(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 9 புரவியிலிருந்து இறங்கிய அம்மையப்பன், கங்கைகொண்ட சோழேச்சுரத்தின் கோபுரத்தைப் பார்த்து, கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த சத்திரத்திற்குள் நுழைந்தான். “அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்” என்று தலையாட்டினான் சத்திரத்தலைவன். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புரவியில் மீண்டும் கிளம்பினான் அம்மையப்பன். ***** இருட்டு அறை... தூரத்தில் மதுராந்தக வடவாறு சப்தித்து ஓடும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே இருந்த காவலனிடம் “பெரியவரைப் பார்க்க வேண்டும்” என்று கூறினான் அம்மையப்பன். கொஞ்சம் காத்திருக்கும்படி, உள்ளே சென்று திரும்பிய காவலன் வரச் சொன்னதாக அவனிடம் தெரிவித்தான். அம்மையப்பன் உள்ளே நுழைந்தான். ஒரே கும்மிருள். தட்டுத் தடுமாறி நடந்துதான், தாழ்வாரம் போன்று இருக்கும் அப்பகுதியைக் கடக்க வேண்டும்! ஆனால், அம்மையப்பன் சர்வசாதாரணமாக எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாது, வேகமாக நடந்து சென்றான். கூடம் வந்தது. அகன்று பெரியதாய் இல்லாவிட்டாலும், சற்று விசாலமாகவே இருந்தது. மருந்துக்குக் கூட வெளிச்சம் நுழைய முடியாதபடி இருட்டு அந்த இடத்தை நன்கு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதன் கூடத்தின் நடுவிலிருந்த தூணில் தீவட்டி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில், தலையில் வெள்ளை முக்காடிட்ட உருவம் ஒன்று ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. பதிலுக்குத் தலையை அசைத்து “இந்தத் தடவை நீண்ட நாளாகிவிட்டதல்லவா?” என்றது கரகரப்புக் குரலில். “ஆம் ஐயா, எதிரிகளை நாகைவரை பின் தொடர வேண்டியதாகப் போயிற்று. விஷயங்களும் அதற்கு ஏற்றபடி நிறையவே...” என்றதும், உருவம் குறுக்கிட்டு, “எனக்குத் தெரியும். ஆனால் நாட்கள், நாம் திட்டமிட்ட காலத்திற்குள் அடங்காமல் போய்விட்டதால், எதிரிகளால் உனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டதோ, என சந்தேகம் தோன்றிவிட்டது” என்றது. “ஐயா, எதிரிகளுக்கு நான்தான் யமன்; அவர்கள் அல்ல எனக்கு” என்றான் அம்மையப்பன் திடமான குரலில். “அதுவும் எனக்குத் தெரியும். அந்த ஒரு நம்பிக்கையில்தான், திட்டமிட்டபடி நாட்கள் கடந்து போனாலும், உன்னை எதிர்பார்த்துக் கொண்டு, இங்கே காத்திருக்கின்றேன்” என்றது வழக்கமான கரகரப்புக் குரலில். தீவட்டியின் ஒளி சற்று மங்கலாகியது. உருவம் ஆசனத்திலிருந்து எழுந்து, மூலையிலிருந்த எண்ணெய்ச் சட்டியை எடுக்கப் போக, “நான் செய்கின்றேன்; நீங்கள் இருங்கள்!” என்று சட்டியிலிருந்து எண்ணெயை ஊற்றி, பழையபடி பிரகாசத்துடன் தீவட்டியை எரியும்படிச் செய்துவிட்டான். உருவம் மெல்லக் கனைத்து, தன் போர்வையை விலக்கிச் செய்யும் போது, மார்பில் அரை முழ அளவிற்குப் பெரிய தழும்பு ஒன்று தெரிந்தது. சாதாரணமாய்ப் பெரும் போர்களில் ஈடுபட்டவர்களுக்கே அந்த அளவிற்குத் தழும்பு இருக்கும்! “போன விஷயம்..?” என்று உருவம் வினவ, “நம் அரண்மனையில் வேலை பார்க்கும் தென்னன், நாகை ஜோதிடரின் சீடன் காளிங்கராயனுடன் சேர்ந்து கொண்டு, சோழ அரசுக்கு விரோதமாய்ச் செயல்பட ஆரம்பித்துவிட்டான். இங்கிருந்து செய்திகளைத் தூமகேது என்ற பாண்டிய நாட்டான் மூலம், நாடிழந்த பாண்டியனுக்குத் தெரிவிக்கின்றார்கள்” என்றான். அமைதியுடனிருந்த உருவம், ஆத்திரத்துடன், “இராஜத் துரோகிகள்!” என்று பற்களைக் கடித்தது. “அரசர் இறந்துவிடும் நிலையிலிருக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வருவதில் இங்கே குழப்பம் இருக்கிறது! என்பன போன்ற விஷயங்கள், நம் பகைவர்களுக்குத் தெரிந்து போய்விட்டன.” “ம்...” -தலையில் சரிந்த வெண்முக்காட்டை மறுபடியும் நன்கு இழுத்து, முகத்தை மூடிக் கொண்டது. “கடாரத்திலிருந்து இருவர் இராசேந்திரனைத் தொலைத்துக் கட்ட, அவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி பெண்... அநேகமாக அவள் கடார அரச குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம். இன்னொருவன் கட்டுடலாய் இருக்கின்றான். அவளுக்குத் துணையாக அவன் வந்திருப்பதாகத் தெரிகிறது. வணிகத்தை முன்னிட்டு வந்ததாக என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள். பாண்டிய நாட்டான் தூமகேது உதவியுடன் தமிழகம் வந்திருக்கின்றார்கள். கடார வெற்றி வீரர் வீரர் இராசேந்திரன் எச்சரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...” என்று அம்மையப்பன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூடத்தை ஒட்டி உட்புறமாகச் செல்லும் வழியிலிருந்து ‘தட், தட்’ என்று மூன்று முறை தட்டப்படும் சப்தம் எழுந்தது. உடனே உருவம் சுறுசுறுப்புப் பெற்றது. “சற்று வெளியே போயிரு அம்மையப்பா! கால் நாழிகை கழித்துக் கூப்பிடுகின்றேன்” என்று கூற, அவன் தலையாட்டிவிட்டுக் கூடத்திலிருந்து வெளியேறினான். ‘சுரங்க அறையில் யார் வந்து தட்டுவார்கள்? அடிக்கடி பெரியவரை யாரோ வந்து சந்திக்கின்றனர். ஒருவேளை என்னைப் போல் அவர்களும் பெரியவரின் நம்பிக்கைக்கு உரிய ஒற்றனா? அவரின் நம்பிக்கை பெற்றவன் நான் ஒருவன்தான் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, புதிதாக வேறு ஒருவன் முளைத்திருக்கின்றான். யாராயிருந்தால் நமக்கு என்ன வந்தது? இன்னும் கடினமாக உழைத்து, பெரியவரின் முழு நம்பிக்கையைப் பெற வேண்டும். தீவில் மறைந்து வாழும் நாடிழந்த பாண்டியனையும், அவன் கூட்டத்தையும் கண்டு பிடிக்க வேண்டும். அந்தத் தீவு எங்கே இருக்கிறது? அதற்குப் போக வழி...! தூமகேதுவை ஒரு திங்கள் வரை மறைவாகப் பின் தொடர்ந்தால் எல்லாம் தெரிந்துவிடும். இதைக் கண்டு பிடித்துவிட்டால் நான் பெரியவரின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுவேன்!’ என்று எண்ணியபடி அம்மையப்பன் வெளியே வந்து நின்றான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|