(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 16 ‘படபட’வென்று சிறகடித்துப் பறந்த வெண்புறா வானில் வட்டமிட்டு, வீரராசேந்திரர் வசிக்கும் சோழ கேரள அரண்மனையின் எதிரேயுள்ள சாளர முகப்பில் உட்கார்ந்து ‘கர்ர்... க்கர்ர்’ என்று சப்தம் எழுப்பியது. அதிகாலை நேரமாயிருந்ததால் இன்னும் இருட்டு மறையவில்லை. திரும்பவும் அந்த வெண்புறா பலமாய்ச் சப்திக்க ஆரம்பித்தது. புறாவின் நோக்கம் என்னவாய் இருக்கும்? ஒருவேளை தன் ஜோடியைத் தேடி அங்கு வந்திருக்குமோ? அதன் கத்தலுக்குச் செவி சாய்த்தாற் போல முகப்பின் கதவு திறக்கப்பட்டது. அடுத்த வினாடியே வெண்புறா உள்ளே புகுந்து, அங்கே நின்று கொண்டிருந்த இராசேந்திரன் தோளின் மேல் உட்கார்ந்து கொண்டது. திடீரென்று கதவு திறக்கப்பட்ட நிலையில், புறா ஒன்று தோளின் மீது அமரும் அனுபவத்தை ஏற்கனவே அவன் பெற்றவன் ஆனதால், அதைப் பற்றி எந்த வியப்பும் கொள்ளாது, தன் கைகளால் மெல்ல வருடினான். பிறகு அதன் காலில் கட்டியிருந்த ஓலை நறுக்கை அவிழ்த்துக் கொண்டான். அவ்விதம் அவன் எடுத்துக் கொண்டதும், புறா அவன் கையிலிருந்து விடுபட்டு, ‘படபட’ என சிறகை அடித்தபடி, சாளர முகப்பின் மீது போய் உட்கார்ந்து கொண்டது. ஓலை நறுக்கைப் பிரித்துப் படித்த அவன் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர, எதிர்ப்புற மாளிகையை நோக்கினான். அங்கே- புறாவை ஏவிவிட்ட மதுராந்தகி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். “வருவதாகச் சொல்!” என்று உரக்கவே, மதுராந்தகியின் காதில்படும்படிப் புறாவிடம் கூறினான். அதைத் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்திலோ என்னவோ- புறா சாளர முகப்பிலிருந்து நீங்கி, அவள் தோளில் போய் உட்கார்ந்து கொண்டது. பூங்கரங்களில் அதைப் பற்றிய மதுராந்தகி மெல்ல வருடலானாள். ஏற்கனவே இராசேந்திரன் கைபட்ட இடமல்லவா அது? இப்போது இவளின் மென்விரல்கள் அதன் மீது ஸ்பரிசிக்க, அவள் உள்ளம் அளவில்லா ஆனந்தத்தில் மூழ்கியது. இதைக் கண்ணுற்ற இராசேந்திரன், தன் விரல்கள் மேல் அவள் மென் விரல்கள் படுவது போன்று உணர்வு பெற்றவனாகி, மகிழ்ச்சியால் கண்களை மெல்ல மூடினான். ***** சோழகங்கம் ஏரியின் மாலைக் காற்று இதமாய் வீச, அதனால் எழுந்த சிறுசிறு அலைகள், ஆனந்தத்துடன் கரையைத் தாளமிட்டுக் கொண்டிருந்தன. ஓரத்திலிருந்து பலவகை மரங்களிலிருந்து பறவைகள் அத்தாளத்திற்கேற்ப ‘கீச் கீச்‘ என்று இன்குரல்களால் இன்னிசை இசைக்கத் தொடங்கின. அதற்கு ஏற்றபடி கங்காபுரியின் கோட்டைக்குள்ளிருக்கும் நந்தவனத்திலிருந்து பலவித மலர்களின் நறுமணங்கள் ஒன்று சேர்ந்து, புதிய மணமாய்ப் பரிமளித்துக் கடலெனப் பரந்து நிற்கும் சோழகங்கத்தின் மேல் வீசிக் கொண்டிருந்தது. அந்த வாசனைக்காகவே பலர் மாலை நேரத்தில் அங்கே வந்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். அரசகுடும்பத்தினருக்கென்று தனியாய் மண்டபம் இருந்தது. மாலைநேரப் பொழுதைக் கழிக்க, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வருவது வழக்கம். அந்த முறையில்... மண்டபத்தின் அருகே இரு இளம் மங்கையர் விரிந்து நிற்கும் அப்பெரும் நீர்ப்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காற்றென்னும் ஓவியன், தென்றல் என்ற தூரிகையைக் கொண்டு, நீர்ப்பரப்பென்னும் அந்த இடத்தில் பெரும் வளைகோடுகளைத் தீட்ட, அவ்வாறு தீட்டிய கோடுகள் அவனுக்குப் பிடிக்காததாலோ என்னவோ, அதை அழித்துவிட்டுத் திரும்பவும் திருத்தமாய்க் கோடுகளை நீர்ப்பரப்பின் மீது புனைய, இவ்விதம் புனைவதும் அழிப்பதுமாய் இருக்கும் அந்த ஓவியனின் கிறுக்குத்தனத்தை வியந்தபடி இருந்த மங்கையரில் ஒருவரான மதுராந்தகி, “மலர்விழி, நேரம் கடக்கிறதே! இன்னும் அவர் வரவில்லையே?” என்றாள். “இன்னும்..?” என்று அந்த வார்த்தையை மட்டும் அழுத்திக் கேலியாய்த் திருப்பிச் சொன்ன மலர்விழியை, மதுராந்தகி தன் கையிலிருந்த தாமரை மலரினால் அடிக்க, “அம்மா, என்ன வலிவலிக்கிறது!” என்று பொய்யாய் நடித்து, “மலரை வீணாக்கிவிடாதீர்கள். அடி வாங்குவதற்கென்றே ஒருவர் வரப் போகின்றார்! அதற்கு மிச்சம் மீதி வைத்திருங்கள்!” என்றாள். உடனே அதைக் கேட்ட மதுராந்தகி, தாமரை மலரை அவள் மீது வீச மலர்விழி தப்பிக்க வேண்டி, அங்கிருந்து ஓடலானாள். அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த இராசேந்திரனைக் கண்ணுற்ற மலர்விழி, நாணத்துடன் அவனுக்கு வழிவிட்டு, அருகிலிருந்த மரத்தின் பின் ஒதுங்கிக் கொண்டாள். எப்படியும் மலரால் அடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், பின்னால் முழு வேகத்துடன் ஓடி வந்த மதுராந்தகி, அதே வேகத்தில் எதிரில் வந்த இராசேந்திரன் மீது மோதி, அப்படியே மார்பிலும் சாய்ந்து கொண்டாள். இந்தக் காட்சிக்காகவே இதுவரை எதிர்பார்த்தது போல... சோழகங்கத்தின் ஏரிக்குள்ளிருந்த வாளைமீன்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. தருக்களிலிருந்த பறவைகள் ஆனந்த மிகுதியால் ‘கீச் கீச்‘ என்று கீதம் இசைத்தன. பன்னீர் மரங்கள் அக்காதலர்கள் மீது பன்னீர்ப் புஷ்பங்களைச் சொரிந்தன. இயற்கை அன்னை இவ்விதம் அவர்களின் காதலை ஆசீர்வதிக்க, இராசேந்திரன் மார்பில் துவண்ட மதுராந்தகி, அடுத்த நொடியே அதிலிருந்து மீள எண்ணி முயற்சிக்க, மனம் இடங்கொடாது போகவே, இன்னும் நெருங்கி நன்கு தழுவிக் கொண்டாள். கடாரப் போரில் வாளின் கூர்மையை உணர்ந்து பழக்கப்பட்டிருந்த இராசேந்திரனுக்கு, மதுராந்தகியின் முன் அழகின் கூர்மையை அனுபவிப்பது புதியதாயிருந்ததால், அந்தப் புது சுகத்தை நன்றாய் அனுபவிக்க வேண்டுமென்ற வேகத்துடன் அவள் நழுவிவிடாதபடி நன்கு இறுக்கினான். இதற்கு மேல் உணர்ச்சி வசப்படக் கூடாது என்பது போல துள்ளிய வாளை மீன்கள் நீருக்குள் மறைந்துவிட்டன; இன்னிசை கீதம் பாடிய பறவைகள் தன் வாய்களை மூடிக் கொண்டன; நறுமணம் பரப்பிய தென்றலும் தற்சமயம் அங்கிருந்து மறைந்துவிட்டது. பூக்களைச் சொரிந்த பன்னீர் மரங்களும் மேலும் சொரிவதை நிறுத்திக் கொண்டன. அதை உணர்ந்த வேங்கி நாட்டு இளவரசன் தன் பிடியைத் தளர்த்தினான். மதுராந்தகி நாணத்துடன் நின்றாள். முதலில் யார் பேசுவது என்ற பாவனையில் இருவரும் சிறிது நேரம் மௌன நிலைமையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். ‘இதென்ன விபரீதம்? இப்படியே இவர்கள் நின்று கொண்டிருந்தால் மாலைப்பொழுது கடந்துவிடுமே’ என்று மரத்திலிருந்து வெளிப்பட்ட மலர்விழி மெல்லக் கனைத்தாள். “இங்கேயே நீங்கள் நின்று கொண்டிருந்தால், யார் கண்ணிலாவது படக்கூடும். அந்த மண்டபம் நம் போன்றவர்கள் தங்குவதற்காகவே கட்டப்பட்டது. அங்கே போய் பேசிக் கொண்டிருங்கள். நான் இங்கேயே நிற்கின்றேன்” என்றாள் மலர்விழி. இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்தனர். ‘என்ன பேசுவது? எதைப் பற்றிப் பேசுவது?’ என்று சிறிது தடுமாறிய இருவரின் மௌன விரதத்தை முதலில் கலைத்தது இராசேந்திரன்தான். “நீண்ட நாளாய் என் மனதில் அடக்கப்பட்ட கேள்வி இது! உனக்கு நிரம்பவும் திமிர் வந்துவிட்டதாக நான் கருதுகின்றேன்!” என்றான். “எப்படி நீங்கள் சொல்லலாம்?” என்று ஊடிய மதுராந்தகி, நெருக்கமாய் இருந்ததற்குப் பதில் சற்று இடைவெளி யிருக்கும்படித் தள்ளி அமர்ந்து கொண்டாள். அம்மாதிரி இடைவெளி ஏற்படுத்தி உட்காருவதைக் கவனித்த இராசேந்திரனுக்கு, அவ்விதம் தள்ளி உட்காருவதிலும் ‘தனி சுகம்’ இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை வரவேற்பது போல், அவனும் தள்ளி அமர்ந்து, அதற்காக மனதிற்குள் சந்தோஷப்படவும் செய்தான். கோபத்தில் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தால், வேண்டுமென்று என்னைக் கேலி செய்யும் நோக்குடன், மேலும் தள்ளி உட்காருவதாயென்று மனதில் துளிர்த்த கோபத்தால் மதுராந்தகி இன்னும் கொஞ்சம் விலகி, அவனுக்கும் இவளுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகமாக்கினாள். ‘நல்ல வேடிக்கைதான்; அதில் தனி சுகம் இருக்கிறது என்று நான் இடைவெளியைப் பெரிதுபடுத்தினால் வேண்டுமென்றே அதிகமாக்குவதா?’ என்று எண்ணிய வேங்கி இளவரசனும் அவள் பக்கமாக நகர்ந்து இடைவெளியைக் குறைத்தான். ஆனால் மதுராந்தகியா அதற்கு இசைவாள்! இடைவெளியைப் பெரிதாக்கியது முதலில் நீங்கள்தான்! அதனால் இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று சிறிது விலகிப்போனாள். என்ன இது? நான் அவளை நோக்கிப் போக அதற்கு எதிர்மாறாய் விலகிப் போகிறாளே? இதிலா விளையாட்டு? “மதுராந்தகி!” என்று கூப்பிட்டபடி அவளை நோக்கி நெருங்கினான். அவர் என்னை நோக்கி வருவதை நான் அநுமதிக்க முடியாது என்று அவள் மேலும் தள்ளி உட்கார முயலும் போது, மண்டபத்தின் கோடி வந்துவிட, இன்னும் தள்ளினால் சோழகங்கம் ஏரியில்தான் விழ வேண்டும் என்ற நிலையில் மண்டபத் தூணை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். தூணிற்கு அப்பால் ஏரி என்ற நிலையில், அவளின் ஒரு கை தூணைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இராசேந்திரன். “அரசகுமாரி- பக்கத்தில் ஏரி...” என்று எச்சரித்தபடி அவளை இப்புறம் இழுத்து அமர்த்துவதற்காக அருகில் சென்றான். “என்னைத் தொட வேண்டாம்! நான் பாதுகாப்பாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன்!” என்று கோபத்துடனே கூறிய மதுராந்தகி, தன்னை நோக்கி வரும் வேங்கி இளவரசன் கையில் படாதிருக்க வேண்டி, இன்னும் கொஞ்சம் நகர, “வேண்டாம் விபரீதம்!” என்று அதைத் தடுக்கும் எண்ணத்தில், அவளின் கைகளை இராசேந்திரன் பற்ற முயற்சித்தான். அதிலிருந்து அவள் திமிறிய போது, பிடிப்பு வழுக்கி நீரின் பக்கம் சாய்ந்துவிட்டாள். நீரில் அரசகுமாரி விழக் கூடாது என்பதற்காக, ஒரு கையால் தூணைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் அவளைப் பிடிக்கும் சமயத்தில், இவனுக்கும் வழுக்கி, இருவரும் ஏரிக்குள் ‘தொபீர்’ என்று விழுந்தனர். நீச்சல் பயிற்சியில் நன்கு அனுபவம் பெற்ற இராசேந்திரன், சமாளித்து மேலுக்கு வந்து அரசகுமாரி எங்கிருக்கின்றாள் என்று தேடினான். அவள் நீந்தியபடி ஆள் நிற்கும் அளவிற்கு ஆழம் வந்ததும், தரையில் காலூன்றி நின்று ‘இராசேந்திரன் என்ன ஆனான்?’ என்று சுற்று முற்றும் கவனித்தாள். கழுத்தளவு ஆழத்தில் அவன் காலூன்றி நிற்பதைப் பார்த்து, “என்னை ஏன் நீருக்குள் தள்ளினீர்?” என்று முனிவுடனே வினவினாள். “நானா தள்ளினேன்! நல்ல வேடிக்கை! நீரில் விழப் போகின்றாய் என்றல்லவா உன்னைப் பிடிப்பதற்கு வந்தேன். அதற்குள் எனக்கும் வழுக்கிவிட்டது!” என்றான். “அதுவா விஷயம்? முந்தின நாள் இரவு நான் சாளரத்தில் வந்து தோன்றியதும், நீ சரேலென்று உள்ளே திரும்பிவிட்டாயே. அதற்குக் காரணம்தான் என்னவோ?” என்றான். “கால்கடுக்க ஏறக்குறைய ஒன்றரை நாழிகை தங்களுக்காக நின்றிருக்கின்றேன்! ஆனால் தாங்கள் என்ன ஏது என்று பார்க்காமல், நிதானமாய் எல்லாக் காரியங்களையும் முடித்துவிட்டு வருகின்றீர்கள். அதுவரை அசையாமல் நிற்பதற்கு என் கால்கள் என்ன இரும்பினாலா செய்யப்பட்டிருக்கின்றது!” என்று கோபத்துடனே கேட்டாள். “அப்படிப் பார்த்தால் கடாரம் சென்று வெற்றியீட்டி வந்திருக்கும் என்னை வரவேற்க நீ வரவேயில்லை. அதற்காக உன்னை நான் ஏன் கோபித்துக் கொள்ளக் கூடாது?” என்று அதற்குப் பதில் கூறினான் இராசேந்திரன். “நாணம் காரணமாக நான் வரவில்லை. இதெல்லாம் பெரிய விஷயம் என்று என்னிடம் சண்டைபோட வந்துவிட்டீர்கள்!” என்று மதுராந்தகி சிணுங்கினாள். “சிணுங்கலைப் பார்... சிணுங்கலை. உன்னிடம் நான் பேசவே போவதில்லை” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் இராசேந்திரன். “இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!” என்று கழுத்தளவு நீரிலிருந்த அரசகுமாரி, மார்பளவுக்கு வந்து நின்று, தன் மென்கரங்களால் நீரை அள்ளி அள்ளி வேங்கி அரசன் மீது வீசினாள். “அரசகுமாரி என்ன வேடிக்கை?” என்று நீர் முகத்தில் படா வண்ணம், கைகளில் தடுத்தபடி அவளை நோக்கி வந்தான். அப்படி வரும்போது- கழுத்துக்குக் கீழே, மதர்த்து நின்ற அவளின் பருவ அழகுகளை மறைத்து நின்ற மார்புக் கச்சை நனைந்துவிட்டிருந்ததால், விம்மிய அப்பகுதியின் பூரிப்பு வெளிப்பட்டு நிற்க, அத்துடன் நில்லாது கருமை நிறம் பெற்ற முன் பகுதி நன்றாகவே அவன் கண்களுக்குப் புலப்பட்டுவிட்டதால், அதனால் நிலை குலைந்து சிலையாக நின்றான். “இதென்ன ஜலவிளையாட்டு? இருள் வந்துவிட்டதே! எப்படி எல்லாவற்றையும் உலர வைத்துக் கொண்டு அரண்மனை போவீர்கள்?” என்று கரையில் நின்றபடி வினவிய மலர்விழியின் குரல், மதுராந்தகியின் செவிகளில் விழுந்ததும், நீரை அள்ளி வீசுவதை நிறுத்தி, அவனைப் பார்த்தாள். இதுவரை அவன் சிலையாய் நின்று கொண்டு, தன் அழகுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் கவனித்த மதுராந்தகி நாணத்துடன் சடக்கென்று நீருக்குள் அமிழ்ந்து கொண்டாள். விழிப்படைந்த இராசேந்திரன் அதே நினைவுடன் மயக்கம் கலந்த பார்வையில், மதுராந்தகியை உற்றுப் பார்க்கலானான். “அரசகுமாரி, இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது! வாருங்கள் போய்விடலாம்” என்று மீண்டும் குரல்தாள் மலர்விழி. ‘புறா மூலம் ஓலை நறுக்கில் இங்கே தங்களைச் சந்திக்க விரும்பியதற்குச் செவிசாய்த்து மண்டபக் கரைக்கு வந்ததற்கு நன்றி!’ என்று விழிகளாலேயே கூறிய மதுராந்தகி, நீரிலிருந்து நடக்கலானாள். இதற்கு மேல் பார்வையைச் செலுத்துவது அவ்வளவு நாகரிகம் இல்லை என்று உணர்ந்த இராசேந்திரன், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான். ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அதிலிருந்த நீரைப் பிழியும் சப்தம் மட்டும் அவன் காதில் விழுந்தது. ‘நீரை வடிக்க துணியை முறுக்கும் மதுராந்தகி கூட என் மனத்தையும் சேர்த்தல்லவா பிழிந்து கொண்டிருக்கிறாள்’ என்று சலனப்பட்ட வேங்கி இளவரசன், “போய் வருவதாக” அவள் தோழி வார்த்தையைக் கேட்டுத் திரும்பினான். அந்த இதழுக்கேற்றாற் போல... “வாருங்கள் இளவரசி! இருட்ட ஆரம்பித்துவிட்டது. இனிமேல் இங்கே நாம் நிற்பது அவ்வளவு உசிதமல்ல!” என்று மலர்விழி மதுராந்தகியைப் பற்றி இழுக்க, “போய் வருகிறேன் இளவரசே!” என் விடைபெற்று, அவன் பார்வையிலிருந்து விடுபட்டதும், மிகவும் சோர்வுடனே கரையேறினான் இராசேந்திரன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|