(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 19

     இருள் சூழ்ந்த அந்தப் பெரிய அறையின் ஒரு மூலையில் கைகள் கட்டுப்பட்டுக் கிடந்த தென்னன், மெல்ல கண் விழித்தான். அந்தமில்லா இருள் போல முதலில் அவனுக்குத் தோன்றினாலும், மெல்ல மெல்ல அறையின் சுவர்களும், மற்றவைகளும் அவனுக்குத் தெரிந்தன. சுவர் ஓரமாய் வேல்களும், வாள்களும் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

     நான் எங்கிருக்கின்றேன்? இது எந்த இடம்? கங்கைகொண்ட சோழபுரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் இவனுக்கு நன்கு பழக்கமானதால், இது கோட்டையில் எந்தப் பகுதியைச் சேர்ந்தது? என்பதை அறிவதற்காக அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் நோட்டம்விட்டான்.

     கடைசியில்...

     குழப்பம் வந்ததே தவிர, அந்த அறையைப் பற்றி ஒன்றும் புலப்படவில்லை. கைகள் இரண்டும் கட்டப்பட்டுவிட்டதால், மெல்ல எழுந்து உட்கார முயன்று, முடியாமல் திரும்பவும் சமாளித்து ஒருவாறு உட்கார்ந்தான்.

     விண் விண் என்று தலை பலமாய் வலிக்க, அடிபட்டிருக்குமோ? அல்லது மண்டையில் அடித்து மயக்கமுறச் செய்து என்னை இங்கு கொண்டு வந்தார்களோ? என்று குழம்பியபடி தலையை ஆட்டிப் பார்த்தான் தென்னன். அடிபட்டதற்கான அடையாளம் எதுவுமில்லை.

     எப்படி இங்கு கொண்டு வரப்பட்டேன்? எப்படி... எப்படி...? என்று ஆற்றங்கரையில் நடந்தவைகளை மனதில் நினைவு கூர்ந்தான்.

     உடும்பைத் தோளில் வைத்தபடி, நான் கோட்டையிலே குத்துவெட்டு என்று சொல்லியபடி ஆற்றின் கரையோரமாய் நடந்து கொண்டிருந்த போது... முதுகின் பின்னால் கூரிய கத்தி பதிந்து அசையாதே... நில்... என்று கரகரத்த குரல் ஒன்று ஒலிக்க, நானும் அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதை நிறுத்தி, அசையாதிருக்கும் போது... ஒரு கை என் மூக்கின் அருகில் வர... ஆ! அந்த வாசனை... அந்த வாசனை... என்னவென்று புரியாத வாசனை... அவ்வளவுதான் எனக்குத் தெரிகிறது. பிறகு என்ன நடந்தது? இங்கு எப்படி வந்தேன்? ஒன்றும் தெரியவில்லையே. கடைசியில் இந்த இருட்டறையில் கைகள் கட்டுப்பட்டுக் கிடக்கின்றேன். இது என்ன மந்திரமா? மாயமா? ஒன்றும் புரியவில்லையே. கரகரப்பான அந்தக் குரலும்... அந்தக் கைகளும்... எவ்வளவு நீளமான விரல்கள்! ஒரு விரலில் மோதிரம். அது... அது... எங்கோ... எப்போதோ யாரிடமோ? பார்த்த மாதிரி இருக்கிறதே. ஆ! நினைவுக்கு வரவில்லையே. இதைக் கண்டுபிடித்துவிட்டால் கைக்குரிய நபர் யாரென்று தெரிந்துவிடும். என்று தென்னன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே... இருட்டான அந்த அறையில் வெளிச்சம் பரவத் தொடங்கியது. அவன் புருவங்கள் நெரிய வெளிச்சம் வந்த பக்கம் பார்க்க... தீப்பந்தம் ஒன்று இவனை நோக்கி வர, கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கும் போது, வீரன் ஒருவன் அதைப் பிடித்தபடி வர... பின்னால்... அட! இவரா?

     திகைப்புடன் வைத்த விழி வாங்காது, தென்னன் அவரைப் பார்க்க...

     சோழ நாட்டின் முதலமைச்சரும், சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்குரியவருமான, பிரமாதிராசர்தான் மிடுக்குடன் வந்து கொண்டிருந்தார்.

     அருகில் வந்த முதலமைச்சர், “என்ன தென்னா? ஏன் அப்படிப் பார்க்கின்றாய்? இங்கே எப்படி வந்துவிட்டாய் என்றா திகைக்கின்றாய்?” என்றார்.

     பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டிய அவன் பார்வையை அவரின் கைகளின் மீது செலுத்தினான். ‘அந்த மோதிரம்... அந்த மோதிரம்...’ என்று மனதிற்குள்ளே இரண்டு தரம் சொல்லிக் கொண்டான்.

     “இவன் கைக்கட்டை அவிழ்த்துப் பின்பக்கமாகக் கட்டு. அப்படிக் கட்டினால் இவனுக்கு நிற்க வசதியாக இருக்கும்” என்று வீரனுக்குக் கட்டளையிட்டார் முதலமைச்சர்.

     தீப்பந்தத்தை வைப்பதற்கு மரச்சட்டத்தில் ஒரு துளையைச் செய்து, அதைச் சுவரில் பொருத்தியிருந்தனர். அந்தத் துளையில் தீப்பந்தத்தைச் செருகிய வீரன், தென்னனின் கைக் கட்டுகளைத் தளர்த்திப் பின்பக்கமாய்த் திருப்பித் திரும்பவும் கைகளை இறுக்கிக் கட்டினான்.

     “நீ வெளியே காவலுக்கு நில். நான் கூப்பிடும் போது வா” என்று உத்திரவிட்ட பிரமாதிராசர், வீரன் போகும் வரை மௌனமாயிருந்து விட்டுத் தென்னனை நோக்கி, “நீ செய்த குற்றத்திற்கு உன்னைச் சிரச்சேதம் செய்ய வேண்டும்!” என்றார் கடுமையாக.

     ‘சிரச்சேதமா... இது என்ன விபரீதம்?’ என்று திகைத்த தென்னன், சற்றுத் துணிவை வரவழைத்து, “ஐயா, நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்! தயவு செய்து அதைத் தெரிவித்தால் தங்களுக்குப் புண்ணியம் உண்டு!” என்றான் பணிவோடு.

     பிரமாதிராசர் களீரெனச் சிரித்தார். “ராஜத்துரோகம் செய்திருக்கின்றாய்? அதாவது இந்தச் சோழ நாட்டிற்கும், சோழ அரசுக்கும் நீ வஞ்சகம் பண்ணிவிட்டாய்” என்றார்.

     அரண்மனைச் செய்திகளைக் காளிங்கராயனிடம் சொன்னதை இவர்கள் தெரிந்து கொண்டுவிட்டார்களா? என்று யோசித்த தென்னன் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனி சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற மன உறுதியோடு, “நான் என்ன ராஜத்துரோகம் செய்தேன் என்பதைத் தாங்கள் இந்த ஏழைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றான்.

     “தெரிவிக்க வேண்டுமா? உண்மையிலேயே உனக்கு நிறையத் திமிர்தான்!” என்று அதட்டிய பிரமாதிராசர் “இளவரசரும், அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மதுராந்தக வடவாற்றின் கரையில் முக்கிய விஷயமாய்ப் பேசிக் கொண்டிருந்ததை நீ ஒளிந்திருந்து கேட்டாயல்லவா? அவ்விதம் அரசகுடும்பத்தினர் பேசும் போது, பணியாளனாயிருக்கும் நீ எவ்விதம் மறைந்து கேட்கலாம்? அதனால்தான் நீ இராஜத்துரோகம் செய்துவிட்டதாக நான் கூறுகின்றேன்!” என்றார்.

     “ஐயா! என் பேரில் நீங்கள் இராஜத்துரோகம் சாட்டியது இருக்கட்டும் அரசர் எடுக்கும் முடிவுக்கு எதிரிடையாக சிலர் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே. அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகின்றீர்கள்?” என்று அவரைத் திருப்பிக் கேட்டான்.

     பிரமாதிராசருக்கு முகம் சிவந்தது. “அப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் யார்?” என்றார் அந்த அறையே அதிரும்படி.

     அவர் இம்மாதிரிப் பேசித் தென்னன் கேட்கவில்லையாதலால் பயந்தபடியே, “சோழ நாட்டு இளவரசரும், அவரின் துணைவியும், தங்கை இராஜசுந்தரியும், சயங்கொண்ட சோழ இருக்குவேளும், படைத்தலைவர் வீரசோழனும்...” என்றான். இப்படிக் கூறியதற்காக முதலமைச்சர் நம்மை அதிகமாகக் கோபிப்பாரா! என்ற அச்சமும் அச்சமயம் அவன் மனதிற்குள் எழுந்தது.

     “என்ன சொன்னாய்?” என்ற வியப்புக்குறியுடன் அவனையே பார்த்த பிரமாதிராசர், தென்னன் அருகில் வந்து, அவன் தோளைத் தட்டினார்.

     “உன்னுடைய ராஜ விசுவாசம் பாராட்டுக்குரியது!” என்றார்.

     இவ்விதம் அவர் பாராட்டிக் கூறிய வார்த்தைகளினால் உற்சாகம் அடைந்த தென்னன் முகத்தில் மகிழ்ச்சிக்குறி நிலவ, சிறிது கர்வமாக நிமிர்ந்து நின்றான்.

     “அங்கே என்ன பேசிக் கொண்டார்கள் தென்னா?” என்று வினவினார் பிரமாதிராசர்.

     “இன்று காலை இளவரசர் அறையைச் சுத்தம் செய்வதற்குச் சென்றேன். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. வந்த வழியே போய்விடலாம் என்று முனைவதற்குள், ‘இங்கே நாம் சந்திக்கக் கூடாது. இரவு மதுராந்தக வடவாற்றின் அரசமர மண்டபத்தில் சந்தித்து, அடுத்து இளவரசு பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டும்!’ என்ற சாளுக்கிய அரசியின் குரல் கேட்கவே, தூணில் மறைந்தேன். உள்ளிருந்து கொடும்பாளூராரும், வீரசோழனும் வெளியில் வந்தார்கள். அவர்களை வாசல்வரை வந்து இளவரசர் வழியனுப்பி வைத்தார். கூட இராஜசுந்தரியும் இருந்தார். அப்போதுதான் என் மனதில் சந்தேகம் தோன்றியது. அடுத்து இளவரசர் யார் என்பதை அரசரல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவர்கள் யார் என்று குழம்பினேன். சக்கரவர்த்தியிடம் இதைத் தெரிவிக்கலாமா? என்று கூட எண்ணினேன். ஆனால், நான் நினைப்பது போலல்லாமல் வேறு மாதிரி அவர்களின் நோக்கம் இருந்தால், நமக்கல்லவா தொல்லை வரும். அதனால் அரசமர மண்டபத்தில் என்னதான் பேசுகின்றார்கள் என்பதை அறிந்து, பிறகு சக்கரவர்த்தியிடம் இதைப் பற்றித் தெரிவிக்கலாம் என்று முடிவுகட்டி, அதற்காகவே பேசுவதை ஒட்டுக் கேட்டேன்!” என்றான் தென்னன்.

     “நல்லது! அரசமர மண்டபத்தில் என்ன அப்படிப் பேசினார்கள்?”

     முதலமைச்சர் கேள்விக்குப் பதில் சொல்லலாமா? கூடாதா? என்று யோசித்தான் தென்னன். அங்கே கேட்டதை அப்படியே இவரிடம் தெரிவித்துவிடுவதால் தலை ஒன்றும் போய்விடாது. மாறாக இவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடலாம். அதை வைத்துக் கொண்டு சில காரியங்களை இவர் மூலம் சாதித்துக் கொள்ளலாம் என்றெண்ணி,

     “நிறைய விஷயங்கள் பேசினார்கள் முதன்மந்திரி” என்றான்.

     பிரமாதிராசர் அவன் பக்கத்தில் வந்தார். தோளைத் தட்டி “என்னிடம் எப்படிச் சொல்வது என்றுதானே தயங்குகிறாய்? கவலைப்படாதே. நிறைய வெகுமதிகள் தருகிறேன்! அத்துடன் உன்னை...” என்று வார்த்தைகளை முடிக்காமலே புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

     அந்தப் பார்வையில்...

     ‘முடிக்காமல் நான் விட்டுவிட்ட வாக்கியத்தில் நிறைய விஷயங்கள் இருப்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற அர்த்தம் தொனித்தது.

     நான் கேட்ட விஷயத்தை இவரிடம் சொல்வதால் எனக்கு இருவகையில் இலாபம் கிடைக்கிறது! பிரமாதிராசரின் வெகுமதிகளையும் நம்பிக்கையையும் பெறுகிறேன். அதே விஷயத்தை மீண்டும் காளிங்கராயனிடம் தெரிவித்தால் பொற்காசுகளும் கிடைக்கும். ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்று மகிழ்ச்சியுடன் தொண்டையைச் சரிசெய்து கொண்டு, “பெருமதிப்புக்குரிய அமைச்சர் பெருமானே, மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட அரசரை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், இது சம்பந்தமாக மன்னரைச் சரிக்கட்ட குந்தள மன்னரை இங்கே வரவழைப்பது என்றும், சோழக் குறுநில மன்னர்களின் ஆதரவைத் திரட்டக் கொடும்பாளூர் ஒற்றர்களை எங்கும் அனுப்புவது என்றும் அங்கே முடிவு எடுக்கப்பட்டது” என்றான்.

     முதல்மந்திரியின் மனம் இதைக் கேட்டுச் சலனப்பட்டாலும், தென்னனுக்கு அது தெரியக் கூடாது என்பதற்காக, நொடிப் பொழுதிற்குள் மனதை மாற்றிக் கொண்டு, “இதைத் தவிர வேறு ஏதாகிலும் பேசிக் கொண்டார்களா?” என்றார்.

     “இல்லை ஐயா! நான் சொன்ன செய்திகளைத்தான் அவர்கள் பேசினார்கள்” என்றான்.

     வெளியே நின்று கொண்டிருந்த வீரனைக் கைதட்டிக் கூப்பிட்டார் பிரமாதிராசர்.

     “இவனுக்கு ஐம்பது பொற்காசுகள் அடங்கிய முடிப்பைக் கொடு!” என்று உத்தரவிட்டார்.

     பொற்காசுகள் அடங்கிய முடிப்பு தென்னனிடம் கொடுக்கப்பட்டது.

     தென்னன் அதைப் பெற்றுக் கொண்டதும், கண்களைக் கறுப்புத் துணி கொண்டு வீரன் கட்டினான்.

     உடனே தென்னன் பதறி...

     “முதன்மந்திரி அவர்களே! என் கண்களை ஏன் கட்டுகின்றீர்கள்?” என்று கேட்டான்.

     “சம்பிரதாயம். வேறொன்றும் நீ பயப்படும்படி நடக்காது. இங்கே வரும் ஆட்களை இவ்விதம்தான் கண் கட்டி அனுப்பப்படும்” என்றார் அழுத்தமாக.

     வீரனுடன் மெல்லத் தடவித்தடவி நடந்த தென்னன். ‘இது எந்த இடமாக இருக்கும்?’ என்பதை அறிவதற்காக தரையைக் காலால் தடவிப் பார்த்தான்.

     என்ன இது? அதே வாசனை. ஆம். அதே வாசனைதான்... என்று அவன் நிதானிப்பதற்குள், மயக்கம் வந்துவிடவே, வீரன் மேல் அப்படியே சாய்ந்து கொண்டான்.

     ‘சுரீர்’ என்று சூரிய ஒளிபடவே, தென்னன் கண் விழித்தான். பழையபடி மதுராந்தக வடவாற்றின் கரையிலேயே அவன் தற்போது இருந்தான். கடவுளே... இங்கு எப்படி வந்தேன்? கண்கள் கட்டப்பட்டதும் மயக்க வாசனையை நுகரும்படிச் செய்து இங்கே கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும். முதலமைச்சர் கொடுத்த பொற்காசுகள் எங்கே? ஐயோ! கொடுத்த மாதிரிக் கொடுத்துத் திரும்பவும் வாங்கிக் கொண்டார்களா? முதலமைச்சர் அப்படியெல்லாம் செய்யமாட்டாரே? இங்கேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

     சற்றுத் தள்ளி அந்த முடிப்பு கீழே கிடந்தது. எழுந்து உடம்பில் படிந்த புழுதியைத் தட்டிக் கொண்டு, அதை எடுத்துக் கொண்டான்.

     இரவில் நானிருந்த இடம்... அந்த இருட்டு அறை... எதுவாக இருக்கும்? என்ற கேள்வி அச்சமயம் அவன் மனதில் தோன்றியது.

     மதுராந்தகப் பேராறு, காலை இளம்பரிதியின் ஒளியில், வெள்ளிக்குழம்பென மின்னிக் கொண்டிருந்தது. அதன் இரு கரையெங்கும், பலவித மரங்கள், வான் முட்டும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. காலைக் கடனைக் கழித்துக் குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் பொன்முடிப்போடு கங்காபுரிக் கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் தென்னன்.

     எதிரே-

     யார் இவர்கள்? என்று கண்ணை இடுக்கிப் பார்க்கும் போது...

     எங்கு போனாலும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற அரசரின் கட்டளைப்படி இருவரையும் வணங்கினான்.

     பதிலுக்கு வணங்கி, “உன் பெயர் தென்னன்தானே?” என்றாள் அவ்விருவரில் ஒருவரான கடார இளவரசி.

     “ஆம்!” என்று பணிவுடனே தலையாட்டினான்.

     இரத்தினாதேவியின் முகம் மலர்ந்தது. உடனே, “கடலரசன்!” என்றாள் மகிழ்ச்சியோடு.

     அவ்வார்த்தைகளைக் கேட்ட தென்னனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

     ‘இவர்கள் நம்மவர்களா? நம் கூட்டத்துக்கு மட்டுமே தெரியும் இந்த வார்த்தை இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று கடார இளவரசியைச் சந்தேகத்துடனே பார்த்தான்.

     “தூமகேது என் நண்பன்; அவர்தான் இந்த வார்த்தையை எனக்குக் கூறி உங்களைப் பார்க்கச் சொன்னார்!” என்றாள் இரத்தினாதேவி.

     “நல்லது! இனிமேல் உங்களுக்கு நான் அடிமை. என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள்! நான் செய்கின்றேன்!” என்றான் பணிவுடனே.

     “தேவைப்படும் போது கேட்போம்” என்று கூறிய சாமந்தன், கடார இளவரசியுடன் வடவாற்றை நோக்கிப் போகலானான்.

     ‘என்ன இருந்தாலும் தூமகேதுவைப் போன்ற கெட்டிக்காரர்களைத் தன்னகத்தே கொண்ட பாண்டிய அரசர் பெரும் புண்ணியம் செய்தவராகத்தான் இருக்க வேண்டும்! கடார இளவரசியான இரத்தினாதேவி, சோழ அரசரின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டாள். அரச விருந்தாளியாக, அவள் சாமந்தனுடன் அரண்மனையிலே தங்கியிருக்கின்றாள். அவளுக்குச் சகல மரியாதையும் இங்கே செய்யப்படுகிறது. இப்படிப்பட்டவளைத் தூமகேது வளைத்துப் போட்டுவிட்டதால், இவளைக் கொண்டே சோழ வம்சத்தை நிர்மூலமாக்கிவிடலாம்!’ என்று எண்ணியபடி தென்னன் கோட்டைக்குள் மகிழ்ச்சியுடன் நுழைந்தான்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49