(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 43

     மதுரைக்குள் நுழைந்த அம்மையப்பனுக்குச் சோழச் சக்கரவர்த்தி மறைந்த செய்தியும், புதிய அரசராக அதிராசேந்திரர் அரியணை ஏறியிருப்பதையும் கேள்விப்பட்டு, உடனே கங்கைகொண்ட சோழபுரம் போக முடிவு செய்தான். பாண்டிய சதிகாரர்கள் மதுரையைத் தாக்க இருக்கும் செய்தியைத் திருவரங்கனிடம் தெரிவித்து, அவனை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்யலாம் என்று எண்ணி அவனைப் பார்க்க முயன்றான். ஆனால் அவனைப் பற்றி ஒன்றும் சரியான விபரங்கள் தெரியாமற் போகவே, கோட்டைத் தலைவனான மூவேந்தனிடம் அதைப் பற்றித் தெரிவித்துக் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிப் பயணமானான்.

     மனிதனுக்குப் பெண் என்றால் சற்றுச் சபலம்தான்! ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகை அழகில் மயங்கிவிட்டார் என்றால், இளைஞனும் துடிப்பும் நிறைந்த வீரனான திருவரங்கன் எம்மாத்திரம்?

     கடார இளவரசி இரத்தினாதேவி மதுரையைவிட்டுப் போனதிலிருந்து அவனுக்கு மனநிலை சரியாகவே இல்லை. ‘கங்கைகொண்ட சோழபுரம் எப்போது போவோம்?’ என்ற கேள்வியுடனே மதுரையம்பதியில் அரச விவகாரங்களை அரைகுறை மனதுடனே கவனித்துக் கொண்டு வந்தான். மதுரைப் பொறுப்பு வேறு ஒருவருக்குத் தரப்பட்டுவிட்டதால் சற்றும் தாமதிக்காது ‘கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு வருக!’ என்ற அரச உத்தரவு கிடைத்ததும் கடார இளவரசியைக் காண இதுதான் சந்தர்ப்பம் என்று தற்காலிகமாகப் பொறுப்பை மூவேந்தனிடம் ஒப்புவித்துவிட்டுக் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிப் பயணமானான்.

     அதற்காகவே காத்திருந்தது போல பாண்டிய ஒற்றன் கொற்கைக்குச் சற்றுத் தள்ளி, தீவில் மறைந்து வாழும் சடையவர்ம சீவல்லபனுக்கும், அவன் மகனான மாறவர்மனுக்கும் இதைத் தெரிவித்தான்.

     மதுரைக் கோட்டையில் பாண்டியரின் மீன் கொடி பறக்கும் தருணம் வந்துவிட்டது என்று மகிழ்ந்த சடையவர்ம சீவல்லபன், கோட்டையைத் தாக்கும் திட்டம் ஒன்றை வகுத்து மாறவர்மன் தலைமையில் ஐந்நூறு பேர் அடங்கிய குழுவைக் கோட்டைக்குள் இரகசியமாய் அனுப்பி வைத்தான். ஏறக்குறைய இருநூறு பேர் அடங்கிய வீரர்களுடன் சடையவர்ம சீவல்லபன் வைகை நதியைக் கடந்து, காவற்காட்டின் பக்கம் மறைந்து நின்றான்.

     இரவு நேரமானதால் கோட்டையின் உச்சியில் சோழ வீரர்கள் தீப்பந்தங்களுடன் உலவிக் கொண்டிருந்தனர்.

     கோட்டைக்குள்ளிருந்த இரகசிய சுரங்கப் பாதை மூலம் அரண்மனை நந்தவனத்திலிருக்கும் விநாயகர் கோவிலையடைந்த மாறவர்மன் வெளியே எட்டிப் பார்த்தான்.

     யாரையும் காணவில்லை.

     அவனை அடுத்துத் தூமகேதுவும், தென்னனும் சப்தமின்றி சுரங்க வழியிலிருந்து வெளிவந்தனர். அந்த நந்தவனத்தின் பின் பக்கத்தில்தான் அவர்களுக்கு அடைக்கலம் தரும் செல்வந்தர் தனபாலின் வீடு இருக்கிறது.

     மலர்களைப் பறிப்பதற்கும், பணியாளர்கள் வெளியேறுவதற்குமான நந்தவனத்தின் வடக்குப் பக்கமாகச் சிறிய வாயில் இருக்கிறது. அந்த வாயிலையொட்டியிருந்த சந்தின் வழியாகச் சென்றால் செல்வந்தர் தனபாலின் வீட்டின் பின் பக்கத்தை அடையலாம். ஆனால் தற்போது இரு வீரர்கள் கையில் வேற் கம்புகளுடன் அங்கே காவலுக்கு நிற்கின்றார்களே! என்ன செய்வது? என்று வியப்புற்ற தூமகேது மாறவர்மனை மட்டும் தன் பின்னால் வரச் சொன்னான்.

     இருவரும் மல்லிகைச் செடியின் பின் மறைந்து கொண்டனர். இதற்குள் நான்கைந்து வீரர்கள் கோவிற் கதவின் உள்ளிருந்து தலையை வெளியே நீட்டினர். தான் கூறும் வரை வெளியே வர வேண்டாம் என்று அவர்களை நோக்கிச் சைகை செய்தான் மாறவர்மன்.

     தூமகேது செடியின் பின் மறைந்தவாறு புலியைப் போல மெல்ல உறுமினான்.

     காவல் வீரர்களில் ஒருவன் திரும்பி, “ஏதோ உறுமுவது போல் சப்தம் கேட்கிறதே!” என்றான்.

     இரண்டாமவன் மல்லிகைச்செடியை உற்றுப் பார்த்து, “அங்கே ஏதோ...” என்பதற்குள் திரும்பவும் தூமகேது பலமாக உறுமினான்.

     கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் அவர்களிடமிருந்து விலகியது. செடிக்குப்பின் ஏதோ ஒரு மிருகம் இருப்பதாக இருவரும் முடிவு செய்து, உருவிய வாளுடன் அடிமேல் அடி எடுத்து நடந்தனர்.

     இதற்குள் இன்னொரு பக்கமாக அவர்களின் பின்னால் வந்துவிட்ட மாறவர்மன், தன் சமீபத்திலிருந்த முல்லைக் கொடியைப் பலமாய்க் குலுக்கினான். அச்சப்தம் கேட்டு இருவரும் திரும்புவதற்குள், செடியின்பின் மறைந்திருந்த தூமகேது வீரர்கள் மேல் பாய, மாறவர்மனும் அவனுடன் சேர்ந்து கொண்டு இருவரையும் வீழ்த்தினர். அதற்குள் கோயிலுக்குள்ளிருந்த வீரர்கள் வெளிப்பட்டுச் செடியின் பின்னால் மறைந்து கொண்டனர். தூமகேதுவைச் செல்வந்தர் தனபாலின் வீட்டிற்கு அனுப்பி மக்களைத் திரட்டிக் கொண்டு அரண்மனைக்கு வரும்படிக் கூறினான் மாறவர்மன். தூமகேது அவ்விதம் செய்வதாகக் கூறிவிட்டுப் பின் வாயிலின் வழியாக தனபாலின் வீடு நோக்கிச் சென்றான்.

     தென்னனைத் தீப்பந்தத்துடன் ஆலமரத்தின் மேல் ஏறி, உச்சிக்கிளைக்குச் சென்று இரு வாட்களைக் குறுக்கும், நெடுக்குமாய் வைக்கப்பட்டிருப்பது போல் அடையாளம் வைத்துக் காவற்காட்டில் மறைந்திருக்கும் தன் தந்தையான சடையவர்ம சீவல்லபனுக்குச் சைகை செய்யும்படிக் கூறினான்.

     அவ்விதமே தென்னன் ஆலமரம் ஏறவும், மற்றவர்கள் ஆங்காங்கே மறைந்திருந்து வெளிப்படும் சோழ வீரர்களைத் தாக்கும்படி உத்தரவிட்டுத் தேர்ந்தெடுத்த நூறு வீரர்களுடன், மாறவர்மன் அரண்மனைக்குள் புகுந்தான்.

     ஆலமரத்தில் தீப்பந்தத்தின் ஒளியைக் கண்ணுற்ற சடையவர்ம சீவல்லபன், கோட்டையைத் தாக்குவதற்குத் தன் வீரர்களுக்கு ஆணையிட்டான்.

     அகழிப்பாலம் தூக்கப்பட்டிருந்ததால் வில் வீரர்கள் நூறு பேர் மரங்களிடையே மறைந்து நின்றபடி கோட்டையின் உச்சியிலிருந்த சோழ வீரர்களின் மீது அம்பை எய்யத் தொடங்கினர்.

     வரிசையாக வந்த அம்புச் சரங்களினால் தாக்குண்ட சோழ வீரர்கள் அலறியபடி கோட்டையின் மேல் தளத்திலிருந்து கீழே விழ...

     திடீரென்று அலறல் சத்தமும், அதைத் தொடர்ந்து வீரர்கள் ‘தொப் தொப்’ என்று தரையில் வீழ்வதையும் கண்ட கோட்டைக் காவலன் திகைப்புற்று, அம்புகள் எங்கிருந்து எய்யப்படுகிறது என்பதைக் கவனிக்க முயன்றான். காவற்காட்டின் மரங்களிலிருந்து அவை வருகின்றன என்று உணர்ந்து, கோட்டைச் சுவர்களில் அமைக்கப்பட்டப் பொறிகளை இயக்கி காவற்காட்டைத் தாக்கும்படி வீரர்களுக்கு ஆணையிட்டான் காவலன்.

     இதற்குள் அரண்மனைக்குள் புகுந்த மாறவர்மன் எதிர்ப்பட்ட வீரர்களை வீழ்த்தியபடி, அதைத் தன் வசமாக்கும் முயற்சியில் இறங்கினான்.

     செடிகளிலும், புதர்களிலும் மறைந்திருந்த பாண்டிய வீரர்கள் காவற்காட்டைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட கோட்டை வீரர்கள் மேல் அம்புகளைச் செலுத்தி அவர்களை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

     மதுரைக் கோட்டைப் பொறுப்பை ஏற்றுள்ள மூவேந்தன், வீரர்களின் அலறலையும், அரண்மனைப் பெண்களின் ஓலத்தையும் கேட்டு, ஏதோ ஆபத்து நிகழ்ந்துவிட்டது என உணர்ந்து, ஒருவேளை பாண்டிய சதிகாரர்கள் கோட்டைக்குள் புகுந்துவிட்டார்களோ என்று ஐயுற்று, வாளினை உருவியபடி அறையிலிருந்து வேகமாக வெளியே வந்தான்.

     அங்கே காவலுக்கு நின்றிருந்த வீரனிடம் குதிரைப் படையையும், யானைப்படையையும் தயாராக்கிக் கோட்டைக்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டு, தன் முன் சிதறி ஓடிக் கொண்டிருந்த வீரர்களை ஒன்று திரட்டினான்.

     ஏறக்குறைய ஐந்நூறு பேர்களுடன் அவன் அரண்மனை வாயிலை நோக்கிவர, அங்கே மாறவர்மன் எதிர்ப்பட்ட வீரர்களை வீழ்த்தியபடி அரண்மனைக்குள் முன்னேறிக் கொண்டிருந்தான்.

     முன்கூடத்தில் மாறவர்மனும், மூவேந்தனும் மோதினர்.

     இதற்குள் சோழ வீரர்கள் அங்கே வந்து குவியத் தொடங்கினர்.

     எண்ணிக்கையில் குறைவாக இருந்த பாண்டிய வீரர்களைத் திடீரென்று அவர்கள் சூழ்ந்து கொண்டதால் பாண்டியன் பக்கம் இலேசான குழப்பம் தோன்றியது. மாறவர்மன், “சோர்வடைய வேண்டாம்! துணிந்து போரிடுங்கள்!” என்றபடி ஆட்டு மந்தைக்குள் புகுந்த புலியென மூவேந்தனிடமிருந்து நீங்கி, சோழ வீரர்களின் நடுவில் பாய்ந்தான். அத்துடன் வெளியேயிருக்கும் பாண்டிய வீரர்களை உள்ளே வரும்படிக் குரல் கொடுத்தான்.

     தன்னைவிட்டு வீரர்கள் கூட்டத்தில் பாய்ந்து வழியுண்டாக்கியபடி, சோழ வீரர்களைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதையறிந்த மூவேந்தன், பாண்டிய வீரர்களைத் தாக்கியவாறு மாறவர்மனை வழிமறித்தான்.

     ஆயிரம் வீரர்கள் அடங்கிய சோழரின் குதிரைப்படை அரண்மனை முன் வந்துவிட்டது.

     அந்தப் படையைக் கண்டதும் பாண்டிய வீரர்கள் நிலைகுலைந்தனர்.

     மாறவர்மன் குரல் கேட்டு, மறைவிலிருந்த பாண்டி வீரர்கள் அரண்மனைக்குள் நுழைய முயற்சிக்க, சோழரின் புரவிப்படையால் அவர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

     “வெற்றி! அல்லது வீரமரணம்! வீரர்களே! சோர்வடையாதீர்கள். கடைசி வரை போரிடுங்கள்! அடிமைப்பட்ட உங்கள் பாண்டிய அன்னைக்கு நீங்கள் இரத்தம் சிந்த சபதம் எடுத்துவிட்டதை நினைத்துப் பாருங்கள். சோர்வைடையாதீர்கள்!” - உரக்கக் கூறியபடி, தன்னை வழிமறித்த மூவேந்தனின் வாளினைத் தடுத்தான். ஆனால் அடுத்தகணமே அந்த வாளின் முனை அவன் புஜத்தில் பட்டு இலேசான காயத்தை உண்டாக்கியது.

     அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆக்ரோஷத்துடன் வாளினைச் கழற்ற, குதிரை வீரர்களால் மடக்கப்பட்ட பாண்டியர்கள் நிலையும் அச்சமயம் மிகவும் பரிதாபமாகவே இருந்தது.

     இந்த அளவிற்குச் சோழன் படைவீரர்களைக் குவித்து வைத்திருக்கின்றான் என்பதும், வெகு சீக்கிரமே அவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து தங்கள் மீது தாக்குதலைக் தொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்க வில்லையாதலால், தனக்கு ஏற்படப் போகும் பெருந்தோல்விக்கு என்ன செய்வது? என்ற எண்ணத்துடனே மாறவர்மன் மூவேந்தனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

     அவன் கண்முன்னே பல பாண்டிய வீரர்கள் மரண ஓலமிட்டவாறு மண்ணில் சாய்ந்து கொண்டிருந்தனர். அந்தச் சமயம் பார்த்து பேரிரைச்சல் ஒன்று கோட்டையின் முன்பு கேட்டது.

     “பாண்டிய அரசர் சடையவர்ம சீவல்லபர் வாழ்க! சோழ ஓநாய்களை அழிப்போம் ஒழிப்போம்!”-அந்தப் பகுதியே அதிரவைப்பது போல் கேட்டது.

     ‘என்ன அது?’ என்று மூவேந்தன் சப்தம் வந்த பக்கம் திரும்பினான்.

     சுமார் இரண்டு ஆயிரம் பேருக்கு மேல், மக்கள் கூட்டம் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி, கிடைத்த ஆயுதங்களுடன் அரண்மனையை நோக்கி மிக வேகத்துடன் வந்து கொண்டிருந்தனர்.

     ‘மக்கள் நமக்கு எதிராகத் திரும்பிவிட்டார்களா!’ என்ற திகைப்புடன் புரவி வீரர்களை நோக்கி, குதிரையைச் செலுத்தி அவர்களைக் கலையுங்கள்” என்று உரக்கக் கூறினான்.

     ‘தோல்வியைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை’ என்று சோர்வுடனே போரிட்டுக் கொண்டிருந்த பாண்டிய வீரர்கள் திரண்டு வந்து கொண்டிருந்த மக்களைக் கண்டு புதிய சக்தியும், புதிய வேகமும் பெற்றவர்கள் போல், சீறிப்பாயும் சிங்கமென சோழ வீரர்களைத் தாக்கத் தொடங்கினர்.

     விளைவு? சோழ வீரர்கள் புரவியிலிருந்து மண்ணில் சாய்ந்தனர். புரவிப்படையில் பெரும் சரிவு நிகழ்வதையறிந்த மூவேந்தன் “துணிவுடன் செயலாற்றுங்கள்! அரண்மனை நோக்கி வரும் மக்களை விரட்டுங்கள்!” என்று ஆணையிட்டவாறு மாறவர்மனுடன் போரிட்டுக் கொண்டே, அரண்மனை வாயிலை நோக்கிப் போகும் நினைப்பில் வேகமாய்த் திரும்பினான்.

     அச்சமயம் வாளைப் பிடித்திருந்த அவன் கைப்பிடி இலேசாய்த் தளர்ந்தது.

     இதையறிந்து மாறவர்மன் பலம் கொண்ட மட்டும் தன் வாளினால் அந்த வாளைத் தாக்க.. அடுத்தகணமே ‘ணங்’ என்ற சப்தத்துடன் தரையில் வாள் விழுந்தது.

     உடனே சற்றும் தாமதிக்காது அவன் மார்பில் வளைப் பாய்ச்சினான் மாறவர்மன். ‘ஹா!’ எனப் பெருங்குரலிட்டபடி தரையில் துடிதுடித்துக் கீழே சாய்ந்தான் மூவேந்தன்.

     அதைக் கண்ட சோழப் படைகள், நான்கு பக்கமும் சிதறி ஓடத் துவங்கின. அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாண்டியப் படைகள் அவர்களைத் துரத்த ஆரம்பித்தன.

     சற்று நேரத்திற்கெல்லாம் மதுரை நகரின் கோட்டை கதவு திறக்கப்பட்டது; சடையவர்ம சீவல்லபன் மக்கள் வாழ்த்து முழக்கத்துடன் வெற்றிப் பெருமிதத்தோடு உள்ளே நுழைந்தான்.

     இதுவரை கோட்டையின் உச்சியில் பறந்து கொண்டிருந்த புலிக்கொடி அகற்றப்பட்டு, அங்கே பாண்டிய அரசருக்குரிய மீன்கொடி ஏற்றப்பட்டது.

     மெல்லியதாய் வீசிய காற்று, பாண்டியன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற உற்சாகத்தில் வேகமாய் வீச, அதன் விளைவாய்க் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி ஆனந்தமாய் அசைந்தபடி பறக்கத் துவங்கியது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49