(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 41 நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த அறைக்குள் நுழைவதற்காக சங்கடப்பட்டாலும் நுழைய வேண்டிய அவசியம் வந்துவிட்டதால் வெள்ளை முக்காடு போட்ட உருவம் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, பட்டத்தரசியின் அறைக்குள் நுழைந்தது. முகத்தில் பொட்டையும், தலையில் பூவையும் இழந்துவிட்டிருந்தாலும், அம்மாதரசிக்குரிய முகக்களையில் சிறிதும் குறையாமல் இலக்குமியின் அம்சம்போல் இருந்தார் பட்டத்தரசி. காலடிச்சத்தம் கேட்டு நிமிர்ந்தார். பதிலுக்கு வணங்கி, “புதிய செய்தி ஏதாவது உண்டா?” என்று கேட்டார் பட்டத்தரசி. “உண்டு...” என்று சினத்துடனே கூறிய அது “உங்களைக் கொல்லும் திட்டத்திற்கு வந்துவிட்டார்கள்!” என்றது. “சீக்கிரம் அதைச் செய்யட்டும். என் கணவர் சென்ற இடத்துக்கு நான் போய்ச் சேர்ந்துவிடுகின்றேன்.” “தாயே, இப்படிச் சொல்லிவிட்டால் எப்படி?” சோழ நாடு பகைவர்கள் கையில் அல்லவா சிக்கிக் கொள்ளும்?” வருத்தத்துடன் அது கூற “அதற்காக நான் என்ன செய்ய முடியும்?” - சலிப்புடன் மௌனம் சாதித்தார் பட்டத்தரசி. “தாயே, உங்களை நம்பித்தான் நாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுகிறோம். நீங்களே சலிப்படைந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” சிறிது நேரம் அமைதி நிலவ... அதைக் கலைக்கும் விதத்தில் உருவம்தான் பேசியது. “சக்கரவர்த்தி அதிராசேந்திரர் திரும்பவும் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கின்றார். தங்கள் முயற்சியால் இராசேந்திரனுக்குச் சூடினால்தான் என்ன என்று அவர் மனதில் துளிர்த்த கருத்தை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டார். முதன்மந்திரி மாளிகைக்குள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கின்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படி அப்படி என்று அவர் அசைய முடியாது. மதுரையிலிருந்து இராசேந்திரன் இங்கே வந்திருக்கின்றார். முதன்மந்திரியையும் தங்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. சிறிய தன்மபாலர் இன்னமும் சிறையில்தான் இருக்கின்றார். கங்காபுரிக் கோட்டையின் பொறுப்பு விக்கிரமாதித்தனின் கையாளான கங்கனுக்குக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுவிட்டது!” “அப்படிக் கொடுப்பதால் நம் படைக்குள்ளே கலகம் தோன்றுமே?” என்றார் வருத்தமுடன். “ஆமாம். அதனால்தான் சக்கரவர்த்தி கூட அம்முடிவை இதுநாள் வரை தள்ளிக் கொண்டு வந்தார். ஆனால் விக்கிரமாதித்தன் நிர்ப்பந்தத்தின் பேரில் இப்போது கங்கனுக்கு வெகு சீக்கிரம் தரப்பட இருக்கிறது! மதுரையிலிருந்து கடார இளவரசி சாமந்தனுடன் திரும்பிவிட்டாள். உங்கள் இளைய மகன் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றார்.” “அவருக்கு சோழ இளவரசுப் பட்டத்தைவிட கடார இளவரசியின் அழகில்தான் மோகம் அதிகமாயிருக்கிறது!” “நல்ல பிள்ளைதான்!” “உங்களுக்காக இல்லாவிட்டாலும் இந்தச் சோழ நாட்டிற்காக நீங்கள் உயிர் வாழத்தான் வேண்டும். அதற்காக ஒரு வேண்டுகோள். நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் முதலில் பூனைக்கு வைத்துவிட்டுப் பிறகு சாப்பிடுங்கள்!” பணிவுடன் கேட்டுக் கொண்டது. “உயிர்த் தோழி அமுதவல்லி இருக்கும்வரை உண்ணும் உணவில் நஞ்சிட்டுவிட முடியாது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம்!” “இருக்கலாம். இருந்தாலும் எச்சரிக்கை தேவை என்று கூறுகின்றேன். இது விண்ணப்பம்!” என அழுத்திக் கூறிய உருவம் தன் சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டி “இந்த மோதிரம் இல்லை என்றால் ‘நான் யார்?’ என்று தங்கள் மகனுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன் நானும் சிறைப்பட்டிருப்பேன்.” அம்மோதிரத்தின் ஒளியால் ஒருகணம் கண்ணை மூடி வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்ட அரசி, “ஆபத்துக் காலத்தில் இந்த ஒளியைப் பயன்படுத்தி தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிறப்பு வாய்ந்த வைரக்கல்லை இதில் பதித்திருக்கின்றார்கள். என்னிடம் வெறுமனே கிடந்த அது இப்போது உமக்குப் பயன்படுவதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்!” என்றாள் அரசி. “வெகு விரைவில் இது உங்களிடமே திருப்பித் தரப்படும். அந்தக் காலம் கூடிய சீக்கிரம் வரவேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” “நல்லது!” “நான் விடைபெறுகின்றேன் தாயே! கூடிய சீக்கிரம் நல்ல செய்தியுடன் தங்களைச் சந்திக்கின்றேன்!” “அப்படியே ஆகட்டும்!” என்று உருவத்தை அனுப்பிய அரசி தன் தோழி அமுதவல்லியைக் கூப்பிட்டு, சோழச் சக்கரவர்த்தியை நான் பார்க்க விரும்புவதாகத் தெரிவி. அத்துடன் அவசரம் என்றும் அறிவி!” என்றாள். அரசியாரின் உத்தரவுடன் சோழச் சக்கரவர்த்தி இராசேந்திரன் மாளிகை நோக்கி வேகமாய் நடந்தாள் சேடி. ***** திருமந்திர ஓலை நாயகம் சக்கரவர்த்தியின் உத்தரவு வரையப் பெற்ற ஓலையை ஒரு தரம் படித்தான். “இராசராச பாண்டி மண்டலத்தை ஆளும் சோழ அரசின் பிரதிநிதியான என் சிறிய தந்தையான ஆளவந்தான் அவர்களுக்கு அரசர் விடுக்கும் செய்தியாவது: இன்று முதல் நீங்கள் பாண்டிய நாடான மதுரைக்குச் சோழ அரசின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கின்றீர்கள். இப்போதே தாங்கள் அதை ஏற்க வேண்டும்.” படித்துப் பார்த்த திருமந்திர ஓலை நாயகம், அரசர் உத்தரவு! என்று அதில் கையப்பமிட்டார். அடுத்த ஓலை நறுக்கில்... “அரசர் விடுக்கும் செய்தி: வேங்கி நாட்டு இளவரசராயிருந்த இராசேந்திரனுக்கு, இதைக் கண்ணுற்ற அடுத்தகணமே, தாங்கள் வேங்கிப் பகுதியிலிருக்கும் சோழப் படைக்குத் தலைமை தாங்க வேண்டும்!” அதற்கும் கையப்பமிட்ட திருமந்திர ஓலைநாயகம் விடையில் அதிகாரியைக் கூப்பிட்டு, இரு ஓலைகளையும் உரியவர்களிடம் சேர்ப்பித்துவிடும்படி உத்தரவிட்டான். அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அங்கிருந்து அகன்றான். உத்தரவுகள் ஓலை மூலம் அவரவருக்குச் சேர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்த சோழச் சக்கரவர்த்தி அடுத்து மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதற்கான முயற்சிகளைச் செய்ய முனைந்த போது... பெரிய அரசியாரின் சேடி வந்து அவசரமாக அழைப்பதாகக் கூறினாள். இது என்ன புதிதாய்? போய்ப் பார்த்துவிட்டு மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டும் விஷயத்தையும் சொல்லிவிடலாம் என்று அவரின் மாளிகை நோக்கிச் சென்றார். “என்ன அவசரமாகக் கூப்பிட்டீர்களாமே?” “ஆமாம்! முதலமைச்சரை ஏன் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படிக் கூறிவிட்டாய்?” “காரணம் கருதித்தான். உரிய நேரம் வரும்வரை அவர் உள்ளேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியமாய்ப் போய்விட்டது.” “எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை!” “பிடிக்காத விஷயங்கள் சில நடக்க நீங்கள் அனுமதிக்கத்தான் வேண்டும்!” “அப்படி என்ன அனுமதி? பிரமாதிராசரைவிட உனக்கு நம்பிக்கைக்குரியவர் இந்த நாட்டில் வேறு யாராவது இருக்கிறார்கள் என்று நீ உறுதியாகச் சொல்ல முடியுமா?” “என் தந்தை இருக்கும் வரை நம்பிக்கைக்கு உரியவராகத்தான் இருந்தார். இப்போது எனக்கு எதிராகச் செயல்படுகிறார்.” “அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” “பல விஷயங்களில். காலம் கனியும் போது எல்லாம் வெளிப்படத்தான் போகிறது.” “சிறிய தன்மபாலரை நீ இன்னும் சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லை. அவர்கள் சோழ நாட்டிற்காகச் செய்த தியாகங்கள் எத்தனை? இந்த மாதிரி தியாக சீலர்களின் வெறுப்பையெல்லாம் பெற்றுக் கொண்டு, நீ எத்தனை நாளைக்கு ஆட்சி புரிய முடியும்?” “மன்னிக்க வேண்டும் தாயே. சிறிய தன்மபாலர் இராசத்துரோகக் குற்றத்திற்காகச் சிறை வைக்கப் பட்டிருக்கின்றார்!” பெரிய அரசியாருக்குச் சீற்றம் மிகுந்தது. “அவர் செய்த இராசத்துரோகக் குற்றம்தான் என்ன?” அதிராசேந்திரன் மௌனம் சாதித்தான். “உனக்கு வேண்டாதவர்களையெல்லாம் இராசத்துரோகம் என்று வீண் குற்றம் சுமத்தி, அவர்களைச் சிறையில் தள்ளுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!” “தற்சமயம் குற்றத்தை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கின்றேன். உரிய நேரம் வரும்போது இவர்களின் உண்மை உருவம் வெளிப்படத்தான் போகிறது!” “அதிராசேந்திரா! உனக்குத் துர்ப்போதனைகள் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக நான் உணருகிறேன். இதனால் உனக்குத் தீமையைத்தவிர நன்மை ஏதும் விளையப் போவதில்லை!” “உங்களுக்கு அது துர்ப்போதனைகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு? என் உயர்வில்... என் வெற்றியில் நாட்டக் கொண்ட நல்லிதயங்கள் கூறும் அறிவுரைகளாக நினைக்கின்றேன்!” பெரிய அரசியாரிடமிருந்து வேதனை கலந்த சிரிப்பு வெளிப்பட்டது. “யார் நல்லவர்? யார் கெட்டவர் என்று பிரித்துப் பார்க்க முடியாத சிறு குழந்தையாயிருக்கின்றாய். இதைவிட துர்ப்பாக்கிய நிலை எனக்கு வேறு என்ன வேண்டும்? உன்னைப் பெற்ற தாய் என்பதால் கூறுகின்றேன். அவர்களை விலக்கிவிட வேண்டும்!” “அவர்களை விலக்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்! ஆனால் துர்ப்போதனைகள் என்று சொல்கிறீர்களே அப்படி ஒன்றை நீங்கள் உதாரணங்காட்டிக் கூற முடியுமா?” பெரிய அரசி அதிராசேந்திரனை ஒருமுறை மேலும் கீழும் நோட்டம்விட்டார். “அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?” “ஆமாம்!” அதிராசேந்திரர் திகைத்துவிட்டார்! இந்த விஷயம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அப்படியென்றால் வெள்ளை உருவத்தில் நடமாடியது இவர்கள்தான் என்று நான் முடிவு செய்தது மிகவும் சரியாகிப் போய்விட்டது! “என்ன இராசேந்திரா, மௌனம் சாதிக்கின்றாய்? பெற்ற அன்னைக்கு விஷமிட்டுக் கொல் என்று சொல்லும் அவர்களின் முகத்தில் நீ விழிக்கலாமா? இப்படி யோசனை கூறும் அவர்கள் உன் நல்வாழ்வில் அக்கறை கொள்பவர்கள் என்று சொல்வதை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முதலில் விக்கிரமாதித்தனையும் இராஜசுந்தரியையும் குந்தள நாட்டிற்கு அனுப்பி வை. கலகக்காரரான சயங்கொண்ட சோழ இருக்குவேளை கொடும்பாளூருக்கு அனுப்பு...” சோழ மன்னர் இடைமறித்தார். “இவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு, என்னைத் தனிமையில் தவிக்கச் சொல்கிறீர்களா?” “ஏன், நான் இல்லை? முதலமைச்சர் பிரமாதிராசர் இல்லை. இதைவிட என்ன வேண்டும் உனக்கு?” அதிராசேந்திரர் சிரித்து “சயங்கொண்ட சோழ இருக்குவேளும், குந்தள மன்னரும், உங்கள் சிறிய மகன் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி முடித்ததும் இங்கிருந்து போய்விடுவார்கள்!” என்றார். பெரிய அரசியாருக்கு முகத்தில் அதிர்ச்சிக் குறி நிலவியது. “இராசேந்திரனுக்கு அல்லவா இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் என்று சொன்னேன். மறைந்து போன நம் சக்கரவர்த்தியின் விருப்பம் கூட அதுதானே.” “இல்லை என்று நான் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் சூழ்நிலையை அனுசரித்து என்னால் இந்த முடிவுக்கு வரப்பட்டது. அத்துடன் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தயவு செய்து இதற்கு மேல் இந்த விஷயத்தை நீங்கள் வற்புறுத்த வேண்டாம்!” “அப்படியென்றால் என்னை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடு.” “அப்படித்தான் வைத்துக் கொள். இராசேந்திரா! பெற்ற மகனைவிட இந்தச் சோழ நாடு எனக்கு முக்கியமாகப்படுகிறது. அத்துடன் மறைந்துவிட்ட கணவரின் ஆசையை நிறைவேற்றுவதும் என்னுடைய கடமையாகப் போய்விட்டது.” “இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதைத் தவிர தற்சமயம் வேறு ஒன்றும் கூற முடியாத நிலையிலிருக்கின்றேன் நான்!” “இதற்காகவா மகனே உன்னை அரசு கட்டிலில் ஏற்றினோம்?” “இனிமேல் உன்னிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை; உன் விருப்பப்படியே செய். இந்தச் சோழ நாட்டிற்கு இனி நல்ல காலம் இல்லை. அழியப் போகும் இந்த சாம்ராஜ்யத்தை அந்த அழிவிலிருந்து காப்பது யார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!” - வருத்தமுடன் கூறிய அரசியாரின் விழிகள் கலங்கின. அங்கே நின்றால் தன் மனமும் வருத்தத்தில் அழும் என்று உணர்ந்த அதிராசேந்திரர், “வருகிறேன் தாயே! உரிய நேரத்தில் உங்கள் விருப்பங்கள் ஒவ்வொன்றும் நிறைவேற்றி வைக்கப்படும். வீணாக வருந்த வேண்டாம்” என்று அங்கிருந்து அகன்றார். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|