உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 20 சோழச் சக்கரவர்த்தி வீரராசேந்திரர் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்தார். அருகேயிருந்த பட்டத்தரசிக்கு வியப்பாகிவிட்டது. ஏறக்குறைய ஆறு திங்களுக்கு மேல், படுத்த படுக்கையிலிருந்தே துன்பப்பட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார் என்றால்... முதலமைச்சர் பிரமாதிராசர் கூட, கடார இளவரசி இரத்தினாதேவி சம்பந்தமாக அவருக்குக் கிடைத்த செய்தியை வைத்துச் சிகிச்சை முடிந்ததும், கடார நாட்டிற்கு அனுப்ப மனதில் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால்... அதிசயிக்கத் தக்க வகையில் அரசர் குணமடைந்துவிட்டதும், இரத்தினாதேவியை அங்கிருந்து அனுப்ப, மாமன்னரிலிருந்து பட்டத்தரசி வரை யாரும் விரும்பாததால் இந்தச் சமயத்தில் இப்பிரச்சினையை எழுப்பி, அதன் மூலம் அவர் அவமானப்பட விரும்பவில்லை. அதனால், காலம் கருதி மௌனமாக இருந்தார் முதன்மந்திரி. அந்தச் சமயத்தில்- பாண்டிய நாட்டிலிருந்து அவசரத் தூதுவன் ஒருவன் வந்தான். அங்கே குழப்பமான நிலைமை நிலவுவதாகவும், சீக்கிரம் சோழ இளவரசர் வரவேண்டுமென்றும், தற்காலிகக் கோட்டைத் தளபதி மூவேந்தராசனிடமிருந்து மிகவும் அவசரம் என குறிப்பிட்டிருந்த கடிதத்தை முதலமைச்சரிடம் தந்தான். தெம்புடன் சிறிது தூரம் வரை நடமாடியபடி இருந்த அரசருக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டது. அவர் பிரமாதிராசரிடம் என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய... “தற்சமயத்திற்கு சோழ இளவரசர் இங்கே இருப்பதுதான் நல்லது. மதுரைக் கோட்டையின் பாதுகாப்பைப் பலப்படுத்த இன்னும் சில வீரர்களுடன் இராசேந்திரனையும், திருவரங்கனையும் அனுப்பி வைக்கலாம். குழப்பம் நீங்கியதும் மூவேந்தராசனுக்குப் பதில், திருவரங்கனைப் படைக்குத் தலைமையாக்கிவிட்டு, இராசேந்திரனை கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்!” என்றார் முதன்மந்திரி. அனைவருக்கும் அந்த யோசனை நல்லதாகப்பட்டது. சோழ இளவரசன் அதிராசேந்திரனுக்கு இராசேந்திரனை அங்கே அனுப்ப விருப்பமில்லாமற் போனாலும் தற்சமயத்திற்குக் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அவன் போவது மனதிற்குத் திருப்தியாக இருக்கவே, முதலமைச்சர் சொன்ன யோசனைக்குச் சம்மதித்தான். அத்துடன் மதுராந்தகி-இராசேந்திரன் திருமணம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, படைகளுடன் சீக்கிரம் இராசேந்திரனை அனுப்பும்படி முதலமைச்சரிடம் கூறினான் சோழ இளவரசன். தேர்ந்தெடுத்த புரவி வீரர்கள் ஆயிரம் பேர்களுடன் இராசேந்திரன், திருவரங்கன் துணையோடு போவதற்கான ஏற்பாடுகளைச் சோழ நாட்டுத் தளபதி தன்மபாலர் செய்ய ஆரம்பித்தார். அதற்குள் மதுராந்தகியைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று விருப்பப்பட்ட இராசேந்திரன், திருவரங்கனை அவளிடம் தூது அனுப்பினான். மதுராந்தகியின் அறையில் நிறைய பெண்கள் இருந்ததால் எப்படித் தெரிவிப்பது என்று சங்கடப்பட்ட அவன், பிறகு வரலாம் என்று திரும்பினான். இளவரசி மதுராந்தகி அறை முன் நின்றுவிட்டுப் போகும் திருவரங்கனைக் கவனித்த மலர்விழி, அருகில் சென்று, “யார் வேண்டும் உங்களுக்கு?” என்றாள். சோணாட்டுத் தளபதி மகள் மலர்விழியிடம் அவன் பேசிப் பழகவில்லையாதலால், மனதில் எழுந்த கூச்சத்தினால் உடல் முழுவதும் வியர்க்க, “வந்து...” என்று தயக்கத்துடன் நிறுத்தினான். திருவரங்கன் வீரத்தைப் பற்றி ஏற்கனவே அவள் கேள்விப்பட்டிருந்ததால், அவனைப் பற்றி மனதில் ஒருவிதப் பிடிப்புடன் இருந்த மலர்விழி, தன்னைப் பார்த்தவுடன் கூச்சத்தினால் வார்த்தைகள் தடுமாறுவதைக் கவனித்து, “என்ன வந்து?” என்றாள் புன்முறுவலுடனே. “ஒன்றுமில்லை... கடார வீரர் இராசேந்திரர் இளவரசி மதுராந்தகியை அரண்மனை நந்தவனத்தில் பார்க்க விரும்புகின்றார்” என்றான். “எதற்காக?” என்று வினவினாள் மலர்விழி. “அவர் மதுரைக்குக் கலகம் செய்யும் பாண்டியர்களை அடக்கப் போகின்றார். அதற்குள் இளவரசியாரை நந்தவனத்திலுள்ள கண்ணன் சிலையருகில் பார்க்க விரும்புகின்றார்” என்று கூறிவிட்டு நடக்கலானான். ‘எப்போது சந்திக்க வேண்டும்?’ என்பதைத் தெரிவிக்காமல் போகிறாரே என பீடு நடை நடந்து செல்லும் திருவரங்கன் மேல் விழிகளைப் பரப்பிய மலர்விழி, எப்படிக் கூப்பிட்டுக் கேட்பது? என்று தயங்கி, அதற்குள் திருவரங்கன் போய்விடப் போகிறார் என்று உள்மனம் எச்சரிக்கவே, விரைந்து அவனை நோக்கி ஓடினாள் மலர்விழி. தன் பின்னால் ‘ஜல்... ஐல்...’ என்ற சலங்கை ஒலியுடன் ஓடி வரும் மலர்விழியைக் கவனித்துத் திருவரங்கன் சட்டென்று நின்றான். “என்ன வேண்டும்?” என்றான். “இடத்தை மட்டும் குறிப்பிட்டீர்கள். எப்போது சந்திக்க வேண்டும் என்று காலத்தைச் சொல்லவில்லையே?” என்றாள் முறுவலுடன். “நான் ஒரு முட்டாள்!” என்று அசடு வழிய தலையில் அடித்துக் கொண்டு, “இன்னும் கால் நாழிகை நேரத்திற்குள் வந்துவிடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு நடந்தான். அந்த நடையில்தான் எத்தனை கம்பீரம்! ஆண்களில் இவர் ஏறு போல் அல்லவா இருக்கின்றார்! இத்தகையவர் எனக்குப் புருஷராக வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... என்று திருவரங்கன் நடந்து செல்வதைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாள் மலர்விழி. ***** நந்தவனத்தில் நானாவித மலர்களின் நறுமணம் மனதிற்கு ரம்மியமாய் இருந்தது. அதை நுகர்ந்தபடி, சில்லென வீசிய மெல்லிய பூங்காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு, இராசேந்திரனும், திருவரங்கனும் கண்ணன் சிலையருகே நின்றனர். மூன்று முழ உயரத்தில் குழலூதும் கண்ணன் இவர்களைப் பார்த்துப் புன்னகை புரியும் நிலையில் இருந்தான். “இதோ வந்துவிடுகிறோம் என்றல்லவா புரவி வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த தளபதியிடம் சொல்லிவிட்டு வந்தோம். நேரமாகிவிட்டால் அவர் எங்கே, எங்கே? என்று அல்லவா நம்மைத் தேடுவார்?” என்று அவசரப்படலானான் இராசேந்திரன். மலர்விழியிடம் சொன்ன கால் நாழிகை கடந்துவிட்டது. ‘இந்தப் பெண்களே இப்படித்தான்’ - சலிப்பும், எரிச்சலும் கலந்த குரலில் கூறிய இராசேந்திரன் செவிகளில் காற்சிலம்பு ஒலிக்கும் சப்தம் விழுந்தது. “வந்துவிட்டார்கள்!” என்றான் திருவரங்கன் புன்னகையுடனே. அத்துடன் நிற்காமல் அங்கிருந்து சண்பக மரத்தடியில் போய் நின்று கொண்டு, வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். மதுராந்தகியுடன் கூட வந்த மலர்விழி சண்பகமரத்தின் அருகில் தங்கிவிட, மதுராந்தகி மட்டும் கண்ணன் சிலை நோக்கி நடந்து சென்றாள். “வா, மதுராந்தகி!” என்று அவள் மென்கரத்தைப் பற்றிய இராசேந்திரன் மனம், மகிழ்ச்சியால் திளைக்க, அவளைப் பார்த்து முறுவலித்தான். முகம் சிவக்க, வெட்கத்துடன் தலை குனிந்து, “எதற்காக என்னை வரச் சொன்னீர்கள் அவசரமாய்?” என்றாள். “ஏன்... வரச்சொல்ல எனக்கு உரிமையில்லையா?” என்று வினவினான் இராசேந்திரன். “அதற்கு இல்லை... உடனே என்று சொல்லும் போது என்னதோ... ஏதோ என்று ஒப்பனை கூட செய்யாமல் வர வேண்டியிருக்கிறதே” என்றாள். “உன் இயற்கையழகை விட ஒப்பனையழகா உயர்ந்து விடப் போகின்றது. அகன்ற பெரிய கருவிழிகள் ஒன்றே போதுமே. நாளெல்லாம் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு” என்று அவளின் கன்னத்தை மெல்லக் கிள்ளினான். “போதும் உங்கள் குறும்பு. யாராவது பார்க்கப் போகின்றார்கள் இந்த விளையாட்டை!” என்றாள் மதுராந்தகி. “கலகம் செய்யும் பாண்டியர்களை அடக்க நான் மதுரை போகின்றேன். வருவதற்கு எப்படியும் ஒரு திங்கள் ஆகலாம். அதைச் சொல்லவே உன்னை இங்கே கூப்பிட்டேன்!” என்றான் இராசேந்திரன். “ஒரு திங்களா...?” “ஆமாம்! அப்போதுதான் நான் கூப்பிட்டவுடன் உடனே வந்து நிற்பாய்” என்று அவளின் இடுப்பை வளைத்த அவன் கரம், மெல்ல அப்பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியது. உடல் சிலிர்த்து மதுராந்தகி, “வெட்கமாக இருக்கிறது!” என்றாள். “ஏன்?” என்று அவள் செவிகளில் மட்டும் கேட்கக் கூடிய குரலில் உணர்ச்சி வயத்துடன் இராசேந்திரன் கேட்டு, மீண்டும் அவளின் கன்னத்தில் கைவைத்து சிவந்த இதழ்களை அன்புடன் வருட... “யாராவது வந்துவிடப் போகின்றார்கள்!” என்று விலகிய மதுராந்தகி, “இப்போதெல்லாம் சேஷ்டைகள் அதிகமாகிவிட்டன” என்று கீழே கிடந்த மலர்களைப் பொறுக்கி அவன் மேல் வீசினாள். அதே சமயம்- சண்பகமரத்தின் அருகிலிருந்த திருவரங்கன், தன் எதிரே நின்று கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்தான். கீழே குனிந்தபடி விழிகளின் ஒரு பக்கத்தை மட்டும் திருட்டுத்தனமாய்த் தன் மேல் பரப்பிக் கொண்டு இருப்பதை உணர்ந்து, திருவரங்கன் கூச்சத்துடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். ஆகா! அவளின் கள்ளப் பார்வையில்தான் எத்தனை சந்தோஷம் இருக்கிறது! அதை அனுபவிக்க வகை தெரியாமல் முகத்தை உடனே திருப்பிக் கொண்டுவிட்டேனே! என்ன நினைத்துக் கொள்வாளோ? என்று மீண்டும் அவள் பக்கம் பார்வையைச் செலுத்தினான். கூரிய அவளின் விழிகள், இன்னும் அவன் மேலிருந்து அகலவில்லை. அவனைத் துளைப்பது போல் அழுத்தமாய்த் திருவரங்கனை நோக்கின. பதிலுக்கு முறுவல் மட்டும் செய்துவிட்டு, உலகத்தையே கொடுத்தாலும் இந்தப் பார்வைக்கு ஈடாகாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். ‘நீங்கள் நிரம்பவும் கூச்சப்படுகிறீர்கள்? இந்தச் சந்தர்ப்பத்திற்காக நான் காத்து இருந்த நாட்கள் கணக்கிலடங்கா!’ என்கிற மாதிரி மலர்விழி திருவரங்கனைப் பார்த்து மெல்ல சிரிக்கலானாள். ‘மலர்விழி! உந்தன் சிவந்த இதழ்களில் வெண் பற்கள் மின்ன நீ முறுவலிக்கும் எழிலை என்னவென்று சொல்வது? நாளெல்லாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது!’ என்று தன் உள்ளத்தில் தோன்றிய உணர்வை வெளிப்படுத்தும் முறையில் திருவரங்கன் அவளை உற்றுப் நோக்க... அப்போதுதான், நாணம் வந்து தொலைத்தது போல், அவள் தலை குனிந்து கொண்டாள். அவ்விதம் குனியும் போது, அம்பினும் கூரிய அவளின் விழிகள், திருவரங்கனை வீழ்த்துவது போல் அவன் மீது பதிந்தன. “புறப்படலாம் திருவரங்கா! நமக்காக அங்கே தளபதி துடித்துக் கொண்டிருப்பார்!” என்ற இராசேந்திரன் குரல் கேட்டு, அவன் சுய உணர்வு பெற்றான். மனத்தை மலர்விழியிடம் விட்டுவிட்டு, வெறும் வெற்றுடலோடு அவன் இராசேந்திரன் பின் நடக்கலானான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|