியில் அவனைக் கேட்டாள். “இருக்கிறது. ஆனால் எனக்கு அத்துடன் ஒரு ஐயமும் தோன்றுகிறது” என்றான். “என்னது?” “நான் வந்தால்தானா அந்த மூலிகை கிடைக்கும்? இல்லையென்றால் கிடைக்காதா?” என்றான் இராசேந்திரன் இளநகையோடு. “ஆமாம். அதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. மூலிகை என்பது உடனே போய்ப் பறித்துவிடுவது அல்ல. பல நாட்கள் பல இடங்களில் கஷ்டப்பட்டுத் தேட வேண்டும். அப்படித் தேடும் நபர் ஒருவர் அல்ல. பலர்... இப்போது கூட அந்த நாட்களை நான் நினைக்கின்றேன். என் குருநாதருடன் காடுகளில் அலைந்த நாட்களை நினைக்கும் போது, கால்கள் வலித்த வலி இருக்கிறதே! அப்பப்பா சொல்லும் தரமன்று?” என்றாள். “மூலிகையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது? நான் எப்படி உன்னுடன் வந்து தேட முடியும்?” என்றான் இராசேந்திரன். அதைப் பார்த்த இராசேந்திரன் இந்த இதழ்களுக்கு அந்தச் சிறிய முறுவல் எத்தனைப் பொருத்தமாய் இருக்கிறது! என்று வியந்து அதற்குமேல் அதைப் பார்த்தால் தன் மனதிற்குள் அம்மாயக்காரி புகுந்துவிடுவாள் என்று எச்சரிக்கையடைந்து, பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். “ஏன் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டீர்கள்? என்னைக் கண்டால் உங்களுக்குப் பயமா?” என்றாள் வேண்டுமென்றே. “பயமா? சே... சே... எனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது! வேண்டுமானால் உங்களுக்குத் துணையாக வேறு ஒரு ஆளை அனுப்புகிறேன்!” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான். “வேறு ஆளா? உங்கள் கண்களுக்கு இருக்கும் சிறப்பு அந்த நபருக்கு இருக்குமா?” “என் கண்களுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?” “சட்டென்று யாரையும் கவர்ந்துவிடும் தன்மை! செடிகளோடு செடியாக இருக்கும் மூலிகை, நீங்கள் போனவுடன் உங்கள் கண்களுக்கு இருக்கும் வசீகரத்தில் மயங்கி எளிதில் அது புலப்பட்டுவிடும்!” “மூலிகை என்பது பெண்ணா?” “ஆம்! அந்த மூலிகை பெண் இனத்தைச் சேர்ந்தது!” “எப்படி அவ்வளவு திட்டமுடன் சொல்கின்றாய்?” “எனக்கு அனுபவம் இருக்கிறது. இந்தக் கண்களுக்காக என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டு இப்போது நான்...” என்ற அவளை, இராசேந்திரன் சிரித்துக் கொண்டே இடைமறித்து, “இனிமேல் தாங்கமாட்டேன்! எனக்குத் தலைக்கு மேல் அலுவல்!” என்று அங்கிருந்து நகரத் தொடங்கினான். “கொஞ்சம் நில்லுங்கள்! இன்னும் நான் வார்த்தையை முடிக்கவில்லையே!” “அதற்குள் நான் முடிந்து போவேன்” என்று கூறியபடி, சிரித்தவாறு அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். தன் மாய வலையில் அகப்படாத ஆத்திரத்தினால், அவளின் விழிகள் இரண்டும் சிவந்தன. “இந்தக் கடார இளவரசி எடுத்த சபதத்தை நிறைவேற்றியே தீருவாள்!” என்று அழுத்திக் கூறியபடி அங்கிருந்து தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். எதிரே... திருவரங்கன் வந்து கொண்டிருந்தான். நின்று அவனை நோக்கி முறுவலித்தாள். அவன் நடப்பதை நிறுத்தி, “என்ன இளவரசி?” என்றான் இளம் நகையோடு! “தங்களின் வீரமிக்க நடை என்னைக் கவர்ந்துவிட்டது. அதனால் தங்களைப் பார்த்து முறுவலித்தேன். ஏன் அம்மாதிரி நான் செய்வதை நீங்கள் விரும்பவில்லையா?” “இப்படி ஒரு வார்த்தையை உங்களிடமிருந்து கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்றான் திருவரங்கன். என் வலையில் சிக்கக் கூடிய பல முட்டாள் மீன்களில் இது முதல்தரமான மீன் என்று மனதில் நினைத்துக் கொண்ட அவள் அவனைப் பார்த்து மயக்கும் விதத்தில் சிரித்தாள். “உங்களுக்கு இருக்கும் மேதாவிலாசத்தை நினைக்கும் போது எனக்கு வியப்பு ஏற்பட்டது. அதன் விளைவாய் நான் சிரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கபட்டேன்” என்றாள். “அதைவிட அழகாக இல்லையா நான்?” என்று வினவினாள். “நிச்சயம்!” என்றான் அழுத்தமாய். “அந்த அழகு எத்தனை நாளைக்கு என்னிடம் இருக்கும்?” என்று திருப்பி அவனைக் கேட்டாள். “கொஞ்ச காலம் வரை...” என்ற அவன் தலை குனிந்தான். “இந்த அழகைப் பயன்படுத்த உங்களைவிடப் பொருத்தமான ஆள் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை!” என்று தன் விழிகளை மெல்லத் தாழ்த்தி பெருமூச்சு ஒன்றையும்விட்டாள். திருவரங்கனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. தடுமாறியபடி அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். இதற்கு மேல் அங்கு நிற்பது விவேகமல்ல என்று உணர்ந்த இரத்தினாதேவி, “உங்களைப் பிறகு சந்திக்கிறேன்” என்று தன் அறைக்கு நடக்கலானாள். அப்படி நடக்கும் போது நின்று திரும்பி... அவனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் சென்றாள். வாள் ஒன்றே வாழ்வு என்று இதுவரை எண்ணியிருந்த திருவரங்கனுக்கு அதற்கு அப்பாலும் ஒன்று இருக்கிறது என்பதை அவள் பார்வையின் மூலம் தெரிந்து கொண்டான். திரும்பவும் அவளை எப்போது சந்திப்பது? என்ற எண்ணத்துடனே சற்று நேரம் அங்கேயே நின்று பிறகு இராசேந்திரனைப் பார்ப்பதற்காக விரைந்தான். ‘இராசேந்திரனைக் கொல்வதற்கு இதுவரை எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இப்போது கூரிய அம்பு கிடைத்துவிட்டது!’ என்று தன் மனதிற்குச் சொல்லியவாறு இரத்தினாதேவி மகிழ்ச்சியுடனே அறைக்குள் நுழைந்தாள். ***** இரத்தினாதேவியின் சேடி திருவரங்கன் தங்கியிருந்த அறைக்குச் சென்று கடார இளவரசி அழைப்பதாகத் தெரிவித்தாள். “என்ன செய்தி?” என்று அவன் மகிழ்ச்சியுடன் வினவ... “எனக்குத் தெரியாது ஐயா!” என்றாள் பதிலுக்கு. ‘இரவு நேரத்தில் அழைக்கும் மர்மம் என்ன?’ என்று சிந்தனையிலாழ்ந்த அவன் “வருவதாகத் தெரிவி!” என்றான் சேடியிடம். அவள் போனதும்... ஆடையை மாற்றிக் கொண்டு உடம்பில் நறுமணப் பொருள்களைப் பூசிக் கொண்டு இரத்தினாதேவியின் அறையை நோக்கி நடந்தான். அவன் உள்மனம் மட்டும் போகாத இடத்துக்குப் போவதாக அவனை எச்சரித்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அவளின் வாளிப்பான உடற்கட்டிலும், பூரிபான இளமையிலும் ஏற்கனவே மனதைப் பறிகொடுத்திருந்த திருவரங்கன் ஒருவித மயக்கத்தில் தன்னை மறந்த நிலையோடு, மனம் இன்ப குதூகலத்தில் ஆழ, அவள் இருந்த அறையின் கதவைத் தட்டினான். ‘தடக்’ என்ற சப்தத்துடன் தாழ் நீக்கப்பட்டது. கதவை உட்பக்கமாகத் தள்ளிய திருவரங்கன் முன்னால் இரத்தினாதேவி இந்திரலோகத்துச் சுந்தரி போல் ஒயிலாக நின்று கொண்டு, “வாருங்கள்!” என்றாள். இதுவரைப் பாதிக் குழப்பமும், மீதி மகிழ்ச்சியுமாக இருந்த திருவரங்கன், அவளின் கவர்ச்சியான தோற்றத்தைக் கண்ட நொடிப்பொழுதில், எல்லாவற்றையும் மறந்து உள்ள உறுதியையும் அவளிடம் பறிகொடுத்துவிட்டு அறைக்குள் வெற்று மனிதனாகப் புகுந்தான். சந்தனம், அத்தர், புனுகு, சவ்வாது இவை போன்ற நறுமணப் பொருள்கள் அவள் மேனி எங்கும் பூசப்பட்டிருக்க அதனால் எழுந்த வாசனை அவன் நாசியைத் துளைத்தது. ஏற்கனவே அவளின் தோற்றத்தில் மயங்கியிருந்த திருவரங்கன், அவளிடமிருந்து வீசிய இவ்வாசனையை அந்த அழகு நல்லாளின் மேனியிலிருந்து இயல்பாய்த் தோன்றிய நறுமணம் என்ற நினைப்போடு நன்றாய் மூச்சை இழுத்து இழுத்து அதை நுகர ஆரம்பித்தான். “அரசே!” என்று அச்சமயம் இனிய குரலில் அழைத்தாள். கேட்பார் மயங்கும் தன்மையில் அந்தச் சொற்களின் இழைந்த குழைவுக்கு ஒருவிதக் கவர்ச்சியை அளவுடன் கூட்டும் பக்குவம் இரத்தினாதேவிக்கு மட்டும் தெரிந்த வித்தையாக இருந்ததால் அந்த வார்த்தையைக் கேட்ட திருவரங்கன் ‘இன்னும் ஒருமுறை தன்னை அப்படிக் கூப்பிடமாட்டாளா?’ என்ற ஏக்கத்துடனே அவளை உற்று நோக்கினான். “உங்களை அரசே என்று கூப்பிட்டேன்! அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கேட்கக் கூடாதா?” என்று மென்மையான குரலில் வினவிய இரத்தினாதேவி, கையிலிருந்த மலர்ச் செண்டால் அவன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாள். அத்துடன்... “நான் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் சொல்லத் தெரியவில்லை” என்றாள் இரத்தினாதேவி. “உண்மை! எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை” என்று அவன் ஒப்புக் கொண்டான். “எனக்கு அந்தக் கேள்விக்குப் பதிலும் தெரியும்!” என்ற அவள், தன் இமைகளைப் பாதி மூடியபடி பார்வையை அவன் மீது ஓட்டினாள். அவளின் கரங்களைப் பற்றிய திருவரங்கன் “என்ன பதில்?” என்றான் குறுநகையுடன். “என்னையும் எனக்கே உரிய இளமையையும், அந்த இளமைக்கு அணி செய்யும் செழுமையையும், அந்தச் செழுமைக்குக் கவர்ச்சியைத் தரும் என் பருவப் பூரிப்பையும் ஆளக்கூடிய ஒரே ஆண்மகன் இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் உங்களை ‘அரசே!’ என்றழைத்தேன்!” என்றாள். “நான் கொடுத்து வைத்தவன்!” என்று அவளை அருகில் இழுத்து அணைக்க முயல... அவ்விதம் இடம் கொடுத்தால் தனக்கு மதிப்பு இருக்காது என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்ததால், மெல்ல விலகி, “இந்தக் குறும்பெல்லாம் இப்போது வேண்டாம்!” என்றாள் பொய்யான கோபத்துடன். அழகு மங்கையர்க்கு பொய்யான கோபமே ஒருவித அழகு! அந்த அழகுக்கு அழகு செய்வது போலிருந்த அவளின் தோற்றத்தில் மனதைப் பறிகொடுத்த திருவரங்கன், “பின் எப்போது வேண்டும்?” என்று உயிரற்ற உடலாய் அவள் மேல் மயக்கத்துடன் சாய்ந்தான். அப்படியே அவனைத் தாங்கிய இரத்தினாதேவி, “உங்கள் தோள்களின் திண்மைக்கு நான் என்றும் அடிமை!” என்றாள். “எனக்கும் அடிமைத்தனம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் உன் அழகுக்கு அடிமையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன்!” என்று அவளை மார்புறத் தழுவினான். அத்தழுவலில் அவன் மனம் கிளுகிளுப்பை எய்தியது புரிகுழலில் கைகளைவிட்டுக் கோதிய திருவரங்கன், மெல்ல கைகளை இறக்கி அவளின் கழுத்தின் பின்பகுதிக்கு வந்தான். அங்கே கோடிட்டது போன்றிருந்த உரோமக் கீற்று அவனின் கரத்துக்கு இன்ப உணர்வை ஊட்ட அதனால் மயங்கி நின்ற அவன், வழுவழு என்றிருந்த முதுகில் கரங்களைப் படரவிட்டான். “அப்பா!” என்று அவள் புன்னகையுடன் நெளிந்தாள். அந்த நெளிவினால் தன்னை முழுவதும் இழந்துவிட்ட திருவரங்கன், சற்று உணர்வு பெற்றவனாகி கைகளை மேலும் இறக்க, மார்புக் கச்சையின் பின்பக்க முடி தட்டுப்பட்டது. உணர்வின் மிகுதியால் அவன் இதயம் ‘படக் படக்!’ என்று அடிக்க, கரங்களை அதிலிருந்து விலக்கிக் கொண்டான். “ஏன் எடுத்துவிட்டீர்கள்? அவிழ்க்க முடியாத அளவிற்கு நான் ஒன்றும் கடினமாக முடிச்சு போடிவில்லையே?” என்றாள். கரங்கள் நடுநடுங்க, “அதற்கு இல்லை...!” என்று வாய் குளறினான். “அதற்கு இல்லை...” என்று மீண்டும் குளறிய திருவரங்கன், கைகளை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றான். அடுத்த சில நொடிகளில்... “இரத்தினாதேவி! இரத்தினாதேவி!” என்று குரல் கேட்டது. “யாரோ கதவைத் தட்டுகின்றார்கள்!” என்று சற்று அச்சத்துடனே கூறினான் திருவரங்கன். கடார இளவரசி அதற்குப் பதட்டப்படாது, பஞ்சணையின் அடியில் அவனைப் படுத்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு அவனால் பாதி அளவு தளர்த்தப்பட்ட முடியை மறுபடியும் நன்கு முடிந்து கொண்டாள். அடியில் மறைந்திருந்த திருவரங்கன், “நல்ல நேரத்தில் இப்படிக் குறுக்கிட்டு...” என்று கதவைத் தட்டியவனைத் திட்ட ஆரம்பித்தான். “பேசாதிருங்கள்!” என்று ஆடையைச் சரி செய்து தாழினை நீக்கினாள்! சாமந்தன் அங்கே இருந்தான். “என்ன இந்த நேரத்தில்?” என்று பொய்யான எரிச்சலுடன் கேட்டாள். அவன் கண்களைச் சிமிட்டி, “மூலிகை இருக்கும் இடம் என் கனவில் தெரிந்துவிட்டது. அதைச் சொல்லவே ஓடி வந்தேன். அந்த நினைவு மாறுவதற்குள் போய்த் தேடினால் கிடைத்துவிடும்” என்றான். “அப்படியா! கொஞ்சம் இரு. நான் ஆடை மாற்றிக் கொண்டு வருகின்றேன்!” என்று கதவைத் தாளிட்டாள். “வருங்கால மதுரைப் பிரதிநிதி அவர்களே! என்று அன்புடன் திருவரங்கனை அழைத்தாள். “என்ன இது! பட்டமெல்லாம் பலமாக” என்று கூறியபடி பஞ்சணையின் அடியிலிருந்து வெளிவந்தான். அவன் வலக்கரத்தில் தன் இதழ்களைப் பதித்து, “இப்போது சூழ்நிலை சரியில்லை. நாளைக்கு வாருங்கள்!” என்றாள். “நாளைக்கா?” என்று அவன் திகைப்புடன் வினவ... “ஆமாம்! இதையெல்லாம்விட நமக்குச் சக்கரவர்த்தியின் உயிர்தான் பெரிது. தற்போது விட்டுவிட்டால் கனவில் கண்ட இடம் சாமந்தனுக்கு மறந்து போய்விடும். அதனால் சூட்டோடு சூடாக அவனோடு அந்த இடத்துக்குப் போகலாம் என்று இருக்கின்றேன்! இவள் உங்களுக்கே உரியவள். இன்று இல்லை என்றால் நாளை. அதற்காக வீண் கலக்கம் வேண்டாம்” என்றாள். ஏமாற்றமடைந்த திருவரங்கன் அவிழ்த்து ஒரு பக்கம் வைக்கப்பட்ட வாளை இடையில் கட்டிக் கொண்டு, “வாட்டுமா?” என்று சாமந்தனைத் திட்டிக் கொண்டே அவள் கன்னத்தைக் கிள்ளினான். “இன்னும் ஒன்று இருக்கின்றது!” என்று மற்றொரு கன்னத்தைக் காண்பித்தாள். அதையும் செல்லமாகத் தட்டினான். அப்போதுதான் அவன் முகத்திலிருந்த ஏமாற்றக்குறி மறைந்து புன்சிரிப்பு தோன்றியது. அதைக் கவனித்து இரத்தினாதேவி, “எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று அவன் கரங்களைப் பற்றியபடி கேட்டாள். “ஏன் தயக்கத்துடனே உன்னிடமிருந்து கேள்வி வருகிறது. செய் என்று எனக்கு உத்தரவிடு. நான் அதை முடிக்கின்றேன்!” என்றான். “இராசேந்திரருக்கு என் மீது கோபம்...” என்று அவனைப் பார்த்தாள். “நான் கடார நாட்டிலிருந்து நல்லெண்ணத் தூதாக இங்கு வந்திருக்கின்றேன்! ஆனால் அவரோ.. அவரைப் பழிவாங்கவே நான் வந்திருப்பதாகத் தவறாக எண்ணி, என்னைச் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்றார். உங்கள் மீது ஆணையாகச் சொல்கின்றேன்! அந்த மாதிரி எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில்தான் மூலிகை தேட இங்கு வந்திருக்கின்றேன்!” என்றாள் உறுதியான குரலில். அத்துடன் அவள் விழிகளில் நீரும் சுரந்தது. அதைக் கண்ட திருவரங்கன் மனம் நெகிழ்ந்தது. “அதற்காக நீ ஏன் கவலைப்படுகின்றாய்?” என்றான். “என் மீது அவருக்கு ஒரு கண் இருக்கிறது. எந்த நேரத்திலும் நான் இராசேந்திரரால் கைது செய்யப்படலாம் என்று நினைக்கிறேன்” என்றாள். “எனக்குத் தெரிந்தவரை அம்மாதிரி ஒரு எண்ணம் அவருக்கு இல்லை!” என்றான் திட்டமுடன். “நீங்கள் பார்ப்பது ஒரு பக்கத்து இராசேந்திரனை மட்டும்! இன்னொரு பக்கத்து இராசேந்திரன் இருக்கின்றார். அவர் பொல்லாதவர்!” என்றாள். திருவரங்கன் குழம்பினான். “நாடுவிட்டு நாடு வந்த இந்தச் சிறு பெண்ணிற்கு உங்களைத் தவிர வேறு கதியில்லை. அவரைக் கண்டாலே எனக்கு அச்சமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று மண்டியிட்டு அவன் கால்களைப் பற்றிக் கொண்டாள். அப்படிப் பற்றும் போது... ஏற்கனவே விழிகளில் சுரக்கவிட்ட நீரை கால்களில் ‘பொட் பொட்’ என்று விழும்படிச் செய்தாள். இதற்கு மேல் திருவரங்கனால் சும்மாயிருக்க முடியவில்லை. அவளை அப்படியே தூக்கி, கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தான். “நான் இருக்கும் வரை நீ எந்தவித அச்சத்திற்கும் ஆளாக வேண்டாம். இது உறுதி!” என்று அழுத்தமாய் கூறினான். அப்பொழுது... “இன்னுமா இரத்தினாதேவி உடைமாற்றுகின்றாய்?” என்று சாமந்தன் வெளியிலிருந்து உரக்கவே வினவ, “இதோ!” என்று திருவரங்கனைச் சீக்கிரம் போய்விடும்படி சைகை செய்ய, அவன், “நாளை?” என்றான் புன்முறுவலுடன். திருவரங்கன் சென்றதும்... தாளினை நீக்கிக் கதவைத் திறந்த சாமந்தனிடம் “பிடித்துவிட்டேன்!” என்றாள். “நல்லது. நான் போய்த் தூங்கட்டுமா?” என்றான். “இல்லை. மூலிகை தேடுவது போல் கொஞ்ச நேரம் பாவனை செய்வோம்!” இருவரும் அறையிலிருந்து வெளிவந்தனர். ‘கண்டவனுக்கு என் இளமையைப் பறிகொடுக்க நான் என்ன வேசியா? நல்ல நேரத்தில் ஏற்கனவே நான் கூறியிருந்தபடி சாமந்தன் குறுக்கிட்டான்; இல்லை என்றால் திருவரங்கனிடமிருந்து நான் தப்பித்திருக்க முடியாது!’ அத்துடன் ‘உண்ணப்படாத கனிக்குத்தான் மிகுந்த மதிப்பு இருக்கும்!’ என்று எண்ணியவாறு மெல்ல நடக்கலானாள். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|