(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 36 இருட்டு நெருங்கிக் கொண்டிருந்தது. கொற்கைத் துறைமுகத்தின் கலங்கரை விளக்கின் ஒளி தெரியத் தொடங்க, தென்னன் அதைப் பார்த்து, “சமீபம்தான்!” என்று தூமகேதுவின் பக்கம் திரும்பிக் கூறினான். “ஆமாம். கயிலாயம் கூட மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. அப்படித்தானே சிவபக்தரே?” என்று கிண்டலுடன் கேட்டான் தூமகேது. மௌனமாகவே இவர்களைக் கவனித்துக் கொண்டு புரவியைச் செலுத்தி வந்த அம்மையப்பன் சுற்றுமுற்றும் பார்த்தான். வேகமாய்ச் சென்ற தூமகேது சடக்கென்று புரவியை நிறுத்தினான். “என்ன தூமகேது கயிலாயம் வந்துவிட்டதா?” என்றான் தென்னன் கிண்டலாக. “இல்லை. அதற்கு இந்த வழி உசிதம் இல்லை என்பதற்காகவே புரவியை நிறுத்தினேன்” என்று பின்னால் வந்த அம்மையப்பன் பக்கம் திரும்பி, “சிவபக்தரே, கடற்கரை ஓரமாகவே நல்ல வழி ஒன்று இருக்கிறது. அதில் போகலாமா!” என்றான். இவர்களைப் பின் தொடர்வது என்னுடைய வேலை. அதைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் கிண்டல் செய்கிறார்கள். இருக்கட்டும்! என்று எண்ணிய அம்மையப்பன், “நீங்கள் எங்கே கூப்பிடுகின்றீர்களோ அங்கே நான் வரக் கடமைப்பட்டிருக்கின்றேன்” என்றான். “ஆகா! இவர்தான் உண்மையான சிவபக்தர்!” எனப் பாராட்டும் விதத்தில் கூறி தூமகேது, புரவியைக் கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் திருப்பினான். சற்று நேரத்துக்கெல்லாம் மூன்று புரவிகளும் அந்த வழியில் ஓடத் துவங்கின. கடற்கரையை நெருங்கியதும், அதையொட்டித் தெற்குப் பக்கமாகச் செல்லும் காட்டு வழியில் தூமகேது புரவியை ஓட்ட, தென்னனும் அம்மையப்பனும் அவனைப் பின் பற்றிக் குதிரையைச் செலுத்தினர். கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் சப்தம் மூவரின் செவியில் விழுந்தன. வேகமாய் புரவியைவிட்டுக் கொண்டு வந்த தூமகேது, அதன் வேகத்தைக் குறைப்பதற்காகக் கடிவாளத்தை இழுக்க குதிரை முன் கால்கள் இரண்டையும் தூக்கிக் கனைத்தது. இருவரும் தன்னைத் தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள் என்பது அம்மையப்பனுக்குப் புரிந்தது. இந்த இருவரையும் சமாளிப்பதில் தனக்கு எந்தவிதமான தொந்தரவும் இருப்பதாக அவனுக்குப்படவில்லை. ஆனால் நட்பு முறையில் அவர்களுடன் கூடவே எவ்வளவு தூரம்வரை வேண்டுமோ அவ்வளவுவரை செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருந்த அவன் முடிவுக்கு தற்போது ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்பதை நினைக்கும் போதுதான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அதனால் சேனத்தையொட்டி இருந்த தன் வாளின் மேல் கை வைத்தபடி இருவரையும் பார்த்து மெல்லச் சிரித்தான். அதே சமயம் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் தன் புரவியை சற்றுப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ளவும் செய்தான். அருகில் வந்து தூமகேது அட்டகாசமாய்ச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தி “கைலாயம் உங்கள் கண்களுக்குத் தெரிகின்றதல்லவா?” என்றான். அதைக் கேட்டு அம்மையப்பன், “எனக்குத் தெரியவில்லையே நண்பரே!” என்றான் அமைதியாக. “அதோ பாருங்கள்! நீங்கள் போக வேண்டிய கயிலாயம்!” என்று தன் சுட்டு விரலால் சுட்ட... அவன் காட்டிய இடத்தை அம்மையப்பன் பார்க்கும் போது, நீர் நிறைந்த பெரிய குட்டை ஒன்று தெரிந்தது. அது வழிக்கு குறுக்கே இருந்ததால், அதைத் தாண்டித்தான் மூவரும் போக வேண்டி இருந்தது. அதற்கு அப்பால் சிறிது தொலைவில் அடர்த்தியாய் ஒரு காடு இருந்தது. “வெறும் குட்டைதானே இருக்கிறது. இது எப்படி ஈசன் உறையும் கயிலாயமாகும்?” என்றான் அம்மையப்பன். “சிவபக்தர் புறக்கண்ணால் பார்க்கின்றார். அதனால்தான் அவருக்குத் தெரியவில்லை. அகக் கண்ணால் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் புலப்படும்” என்றான் தூமகேது இடி இடி என்று சிரித்து. நம்மை ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால்தான் குட்டையைக் காண்பித்துக் கேலி செய்கின்றார்கள் என்று புரிந்து கொண்ட அம்மையப்பன் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அதே சமயம்... குதிரை மேலிருந்த தூமகேது தென்னன் பக்கம் திரும்பி “சிவபக்தருக்கு கயிலாயம் தெரியவில்லை. நாம் அடையாள காட்டலாம் வா!” என்று அம்மையப்பன் அருகே நெருங்க முயன்றான். தென்னன் உருவிய வாளுடன் கிட்டே வர, இதற்குமேல் பேசாமல் இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று கருதிய சிவபக்தர், குதிரையின் கழுத்துப் பகுதியில் மறைத்து வைத்திருந்த வாளை உருவி, வசதிக்காகத் தன் புரவியை இன்னும் கொஞ்சம் பின்னுக்கு நகர்த்திக் கொண்டான். “அடடே! துறவிக்குச் சண்டைகூட போடத் தெரியும் போலிருக்கே!” என்று கூறியவாறு தென்னன் வாளை அம்மையப்பன் மார்பை நோக்கி வீசினான். இதை எதிர்பார்த்த அச்சிவத்துறவி, தன்னை நோக்கி வந்த வளைத் தடுத்து, அதே வேகத்தில் அவன் இடது தோளில் இலேசான காயத்தையும் உண்டு பண்ணினான். தூமகேது அதைக் கவனித்து ஆக்ரோஷத்துடன் தன் வாளை ஓங்கியபடி அம்மையப்பனை நோக்கி வர, இருவருக்கும் வாட்போர் மூண்டது. இடது... வலது... என்று அவன் வீசிய பக்கங்களெல்லாம் தன் வாளைச் சுழற்றி இறுதியில் தூமகேதுவின் கையிலிருந்த வாளின்பிடி தளரும் சமயம் பார்த்து, முழுப் பலத்துடன் அதை தாக்க, ‘ணங்’ என்ற சப்தத்துடன் தரையில் விழுந்தது. இடத் தோளில் குருதி வழிய துறவியை ஒரே வெட்டாய் வெட்ட வேண்டுமென்று தென்னன் பாய்ந்து வர, அப்பாய்ச்சலை எதிர்க்காமல் அம்மையப்பன் ஒதுங்கிக் கொண்டான். மிகுந்த வேகத்துடன் குதிரை ஓடிவந்ததால், அதற்குத் தடுப்பு இல்லாமல் போகவே, தத்தளித்து நிலைதவறி அவனுடன் தரையில் விழுந்தது. ஒரு துறவிக்கு இந்த அளவிற்கு எதிர்க்குந்திறன் இருப்பதைக் கண்டு வியந்தான் தூமகேது. இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, “சீக்கிரம் தென்னா! இவனைப் பிறகு கவனிப்போம்! என்னைத் தொடர்ந்து வா!” என்று நிராயுதபாணி ஆகிவிட்ட அவனும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற கணக்கில் புரவியை வேகமாக ஓட்டலானான். இருவரும் குட்டையைக் கடந்து காட்டை நோக்கிக் குதிரையை ஓட்டினர். அவர்களைப் பிடிப்பதற்காக அம்மையப்பனும் தொடர்ந்து புரவியைச் செலுத்தினான். வழியின் குறுக்கே இருந்த நீர்க் குட்டையில் ஆபத்து இருக்கின்றது என்பது பழக்கப்பட்டவர்களுக்கே தெரியும். அதனால் எச்சரிக்கையுடன் குதிரையை நடுப்பக்கமாகச் செலுத்தினால்தான் எந்தவித ஆபத்துமின்றி புரவியுடன் அதைக் கடக்க முடியும். இல்லையென்றால் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இருக்கும் பெரும் பள்ளத்தில்தான் குதிரையுடன் விழ வேண்டி வரும்! இதையறியாத அம்மையப்பன், அவர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாய் ஏற்பட்ட மனவேகத்தின் காரணமாக, குதிரையைக் குட்டையின் குறுக்கே சற்றும் யோசிக்காது செலுத்தினான். அது முதலில் தயங்கினாலும், மேற்கொண்டு தன்னைச் செலுத்துபவனின் வற்புறுத்துதல் காரணமாக நீரில் வேகத்துடன் பாய்ந்தது. அடுத்த நொடியே பெரும் பள்ளத்தில் விழுந்து நீச்சலடித்தவாறு அது மறுகரையை அடைய முயன்றது. அம்மையப்பனும் தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தபடியே புரவியையொட்டி நீந்தலானான். எப்போதோ ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பால் அமைந்த பள்ளமானதால், அது மிகவும் ஆழமாகவே இருந்தது. முன்னால் சென்ற இருவரும், “துறவி நிச்சயம் கயிலாயத்துக்குப் போய்விடுவார்!” என்ற கேலியுடன் புரவியை வேகமாக ஓட்டிக் கொண்டு மறைந்தனர். கரையேறி தன்னை நொந்து கொண்ட அம்மையப்பன் புரவியின் கழுத்திலிருந்த தோற்பையில் வைக்கப்பட்டிருந்த பொன் முடிப்பும், மாற்று ஆடையும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். அவர்கள் போன வழிப்பக்கம் போய்ப் பார்த்தால் ஏதாவது தடயம் கிடைக்காதா என்ற நப்பாசையோடு குதிரையைக் காட்டை நோக்கிச் செலுத்தலானான். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது; அவனுக்கு வழியும் புலப்படாமல் எந்தப் பக்கம் செல்வது என்று புரியாமல் குழம்பி நின்றான். அச்சமயம்... அவனுக்கு எதிரே ‘மினுக் மினுக்’ என்று வெளிச்சம் புலப்பட்டது. அங்கே சென்றால் இவர்களைப் பற்றிய தடயம் ஏதாவது கிடைக்கும் என்று புரவியை அங்கே செலுத்த நினைத்தான். ஆனால்... அமைதியாயிருந்த அந்த இருட்டில் குதிரையின் குளம்பொலியால் எதிரிகள் விழித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றவே, புரவியை அங்கேயே தட்டிக் கொடுத்து நிறுத்திவிட்டுச் சப்தமின்றி வெளிச்சம் தெரிந்த பகுதிக்குச் சென்றான். மூன்று பேர்கள் பேசும் குரல் கேட்டது. அடர்ந்து வளர்ந்திருந்த அத்திமரத்தின் பின்பக்கம் சென்று கொண்டு எட்டிப் பார்த்தான். சுமார் முந்நூறு முழ தூரத்தில் தென்னனும், தூமகேதுவும் ஒரு படகோட்டியிடம் பேசிக் கொண்டிருந்தனர். படகோட்டியின் இடையில் ஒரு துண்டும், கழுத்தில் கறுப்புக் கயிறும் அணிந்திருந்தான். தலை கலைந்து காற்றில் பறந்து கொண்டிருந்தது. காலில் வெள்ளியால் செய்யப்பட்ட வளையம் அணிந்திருந்தான். கடற்காற்று அம்மையப்பன் பக்கமாய் வீசிய போதெல்லாம் அவர்கள் பேசியது தெளிவாய்க் கேட்டது. அங்கிருந்து எதிரே தெரிந்த ஒரு சிறிய தீவைச் சுட்டிக்காட்டி எதையோ சொல்லிக் கொண்டிருந்தான் தூமகேது. அதற்கெல்லாம் தலையாட்டியபடி படகோட்டி கடைசியில் இரு கைகளையும் விரித்து முடியாது என்னும் பொருளில் எதையோ கூறினான். எதை எதையோ பேசி கடைசியில் ஐந்து பொற்காசுகளை எடுத்து அவனிடம் கொடுத்தான். முதலில் தயங்கினாலும் கடைசியில் தீவுக்கு வரச் சம்மதித்திருக்க வேண்டும். படகோட்டி கரையிலிருந்த கட்டுமரத்தைக் கடலில் தள்ளினான். கொஞ்ச நாழிகைக்கெல்லாம் படகோட்டி, தென்னன், தூமகேது மூவரும் எதிரில் தெரிந்த தீவை நோக்கிப் பயணமாயினர். அந்தத் தீவில்தான் பாண்டிய மன்னன் ஒளிந்திருக்க வேண்டும். இப்போது அவர்களை எப்படிப் பின் பற்றிச் செல்வது? என்று யோசித்தபடி, அத்திமரத்திலிருந்து வெளிப்பட்ட அம்மையப்பன், இடுப்பில் இரு கைகளை ஊன்றியபடி தீவை நோக்கிச் செல்லும் கட்டுமரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். போனவன் எப்படியும் இங்கே திரும்பத்தான் வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று புரவி அவ்விடத்திற்கு அழைத்து வந்து, படகோட்டி திரும்பு வரை அங்கே பொறுமையுடன் காத்திருந்தான். அச்சமயம் கட்டுமரமும் வேகமாய்க் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. கட்டுமரத்திலிருந்து படகோட்டி இறங்கி, நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளியை வழித்துவிட்டு, அதை கரைக்கு இழுத்து வர முயன்றான். “அதற்கு அவசியமில்லை!” என்று ஒரு குரல் வெளிப்படவே, யாரென்று தலை தூக்கிப் பார்த்தான் படகோட்டி. சட்டென்று புலனாகாததால் உருவத்தின் அருகில் வந்து பார்க்க. துறவி போன்று ஒரு மனிதன் மழுங்க மொட்டை அடித்து, இடையில் காவித்துண்டும், நெற்றியில் திருநீற்றுடன் அம்மையப்பன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திருக்கிட்டான். “யாருங்க சாமி...!” என்று அவன் வாய் குளறியது. “என்னை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று தீவைச் சுட்டிக் கூறினான் அம்மையப்பன். “அங்கேயா? நீங்க...” என்பதற்குள் சிவபக்தன் குறுக்கிட்டு, “அவன் கொடுத்தது போல இரு மடங்கு பொன் தருகின்றேன்!” என்றான். “என்னால் முடியாது சாமி. அங்கெல்லாம் நீங்கள் போகக் கூடாது. அவர்கள் கண்ணில் பட்டால், உங்களை மட்டுமல்ல, என்னையும் கொன்று போடுவார்கள்!” என்றான் பயத்துடனே. “கவலைப்படாதே படகோட்டி! நான் இருக்கின்றேன்” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “ஆளைவிடுங்க சாமி! நான் குழந்தை குட்டிக்காரன்” என்று கட்டுமரத்தைக் கரைக்கு இழுக்க முயன்றான் படகோட்டி. தன் பின்னால் வைத்திருந்த சிறிய வாளை எடுத்து அவன் நெஞ்சுக்கு நேராக அம்மையப்பன் நீட்டவும், படகோட்டியின் கண்கள் பயத்தால் மிரண்டன. “நான் சொல்கிறபடி கேட்டால் உன் உயிருக்கு ஆபத்து இல்லை!” “நீங்கள் சொல்கிறபடி கேட்டால் அவர்கள் என்னை யமலோகம் அனுப்பிவிடுவார்களே!” “அதற்கு நான் பொறுப்பு ஏற்கின்றேன்!” “வேண்டாம் சாமி, ஆளைவிடுங்கள்!” என்று கையெடுத்துக் கும்பிட்டான் படகோட்டி. அவன் விடுவதாக இல்லை. “என்னைக் கண்டிப்பாகத் தீவுக்கு நீ அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று வாளை அவன் நெஞ்சில் படும்படி வேகமாக அழுத்தினான். அச்சத்தினால் அவன் உடல் முழுவதும் நடுங்கியது. “பயப்பட வேண்டாம் படகோட்டி. உன்னை நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. இது இரகசியமாகவே இருக்கும்; உனக்குப் பத்துப் பொற்காசுகள் வரை தருகின்றேன்!” என்றான். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பொற்காசு என்றால் அரசனுக்கே ஆசை பிறக்கும். ஆண்டியான இந்த படகோட்டி அதற்கு விலக்காக முடியுமா? அதனால் இவனைத் தீவுக்கு அழைத்துப் போனால்தான் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான். “அவர்கள் கண்ணில் படாமல் மறைந்து கொள்ள என்னால் முடியும்” என்று அம்மையப்பன் திட்டமாய்க் கூறவும், அவன் பேச்சில் தொனித்த உறுதியில் படகோட்டிக்கு நம்பிக்கை உண்டானதாகத் தெரியவில்லை. சற்று யோசனையில் ஆழ்ந்துவிட்டு, “இடுப்பளவு ஆழத்தில் உங்களைக் கடலில் விட்டுவிடுகின்றேன். அங்கிருந்து நீங்கள் தீவிற்கு எப்படியாவது போய்விடுங்கள். அங்கே போகக்கூடிய வழியை மட்டும் உங்களுக்குக் காட்டிவிடுகின்றேன்” என்றான். அம்மையப்பன் அதற்குச் சம்மதித்தான். கட்டுமரத்தில் ஏறும்படிப் படகோட்டி கூறவும் சிவபக்தருக்குத் தன்னுடைய புரவியின் நினைவு வந்தது. “நான் திரும்பும் வரை நீ பத்திரமாய் இதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தனியாக ஒரு பொற்காசு தருகின்றேன்!” என்று தன் புரவியைச் சுட்டிக் கூறினான். படகோட்டி தலையசைத்து, “உங்களுக்குப் பழக்கப்பட்ட புரவிதானே?” என்று கேட்டான். “ஆமாம்!” “அப்படியென்றால் கடிவாளத்தை அவிழ்த்து என்னிடம் கொடுத்துவிடுங்கள்! நீங்கள் வரும் வரை காட்டிலேயே அது மேய்ந்து கொண்டிருக்கட்டும்!” அம்மையப்பனுக்கு அவன் சொன்னது சரி என்று பட்டது. அருகில் சென்று கடிவாளத்தைக் கழற்றி அவனிடம் கொடுத்துப் “பத்திரம்!” என்றான். குதிரையைத் தட்டிக் கொடுத்து, “நான் வரும்வரை ஜாக்கிரதை!” என்று அதைத் தடவிக் கொடுத்தான். குதிரை கனைத்தது. கட்டுமரத்தில் அம்மையப்பன் ஏறிக் கொண்டான். சிறிது தூரம் வரை கடலில் அது தத்தளித்தது. அதைக் கடந்ததும், வேகமாய்த் தீவை நோக்கிப் போக ஆரம்பித்தது. அமாவாசை இருட்டு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர். மேலே கரிய மேகங்களின் தொகுதி. அதற்கிடையே கடற்காற்றின் சீற்றம். தூரத்தில் கடல் நாரைகளின் சப்தம் பலமாகக் கேட்டன. அதற்கு எதிரொலி போல காட்டிலிருந்து நரிகளின் ஊளைக் குரல்கள். கட்டுமரத்தில் உட்கார்ந்திருத்த அம்மையப்பன் முகத்தில் மீன் ஒன்று துள்ளி விழுந்தது. “ச்சீய்!” என்று அவன் அலறினான். “இதெல்லாம் சகஜம் சாமி!” என்று துடுப்பு வலித்தான் படகோட்டி. கரும்புள்ளி போல் தெரிந்த தீவு இப்போது பெரிய வட்டமாய்க் கண்ணுக்குப் புலப்பட்டது. இருளில் அதைப் பார்க்கப் பார்க்க அம்மையப்பனுக்கு மலைப்பாகத்தான் இருந்தது. “சிவாய நம!” என்று சொல்லிக் கொண்டு மனதை உற்சாகப்படுத்திக் கொண்டான். “தோ பாருங்க சாமி. இன்னும் கொஞ்சம் தூரம்தான் என் கட்டுமரம் போகும். அப்புறம் நீங்க கடலில் இறங்கித்தான் போகனும். இந்தத் தீவுக்கு அப்பால் இன்னொரு குட்டித் தீவு இருக்கு. அதில்தான் பாண்டியராசா இருக்கார். அந்தக் குட்டித் தீவுக்குப் போக இடையிலே நீங்க கடலைக் கடந்துதான் போகணும். அந்தத் தீவுக்குப் போயிட்டா, இரண்டு அசோக மரத்துக்கு இடையிலே காட்டுத் தழையாலே ஒரு குடிசை போட்டு, அதிலே ராசா தங்கியிருக்கார். ஒரு விஷயத்தை நீங்க ஜாக்கிரதையா கவனிக்கணும். இந்தத் தீவிலிருந்து அந்தக் குட்டித் தீவுக்குப் போக தீவின் ஆரம்பத்திலேயே இரு நாவல் மரம் இருக்கு; ஒன்று வடக்குப் பார்த்துக் கிளை பிரியும். இன்னொன்று தெற்கும் வடக்குமாக சூலம் போல் கிளை பிரியும். சூலம் போல இருக்கிற கிளையை அடையாளம் வைச்சுக்கினு நீங்க நூல் பிடிச்ச மாதிரி நடந்தாதான் தீவை அடைய முடியும். தவறினா நீர்ச்சுழலிலே சிக்கி உயிரைப் பறிகொடுக்க வேண்டியதுதான்” என்று சொல்லியபடி கட்டுமரத்தை நிறுத்தி கடலில் குதித்தான் படகோட்டி. அவன் இடுப்பு வரைதான் கடல் நீர் இருந்தது. எதிரே... இருளில் அச்சமூட்டும் வகையில் தீவு அமைந்திருந்தது. நன்கு உயரமான அடர்த்தியாயிருந்த மரங்கள் கடற் காற்றில் பயங்கரமாய்ப் பேய் போன்று ஆடிக் கொண்டிருந்தன. அதற்கு எதிர்மாறாக அலைகளே இல்லாமல் கடல்நீர் சலனமற்று இருந்தது. கடல்காற்று மட்டும் அளவுக்கு மீறிய ஆவேசத்துடன் இப்படியும் அப்படியுமாய்ச் சுழன்று வீசிக் கொண்டிருந்தது. எப்பேற்பட்ட திடமனிதனுக்கும் அச்சம் தரும் வகையில் அச்சூழல் அமைந்திருக்க, ‘சிவாய நம!’ என்று உச்சரித்தபடி இடுப்பில் குறுவாள் இருக்கிறதா என்று பார்த்தபடி அம்மையப்பனும் கடலுக்குள் இறங்கிக் கொண்டான். சிறு சிறு அலைகளாய் அவன் மீது மோதிய கடல்நீர் அவனைத் தள்ள முயற்சித்தது. ஆனால் அவன் தரையில் அழுத்திக் கால்களை ஊன்றிக் கொண்டதால், அதன் முயற்சி தோல்வியே அடைந்தது. சிறிய மீன்கள் கூட்டமாக அம்மையப்பன் கால்களைத் தொட்டுத் தொட்டுச் சென்றன. அதிலிருந்து தப்பிக்க வேண்டி மாறி மாறி கால்களை எடுத்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த படகோட்டி கட்டுமரத்திலிருந்து சிறிய துணி மூட்டையைத் பிரித்து, அதிலிருந்த பொருளை நீரின் நான்கு பக்கம் வீசியெறிய கால்களைத் தொட்டுக் கொண்டிருந்த மீன்கள், சிதறி விழுந்த பொருளைக் கவ்வுவதற்காக நான்கு புறமும் ஓடி மறைந்தன. தற்சமயத்துக்கு மீன்கள் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியுடன் பெருமூச்சொன்றைவிட்டான் அம்மையப்பன். “கையில் இந்த முட்டையை வைச்சுக்கினு மீன்கள் உங்க கால்களைச் சீண்டும் போதெல்லாம் இதை அப்பப்ப வாரி இறைச்சீங்கன்னா, அவை உங்களைவிட்டு ஓடிப் போகும்! அப்படியே மெள்ள நடந்து நீங்க தீவை அடைஞ்சுக்கலாம். அத்தோட இந்தக் கல்லை முக்கியமா வைத்துக்கங்க” என்று இடுப்புத் துணியில் முடிந்திருந்த இரண்டு சிறிய கற்களை அவிழ்த்து அம்மையப்பனிடம் கொடுத்தான். “இதை ரெண்டையும் ஒண்ணோடு ஒண்ணு உரசினா நெருப்பு வரும். அதை வைச்சு நீங்க காய்ந்த சருகு, சுள்ளி மூலம் தீ மூட்டிக்கலாம். அதற்கப்புறம் உங்களுக்கு வழி சுலபமாயிடும். ஆனா ஒரு விஷயத்தை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்! நீங்க தீ மூட்ற சமாச்சாரம் மற்றவங்களுக்குத் தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்களை யாருன்னு அவுங்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். வெற்றியோடு வாங்க!” என்றான் படகோட்டி. படகோட்டி கட்டுமரத்தில் ஏறி அதைக் கொற்கைத் துறைமுகத்தை நோக்கித் திருப்பிக் கொண்டு, “சாமி! நாளைப் பகல் போதை விட்டுடுங்க. எப்படியாவது ஒளிஞ்சி, கிளிஞ்சி காலம் தள்ளிடுங்க. இதே மாதிரி இருட்டினதும் இந்த இடத்துக்கு வந்திடுங்க. நான் கட்டுமரத்தோடு இங்கே வந்து காத்திருக்கேன். நீங்க கண்டிப்பா வந்திடுங்க. மற்றபடி எதனா தவறி துரதிர்ஷ்டவசமா நடந்தா ஆண்டவன்விட்ட வழியாகுது!” என்று கட்டுமரத்திற்குத் துடுப்பு போட்ட அவன் நிறுத்தி, “ஆமா, நாளைபூரா நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?” என்றான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த படகோட்டி, ‘சரியான சாமியார்தான் இந்த ஆள். இந்தத் துறவி எங்கே திரும்பப் போறது? சந்தேகம்தான். எப்படியும் அவன் கண்ணிலே இந்தச் சாமியார் படாமல் இருக்க முடியாது. அப்படித் தவறினா சுழல்லே சிக்கி ஜீவனைவிடத்தான் போறார் இவர். நமக்குப் பதினொண்ணு பொற்காசு கிடைச்சுது! ஆயிரம் பொன் தாளக் கூடிய ஒரு உசந்த ஜாதிக் குதிரை வேறு! நரி முகத்தில்தான் இன்றைக்கு நமக்கு விழிப்பு!’ என்று உற்சாகத்துடனே வேகமாய்க் கரையை நோக்கிக் கட்டுமரத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|