(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 31

     அந்த முன்னிரவின் இருள் மதுரைக் கோட்டையில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது.

     ஆங்காங்கே யவன வீரர்கள் நகரை வலம் வந்தபடி எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

     வீதிகள் எங்கும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தன. ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று புரவிப்படை ஒன்று நகரை வலம் வந்து கொண்டிருந்தது.

     அது சரியான முறையில் இயங்குகின்றதா என்பதை அறிவதற்காக இராசேந்திரனும், திருவரங்கனும் முன்னால் ஒரு வீரன் தீப்பந்தத்தை ஏந்தியபடி செல்ல பின்னால் இரு வீரர்கள் நீட்டிய வேலுடன் கண்காணித்தபடி வர, புரவியில் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்குக் கிளம்பினர்.

     நடுச்சாமம் வந்துவிட்டது; நகரின் ஒதுக்குப்புறமான அந்தச் சிவன் கோயிலிலிருந்த ஆலமரத்தடியில் இருவரும் புரவியை நிறுத்தினர்.

     “பரவாயில்லை. மதுரைநகர் நான் எதிர்பார்த்ததைவிட அமைதியுடனே இருக்கிறது” என்று திருப்தியுற்ற இராசேந்திரன், திருவரங்கனை நோக்கி, “என்னப்பா! நானும் கவனித்துக் கொண்டு வருகின்றேன்! நீ இரண்டு நாட்களாகவே மனநிலை சரியில்லாத ஆள் போலவே இருக்கின்றாயே?” என்றான்.

     “ஆமாம். எனக்கு மனம்தான் சரியில்லை!” என்று அவனும் அதை ஆமோதித்தான்.

     இவன் மனத்தைச் சரிப்படுத்த என்ன செய்யலாம்? என்று யோசித்த இராசேந்திரன் நினைவு வந்தவன் போல, “கடார இளவரசிக்கு மூலிகை தேட ஆள் துணை வேண்டுமாம்! நீ போயேன். மனம் சரியாகும்” என்றான் வேடிக்கையாக.

     திருவரங்கன் மனத்தை உற்சாகப்படுத்த இராசேந்திரன் கூறிய வார்த்தைகளை, திருவரங்கன் வேறுவிதமாய்ப் பொருள் செய்து கொண்டு சற்றுக் காட்டமாகவே, “நான் அரசகுடும்பத்தில் பிறந்திருந்தால் இப்படியெல்லாம் கூறியிருக்கமாட்டீர்கள்!” என்றான்.

     இராசேந்திரனுக்கு அப்பதில் என்னவோ போலிருந்தது!

     திருவரங்கன் போக்கில் ஏன் திடீர் மாற்றம்? என்று குழம்பியபடியே, வீரர்களுக்கு எதிரில் இம்மாதிரி வாக்கு வாதம் செய்து கொள்வது நல்லது அல்ல என்று எண்ணி, தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு அவர்களைப் போகும்படி உத்தரவிட்டான்.

     அங்கிருந்து அவர்கள் சென்றதும்...

     “உன் போக்கே எனக்குப் புரியவில்லை! நான் என்ன கூறிவிட்டேன் என்று நீ அப்படிக் கோபத்துடன் பதில் சொன்னாய்?”

     திருவரங்கன் அதற்கு மௌனமாகவே இருந்தான். இதற்கு மேல் அவனை வற்புறுத்துவது இப்போதைக்கு நல்லது அல்ல என்று எண்ணிய இராசேந்திரன், “மாளிகைக்குத் திரும்பிவிடலாம்!” என்று புரவியைத் திருப்பினான்.

     திருவரங்கனும் அவன் பின்னே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

     முன்னே சென்ற இராசேந்திரன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி, “சக்கரவர்த்தியிடமிருந்து ஒரு தூதுவன் வந்திருக்கின்றான்” என்றான்.

     மெதுவாய்ப் புரவியை ஓட்டிக் கொண்டு வந்த அவன், காலினால் அதைத் தட்டி, இராசேந்திரன் அருகில் சென்று, “கேள்விப்பட்டேன்!” என்றான்.

     “எதற்காக வந்திருக்கின்றான் தெரியுமா?”

     “தெரியாது!”

     பதில் கூட விறைப்பாக இருக்கிறது! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட இராசேந்திரன், “இரத்தினாதேவியை அழைத்துப் போகவே வந்திருக்கின்றான்” என்றான்.

     இரத்தினாதேவி என்ற வார்த்தையை இராசேந்திரனிடமிருந்து கேட்டதுமே திருவரங்கன் எரிச்சலடைந்தான். அந்தப் பேதைப் பெண்ணை இவர் மிகவும் கேவலமாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஒருவேளை எனக்கும் அவளுக்கும் இருக்கிற காதல் தொடர்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் அப்படிக் கேலி செய்கின்றாரோ என்னவோ என்று எண்ணியவாறு புரவியைச் செலுத்தத் துவங்கினான்.

     அந்தச் சமயத்தில்...

     “அந்த மாயப்பிசாசு இங்கிருந்து போவது ஒருவிதத்தில் நல்லதே!” என்றான் வேங்கி இளவரசன் காட்டமாக.

     நிச்சயம் எனக்கும் அவளுக்கும் இருக்கிற தொடர்பு இவருக்குத் தெரிந்தே இருக்கிறது! அதனால்தான் முதலில் அவளை இங்கிருந்து துரத்த முடிவு செய்துவிட்டார். அவள் கங்கைகொண்ட சோழபுரம் போனதும், முதன்மந்திரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவளைச் சிறையில் தள்ளிவிடுவார்கள். அதனால்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடம் கதறினாள் என்று தவறான முடிவுக்கு வந்த திருவரங்கன், “நீங்கள் அவளை மாயப் பிசாசு என்று கூறுவதை நான் எதிர்க்கின்றேன்!” என்றான்.

     இராசேந்திரன் புரவி சடக்கென்று நின்றது.

     “என்ன சொல்கின்றாய்?” என்று கேட்ட அவன் கண்கள் சினத்தீயை உமிழ்ந்தன.

     “இரத்தினாதேவி மாயப் பிசாக அல்ல என்று சொன்னேன்.”

     “இல்லை; அவள் நிச்சயம் ஒரு மாயப் பிசாசுதான். இல்லையென்றால் நான் போகுமிடமெல்லாம் அவள் என்னைத் துரத்திக் கொண்டு வரமாட்டாள்” என்றான் வேகத்தோடு.

     ‘அவள் சொன்னது முற்றிலும் சரியாகிப் போய்விட்டது’ என்று எண்ணிக் கொண்டு, “நீங்கள் நினைப்பது போல் அவள் உங்களைத் துரத்திக் கொண்டு வரவில்லை; கடாரத்திலிருந்து நல்லெண்ணத் தூதாகத் தமிழகம் வந்திருக்கிறாள்; அரசரின் நோய் தீர மூலிகை தேடி இங்கே வந்திருக்கின்றாள்! அவ்வளவுதான்” என்றான்.

     அவன் சொன்ன பதிலால் திகைப்படைந்த இராசேந்திரன், அவளைப் பற்றி இவ்வளவு விஷயமும் இவனுக்கு எப்படித் தெரிந்தது. ஒருவேளை இரத்தினாதேவி சொல்லியிருப்பாளோ என்று வியப்புற்றான். பரவாயில்லை. நன்றாகவே அவளுக்குப் பக்கமேளம் கொட்டுகிறான் என்று எண்ணியவாறு, “உனக்கு ஏன் அவளைப் பற்றிச் சொன்னால் கோபம் வருகிறது?” என்று வினவினான்.

     “எனக்கு ஏன் கோபம் வருகிறது. ஒருவரைப் பற்றி அவதூறு சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!” என்றான் திருவரங்கன்.

     இராசேந்திரனுக்கு அளவுக்கு அதிகமாகவே கோபம் உண்டாகியது “நன்றாகவே அந்தக் கள்ளி வலையில் நீ சிக்கிக் கொண்டாய். நமக்குள் பிளவு ஏற்படுத்த வந்த அந்த மாயப் பிசாசை வெட்டிப் போட்டால்கூடப் பாதகமில்லை!” என்றான் ஆத்திரத்தோடு.

     “இப்படிச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் இருக்கும்வரை இரத்தினாதேவிக்கு உங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றான் திருவரங்கன்.

     “அதையும் பார்த்துவிடுகின்றேன்!” என்று கோபத்துடன் புரவியை அங்கிருந்து வேகமாய்ச் செலுத்திய இராசேந்திரன், திரும்பவும் அதைத் திருவரங்கன் அருகில் திருப்பிக் கொண்டு வந்து, “சோழச் சக்கரவர்த்தியின் கௌரவ விருந்தாளியாக அவள் இங்கே வந்திருப்பதால் தப்பித்தாள். இல்லை என்றால் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும்!” என்றான் கோபத்தோடு.

     “உங்கள் வீரம் ஒரு பெண்ணைக் கொல்வதால் பெருமைப்பட்டுவிடாது” என்றான் திருவரங்கன் பதிலுக்கு.

     அந்தக் கூற்றால் கோபமுற்ற இராசேந்திரன், “யாரிடம் பேசுகிறாய் என்பதை நினைவுபடுத்திக் கொள் முதலில்” என்றான்.

     “அதனால்தான் சொன்னேன்! நான் அரசகுலத்தில் பிறக்கவில்லை என்று!” என்று திருவரங்கன் பணிவுடனே கூறினான்.

     “நீயும் கங்கைகொண்ட சோழபுரம் போய்ச்சேர்; உன் சேவை எனக்குத் தேவையில்லை. நாளை அவள் போகின்றாள்; கூடவே நீயும் போ!” என்று ஆக்ரோஷமுற்றுப் புரவியை வாரினால் அடிக்க, அது நாலுகால் பாய்ச்சலில் அங்கிருந்து கிளம்பியது.

     சினத்துடன் இராசேந்திரன் சென்றதைக் கவனித்த திருவரங்கன், ‘இவரை நம்பி நான் இந்த உலகில் பிள்ளையாய்ப் பிறக்கவில்லை. என் கையில் வாளிருக்கிறது! அதை வைத்துக் கொண்டு எங்கும் என்னால் பிழைத்துக் கொள்ள முடியும். ஏன், கடாரத்துக்கே அவளுடன் சென்றுவிடுகின்றேன்!’ என்று குதிரையை நேராக இரத்தினாதேவி தங்கியிருக்கும் மாளிகையை நோக்கிச் செலுத்தலானான்.

     பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கிடைத்துவிட்டது.

     இருவரையும் பிளவுபடுத்தித் திருவரங்கன் மூலமாகவே இராசேந்திரனைக் கொல்ல வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையை வைத்து அவள் கட்டிய முடிவுக்கு முதல்கட்ட வெற்றி என்பது போல் நண்பர் இருவரும் மனக்கசப்பு அடைந்துவிட்டனர்; இதைவிட என்ன வேண்டும் அவளுக்கு?


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49