(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 17

     மாலை சென்று இருள் கவிந்த நேரம்! தென்னன் ஒவ்வொரு அறையிலும் சென்று அங்கிருந்த விளக்கினை ஏற்றிக் கொண்டு வந்தான்.

     இருட்டிவிட்டதால், அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாயிருக்கிறதா என்று அறிவதற்காக துணைத்தளபதி இரு வீரர்களுடன் ஒவ்வொரு இடமாய்ச் சுற்றி வர ஆரம்பித்தார்.

     முந்தின நாள் அபாய நிலையிலிருந்த மன்னர் பட்டத்தரசியின் மாங்கல்ய பலத்தினாலும், கடார இளவரசியின் மருத்துவ சிகிச்சையாலும், இறைவன் அருளினாலும் பிழைத்துக் கொண்டார். ஆனால்,

     அவர் உயிருக்கு இருக்கும் ஆபத்து இன்னும் நீங்கிவிட்டதாக இரத்தினாதேவி சொல்லவில்லை. பத்து நாள் பொறுத்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டாள்.

     மன்னரின் அறையிலிருந்த பாவை விளக்கை ஏற்றி தென்னனிடம், முகத்துக்கு நேரே இருந்த சரவிளக்கை சிறிது நகர்த்தித் தொங்கவிடும்படி, சக்கரவர்த்தி வீரராசேந்திரர் சாடையினால் தெரிவிக்க, தென்னனும் அவ்விதமே தொங்கவிட்டான்.

     அரசரின் முகம் வெளுத்துப் போய் தெளிவில்லாதிருந்தது. மெல்லத் திரும்பி சற்று ஒருக்களித்துப் படுப்பதற்கு முனைந்த சக்கரவர்த்தியின் அருகில் வீரன் ஒருவன் வந்து, இராஜசுந்தரி வந்திருப்பதாகத் தெரிவித்தான்.

     ‘எதற்கு இப்போது என்னைப் பார்க்க வர வேண்டும்?’ என்று மனதில் எழுந்த வினாவுடன், “வரச்சொல்!” என்றார்.

     சாளுக்கிய இளவரசி உள்ளே வந்து, “தங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லையே அப்பா!” என்றாள்.

     “தற்போதைக்கு நன்றாகத்தான் இருக்கின்றேன். பிறகு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது” என்று பலவீனமாய் இருமினார்.

     “நிரம்பவும் மெலிந்துவிட்டீர்கள்...” என்ற இராஜசுந்தரி, “ஏனப்பா வீணாய் நாட்டைப் பற்றிய எண்ணங்களை மனதில் போட்டுக் கொண்டு, கவலையில் உழல்கிறீர்கள்! பொறுப்பை உங்கள் மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே?” என்றாள்.

     “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! ஆனால் முடியவில்லையே அம்மா! அம்மாதிரி பொறுப்பை ஒப்படைக்கத்தானே அதிராசேந்திரனை மதுரையிலிருந்து இங்கு வரவழைத்தேன். ஆனால்...” என்று நிறுத்திய அரசருக்குத் தொடர்ந்து பேச முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

     “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தந்தையே. எப்படியிருந்தீர்கள்? எப்படி ஆகிவிட்டீர்கள். உங்களைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது.”

     சக்கரவர்த்தி பலவீனமான குரலில், “நேற்றே என் உயிர் போக வேண்டியது. சோழ மண்ணில் மேல் உள்ள பாசத்தினால் இன்னும் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரியாமல் இருக்கிறது. புதியதாக கடாரத்திலிருந்து வந்திருக்கும் பெண் மருந்தைக் குழைத்துக் குழைத்து எப்படியோ என் உயிரைக் காப்பாற்றிவிட்டாள். கண்ணை மூடுவதற்குள் நான் ஏதாவது இந்த நாட்டிற்குச் செய்துவிட வேண்டும்!” என்றார்.

     “செய்வதற்கு எங்கேயம்மா எனக்குத் துணிவு வருகிறது? இருப்பது அதிராசேந்திரன் ஒருவனே! அவன் ஒருவனால் இந்தச் சோழ அரசை நிர்வகிக்க முடியும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. என் பாட்டன் ராஜராஜன் காலத்திலிருந்தே பல சோழ இளவரசர்கள் அவருக்குத் உறுதுணையாக இருந்தார்கள். இப்போது அதை நினைக்கும் போது என் நெஞ்சம் வேதனையால் துடிக்கிறது அம்மா” என்றார்.

     “நீங்கள் ஏன் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும். அண்ணனுக்குத் துணையாக என் தம்பி மதுராந்தகன் இல்லையா? அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுகிறது!” என்று அதற்கு மறுமொழி கூறினாள் இராஜசுந்தரி.

     “இதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மதுராந்தகனுக்கு அந்த அளவுக்குத் திறமையில்லையே! காஞ்சி நகரைவிட்டு இப்படியும் அப்படியும் கூட அவன் அசையமாட்டேன் என்கிறானே! அரசகுமாரன் என்றால் பல போர்களில் கலந்து அனுபவப்பட வேண்டுமே! நம் மதுராந்தகன் அப்படி அனுபவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லையே அம்மா!” என்றார் மாமன்னர்.

     “இதற்கா நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? மனிதனுக்கு உள்ள திறமை அளவிட முடியாதது; ராஜ்ஜிய விவகாரங்களில் ஈடுபட ஈடுபட, மதுராந்தகனுக்கு அந்த அனுபவம் தானாக வந்துவிடுகிறது. அதனால் நாளைக்கே அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடுங்கள்” என்றாள்.

     சோழச் சக்கரவர்த்தி அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவர் மௌனமாய்ப் புன்னகையுடன் இருப்பதைக் கவனித்த இராஜசுந்தரி, “அப்படித்தான் ஏதாவது குழப்பம் வந்தாலும், சமாளிக்க குந்தள நாட்டுச் சக்கரவர்த்தியும் தங்களின் மருமகனுமான விக்கிரமாதித்தன் இருக்கின்றார். ஒரு குடும்பத்தில் தகுதியான ஆள் இல்லை என்ற நிலை வரும் போது, அக்குடும்பத்தைக் காக்க மருமகப்பிள்ளைதானே முன் வருவார்! அவ்விதம் பலம் பொருந்திய அரசராய் தங்கள் மருமகப்பிள்ளை இருக்கும் போது, இந்தச் சோழ நாட்டைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றாள்.

     சக்கரவர்த்தி வீரராசேந்திரருக்குத் தூக்கிவாரிப் போட்டது போல் ஆகிவிட்டது. ‘முதலமைச்சர் என்னிடம் சொன்ன இந்த வார்த்தைகளைப் பக்கத்திலிருந்து கேட்டது போல் அல்லவா இவள் சொல்கிறாள்?’ என்று அவளை ஒருதரம் ஏறிட்டு நோக்கிய மன்னர், “நீ சொல்வதிலும் இருக்கிறது...” என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

     அப்போது யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, இராஜசுந்தரியும் அரசரும் திரும்பினர்.

     பட்டத்தரசி உலகமுழுதுடையாள் வந்து கொண்டிருந்தாள்.

     “எப்போது வந்தாய் இராஜசுந்தரி?” என்று வினவியபடி, வேந்தரின் அருகில் வந்து, “இப்போது தங்களுக்கு எப்படியிருக்கிறது?” என்றாள்.

     “பயப்படும்படி ஒன்றும் இல்லை!” என்ற அரசர், மருத்துவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எனக்குப் பழக்கமாகிவிட்டது” என்று உற்சாக மிகுதியால் மெல்ல சிரித்தார். அதைத் தாங்காமல் இருமல் வெளிப்பட, “உங்களைத்தான் அதிகம் பேச வேண்டாம் என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறதே!” என்று நெஞ்சைத் தடவித் தடவிவிட்டாள் பட்டத்தரசி.

     சில நொடிகளில் இருமல் நின்றது. அரசர் ஒருக்களித்துப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார். இருக்கையில் உட்கார்ந்த பட்டத்தரசி இராஜசுந்தரியிடம் “சாப்பாடு ஆயிற்றா மகளே?” என்று வினவினாள்.

     “இல்லை! இனிமேல்தான் சாப்பிட வேண்டும்!” என்று கூறிய அவளை, “நேரமாகிவிட்டதே! நீ போய்ச் சாப்பிடம்மா! மன்னரை நான் பார்த்துக் கொள்கின்றேன்!” என்று அனுப்பி வைத்தாள். ‘நல்ல நேரத்தில் வந்து என் அன்னை கெடுத்துவிட்டாள். இல்லையென்றால் இந்நேரம் அரசரை என் வழிக்குக் கொண்டு வந்திருப்பேன்’ என்று மனக்குறையுடனே அங்கிருந்து இராஜசுந்தரி வெளியேறினாள். சரவிளக்கின் ஒளியைச் சற்றுக் குறைத்து, அரசர் மேல் குளிர்காற்று படாமல் இருக்க, பெரிய போர்வையை எடுத்துப் போர்த்தி, அவரின் காலடியில் உட்கார்ந்து கொண்டு, அவர் நலத்திற்காக இறைவனை வேண்டத் துவங்கினாள் பட்டத்தரசி.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49