உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 32 புரவியிலிருந்து இறங்கிய திருவரங்கன் அதே வேகத்துடன் நேராக இரத்தினாதேவி தங்கியிருக்கும் மாளிகைக்குள் நுழைந்து கதவை தடதடவென்று வேகமாய்த் தட்டினான். “யார்?” என்று உள்ளிருந்து குரல் வந்தது. “நான்தான் திருவரங்கன்!” என்றான். கதவு திறக்கப்பட்டது. “வாருங்கள்!” என்று வரவேற்றாள் இரத்தினாதேவியின் சேடி. கதவைத் திறப்பது கடார இளவரசியாக இருக்கும் என்று எண்ணி மிடுக்குடன் நின்று கொண்டிருந்த திருவரங்கன் ஏமாற்றத்துடன் “இளவரசி...?” என்றான். “உள்ளே இருக்கின்றார்கள். உடம்பு சரியில்லை!” என்று பதில் கூறினாள் சேடி. “உடம்பா?” - அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே போவது போல் நுழைந்தான். ‘உம்’ கொட்டியவாறு படுத்திருந்த கடார இளவரசி எதற்காக அம்மாதிரி நாடகத்தை ஆடுகின்றாள் என்பதை அவள் மேலிருந்த மோகத்தின் காரணமாகப் புரிந்து கொள்ளாது உண்மையாகவே அவளுக்கு உடம்புதான் சரியில்லை என்றெண்ணி அருகே சென்றான். “என்ன இளவரசி தங்களுக்கு?” அதற்கு அவள் மறுமொழி சொல்லாது, ‘உம்’ கொட்டுதலில் வேகத்தைக் கூட்டினாள். இதுவரை ஒருக்களித்துப் படுத்திருந்த அவள் தற்சமயம் மல்லாந்து படுத்தவாறு கதவின் ஓரமாய் நின்று கொண்டிருந்த சேடியைப் பார்த்து, “நீ போயேன்!” என்றாள் தாழ்ந்த குரலில். அங்கிருந்து சேடி போகும் வரை பார்வையை அவ்விடத்திலேயே பதித்திருந்த இளவரசி, அவள் போனதும் அங்கிருந்து விலக்கி உடம்பு சரியில்லாமலிருந்ததால் எம்மாதிரி முகம் இருக்குமோ அதுபோன்ற முகத்துடன் திருவரங்கனைக் கண்டுவிட்டதால் கடினப்பட்டுப் புன்னகையை வரவழைப்பது போன்று ஒரு பாவனையை அம்முகத்தில் ஏற்படுத்தி அத்துடன் இதழ்களில் குறுநகை ஒன்றையும் தோன்றச் செய்தாள். அதை மெய்யென்று நம்பிய மாவீரன் திருவரங்கன், (அவள் விஷயத்தில் அல்ல) “உன்னை இந்த மாதிரி பார்க்க என் மனத்துக்கு வேதனையாகவே இருக்கிறது” என்று அவள் படுத்திருந்த பஞ்சணையில் கால் பக்கமிருந்த இடைவெளியில் உட்கார்ந்தான். அவன் உட்காருவதற்கு ஏற்றபடி சற்று நகர்ந்து இடம் கொடுத்த இரத்தினாதேவி, “நேற்று இரவு முழுவதும் தங்கள் நினைவாகவே படுத்திருந்தேன்! அம்மாதிரி படுத்திருப்பதற்குக் காரணம் இல்லாமலில்லை...” என்று நிறுத்திக் கண்களைச் சிமிட்டினாள். “வரப்போகும் இரவை உங்களுடன் கழிக்கும் இன்பமான சூழ்நிலையை எண்ணியதின் விளைவாகவே எனக்கு உறக்கமில்லாமல் போய்விட்டது” என்றாள். அத்துடன்... அவனிருந்த இடத்திற்கும் அவளுக்கும் இருசாண் அகலத்தில் இருந்த இடைவெளி தற்போது மறைந்து, கதலித்தண்டை நிகர்த்த அவளின் கனமான இரு தொடைகளும் திருவரங்கன் பின்புறப் பகுதியில் படும்விதத்தில் சாய்ந்தும் கொண்டாள். பொய்யான முறையில் நடிக்கின்றாள் என்று யாராவது அடித்துச் சொன்னால் கூட இனி அவன் அவள் விஷயத்தில் நம்பத் தயாராயில்லை. அதனால் “இளவரசி!” என்றான் மயக்கத்துடனே. “இப்படியே இருந்தால் எனக்கு எவ்வளவு இன்பமாக இருக்கும் தெரியுமா?” என்றாள் அவள் திரும்பி. “அது வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை” என்றான் திருவரங்கன் உறுதியோடு. “இன்னும் நான்கு நாட்கள்தான் நான் இங்கே இருக்கப் போகின்றேன். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வரச்சொல்லி சக்கரவர்த்தி இங்கே ஆளை அனுப்பியிருக்கின்றார்” என்றாள். “கேள்விப்பட்டேன் இராசேந்திரர் மூலமாய்” என்ற திருவரங்கன், “எனக்கும் இங்கே சீட்டுக் கிழிந்துவிட்டது; உடனே நானும் கங்கைகொண்ட சோழபுரம் வரப்போகின்றேன்!” என்றான் உற்சாகத்தோடு. “அப்படியா!” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தாள் அவள். அதிகம் சிரித்துவிட்டதால் உடல் தாங்காமல் போனதை திருவரங்கன் உணர வேண்டும் என்று பொய்யாய் ‘ம்’ கொட்டவும் செய்தாள்! “ஏன் இளவரசி உடம்பை அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல் இரேன்!” என்று பரிவுடன் கூறினான் திருவரங்கன். “நீங்கள் சொல்வதுதான் சரி!” என்று ஆமோதித்த இரத்தினாதேவி, “எப்படிக் கங்கைகொண்ட சோழபுரம் போவது என்று தவித்துக் கொண்டிருந்தேன்; இப்போது நீங்கள் துணை வருவதால் எனக்கு இனிமேல் கவலையில்லை!” என்றாள். இதைத் தொடர்ந்து, “அது என்ன சீட்டுக் கிழிப்பு?” என்று வினவினாள். “எனக்கும் இராசேந்திரருக்கும் கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது. அதனால் இனி அவரின் கீழ் என்னால் பணியாற்ற முடியாது” என்றான் திட்டமுடன். தான் கணக்கிட்டபடி நண்பர்கள் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டுவிட்டதை உணர்ந்த இரத்தினாதேவி, உள்ளூர மகிழ்ச்சியுற்றாள். அதை வெளியே காண்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், முகத்தில் வேண்டுமென்றே கடுகடுப்பை வரவழைத்து, “மதுரையைப் பார்க்கும் பொறுப்பு அவரிடம் வந்துவிட்டதால் செருக்கு வந்துவிட்டதோ?” என்றாள். “உண்மை, நீ சொல்வது முற்றிலும் உண்மை! என்று ஆத்திரத்தோடு அழுத்தமாய்ச் சொன்னான். “ஆனால், இது போன்று அட்டகாசம் செய்தவர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்ட கதைதான் எனக்குத் தெரியும்” என்ற கடார இளவரசி, “கங்கைகொண்ட சோழபுரத்திலேயே நான் கைது செய்யப்படலாம். இல்லையென்றால் என் மீது அபாண்டமான குற்றம்சாட்டி என்னைத் தூக்கில் கூடப் போட்டுவிடலாம்!” என்றாள். திருவரங்கனுக்குச் சினம் தோன்றியது. “கவலைப்படாதே இரத்தினாதேவி! நான் உயிரோடு இருக்கும் வரை ஊர்ந்து செல்லும் புழுகூட உனக்குத் தீங்கு விளைவிக்க முடியாது!” “என் உயிருக்குயிரான தாங்கள் இருக்கும் வரை ஆபத்தொன்றும் வந்துவிடாது என்பது தெரியும். இருந்தாலும் என்னைப் பற்றித் தவறாக இராசேந்திரர் நினைத்துக் கொண்டிருப்பதை வைத்துச் சொல்கின்றேன்... அப்படி எனக்கு அவரால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தாங்கள் எனக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அதில் தங்களின் காதலி என்று ஒரு வார்த்தை இருக்க வேண்டும். இவ்விதம் நீங்கள் செய்யவில்லை யென்றால் இறந்து போன என் ஆன்மா சாந்தி பெறாது!” என்றாள் கண் கலங்கி. திருவரங்கனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளின் மென்கரங்களைப் பற்றினான். “கலங்காதே இரத்தினாதேவி!” என்று கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து மௌனமாய் உதட்டைக் கடித்தான். தற்போது திருவரங்கனை நினைத்த அளவுக்குக் கவர்ந்தாகிவிட்டது. இனி அவன்..? ‘தன்னால் இயக்கப்படும் ஒரு பொம்மை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அப்போது. அதனால் இனிமேல் அந்த உராய்தல் தேவையில்லை என்பது போல அவனிடமிருந்து விலகிப் புரண்டாள். “என்ன இரத்தினா... விலகிச் செல்கின்றாய்?” என்று தன் வலிய கரங்களை அவளின் மென்மையான பின் பகுதியில் வைத்துத் தன் பக்கம் இழுக்க... திருவரங்கனைத் தனிமையில்விட்டால் தன்னைத் தொல்லை செய்வான் என்று எண்ணி, “எனக்குத் தலை வலிக்கிறது” என்றாள். “என்னைப் பார்த்தப் பிறகு கூடவா உனக்குத் தலையை வலிக்கிறது?” “உடல் நலமாயில்லை என்று தங்களிடம் சொன்னேன் அல்லவா? அதுதான்...!” என்று பஞ்சணையிலிருந்து எழுந்தாள். சிறிய வெள்ளிப் பேழையிலிருந்து, ஒரு குளிகையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு நீரைக் குடித்தாள். “நன்கு தூங்கினால் சரியாய்விடும். படுத்துக் கொள்கின்றேன்” என்று மீண்டும் பஞ்சணையில் சாய்ந்தாள். அவன் அவளை அணைக்க முயல... “ஆக்கப் பொறுத்தது... ஆறப் பொறுக்கக் கூடாதா?” என்று அவனின் முகத்தைத் தன் மெல்லிய விரல்களால் தடவியபடி சொன்னாள். திருவரங்கன் கெஞ்சும் குரலில், “ஒன்றுமட்டும்...” என்று உணர்ச்சிவயப்பட்டு அவளின் மீது அப்படியே சாய்ந்து தன் இதழ்களை அவள் இதழ்களோடு இணைத்து, விரல்களால் அவளின் கரிய குழலை மெல்ல வருடினான். “போதும். இன்னொரு நாளைக்கு” என அவனிடமிருந்து விலகி, பஞ்சணையிலிருந்து எழுந்து கொண்ட இரத்தினாதேவி “முதலில் இங்கிருந்து புறப்படுங்கள். இல்லையென்றால் என்னைத் தூங்கவிடமாட்டீர்கள். என் உடல்நலம் மேலும் கெட்டுவிடும்” என்றாள் அவள். திருவரங்கன் திரும்பவும் அவளை அணைக்க முயல... “பொல்லாதவர் நீங்கள். இன்னொரு நாளைக்கு என்றேனே. அதைச் சற்று காதில் வாங்கிக் கொள்ளக் கூடாதா?” என்று அன்புடன் பற்களைக் கடித்தபடி அவன் கன்னத்தை பொய்யாகக் கிள்ளினாள். அந்தச் சுகத்தில் மெய்மறந்து நிற்க... இதுதான் சமயம் என அவனைத் தள்ளிக் கொண்டே சென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே தள்ளி “பிறகு” என்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். சற்று நேரம் அங்கேயே நின்ற திருவரங்கன், உயிரற்ற உடலைப் போல மெல்ல அங்கிருந்து அகன்றான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|