(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 8 நாகையிலிருந்து, தஞ்சை செல்லும் காட்டுப் பகுதியில் பல்லக்கு ஒன்று வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. நிசப்தமான அந்தப் பகல் நேரத்தில் சூரிய ஒளி பல்லக்குத் தூக்கியவர்களை வருத்த, அதைத் தாங்கமாட்டாமல், வியர்வையை வழித்துவிட்டு, தாகசாந்தி செய்யவும், களைப்பாறவும் இடம் தேடினர். சலசலவென்று காட்டருவி சப்தித்து ஓடும் சப்தம், அவர்கள் செவியில் விழுந்தது. நல்ல இடம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வேகமாய் நடை போட்டனர். சிறுது தள்ளி வேங்கை மரம் ஒன்று வான் முட்டும் உயரத்தில் வளர்ந்து, அப்பகுதியை மூடியபடி, அடர்ந்து பரவியிருந்தது. களைப்பாறுவதற்கு அது ஏற்ற இடம் என்று தீர்மானித்துப் பல்லக்குத் தூக்கிகள், வேங்கைமர நிழலில் இறக்கினர். பல்லக்கின் திரையை விலக்கி, மஞ்சள் முகம் ஒன்று எட்டிப் பார்த்தது. வசீகரமான களையுடன், காண்போரை மயக்கும் சூட்சுமம் கண்களில் மறைந்திருக்க, அந்த முகத்துக்கு உரியவளான இளவரசி இரத்தினாதேவி, “எதற்காக இங்கே இறக்கினீர்கள்?” என்று வினவினாள். “அம்மணி, விடியற்காலையிலிருந்து பல்லக்குச் சுமந்து வந்த களைப்பு நீங்கவே, இங்கே இறக்கினோம். அத்துடன் தாகம் வேறு எங்களை வாட்டி வதைக்கிறது” என்றான் அவர்களில் ஒருவன். பின்னால், இன்னொரு பல்லக்கில் வந்து கொண்டிருந்த சாமந்தன், பல்லக்கை நிறுத்தி இறங்கினான். அதைத் தூக்கி வந்தவர்களும், முன்னால் வந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு, தாகசாந்தி செய்ய அருவியை நோக்கி நடந்தனர். சாமந்தன் இரத்தினாதேவியின் அருகில் வந்தான். இருவரும் களைப்பாறலாம் என்று வேங்கை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தனர். “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்று இரத்தினாதேவி வினவ, சாமந்தன் உதட்டைப் பிதுக்கி, “இவர்கள் போகும் வேகத்தைப் பார்த்தால்...” என்று சொல்லி கொண்டிருக்கும் போது, புரவியின் குளம்பொலி கேட்கத் துவங்கியது. ‘இந்நேரத்தில் புரவி வர வேண்டிய அவசியம்..?’ என்று ஒன்றும் புரியாமல் இளவரசி விழிக்க, சாமந்தன் இடையிலிருந்த வாளை ‘சரக்’கென்று உருவி, எழுந்து கொண்டான். குளம்பொலி நெருக்கத்தில் கேட்க ஆரம்பித்தது. யாரோ வருகின்றார்கள்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று, பதட்டப்பட்ட சாமந்தன் பல்லக்குத் தூக்கிகளுக்குக் குரல் கொடுத்தான். “வருவது ஒரு குதிரைதான்! எதற்காக வீண் பதட்டம்?” என்ற கடார இளவரசி, சப்தம் வந்த பக்கம் உற்று நோக்கினாள். உயர் ஜாதிக் குதிரையில், மிகுந்த வேகத்தோடு, ஆனால் குதிரையைச் செலுத்தி வந்தவன் சாமியார் போன்று காணப்பட்டதால், உறையிலிருந்து உருவிய வாளை உள்ளே போட்டுக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டான் சாமந்தன். புன்முறுவலுடன், கடார இளவரசியும், கத்தியின் மேலிருந்த கைகளை எடுத்து, “பரவாயில்லையே, சோழ நாட்டில் துறவிகள் கூட குதிரைவிடப் பயின்றிருக்கின்றார்களே!” என்றாள் வியப்புடன். அவள் சொல்லி முடிப்பதற்கும், அம்மையப்பன் புரவியை நிறுத்தி இறங்குவதற்கும் சரியாக இருந்தது. ‘என் கணக்குப்படி தஞ்சைக் காட்டுப்பகுதியிலே இவர்களைப் பிடித்துவிட்டேன். ஜாதிப் புரவியாக இருந்ததால் அப்படிச் செய்ய முடிந்தது!’ என்று தனக்குள் கூறிக் கொண்ட அம்மையப்பன், இரத்தினாதேவியைப் பார்த்து, “வணக்கம் அம்மணி! தங்களைப் பார்த்தால் வெளிநாட்டார் போலிருக்கிறதே! தங்கள் நாடு எதுவோ?” என்றான் பணிவுடன். சாமந்தன் இடைமறித்து, “முதலில் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம், இல்லையா?” என்றான். “தாராளமாக. நான் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவன். என் தொழில், சுங்கைகொண்ட சேரழேச்சுவரத்தில் ஓதுவாராக இருக்கின்றேன். அவசரமாக நாகையிலிருந்து என் உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஓதுவார்... என்றால்?” -புருவங்கள் நெறிய வினவினாள் இரத்தினாதேவி. “பூசை நேரத்தில், கடவுள் மீது பாடல்கள் பாடுபவருக்கு ஓதுவார்கள் என்று பெயர்” என்றான் அம்மையப்பன். “எனக்கும் புரிகிறது. எங்கள் நாட்டில் கூட இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்” என்றான் இரத்தினாதேவி. மின்னும் அவள் விழிகளின் கூர்மை அம்மையப்பன் மனதை வருத்த பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ‘இந்தப் பெண்மணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். அதற்குள் நீர் குடிக்கச் சென்ற பல்லக்குத் தூக்கிகள் அங்கே வந்து சேர்ந்தனர். புதியதாக இருக்கும் அம்மையப்பனை ஒரு மாதிரிப் பார்க்க... “கொஞ்ச நேரம் இளைப்பாறிச் செல்வோம். தள்ளி உட்கார்ந்திருங்கள். கூப்பிடும் போது வந்தால் போதும்” என்றான் சாமந்தன். அவன் சொன்னது போலவே சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டனர். “உங்களைப் பற்றி இன்னும் நான் தெரிந்து கொள்ளவில்லையே!” என்றான் அம்மையப்பன். “எங்கள் நாடு கடாரம். வணிகம் செய்ய வேண்டி இங்கு வந்திருக்கின்றேன்! அத்துடன் எனக்கு மருத்துவமும் தெரியும்” என்றாள் இரத்தினாதேவி. இது உண்மையில்லையென்பது அம்மையப்பனுக்குத் தெரியும். அதனால், “நான் சொல்வதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது! உங்களைப் பார்த்தால் அரச குடும்பத்தினரைப் போல் தெரிகிறது” என்றான். கடார இளவரசியின் முகம் மாறியது. “அப்படியில்லை!” என்றாள் அழுத்தமாக. “இப்போது கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி நீங்கள் போகும் காரணம் வணிகத்தை முன்னிட்டா?” “ஆமாம்!” என்ற இரத்தினாதேவி, “இன்னும் எவ்வளவு தூரத்தில் அது இருக்கிறது?” என்று கேட்டாள். “தஞ்சையிலிருந்து கொஞ்ச தூரம்தான். ஆனால், தற்போது அங்கே குழப்பமாக அல்லவா இருக்கிறது. இந்த நேரத்தில் அங்கே போவது...” என்று நிறுத்தினான் அம்மையம்பன். “அம்மணி! அங்கே பெரிய குழப்பம் ஒன்று தோன்றப் போகிறது. சோழச் சக்கரவர்த்தி கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார். அடுத்து ஆட்சிக்கு வருவது யார் என்பதில் போட்டியிருக்கிறது!” என்று அவளைப் பார்த்தான். “என்னது?” அவளின் புருவங்கள் நெரிந்தன. “ஆமாம்! அடுத்து ஆட்சிக்கு வர இருக்கும் தற்போதைய இளவரசரைக் கீழே இறக்கச் சிலர் முனைகிறார்கள்!” “யார் அந்தச் சிலர்கள்?” என்று மகிழ்ச்சியுடனே கேட்டாள் இரத்தினாதேவி. “அதுதான் தெரியாது. சாதாரண ஓதுவாராய் இருக்கும் எனக்கு அரச விவகாரங்கள் அவ்வளவு அத்துப்படியாகி விடவில்லை. வர, வர சோழர்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது. அவர்கள் ஆட்சி முறையும்... அந்த மனிதர்களும்...” என்று அருவருப்புடன் கூறுவது போல நடித்த அம்மையப்பன், இரத்தினாதேவியின் முகத்தில் ஏதும் மாறுதல் தெரிகிறதா என ஆழ்ந்து நோக்கினான். அவன் நினைத்தது போலவே இந்தச் செய்தியினால், மிகுந்த சந்தோஷமுறுகிறாள் என்பதை அவள் முகம் காட்டியது. ‘வலையில் அகப்பட்டுவிடும் மீன்தான் அவள்’ என்று மனதிற்குள் கணக்குப் போட்ட அம்மையப்பன், “இப்போதிருக்கும் அரசர்தான், சதா போர், போர் என்று நாட்டுப் பொக்கிஷத்தையே காலியாக்கிக் கொண்டிருக்கிறாரே. அதனால் சோழ மக்களாகிய எங்களுக்கு, அவர் மேல் சலிப்புத்தான் ஏற்படுகிறது” என்றான். ‘தூமகேதுவைப் போல இவனும் நம் ஆள்தான்’ என்று எண்ணிய இரத்தினாதேவி, சாமந்தனைப் பார்த்தாள். ‘அவ்வளவு சீக்கிரம் இவனை நம்புவதில் எனக்கு உடன்பாடில்லை’ என்று கண்களால் சாடைகாட்டி, அம்மையப்பன் பக்கம் திரும்பினான். “ஐயா, நீங்கள் நாட்டின் நிலவரத்தைச் சொன்னதற்கு நன்றி! விலை மதிக்க முடியாத சில இரத்தினங்கள் எங்களிடம் இருக்கின்றன. நாங்கள் கடார நாட்டைச் சேர்ந்தவர்கள். அதை விற்கவே இங்கு வந்துள்ளோம். நாங்கள் போவதையறிந்த எங்கள் அரசரும், சோழ அரசரின் நல்லெண்ணத்தைப் பெற்று வரும்படி எங்களைப் பணித்துள்ளார். அதற்காகத்தான் இப்போது கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்” என்றான். ‘கடாரம் சென்று வெற்றியீட்டி இப்போதுதானே இராசேந்திரன் திரும்பியிருக்கின்றார். அதற்குள் மன்னனிடமிருந்து நல்லெண்ணத் தூதுவனா? நம்பும்படியில்லை’ என்று இருவரையும் சந்தேகத்துடன் பார்த்தான் அம்மையப்பன். ‘ஒருவேளை இப்படியிருக்குமோ? தோல்வி கண்ட அரசன், நாட்டின் நிலைமையைக் கண்டறிவதற்காக இருவரையும் ஏன் அனுப்பியிருக்கக் கூடாது? சாமந்தனைப் பார்த்தால் ஒற்றர்படையைச் சேர்ந்தவன் போன்று தெரிகிறது. இவள் அரச குடும்பத்தினளாக இருக்க வேண்டும்’ என்று எண்ணிய படி, “நீங்கள் நல்லெண்ணத் தூதுவர் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகின்றேன்! உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள், ஆனால் உங்கள் நாட்டின் மீது படையெடுத்திருக்க வேண்டாம் என்பதுதான் என் அபிப்ராயம்” என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட இரத்தினாதேவியின் முகம் சிவந்தது. இடையிலிருந்த குறுவாளின் மீது அவளையுமறியாமல் அவளின் கை சென்றது. அம்மையப்பன் அதைக் கவனித்துவிட்டான். அவர்கள் என்ன நோக்கத்திற்காகத் தமிழகம் வந்திருக்கிறார்கள் என்பதும் இப்போது அவனுக்குப் புரிந்துவிட்டது. “சோழர் படையெடுப்பால் எங்கள் சைனியம் பெரும் அழிவுக்குள்ளாகிவிட்டது. பல நகரங்கள் தரைமட்டமாகிவிட்டன. இதற்கெல்லாம் காரணமான அவனை நான்...” என உணர்ச்சிவயப்பட்ட இரத்தினாதேவியை இடைமறித்தான் சாமந்தன் “நேரமாகிவிட்டது! சீக்கிரம் கங்கைகொண்ட சோழபுரம் போக வேண்டும்” என்று கூறி பேச வேண்டாமென கண்களால் சாடை காட்டினான். இவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன்; இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கி. அது... அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளா? இல்லையா? என்பது. போகப் போக அதுவும் தெரிந்து போகிறது என்று, “நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் எங்கே தங்கப் போகின்றீர்கள்?” என்றான். “இதுவரை அதைப் பற்றி யோசனை இல்லை! அங்கே போய்த்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றான் சாமந்தன். “அப்படியென்றால், கங்கைகொண்ட சோழேசுவரக் கோயிலிருக்கும் பெரிய வீதியில், யாத்திரிகர் தங்கும் சத்திரம் இருக்கிறது. சத்திரத் தலைவனிடம், ‘சிவப்பழம்’ அனுப்பினார் என்று கூறுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்கு எப்படி உபசாரம் நடக்கிறது என்பதை!” என்று கூறினான் அம்மையப்பன். “உங்கள் உதவிக்கு நன்றி!” என்றாள் இரத்தினாதேவி முறுவலுடன். அவர்களிடம் விடைபெற்றுப் புரவியில் ஏறிய அம்மையப்பன் “நாளை வந்து சத்திரத்தில் தங்களைச் சந்திக்கின்றேன்” என்றான். அதற்குத் தலையாட்டி விடைதர, இராசேந்திரனை கொல்லத்தான் இவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் போகின்றார்கள்; பேச்சிலிருந்து அப்படித்தான் தெரிகிறது. பெரியவரிடம் இராசேந்திரனை எச்சரிக்கையுடனிருக்கும்படி சொல்ல வேண்டும் என்று குதிரையைத் தட்டிவிட்டான் அம்மையப்பன். அது காற்று வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது. நாலு கால் பாய்ச்சலில் புரவி சீறிக் கொண்டு போவதைக் கவனித்த சாமந்தன், “ஒரு துறவிக்கு இந்த அளவு குதிரை ஏற்றம் தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறது! இவன் சொல்லும் சத்திரத்தில் நிச்சயம் நாம் தங்கக் கூடாது. சீக்கிரம் நம் காரியத்தை முடித்துக் கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து கிளம்பிவிட வேண்டும். நமக்கு இரு உயிர்கள் வேண்டும். ஒன்று, வெற்றி வீரனாய்த் திரும்பும் இராசேந்திரன்! இன்னொன்று சோழச் சக்கரவர்த்தி” என்று கடாரமொழியில் அவளிடம் கூறினான். இரு பல்லக்குகளும், சிறிது கழிந்து, அக்காட்டுப் பகுதியில் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|